Wednesday, January 17, 2007

புத்தகக் கண்காட்சி - கவனித்தவை

புத்தகக் கண்காட்சி தொடங்கி இரண்டாம் நாளிலிருந்து பல்வேறு நண்பர்களுடனும் தனியாகவும் தினம் தினம் போய்வந்து கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள், பழைய அலுவலகத் தோழர்கள், சென்னப்பட்டினம் குழு என்று போகும் ஒவ்வொரு நாளும் கண்காட்சியிலும் மக்கள் கூட்டம் என்னவோ அதிகமாகிக் கொண்டே இருப்பதாகத் தோன்றியது. இனி கவனித்தவை:

  • அருணா சூப்களில் மஷ்ரூமை விட காய்கறி சூப் சுவையாக இருக்கிறது

  • ஒரு நாளாவது மதுரையில் சாப்பிட்டது மாதிரியான சுவையான ஜிகிர்தண்டா போட்டுக் கொடுப்பார் என்று தான் நானும் பார்க்கிறேன். இருபது ரூபாய்க்கு வெறும் ஐஸ்கிரீம் தான் மிஞ்சுகிறது. உண்மையான ஜிகிர்தண்டா சுவையே மறந்து போச்சு :(

  • போண்டாவை விட பஜ்ஜி எண்ணை குறைவாக சுவையாக இருக்கிறது

  • கோபி மஞ்சூரியன் பஜ்ஜியின் இன்னுமொரு வடிவமாக மட்டுமே பொரிக்கப்படுகிறது.

  • டீயைத் தேத்தண்ணீர் என்றே சொல்லலாம், அத்தனை நீர்ச்சத்தோடு இருக்கிறது. அதனால் காப்பி இன்னும் சுறுசுறுப்பாக விற்பனையாகி சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. பன்னாட்டு நிறுவனமான ரைஸ் பவுலில் கிடைக்கும் தேநீரை விட, பள்ளிக் காண்டீனில் கிடைக்கும் தேநீர் இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது.

  • இரண்டாம் நாள் போனபோது நானூறு ஸ்டால்கள் முழுவதும் சுற்றி முடித்து வந்து தான் சாப்பிட எதுவுமே கிடைக்கும் என்ற நிலை மாறி மூன்றாம் நாள் அரும்பு பதிப்பக ஸ்டால் அருகில் டீ, காப்பி கிடைத்தது. நான்காம் நாள் இன்னும் முன்னேற்றம். பழ ரசங்கள் கூட கிடைத்தன. பேசாமல் ரைஸ் பவுலைத் தனியாக வைத்ததை விட நானூறு ஸ்டால்களுக்கு இடையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களில் பகுதி பகுதியாகப் பிரித்துச் சொருகியிருக்கலாம்..

  • கண்காட்சி ஸ்டால்கள் போடப் பட்டிருந்த ஆறு அடி உயர மேடையில் மக்கள் நடப்பதன் அதிர்வுகளை உணர முடிந்தது. கொஞ்சம் பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தேன்.

  • விடுமுறை நாட்கள் முழுவதும் கண்காட்சிக்குப் போய்விட்டாலும், ஒரு நாள் கூட சுட்டி விகடன் அறிவியல் அரங்கத்திற்கோ, திரைவிழாவிற்கோ போகமுடியவில்லை. சுட்டி விகடன் அரங்கம் எப்போதுமே வாயிலருகில் கூட்டமான கூட்டம். திரைவிழாவிற்கு நேரத்திற்குச் செல்ல முடியாமல் சோம்பேறித்தனம் :)

  • இரண்டாம் நாள் சென்ற போது, உள்ளே கழிப்பறை வசதிகள் இருக்கவே இல்லை. சுட்டி விகடன் அரங்கத்தில் பயிற்சிகளைச் செய்து காட்ட வந்திருந்த பெரம்பூர் பள்ளியைச் சேர்ந்த பெண்குழந்தைகள் பாடுதான் அதிக திண்டாட்டம். "எங்கயோ ஸ்கூலுக்குள்ள இருக்கு டாய்லெட்" என்று சந்தேகமாகவே சொன்னார்கள். அடுத்த நாள் முதல் தற்காலிகமான கழிப்பறைகளை அமைத்துவிட்டார்கள். தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் இருந்த அந்தக் கழிப்பறைகளில், சிலவற்றில் உள்தாழ்ப்பாள் இல்லை, சிலவற்றில் தண்ணீர் வெளியேற சரியான வழிகள் இல்லை. ஆனால், எதுவுமே இல்லாததற்கு இது தேவலாம் தான்.

