Saturday, December 30, 2006

புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..

பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய மணியனின் பதிவைப் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.

இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க...

பகுதி 1: வார்ப்புரு மாற்றம்
நிலை 1: உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிலை 2: புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று உங்களின் ப்ளாக்கர் கணக்கில் உட்புகுந்த உடனேயே தெரியும். அந்தச் சுட்டியைத் தட்டி அது கேட்கும் விஷயங்களைக் கொடுத்துவிட்டு, அப்படியே ஹாயாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தால், தானே உங்களின் பதிவு புது புளாக்கருக்கு மாறியபின் கூகிள் மடல் கணக்கிற்கு ஒரு மடல் வந்துவிடும்.

நிலை 3: இந்த முறை உங்களின் புது ப்ளாக்கர் பயனர் கடவுச் சொல் வழியே உட்புகுந்தால், உங்களின் பதிவுகள் ஏற்கனவே புது ப்ளாக்கருக்கு மாறி இருக்கும்.

நிலை 4: உங்கள் பதிவின் Layout அல்லது Template பக்கம் இது போல் காட்சி அளிக்கும்:




நிலை 5: இதில் "Customize Design" என்ற சுட்டியைத் தட்டி உங்களின் பழைய ப்ளாக்கர் வார்ப்புருவைப் புது வார்ப்புருவுக்கு மாற்றலாம் [ மாற்றினால் மட்டுமே புது ப்ளாக்கரின் பலவித நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.]

நிலை 6: Customize Design இல் கீழ்காணும் Upgrade Your Template என்ற சுட்டி தெரியும். இதையும் தட்டுங்கள். உங்களின் பழைய வார்ப்புரு இல்லாமலே போய்விடும் என்றும் அதை வேண்டுமானால் திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் ஒரு எச்சரிக்கை எட்டிப் பார்க்கும். "சரி சரி" என்று சொன்னால் புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறிக் கொள்ளலாம்.



நிலை 7: புது ப்ளாக்கர் வார்ப்புருவும் பார்ப்பதற்கு பழைய ப்ளாக்கர் வார்ப்புருக்கள் போலத்தான் இருக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன் பின் Save Template என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.
நிலை 8: இப்போது உங்களின் வார்ப்புரு புது ப்ளாக்கருக்கு ஏற்றபடி மாறிவிட்டது. அதை உறுதிப் படுத்தும் விதமாகக் கீழ்க்காணும் பக்கம் திறக்கும்.

பகுதி 2: தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி?

புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறியபின் தமிழ்மணத்தில் உடனடியாக சேர்க்க இயலாது. எப்படிச் சேர்ப்பது என்பதற்கான விளக்கமே இந்தப் பகுதி.

நிலை 9: நிலை 8இல் குறித்திருக்கும் Edit HTML சுட்டியைத் தட்டி, கீழ்வரும் பக்கத்திற்குச் செல்லவேண்டும்.

இங்கு ஓரத்தில் இருக்கும் Expand Widget Templates உக்கு 'ஆம்' என்று சொல்ல வேண்டும்.

நிலை 10: இப்போது, தமிழ்மணமும் ப்ளாக்கர் பீட்டாவும் பதிவில் கண்டிருப்பது போல் ]]></b:skin> என்ற பகுதியைக் கண்டுபிடிக்க வேண்டும்.


நிலை 11: இதன் கீழ் தமிழ்மணத்தின் கருவிப் பட்டிக்கான முதல் பகுதி நிரலை இணைக்க வேண்டும்.

அந்த நிரல் உங்களின் வசதிக்காக இங்கும்:




<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->

<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->




நிரலை இட்ட இடத்தின் கீழ் ]]</HEAD> என்ற பகுதி வரும்





நிலை 12: தமிழ்மண கருவிப் பட்டையின் இரண்டாம் பாகத்தை, நிரலியின் dateHeader பகுதியைக் கண்டுபிடித்து அதன் கீழ் இட வேண்டும். dateHeader பகுதி இப்படி இருக்கும்:





<b:if cond='data:post.dateHeader'>

<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>

</b:if>






நிலை 13: இட வேண்டிய தமிழ்மண கருவிப் பட்டி இரண்டாம் பாகத்திற்கான நிரல்:




<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1

(c)2005 thamizmanam.com -->



<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

</b:if>



<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1

(c)2005 thamizmanam.com -->




நிலை 14: இரண்டாம் பாகத்திற்கான நிரல் சரியான இடத்தில் இருந்தால், அதன் பின்னர், <b:include name="'post'/" data="'post'"> என்ற பகுதி வரும்.

நிலை 15: இதன் பின்னர், கீழுள்ள Save Template பித்தானை அழுத்தி இந்த மாற்றங்களைச் சேமிக்க வேண்டும்.
நிலை 16: இத்துடன் உங்கள் பதிவில் கருவிப் பட்டை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தெரியும். அத்துடன் பெரும்பாலான பதிவுகள் இந்த இடத்தில் தமிழ்மணத்தில் சேர்ந்து விடுகின்றன. மிக அதிக இடுகைகள், பின்னூட்டங்கள் உடைய பதிவுகள் சில சமயம் சேராமல் தொல்லை கொடுத்தால் தமிழ்மணத்தின் தளத்தில் அது குறித்தான பிரச்சனைகளை முன்வைக்கலாம்.

புதுப் ப்ளாக்கரின் வார்ப்புருவைப் பயன்படுத்துவதால், கீழுள்ளது போல் Add Page Element என்ற வசதியைப் பயன்படுத்தி வேண்டிய எண்ணுவான், உங்களின் ப்ரோபைல் பற்றிய விவரங்கள், சுட்டிகள் என்று பலவும் இணைக்கலாம். இதையும் ஒரு முறை பார்த்து இணைத்துக் கொண்டால் உங்கள் பக்கம் பார்க்க அருமையாக இருக்கும்.

படங்களுடனான விளக்கங்களுடன் மேலதிக தகவல்கள் இந்தத் தளத்திலும் உள்ளன.

ஆக, தைரியமாக புது ப்ளாக்கருக்கு மாறி புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்...

[பிகு: படங்களின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். ]



புது ப்ளாக்கர் வார்ப்புருவில் பழைய பதிவர்களின் பின்னூட்டப் பெயர்கள் தெரியாமல் போகும். இதைச் சரி செய்ய, பதிவர் ஜெகத்தின் பதிவு உதவும்.

Friday, December 29, 2006

கில்லி 365 - ஒரு வாசிப்புரை

தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கும் தமிழ்ப் பதிவுலகில், கில்லி போன்ற மனித திரட்டிகளின் பங்கு ஆழமானது.

அமெரிக்கா, அரசியல், உலகம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஒரு இடுகையைப் பரிந்துரைப்பதாகட்டும், ஒரு நாளைக்கு வரும் இடுகைகளிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதாகட்டும், இவர்களின் தன்னார்வச் சேவை நிச்சயம் பாராட்டிற்குரியது.

கில்லியின் “தமிழில் எழுதுவது எப்படி?” போன்ற பதிவுகள் புதிதாக பதிவெழுத வரும் எல்லாருக்கும் ஒரு வரம் என்றால் மிகையல்ல.


சரி, பில்டப் போதும்.. என்னை இங்கே அழைத்தது இந்த மாதிரி கதை அடிக்க இல்லை.. கில்லியின் வாசகர் உரையாக, கில்லி மூலம் படித்த, எனக்குப் பிடித்த பதிவுகளின் பட்டியல் கொடுக்கவே.

1. ரவுசு.. போட்டோவைப் பார்த்துச் சிரிச்சிட்டேன்.. புகைப்படத்தின் கவர்ச்சியில் தான் பதிவைப் படிக்கப் போனேன்..

2.
சென்னைக்கு ஒரு விவேகானந்தா கல்வி நிலையம். வலைப்பதிவுக்கு ஒரு சிறில் அலெக்ஸ்


கில்லி குழுவின் பளிச் கமெண்ட்ஸ் மற்றொரு கவரும் அம்சம்

3.
ஆனால், சொல்கிற பாய்ண்ட் ஒவ்வொன்றுக்கு, ஒரு உதாரணா கவிதையை எடுத்துப் போட்டிருந்தா, இன்னும் எளிமையா விளங்குமே..

போன்ற கமெண்ட்களை நீங்கள் ஏன் அந்த இடுகையிலும் சொல்லக் கூடாது? இடுகைக்கு நீங்கள் கொடுக்கும் சுட்டி ஒரு சில பதிவுகளில் மட்டுமே தெரிகிறதே..!

அதிலும் சில சமயம் இடுகை வந்து சில நாட்களுக்குப் பின் பரிந்துரைக்கும் போது, இந்த இடுகையை எழுதியவர் படிப்பதும், கவனிப்பதும் குறைவே என்றும் தோன்றுகிறது!

4. இதைப் போல நக்கலான புதுமைப் பதிவுகள் கண்டிப்பாக கில்லியில் இடம்பெற்றுவிடும் என்று நம்பலாம்..

5. நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளைச் சுலபமாகப் பெற முடிகிறது கில்லியில்.

6. இதைப் போல் இரண்டு மூன்று தொடர்புள்ள பதிவுகள், விவாதங்களை முன்வைப்பது மிகவும் பிடித்த ஒன்று. இது போல் எல்லா விவாதங்களையும் கொண்டுவரலாமே..

7. பின்னூட்டங்களுக்கும் கில்லியில் இட ஒதுக்கீடு இருக்கிறது போலும் :-D, பின்னூட்டங்களிலும் சிறந்த விவாதங்களை உள்ளடக்கிய பதிவுகளையும் கொஞ்சம் பேசலாமே..

8. ஐநாவின் மனிதவள மேம்பட்டு அறிக்கை பற்றிய எண்ணங்களைப் போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் பதிவுகளும் கில்லியின் சிறப்பு.

9. இதைப் போன்ற ஆறாம் திணை, குமுதம், பிபிசி என்று பிற இணைய பத்திரிக்கைகளிலிருந்து பொறுக்கி எடுத்துக் கொடுக்கும் சுட்டிகளும் மிகவும் பயனுள்ளவை.

10. நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.

11. OIGக்கு விளக்கம் புரியாவிட்டாலும், இது போன்ற அந்த நாள் நியாபகம் பதிவுகளும் அவசியம் தேவை தான்..

கிட்டத்தட்ட தினம் பத்து பரிந்துரைகள் தரும் கில்லியிலிருந்து சுமார் பத்து வாசகர் பரிந்துரைகள் எடுத்துக் கொடுக்கச் சொன்னார் பிரகாஷ்.. அதனால் சமீபத்துப் பரிந்துரைகள் சிலவற்றை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளேன்..

பொதுவாக, பரிந்துரைக்கும் விதமும், பதிவின் கருத்துக்களிலிருந்து சிறந்த பகுதியை மட்டும் எடுத்துக் காட்டும் விதமுமே கில்லியின் தனித் தன்மைகளாக இருக்கின்றன.

கில்லிக்கு என்னுடைய பரிந்துரை :-D:

1. இடுகைகளைத் தேடுவதற்கு இன்னும் வசதியான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கலாமே.. (சினிமா விமர்சனம், இளையராஜா - இரண்டு வகையிலும் ஆங்கிலப் பதிவு அல்லாத சுட்டிகள் மட்டுமே எனக்குத் தேவை என்பது போல..)

2. தேன்கூடு தளத்தில் தெரியும் பரிந்துரைகள் போல, சின்னதொரு நிரலியை பதிவர்கள் தத்தம் பக்கத்தில் இட்டுக் கொண்டு கில்லி பரிந்துரைகளைப் பார்க்க வழிசெய்யலாம்.

3. பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் கில்லியிலும் கூகிள் விளம்பரங்களை உள்ளிட்டுக் கொள்ளலாமே..

இறுதியாக, இரண்டாயிரம் இடுகைகளைத் தாண்டிவிட்ட கில்லிக்கு என் வாழ்த்துக்கள்; இன்னும் கில்லி மாதிரி சொல்லி அடிக்கவும்.. :)))

கோப்புக்காக... பிரசுரமானது இங்கே

தம்பி

"அப்பா! எனக்கு ஒரு வாட்ச் வேணும்பா!" தயங்கித் தயங்கித் தன் வேண்டுகோளைத் தந்தை முன் வைத்தான் கோபி.

"பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு வாட்செல்லாம் எதுக்குடா?" அப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கோபி காணாமல் போயிருந்தான்.

"அப்போ, மேசை மேல வச்சிருந்தாரே அந்த வாட்ச் யாருக்கு?" என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது

அன்றே அந்தக் கடிகாரத்தைப் பக்கத்து வீட்டு பாலுவுக்கு அவன் தந்தையே அழைத்துக் கொடுப்பதைப் பார்த்த போது கோபிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.



பாலுவும் கோபியும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் படிப்பில் சுட்டி. ஆனால், கோபியின் தந்தை, பாலுவுக்கே பரிசுகள் தருகிறார். பாலுவின் குடும்பமும் அப்படி ஒன்றும் வசதி குறைந்ததில்லை. அவனைப் பாராட்டும் போது கோபிக்குக் கோபம் கோபமாய் வரும்.

வழக்கம் போல் திங்கட்கிழமை, கோபி 'பரபர'வென்று பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். "ஏம்பா கோபி! கொஞ்சம் இருந்து தம்பி பாபுவையும் கூடக் கூட்டிகிட்டுப் போப்பா.." அம்மா கெஞ்சித் தான் கேட்டாள். "அடப் போம்மா! வேற வேலையில்லை! நான் இன்னிக்குச் சீக்கிரம் ஸ்கூல் போகணும். கணக்கு வாத்தியார் சீக்கிரம் வரச் சொல்லி இருக்காரு. உன் பையன் இப்பத் தான் எழுந்திருக்கான். இனிமே இவன் குளிச்சி, சாப்பிட்டு, ரெடியாகி, நான் எப்பப் போகிறது?" பொய்யாகவே ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நகர்ந்தான் கோபி.

கோபி எப்போதும் இப்படித் தான். தம்பிக்கு என்று வரும்போது நழுவிவிடுவான். இத்தனைக்கும் கோபிக்கு அவன் அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் பின்னால் உட்கார வைத்து அழைத்துப் போவதைத் தான் முடியாது என்று வீரம் பேசிவிட்டு வந்து கொண்டிருக்கிறான்.




கோபி காலையழகை ரசித்துக் கொண்டே மெதுவாக சைக்கிளை மிதித்தான். சற்று தூரத்தில் பாலுவைப் பார்த்தவுடன் தன் மிதிவண்டித் திறமையை அவனுக்குக் காட்டி வெறுப்பேற்ற வேண்டும் என்று ஏனோ தோன்றியது. வண்டியை வேகமாக மிதித்தான், மணியடித்தபடி. அந்த நேரம் பார்த்துத் தானா பாலுவின் தம்பி சாலையைக் கடந்து அண்ணனிடம் ஓட எண்ணி நடுவில் குதிக்க வேண்டும்?

கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்ட இந்த நிகழ்வால், "ஒரு வேளை அவன் மீது மோதிவிடுவேனோ?" என்று பயந்து போனான் கோபி. ப்ரேக் போடக் கூடப் அவனுக்குக் கைவரவில்லை. யாரும் எதிர்பாராதவிதமாய் நடந்தது அது. பாலு சாலையின் குறுக்கே பாய்ந்து தன் தம்பியைப் பிடித்து இழுத்துவிட்டான். கோபி செயல்பட்டு பிரேக்கைப் பிடித்தபோது, பாலு கீழே விழுந்து, மணலைத் தட்டிக் கொண்டு எழுந்திருப்பதையும், அவன் தம்பி மருண்டு முழிப்பதையும் பார்க்க முடிந்தது. பாலுவின் காலில் லேசான சிராய்ப்பு வேறே..

சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்துடனும், எல்லாத்துக்கும் தானே காரணம் என்ற குற்ற உணர்வுடனும் கோபி தயங்கி நின்றான்.

"சாரி பாலு!" கீழே விழுந்துவிட்ட தம்பியின் புத்தகமூட்டையை எடுத்து அதிலும் மணலைத் தட்டிக் கொண்டிருந்த பாலுவிடம் தயங்கித் தயங்கிச் சொன்னான் கோபி

"பரவாயில்லை கோபி! யாருக்கும் எதுவும் ஆகலை.. இவன் தான் அவசர அவசரமா ஓடி வந்து குறுக்கப் புகுந்திட்டான். நீ போ!" பாலு சொல்லச் சொல்ல கோபி ஆச்சரியத்துடன் பார்த்தான்.

"ரத்தம் வருதே பாலு!"

