Saturday, December 02, 2006

திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?

அப்பாவின் நண்பர் ஒருவரின் மனைவி இறந்து விட்டதாக அப்பா வந்து சொன்ன போது அம்மாவுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"யாரு? இராஜேந்திரன் மனைவியா? ரொம்ப சின்ன பொண்ணாச்சே!" இது அம்மா

"ஆமாமாம்.. வயத்தெரிச்சல் என்னன்னா மாசமா இருந்திருக்கா! "

"அடப்பாவமே! அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்ததில்லை?"

"ஆமாம்.. கல்யாணமாகி பத்து வருஷமா குழந்தைகள் இல்லாம இருந்திருக்காங்க. எந்தப் பூசை பரிகாரமும் பலம் கொடுக்காம இப்போ தான் செயற்கை முறையில் இந்த டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி ஏதோ முயற்சி செஞ்சிருக்காங்க.."

"அது தான் உயிருக்கே ஆபத்தாகிடுச்சோ?"

"இல்லைம்மா, இப்போ ஒன்பதாவது மாதம் தான். ஆனா நேத்து அவளுக்கு வலியெடுத்திருக்கு காலைல. ராஜேந்திரன் தான் அவளை க்ளினிக்குக்கு அழைச்சிட்டு போயிருக்கான். போகும் வரை நல்லாத் தான் இருந்திருக்கா. பேசிகிட்டே வேற வந்திருக்கா. திரும்பி வந்து அந்த நாளைக்கு என்னென்ன வேலை பாக்கி இருக்கு என்பது வரை பேசிகிட்டு வந்தவ, அங்க நர்சிங் ஹோம் போன கொஞ்ச நேரத்துலயே அங்கயே இறந்துட்டாளாம். ஹார்ட் அர்ரெஸ்டுன்னு சொன்னாங்களாம்!"

"ஹார்ட் அட்டாக்கா?"

"இல்லை, கார்டியாக் அரெஸ்ட்னு சொல்றாங்க."

"புது மாதிரியா இருக்கு? இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?"

"இல்லை இல்லை, இது ஏதோ இருக்கிற வியாதி தானாம். இதயம் திடீர்னு செயலிழக்கிறது. ஹார்ட் அட்டாக்கில் பிரச்சனை என்னன்னா, இதயத்தில் நாலு அறைகள் இருக்குதுன்னு உனக்குத் தெரியும் தானே? அந்த அறைகளுக்கு நல்ல ரத்தம் கொண்டுவரும் ரத்த நாளங்கள்ல ஏதும் அடைப்பு இருந்து அதனால் இதயத்துக்கு வரும் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஹார்ட் அட்டாக் வருது. இந்த கார்டியாக் அரெஸ்ட்ங்கிறது, இதயத்தின் கீழ் அறைகளான வெண்ட்ரிகல்கள் திடீர்னு தன் சீரான அசைவிலிருந்து மாறுபடும்போது ஏற்படுது. இந்த நேரங்களில் வெண்ட்ரிகல்கள் விரிவடைவதற்குப் பதில் சுருங்குகின்றன. இந்த மாற்றத்தால் மூளைக்கும் உடலுக்கும் நல்ல ரத்தத்தை அனுப்பும் செயல் தடைபடுது. இதனால் தான் திடீர்னு அந்த இதயம் நின்னு போகுது. இதயத்துக்கு வரும் பிராணவாயு குறையும் போதும் இந்த திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாமாம். பொதுவா இதயம் ரொம்ப வீக்கா இருக்கிறவங்க, ஏற்கனவே ஹார்ட் அட்டாக்கை அனுபவிச்சவங்களுக்கு இந்தப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம். நம்ம பழங்காலத்தில் பயத்தில் இறந்தவர்கள்னு சொல்லுவோம் இல்லையா. அது கூட இதே மாதிரியான காரணங்களால் இறந்தவர்களைத் தானாம்."




"என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு.. பாவம் தான். ஆஸ்பத்திரிக்குப் போன பின்னாடி தானே பிரச்சனை வந்திருக்கு. ஏதும் முதலுதவி, வைத்தியம் பண்ணி இருப்பாங்களே!"

"இந்தப் பிரச்சனைக்கு முதலுதவி எல்லாம் பெரிய அளவில் உதவுவதில்லை. செயற்கை சுவாசம் எல்லாம் செய்து பார்த்திருக்காங்க. முதல் ஐந்து பத்து நிமிடங்களில் இந்த முதலுதவிகளைக் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்தப் பொண்ணுக்கு எல்லாம் செய்திருக்காங்க. ஆனா, அதனால் எல்லாம், போகிற உயிரைப் பிடிச்சி நிறுத்த முடியலை."