  • வாகன நிறுத்த மேற்பார்வையை அவுட்சோர்ஸ் செய்திருக்கிறார்கள் போலும்; வாகனம் நிறுத்துமிடங்கள் ஒரே புழுதி மயம். முதல் நாள் தெரியாத்தனமாக என் தலைக்கவசத்தை எடுத்துப் போனதில் கருப்பு நிற தலைக் கவசம் எனக்கே அடையாளம் தெரியாத பழுப்பு நிறமாகி விட்டிருந்தது.

  • சனி, ஞாயிறுகளில் அதீத கூட்டம் வந்த போதும் நிறுத்தத்திற்கான நுழைவுச் சீட்டு கொடுப்பவர்கள் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தார்கள். வெகு நேரம் காத்திருந்து சீட்டு வாங்க வேண்டியதாகியது.

  • வண்டிகள் உள்ளே அனுமதிக்கப்படும் வாசலும் வெளியேறும் வாசலும் வேறுவேறாக இருந்தாலும், உள்ளே கொஞ்ச தூரம் வரை வெளியேறும் வண்டிகளும் உள்ளே வரும் வண்டிகளும் ஒரே தடத்தை ஆக்ரமித்துக் கொண்டதில், கொஞ்சம் குழப்பம். கூட வந்திருந்த என்.ஆர்.ஐ நண்பர் ஒருவர், "என்னங்க இது, இன் அவுட் தனித்தனி வழி வைக்க மாட்டாங்களா?" என்று அங்கலாய்த்தார்.

  • உள் நுழையும், வெளியேறும் வழிகள் மிக மிக உயரமாக இருந்தன. எனக்கு முன்னால் வண்டி ஓட்டி வந்த ஊனமுற்றவர் ஒருவரால் வண்டியை உள்ளே ஏற்றவே முடியவில்லை. அப்புறம் போலீஸ்காரர்கள் வண்டியைத் தள்ளிக் கொடுத்தார்கள்.

  • உள் நுழையும், வெளியேறும் வழிகளைப் பற்றிய அறிவிப்பு பள்ளி வளாகத்து வாயிலுக்கும் இல்லை, உள்ளே ஸ்டால்களிலும் இல்லை. எப்போதுமே அவுட் கேட் அருகில் இரண்டொருவர் வண்டியை மெதுவாக்கி அந்த வாயிற்காப்பாளனிடம் உறுதி செய்து கொண்டு உள் வழியே நுழைந்து கொண்டிருந்தனர்.

  • ஸ்டால்கள் நிலை இன்னும் மோசம். "உள்ளே" "வெளியே" அறிவிப்புகள் இல்லாத காரணத்தால் எல்லா பக்கத்திலிருந்தும் எல்லாரும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் ஒரு ஒழுங்கே இல்லாமல் இருந்தது. விகடனோ, அல்லது வேறெதோ ஒரு ஸ்டாலில் மட்டுமே IN, OUT என்று பெரிதாக எழுதி வைத்திருந்தார்கள்.