"நீ கவலைப் படாதே. நான் போய் ஸ்கூல் லைப்ரரில கீழே விழுந்துட்டேன்னு சொல்லி, முதலுதவிப் பெட்டி கேட்டு மருந்து போட்டுக்கிறேன். நீ கிளம்பு!" பாலு நடக்கவே தொடங்கிவிட்டான்.

கோபி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனுக்குள் ஏதோ கரைந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பியின் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, "இனிமே இப்படி எல்லாம் ரோட்டில் ஓடி வரக் கூடாது என்ன? ரெண்டு பக்கமும் பார்த்து தான் கிராஸ் பண்ணனும்" என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவன் அப்பா ஏன் அவனை விட்டுவிட்டு பாலுவைத் தூக்கி வைத்துப் பாராட்டுகிறார் என்பது புரிகிறாற்போல் இருந்தது.

சைக்கிளை எடுத்தவன் சர்ரென்று திரும்பி, வீட்டுக்கு வந்து, "அம்மா, தம்பி ரெடியாய்ட்டானா?, அவனையும் கூட்டிகிட்டே போறேன்." என்று குரல் கொடுத்த போது அம்மாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

தமிழோவியத்தில் பிரசுரமானது - கோப்புக்காக.

Thursday, December 21, 2006

டைம் இந்த வருட மனிதர் 2006

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை வருடாவருடம் "இந்த வருட மனிதர்" என்ற பட்டத்தை யாருக்காவது அளிப்பது வழக்கம். இந்த வருட மனிதர் யார் தெரியுமா? காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான்.

ஆம்.. டைம் இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வருட மனிதர், "YOU" - இணையத்தில் எழுதும், படிக்கும், பங்களிக்கும் அனைவரையும் இந்த வருட மனிதர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம். விக்கிபீடியாவில் எழுதுபவர்கள், யூ ட்யூப்பில் புதுப் படங்கள் இடுபவர்கள், பதிவெழுதுபவர்கள், என்று தனித்தனியாக இணையத்தில் தகவல் சேர்க்கும் ஒவ்வொருவருக்குமே இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது டைம். கண்ணாடி போன்ற அட்டை வடிவமைப்பில் வாங்குபவர் முகம் தெரிவது போல் அமைத்து உண்மையாகவே "நீங்கள் தான் இந்த வருட மனிதர்" என்கிறது.




பொதுவாக தனி மனிதர்களையே தேர்ந்தெடுக்கும் டைம், 1982இல் கணிப்பொறியையும், 1975இல் எல்லா அமெரிக்கப் பெண்களையும், 1966இல் இளைய தலைமுறையையும், 1950இல் போரிடும் அமெரிக்கர்களையும் என்று கூட்டாகவும் தேர்ந்தெடுப்பதுண்டு

இணைய சமுதாயத்தை "இந்த வருட மனிதர்" ஆகத் தேர்ந்தெடுத்ததற்கு அதே இணைய சமுதாயத்திலிருந்து எதிர்ப்புக் குரல்களும் வரத் தொடங்கிவிட்டன. கிட்டத் தட்ட 85 சதவிகிதத்தினர், அனுபவங்கள் நிகழ்வுகளைப் பதிவு செய்ய மட்டுமே இணையத்தில் பக்கம் வைத்திருக்கும் பொழுது, இது போன்ற சமுதாயத்தை "இந்த வருட மனிதராக" தேர்ந்தெடுத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் சிலர்

ஒரு சமுதாயத்தை, மிக அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சுட்டிக் காட்டித் தப்பிக்கும் செயலாக இதைக் கண்டிக்கின்றனர் சிலர்.

யூ ட்யூப் மாதிரியான இலவச ஒளிப்படச் சேவைகளால், படங்களின் வசூல் பாதிக்கப்படுகின்றதென்றும் திருட்டு விசிடிக்களைவிட ஆபத்தானதாக இருக்கிறதென்றும் புலம்புகின்றனர் சிலர்.

டைம் சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வழக்கம் போல் வருடக் கடைசியில் சும்மா ஏறுக்கு மாறாக சொல்வதற்கென்றே ஏதாவது விருது கொடுப்பார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர்.

Tuesday, December 19, 2006

மெகா தொடர்கள் 2006

விரைவில் முடிந்து விடும் என்று நம்பவைக்கப்படும் செல்வி போன்ற மெகா தொடர்களை இங்கே எதிர்பார்த்து வந்திருந்தால், சாரி; இந்தப் பதிவு, 2006இல் என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவுத் தொடர்களைப் பற்றிய ஒரு பார்வை. அதிகம் தொடர்கள் படிக்காத நான் படித்த, ரசித்த தொடர்களின் பட்டியல் இது:

* கல்யாணமாம் கல்யாணம் - இளவஞ்சி
கல்யாணத்திற்குத் தயாராகும்/தயாராக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இளைஞர்களுக்கான தொடர். வாராவாரம் ஆரவாரம் என்ற பதத்திற்குப் பொறுத்தமாக அடுத்த இடுகை எப்போது வரும் என்று ஆவலுடன் காக்கவைத்தார் வாத்தியார்.. அப்புறம் எங்கே போனார் என்று தான் தெரியவில்லை.. வாத்தியார்! எங்கே இருக்கீங்க?!!

* பாலியல் கல்வி- பெற்றோருக்கு - எஸ் கே
மருத்துவர் எஸ்கேவின் பாலியல் கல்வி பற்றிய தொடர். பாலியல் கல்வி என்பதற்கும் மேலே, பொதுவாக குழந்தை வளர்ப்புக்கே பயனுள்ள தொடர் இது. கண்டிப்பாக படிக்க வேண்டியது

* அறிவியலும் ஆன்மீகமும் - செந்தில் குமரன்
கூடியவரை இந்தத் தொடரைப் படித்துவிடுவது என் வழக்கம். இன்னும் இதில் சமீபத்துப் பதிவுகள் சில விட்டுப் போய்விட்டன. இடுகைகளின் நீளம், அதீத ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு, வருத்தங்கள் இருந்தாலும், தொடர்ந்து படிக்க நல்ல தொடர் இது. இப்போது தமிழோவியத்திலும் இடம்பெற்றுவிட்டது போலும்.. வாழ்த்துக்கள் செந்தில்!

* வலைபதிவர்களுக்குப் பட்டமளிப்பு விழா - வரவனையான்
வலைபதிவர் கூட்டங்களை இத்தனை அற்புதமான கற்பனை கலந்து, விளையாட்டாக எழுத முடியுமா என்று வியக்க வைத்த தொடர் இது. இந்தப் பதிவின் மூலம் தான் வரவனையின் பிற பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாயிற்று. அத்துடன் இந்தத் தொடர் மூலம் எங்கள் பா.க.சவிற்கு ஒரு நிரந்தரத் தலைவரும் கிடைத்தார்.

* அமானுஷ்ய வாசகி - நாமக்கல் சிபி
நான் முதன்முதல் பதிவுகளில் அடியெடுத்து வைத்த போது வந்த தொடர் இது. விறுவிறுப்பான நடையும், சஸ்பென்ஸான அத்தியாயமுமாக போன தொடரை மிக வேகமாக படித்து முடித்தேன். முடிவு தான் மனதுக்கு அத்தனை சாந்தியாக இல்லை. (ஆவி கதையில் சாந்தம் வேறா? :) ) ஏனோ சிபி இது போல் இப்போதெல்லாம் எழுதுவதில்லை.. பேசாம, இன்னுமொரு அமானுஷ்ய தொடர் போட வேண்டியது தானே?! ஆவிகள் உலகம் உங்களுக்கு உதவும் ;)

* நேரில் வந்து சந்தித்த பதிவர் - கோவி கண்ணன்
உருக்கமான ஒரு பதிவர் சந்திப்பு.. பொதுவாக காமெடியும் கலாட்டாவாகவுமே பதியும் சந்திப்புகளைக் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார் கோவி.

* ஜோதிடத் தொடர் - தருமி
ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து என்று பக்கம் பக்கமாக பிரித்தெடுக்கும் இந்தத் தொடர் 2005லேயே தொடங்கப்பட்டிருந்தாலும் முடிவுக்கு வந்தது 2006இல் என்பதாலும், நான் இப்போது தான் படித்தேன் என்பதாலும் இந்த வருடத்தில் சேர்கிறது. தொடர் தொடும் பல பகுதிகளைப் பேச எனக்கு விஷயஞானம் இல்லாவிட்டாலும் இந்தப் பதிவின் காரணமாகவே தருமியை இணைய ஜோதிடர் என்று விளையாட்டாய் அழைக்கப் போய், நண்பர் ஒருவர் அவரிடம் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் நின்றதாக கேள்வி :)

* நானும் சாய்பாபாவும் - சதயம்
சாய்பாபா பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சதயம் போன்ற தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்பவரும் சாய்பாபா பக்தராக இருப்பது பற்றி எழுதிய இந்தத் தொடரை ஆவல் காரணமாகவே தொடர்ந்து படித்தேன். எழுதும் விதத்தில் அடுத்தப் பதிவைப் படிக்க வைக்கும் திறனும், சின்னச் சின்ன இடுகைகளும், என்று நல்லதொரு வாசிப்பனுபவம் இந்தத் தொடர் - பதிவுகள் சொன்ன கருத்துக்கள் முரணாக இருந்தாலும்.

* சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க - வெட்டிப் பயல்
தமிழ்ப்பதிவுகளை ஆனந்த விகடனில் பார்த்தது நட்சத்திரம் வெட்டிப்பயலால் தான். சாப்ட்வேர் இஞ்ஜினியர் பதிவுகள் மிகவும் தெளிவாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்த ஒன்று. இது போன்ற தொடர்கள் இன்னும் எழுதலாமே..

இன்னும் செந்தழல் ரவியின் இன்னும் முடியாத திவ்யா கதை, கடல்கணேசனின் தொடர்ந்து கொண்டே இருக்கும் கப்பல் பயணங்கள், உஷாவின் "ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை", பெனாத்தலாரின் டாகில்லி கோடு, தமிழ்சசியின் சதுரங்க ஆட்டத்தில் தமீழீழம் போன்றவையும் தொடர்ந்து படித்ததுண்டு.. அவை பற்றி இன்னுமொரு சமயம்...

விட்டுப் போன முக்கியமான தொடர் காசியின் சில முயற்சிகள், சில அனுபவங்கள். தமிழ்மணம் உருவானது எப்படி என்பதைப் பற்றிய நல்லதொரு தொடர் இது. இன்று தமிழ்மணத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டியது..
(பதிவின் உரல் தெரியாமல் முதலில் எழுதியபோது குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்..)

சென்னை பதிவர் சந்திப்பு - 3

[பனகல் பூங்காவைப் பற்றிய சுறுசுறுப்பைக் குறைக்கும் தகவல்களுடன் செ.ப.ச 2 நாளை.] ஒரு வழியாக பனகல் பூங்கா வேண்டாம் என்று முடிவெடுத்து நடேசன் பார்க்கில் நான்கரை மணி சுமாருக்குக் கூடியது பதிவர் சந்திப்பு. திரு, பாலபாரதி, லக்கிலுக் என்று மூன்று செல்பேசிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க, கிட்டத்தட்ட பனகல் சென்றிருக்கக் கூடிய அனைவரையும் நடேசன் பார்க்கிற்கு அழைத்துவிட்டோம்.



வந்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் சிறு அறிமுகமாக முன்வைத்த விஷயங்களுடன்:

  1. அருள்குமார்: கதை கட்டுரை போன்ற விஷயங்களை "உணர்வின் பதிவுகள்" என்றும் மற்றபடி தன்னை பாதித்த விஷயங்களை "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற வலைப்பூவிலும் எழுதி வருவதாகச் சொன்னார் இவர். பா.க.ச.வின் founder member இவர் தான் என்று சந்துக்குள்ளிருந்து பாலபாரதி பரிதாபமாக குரல் கொடுத்ததை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்

  2. வீரமணி: உதவி இயக்குனராக பணியாற்றும் இவருக்கு வலைப்பூ அறிமுகப்படுத்தியது அருள்குமார் என்றும், தம் கவிதைகளுக்காகவே வலைப்பூ தொடங்கியதாகவும் தொடர்ந்து எழுதாவிட்டாலும் அவ்வப்போது வந்து தலைகாட்டி விட்டுப் போவதாகவும் குறிப்பிட்டார். (பொகச முதல் உறுப்பினரான வீரமணியை வலைப்பூக்களில் சேர்த்ததற்காக அருளைப் பார்த்துக் கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொள்வதைத் தவிர அப்போது வேறெதும் செய்ய முடியாமல் போயிற்று :( )

  3. திரு: கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட பின்னணியுடன் கடைசியாக தம்மை அறிமுகம் செய்து கொண்டார் திரு. ஆலமரம், பனித்துளி, பெரியார் என்ற தனது வலைப்பூக்களின் சிறு அறிமுகத்தையும் அளித்தார்.

  4. லக்கிலுக்: கருத்து போன்ற களங்களிலிருந்து வலைப்பூவிற்கு வந்ததாக குறிப்பிட்ட லக்கிலுக், சும்மா டைம் பாஸுக்குத் தான் பதிவெழுதுவதாகக் குறிப்பிட்டார். தன் புதுவருட வாக்குமூலத்தை இன்னுமொருமுறை நினைவுப்படுத்திக் கொண்டார்; அதை நிறைவேற்றுவது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்பதையும்

  5. பகுத்தறிவு: அறிவகம் என்ற பெயரில் பதிவெழுதும் பகுத்தறிவும், கருத்துக் களம், தமிழ்நாடு டாக் போன்ற பாரம்களிலிருந்து வந்தவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஏதோ ஒரு நாள் தமிழ்நாடு டாக்கில் ஒரு பதிவைப் பார்த்தபோது, தனக்குப் பிடித்த சில தலைவர்களை அங்கே குறைவாக எழுதி இருந்ததைப் பொறுக்காமல் பதிவெழுதத் தொடங்கியதாக விவரித்தார்

  6. ரியோ: தமிழ்நாடு டாக், கருத்துக் களம் வழியே லக்கிலுக் மூலமாக பதிவுகள் அறிமுகமானதாகச் சொன்னார் ரியோ. பொதுவாக கூட்டத்தில் மிக அமைதியாக இருந்தார்கள் இவ்விருவரும்

  7. சுந்தர்: கடந்த ஒரு மாதமாகத் தான் பதிவெழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்ன சுந்தர், இந்த சந்திப்புக்கு வந்ததே தனக்கு ஏன் பின்னூட்டங்கள் குறைவாக வருகின்றன என்று அறியத்தானாம். வலைப்பூ சண்டைகளைப் பார்த்து பயந்து வெறும் நகைச்சுவை சமாச்சாரமாகவே எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். [நகைச்சுவை என்றதும் பா.க.சவின் பெருமைகளைச் சொல்லிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அதற்குள் தப்பித்துவிட்டார்! ].

  8. விக்கி: ஒருவருடமாகவே தண்டோரா கொட்டிக் கொண்டிருக்கும் விக்கி, தனக்குப் பதிவர்கள் அதிகம் தெரியாது என்றார். சமீபத்தில் தொடங்கப்பட்ட பிளாக்கர் உதவி பக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்

  9. சிவஞானம்ஜி: தொடர்ந்து பதிவெழுதிக் கொண்டிருந்த தான் இப்போது அதிகம் எழுதாமல் பின்னூட்டங்களில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக சோகமாகக் குறிப்பிட்ட சிஜி, தான் இப்போதும் ஜிபோஸ்ட்டில் லக்கிலுக்குடன் தொடர்ந்து போட்டியிடுவதையும் நினைவுப்படுத்தினார்

  10. துளசிகோபால்: "சொல்லிக்கிடற மாதிரி அதிகமில்லை. ரெண்டு வருசமா நானும் பதிவெழுதுறேன்" என்று தனக்கே உரிய அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார் துளசியக்கா. "முதன்முதல் யானையை வலையுலகுக்கு அழைத்து வந்தவர் நீங்கள் தான்" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் பாலபாரதி. "எனக்கு அப்புறம் பொன்ஸுக்குத் தான்" என்று ஏற்கனவே எழுதியிருந்ததை மீண்டும் சொல்லி உறுதி கொடுத்தார் துளசியக்கா. (தாங்க்ஸ் துளசிக்கா..)

  11. தமிழ்நதி: கனடாவிலிருந்து சென்னை வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நதி "இரண்டுமே எங்கள் சொந்த தேசமில்லை." என்று சேர்த்துக் கொண்டபோது லேசாக மனம் சோகமானது. சென்னை பற்றிய தமிழ்நதியின் பதிவைப் பற்றி ஓகை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

  12. பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்னுடையது என்று முடிப்பதற்குள், அதனால் தான் லோட் ஆக லேட்டாகுது என்று எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள் கிளம்பியது.