"இதைத் தடுக்க என்ன வழி?"

"ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கும் வழிகளைத் தான் இதைத் தடுக்கவும் சொல்கிறார்கள் - புகை பிடிக்காம இருப்பது, உடற்கொழுப்பைக் கட்டுக்குள் வைப்பது, அதிக டென்சன் இல்லாமல், ஆத்திரப்படாமல் இருப்பது. சக்கரை வியாதி, வயதாகுதல் என்று தடுப்பு முயற்சிகள் பலன் தராத காரணங்களும் இந்த நோய்க்குக் காரணமாகலாம்."

"ம்ம்... ஆக, ரொம்பக் கோபப்படாமல், சிரித்து வாழ்ந்தாலே உடல் ஆரோக்கியமா இருக்கும்ங்கிறாங்க.."

"அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... அத்தோட நல்ல பழக்க வழக்கங்கள்."

32 comments:

Udhayakumar said...

//"அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... அத்தோட நல்ல பழக்க வழக்கங்கள்." //

உண்மை... பழைய நண்பர்களுடன் பேசி வாய் விட்டு சிரித்துப் பாருங்கள்... பக்கத்து வீட்டுக்கார பெண் நிச்சயம் கேட்பாள் "நேத்து ஒரு நாள் மட்டுந்தான் நீ உயிரோட இருக்கறதே தெரிஞ்சுதுன்னு..."

வெட்டிப்பயல் said...

//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு.//

முற்றிலும் உண்மை!

கால்கரி சிவா said...

இன்னொரு முக்கிய தற்காப்பு. சரியான மருத்துவரிடம் வருடம் ஒரு முறையாவது செக்கப் செய்து கொள்வது

பெருசு said...

ம்ம்ம்ம்,விக்கி பொன்ஸ்

VSK said...

ஒரு சிறு விளக்கம் உங்கள் பதிவில், பொன்ஸ்!

இதயத்தில் 4 அறைகள் சரிதான்.
இதில் தான் நல்ல ரத்தமும், கெட்ட ரத்தமும் வந்து சுத்திகரிக்கப் படுகிறது.

ஆனால் இந்த இதயம் சுருங்கி விரிய, இதயத்திற்கென்றே, தனி ரத்தக் குழாய்கள் இருக்கின்றன.

இவற்றிற்கு கரோனரி நாளங்கள் [coronary arteries] எனப் பெயர்.

இவை வேறு; நல்ல, கெட்ட ரத்ததைக் கொண்டு வரும் நாளங்கள் [aorta, pulmonary artery] வேறு.

இவைதான் இதயம் இயங்குவதற்குத் தேவையான பிராணவாயுவை அளிக்கின்றன.

அவற்றில் ஏற்படும் அடைப்புகளால் தான் இதயத் தாக்குதல் [heart attack] நிகழ்கிறது.

இந்த அடைப்பை நீக்கியோ [percutaneous transluminal coronary angioplasty], செயற்கையாக விரித்தோ [ stenting] அல்லது அந்தக் குழாயையே மாற்றியோ [Coronary Artery Bypass Graft Surgery ] இதற்கு சிகிச்சை அளிப்பார்கள்!

நல்ல பதிவு!

Machi said...

கார்டியாக் அரெஸ்ட் பற்றி தெரிஞ்சிக்கிட்டோம் நன்றி.

/ சக்கரை வியாதி, வயதாகுதல் என்று தடுப்பு முயற்சிகள் பலன் தராத காரணங்களும் இந்த நோய்க்குக் காரணமாகலாம்/
வயதாவதை தடுக்க முடியாது ஆனா சர்க்கரை நோயை தடுக்கலாம் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கலாம் இல்லையா?

இலவசக்கொத்தனார் said...

ஐயாம் தி கன்பியூஷன். ஹார்ட் அட்டாக் என்பதும் கார்டியாக் அரெஸ்ட் என்பதும் ஒன்றுதானா வேறு வேறா? என்ன சொல்ல வறீங்க?

பெத்தராயுடு said...

உருப்படியான தகவல்களுக்கு நன்றி.

சேதுக்கரசி said...

//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?//

அடடா.. நம் மக்களின் அறிவே அறிவு!!!!

இராம்/Raam said...

யக்கோவ்,

அருமையான பதிவு...

//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு.//

மறுக்க இயலாத உண்மை..

Anonymous said...

My heart is with my lover. Then who should go far medical checkup. I or she ?

நன்மனம் said...

//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... //

உண்மை.

பொன்ஸ்~~Poorna said...

