Tuesday, January 23, 2007

புத்தகக் கண்காட்சி - படித்தவை

புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பதிவிட்டதிலிருந்து, வாங்கிய புத்தகங்களின் பட்டியலைக் கேட்காதவர்கள் இல்லை. வாங்கி, புதுக் கருக்கு கலையாத புத்தகமாக பட்டியலிடுவதை விட, படித்துப் பார்த்து அவை பற்றி எழுதுவோமே என்று தான் பட்டியல் தராமலே நழுவிக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவிலிருந்து அவ்வப்போது படித்த புத்தகங்களைப் பற்றிய பார்வையுடன் வாங்கிய புத்தகங்களின் பட்டியலும் இடம்பெறும்.

ச. தமிழ்ச்செல்வனின் நமக்கான குடும்பத்திலிருந்து தொடங்கியது என் இந்த வருட புத்தகக் கண்காட்சித் தொகுப்பு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "நமக்கான குடும்பம்" பதினாறு பக்கங்களே அடங்கிய குறும்பதிப்பு. நமது இன்றைய குடும்ப அமைப்பினைப் பற்றி, பெண்களும் ஆண்களும் 'உருவாக்கப்படுவது' பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தப் புத்தகம், கண்காட்சியைச் சுற்றிப் பார்க்கும் போதே கால் வலிக்காக உட்கார்ந்து இளைப்பாறிய பதினைந்து நிமிடங்களில் படிக்கக் கூடியதாக இருந்தது.

அடுத்து படித்து முடித்தது, க்ரியா பதிப்பகத்தாரின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" - ஆசிரியர் அம்பை. ஆண் பெண் உருவாக்கத்தை ஒட்டிய "புனர்" என்ற சிறுகதையும், சிலே புரட்சியில் வீணாகக் கைதாகி வாழ்க்கைப்பாதை மாறிப் போன பெண்ணின் "வயது" கதை,சமையலறை அதிகாரமும் அடுத்த நாள் சமையலை முடிவு செய்வதும் மட்டுமே தனது ராஜ்யம் என்று நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பற்றிய தொகுப்புக்குத் தலைப்பு கொடுத்த கதை, எல்லாமே ரசித்துப் படித்தவை. இந்தத் தொகுப்பை விட, ஓரளவு தமிழ்நாட்டுச் சூழ்நிலையில், இன்னும் சுலபமாக என்னால் உணரக் கூடிய பின்னணிகளில் இயற்றப்பட்டிருந்த "காட்டிலொரு மான்" தொகுப்பு எனக்கு அதிகம் பிடித்ததாயிருந்தது. சம உரிமை கேட்டு சண்டைக்குப் போகாமல், தானே உருவாக்கிய நிறுவனத்தில் தனக்கு உரிமை இல்லாமல் போனதை எண்ணி வருந்திக் காட்டுக்குப் போகும் நாயகியும், கணவரின் ஈகோவிற்காக, ஆசைப்பட்டு கற்ற வித்தையை சபையில் காட்ட முடியாமல் போவதை எதிர்த்துப் போராடும் பாடகியும் இன்னும் மனதில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லாக் கதைகளிலும் பெண்களே கதாநாயகிகள். உடனே, நமது மெகா சீரியல்கள் போல, ஆண் தான் வில்லனா என்று சீறி வந்துவிடக் கூடாது. பெண் என்ற வார்த்தைக்கு சமூகம் கட்டிவைத்திருக்கும் இலக்கணம் தான் நாயகியின் நேரெதிர் நாயகன். அதே சமயம், "பெண்ணைப் பற்றிப் எழுதும் பெண் என்பதால், பெண் எழுத்தாளர் என்று என்னைச் சொல்லாதீர்கள்" என்கிறார் அம்பை, தனது "ஆண் பெண்ணெல்லாம் எழுத்தில் இல்லை" குறுவெளியீட்டில்.

வம்சி புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கிய இந்தச் சிறுவெளியீடும் பதினாறு பக்கப் புத்தகம் தான். அம்பையின் எல்லா கதைத் தொகுதிகளைப் பற்றிய குறிப்புகளுடன் மேடைப் பேச்சு மாதிரியான நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.


"இதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால தான் நீர்மை வெளியிட்டிருக்கீங்க. முத்துசாமியோடது. முத்துசாமியோட அத்தனை கதைகளின் மையம் வந்து maleதான். மூன்று வயசில கெணத்துல விழுந்த பையன்ல இருந்து எல்லாமே ஆண் தான். அப்ப நீங்க ஏன் எழுதல, ஆண்களைப் பற்றிய கதைகள்னு? ஏன்னா ஒரு ஆணைப் பற்றி ஆண் எழுதினாலும் கூட ஒரு ஆணைப் பற்றிய அனுபவம் என்பது ஒரு உலகார்ந்த அனுபவமாக அவங்க எடுத்துக்கிறாங்க. universal experiance ஆக எடுத்துக்கிறாங்க. ஆனா, ஒரு பெண் வந்து பெண்ணைப் பற்றி எழுதினா, அது ஒரு குறுக்கப்பட்ட அனுபவமா போயிடறது. அது உலகத்தைப் பற்றிய அனுபவம் அல்ல. அது பெண்ணைப் பற்றியது."

"இப்ப தி.ஜானகிராமன், நிறைய பெண் பாத்திரங்களை வைத்து அருமையான பல படைப்புகள் தந்தார். ஒரு முழு சிறுகதைத் தொகுப்புல வெறும் பெண் பாத்திரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் யாருமே அது பெண்களைப் பற்றிய கதைகள்னு சொல்லல. இது தி.ஜானகிராமன் எழுதிய வாழ்க்கை பற்றிய கதைகள் என்று தான் அறியப் பட்டது. ஆண் வந்து ஆணைப் பற்றி எழுதினால், அது உலகளாவிய விஷயம். பெண் பெண்ணைப் பற்றி எழுதினா அது குறுக்கப் படவேண்டிய விஷயம்னு அவங்க நெனைக்கிறாங்க. பெண் என்பது அவங்க மனதிலேர்ந்து போறதே இல்லை. "

என்ற கருத்தை முன்னிறுத்துவது தான் புத்தகம் முழுமையுமே. ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த மிக நல்ல புத்தகம்.


அப்புறம் படித்தது "எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே" - அ.மங்கை எழுதியது. அரவாணிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் தங்களுக்குள் பின்பற்றி வரும் சடங்குகள், அவர்தம் வாழ்வியல் நிலை, வரலாறு, போராட்டங்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுவெளியீடு இது. ஒருவழியாக அரவாணிகளுக்கும் வாக்காளர் அடையாளச் சீட்டு, கடவுச்சீட்டில் புதுப் பிரிவு சேர்ப்பது, ரேஷன்கார்டு வழங்கப்படுவது, என்று ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும், இன்னும் போராட்ட நிலையில் இருக்கும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம், திருமணம் செய்து கொள்ளும் உரிமை, சொத்துரிமை, கல்வியைத் தொடர்வதற்கான உரிமை, போன்ற இன்னும் அரசு கொடுக்க வேண்டிய அங்கீகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்புகிறது இந்த வெளியீடு.


படித்து முடித்த மற்றுமொரு சிறுவெளியீடு, இரா. நடராசனின் "சுற்றுச் சூழல் பிரச்சனை, கிரீன்பீஸ் மற்றும் நாம்..". பல மாதங்களுக்கு முன்னமேயே கிரீன்பீஸ் அமைப்புக்கு என்னாலான ஆதரவைத் தரத் தொடங்கியிருந்தாலும், அவர்களது மற்றைய செயல்பாடுகள் குறித்து நான் அறிந்தவற்றைத் தவிர இன்னும் பலப்பல உண்மைகளைச் சொல்கிறது இந்த வெளியீடு. ஸ்நேகா பதிப்பகம், இன்னும் கொஞ்சம் நல்ல வெள்ளைத் தாளில் வெளியிட்டிருக்கலாம். படித்து முடிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கிரீன்பீஸ் அமைப்பினர் இந்தியாவிலும் இன்னும் பல்வேறு நாடுகளிலும் இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்களையும், செய்யாமல் விட்டுப் போன, அல்லது இன்னும் குரல் கொடுக்காமல் அமைதி காக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் இரா. நடராசன். போபால் தொடங்கி, வேலூர், திருப்பூர், டெஹரி என்று விவரமாக நான் அறியாத பல பிரச்சனைகளையும் பேசுகிறது.


