"இந்த ஊருக்கு வந்து இந்த ஊர் தியேட்டர் எல்லாம் பார்க்காமயே போனா எப்படி?" என்று கேட்டது போன வாரம் என் நண்பன் செய்த குற்றம்...
திரையரங்குக்குப் போனதும் "என்ன மாதிரி படம் பார்க்கலாம்" என்றான்..
"ஹாரர், க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன் தவிர எது வேணாலும் பார்க்கலாம்.." அப்பாவியான முகத்துடன் நான் சொல்லவும்,
"அது சரி.." என்றபடி என்னை ஏற இறங்கப் பார்த்தவன், இந்தப் படத்துக்கு டிக்கெட் எடுத்து (குழந்தைக்குப் பாப்கார்னும் வாங்கிக்) கொடுத்துவிட்டு வேறு ஏதோ பேய்ப் படம் பார்க்கப் போய்விட்டான்!!! :(
ஆனால், நான் ரசித்துப் பார்த்தேன். நல்ல படம். அமெரிக்கா முழுக்க நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.
கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன... இன்னும் எத்தனையோ..
வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..
அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..
கதா நாயகன் Mc Queen
பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.
இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக "கார"ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.
தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.
ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்.
பிக்ஸார் மூவீஸ் Finding Nemo ஏற்கனவே ரசித்துப் பார்த்திருக்கிறேன்.. இந்தப் படமும் அருமை.
நாயகி Sally
படத்துடன் கூட பாடல்கள் அருமை.. இறுதியில் "Finding Yourself" என்னும் பாட்டு வந்துகொண்டிருந்த போது அரங்கில் இருந்த எல்லாரும் வெளியே சென்று விட்டனர். எல்லாரும் போவதைப் பார்த்து நானும் இடத்தை விட்டு எழுத்தேன். ஆனால் பாட்டின் இனிமை ஈர்க்க மீண்டும் வேறு இடத்தில் அமர்ந்துவிட்டேன். (பொதுவாகவே படம் என்றால் கடைசியில் நன்றி போடும் வரை பார்த்து முடிக்க வேண்டும் என்பது என் கொள்கை).
படம் பார்த்துவிட்டு, வெளியில் வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் "ஏன் கண், வாய் இல்லை?" என்று யோசிக்கத் தோன்றியது. கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு விலக ஒரு அரை மணி ஆனது.
படத்தில் வரும் வரலாற்றுப் புகழ்மிக்க அமெரிக்க நெடுஞ்சாலை 66 எங்கள் ஊர் வழியாகத் தான் போகிறது என்று தெரிந்ததும், இந்த வாரம் அதில் படத்தில் வரும் "Historic Route 66" பாட்டையும் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டிப் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவம்.. இந்த ஊரில் பிடித்த விஷயம் இந்த ரோடுகள் தான்..
Historic route 66 - ஆற்றலரிசி கை(கண்?)வண்ணத்தில் ;)
ஆரம்பத்தில் என்னைப் பார்த்து மிரண்டவர்கள் கூட இப்போது "ஆபீஸ் போறீங்களா? நானும் வரலாமா?" என்னும் அளவுக்குத் தேறியாகிவிட்டது. படம் வேறு பார்த்த பின், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்னும் எண்ணமே வருத்தமாக இருக்கிறது. நம்ம ஊரிலும் சாலைகள் இத்தனை நன்றாக இருந்தால்?!!..
பாடல்களை இங்கே கேட்கலாம். எல்லாரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். இந்தியா வந்து மீண்டும் தங்கையோடு போய் பார்க்க வேண்டும்.
24 comments:
சிறில் அலெக்ஸ் சொன்னது:
இன்னும் பாக்கல. மின் தட்டுக்கு காத்திருப்போம்.
balaa சொன்னது:
சும்மா.. டெஸ்ட்..
நாமக்கல் சிபி சொன்னது:
ஆகா! விமர்சனம் நல்லா இருக்கே! கண்டிப்பா இந்தப் படம் வந்தவுடன் பார்க்கணும்!
நல்ல படத்தைப் பற்றிய நல்லதொரு பதிவு!
நடுவில் இருந்த அலம்பல்களையும் சேர்த்தே சொல்லுகிறேன்!
அதுவும் படிக்க மகிழ்வாய் இருந்தது!
சத்யத்தில் படத்திற்கான விளம்பரம் பார்த்தேன். நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று வைத்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
படத்தை நன்றாக ரசித்து விமர்சித்து எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் பொன்ஸ்.