உதய், பித்தானந்தா, கால்கரி சிவா, பெருசு, குறும்பன், பெத்தராயுடு, ராம், நன்றி

எஸ்கே,
உங்களை மாதிரி இந்த இயலில் இருப்பவர்களே வந்து திருத்தும் போது தான் கட்டுரை முழுமையடைகிறது. உங்கள் பின்னூட்டத்தையும் கட்டுரையின் உள் சேர்க்க முயல்கிறேன். மிக்க நன்றி.

கொத்ஸ், ரெண்டும் வேற வேற என்று தான் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஒரு முறை படிச்சு பார்த்து சரியாச் சொல்லிருக்கான்னு சொல்லுங்களேன்..

படிப்பவன், ரெண்டு பேருமா போய்ட்டு வந்துடுங்க :)

சேதுக்கரசி said...

//எஸ்கே,
உங்களை மாதிரி இந்த இயலில் இருப்பவர்களே வந்து திருத்தும் போது தான் கட்டுரை முழுமையடைகிறது.//

உண்மை. எஸ்கே (மருத்துவரா?) நக்கீரனின் ஸ்டெம் செல் பதிவுகள் நான்கையும் ஒரு நடை வாசித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன். அதில் என் பின்னூட்டங்களை எனக்குத் தெரிந்தவரை சரியாக இட முற்பட்டிருக்கிறேன், இருப்பினும் ஒரு "எக்ஸ்பர்ட்" தேவை!

பத்மா அர்விந்த் said...

எஸ்கே
நாளங்களில் அடைப்பு இல்லாவிடினும் சில நேரங்களி வெண்டிரிக்கிள் விரிந்து இரத்தத்தை பெற தாமதமானால் (QT Interval) நல்ல இரத்தம் இதய திசுக்களுக்கே கிடைக்காமல் ஏற்படுவதும் உண்டு. அதேபோல சில சமயம் ட்ரைகஸ்பிட் வால்வுக்கு பதில் பைகஸ்பிட் இருந்தால், அர்த்மியா பாதிப்பால் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சமீபத்தைல் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாணவன் விளையாட்டு மைதானத்தில் இறந்ததும் கண்டுபிடித்தார்கள் இதுதான் காரணம் என. இன்னமும் SIDS க்கும் QT க்கும் ஒரு மாறபட்ட கருத்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் கருத்து இந்த கட்டுரைக்கு நிச்சயம் கூடுதல் செய்திகளை தரும். நன்றி. பொன்ஸ் விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் செய்திக்கு நன்றி

மணியன் said...

நான் Heart failure கேள்விப்பட்டிருக்கிறேன். இது இதய தசைகள் வலுவிழப்பதால் ஏற்படுவது. நீங்கள் கூறும் cardiac arrest இதுதானா எனத் தெரியவில்லை. இரத்தத்தில் அதிக சர்க்கரை கண், கால்கை, சிறுநீரகம் முதலிய தசைநார்களை பலவீனப்படுத்துவதைப் போல இதய தசைகளையும் பலவீனப்படுத்துவதால் ஏற்படுவது. அதனால் தான் நீரிழிவு வியாதிக்காரர்கள் சாதாரணமாகத் தென்படும் மாரடைப்பு அறிகுறிகள் இல்லாமலே மரணமடைவது நிகழ்கிறது.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ் குழந்தையைக் காப்பாத்தினார்களா.

a sudden stopping of heart
is cardiac arrest.
and a slower extremely painful experience is heart Attack. fatal or otherwise.

நன்றிப்பா நல்ல பதிவுக்கு.
முடிந்தால் ஸ்லீப் ஆப்னியா பத்தி எழுதுங்க.

வெற்றி said...

பொன்ஸ்,
உண்மையிலேயே நல்ல பதிவு. இந்த நட்சத்திரவாரத்தில் பல விதமான பயனுள்ள பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகளும்.

மங்கை said...

நல்ல பதிவு பொன்ஸ்...

பாராட்டுக்கள்

aaradhana said...

நல்ல பதிவு...வாய் விட்டு சிரிப்போம்...திரு. sk அவர்கள் கூறியுள்ளது .. நல்ல கருத்து..

VSK said...

நாளங்களில் ஏற்படும் அடைப்பே பொதுவாக இதயத் தாக்குதலுக்கல்லான காரணம் என்பதால் அதை மட்டும் சொன்னேன், பத்மா.

வேறு பல காரணங்களும் உண்டு, நீங்கள் சொன்னது போல!

இதில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்ததும், இதயத்தைப் பற்றி இன்னும் எழுத ஆசை வந்திருக்கிறது!

எனது "கசடற" வில் அடுத்தது என்ன எழுதலாம் என்பதற்கும் விடை கிடைத்தது!

நன்றி, பொன்ஸ்!!

பொன்ஸ்~~Poorna said...