  13. மா.சிவகுமார்: லக்கி போல் சும்ம டைம் பாஸுக்கு இல்லாமல், நிஜமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் பதிவெழுத வந்ததாகக் குறிப்பிட்ட சிவகுமார், தம் எல்லா வலைப்பூக்களின் பெயர், காரணம் போன்ற விஷயங்களைச் சொன்னார்.

  14. யெஸ். பாலபாரதி: "குமுதம், விகடன் இவற்றின் அட்டைப்படத்தில் போடும் நடிகைகள் படம் மாதிரி நானும் வலைப்பூக்களில் இருக்கிறேன்" என்று சொல்லி எல்லாருடைய தன்னடக்கத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் பாலபாரதி. "இன்றைய தேதிக்கு பாகச அல்லது பாலபாரதி என்று எழுதினாலே பதிவுகளில் ஹிட்ஸ் கூடுவதாகச் சொல்கிறார்கள்" என்று உபரி தகவலையும் கொடுத்து, இதுவரை பா.க.சவில் இல்லாதவர்களையும் "நாம் கூட சேர்ந்துக்கிடலாமே!" என்று யோசிக்கவைத்தார்.

  15. ப்ரியன்: நான் தான் ப்ரியன் என்றவுடனேயே, "ஓ.. காதல் கவிதைகள் எழுதும் ப்ரியனா?' என்று நாலாபுறத்திலிருந்தும் சத்தம் வந்தது. கவிதைகள் எழுதும் ப்ரியன் என்று இவரும் அடக்கம் கொள்ள, விடாமல் யாரோ, காதல் கவிதைகள் என்று அழுத்திச் சொன்னார்கள். "இல்லை.. மற்ற பொருட்களிலும் கவிதை எழுதுவேன்; ஆனால் காதல் கவிதைகள் தாம் அதிகம் கவனம் பெறுகின்றன போலும்" என்று கழன்றுகொண்டார்.

  16. த. அகிலன்: கனவுகளின் உலகம் என்று பதிவெழுதி வருகிறேன் என்றார் அகிலன். போன கூட்டத்தில் மின்னியதற்குத் தொடர்பில்லாமல், இவரும் அமைதியே உருவாக இருந்தார்.

  17. கோ. இராகவன்: "ஆன்மீக விஷயங்கள் சிலது எழுதுவேன். அத்தோட, எங்கயாவது ஊருக்கு போய் வந்தா, படிக்கிறவங்க வெறுத்துப் போகுமளவுக்குத் தொடரா எழுதி போரடிப்பது என் வழக்கம்" என்று அடுத்த தன்னடக்க விளக்கத்தோடு வந்தார் ஜி.ரா.

  18. ஓகை நடராஜன்: "சும்மாத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; கொஞ்ச நாளாகத் தான். அதிகம் எழுதும், பொதுவாக பின்னூட்டம் மட்டும் இடுபவன்" என்று அறிமுகம் செய்து கொண்டார் ஓகை. "இதுவரை நான் பின்னூட்டமிடாத பதிவுகளே இருக்க முடியாது. இங்குள்ள அனைவருக்குமே பின்னூட்டம் போட்டிருக்கிறேன்" என்று சொன்னதும், சுந்தர் குறுக்கிட்டு, "எனக்கு இன்னும் யாரும் போடலை" என்று அங்கலாய்த்துக் கொண்டார் (சுந்தர் கவனிக்க, பாலபாரதி சொன்ன யோசனையை முயற்சி செய்து பார்க்கலாம் ;)]

  19. தமிழி: இந்த வார சந்திப்பில் நட்சத்திரம் தமிழி. ஜெய்சங்கரின் மூலம் பதிவுகளுக்கு அறிமுகமான தமிழி, புது ஊருக்கு வந்ததால் நண்பர்கள் அதிகம் இல்லாமல் போன கவலைக்கு வடிகாலாக பதிவெழுதத் தொடங்கியதாகக் குறித்தார். பொதுவாக எல்லா விவாதங்களையும் இந்த முறை தொடங்கி வைத்தவர் இவரே எனலாம். லக்கிலுக்குக்கு ஜிபோஸ்டில் தீவிர போட்டியைக் கொடுப்பவர்களில் தானும் ஒருவர் என்பதையும் சொல்லிக் கொண்டார்.

  20. We the people: "என்னைக் கவர்ந்த அரசியல், சுற்றியுள்ள உலகம் இவற்றைப் பற்றி எழுதவே வலைப்பூ வைத்திருக்கிறேன்" என்பதுடன் மறக்காமல், "பாகசவின் தூண்களில் ஒருவன்" என்பதையும் குறிப்பிட்டார் ஜெய். ஜெய் இருப்பதால் தான் பாகச இன்னும் ஆட்டம் காணாமல் இருக்கிறது என்றால் மிகையில்லை.

  21. நிர்மலா: "அனுபவம் நிகழ்வுகள் என்று எப்போதாவது எழுதுவது என்வழக்கம்" என்றார் நிர்மலா. "அடுத்த கூட்டத்திற்கு வரும் முன்னராவது கொஞ்சம் வலைப்பூக்களில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக் கொண்டார்.

  22. அன்புடன் ச.சங்கர்: முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், தாம் இதுவரை அதிகம் எழுதவில்லை என்றார். கடைசியாக எழுதிய முல்லை பெரியார் பற்றிய கட்டுரை பூங்காவில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டுத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார்.

  23. சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை கட்டுரை முதலியவை எழுதி வருவதாகச் சொல்லிக் கொண்டார் சுகுணா. போட்டி சந்திப்பு என்னவாயிற்று என்று கடைசி வரை சொல்லவில்லை :)


அறிமுகங்கள் முடிந்தபின் திரு தமது கையெழுத்து இயக்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இதுவரை சேர்ந்துள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் அந்தக் கோரிக்கையையும் இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது தமிழக அரசுக்கோ அனுப்பலாம் என்று யோசனையை முன்வைத்தார். தமிழி, "இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காவது அரசியல் தலைவர்கள் ஏதேனும் பேசவாவது செய்கிறார்கள், நம்மை மட்டுமே நம்பி வந்து சேரும் அகதிகளை நாம் நடத்தும் விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டார். மதுரையில் தான் சென்று நேரில் பார்த்து வந்த அகதி முகாம் ஒன்றினைப் பற்றி அவர் விவரிக்கவும், அதைப் பற்றி என்ன செய்யலாம் என்று பேசப்பட்டது.



"பத்து வருடங்களுக்கு முன்னால் இதைப் போல் பூங்காக்களில் அமர்ந்து இலங்கை பற்றிப் பேசக் கூட நம்மால் முடிந்திருக்காது" என்றார் சிவகுமார். 'சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல் நடத்தும் அரசாங்கத்தில் அகதிகளை மதிப்புடன் நடத்துவது கடினமே' என்றார் சுகுணா திவாகர். திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்துவதாகத் தான் கண்டு வந்த வட இந்திய அகதி முகாம்களின் நிலையைப் பேசினார் பாலபாரதி.



வலைபதிவர்களுக்குள் ஒரு குழு போல் அமைத்து அகதி முகாம்களைப் பார்வையிட்டு வந்தால், எல்லாரும் சேர்ந்து தெரிந்தவர் அறிந்தவர் வட்டத்தில் விவரம் தெரிவித்து இன்னுமொரு கையெழுத்து இயக்கம் தொடங்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் தமிழி. அதற்கான ஏற்பாடுகள் என்னவென்பதைக் கண்டு சொல்வதாக பாலபாரதி சொன்னார். வலைபதிவர் குழுவென்றால், அதில் யார் யார் இருக்க வேண்டும் அந்த ஐந்து ஆறு பேருக்கு ஒரே சமயத்தில் நேரம் கிடைக்குமா என்றெல்லாம் விவாதம் நீண்டது. எப்படியும் வெளியாட்கள் யாரையாவது சேர்த்துக் கொண்டுதான் போக வேண்டி இருக்கும் என்றார் பாலபாரதி.



வெளிநாட்டினருக்குத் தெரிவதை விட ஈழம் குறித்த பிரச்சனைகள் இந்திய நாட்டினருக்குத் தெரிவது மிக மிகக் குறைவே என்றார் திரு. பெல்ஜியத்தில் தெரிந்து வந்த விஷயங்கள் தாம் இன்னமும் தான் பேசிக் கொண்டிருக்கும் ஈழ நிலை என்று அவர் சொன்னபோது ஈழப் பிரச்சனையில் ஊடகங்களின் பங்கு எத்தனை குறைவாக உள்ளது என்பதை எல்லாரும் உணர ஏதுவாயிற்று.



தமிழி கிளப்பிய அடுத்த பிரச்சனை பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றியது. தன்னைப் பாராட்டும் விமர்சனங்களை மட்டுமே வெளியிட இந்தப் பின்னூட்ட மட்டுறுத்தல் உதவி செய்கிறது என்பதால் மட்டுறுத்தல் இருக்கக் கூடாது என்றார் தமிழி. மட்டுறுத்தல் இல்லாத காலங்களைப் பற்றிய விவரங்களை அவருக்குச் சொல்லிப் புரியவைக்கவும், அடுத்து தேன்கூடு போட்டியைப் பற்றியும் தனது அதிருப்தியை வெளியிட்டார். ஆக்கங்களைப் படிக்காமலே தெரிந்த பதிவர் பெயர் பார்த்தே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வழி வகுக்கும் தேன்கூடு போட்டியின் நடைமுறையில் தமக்கு ஒப்புமை இல்லை என்றார்.



முதலில் ஒரு நடுவர் குழு ஆக்கங்களைப் படித்து அவற்றில் முதல் பத்து என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதன்பின் ஓட்டெடுப்பு என்பது போல் இருந்தால், குறைந்த பட்சம் ஓட்டு போடுபவர்களாவது எல்லாவற்றையும் படிப்பார்கள் என்ற யோசனையை கோ. ராகவனும் ஆமோதித்தார்.



அடுத்ததாக, பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் லக்கிலுக் பதிவில் மட்டும் வந்ததால் அதிகம் பேர் பார்வையிட்டிருக்க முடியாமல் போயிருக்கும் என்றார் ஓகை. தமிழ்மணம்/ தேன்கூடு போன்ற வலைதிரட்டிகளின் முகப்பில் இது போன்ற சந்திப்பின் செய்திகள் வெளியிடலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார். வலைபதிவர் சந்திப்பு மாதமாகவே ஆகிவிட்ட நவம்பர்-டிசம்பரில் இது போன்ற அறிவிப்புகளை அடுக்குவது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற சந்திப்புகளைப் பற்றி ஒரே ஒரு பதிவர் அறிவிப்பு கொடுப்பதை விட, தினம் ஒரு பதிவர் என்ற கணக்கில் குறைந்தது மூன்று பதிவர்களின் வலைப்பூக்களில் அறிவிப்பு கொடுக்கலாம்.



முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழங்கப்பட, அத்துடன் கூட்டம் கலைந்து சின்னச் சின்னக் குழுக்களாக பிரிந்து பேசத் தொடங்கினர். ஏழரை மணிக்குப் பூங்காவை விட்டு நான் வெளியேறும் போது, இன்னமும் பலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.



ஆகக் கூடி இந்தப் பதிவர் சந்திப்பின் முடிவுகள்/தீர்மானங்கள்:

  • ஈழ அகதி முகாம்களைப் பார்க்கச் செல்வது பற்றிய விவரங்களைப் பாலபாரதி சேகரித்து அளிப்பார்
  • இனிமேல் பதிவர் சந்திப்புகள் வைத்தால் குறைந்த பட்சம் சந்திப்பு நடக்கும் தினத்திலாவது வலைதிரட்டிகளின் அறிவிப்பு பகுதியில் அவற்றைத் தெரியச் செய்யலாம்.- வேறு யோசனைகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் முன்வைக்கலாம்
  • கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்த கையெழுத்துகளோடு ஐநா தலைவர்களுக்கு திரு நமது முறையீட்டை அனுப்பி வைப்பார்
  • சுந்தரும் தமிழியும் தீவிர பாகச உறுப்பினர்களாகச் செயல்படத் துவங்குவார்கள் (தமிழி பூங்காவிலேயே தொடங்கிவிட்டார் :) )


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதென்னவென்றால், துளசி அக்கா இன்னும் இங்கே இருப்பதனால், புதுவருடத்தை ஒட்டி இன்னுமொரு சந்திப்பு இருக்கலாம்.

Monday, December 18, 2006

சென்னை சந்திப்பு - 1



தொடர்புள்ள இடுகைகள்:
1. தமிழ்நதி
2. அன்புடன் ச.சங்கர்
3. சிவஞானம்ஜி
4. மா. சிவகுமார்

சூடான செய்திகளுக்கு:

நாமக்கல் சிபி

Friday, December 15, 2006

பின்னூட்டம் ஏற்காத பீட்டா

கவிதா, சர்வேசன், செந்தில் போன்ற ப்ளாக்கர் பீட்டா பதிவுகளில் சாதா ப்ளாக்கர் கணக்குடையவர்கள் பின்னூட்டமிட்டால், அவை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. நேற்று, டிசம்பர் 14,2006லிருந்து இந்தப் பிரச்சனை புதிதாகத் துவங்கியுள்ளது.

அறிகுறி:

பீட்டா பதிவுகளில் பின்னூட்டப் பெட்டிக்கு நகரும் தருவாயில், ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைந்திருந்தாலும், உங்களின் பெயர் காண்பிக்கப்படாது. கீழுள்ள படம் போல:



பிளாக்கர் மென்பொருளாக்கக் குழுமம் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைக் கண்டுகொண்டுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள் வேலை செய்துகொண்டே இருக்கும்போதில், தற்காலிகத் தீர்வாக முன்வைப்பது:

  • புதுப் பக்கம் ஒன்றைத் திறந்து கொண்டு http://www.blogger.com/login.g என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  • இதில் உங்கள் ப்ளாக்கர் பயனர்/கடவுச் சொல்லை அளித்து லாகின் செய்யவும்
  • பீட்டா ப்ளாக்கரில், நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய பக்கத்தின் உரலை எடுத்து இப்போது லாகின் செய்து வைத்திருக்கும் புதுப் பக்கத்தின் address bar இல் ஒட்டிவிடவும்.
  • இப்போது உங்கள் பெயர் பதிவில் தெரியும். நீங்களும் உங்கள் பயனர் பெயரிலேயே பின்னூட்டமிடலாம்.


இந்த வழி கடினமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது அனானி மற்றும் அதர் ஆப்ஷன்கள் :). மேலும் தகவல்களுக்கு இங்கு தட்டவும்.

சர்வேயல்

சர்வேசன் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வந்து சர்வே எடுத்துக் கொண்டே இருக்கிறார். பதிவர்களைப் பற்றிய வாக்கெடுப்பை அறிமுகப் படுத்தியதும் சர்வேசனின் பின்னூட்ட எண்ணிக்கை முதல், பதிவு தட்டப்படும் எண்ணிக்கைவரை எல்லாம், எல்லாம், எல்லாமே ஏறி விட்டது போலும்... :)

"நவம்பர் மாதம் பிளாக்கர் கணக்கு உருவாக்கிய சர்வேசன் அதற்குள் பதிவர்களை அளக்கும் அளவுக்கு எப்படி வந்தார்" என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமுகவினர். "சர்வேசனை நம்பலாமா?" என்று இன்னுமொரு அளப்பானே தொடங்கிவிட்டார் இம்சை அரசன்.

என் பங்குக்கு என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும் முன்வைத்துவிடுகிறேன்:

  • பல்சுவை, ஆன்மீகம், சமூக அக்கறை, அரசியல் தவிர வேறு வகைகளே இல்லையா என்ன? யோசித்தால் அறிவியல் (வைசா, செந்தில் குமரன்..), மருத்துவம்(எஸ்கே, மங்கை, பத்மா..), கவிதை(ப்ரியன், ரசிகவ்,..), செய்திகள்(இட்லிவடை, ஊசி,..), பங்குவணிகம்(குப்புசாமி, தமிழ்சசி, சதயம்..), நகைச்சுவை(வெட்டிப்பயல், கைப்புள்ள..), புதிர்கள்(யோசிப்பவர்..), தொழிற்நுட்பம்(ஹை கோபி, ரவிசங்கர்..) இன்னும் எத்தனை பிரிவுகள் எட்டிப் பார்க்கின்றன?!

