Wednesday, January 24, 2007

தேடல் தொடர்கிறதே

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன்.

DR. சிவகுமார்,
9, பதி தெரு,
சேத்துப் பட்டு,
சென்னை.


'கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?' என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், "இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே.." என்று சொல்கிறார் அந்த வீட்டம்மாள்.

அந்தத் தெரு தான் பதி தெரு என்று பலபேர் உறுதி கூறினார்கள். ஆனால், அந்தத் தெரு மட்டுமன்றி, அதன் வலது, இடது பக்கத்து அடுத்தடுத்த தெருக்களில் கூட மருத்துவர்களின் வாசனையே இல்லை என்று பல்குத்திக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார்.

தெருமுனை டீக்கடையில் இன்றைக்கு நான் தான் சூடான விவாதப் பொருள்.
"அந்தாள் சரியாத் தாம்லே கேட்குறாரு.. பார்சலைத் தான் நான் கைல வாங்கிப் பார்த்தேன்லா" என்றும், "எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பெருசு. ஏதாச்சும் புள்ள புடிக்கிறவனா இருக்கப் போறான், சாக்கிரதையா கவனிக்கோணம்" என்றும் என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தார்கள்..

"ஏன் சார், நீங்களாவது சொல்லுங்க, இது சென்னை தானே?" என்பதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. மற்ற எல்லா கேள்விகளையும் கேட்டாகி விட்டது.

இன்னும் நான் வழி கேட்காத ஒரே ஜீவன் அதோ அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சின்ன பையன் மட்டும் தான். பாவம், அவன் கையில் இருந்த பிளாஸ்டிக் பொம்மை சிகப்பா, பச்சையா என்று கேட்டால் கூட அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்போது போய் அவனிடம் பதி தெரு என்றால், டீக்கடைக்காரர்கள் ஒரு முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனால், "மரமே, டாக்டர் சிவகுமாரைத் தெரியுமா?", "கொசுவே! சிவகுமார் வீடு எது?" என்று நான் விசாரிக்க வேண்டியது தான். கடைசி முயற்சி ஒன்று செய்துவிட்டு, பார்சலைத் திரும்பி அனுப்ப வேண்டும்..

கடைசி முயற்சி..., கடைசி முயற்சி? என்ன செய்யலாம்? ஆங்! பத்தாவதில் பொற்கைப் பாண்டியன் கதை படித்தது நினைவுக்கு வந்தது; அதைத் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கேட்டுவிட வேண்டியது தான். கை போனால் கஷ்டம் தான். எதற்கும் திருடன் என்று சந்தேகிக்கும் அந்த டீக்கடை ஆசாமியை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். வெகுநேரம் ஆனதால் எங்கோ போய்விட்டார் போலும், ஆளைக் காணவில்லை. நான் தைரியமாக போய் ஒன்றாம் எண் வீட்டின் கதவைத் தட்டினேன். நல்லவேளையாக அந்தத் தெருவில் முப்பத்தி ஓரு வீடுகள் தாம் என்பது எதேச்சையாக நினைவுக்கு வந்து ஒருவித நிம்மதி அளித்தது.

கதவைத் திறந்தவருக்குச் சுமார் முப்பது முப்பத்தியைந்து வயதிருக்கலாம். முன்வழுக்கை வேறே. "ஏன் சார், டாக்டர் சிவகுமார்ங்கிறவரு.. இந்த வீட்ல இருக்காருங்களா?"

"டாக்டரா?" தொடங்கிவிட்டார். இனிமேல் இல்லை என்பதை நீட்டி முழக்கிச் சொல்வார். ஏமாற்றத்திற்குத் தயார் செய்தபடி "ஆமாம் சார்" என்றேன்.

"இந்தத் தெரு தானுங்களா?"

தலையாட்டினேன். வாய்திறக்கும் பொறுமை இருக்கவில்லை.

"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..

குழப்பம் எனக்கும் தொற்ற, அவசர அவசரமாக அந்தப் பார்சலை எடுத்து அவரிடம் நீட்டினேன். "இந்தத் தாளைப் பாருங்க.."

படித்தவர் பெரிதாகச் சிரித்தார்.

"என்ன சார்?"

"இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவகுமார் இல்லை.. டி.ஆர். சிவகுமார். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..."

இன்னும் பெரிதாக அவர் சிரித்துக் கொண்டே போக, ஆளைக் கண்டுபிடித்த நிம்மதியும், அதுவரை அலைந்த களைப்புமாக, அவர் வீட்டு வாசற்திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.

20 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ... ஆத்தா...

இப்படி எழுதுறதுக்கு பதிலா.. நீங்க 'அந்த' கடைய தெறந்தே வச்சுகிட்டு இருந்திருக்கலாம்.

நற..நற..நற...( ஆ! பல்லு வலிக்குதுடா சாமி)

ரவி said...

///"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..///

சூப்பர் ட்விஸ்ட் !!!!! ரசித்தேன் இந்த சிக்கனமான கதையை !!!!

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல கதை.

/* இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவராமன் இல்லை.. டி.ஆர். சிவராமன். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..." */

வாய்விட்டுச் சிரித்தேன்.