  • ஸ்டால்கள் முழுவதும் சுற்றிக் களைத்து வருபவர்கள் உட்கார வெளியில் சேர் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி வந்து உட்காருபவர்களை நம்பித்தான் மாலை 6:30 மணி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ என்று சந்தேகம் எனக்கு. (இந்த மாலை நிகழ்வுகள் சென்னப்பட்டினம் பக்கத்தில் தகவல் பட்டியில் தினசரி சேர்க்கப்படுகின்றன)

  • சனிக்கிழமை நான் போய்ச் சேர்ந்த அதே நேரம் நடிகர் சிவகுமார் வந்து இறங்கினார். டிக்கெட் வாங்கியவர்கள், வாங்குபவர்கள் என்று எல்லாரும் விரைந்து வந்து "சிவகுமார் சிவகுமார்" என்ற மேடைக்கருகில் குழுமிவிட, புத்தகக் கடை வாசல் பக்கம் ஒரு நிமிடம் கூட்டம் குறைந்தே போய்விட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரின் ஏழு வயது மகன், "அப்பா, புக்கு வாங்க வந்தோமா இல்லை சிவகுமாரைப் பார்க்க வந்தோமா.. வாப்பா புஸ்தகம் வாங்கப் போகலாம்" என்று தந்தையின் கையைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிட்டான். அப்புறம் அவன் ஏதோ கணிதப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

  • உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம், புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. உஷ்.. ஐநூறு என்ற பாதி உண்மையை மட்டும் தான் அம்மாவுக்குச் சொல்லி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மீதி ஆயிரத்தையும் சொல்ல வேண்டும் ;)

  • கண்காட்சியில் வாங்கியதில் மிக மிக முக்கியமான புத்தகத்தின் புகைப்படம் உங்களுக்காக:


    :))) சுவாரஸ்யமான புத்தகமும் கூட. அங்கேயே படித்து முடித்துவிட்டேன் ;)

21 comments:

இலவசக்கொத்தனார் said...

//ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. உஷ்.. ஐநூறு என்ற பாதி உண்மையை மட்டும் தான் அம்மாவுக்குச் சொல்லி இருக்கிறேன். //

எழுதும் போது உங்களுக்கும் தூக்கம் தூக்கமாய் வந்தது போல!

மிதக்கும்வெளி said...

/அருணா சூப்களில் மஷ்ரூமை விட காய்கறி சூப் சுவையாக இருக்கிறது

ஒரு நாளாவது மதுரையில் சாப்பிட்டது மாதிரியான சுவையான ஜிகிர்தண்டா போட்டுக் கொடுப்பார் என்று தான் நானும் பார்க்கிறேன். இருபது ரூபாய்க்கு வெறும் ஐஸ்கிரீம் தான் மிஞ்சுகிறது. உண்மையான ஜிகிர்தண்டா சுவையே மறந்து போச்சு :(

போண்டாவை விட பஜ்ஜி எண்ணை குறைவாக சுவையாக இருக்கிறது

கோபி மஞ்சூரியன் பஜ்ஜியின் இன்னுமொரு வடிவமாக மட்டுமே பொரிக்கப்படுகிறது.

டீயைத் தேத்தண்ணீர் என்றே சொல்லலாம், அத்தனை நீர்ச்சத்தோடு இருக்கிறது. அதனால் காப்பி இன்னும் சுறுசுறுப்பாக விற்பனையாகி சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. பன்னாட்டு நிறுவனமான ரைஸ் பவுலில் கிடைக்கும் தேநீரை விட, பள்ளிக் காண்டீனில் கிடைக்கும் தேநீர் இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது.

இரண்டாம் நாள் போனபோது நானூறு ஸ்டால்கள் முழுவதும் சுற்றி முடித்து வந்து தான் சாப்பிட எதுவுமே கிடைக்கும் என்ற நிலை மாறி மூன்றாம் நாள் அரும்பு பதிப்பக ஸ்டால் அருகில் டீ, காப்பி கிடைத்தது. நான்காம் நாள் இன்னும் முன்னேற்றம். பழ ரசங்கள் கூட கிடைத்தன. பேசாமல் ரைஸ் பவுலைத் தனியாக வைத்ததை விட நானூறு ஸ்டால்களுக்கு இடையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களில் பகுதி பகுதியாகப் பிரித்துச் சொருகியிருக்கலாம்.. /



ரொம்ப அவசியம். நீங்கள் புத்த்கம் வாங்கப் போனது மாதிரி தெரியவில்லையே. எல்லாநாளும் புத்தகக் கண்காட்சி போய் ஒரே ஒரு புத்த்கம்தான் வாங்கினீர்கள் போலத் தெரிகிறது (அதுவும் யானைப் படம் போட்டது). மற்ற நேரமெல்லாம் கேண்டீன்லதான் இருந்தீங்கபோல.