பத்மா, தெளிவாக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி..

Heart failureஉம் cardiac arrest உம் வெவ்வேறு என்று தான் நம்புகிறேன் மணியன்..

இல்லை வல்லி, குழந்தை தாய் இருவரும் இல்லை.. அந்த நண்பர் இன்னமும் சோகத்திலிருந்து மீண்டுவரவில்லை.. அவ்வப்போது நாங்கள் போய்ப் பார்த்து வருகிறோம்.. வேறெதுவும் செய்ய இயலவில்லை :(

நன்றி வெற்றி, மங்கை, ஆராதனா

இதயத்தைப் பற்றி அதிகம் எழுதுங்கள் எஸ்கே.. படிக்கக் காத்திருக்கிறோம்..

சேதுக்கரசி said...

//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?//

/////அடடா.. நம் மக்களின் அறிவே அறிவு!!!!/////

தவறாக எடுத்துக்கொண்டீர்களா பொன்ஸ்? சோதனைக்குழாய் மருத்துவத்தினால் மாரடைப்பு வந்திருக்கக்கூடுமோ என்ற அறியாக் கண்ணோட்டம் இன்னும் நம்மூரில் இருப்பதைத் தான் சொன்னேன். செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வரனை அதற்காக நிராகரித்த அறிவுஜீவிகளையும் பார்த்திருக்கிறேன்! அதனால் தான் சொன்னேன்.. நம் மக்களின் அறிவே அறிவு என்று.

VSK said...

சேதுக்கரசி,
அந்த 'நக்கிரனின் ஸ்டெம் செல்' பதிவின் சுட்டி தர முடியுமா?
நன்றி.

VSK said...

என் பதிவை இன்னும் பார்க்கவில்லையா?
:((
:))

✪சிந்தாநதி said...

அறிவியல் பூர்வமாக அலசி எழுதியிருக்கீங்க!
(பதிவுக்கு நேரடி தொடர்பில்லாத ஒரு விஷயம்)
இந்த மாதிரியோ, பிரசவகால மரணமோ நடந்தால் கிட்னி எடுத்து கொன்னுட்டாங்க என்று டாக்டர்கள் மீது வதந்தி பரப்பும் வழக்கம் அதிகரித்து வருகிறது. எவ்வளவு தான் மருத்துவ முறைகள் முன்னேறி வந்தாலும் கர்ப்பகால மரணங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உறவினர்கள் பலர் அதை டாக்டர்களின் அஜாக்கிரதை என்றோ, கிட்னி எடுத்து கொன்று விட்டார்கள் என்றோ பேசிக்கொள்வதை பல முறை கேட்க நேர்ந்திருக்கிறது.

சேதுக்கரசி said...

SK, இதோ:

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...
http://netrikan.blogspot.com/2006/11/1.html
http://netrikan.blogspot.com/2006/11/2.html
http://netrikan.blogspot.com/2006/11/3.html
http://netrikan.blogspot.com/2006/11/4.html

சேதுக்கரசி said...

Hidden Epidemic: Heart Disease in America
http://www.pbs.org/wgbh/takeonestep

இந்த 2 மணிநேர நிகழ்ச்சியை நேற்று PBS தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் உபயோகமாயிருந்தது. தொலைக்காட்சியிலோ வலைத்தளத்திலோ தகவல்களைப் பெற்று அனைவரும் பயன்பெறலாம் என்று இதை அனுப்புகிறேன். தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு நேரங்கள் மேற்கண்ட தளத்தில் உள்ளன.

பொன்ஸ்~~Poorna said...

சேது, இதுக்காகவாவது பொல்லா மௌனத்தைக் கலைச்சிருக்கலாம் இல்ல? தேடி வந்து பின்னூட்டமா போடுறீங்களே :))

Anonymous said...

அவங்க தேடி வந்து பின்னூட்டம் போட்டதால தானெ, நான் மிஸ் பண்ண ஒரு பதிவை படிக்க முடிஞ்சது !!

சேதுக்கரசி said...

தெரியல பொன்ஸ்... பார்க்கலாம்...

செந்தழலார்.. இது பொன்ஸுடைய நட்சத்திர வாரப் பதிவு. எஸ்கேயின் லப்-டப் தொடருக்கு இந்தப் பதிவும் ஒரு காரணம்.

ஆதிபகவன் said...

வாய்விட்டு சிரித்தால் மட்டும் போதாது,
மனம் விட்டு சிரிக்கனும். அப்போதான் நோய் நம்ம விட்டு போகும்.

பொன்ஸ் உங்க வலைப்பக்கத்தில பதிவாளர்கள் பெயரெல்லாம் பூச்சி காட்டுதே.