  • இன்னின்னார் இன்னின வகைகளில் மட்டுமே அடங்குவார்கள் என்பதைத் தீர்மானிக்க மூவர் குழு என்ன அளவுகளைப் பயன்படுத்தியது என்பதைப் பற்றிய தெளிவான குறிப்பு காணோம். உதாரணத்திற்கு, தமிழ்சசியைப் பல்சுவையில் எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதே புரியவில்லை. ஆழமான அரசியல் கட்டுரைகளையும், தீர்க்கமான வணிக ஆய்வுகளையும் கொடுக்கும் தமிழ்சசியின் கட்டுரைகளை பிற "நிஜமான" பல்சுவைப் பதிவர்களுடன் சேர்த்துப் பட்டியலிட்டால், "பல்சுவை" என்ற தலைப்புக்குப் பொருத்தமான பதிவர் என்று பார்த்து ஓட்டு போடுவதா? அல்லது சிறந்த என்பதைப் பார்ப்பதா?

  • அரசியல்/ சமூகம் என்று தான் தமிழ்மணமே வகை பிரிக்கிறது. அரசியல் கட்டுரைகளையும் சமூக அக்கறையையும் எப்படிப் பிரிக்கிறார்கள்? எந்த அளவைகளில் இவற்றைத் தனித்தனியாக பார்க்க முடிகிறது? அரசியல் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? அத்துடன், சமூகம் குறித்தான விஷயங்களை எழுதும் பதிவர்களுக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்குமே. அப்படியான அரசியல் பார்வைகளும் சமூக அக்கறையுடனான அவர்கள் பதிவுகளில் கண்டிப்பாக வெளிப்பட்டிருக்கும். ஆக, அரசியலையும் சமூகத்தையும் எப்படிப் பிரிக்கிறீர்கள்?

  • பல விஷயங்களையும் எழுதக் கூடிய, அரசியல் நையாண்டிப் பதிவுகளை அற்புதமாகக் கொடுக்கும் செல்வனை, சமூக அக்கறைப் பிரிவில் சுருக்குவது/out of place ஆக்குவது ஆகாதா?

  • செந்தழல் ரவியின் வேலைவாய்ப்புப் பதிவை அசுரன், சபாபதி சரவணன் இவர்களின் சமூகம் குறித்த பதிவுடன் ஒப்பிடுவது கூட குயிலையும் மயிலையும் ஒப்பிடும் விதமாகத் தான் இருக்கிறது.

  • ஒரு கட்சி சார்பாகவோ, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்தோ இருக்கக் கூடிய பதிவுகளை மட்டுமே அரசியல் பதிவாக முன்வைப்பதாக இருந்தால், We the people எழுதும் பல சமூகம் சார்ந்த பதிவுகள் எந்தக் கட்சியையும் முன்வைப்பதாக இல்லை என்பது தானே உண்மை?

  • ஈழ அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேசும் தமிழ்நதி, அகிலன், வசந்தன் போன்றோருக்கு இடமே இல்லாமல் ஒரு சர்வே என்பது அடுத்த ஆச்சரியம்!

  • ஆன்மீகப் பிரிவில், கண்ணபிரான் ரவிசங்கர், ஞானவெட்டியான் போன்ற ஆன்மீகப் பதிவர்கள் விட்டுப்போனது ஒரு குறை என்றால், தருமி போன்ற நாத்திகவாதிகளையும் அதில் சேர்த்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். கடவுள் சிந்தனையாளர்களுடன், கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்களையும் சேர்ப்பது தான் நடுநிலையான வாக்குப் பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்னும் பல கேள்விகள்.. நேற்றே எழுதி இருக்க வேண்டிய இந்தப் பதிவை ஒரு நாள் தள்ளி இடுவதற்கு காரணம், சர்வே குறித்த கேள்விகளை, அதில் பெயர் வராத ஏக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாக திரிந்துவிடக் கூடாதென்ற பயம். மேலும் இவற்றில் சில கேள்விகளை முன்வைத்த போது சர்வேசன் எழுதிய ஒரே பதில், "மூவர்குழுவுக்கு மதிப்பு கொடுத்து இதைச் செய்திருக்கிறேன்" என்பது தான்.

சர்வேசன் மிகவும் மதிக்கும் அந்த மூவர் குழுவின் பேரில், சர்வேயில் வாக்கு போட விரும்புபவர்களுக்கும் மதிப்பு வர வேண்டுமென்றால், அந்த மூவர் யாரென்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துக் கணிப்பில் உதவும் மூவர் குழுவின் அரசியல் பார்வை, அவர்கள் பயன்படுத்தும் அளவுகள் என்பதெல்லாம் தெரியாமல், எப்படி வாக்களிக்க முடியும்?

ஐயா, சர்வேசா, நேர்மையான தேர்தல் என்றால், தேர்தல் அதிகாரிகள் பேரைச் சொல்லும்மைய்யா...

Wednesday, December 13, 2006

கூட்டணி ஆண்டு 2006

2006 ஆம் ஆண்டு வலைப்பதிவு நிகழ்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கூட்டு வலைப்பதிவுகள் என்கிறார் பாஸ்டன் பாலா. அங்கொருவர் இங்கொருவராக தனித்தனியாகப் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றிணைந்து கூட்டாக எழுதத் தொடங்கியதென்பது, இப்போது யோசிக்கும் பொழுது கொஞ்சம் அதிசயத்தக்க நிகழ்வாகத் தான் தோன்றுகிறது.

தேவின் பார்வையிலான கூட்டு வலைப்பதிவுகளைப் பற்றிய செய்திகளைப் படித்தபின் எனக்கும் அது போன்ற ஒரு இடுகை எழுதும் ஆசை துளிர்த்துவிட்டது..


1. தமிழகத் தேர்தல் 2006 - ஜனவரி 2006.

வருடத் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்ட இந்தத் தளத்தை நான் பார்வையிட்டதே ரொம்பக் குறைவு. ஓட்டு போடுவதைத் தவிர தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்த ஆசாமியான என்னை, இந்தப் பதிவில் கவர்ந்தது, இதன் லோகோ தான் :). இடுகைகளை அதிகம் படிக்காத போதும் எனக்குத் தெரிந்து இன்றைக்கு இருக்கும் கூட்டு வலைப்பதிவுகளில் மிக அதிக இடுகைகள் உடையது இதுவாகத் தான் இருக்கும்... தேர்தல் முடிந்தபின்னும், செய்திக்கோவையாக தொடர்ந்த பாஸ்டன் பாலாவுக்கு மொத்த புகழும் என்று நினைக்கிறேன்.. வாக்கு கொடுத்தபடி, அமெரிக்க செனட் தேர்தல் வரை தொடருவார் என்று நினைத்தேன்.. ஏனோ அது நடக்கவில்லை ;)




2. சொல் ஒரு சொல் - ஏப்ரல் 2006

ஜனவரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டு வலைப்பதிவை அடுத்த பதிவு ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியமாகி இருக்கிறது. குமரன், ஜிராகவன் இருவரும் சேர்ந்து இயங்கிய சொல் ஒரு சொல், தமிழில் தாராளமாகப் புழங்கும் ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தரும் களமாக இயங்கத் தொடங்கியது.

குமரன், ஜிராவுடன் எஸ்கே, ஜெயஸ்ரீ என்று பின்னூட்டங்களில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள நல்ல இடுகைகளாகவே இருந்தன ஒவ்வொன்றும். ஏனோ இந்தப் பதிவு இப்போது சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று தோன்றுகிறது. சின்னதொரு சர்ச்சைக்குப் பின்னர் சொற்களின் வரவு கொஞ்சம் மந்தகதியில் இருப்பதாகவே தோன்றுகிறது. இன்னும் நிறைய சொல்லலாமே!

3. இயன்ற வரையிலும் இனிய தமிழில்... - ஏப்ரல் 2006

ஜீவாவின் தனிவலைப்பூவாகத் தொடங்கிய இந்த வெண்பா வடிக்கும் வலைப்பூ, ஏப்ரலில் இலவசக்கொத்தனாருடன் இருவராகி, கூட்டு வலைப்பதிவாகியது. வெண்பா வடிக்கும் விளையாட்டை மிகவும் உற்சாகமானதாக்கியது இந்தக் கூட்டுப் பதிவு. இந்த வலைப்பதிவின் மூலம் ஓகை நடராஜன், ப்ளோரைப் புயல் என்று (அப்போது) அதிகம் வலையுலகில் நடமாடாத நண்பர்களும் வெண்பாக்களால் வெளிவர வாய்ப்பாயிற்று.

வெண்பா அந்தாதி விளையாடிய பொழுது, மரபுக் கவிதைகளைப் பற்றிய அச்சம் விலகி, நாமக்கல் சிபி, பெருசு, கெக்கே பிக்குணி என்று கூட்டம் சேர்ந்ததைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் இப்போது கொஞ்சம் சிதறித்தான் போய்விட்டதென்று தோன்றுகிறது. ஜீவாவும் கொத்தனாரும் இன்னும் ஈற்றடிகள் கொடுத்து வெண்பா வடிக்க வந்தால் நலம்..


4. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் - ஏப்ரல் 2006

கூட்டு வலைப்பதிவுகளின் பொற்காலமான ஏப்ரல் 2006இல் தொடங்கிய மற்றொமொரு கூட்டுப்பதிவு வாலிபர் சங்கம். ஆங்காங்கே தனித்தனியாக கைப்புள்ள, தேவ், சிபி என்று விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடிக் கும்மி அடிக்கக் கட்டிய பதிவு. விளையாட்டுப் பதிவுகளாகவே இட்டு, வருட முடிவுக்குள் நூறு பதிவும் கண்டுவிட்ட குழுமத்தில் இருந்தவள் என்ற முறையில், இந்தக் கூட்டு வலைப்பதிவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு தேவுக்குத் தான். அவ்வபோது இடுகைகள் இடுவதில் சுணக்கமும், பல்வேறு வேலைகளும் என்று மக்கள் தொலைந்து போகும் போதெல்லாம் உசுப்பிவிட்டு பதிவிடத் தூண்டி, தமிழ் வலைப்பதிவுகளிடையில் எப்போதும் எல்லாருக்குமான சிரிப்பு வலைப்பூவாக இதைக் காப்பாற்றி வருவதில் தேவின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல. அதே போல், வ.வா.சங்கத்தின் நற்பெயருக்கு முக்கிய காரணி, கைப்புள்ள. சாம்பு முதல் கோவாலு வரை யார் வம்பிழுத்தாலும் நிதானம் தவறாமல், சிரிப்பை மட்டுமே முதல் நிலையில் வைத்துச் சங்கத்தைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கைப்பு, "ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க.. " ;)

மாதா மாதம் அட்லாஸ் வாலிபர், நூறாவது பதிவுக்கு பாஸ்டன் பாலா, கலைவாணர் பிறந்த நாளுக்கு தருமி என்று புதிய புதிய வருத்தப்படாத வாலிபர்களையும் அவ்வப்போது சங்கத்தில் காண முடிவது இன்னும் சிறப்பு. புது வருடத்துக்கு யார் வருவாரோ? ;)
வாலிபர்சங்கத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நிறைய தகவல்கள் இருந்தும் உறுத்தாத வார்ப்புரு. தொடர்ந்து கலக்குங்க...


5. திராவிட தமிழர்கள் வலைத்தளம் - மே 2006
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இன்னுமொரு தளம் திராவிடத் தமிழர் வலைத்தளம். தேர்தலுக்குப் பின் உருவான இந்தத் தளத்தின் கட்டுரைகள், கொள்கை விளக்கக் கவிதைகள், திராவிடக் கருத்தாக்க பயிற்சிப் பட்டறைகள், சுலோகன் போட்டிகள் என்று களைகட்டிக் கொண்டே இருக்கிறது.


இன்னமும் அதிகமான எதிர்பார்ப்பு இந்தத் தளத்தின் மீது உள்ளது என்பது உண்மைதான்..


6. தமிழ்ச்சங்கம் - ஆகஸ்ட் 2006

இரண்டுமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் குழுப்பதிவுகள் துவக்கவிழாவைத் தொடங்கிவைத்தது தமிழ்ச்சங்கம். சங்கத்தின் கவிதைப் போட்டியும் அதன் முடிவுகளும் பரபரப்பானதாக இருந்தாலும் இன்னம் முழுமையான செயல்பாட்டுக்கு வராத சங்கமாகவே தோன்றுகிறது.

கதை/கட்டுரை/கவிதைப் போட்டிகளை மாதமொருமுறையோ, காலாண்டு ரீதியாகவோ நடத்திக் கொண்டே இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தமிழ்ச்சங்கத்தை நிறுவிய இளா பதிவுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கும் இப்போது, இந்தக் கூட்டு வலைப்பதிவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.




7. சென்னப்பட்டணம் - ஆகஸ்ட் 2006

சென்னை தினத்தை ஒட்டி துவங்கப்பட்ட மற்றுமொரு குழுமப் பதிவு சென்னப்பட்டணம். வ.வா.சங்கத்தின் தூண்டுகோல் தேவ் என்றால் சென்னப்பட்டினத்தில் பாலபாரதி. நெறிப்படுத்த மா. சிவகுமார். "சொல் ஒரு சொல்" போலவே, சமீபத்தைய சர்ச்சைகளுக்குப் பின்னர் கொஞ்சம் சுணக்கம் கண்டிருக்கும் சென்னப்பட்டினம் புது வருடத்தை ஒட்டி மீண்டும் உயிர்பெற வேண்டும்.


8. சக்தி - ஆகஸ்ட் 2006


வலைப்பதிவுகளில் பெண்களை மையப்படுத்திப் பிரச்சனைகள், பொதுப்படையான விமர்சனங்கள் அதிகரித்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் விதமான பதிவாக வந்தது சக்தி. பல தளங்களில் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அவதானித்துக் கொண்டிருக்கும், அது போன்ற பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் பத்மாவும் செல்வநாயகியும் மதியுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டு வலைப்பதிவில் கட்டுரைகள் பொறுமையாகவும், ஆழமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


வலையுலகில் கூட பெண்களை இன்னும் புலம்பும் நிலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில்(நன்றி: இட்லிவடை) இது போன்ற வலைப்பதிவுகள் தேவையாக இருக்கின்றன.

9. முருகனருள் - செப்டம்பர் 2006
முருகன் மேல் பற்று கொண்ட ஆன்மீகவாதிகளுக்கான குழுத்தளம் முருகனருள். முருகன் பாடல்களைச் சேகரிக்கும் இந்தத் தளத்தில் பாடல் வரிகள் மட்டுமல்லாமல் பாடலைக் கேட்க சுட்டிகளும் கொடுக்கப் படுகின்றன. பாடல்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களைப் பற்றியும் இதில் எழுதத் தொடங்கலாமே!


10. விக்கிபசங்க - அக்டோபர் 2006
சமீபத்தில் தொடங்கி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மற்றுமொரு குழுத்தளம் விக்கிபசங்க. என்ன கேட்டாலும் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
இடுகைகள் அனைத்தும் மிக மிகத் தெளிவாகவும் பயனுள்ளவையாகவும் உள்ளன. பின்னூட்டப் பெட்டியை அரட்டைக் களமாவதிலிருந்து காப்பாற்றி வந்தால், இன்னும் அருமையான தளமாகும் வாய்ப்பிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.



11. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் - டிசம்பர் 2006
தற்போதைய நிலவரப்படி இந்த வருடத்தின் கடைசி குழுப்பதிவாக இருக்கும் இந்தப் பதிவு, புதிதாக பதிவெழுத வரும் வலைஞர்களுக்கு உதவிப் பக்கமாக உருவெடுக்க இருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாக பதிவுகள் தொடர்பான எல்லாமும் இங்கே கிடைக்கும் நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படாத இந்த உதவிப் பக்கம் சீக்கிரமே நல்லதொரு பக்கமாக உருவாகும் என்று நம்புகிறோம்.

  • பதினோரு கூட்டு வலைப்பதிவுகள்,
  • இன்னமும் ஒரு சில அதிகம் செயல்படாத குழுப்பதிவுகள்,
  • தமிழ்வெளி போன்ற ஆரம்பித்து தொடராமல் போன வலைப்பதிவு வார இதழ்கள்,
  • நண்பர்களின் உதவியுடன் செயல்படும் செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு பதிவுகள்
என்று 2006 கூட்டுப் பதிவுகளின் வருடமாகத் தான் பரிமளிக்கிறது. ஆண்டு முடிவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கும் தருவாயில் இன்னும் கூட கூட்டுப்பதிவுகள் வரலாம்; பிரகாசிக்கலாம்.

கருத்துத் தளங்களில் வேறுபாடுள்ள பதிவர்களும், வ.வா.சங்கம், விக்கிபசங்க, ப்ளாக் உதவி போன்ற முயற்சிகளுக்காக ஒன்று சேரும் பொழுது பதிவர்களுக்கிடையிலான நட்பும், புரிதலும் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழுப்பதிவுகளில் இன்னும் ஈடுபடாத நண்பர்களும் இனியும் சில குழுப்பதிவுகளில் சேர்ந்து இயங்குதல் தமிழ்ப்பதிவுலக ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

வாழ்க கூட்டணி ஆட்சி ;)

Monday, December 04, 2006

சோதனைப் பதிவு :(

தமிழ்மண நட்சத்திரத் திரட்டியில் கடைசி பதிவால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க.. ஹி ஹி..

