அயன் ராண்ட் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து,
The Fountain Head புத்தகத்தின் மீதான ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் சமீபத்தைய பதிவர் சந்திப்பின் போது மா.சிவகுமார் மூலம் புத்தகமும் கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாவலின் வாசிப்பனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.
கடைசிவரை அதீத ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவே பயணிக்கும் கதைபேசும் சில தத்துவங்களுடன் முழுமையாக ஒப்ப முடியாவிட்டாலும் பொதுவில் நல்ல வாசிப்பனுபவம்தான்.
ஹோவார்ட் ரோர்க்(Howard Roark) என்ற ஒட்டுமொத்த மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த விரும்பும் மனிதனைப் பற்றியது கதை இது. உலகில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது மனிதன் தான்; கடவுளின் மிக அற்புத படைப்பு மனிதன் மட்டுமே என்று முழுமனதோடு நம்பும் கதாநாயகன் ரோர்க்.
எல்ஸ்வோர்த் மோங்க்டன் டூஹி(Ellsworth Monkton Toohey) நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பத்தி எழுத்தாளர். தன் எழுத்துக்களால் நரியைப் பரியாகவும் பரியை நரியாகவும் ஆக்கக் கூடிய ஒரு விமர்சகர். அதே சமயம் தனக்குப் பிடிக்காதவர்களை மொத்தமாக அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய மக்கள் சக்தி தன் பின்னால் இருப்பதாக நம்புபவர்.
உண்மையான, நேர்மையான, பழுதில்லா திறமைக்கும்(ரோர்க்) வெற்று மக்கள் சக்திக்கும் (டூஹி) இடையிலான கண்ணாம்பூச்சி விளையாட்டே ஃபவுண்டன் ஹெட்.
ரோர்க் ஒரு கட்டிடக் கலைஞன். ஸ்டேன்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், போதிக்கப் பட்ட "பழைய முறைகளைப் பின்பற்றவே மாட்டேன்" என்று வணங்காமுடியாக நின்று பட்டம் பெறாமல் வெளியேறுகிறான் ரோர்க். அதே சமயம், அவன் வாழ்ந்த அதே வீட்டில் இருந்த பீட்டர் கீட்டிங்(Peter Keating), ஸ்டேன்டனின் நிகரற்ற முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆர்க்கிடெக்டாக வெளியேறுகிறான்.
ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன். ஆகவே, அவனை போன்றே மார்டனிஸ்டான ஹென்றி காமரூனிடம்(Henry Camaron) உதவியாளனாகச் சேருகிறான்.
காமரூன் தன் ஆரம்ப காலத்தில், அற்புதமான புதுமையான வீடுகளுக்காகவும் வானை எட்டும் கட்டிடங்களுக்காகவும் பெருமை பெற்றவர். ஆனால், யாருக்காகவும் தன் கட்டிடங்களில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக நிற்பவர், ரோர்கைப் போலவே. மற்றவர்களுக்கான மாற்றத்தையும் வெறுத்து, அவ்வப்போது வாடிக்கையாளர்கள் மீதும் கோபப்பட்டு, தன் பணிக்காலத்தின் கடைசியில், உலகம் முழுவதையும் பகையாக்கிக் கொண்ட ஒரு தோல்வியாளர் - மக்களின் பார்வையில். பீட்டர் கீட்டிங், காமரூனிடமே ஆரம்பத்தில் வேலை கற்று அதன் பின் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும், தலைசிறந்த கட்டிடக் கலைஞரான கை ப்ராங்கனிடம்(Guy Francon) சேருகிறான்.
இருவருடைய முதல் கட்டிடம் முதற்கொண்டு இவர்களிடையே உள்ள வளர்ச்சி வித்தியாசங்களை முன்வைத்து நகர்கிறது கதை. ஒவ்வொரு மனிதருக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொண்டே வேலை செய்யும் கீட்டிங், உயரங்களுக்குப் போகிறான். மிகக் குறைந்த காலத்தில், ப்ராங்கனின் நிறுவனத்தில் பார்ட்னராகி, அவனுடைய நிறுவனத்தின் முழு நிர்வாகியாகவும் உயர்ந்து, அப்போதைய அமெரிக்காவின் தலைசிறந்த கட்டுமானத்துறை வல்லுனராகவும் பரிணமிக்கிறான்.