Unknown said...

ரசிக்கும் படியான படைப்புங்கோ :)

பினாத்தல் சுரேஷ் said...

ஆத்தா!

குமுதம் ஒருபக்கக்கதை ரேஞ்சிலே முடிச்சிட்டியே:-(

ஆரம்பத்துலே, அந்த லெட்டரை சேர்க்க வேண்டிய அவசியத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தணும். "கொடுத்தே ஆகவேண்டிய லெட்டர்" என்று emphasize செய்ய வேண்டும். "கொடுக்காவிட்டால்.. நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது" மாதிரி பில்ட்-அப்!

எதோ தோணினதச் சொன்னேன்.. தப்பா எதுவும் இல்லைன்னு நெனைக்கிறேன்.

Flow நல்லாவே இருக்கு:-) (இது பேலன்ஸிங்குக்காக மட்டுமே இல்லை:-)

சென்ஷி said...

super story, aanaa etho onnu kuraiyudhey

senshe

கலை said...

கதை நல்லாயிருக்கு பொன்ஸ். ஆனா சிவகுமார் எப்படி சிவராமன் ஆனார் ன்னுதான் புரியலை. :(

Unknown said...

DR. சிவகுமார்,
9, பதி தெரு,
சேத்துப் பட்டு,
சென்னை.

//"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..//

//"இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவராமன் இல்லை.. டி.ஆர். சிவராமன். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..." //

பொன்ஸ்,
DR. சிவக்குமாரை தேடி அப்புறம் பிளம்பர் சிவக்குமார் "நான் தான் இது ,எனக்கு வந்தது தான் சார் D.R.சிவராமன் ..அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு.." இன்னு சொல்றார்.

இனிஷியல் (DR/ D.R) புள்ளிக் குழப்பத்தை விடுங்க ..தேடப்படுவது சிவராமனா? சிவக்குமாரா?

எனக்குத்தான் புரியலையா?

பூனைக்குட்டி said...

யக்காவ் ஒரு அட்வைஸ், எடுத்துக்கிறதும் தூக்கிக் குப்பையில் போடுவது உங்கள் விருப்பம்.

Stop writing this kinds of stories.

அவ்வளவுதான்.

மணியன் said...

நல்ல கதை. குமுதத்தின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது.

பொன்ஸ்~~Poorna said...

பிறந்தநாள் காணும் பாலா,
ரொம்ப கடிக்காதீங்க, நாளுங் கிழமையுமா, பல்லு ஒடிஞ்சிடப் போகுது :))

ரவி, வெற்றி, தேவ், :) நன்றி

சுரேஷ், இது குமுதத்தைப் பார்த்து சூடு போட்டுகிட்ட சீரீஸ் தான் :) நீங்க சொல்லும் த்ரில் எல்லாம் அப்போ தோணலை.. நினைவில் வச்சிக்கிறேன் :)

சென்ஷி, குறைவதைத் தான் நம்ம பினாத்தலார் சொல்லிட்டார் பாருங்க..

கலை, கல்வெட்டு,
அது வந்து ஹி ஹி.. பழைய கதையாச்சா, டைப் பண்ணும் போது கொஞ்சம் தடுமாறிட்டேன் :) இப்போ சரி செஞ்சாச்சு..

தாஸ்,
இதெல்லாம் பத்து வருசத்துக்கு முந்தி எழுதிய பழைய கதைகள். கோப்புக்காக பதிவாக்கிக் கொண்டிருக்கிறேன். தற்போதைக்கு ஏதும் கதை எழுதவில்லை. எழுதினால் முன்குறிப்போடு போடுறேன் :)

மணியன், நன்றி :)

✪சிந்தாநதி said...

இருங்க..உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன்...

MSV Muthu said...

நான் தாஸ் பக்கம். பழைய கதைன்னு சொல்லிட்டதால மன்னிச்சு விட்டுடறேன்.

Shruthi said...

நல்ல கதை.....வாழ்த்துக்கள்

வெற்றி said...

பொன்ஸ்,
/* நாளுங் கிழமையுமா */
விளக்கம் please!!!!இச் சொல்லாடலின் பொருள் என்ன?

ஜி said...

ஒரு சாதாரண மேட்டர இவ்வளவு பெருசா எழுதிருக்கீங்க...

நீங்க எழுதுனதுன்னா கொஞ்சம் டவுட்டாத்தான் இருக்குது... நல்ல வேளை பழையக் கதைன்னு சொல்லிட்டீங்க...

Anonymous said...

படிச்ச நாங்களும் குழம்பிட்டோம் பொன்ஸ் ;)

Anonymous said...

சாகித்ய அகாடெமி பரிசு கெடைக்க வாய்ப்பு இருக்கு. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

யோசிப்பவர் said...

நல்ல நடை. ஆனாலும் மோகன் தாஸ் சொன்னதையே வழிமொழிகிறேன்.

தெனாலி said...

நீங்களே சொல்லி இருக்கீங்க "'குமுதம்' பாணிக் கதை"ன்னு. குமுதம் ரேஞ்சுக்கு இது நல்ல கதை!