பின்னூட்டப் பெட்டியை மூடிய பதிவு இது :))


நட்சத்திர வாசிப்புரை

பொன்ஸ் என்னிடம் முதன்முறையாக 'இலவசமாய் ஏதுமில்லை' என்ற தனது கதையைப் பற்றி விமர்சிக்கச் சொன்னபோது நான் இப்படி எழுதியிருந்தேன்.

கத நல்லாத்தான் இருக்குது. ரொம்ப இயல்பான நடையில எழுதியிருக்கீங்க. வாசிக்க சுவையாத்தான் இருந்தது. ஆனாலும், கருத்து ரீதியா பார்த்தா எனக்கென்னமோ ராது செஞ்சது, 'குளத்து கிட்ட கோவிச்சுக்கிட்டு எவனோ எதயோ கழுவாம போன' கதயத்தான் ஞாவத்துக்குக் கொண்டு வந்தது.

பொறவென்னங்க.. இவுக கோவிச்சுட்டு போயிட்டா
அவரு வரதட்சணையை வாங்க மாட்டாரா? அழகா, புது்சா, படிச்ச, சம்பாதிக்குற பொண்டாட்டி வர்ற கனவுல இருக்குறவனுக்கு எப்படி வரதட்சணை பெரிய விசயமா இருக்கும்?அதனால அவனுக்கு
எடுத்துச்ட்டுபோட்டு இவங்க 'டயலாக்' அடிச்சுட்டு ஓடிப் போயிட்டாங்களாம்.

என்னமோ போங்க, பொம்பளைங்க கதை எழுதுனா ஆம்பளைங்களுக்கு 'சுருக்' மெச்செஜ் குடுக்குறதா நெனச்சு கதைக்கு சுருக்கைப் போட்டு தொங்க விட்டுடுறீங்க
இப்படிக் காட்டமாகச் சொல்லி இருந்தும் கூட தனது நட்சத்திரப்பதிவுகள் குறித்து என்னை வாசிப்புரை (நன்றி: பாபா) எழுதச் சொல்வதற்கு அவருக்கு உண்மையிலேயே துணிச்சல் அதிகம்தான்.

வழக்கமான தன்னடக்கத்துடன் (வழக்கமான என்றால், பொதுவாக நட்சத்திரங்கள் முதல்பதிவில் தங்களைப் பற்றி அடக்கமாக 'பீலா' விடுவதைத்தான் சொல்கிறேன் :-)) முதல் பதிவைத் துவங்கும் பொன்ஸ் அடுத்த பதிவான 'ப்ளாக்கர் பீட்டா'வை இருண்மையில் இருக்கும் வாசகன் நவீன கவிதை வாசித்து முழிபிதுங்கும் அதே அனுபவத்தைக் கட்டுரையாக வடித்திருக்கிறார். கணினியில் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் உள்ளவர்களுக்கு அதில் நிறைய தகவல்களும் செய்திகளும் அடங்கியிருக்க என்னைப் போன்ற கைநாட்டுகள், 'என்னமோ எழுதிருக்காங்க போல' என்று வேடிக்கை பார்த்ததோடு சரி..

மென்பொருளாக்கத்துக்கும் பல நிலைகள் உள்ளன. முதலில், மென்பொருளுக்கான பயன்களுக்குத்
தகுந்தாற்போல், அதை வடிவமைப்பது, அதன்பின், நிரலி எழுதுவது, கடைசியாக நிரலி வேண்டிய
வகையில் செயல்படுகிறதா என்று அறிய அதனைச் சோதிப்பது. பிளாக்கர் போன்ற இலவச
மென்பொருள்களைச் சோதிக்கும் பொழுது, அதன் இலவச பயனர்களையே இந்த வேலையைச் செய்ய உதவி
கோருவது வழக்கம்
என்று எளிய தமிழில் தொழில்நுட்ப கட்டுரையை அவர் எழுதியிருப்பதும்,அதை வாசிப்பவர்கள் எளிதாக சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறதென்பதும் கலைச்சொற்கள் அனாவசியம் என்று சொல்லும் 'தமிங்கலர்களுக்குப்' பாடமாக இருந்தால் நன்று.

புதிதாக ஒரு ஊருக்குப் போகும்போது அந்த ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை விட எச்சரிக்கையுணர்வை ஊட்டுகிறோம் பேர்வழி என்று கெட்ட விசயங்களை அடுக்கிச் சொல்வதற்கென்றே சிலர் பிறப்பெடுத்திருப்பார்கள்.பொன்ஸுக்கு அந்த மாதிரி ஆட்களின் பழக்கம் அதிகம் போலிருக்கிறது.

பெரும்பாலும் நாம் மனிதர்களை அவர்களது உருவத்தை வைத்தே எடைபோட்டுவிடுகிறோம். 'உருவு கண்டெள்ளாமை வேண்டும்' என்று வள்ளுவர் வேலையத்துச் சொல்லிட்டுப் போனாருன்னு நாமாவே நெனச்சுக்கிடறதால இப்படி. ஆனால், உண்மையில் எல்லா மனுசங்க கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கத்தான் செய்யும். இதை உணரும்போது அந்த நன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது மனிதம் நமக்குள்ளும் செழிக்கும்.

இந்த உண்மையை அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி பதிவில்,
சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது.
என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். சம்பவங்களை நேர்த்தியாகவும் கோர்வையாகவும் தெளிவாகவும் சொன்ன பதிவு இது.

'லிஃப்ட்' சிறுகதையைப் பற்றிப் பெருசாக சொல்ல ஒண்ணுமேயில்ல. 'வெகுஜனப் பத்திரிகைகளின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்னால்' என்று எழுதாத ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் பொன்ஸ். கூடவே, 'பெண்புத்தி பின்புத்தி'ங்குறதை இப்படி ஒரு பெண்ணே பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியலை. :-)

ஆனால், இதனை ஒரேயடியாகத் தூக்கிச்சாப்பிடும் விதத்தில், அடுத்த பதிவில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் பொன்ஸ். 'பெண் ஏன் அடிமையானாள்? ' பதிவின் மூலம். பெரியார் என்ன சொல்ல வந்தார் என்பதையே புரிந்துகொள்ளாமல் அவரை வசைபாடும் பெரியார் எதிரிகளும், அவரின் சீடர்களென சொல்லிக் கொண்டு பெரியாரின் பெயரை நாசப்படுத்துவோர்களுமாகப் பெரியாரை ஆளாளுக்கு சிறியாராக்கும் பெருமுயற்சி நடக்கும் இந்தச் சூழலில், பெரியாரின் எழுத்துக்களை உள்வாங்கிக்கொண்டு எழுதிய இந்தப் பதிவிற்காக சிறப்பு பாராட்டுக்கள். பெரியாரின் எழுத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கல்ல. அவைகளை அவர் தனது கருத்தாக ஆழமாக வெளியிடுகிறார். அதை உள்வாங்கிக் கொண்டு அதனை ஏற்றுக்கொள்வதும் விட்டுத்தள்ளுவதும் அவரவரைச் சார்ந்ததுதான் என்று பெரியாரே சொல்லியிருந்தும் அவர் மேல் வரும் ஆயிரமாயிரம் விமர்சனங்களையும் தாண்டி பெரியார் இன்னமும் வாழ்வது அவரது சொல்லில் இருந்த நேர்மையால்தான். அதனை இந்தப் பத்வின் மூலம் மீண்டும் நிறுவியிருப்பதற்காகப் பொன்ஸைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மீள்பதிவான 'ஏன்?' சிறுகதை மிக இரசிக்கும்படியாக, இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை. ஒற்றைவரியில் ஏன் என்ற கேள்வியோடு முடியும்போது 'அட!இதுக்குத்தான் இந்த இழுப்பு இழுத்தீங்களாக்கும்?' என்ற கேள்வியை எழுப்புகிறது. எதிர்பாராத அதிர்வை வாசகனிடம் ஏற்படுத்த வலிந்து திணித்து கருத்துச் சொன்னது போன்றொரு உணர்வு. தமிழ் திரைப்பட குழந்தைகளின் பாதிப்பில் அந்தக் குழந்தை பேசும்போது மெலிதான அயர்ச்சி தோன்றத்தான் செய்கிறது. தவிர்த்திருந்தால் சிறப்பான சிறுகதையாக வந்திருக்கும்.

'படம் காட்டுறேன்' - ரொம்பப் படம் காட்டாத பாந்தமான பதிவு.படங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததும், மிகச் சிறிய அவசியமான குறிப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை

'பதிவுலகில் பெண்கள்' - பெண்கள் பதிவுலகில் சந்திக்கும் பிரச்னைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இது கொஞ்சம் அதிகப்படியான குற்றச்சாட்டுதான். பதிவுலகில் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலுமே ஆண்கள் அவர்களை அப்படித்தான் நடத்துகிறோம் என்பதுதான் உண்மை :-) இதனைப் புலம்பலாகப் பதிவாக்கவில்லை என்று பொன்ஸ் கூறியிருப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொது இடங்களில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாதென்ற வாதத்தில் உண்மை இருந்தாலும், பெண்களுக்கெதிரான சில இடர்ப்பாடுகளை பதிவு செய்த வகையில் இந்தப் பதிவு முக்கியமானது என்பதே என் கருத்து.

'தேன்மாவின் கொம்பத்து' மலையாளப் படத்தில் நெடுமுடி வேணுவும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து மோகன்லாலைக் கவிழ்ப்பதற்கு திட்டம் போடுவார்கள். அப்போது ஸ்ரீனிவாசன் ஒரு அபாரமான திட்டத்தைச் சொல்லி, 'என் சிறுபுத்தியில் இதுதான் தோன்றியது' என்பார். 'கண்டிட்டு செறிய
புத்தியானென்னு தோணுன்னில்லல்லோ' என்று நெடுமுடி பதில் சொல்வார். இந்தப் பதிவைப் பார்த்ததும் அதுதான் மனதில் தோன்றியது. 'குழந்தைத்தனமான ஆசை' மாதிரி தெரியலியே?!

எல்லாரும்தான் புத்தகம் வாசிக்கிறோம். வாசித்த அனுபத்தைச் சொல்லி அடுத்தவர்களையும் படிக்கத் தூண்டும் விதம் எழுதுவது ஒரு கலை. சிலர் புத்தகத்தை விமர்சிப்பதை விடவும் தான் என்ன உணர்ந்தேன் என்பதைவிடவும் தங்கள் அறிவுஜீவித்தனத்தைத்தான் முன்னிறுத்துவார்கள். பொன்ஸ் நல்லவேளையாக அந்தக் கொடுமையைச் செய்யவில்லை. எளிமையான வாசிப்பனுவத்தை தோழமையோடு பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால்,
நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.
என்பதெல்லாம் ரொம்ப அதிகம். முன்பை விட நிலை தேவலாம் என்பதுதான் யதார்த்தம். 'மெத்தப்படித்தவர்கள்' நிறைந்த கேரளத்தில் கூட எயிட்ஸ் நோயாளிகளுக்கெதிரான சமூக மனோநிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது. என்றாலும், சமயமறிந்து வெளியிட்ட கட்டுரைக்காக வாழ்த்துகள்!

நகைச்சுவையாக எதையும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் இன்னொரு பதிவு. பதிவுலகச் சிக்கல்களை பா.க.ச மூலம் தீர்த்து வைக்கக் கிளம்பியிருக்கும் நோக்கம் புரிகிறது. எங்க வூட்டுப் பூனை - நல்ல கவுஜை!!

எல்லா விசயத்தைப் பத்தியும் எழுதிடணும்கற முனைப்புல ஒரு மருத்துவ கட்டுரையும் எழுதியாச்சு. இதயம் நிற்காம இருக்கணும்னா என்ன செய்யணும்கற அறிவுரையோட முடிச்சிருக்காங்க - என்னமோ இந்த அறிவுரையைக் கேட்டுத்தான் இதயம் இயங்குற மாதிரி (என்னோட அறிவுரை - கவுஜைகளைப் படிக்காதீங்க!!)

பந்தாக்கள் பலவிதம்னாலும் அதை சுவையா எடுத்துச் சொல்றது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான். பி.பி. ஸ்ரீனிவாஸ் ஓர் அற்புதமான பாடகர். அவரை அவர்தான் என்று அறியாமலேயே யதேச்சையாக சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்களை பிசிறில்லாமல் சொல்லியிருக்கிறார். என்னடா, ஒரு பெண்பதிவாளரா இருந்து சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் எதப் பத்தியும் சொல்லலியேன்னு நெனைச்சேன். வந்ததப்பா சரவண பவன்! நடுத்தர மக்களுக்கான நல்ல உணவு விடுதி இல்லாதது குறித்த ஆதங்கத்தை நன்றாகத்தான் பகிர்ந்திருக்கிறார்.

மொத்தமாகப் பார்த்தால் தொழில் நுட்பக் கட்டுரை, கலாய்த்தல், கவுஜை, சிறுகதை, புத்தக விமர்சனம், மருத்துவம், குழந்தைகளுடனான பரிவு என்று தனது பல முகங்களையும் இந்த ஒரே வாரத்தில் காட்ட முனைந்திருக்கிறார்.
பொன்ஸின் எழுத்துக்களில் எனக்கு மிகப் பிடித்த விசயம் கூடுமானவரை ஆங்கிலம் தவிர்த்து எழுத அவர் காட்டும் முனைப்புதான். சிக்கலின்றி, இலகுவாகவும் சரளமாகவும் வாசிக்க வைக்க முடிவதுதான் அவரது எழுத்தின் பலம். சிறுகதைகள் என்று வரும்போது அவர் இன்னமும் கொஞ்சம் வாசிப்பனுவம் பெற்றுக் கொள்வது அவருக்கு நன்மையாக இருக்கும் (வாசகர்களுக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை :-) )

பதிவுகளையெல்லாம் தெளிவாக எழுதத் தெரிந்தவர் செய்த ஒரே தவறு இந்தப் பதிவுகளுக்கு என்னை வாசிப்புரை எழுதச் சொன்னதுதான். நல்லா இருங்கடே!!

'மாநாடு கண்ட' சாத்தான்குளத்தான்

Sunday, December 03, 2006

சரவணபவனுக்குப் போட்டியாக?

நினைவு தெரிந்த நாள் முதல் சென்னையில் ஹோட்டல் சாப்பாடு என்றாலே சரவணபவன் தான். அவர்களின் உயர்தர சைவ உணவின் சுவைக்கு மாற்றாக ஒரு உணவகம் இருக்கிறதா என்றே தெரிந்து கொள்ள முயன்றதில்லை. குடும்பத்திற்கே மிகவும் பிடித்த இந்த உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிட்டு பார்க்காத கிளைகளே இல்லை எனலாம். "அசோக் நகர் பத்தாவது அவன்யூ எப்படிப் போகணும்?" என்பன போன்ற கேள்விகளுக்குக் கூட அந்தப் பகுதி சரவணபவனை அடையாளமாக வைத்து வழி சொல்வது தான் வழக்கம். அத்தனை தூரம் அந்த உணவகத்துடன் ஒன்றிப் போயிருந்த எங்கள் குடும்பத்தில் முதன்முதலாக ஆட்சேபக் குரல் எழுப்பியது நானே.

விண்ணைத் தொடும் அவர்களின் கட்டணங்களும், மிக மிக மெத்தனமாக வாடிக்கையாளரைக் கவனிக்கும் விதமும், இடவசதியே போதாத அவர்களது கிளைகளும், மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும் என்று எத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும் எங்கள் வீட்டாரின் ஒரே ஆயுதம் சரவணபவன் உணவுகளின் மிக அருமையான சுவையும், அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் சுத்தமும் தான்.

'சுமார் 25 வருடங்களாக சென்னையின் சைவ உணவு சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் சரவணபவனுக்குப் போட்டியாக ஏன் இன்றுவரை எந்த உணவகமும் வரவில்லை?' என்ற விவாதம் திடீரென்று எங்களுக்குள் எழுந்தது.




சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் தொடங்க வேண்டுமானால், என்னென்ன செய்ய வேண்டியதிருக்கும்?