காமரூனின் ஓய்வுக்குப் பின் ரோர்க், கீட்டிங்கிடமே வெறும் வரைபடம் எழுதுபவனாகச் சேர்ந்து, அங்கு கிடைக்கும் வாய்ப்பில் தன் முதல் கட்டிடத்தைக் கட்டத் துவங்குகிறான். முதல் இரண்டு கட்டிடங்களுக்குப் பின் தனக்கான இடம் என்று ஒன்று இல்லாமல் போக, சமரசங்களை விரும்பாமல் எங்கெங்கோ வேலை செய்து, ஒரு கட்டத்தில் கல்லுடைக்கும் சுரங்கங்களில் கூட வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
ரோர்கின் சில கட்டிடங்களைப் பார்த்த ஓரிருவர் அவனைத் தேடி வந்து வேலை கொடுத்த பின்னர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வாழ்க்கை முறை மாற, இறுதியாக ஸ்டோர்டார்ட்(Stoddard) என்பவர் எல்லா மதங்களுக்கும் பொதுவான கோயிலொன்றைக் கட்ட வேண்டி ரோர்க்கிடம் வந்து சேருகிறார். உலகின் எந்த மதத்தின் கோயிலையும் படியெடுக்காத, அதே சமயம் மனிதனின் ஆழ்மன நம்பிக்கையை, அல்லது, மனசாட்சியைப் பிரதிபலிக்கும் கோயிலொன்றை ரோர்க் கட்டித் தருகிறான்.
கட்டிடக்கலை விமர்சகரான டூஹி, கீட்டிங்கை முன்னிலைப்படுத்தி, ரோர்க்கைப் புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறான். பல்வேறு வகையான கலைஞர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு மிக்க டூஹி, ரோர்க்கை வேண்டுமென்றே புறக்கணிப்பதிலும், அவனுடைய இடத்தில் கீட்டிங்கை முன்னிறுத்தவதிலும் மிகத் தீவிரமாக உள்ளான். ஸ்டோடார்டின் கோயிலை, அது கோயில் என்ற கட்டிடத்தின் மாதிரியில் சேராது என்று சாட்சி சொல்லி ரோர்க்கின் மிகப் பெரிய வாழ்க்கைச் சரிவை உருவாக்குவதில் டூஹி, கீட்டிங் முதலானோர் முன்னணியில் நிற்கின்றனர்.
ரோர்க்கைப் போலவே வணங்காமுடியாகவும், சமரசங்களை விரும்பாத பத்திரிக்கையாளராகவும் வரும் ரோர்கின் காதலி டோமினிக் ப்ராங்கன்(Dominique Francon), இந்தக் கட்டத்தில் உலகின் மீது கோபம்கொண்டு, பழி வாங்குதலாக பீட்டர் கீட்டிங்கை மணந்து ரோர்கின் வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறாள்.
ரோர்க் தன் சக்தியை உலகுக்கு எப்படி நிரூபிக்கிறான், டோமினிக்கின் பழிவாங்குதல் என்ன ஆகிறது என்று போகிறது கதை.
ரோர்க், தனிமனித ஒழுக்கம் நிரம்பியவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். வஞ்சகத்தாலும் வீண் புகழ்ச்சியாலும் முன்னேறத் துடிக்கும் பீட்டர் கீட்டிங் போலல்லாமல், தன் வேலைக்கேற்ற உயர்வையே விரும்புபவன்; டூஹி போல் பிடிக்காதவரைக் கெடுக்க நினைப்பதிலிருந்து காலி டப்பாக்களைக் கூட பிடித்திருந்தால், 'அற்புதக் கலைஞர்' என்று உயர்த்தி விடுவது வரை செய்வதை வெறுப்பவன் ரோர்க்.