கொஞ்சம் லைட் ரீடிங்காக படித்தது, மதனின் கி.மு.- கி.பி. ஏற்கனவே, பலமுறை பாட புத்தகங்களில் படித்த விஷயங்கள் தான் என்றாலும், மதன் ஸ்டைலில் வரலாற்றைச் சுவைக்கலாமே என்று ஆசையுடன் படிக்கத் தொடங்கினேன். புதிதாக பல விஷயங்களையும் கற்க முடிந்தது உண்மை தான். ஹோமோ சாபியன்ஸ் வகை மனிதர்களில் முதலில் தோன்றியது பெண்ணே என்று தற்போதைய ஆராய்ச்சி ஒன்று நிரூபித்திருப்பதாகச் சொல்லும் மதன், அந்த முதல் பெண்ணுக்கு, தானே தனித்து இனப் பெருக்கமும் செய்யும் வகையில் ஆணுறுப்புகளும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதாகக் குறிப்பிடுகிறார். இப்படித் தொடங்கிய மனித இனம், அடுத்த சில பத்திகளிலேயே "முன்னேறி", ஆண்கள் வேட்டைக்குப் போகவும், பெண்கள் குடியிருப்புகளில் இருப்பதுமாக மாறிப் போவது எப்படி என்பதை விளக்காமலே விட்டுவிட்டார் மதன். அத்துடன் அப்படி வீட்டில் இருந்த பெண் கையில் இருந்து விழுந்து முளைத்ததே நாம் செய்த முதல் விவசாயம் என்பதும் நான் அறிந்து கொண்ட புது விஷயம். இந்திய நாகரிகத்தைப் பற்றியும் கிறிஸ்து பிறந்த ஆண்டு வரையிலான விவரங்களைச் சுவைபட விளக்குகிறது புத்தகம். ஏனோ, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றிய விவரணைகள் அதிகமில்லை. கிரேக்க நாகரிகங்களைப் பற்றியும், சாக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்களைப் பற்றியும், எகிப்தில் முதன்முறையாக சூரிய கடவுளை முன்வைத்துப் பேசிய அரசனைப் பற்றியும் நான் இதுவரை அறியாத பலவிவரங்கள் இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொண்டேன். இருப்பினும் இந்திய நாகரிகம் பற்றியும், மதங்கள் தோன்றிய விதம் பற்றியும் மதன் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து அடுத்தது எழுதலாம்; இந்தத் தலைப்புகளில் பலவற்றை கி.மு. கி.பி தாண்டிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது.


கிமு.கிபி முடித்த கையோடு கிழக்குப் பதிப்பகம், முத்துராமனின் சிரிப்பு டாக்டர். என்.எஸ்.கேவைப் பற்றிய சுவையான சம்பவங்களின் தொகுப்பு. அவரது வாழ்க்கை வரலாறு என்று முழுமையாக இல்லாதது போல் தோன்றினாலும், முக்கியமான பகுதிகளனைத்தையும் தொட்டுச் செல்கிறது. கலைவாணரின் ஆரம்பகால நாடகத்துறை வாழ்க்கை, அவரது கொடைக்குணம், பகுத்தறிவு சிந்தனைகள், லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்று கிட்டத்தட்ட எல்லாமும் பேசுகிறார் ஆசிரியர். எல்லாரையும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவாணரின் முதல் மனைவியையும் மூன்றாம் மனைவியையும் நல்லவிதமாக வைத்துக் கொண்டாரா என்பதற்கான விவரணைகள் மட்டும் இந்தப் புத்தகத்தில் இல்லை. "ஒரு பெண் தன்னந்தனியாக இரவு நகைகளுடன் தெருவில் நடக்கும் நாள் வர வேண்டும்" என்று காந்தியைப் போலவே கனவு கண்டவர், மதுரத்தை ஏமாற்றித் திருமணம் செய்த விதமும் கொஞ்சம் இடிக்கிறது. அதேபோல், குடிக்கெதிராக பிரச்சாரம் செய்தாலும், அதே குடிப்பழக்கத்தில் விழுந்ததும் அவர் செய்யாமல் இருந்திருக்கலாம்.