அவர்களின் ஒவ்வொரு உணவகம் போலவும் அந்தந்தப் பகுதியில் நடுநாயகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கடை திறக்க வேண்டும். இன்றைய சென்னையின் ரியல் எஸ்டேட்(தமிழில் என்னங்க?:)) விலைகளைப் பொறுத்தவரை இதற்கான வாய்ப்பு மிக மிக விலையதிகமாக இருக்கும். ஆனால், அது ஒன்று தான் காரணம் என்று புதுப்புது உணவகங்கள் புறப்படாமல் இல்லையே.

சுவையான, சுகாதாரமான உணவுக்காக அவர்கள் வலியுறுத்தும் உச்சபட்ச சுத்தத்தைப் பேணுவது இன்னுமொரு கடினமான போட்டியாக இருக்கும். ஆரம்பகாலத்திலேயே, அதாவது தொடங்கி ஒருவருடத்திற்குள்ளேயே லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் உணவகங்களால் இது முடியாது என்பது அப்பாவின் வாதம். "அதிகாலையில், முதல் லோடு காய்கறி வரும்போதே அவங்க ஆட்கள் யாராவது வந்துடுவாங்க. கொஞ்சம் கூட இடிபாடோ, குறையோ இல்லாத காய்கறியா தேர்ந்தெடுத்து எடுத்திட்டுப் போய்டுவாங்க" - கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் அப்பாவின் நண்பரொருவர் சரவணபவன் ஊழியர்கள் காய்கறி தேர்ந்தெடுக்கும் விதத்தை வர்ணித்தார். நல்ல காய்கறி வாங்கிச் சமைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பிரச்சனை என்றால் அதைச் செய்வதற்கு ஏன் இன்னுமொருவர் வரவில்லை?

ஆரம்பத்தில், ஹாட் சிப்ஸ்காரர்கள் சரவணபவன் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்க முயன்றார்களாம். சரவணபவனின் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் சுத்தம் மட்டுமே பார்த்து இயங்கும் விதத்திற்கு போட்டியாக இயங்க முடியாமல் இப்போது அவர்களின் தரம் குறைந்து போய் விட்டதாம். என்ன தான் மிக நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை வைத்துக் கொண்டிருக்காமல், அனாதை இல்லங்களுக்கோ, பிச்சைக்காரர்களுக்கோ கொடுத்துவிடும் சரவணபவன் ஹோட்டல்களுக்குக் நிகராக நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படும் சராசரி ஆசாமிகள் பலமான போட்டியைக் கொடுக்க முடியாது தான்.

சரி, வெளியிலிருந்து ஒருவர், அனுபவமில்லாதவர் வந்து போட்டி போடுவது சிரமம் தான். ஓட்டலில் வேலை செய்பவர்களில் ஒருவரே தனியாக இயங்க முடிவெடுத்து வெளியேறினாலே நல்லதொரு புது உணவகம் கிடைத்துவிடாதா? அது கூட ஏன் நடக்கவில்லை? அப்படி என்ன செய்து சரவணபவன் தன் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது? என்பதோடு எங்கள் விவாதம் ஒரு தீர்மானமில்லா முடிவுக்கு வந்தது.

வேறு ஏதேதோ படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது தான் சரவணபவன் அதிபர் இராஜகோபால் அவர்கள் எழுதிய "வெற்றிமீது ஆசை வைத்தேன்" புத்தகம். புத்தகம் எனக்கான விடைகளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கினேன்.

அருமையானது தான், தனிவாழ்க்கையின் எந்தப் பகுதியையும் இதில் கொண்டு வராமல் சரவணபவன் கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்த கதையை எழுதி இருக்கிறார். எழுத்து நடை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அத்துடன் அவ்வப்போது சந்தித்த நம்பமுடியாத சிக்கல்கள், சின்னச் சின்னத் திருப்பங்களுடன் இதை எழுதி இருந்தால், ஒரு "Made in America" போன்றோ, ஒரு "Pepsi to Apple" போன்றோ, புத்தகம் பெயர் பெற்றிருக்கும்.

புத்தகம் தெளிவித்த விடைகள்: தானே ஓட்டல் தொழிலாளியாக இருந்து முதலாளியானவர் என்பதாலோ என்னவோ, தொழிலாளிகள் பொதுவாக சந்திக்க நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக அணுகி இருக்கிறார் அண்ணாச்சி. அவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் பிடித்துக் கொடுப்பதாகட்டும், அவர்களின் பிள்ளைகள் படிப்புச் செலவுக்குத் உதவுதாகட்டும், ஊழியர்களுக்குத் தொலைபேசி வசதி செய்து கொடுப்பதாகட்டும், ஏதோ அரசு நிறுவன ஊழியர்கள் போலவே கவலையற்று வைத்திருக்க முயல்கிறார்கள். இது தவிர, பொங்கலுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவுவது, ஆயுள்காப்பீடு போன்ற பாலிஸிகளை நிர்வாக செலவிலேயே எடுத்து வைப்பது, ஊழியர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு உதவுவது என்பன போன்ற திட்டங்கள் ஏதோ தனியார் நிறுவனத் திட்டங்களோ என்ற அளவுக்கு வியக்கவைக்கிறது.

எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்:

* ஊழியர்களின் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவென்றே ஒருவரை வேலைக்கமர்த்தி இருக்கிறார்கள். அப்படி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு எடுத்துப் போகவும் இன்னுமொரு ஊழியர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர்களின் வேலையே ஆஸ்பத்திரிகளில் இருக்கும் சரவணபவன் ஊழியர்களுக்கு/குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமே!

* திருமணமான ஊழியர்களின் பெற்றோருக்கும் தனியாக பணம் அனுப்பும் புதுத் திட்டம் ஒன்றைச் சொல்கிறார்கள். நகரத்து வாழ்வில் செலவுகள் சமாளிக்க வசதியில்லாத ஊழியர்கள், ஊருக்குப் பணம் அனுப்ப விட்டுப் போய்விட்டால் அந்தப் பெற்றோர் படும் சிரமத்தை எண்ணி இந்தப் புதுத் திட்டமாம்!

* இவை தவிர, பன்னாட்டு நிறுவனங்கள் போல வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வருடாவருடம் நடைபெறும் ஓட்டல் சாதனங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான பொருட்காட்சிக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊழியராக அனுப்பவது மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாகத் தான் தெரிகிறது.

இப்படி எல்லாமே நிறுவனத்திலேயே கிடைக்கும்போது வெளியேறி, தனிக்கடை தொடங்க யாருக்கு மனம் வரும்? எப்படிச் சாத்தியப்படப் போகிறது? அத்துடன் இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர் இனிமேற்பட்டு ஒருவர் இது போல் வெளியேறி புது உணவகம் திறந்து அதை நிலைநிறுத்தி, என்பதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுலபமாக இருப்பது போல் நடைமுறையில் இருக்காதல்லவா. எத்தனை பன்னாட்டு உணவகங்கள் வந்தாலும், இன்னும் இன்னும் பல்வேறு சைவ/அசைவ உணவகங்கள் இருந்து கொண்டே இருந்தாலும், சென்னை சரவணபவனில் கூட்டம் என்னவோ குறையாமல் அப்படியே இருக்கிறது.

சமீபத்தில் தனது உணவகங்களைப் புதுப்பித்திருக்கும் சரவணபவன், ஸ்வாதி என்ற பெயரில் குளிர்சாதன உணவறைகளையும் நிறுவியிருக்கிறது. சாதா உணவறைகளைவிட இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்கும் இந்தக் குளிர்சாதன அறைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. வசந்தபவன், ஹாட்சிப்ஸ், அபூர்வா சங்கீதா என்று பல்வேறு உணவகங்கள் இருந்தாலும், சரவணபவனின் விலைப்பட்டியலும் வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வருவது கண்கூடு.

எப்படியும் சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் சென்னையில் வரவேண்டும், ஊருக்கெல்லாம் ஒரே வியாபாரியாக இருக்கும் இன்றைய சர்வாதீனம் (monopoly : நன்றி மா.சி.) மாறவேண்டும் என்பதே என் ஆசை. நிறைவேறும் வாய்ப்பு தான் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை.

Saturday, December 02, 2006

பந்தா பலவிதம்...

அமெரிக்கத் தூதரகம். அலுவலக முகவாண்மைத் துறையினரின் வழக்கமான குளறுபடிக்கு இன்றைக்கு நான் பலியாக, எல்லா பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு பத்தரை மணி நேர்முகத்துக்கு பதினொன்றே முக்காலுக்குத் தான் உள்ளே போனேன். 'அமெரிக்கர்கள் நேரம் தவறாதவர்கள்' என்பதெல்லாம் அவர்கள் ஊரோடு தான் போலும். நம்மூர் தூதரகங்களுக்கு பத்துமணி என்றால் தாராளமாக பதினோரு மணிக்கு வரலாம். மூன்று மணி என்றாலோ, ஐந்து மணிக்குப் போனால் சரியாக இருக்கும்.

நான் போகும் போதுதான் பத்தரை மணிக் கூட்டம் அப்போது தான் உள்ளே போயிருந்தது. வழக்கமாக தூதரகங்களில் காணப்படுவது போல், இன்றும் ஒரு வயதான தம்பதியர், என் பின்னால். வெயிலில் கொஞ்சம் காய்ந்து போன அந்த அம்மாளுக்கு, கணவர் போர்வையாக உதவ, அதன்பின் மழையில் கணவர் நனைந்துவிடப் போகிறாரே என்று மனைவி முந்தானையால் தலைக்கு மேல் குடைபிடிக்க, அற்புதமான காட்சி அது. ஒவ்வொரு வரிசையிலும் என் முறைகள் வந்து உள்ளே போய், வெளியேறி, எப்படியும் நேரமாகும் என்று தெரிந்த காரணத்தால் இரண்டு மூன்று புத்தகங்களுடன் போனது வீணாகவில்லை. புத்தகங்கள் முடிவதற்குள் கூப்பிட்டு, காலையில் அலைந்த அலைச்சலுக்கு நேர்முகம் மிக இனிதே முடிய மகிழ்ச்சியோடு நான் நுழைந்தது தூதரகத்துக்கு எதிரில் இருக்கும் உட்லண்ட்ஸ் தான்.

உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு நான் கடந்த பத்து வருடமாகவே போய் வருவது வழக்கம். வண்டியோ செல்பேசியோ, ஏன், பணம் தவிர்த்த வேறு பையோ கூட அனுமதிக்காத தூதரக நூலகத்துக்கு வந்து கொண்டிருந்த காலம் முதலே என் நிரந்தர வண்டி நிறுத்துமிடம் உட்லண்ட்ஸ் தான். அதிகப்படியான பொருட்களை வண்டியில் போட்டுப் பூட்டிவிட்டுப் போனால், திரும்பி வரும் வரை பத்திரம் நிச்சயம். வண்டி நிறுத்தினோமே என்ற குற்ற உணர்வில் நிறுத்தக் கட்டணமாக ஒரு தோசையும் காப்பியும்.

இன்றும் அப்படி உணவகத்தின் உள்ளே நுழைந்த போது உட்கார தனி மேசை ஏதும் இருக்கவில்லை. ஏற்கனவே மக்கள் அமர்ந்திருந்த மேசைகளுக்குள் தலையில் பொன்னிற தலைப்பாகையோடு, தோளிலும் அதே நிறத்தில் துண்டோடு ஒரு வயதானவர் அமர்ந்திருந்த மேசை என் கவனத்தைக் கவர்ந்தது. ரொம்பவும் அறிமுகமான முகமாகத் தோன்றிய தலைப்பாகைத் தாத்தா ரொம்ப ஆர்வமாக ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அமைதியாக நானும் போய் எதிர்ப்புறம் அமர்ந்தேன். தாத்தா மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு ஏதோ எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ஏதும் சம்ஸ்கிருத அல்லது இந்தி பண்டிட்டாக இருப்பாரோ? அப்படி மொழி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இவரைச் சந்தித்திருப்பேனோ என்று முதலில் யோசித்தேன். அப்புறம், அவர் பக்கத்தில் இருந்த பை முழுவதும் தெலுங்கு புத்தகங்களால் நிறைந்திருக்கவே, 'ஒருவேளை தெலுங்கு பண்டிட் தானோ, நான் இவரை எங்கோ பார்த்தது போல் இருப்பதெல்லாம் சும்மா தேவையில்லாத நினைவோ' என்று தோன்றியது.

தோசைக்குச் சொல்லிவிட்டு, என் நேர்முகத் தேர்வு சாகசங்களை நண்பர்கள் மற்றும் வீட்டினருக்குத் தொலைபேசிக் கொஞ்சம் பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். எதிர் இருக்கை தாத்தா என்னைக் கவனிக்கவே இல்லாமல் ரொம்பத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ஏதோ கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அவர் சொற்களை அடுக்கிய விதத்தில் தெரிந்தது.

அவரது தலைப்பாகை, கொஞ்சம் முன்னால் தூதரகத்தில் பார்த்த சிங் ஒருவரின் தலைப்பாகையை நினைவுப்படுத்தியது. அந்தக் கட்டுக்கும் இந்தக் கட்டுக்குமுள்ள வித்தியாசத்தை ஆராயலாம் என்று நிமிர்ந்து பார்த்தேன். ரொம்பப் பழைய பட்டு போலும், கூர்ந்து பார்க்கையில், பார்க்கவே பரிதாபமாகத் தோன்றியது. சீக்கியர்கள் கூட இப்போது வெளியூர்களுக்கு வரும் போது இது போல் தம் மத அடையாளத்தை வெளிக்காட்டி, தன்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும் தலைப்பாகைகளை அணிந்து கொள்வதில்லை என்று சமீபத்தில் படித்த நினைவு. இந்தத் தாத்தா இப்படித் தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள இந்த இடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத உடையில் வந்திருப்பது நியாயமா? என்று தோன்றியது. தாத்தா மட்டும் கொஞ்சம் என் கண்ணைப் பார்த்துச் சிரித்திருந்தாரானால், கேட்டே இருப்பேன். ஆனால், தாத்தா வேறு உலகத்தில் ஆழ்ந்திருந்தார்.

நான் காப்பிக்குச் சொன்ன நேரத்தில் தாத்தா தான் எழுதிய சந்தத்திற்கு மெட்டு போட்டு சன்னமாகப் பாடவே தொடங்கி இருந்தார். ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் நான் கற்றுக் கொண்ட தெலுங்குப் பாடல்களில் ஒன்றாய் இருக்குமோ என்று காதைத் தீட்டிக் கேட்டுப் பார்த்தேன். சுத்தமாகப் புரியவில்லை! தாத்தா கர்ம சிரத்தையாக மற்றுமொரு நோட்டை எடுத்து, இதுவரை காகிதத்தில் எழுதியதை நோட்டில் படியெடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு அடியாய்ப் பாடிப் பார்த்துத் தளை தட்டுகிறதா என்று யோசித்து யோசித்து அவர் படியெடுப்பதை வேறு வழியில்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் இன்னுமொரு பெண் வந்து எங்கள் மேசைக்கருகில் நின்றாள். என்னைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பாள். பேண்ட் சர்ட்டில் கழுத்தில் ஏதோ பட்டியுடன் வந்தாள். பக்கத்தில் இருக்கும் ஏதேனும் மென்பொருள் நிறுவனமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். "சார்" என்று தாத்தாவைக் கூப்பிட்டார். தலைவர் இந்த உலகத்தில் இல்லை. அவரது கடைசி சில அடிகள் எதிர்பார்த்த வகையில் இல்லாத காரணத்தால் மீண்டும் மோட்டு வளையில் ஏதோ ஜிலேபிக்களைத் தேடிக் கொண்டிருந்தார். "சார்!" மீண்டும் அழைத்தாள் அவள்.

உதவுவோமே என்று நானும் அவரை "ஐயா!" என்று அழைத்துப் பார்த்தேன். இப்போது ஏதோ ஒரு அசைவு தெரிந்தது. சரி, நம்மைக் கவனித்துவிட்டார் என்று நினைக்கும் போது கடைசிக்கு முன் வரியில் மீண்டும் ஜிலேபி போடத் தொடங்கினார். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து 'பிரயோசனமே இல்லை' என்பது போல் தலையாட்டினேன். அந்தப் பெண்ணோ.. 'இருக்கட்டும், காத்திருக்கேன்' என்றாள்.

கடைசியாக அந்தப் பாட்டு முடிந்த பின்னால் தாத்தா திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் "சார், நான் தான் XXXX. நான் தான் உங்களுக்குப் போன் பண்ணி இருந்தேன். XXX டீவியிலிருந்து" என்றாள்.