மனதின் ஓசை சொன்னது:
இந்த படத்து DVDய லாஸ்ட் வீக் பார்த்தேன்.. எப்படி இருக்குமோன்னு நினைச்சிகிட்டு வாங்கல.. Finding Nemo உம் நல்ல படம்.. "Incredibles", "Ice Age"பாத்து இருக்கீங்களா? அருமையான படங்கள். கெடைச்சா பாருங்க..
selvanayaki சொன்னது:
படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அடுத்த படம் இதையே பார்த்திர வேண்டியதுதான்:))
dharumi சொன்னது:
இங்கிலீசு படத்தில நமக்கெல்லாம் வசனமே புரியாது; உங்களுக்குப் பாட்டு வரிகள் கூட புரியுது.
ம்ம்...ம்.. காதில புகை
Dubaivaasi சொன்னது:
கார் இருக்கட்டுமுங்க, எங்கே போச்சு யானை? கார் வந்தவுடனே யானை சவாரிய மறந்துட்டீங்களா (இல்லே அதுக்கு ஏதாவது பதிவு போட்டு நான் தான் பார்க்கலியா?)
Anitha சொன்னது:
ம்ம்ம் நானும் ட்ரைலர் பாத்தேன் உஙக விமர்சனம் படிச்ச அப்பறம் கண்டிப்பா படம் பாக்கணும் போல இருக்கு
இ.கொ. சொன்னது:
நல்ல படம். நானும் ரசித்துப் பார்த்தேன் என் பையனோடு. இப்போ வீடு முழுவதும் கார்ஸ் பொம்மைகள்தான்.
நானும் ட்ரைலர் பார்த்தேங்க, உங்க பதிவு அந்த படம் கண்டிப்பா பார்க்க வெச்சிரும்.
//ஆற்றலரிசி கை(கண்?)வண்ணத்தில் ;)//
இதை படிச்ச உடன் சரி ஏதோ புதரகத்துல நம்ம தொழில் ஆரம்பிச்சுட்டிங்கன்னு நெனச்சு அந்த படத்த முழிச்சு முழிச்சு ஒரு 5 நிமிசம் ஆன பொறவுதான் புரிஞ்சது.
ராம் சொன்னது:
பொன்ஸ்,
படத்தோட விளம்பரம் PVR'ல இருந்தது. எனக்கும் கார்டூன் படங்கள் ரொம்ப பிடிக்கும்.... இந்த weekend'ல ரிலிஸ் ஆனா போய் பார்த்திரா வேண்டியதுதான்....
Theka சொன்னது:
நானும் இந்த படம் என் பையனோட பார்த்தேன். அவன் அடடா அப்பா அசத்திப்புட்டாங்கப்பா அப்படி இப்படின்னு படம் முடிந்தும் போட்டு தாக்கி கொண்டு வந்தான். என் பிரட்சினை எனக்குட அப்படின்னு நானே புது ஊருக்கு வந்து ஓட்டுற காரும் என்கிட்ட பேசமா, ஒரு அரைமணி நேரம் இருட்டுக்குள்ளே ஓட்டிக்கிட்டு திர்ஞ்சது எனக்குத்தான் தெரியும்.
சரி, இப்ப படத்துக்கு வருவோம், அமெரிக்கன்ஸ் மக்கள வச்சு சிறுசுகளை வளர்க்கிறதில நம்பிக்கை போச்சு போல அதான், இப்பபெல்லாம் அலும்னியம், இரும்பு எல்லாதையும் ஆளுங்கள ஆக்கி நீதிக் கதைகள் சொல்லி இங்குள்ள குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லி வளர்க்கிற நெலமைக்கு வந்துட்டாங்க போல.
அதில அப்படியே இன்னவொன்னு, நல்ல பொம்மை கார்கள் விற்பனையும் எகிரவைக்லாம் பாருங்க ;-) இ.கொ சொல்லிட்டார் அதையும் கவனிங்க.
எனக்கும் பிடிசிருந்ததுதான், ஆனா ரொம்ப சில்லியா இருந்தது... கதையை இப்படி ஒரு ஆங்கில்லெ யோசிச்சவரே நிறைய அன்னிக்கு "தண்ணீ போட்டுட்டு" லாங் டிரைவ் பண்ணியிருப்பார் போல :-))))
பொன்ஸ் சொன்னது:
படம் பார்க்காதவங்க எல்லாம் பார்த்திடுங்க :)
//நடுவில் இருந்த அலம்பல்களையும் சேர்த்தே சொல்லுகிறேன்// எஸ்கே, :)))
//"Incredibles", "Ice Age"பாத்து இருக்கீங்களா? // இல்லை.. பார்த்ததில்லை.. பார்க்கிறேன்..