சீனு said...

//ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. உஷ்.. ஐநூறு என்ற பாதி உண்மையை மட்டும் தான் அம்மாவுக்குச் சொல்லி இருக்கிறேன். //
உங்க விலாசம்???

தருமி said...

அப்படி நித்தம் நித்தம் தொடர்ந்து உங்களை இழுத்துக் கொண்டு போனது எவை என்பது புரிந்து விட்டது. பார்த்து...

பங்காளி... said...

நாளைக்கு தனியா போறோம்ல....அப்ப இந்த டிப்பெல்லாய் யூஸ்ஃபுல்லா இருக்கும்.....

அப்டியே போறபோக்ல நம்ம பதிவு பக்கம் வந்து ஏதாச்சும் கிள்ளிப்போட்டுடூ போனீங்கன்னா நல்லாயிருக்கும்(நம்ம பதிவுகளுக்கு பின்னூட்டச்சத்து ரொம்ப கொறைவா இருக்காம்...ஹி..ஹி..)

http://pangaali.blogspot.com/2007/01/blog-post_16.html

தமிழ்நதி said...

என்னை வேறு விட்டுவிட்டு ஓடோடிப் போய் அவ்வ்வளவு புத்தகங்கள் வாங்கினீர்கள். அதில் யானைப்படம் போட்ட புத்தகம் ஒன்றுதான் சுவாரசியமாக இருந்ததா...? நான் உங்களுக்கென்று கோகுலம் வாங்கி வைக்கிறேன் வாருங்கள். நான் இரண்டாவது மூன்றாவது நாட்கள் போய் வாங்கிய புத்தகங்களைப் பற்றி மூச்சு விடவில்லை. முதலாவது நாளே 'ஐயோ.... இவ்வ்வ்வ்வ்வளவோவா...'என்றார்கள். பயந்துவிட்டேன். இனி சனிக்கிழமையும் போகும் உத்தேசம் இருக்கிறது. எத்தனை புத்தகங்கள் எனக்காகக் காத்திருக்கின்றனவோ...?ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. //
பொன்ஸ் ,தமிழ்நதி பொறாமையையும் வயிற்றெரிச்சலையும் கிளறிவிடறதுக்கும் ஒரு அளவு இருக்குது ஆமா.
வேணாம்.

Anonymous said...

Hi,
Good writeup. Please give the details of the books purchased by you and tamilnathy. It may be useful to others also.
Thanks
xavier

✪சிந்தாநதி said...

போனிலேயே ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து அஞ்சு புக் வாங்கறதுக்குள்ள எழுநூறு ரூபாய் காலி. அதனால ஏழு புக்கோட நிறுத்தி விட்டேன்...பாவம்..;))

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், சரியாப் பாருங்க. ஆயிரத்தி ஐநூறு என்ற சொல்லைப் பாதியாக்கினால், ஆயிரத்தி | ஐநூறு , ஆக ஐநூறு தானே ;)

சுகுணா, புத்தகங்கள் வாங்கத் தான் நீங்கள் எல்லாரும் இருக்கிறீர்களே! :)

சீனு.... ம்ஹும் ம்ஹூம் ம்ஹூம் :(((

தருமி, ஹி ஹி :)))

பங்காளி :) உங்கள் பக்கத்துக்கு வரேன்.. இப்போதைக்குக் கொஞ்சம் அதிக வேலை.. அப்பீட்..

