Tuesday, January 16, 2007

சுஜாதா (குமுதம் சிறுகதை)

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று..
தொடர்புள்ள சுட்டிகள்:
சிறுகதை-1
சிறுகதை-2 ]


"ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?" கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.

"நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் மோதிரம் போடு, பிரேஸ்லெட் போடுன்னா, எப்படிச் செய்ய முடியும்? கொஞ்சம் மனுசத்தன்மையோட பேசுங்க!"

"கலா புருஷன் நிரஞ்சனுக்கு மட்டும் மோதிரம் போட்டிருக்காங்க, நான் என்ன இளிச்சவாயனா? அவன் என்னடான்னா, ஆபீஸுக்கு தெனக்கும் போட்டுகிட்டு வந்து அலட்டக்கிறான். என்னை எல்லாரும் கேனயன் மாதிரி பார்க்கிறாங்க!"

கலாவின் கணவனும் சுஜாவின் கணவனும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் கலாவுக்குத் திருமணப் பேச்சு வந்த போது நிரஞ்சனை வழிமொழிந்தவனே சுந்தர் தான்.

"அவரு வீட்ல அதைத் தவிர வேறெதுவும் கேட்கலே. இங்க அப்படியா? ஒட்டியாணம் என்ன, தோடு என்னான்னு அநியாயமா கேட்கலியா உங்கம்மா? இப்ப உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த ஒட்டியாணத்தை அழிச்சு நாலு மோதிரமா பண்ணிடுவோம்!"

இந்தக் கீதை எல்லாம் நிரஞ்சனின் மோதிரத்தின் முன் தவிடு பொடியானது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் சுஜாதா பெட்டியுடன் தாய்வீட்டு வாசலில் நின்றாள்.

"என்னம்மா சுஜாதா! திடீர்னு வந்திருக்கே!" அம்மாவின் ஆதரவான கேள்விக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கடன்காரன், பால்காரன், சத்திரத்து காண்டிராக்டர் கணக்குகள் சுஜாதாவின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டன.

"ஒண்ணுமில்லைம்மா.. அவரு ஒரு மாசம் டெல்லிக்கு டூர் போகிறாரு. அதான், கலா வேற இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப போரடிச்சி போயிருப்பீங்களேன்னு வந்தேன்!" என்று அப்போதைக்கு ஏதோ சொன்னாள் சுஜா.

சுஜாதா தாய்வீட்டுக்கு வந்து ஒருவாரம் போயிருக்கும். அம்மாவுடன் சேர்ந்து கல்யாணம் விசாரிக்க வருபவர்களைக் கவனிப்பதிலும், அப்பாவுடன் கணக்குகளில் உதவுதலிலும், அலுவலக பிஸியிலும், நாட்கள் போனதே தெரியாமல் போயிற்று. சுஜாதான் கல்மனசு என்றால், சுந்தர் இன்னும் கடுமையான கோபத்தில் இருந்தான். "மாப்பிள்ளை ஒரு போன் கூட செய்யலியே" என்று அம்மாதான் மாய்ந்து போனாள். "போன எடத்துல நேரம் இருந்திருக்காதம்மா..", "ஆபீஸுக்குப் பேசிட்டாரம்மா!" போன்ற சமாதானங்களுடன் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமை வங்கிக்குப் போன அப்பாவே தற்செயலாக சுந்தரைப் பார்த்துவிட்டார். குரல் தழதழக்க சுஜாதாவைக் கேட்கவும், மோதிரக் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. இன்னும் யாரிடம் கடன் வாங்கவில்லை என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுஜாதா, நிச்சயமாய்ச் சொல்லிவிட்டாள் "நீங்க எதுக்கப்பா போடணும்? பெத்து வளர்த்து நல்ல வேலையிலும் அமர்த்தி அந்த வருமானத்தோட பலன் கூட உங்களைச் சேராதபோது, நீங்க எதுக்கு இன்னும் மேல மேல செய்யணும்?" என்ற சுஜாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அம்மாவும் அப்பாவும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

"இங்க பாருங்க, இதை விக்கலாமா, அதை அடகு வக்கலாமான்னு யோசிச்சிகிட்டே இருந்தீங்கன்னா, நான் டைவர்ஸ் கேஸ் போடுறது பத்தி யோசிக்க வேண்டியதாகிடும்! அவரா வந்து அழைச்சிகிட்டு போனா பார்க்கலாம், இல்ல அந்த மோதிரம் தான் முக்கியம்னா இப்படியே இங்கயே இருந்துட்டு போறேன். வயசான காலத்துல உங்களுக்கும் துணைக்கொரு ஆளாச்சு!"