டீவி பெயரைக் கேட்டவுடன் நான் ஆர்வமானேன். "சரி, இவர் சம்ஸ்கிருத பண்டிட் தான். ஏதோ காலைமலர் நிகழ்ச்சிக்காக, யக்கா பேட்டி எடுக்க வந்திருக்கிறார்" என்று நினைத்துக் கொண்டே காதைத் தீட்டினேன். (அப்பவும் திரும்பி அவர்களைப் பார்க்கவில்லை.. வாசல் பக்கமாக போவோர் வருவோரை நோட்டம் விட்டுக் கொண்டே காதை மட்டும் கொடுத்தேன்)

"எங்க டீவியில் 2006 அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்துறோம். அதில் பின்னணிப் பாடகர்கள் வரிசையில், நீங்க முதல் நாலு இடங்களில் வந்திருக்கீங்க" என்றாள் அந்தப் பெண். இத்துடன் நான் கொஞ்சம் அதிர்ந்தேன். 'இது ஏதடா, இந்தத் தாத்தா பாடகரா!'

"நானா?! நானெல்லாம் பாடினது ரொம்பக்காலம் ஆச்சே! " என்றார் தாத்தா. அப்போ இவர் பழங்காலப் பாடகரா?!

"ஆமாம் சார். அதான் ஆச்சரியம். இன்றைய பாடகர்களோட, உங்க பேரையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்திருக்காங்க மக்கள்!" என்றாள் அந்தப் பெண். தாத்தாவை விட எனக்குத் தான் ஆச்சரியம்.

"எல்லாம் கடவுள் அருள் தான். எனக்குக் கிடைச்ச புகழா நான் இதை நினைக்கலை, எனக்குப் பாட வாய்ப்பு கொடுத்த, நல்ல பாட்டுக்களைக் கொடுத்த எம்.எஸ்வீ மாதிரியான இசையமைப்பாளர்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்" என்றார் தாத்தா.

அதன் பின் யக்கா தாத்தாவிடம் கொஞ்ச நேரம் சாதாரணமாகப் பேசிவிட்டு(தாத்தாவின் கொஞ்சம் பழங்காலத் தமிழுக்குத் தடுமாறிவிட்டு) காமிரா முன்னால் என்ன சொன்னால் நன்றாக இருக்கும், என்றெல்லாம் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் படம் பிடிக்க அனுமதி வாங்கிவரப் போனார்.

கடைசி வரை இருவரும் பெயரைச் சொல்லிக் கொள்ளவில்லையாதலால், தாத்தா யாராக இருக்கும் என்று எனக்கு யோசனையாகவே இருந்தது. பழங்காலப் பின்னணிப்பாடகரான பி.பி. ஸ்ரினிவாசனாக இருப்பாரோ என்று சந்தேகம். சரி, அப்படியே இருந்தாலும், "உங்க பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் சார்" என்று இப்போது வைத்துச் சொல்லவா முடியும்? வந்து உட்கார்ந்த நேரத்திலேயே அல்லவா சொல்லி இருக்கணும்.

பிரபல பின்னணிப்பாடகர்களைப் பார்த்தவுடன் எல்லாருமே சொல்வது இதுவாகத் தான் இருக்கும். எனவே, நானும் சொன்னால், சம்பிரதாயமாகப் போய்விடும். ஹோட்டலுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, "சாப்பிடப் போறீங்களா?" என்று கேட்பது மாதிரி..

நான் அவர்கள் பேச்சிலும் கவனம் செலுத்தியதால், தாத்தா என்னிடம் திரும்பி "நீ வந்ததும், இவ தான்னு நினைச்சிட்டேன். நீ எங்கே வேலை செய்யறே?" என்று விசாரித்தார்.

பதில் சொல்லிவிட்டு, "பாட்டு எழுதிகிட்டு இருக்கீங்களா?" என்றேன்.

"ஆமாம். வித்யாவாணி ஸரஸ்வதி பேரில் பாட்டு எழுதிட்டிருக்கேன்" என்றார். அத்துடன் அந்தப் பாட்டின் சில பத்திகளைப் படித்து ஆங்கிலத்தில்சொல்லத் தொடங்கினார்.

சில நிமிடங்கள் முன்புவரை, இருந்து பேட்டியைக் கவனித்து அதையும் சேர்த்து பதிவில் போடுவோமா என்று தோன்றியதை இந்தப் பதில் மொத்தமாக சாப்பிட்டுவிட்டது. விட்டால் பாட்டு முழுவதையும் எனக்குப் படித்துக் காண்பித்துவிடுவாரோ என்ற பயம் கொஞ்சமாக எழுந்தது. அலுவலக வேலை வேறு அழைக்க, அந்தப் பாட்டை (அலைவரிசை மாற்றியைக் கையில் வைத்துக் கொண்டு) தொலைகாட்சியிலேயே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அத்துடன் நான் நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்தேன். தாத்தாவுக்குத் துணைக்கு வந்திருப்பேன் என்று என்னைப் பற்றி நினைத்திருந்த அந்தப் பெண் நான் 'பை' சொல்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே போனாள்.




வெளியில் வந்து ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கியபோது தான், தொலைக்காட்சி, பத்திரிக்கையில் பார்த்த முகம் என்று எனக்கும் பழக்கமாக இருந்திருக்கிறது என்பது புரிந்தது. அதனால் தான் வெறும் பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதரை இப்படி ஓட்டலில் உட்கார்ந்து பாட்டெழுத அனுமதித்திருக்கிறார்கள். நான் அவருக்கு முன்புற இருக்கையில் உட்கார முயன்றபோது என்னை ஒரு மாதிரி சந்தேகமாக தாத்தா பார்த்ததும் நினைவுக்கு வந்து ஒரே தமாசாக இருந்தது.

பிரபலங்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாமல் போவது என்னுடைய மிகப் பெரிய பலவீனம். தாத்தாவிடம் ஒரு கையெழுத்தாவது வாங்கி இருக்கலாம். வாங்கி என்ன செய்ய? அதான் இத்தனை பெரிய பாடகரைப் பார்த்து, அவரோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாயிற்றே! அப்புறம் அவரைப் பார்த்தேன் என்பதை யாருக்கு நிருபிப்பதற்காக கையெழுத்து, புகைப்படம் எல்லாம்!

ஆனாலும் மனிதர் இப்படித் துளி கூட பந்தா இல்லாமல் அமைதியே உருவாக பாட்டெழுதிக் கொண்டிருக்கும் போது, அவரைத் தொல்லை செய்வது போல் எல்லாருக்கும் போன் போட்டு என் விசா வந்த அளப்பறையைப் பேசியதை நினைக்கும் போது இப்போது ரொம்ப ரொம்ப வெட்கமாக இருக்கிறது. இதில் அம்மாவிடம் "ரொம்ப பந்தா பண்ணாம இருந்தா எல்லாமே ஈஸி தான்" என்று அடித்து விட்டது.. ஐயோ ஐயோ. இதுக்கு மேல என்னைக் கேட்காதீங்கோ!!

திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?

அப்பாவின் நண்பர் ஒருவரின் மனைவி இறந்து விட்டதாக அப்பா வந்து சொன்ன போது அம்மாவுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"யாரு? இராஜேந்திரன் மனைவியா? ரொம்ப சின்ன பொண்ணாச்சே!" இது அம்மா

"ஆமாமாம்.. வயத்தெரிச்சல் என்னன்னா மாசமா இருந்திருக்கா! "

"அடப்பாவமே! அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்ததில்லை?"

"ஆமாம்.. கல்யாணமாகி பத்து வருஷமா குழந்தைகள் இல்லாம இருந்திருக்காங்க. எந்தப் பூசை பரிகாரமும் பலம் கொடுக்காம இப்போ தான் செயற்கை முறையில் இந்த டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி ஏதோ முயற்சி செஞ்சிருக்காங்க.."

"அது தான் உயிருக்கே ஆபத்தாகிடுச்சோ?"

"இல்லைம்மா, இப்போ ஒன்பதாவது மாதம் தான். ஆனா நேத்து அவளுக்கு வலியெடுத்திருக்கு காலைல. ராஜேந்திரன் தான் அவளை க்ளினிக்குக்கு அழைச்சிட்டு போயிருக்கான். போகும் வரை நல்லாத் தான் இருந்திருக்கா. பேசிகிட்டே வேற வந்திருக்கா. திரும்பி வந்து அந்த நாளைக்கு என்னென்ன வேலை பாக்கி இருக்கு என்பது வரை பேசிகிட்டு வந்தவ, அங்க நர்சிங் ஹோம் போன கொஞ்ச நேரத்துலயே அங்கயே இறந்துட்டாளாம். ஹார்ட் அர்ரெஸ்டுன்னு சொன்னாங்களாம்!"

"ஹார்ட் அட்டாக்கா?"

"இல்லை, கார்டியாக் அரெஸ்ட்னு சொல்றாங்க."

"புது மாதிரியா இருக்கு? இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?"

"இல்லை இல்லை, இது ஏதோ இருக்கிற வியாதி தானாம். இதயம் திடீர்னு செயலிழக்கிறது. ஹார்ட் அட்டாக்கில் பிரச்சனை என்னன்னா, இதயத்தில் நாலு அறைகள் இருக்குதுன்னு உனக்குத் தெரியும் தானே? அந்த அறைகளுக்கு நல்ல ரத்தம் கொண்டுவரும் ரத்த நாளங்கள்ல ஏதும் அடைப்பு இருந்து அதனால் இதயத்துக்கு வரும் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஹார்ட் அட்டாக் வருது. இந்த கார்டியாக் அரெஸ்ட்ங்கிறது, இதயத்தின் கீழ் அறைகளான வெண்ட்ரிகல்கள் திடீர்னு தன் சீரான அசைவிலிருந்து மாறுபடும்போது ஏற்படுது. இந்த நேரங்களில் வெண்ட்ரிகல்கள் விரிவடைவதற்குப் பதில் சுருங்குகின்றன. இந்த மாற்றத்தால் மூளைக்கும் உடலுக்கும் நல்ல ரத்தத்தை அனுப்பும் செயல் தடைபடுது. இதனால் தான் திடீர்னு அந்த இதயம் நின்னு போகுது. இதயத்துக்கு வரும் பிராணவாயு குறையும் போதும் இந்த திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாமாம். பொதுவா இதயம் ரொம்ப வீக்கா இருக்கிறவங்க, ஏற்கனவே ஹார்ட் அட்டாக்கை அனுபவிச்சவங்களுக்கு இந்தப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம். நம்ம பழங்காலத்தில் பயத்தில் இறந்தவர்கள்னு சொல்லுவோம் இல்லையா. அது கூட இதே மாதிரியான காரணங்களால் இறந்தவர்களைத் தானாம்."




"என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு.. பாவம் தான். ஆஸ்பத்திரிக்குப் போன பின்னாடி தானே பிரச்சனை வந்திருக்கு. ஏதும் முதலுதவி, வைத்தியம் பண்ணி இருப்பாங்களே!"

"இந்தப் பிரச்சனைக்கு முதலுதவி எல்லாம் பெரிய அளவில் உதவுவதில்லை. செயற்கை சுவாசம் எல்லாம் செய்து பார்த்திருக்காங்க. முதல் ஐந்து பத்து நிமிடங்களில் இந்த முதலுதவிகளைக் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்தப் பொண்ணுக்கு எல்லாம் செய்திருக்காங்க. ஆனா, அதனால் எல்லாம், போகிற உயிரைப் பிடிச்சி நிறுத்த முடியலை."

"இதைத் தடுக்க என்ன வழி?"

"ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கும் வழிகளைத் தான் இதைத் தடுக்கவும் சொல்கிறார்கள் - புகை பிடிக்காம இருப்பது, உடற்கொழுப்பைக் கட்டுக்குள் வைப்பது, அதிக டென்சன் இல்லாமல், ஆத்திரப்படாமல் இருப்பது. சக்கரை வியாதி, வயதாகுதல் என்று தடுப்பு முயற்சிகள் பலன் தராத காரணங்களும் இந்த நோய்க்குக் காரணமாகலாம்."

"ம்ம்... ஆக, ரொம்பக் கோபப்படாமல், சிரித்து வாழ்ந்தாலே உடல் ஆரோக்கியமா இருக்கும்ங்கிறாங்க.."

"அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... அத்தோட நல்ல பழக்க வழக்கங்கள்."

Friday, December 01, 2006

பூனை.. பூனை.. பூனைக் குட்டி...

[தலைப்புக்காக நாடோடிக்கு நன்றி. பதிவும் இன்னுமொரு மீள் பதிவு தான். சிறுவர் பூங்காவில் இருந்ததை இங்கே பொன்ஸ் பக்கங்களில்..]


எங்கள் வீட்டுப் பூனை


எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை;
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை


தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை.
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை




அருஞ்சொற் பொருள்:[இது ஒண்ணு தான் குறைச்சல் :) ]
பகை = பகைவனான காட்டுப் பூனை

படத்தில் இருப்பது நாங்கள் வளர்த்த செல்லப் பூனை பொம்மு.

பாலபாரதியின் செல்போன்

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

"இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்" கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.

"வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?"

"நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! "

"கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு அது சொல்லும். ஆனா உனக்கு மட்டும் தான் சொல்லும், எனக்குச் சொல்லாது. சரியா?"

"அதுல தான் எனக்கும் சாருக்கும் ஒரு பெரிய டவுட்டு"

"இன்னாபா டவுட்டு? ச்சே.. என்ன சந்தேகம்?" என்றேன்.

"இப்படிப் பதிவத் தொறக்கும்போதே எங்கேர்ந்து பார்க்குறான்னு கண்டுகிற தில்லாலங்கடி வேலைய எப்படிச் செய்யறான்? அதக் கேட்கத் தான் வந்துகினோம் நானும் சாரும்."

"உங்க சார் வேற வந்திருக்காரா? எங்க காணோமே.."

"அது ஒன்னியும் இல்ல.. சார் தன்னோட செல்போன எங்கயோ வச்சிட்டாராம்.. தேடிப் பார்த்துகிட்டிருக்காரு.."

வெளியே எட்டிப் பார்த்தால் பாலபாரதி தன் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

"இல்லையே.. காதுல தானே வச்சிருக்காரு.."

"கிட்டப் போய் கேட்டுப் பாரும்மே.."

கொஞ்சம் அருகில் போய்க் காது கொடுத்துப் பார்த்தேன்.. "அருள், தல, என் செல்போனைக் காணோம்யா.. நீதான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலபாரதி.

"நீ வா பொன்ஸு.. நம்ம வேலையப் பார்ப்போம். அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..

"சரி, கோயிந்து... நீ கேட்ட கேள்வி ரொம்ப சுலபம். உலகை ஒன்றாகச் சேர்க்கும் இணையம் இருக்கு இல்லையா? இது ஒரு நெட்வொர்க். இப்போ டெலிபோன் நெட்வொர்க் இருக்கே அது மாதிரி. இப்போ உன்னோட செல்போனையே எடுத்துக்குவோமே.. இதுல சிம்கார்ட் போட்டோம்னு வையி, உடனே உன்னைக் கூப்பிட முடியுமா? "

"அதெப்படி முடியும். ஆக்டிவேட் பண்ணுவாங்கல்ல?"

"அதே தான். அந்த தொலைதொடர்புச் சேவையைத் தருபவர்கள் ஆக்டிவேட் செய்தால் தான் உன்னால என்கிட்ட பேச முடியும். அதே மாதிரி தான் உன்னோட கணினிக்கு இணையத் தொடர்பும். இணையத்துக்குக்காக அகலப்பட்டை(broadband), தொலைபேசி வழிச் சேவை(dialup), கம்பியில்லாச் சேவை(wireless network)ன்னு எந்த மாதிரி சேவையில் இணையத்தில் தொடர்பு கொண்டாலும் உன்னோட கணினிக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க. நம்ம போன் நம்பர் மாதிரி. இந்த நம்பரைத் தான் உன் கணினியின் ஐபி முகவரின்னு சொல்றோம். எந்த இணையச் சேவைமையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளுறீங்க, என்ன முகவரி என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஐபி ட்ராக்கர் நிரலிகள் இருக்கு. இந்த நிரலிகளில் ஒன்றை எடுத்து உங்க பக்கத்தின் வார்ப்புருவில் சேர்த்தா, அவ்வளவு தான்!"

"ஓ.. அவ்வளவு தானா, இத்த வச்சி தான் அவனவன், கஸ்மாலம், நீ சென்னைல கீற, தில்லீல சுத்துறன்னு சொல்லிகிட்டிருக்கானா?! இத்தப் போய் பெரிசா நெனச்சு பயந்துகினேம்மா! சார்..! சார்..!!" கோயிந்து பாலபாரதியை அழைத்துக் கொண்டே வாசற்பக்கம் போகவும் என் செல்பேசி சத்தமிடவும் சரியாக இருந்தது.

போன் செய்தது வரவணை. "ஏங்க பொன்ஸ், எங்க மாம்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுங்க.. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா?"