ஒரு விதத்தின் எல்லா நாவல் கதாநாயகர்கள் போலவும், "வாழு வாழவிடு" கொள்கையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் ரோர்க். ஆனால், வாடிக்கையாளரின் வசதிக்காக, திருப்திக்காக கூட தன் கட்டிட அமைப்பில் ஒரு சின்ன மாறுதல் கூட செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போதும், வரைந்து கொடுத்துவிட்ட தன் கட்டிட அமைப்பைக் கொஞ்சமே சிதைத்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக, கட்டிடத்தையே தகர்க்க விரும்பும் போதும் ஏனோ, கொஞ்சம் அதீதமான ஒரு கதாபாத்திரமாகத் தோன்றுகிறது.
ரோர்க்கின் கண்களில் அடுத்தவருக்கான பரிவோ, பாசமோ, ஏன், அடுத்த மனிதர் ஒருவர் எதிரில் இருக்கிறார் என்ற அங்கீகாரமோ கூட இருப்பதில்லை என்கிறான் பீட்டர் கீட்டிங். சக மனிதரை அங்கீகரிக்காத, "நான்" தான் ரோர்க்கின் குணம் என்றால், அதுவும் கொஞ்சம் இடறுகிறது.
"என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டேன்," என்ற ரோர்க்கை விட, அந்த மனிதர்களின் பிரச்சனைகளை அவர்களுக்கே புரியவைக்க உலகத்திற்கெதிராக தனியொருத்தியாக போர் தொடுக்கும் டோமினிக் ஏனோ எனக்குப் பிடித்த பாத்திரமாகிப் போய்விட்டாள். கீட்டிங்கின் தனித்தன்மையற்ற நினைவுகள், சுயநலம், போன்றவற்றை அவனே உணரச் செய்வதிலாகட்டும், தான் வேலை செய்த பத்திரிக்கையின் முதலாளி வையனாண்ட்டுக்கு(Wynand) தனக்கே நம்பிக்கையே இல்லாத விசயங்களைப் பதிப்பித்து பணம் செய்யும் அவருடைய போலித் தன்மையைப் புரியவைப்பதிலாகட்டும், டோமினிக் சரியான போராளியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாள்.
"ஒவ்வொரு மனிதனும் இந்த உலகின் கதாநாயகன். தன்னுடைய மகிழ்ச்சியே அவன் வாழ்க்கையின் காரணம். அவன் படைப்புத் திறனே அவனுடைய மிக உயர்ந்த வேலை;" என்பதே
ஆப்ஜக்டிவிசம்(Objectivism) என்ற அயன் ராண்டின் புதிய சித்தாந்தத்தின் கூறு. இந்த சித்தாந்தத்தை முன்னிறுத்துவதாகவே பவுண்டன்ஹெட்டும், அவருடைய மற்ற படைப்புகளும் அமைந்திருக்கின்றன.
தியாகமும் சமூக மகிழ்ச்சியுமே மனிதனின் முக்கிய வாழ்க்கைப் பயன் என்று போதித்து வளர்க்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக் காரணம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது. அடுத்தவருக்கு எந்தப் பிரச்சனையும் உருவாக்காத தனி மனித மகிழ்ச்சியே வாழ்க்கையின் காரணம் என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும், சமூகம் என்பது மனிதர்களின் கூட்டணி என்பதையே மறுக்கும் ஆப்ஜக்டிவிசம் முழுமையாக ஒப்புக் கொள்ளும்படி இல்லை.
படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ரோர்க் போலவோ, டோமினிக் போலவோ ஆகும் ஆசை ஏற்படுவது உண்மை தான். ஏனெனில், கதையில் அடுத்தவரைத் தொல்லை செய்யாத பாத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பவை இவை போன்ற ஆப்ஜக்டிவிச பாத்திரங்கள் மட்டும் தான்.
டூஹி, கீட்டிங் போன்ற அடுத்தவரின் இடத்தைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடிய மனிதர்கள் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்பவன் என்ற முறையிலும் ரோர்க்கின் கதாபாத்திரம் மனம் கவர்வதாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படித்த நாவல் என்றாலும் ஏதோ ஒரு விதத்தில், ஆப்ஜக்டிவிசக் கூறுகளை ஒப்புக் கொள்ள முடியாமல் போனதால், நிறைவுபெறாத வாசிப்பனுபவமாகவே போய்விட்டது.