ரணகளமாக இருந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலா வந்தாள். "ஏய் சுஜா! இங்க தான் இருக்கியா? உங்க ஹஸ்பெண்ட் கையை வெட்டிகிட்டார்னும் செப்டிக் ஆகிடுச்சு, ஜுரம் அது இதுன்னு இவர் சொன்னாரே!" என்ற சேதியுடன்.

அவ்வளவு தான்; சுஜாதா, தான் கொண்டுவந்த பெட்டியைக் கூட மறந்து போனாள். உடனடியாகக் கிளம்பி வீட்டுக்குப் போகவும், சுந்தர் வீட்டில் தான் இருந்தான். மிகப் பயங்கர அமைதியில் இருந்த வீட்டில் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி, சுந்தர் சுஜாவைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"சாரி சுஜா! நீ இல்லைன்னா எத்தனை கஷ்டம்னு இப்போத் தான் புரிஞ்சிகிட்டேன்.! நிம்மதியா தூங்க முடியலை, நீ பேசுறதைக் கேட்காம சாப்பாடு கூட இறங்கலை! காய் நறுக்கும் போது மோதிரவிரலில் வெட்டிகிட்டு... இங்க பாரு! இனி மாமனாரே வாங்கிக் கொடுத்தாலும் மோதிரமே கேட்பேன்? ம்ஹூம்!" சுந்தர் வெட்டுப்பட்ட விரலைக் காட்டினான்.

"நீங்களா கேட்கலைன்னாலும், எங்க அப்பா கொடுத்துவிட்டிருக்காரு, எங்க கைய நீட்டுங்க!" என்று சொல்லி கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள் சுஜாதா.

[வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) மேல இருக்கும் தொடர்புள்ள சுட்டிகள் குமுதம் ஒரு பக்க வகையில் முயன்ற என்னுடைய பழைய சிறுகதைகள் ;) ]

14 comments:

அரை பிளேடு said...

கொஞ்சம் டிராமாடிக்கா இருந்தாலும் முடிவு நல்லா இருந்தது.

சென்ஷி said...

::)))

மஞ்சூர் ராசா said...

இது சுஜாதா எழுதியதா அல்லது நீங்க எழுதினதா?

✪சிந்தாநதி said...

//கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள்//

:)

Jazeela said...

//வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) // உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல? ;-)

வல்லிசிம்ஹன் said...

அடேங்கப்பா.
பிரமாதம்.
குமுதத்திற்கு ஏற்ற நடை.

நல்லா இருந்தது பொன்ஸ்.

சேதுக்கரசி said...

இப்படி கடுப்படிச்சிட்டீங்களே!

Kuppusamy Chellamuthu said...

:-)

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல கதை.
படித்தேன்.
இரசித்தேன்.
:)

இலவசக்கொத்தனார் said...

அக்கா,

நம்ம கலையைத்தான் கலான்னு சொல்லறீங்களா? தமிழ் பெயரை இப்படி கெடுக்கறீங்களே. உங்களுக்கு ஆனாலும் தைரியம்தான். :))

போகட்டும். கலா (அதாங்க கலை) புருசன் கிரிஷ் இல்லை? இது என்ன நம்ம சீரியல் மாதிரி அப்பப்போ வேற ஆளுங்க வந்து.. ஒரே கன்பியூஷன். :))

பங்காளி... said...

வெரி நைஸ்....

உரையாடல்கள்களின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாமோ....ம்ம்ம்ம்ம்

Dharumi said...

//குமுதத்திற்கு ஏற்ற நடை.//
இருந்தாலும் வல்லி சிம்ஹன் உங்களை இப்படி insult செய்திருக்கக் கூடாதுதான்.. :)

யோசிப்பவர் said...

//
//குமுதத்திற்கு ஏற்ற நடை.//
இருந்தாலும் வல்லி சிம்ஹன் உங்களை இப்படி insult செய்திருக்கக் கூடாதுதான்
//

;))

மிதக்கும் வெளி said...

ஒரு பொன்ஸ்கதை

பொன்ஸ்க்கு உச்சியில் வெப்பம் அதிகரிக்க கணிப்பொறியின் முன் அமர்ந்து தட்டச்சு பண்னத் தொடங்கும்போதே நமக்குத் தெரிந்திருக்கும் சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது என்று.


இது எப்படி இருக்கு?