"என்ன? ஏது?"

"அடச்சே, விளையாடாதீங்க.. எனக்குப் போன் பண்ணி, போனைத் தொலைச்சிட்டேன், காணோம்னு ஒரே தொல்லை.. கொஞ்சம் அந்தக் காதுலேர்ந்து எடுத்துக் கையில கொடுக்கக் கூடாதா? ஒரு வேலையும் பார்க்க முடியலை!" என்றார் வரவணை. "இந்த நேரம் பார்த்து அவருக்குப் போன் செஞ்சது வேற பெரிய தப்பாப் போச்சு. சொந்த செலவில் சூன்யம்!"

"உங்களுக்கேவா? அது சரி, இப்போ எப்படி எனக்குப் போன் பண்ணீங்க?"

"இன்னோரு லைன்லேர்ந்து பேசிகிட்டிருக்கேன் பொன்ஸ்.,அந்தப் பக்கம் மாம்ஸ் இன்னும் குறுக்குக் கேள்வியாக் கேட்டுகிட்டிருக்காரு!. நீங்களும் இப்படிக் கேட்காதீங்க. அளுதுடுவேன்.."

"சரி கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள், கோயிந்து திரும்பி வந்தான், பாலாவுடன்.

"என்ன பாலா? போன் கிடைச்சிதா?"

"இதோ இவன் தான் எடுத்து ஒளிச்சு வச்சிருந்தான்."

"என்னய்யா நடக்குது இங்க?" என்றேன் கோயிந்துவிடம்.

"நீ ஒன்னியும் கண்டுக்காத.. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லு.."

"என்ன அடுத்து?"

"இப்போ எல்லாம் ரெண்டு வலைப்பதிவர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே 'எனக்குப் பத்தாயிரம் ஹிட்ஸ்', 'எனக்கு முப்பதாயிரம் ஹிட்ஸ்'னு ஏதோ ஏலம் விடுறவன் மாதிர் கெளம்புறாங்களே, இதென்ன ஹிட்ஸ்?"

நான் பதில் சொல்வதற்குள் என்னுடைய வலப்பக்கத்திலிருந்து "நீ உருப்பட மாட்டே" என்று ஒரு குரல் வந்தது. குரலுக்குரிய திசையை நான் திரும்பிப் பார்க்கவும், அதற்கு நேர் எதிர் திசையிலிருந்து "நீ தான் உருப்பட மாட்டே" என்று பதில் வந்தது.

என்னடா என்று இந்தப் பக்கம் திரும்பவும், பாலபாரதி ஒரு வினோத காரியம் செய்தார். "உருப்படமாட்டேனா?, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாளைக்குப் படையல் போட்ருவோம்" என்றார் காற்றைப் பார்த்தபடி.

"கோயிந்து, என்னய்யா ஆச்சு உங்க சாருக்கு? காத்துகிட்ட எல்லாம் பேசத் தொடங்கிட்டாரு?"

"அவரை வுடு பொன்சு.. அவரோட கொல சாமிங்க இப்படித் தான் அப்பப்போ அனானியா வந்து கொரல் கொடுப்பாங்க.. நீ சொல்லு!"

"சரி, இணையத்தில நிறைய கவுண்ட்டர்கள் கிடைக்குது. இப்போ உன்னோட பக்கத்தை யாராவது திறக்கறாங்கன்னு வை, அப்போ இந்தக் கவுண்ட்டர் என்ன பண்ணும், ஒரு முறை திறந்திருக்கு உங்க பக்கம்னு நினைவு வைச்சிக்கும். அடுத்த முறை வேற யாராவது எங்கிருந்தாவது திறந்தால், ரெண்டுன்னு கணக்கை அதிகப்படுத்திடும். இப்படியே உங்க பக்கத்தை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்தக் கணக்கு அதிகமாகும்."

"இப்போ, நானே ரெண்டு தபா தொறக்கறேன்னு வை, அப்போ ரெண்டுன்னு வருமா? இல்லை ஒண்ணுன்னு வருமா?"

"ரெண்டு தரமும் அப்டேட் ஆகும். அத்தோட இல்ல கோயிந்து, நீ இப்போ திறந்து வச்சிருக்கும் போதே, அந்தப் பக்கத்தை ஒரு முறை புதுப்பித்தால் (refresh), அப்போவும் ஒரு எண்ணிக்கை கூடும். "

"நம்ம பதிவை நாமே தொறந்தாலும் இந்தக் கணக்கு வருமா?"

"ஆமாமாம். நம்ம பதிவை நாமே தொறந்தாலும், இதில் எண்ணிக்கை கூடும். ஆனா சில நிரலிகள் இது போல் இல்லாமல், நம்ம பதிவை நாமே திறந்தால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவும் வழி வச்சிருக்கு"

"அது நமக்கெதுக்கு.. இப்போ இந்த நம்பர் பெரிசா இருந்தாத் தான் பெருமையாமே! இந்த மாதிரி கவுண்டர்கள் எனக்கும் வேணும்னா எங்கிட்டுப் போகணும்?"

"இந்தப் பக்கத்தில் புள்ளி விவரச் சேவைன்னு பட்டியல் போட்டுச் சொல்லி இருக்காங்க பாரு. அங்கிருந்து எடுக்கலாம். மொதல்ல சொன்ன ஐப்பி டிராக்கர் வேணும்னா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இது மட்டும் தான். "

"யக்கா பொன்ஸ், இந்த கவுண்டரை வச்சு எங்க கொல சாமிகளா வருது யாருன்னு சொல்ல முடியுங்கிறாங்களே அது உண்மையா?" முதன்முறையாகப் பேசினார் - எங்களிடம் பேசினார் -பாலபாரதி

"ஒரு மாதிரி ஊகிக்கலாம். இப்போ இந்த கவுண்ட்டர்களில் சிலது ஐப்பி டிராக்கராகவும் செயல்படுது. இந்த ஐப்பி டிராக்கர் நமக்காக நம்ம பக்கத்துக்கு வந்து போன ஐப்பிகளைச் சேமிக்கும். இன்னும் சரியாச் சொல்வதானால், உலகின் எந்தெந்த ஐப்பிக்களை உடைய கணினிக்களில் நமது பதிவு திறந்து பார்க்கப் பட்டது என்பதை இது சேமித்து வைக்கும். ஸ்டேட் கவுண்டர் அப்படி ஒரு தளம். இதில் உங்களுக்குன்னு ஒரு கணக்குத் தொடங்கி இது கொடுக்கும் நிரலியை உங்கள் பதிவில் பதித்துவிட்டால், இந்த இடத்தில் உங்கள் பதிவுக்கு வந்து போகும் கணினி முகவரிகள் சேமிக்கப் படும். எப்போ வேணாலும் எடுத்துப் பார்க்கலாம். ப்ராக்ஸி மூலம் வந்தால் இங்கயும் பார்க்க முடியாது."

"ப்ராக்ஸின்னா? " என்றார் பாலா.

"அதான் நைனா, பள்ளிக்கொடத்துல அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது, ஒனக்குப் பதிலா வேற எவனாவது உள்ளேன் சொல்லுறது தான். இன்னும் சுளுவா சொல்லணும்னா, இப்போ நீ இல்லாத பதிவுகள்ல கூட ஒன்னைக் கலாசினா பாகசவில் சேர்ந்துடுவாங்கன்னு வீத பீப்பிள் சொன்னார் இல்ல, அது மாதிரி.."

"ஓ.. " என்றார் பாலா.

"அதே தத்துவம் தான். நமது முகவரியிலிருந்து பக்கத்தைப் பார்க்காமல், வேறொரு தளத்திலிருந்து பார்க்கலாம். இது மாதிரி சுத்தி வந்து பார்க்கிற போது, அதை இந்தக் கவுண்டர்களால கண்டுபிடிக்க முடியாது"

கோயிந்து தன் செல் போன் கூப்பிட்டதால் எடுத்துப் பார்த்தார்..

"என்ன கோயிந்து?"

"அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க.. அதுக்குன்னு ஒரு அறிமுக மெஸேஜ் வச்சிருக்கேனே.. அதையும் நம்ம ஜெய் பதிவையும் சேர்த்துத் தர்றது தான்.. பாகசவுக்குக் கொளுகைப் பரப்புச் செயலாளர் மாதிரி ஆய்டிச்சு நம்ம நெலம! என்னத்தச் சொல்ல!"

கோயிந்துவைப் பார்த்து, "நீதானா அது?" என்று முறைத்தார் பாலா. "பின்ன பாருங்க பொன்ஸ், தினசரி எனக்குப் பத்து பின்னூட்டமாவது வருது.. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க, இவனுக்குக் கொடுங்கன்னு.. !"

"என்ன சர்டிபிகேட்?"

"பாகச சர்டிபிகேட் தான்!" நொந்து கொண்டே சொன்னார் பாலா..

"சரி அதென்ன செல்பேசி தொலைஞ்சு போச்சுன்னு செல்லுலயே பொலம்பிகிட்டிருந்தீங்க?" கோயிந்து கொடுத்த குறுஞ்செய்தி இடைவெளியில் கேட்டேன்.

"பேசிகிட்டிருந்தது என்னோட செல்லு.."

"அப்போ தொலைஞ்சது?"

"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.

"அது என்ன? தெரியாதே!" என்றேன் ஆவலோடு.

பதில் வருவதற்குள், பாலா, பேச்சை மாற்றிவிட்டார். "அதெல்லாம் அப்புறம் பேசுவோம், ஆமாம், சில சமயம் ஒரே பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கவுண்டரும் ஒரு நம்பர் காட்டுதே அது எப்படி?"

"ஒவ்வொரு கவுண்டரையும் ஒவ்வொரு நேரத்தில் அந்தப் பக்கத்தில் சேர்த்திருப்பாங்க.. அவ்வளவு தான்"

இதற்குள் கோயிந்துவின் செல்போன் சிணுங்கியது.

"இன்னா நைனா? என்னது? புதுசா கவுண்டர் போட்டுத் தரணுமா.. இப்போ " " இல் இருக்கேன்; இங்க புதுசா ஒரு கஸ்டமரு.. 'கவுண்டர்னா கவுண்டமணியா'ன்னு கேட்டு ஒரே ரவுசு.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சேன்.. நீ அங்கயே இரு.. இதோ நான் என் அஸிஸ்டெண்டைக் கூட்டிகிட்டு இதோ வந்துகினே கீறேன்; எங்காச்சும் போய்டாத என்ன?" என்றபடி போனை வைத்தவர், "அந்தப் போனை என்னாண்ட கொடு சார். கௌதம் சாருக்கு வலைப்பதிவு இஞ்சினியரப் பார்க்கணுமாம். உன்னக் கூட்டிகினு வாரேன்னு சொல்லிட்டேன், அந்தப் போன் உங்கைல இருந்தா நீ மறுக்கா கடல போட ஆரம்பிச்சிடுவ.. இங்க கொடு பார்க்கலாம்... " என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்து, "அப்பால வந்து கண்டுகிறேன் பொன்ஸு. பார்க்கலாம் என்ன?" என்று கிளம்பினான் கோயிந்து..
உண்மையாகவே கவுண்டரிடம் அடி வாங்கிய செந்தில் மாதிரி பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.




[ப்ரியன் யோசனைப் படி, உருவான இந்தப் பதிவு, பாகசவின் கோடிக் கணக்கான உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ]

உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம்

1986 இல் உலகம் முழுவதும் இருபதாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட போது இந்தியர்கள் யாரும் அந்தப் பட்டியலில் இல்லை. உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தாலும், கண்டிப்பாக இந்தியர்களிலும் எச்ஐவி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று தான் நம்பியது அரசு.

சின்னச் சின்னச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட முதல் இந்திய எயிட்ஸ் நோயாளி, சென்னையைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் மொத்தம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

அப்போதே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், 1990 வரை நாடு முழுவதும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 1992வில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து முயற்சிகளை ஒரு சீரான பாதைக்குக் கொண்டு வந்தது அரசு. பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது..எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கிறது தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை.



எண்பதுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த கொடுமைகள் கணக்கற்றவை. கட்டுப்பாடான கலாச்சாரம் மிக்க இந்தியாவில், பாலியல் நோய்களைப் பற்றிப் பேசுவதே குற்றமாக எண்ணப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவரின் ஒழுக்கத்தைப் பற்றியே கேள்வி எழுப்பும் சமூகம். இது போன்ற சமுதாயத்தில் நோய்களுக்கான பரிசோதனை செய்வதே தயக்கத்துக்குரியதாகக் கருதப்பட்ட நேரம். இந்தத் தயக்கத்தின் காரணமாகவே நிறைய பேர் மருத்துவரை நாடாமல், நோயுடனே வாழ்ந்து வந்தனர்.

அப்படியும் மருத்துவரிடம் சென்று வரும் சில தைரியசாலி நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. நல்ல வேலையில் உள்ளவரானால், அவர் வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. ஒழுக்கங்கெட்ட கணவனின் மூலம் நோய்வாய்ப்பட்ட மனைவியானால், அவளைத் தீண்டத்தகாதவளாகவே பார்க்கும் வழக்கம் இருந்தது. கணவனால் நோய்வாய்ப்பட்ட மனைவி, கணவனையும் பறிகொடுத்து, ஒழுக்கமில்லாதவள் என்ற அவப்பெயருடன் வேறு வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய பரிதாபங்கள்.

ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தால் கூட, பள்ளிகளில் பிரித்துப் பார்க்கப்பட்ட கொடுமைகளும் உண்டு. பெற்றோருக்கு இந்த நோய் இருந்தாலே, குழந்தையையும் சேர்த்துத் தண்டிக்கும் கொடூரமான சமூகமாக இருந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயாளியின் குடும்பம் என்பதற்காக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் கோரங்களும் நிகழ்ந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டால், கைகுலுக்கினால், அவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டாலே ஒட்டிக் கொள்ளும் நோயாக அறியமையால் சித்தரிக்கப்பட்ட காலங்கள் அவை.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு நிறுவப்பட்ட பதினாறு வருடங்களில் இதை எல்லாம் கடந்து வந்த இன்றைய சமுதாயத்தின் பார்வை கொஞ்சம் அகலமாகி உள்ளது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப்பாடங்கள் சொல்லித்தரப் படுகின்றன. நான் பள்ளியில் படித்த போது எயிட்ஸ் ஹெல்ப்லைன் விளம்பரம் ஒன்றைப் பற்றி வினா எழுப்பியபோது மழுப்பலாக பதில் கிடைத்த காலம் தாண்டி, இப்போது பள்ளிச் சிறுவர் சிறுமியரே சிகப்பு ரிப்பன் அணிந்து எயிட்ஸை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பேரணிகளும் நடக்கிறது

ஊடகங்கள், தெரு நாடகங்கள், வானொலி, 24 மணிநேரத் தொலைபேசிச் சேவை என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், அந்தந்த மாநில அமைப்புகளும் முயன்று இன்றைக்கு எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளனர். நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகங்கள், தாயாருக்கு இருக்கும் எயிட்ஸ் கருவிலிருக்கும் குழந்தையைத் தாக்காமல் இருக்கும் வழி, கோவா போன்ற மாநிலங்களில், திருமணத்திற்கு முன் எயிட்ஸ் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குதல் என்று அரசின் இந்த அமைப்புகள் செய்திருக்கும் உதவி அளப்பற்கரியது.

இன்று எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சைதாப்பேட்டையைச் சார்ந்த தாயார் ஒருவர். அவரே பெற்ற குழந்தைகளுடனும் பிற குப்பத்துக் குழந்தைகளுடனும் சந்தோசமாக வேறுபாடில்லாமல் விளையாடி மகிழ்கிறது அந்தப் பிஞ்சு.

எயிட்ஸால் பாதிக்கப் பட்ட நாமக்கல் நகரத்துப் பெண்கள் சிலர் கூடி பாஸிடிவ் வுமன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள், எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் படிக்க உதவி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாசிடிவ் பெண்கள்.

இன்னும் பல்வேறு தளங்களிலும் எயிட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். "2010க்குள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வோம்" என்று வாக்களித்திருக்கிறார்கள் உலகின் தலைவர்கள். இந்த இலக்கை எட்டுவதற்கு உதவுவதும், வாக்களித்த அரசாங்கங்கள் 'இந்த இலக்கை எட்டிவிடுவோம்' என்ற நம்பகத்தன்மையை வளர்க்கும் செயல்களைச் செய்யத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே 2006 டிசம்பர் ஒன்றான இன்றைய உலக எயிட்ஸ் தினத்தின் குறிக்கோளாகும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி.
மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.

தொடர்புடைய சுட்டிகள்
1. நிர்மல் அளித்தது
2. பாலபாரதி
3. மங்கை