//உங்களுக்குப் பாட்டு வரிகள் கூட புரியுது. // கார்ட்டூன் படம் தருமி.. அதான் :)
//(இல்லே அதுக்கு ஏதாவது பதிவு போட்டு நான் தான் பார்க்கலியா?)//
அதே தான் துவா.. பார்த்துட்டீங்க போலிருக்கே இப்போ..
//ஏதோ புதரகத்துல நம்ம தொழில் ஆரம்பிச்சுட்டிங்கன்னு நெனச்சு //
ஹி ஹி..
//ஆனா ரொம்ப சில்லியா இருந்தது... //
தெகா, சாலி சார்பா, உங்க பேச்சு கா!!!! வயசாய்டுச்சு போலிருக்கு உங்களுக்கு.. ;)
படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம். பாத்திடவேண்டியதுதான் :)
//எங்கள் ஊர் வழியாகத் தான் போகிறது// அட நீங்களும் யாதும் ஊரே யாவரும் கேளிர் வகைதானா?! :)
கார்ட்டூன் படங்கள் பார்க்கும் நேரங்களில் நாம் குழந்தைகள் ஆகிப்போகிறோம் என்பது உண்மை.
உங்கள் 'கார்ஸ்' பார்வை அப்படத்தை பார்க்க தூண்டுகிறது.
'மனதின் ஓசை' -> 'Lion King' 'Bear Brother' படங்களை விட்டு விட்டீர்களே பொன்ஸ் அப்படங்களையும் முடிந்தால் பாருங்கள் நன்றாக இருக்கும்.Ice Age 1 , 2 என இரண்டு இருக்கு. :)
நீங்க நெஜமாலுமே அமெரிக்காவுலதான் இருக்கீங்களா?.... இல்ல நான் துபாய்ல DVD கார்ஸ் படத்தை (ஹி...ஹி) பாத்து ஒரு மாசமாச்சு நீங்க இப்பவந்து மதி கந்தசாமிக்கு போட்டியா விமர்சனம் எழுதுறீங்க? :)))
நீங்களும் விமர்சனத்தில் இறங்கியாச்சா. சரி அந்த படத்த இன்னும் பாக்கல பாத்துட்டு சொல்லுறேன்.
// நம்ம ஊரிலும் சாலைகள் இத்தனை நன்றாக இருந்தால்?!!..//
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டு தான் இருக்கின்றோம். அதற்கு கி.க.சா. மற்றும் திண்டிவனம் டூ சென்னை சாலை, தாம்பரம் டூ xxx(Bye pass) இது மாதிரியான சாலைகள் போட்டு உள்ளார்கள். இது இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
பொன்ஸ் சொன்னது:
ப்ரியன், நீங்க சொல்லும் படங்கள் பார்த்துட்டேன்.. பார்த்த உடன் எழுதுவதால், இது நல்லா வந்திருக்கு போல :)
சிவா, அப்போ, சென்னை வரும்போது சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு லிப்ட்? ஓகேவா? (அந்த பயம் கதையைப் படிக்காம சொல்லுங்க :))) )
இது நம்ம புலம்பல் :-)
பொன்ஸ் சொன்னது:
பாலா, அந்தப் பதிவை நேத்தே பார்த்தேன்..
"ரொம்ப வயசானவங்களோட" நான் ரொம்ப கொடுக்கல்-வாங்கல் வச்சிக்கிறதில்லை.. ;) அதான்.. அப்படியே விட்டாச்சு..
:-))))))
வழக்கம் போல நான் லேட்டு... :-(((
படம் உடனே பார்க்கனும் போல இருந்துச்சு உங்கள் எழுத்தை படிச்சு முடிச்சதும்.
எனக்கும் கூட சில ஆங்கிலப்படங்கள் பார்த்தபின் அதன் பாதிப்பில் இருந்து மீள கொஞ்ச நேரம் பிடிக்கும்.
(அனேகமாக அவை அனிமேசன் (குழந்தைகளுக்கான!!) படங்களாகவே இருந்து வருகிறது தான் ஆச்சரியம்)
Post a Comment