நதி, நீங்கள் போட்டிருந்த பட்டியலுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டுத் தான் என்னுடைய பட்டியலைப் போடாமல் நிறுத்திவிட்டேன் ;) சனிக்கிழமை போகிறீர்களா? நானும் வந்தால் வருவேன் :)))

லட்சுமி, நதி திரும்பவும் போகிறேன்ங்கிறாங்க, நீங்க என்னன்னா பொறாமை, ஆற்றாமைன்னு :))

சேவியர், புத்தகப் பட்டியல் போட முயல்கிறேன் இப்போ வரை போடும் எண்ணம் இருக்கவில்லை.. நதியின் பட்டியல் அவர்கள் பக்கத்தில் இருக்கிறது. முடிந்தால் பாருங்களேன்..

பொன்ஸ்~~Poorna said...

சிந்தாநதி, ஏழே ஏழு தான் என்றால் நீங்களாவது பட்டியல் தரலாமே? ;)

அறிஞர். அ said...

நானும் கடந்த ஞாயிறு சென்றேன்.

சுட்டி விகடனுக்கு அருகில் இரத்தவங்கிக்கான முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

சுட்டி விகடன் சார்பில் சிறுவர்களுக்கு ஒரூவர் ஏதோ செய்து காட்டிக்கொண்டிருந்தார்.

அப்புறம், நானும் எல்லா கடைகளிலும் வாங்கினேன். ஆச்சரியமா இருக்கா, கேட்லாக்'ங்க, என் பெயர் சொல்லி கேளுங்க, இலவசமாய் தருவார்கள்.


மாஹிர்

✪சிந்தாநதி said...

நாலு ஏற்கனவே பட்டியல் குடுத்தாச்சே? மீதி மூணு...வந்து சேர்ந்த பிறகு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//லட்சுமி, நதி திரும்பவும் போகிறேன்ங்கிறாங்க, நீங்க என்னன்னா பொறாமை, ஆற்றாமைன்னு :))//

பொன்ஸ்,நான் சொன்னது தில்லியிலிருந்து கொண்டு கண்காட்சி பற்றி படித்து நொந்துகொள்ளும் என் நிலமை பற்றி ,நதியும்- -நீங்களும் செய்வது நியாயாமா என்று கேட்டு
இருந்தேன்.

பொன்ஸ்~~Poorna said...

மாஹிர்,
கேட்லாக் வாங்கி வாங்கி பை ரொம்பிப் போச்சுங்க.. கேட்காமயே தராங்க :)

சிந்தாநதி, நான் தான் பார்க்கலையா.. இருங்க உங்க பக்கத்துக்கே வந்து பார்க்கிறேன்

லட்சுமி, நியாயமே இல்லைதான், :) டக்குன்னு பறந்து இங்க வந்திருங்க :)))

அசுரன் said...

இந்த பதிவில் அங்குள்ள பல்வேறூ ஸ்டால்கள், புத்தகங்கள் குறித்து எழுதியிருப்பீர்கள் என்று ஆர்வமாக வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்

அசுரன்

வரவனையான் said...

ம்ம் உங்கட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன்


( காதல் படத்தில் அந்த அஸிட்டண்ட் டைரக்டர் சொல்லுவாருல்ல )

:)))

மலைநாடான் said...

நட்சத்திர வாரத்தில் சரவணபவன், புத்தகக்கண்காட்சியில் சிற்றுண்டிச்சாலை, விருப்பமானது யானை, ம்..ம். புரிஞ்சு போச்சுங்கோ..

Sivabalan said...

பொன்ஸ்

அசுரன் அவர்களை வழிமொழிகிறேன்..

அதற்காகவாவது இன்னொரு பதிவிடுங்கள் புத்தகங்களைப் பற்றி!

நன்றி

நாமக்கல் சிபி said...

//அப்பா, புக்கு வாங்க வந்தோமா இல்லை சிவகுமாரைப் பார்க்க வந்தோமா.. வாப்பா புஸ்தகம் வாங்கப் போகலாம்" என்று தந்தையின் கையைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிட்டான்//

:-)))

வந்த காரியத்தில் அல்லவா கவனம் இருக்க வேண்டும்!

Tulsi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.........
என்னத்தை தினம்தினமோ? நான் போன அன்னிக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆளைக்காணோம்(-:


(பெரியார்)சத்தியராஜைப் பார்த்துட்டு வந்தேன்:-)