இவற்றிற்கு இடையில் மூன்றாம் முறையாக "ஒரு புளியமரத்தின் கதையைப்" படித்துப் பார்க்க முயன்றேன். வழக்கம் போல காத்தாடி மரத் தோப்பு பூங்காவாக உருமாறுவதற்கு மேல் படிக்க முடியாமல் அடுத்த புத்தகத்திற்குத் தாவி விட்டேன். அடுத்த முறையாவது அந்தப் புத்தகத்தை முழுதும் படிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


செந்தில்குமரன் பதிவு கிளப்பிய ஆர்வத்தில், மதனின் "மனிதனும் மர்மங்களும்" வாங்கியது நான் செய்த மிகப் பெரிய தப்பு. படிக்கத் தொடங்கி, ஆரம்பத்திலேயே பயந்து போய், அப்புறமும் விடாமல் படித்து, இரவு தூக்கம் வராமல், கண்ணை மூடினாலே, ஏதோ ஒரு பறக்கும் தட்டு என் முன்னால் பறந்து வந்து நிற்பதான கற்பனையில் தூக்கம் பிடிக்காமல் தவித்தது, படுத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று பற்றி எரிந்துவிட்டால் என்னாகும் என்று வேறு தனியாக யோசிக்கத் தொடங்கியது, இதெல்லாம் இப்போ வேண்டாமே..



மர்மங்களிலிருந்து விடுபட தற்போது கையில், "மிதமான காற்றும், இசைவான கடலலையும்" - தமிழினி பதிப்பகத்தின் தமிழ்ச்செல்வன் கதைகள். படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..

12 comments:

MSV Muthu said...

பொன்ஸ்,

அவ்வளவுதான் வாங்கினீர்களா? நல்ல பதிவு. இதில் நான் எதையுமே படித்ததில்லை. அம்பையின் காட்டில் ஒரு மான் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். புளியமரத்தின் கதையையும் முழுதாகப் படிக்கவில்லை-முடியவில்லை. உங்களது புத்தகங்கள் தேர்வு வித்தியாசமாக இருக்கிறது. மிகசிறிய புத்தகங்களையும் வாங்கியிருக்கிறீர்கள். மனிதனும் மர்மங்களும் நான் விகடனில் சில பகுதிகள் (ரிப்போர்ட்டரில் வந்ததா, விகடனில் வந்ததா என்று தெரியவில்லை!) படித்திருக்கிறேன். வேலைக்காரி ஆவி பற்றி இந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். சரிதானே? பகிர்வுக்கு நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

ஆமாம் முத்து, வேலைக்காரி ஆவி என்ன, எல்லாவித ஆவிகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறார் மதன் :) ரிப்போர்ட்டரில் வந்ததாம்.

நான் வாங்கியதில் ஒரு பகுதி இது. மற்ற புத்தகங்கள் ஒவ்வொன்றாய்ப் படிக்கப் படிக்க பதிவு வரும் :)

Anonymous said...

எனக்கும் அம்பை "காட்டிலொரு மான்" மூலம் தான் பரிச்சயம். யாருன்னே தெரியாது அப்ப அவங்களை. மிகவும் ரசிச்சுப் படித்தேன்! ஆனா கதையே ஞாபகம் இல்லை! ரசிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு! :)

அம்பையோட புது புக் படிச்சுப் பாக்கணுமே அப்படின்னு ஆசைப் பட வைக்குது உங்கள் இந்தப் பதிவு!

- யெஸ்.பாலபாரதி said...

மதுரா... காட்டில் ஒரு மான் தான் அம்பையின் சமீபத்திய நூல்!
பொன்ஸ் குறிப்பிடும் நூல் தான் அம்பையின் முதல் சிறுகதை தொகுதி. இதில் தான் அவர் சிறப்பாக அறிமுகமானார்.

- யெஸ்.பாலபாரதி said...

ஆத்தா... ஆள் வச்சு அள்ளிகிட்டு போன அப்புட்டு புஸ்தகத்தையும் சொல்லாம கொஞ்சூண்டு மட்டும் சொல்லி இருக்கீங்களே!

மிச்சத்தை பத்தி எப்போ சொல்லுறதா எண்ணம்?!!

தருமி said...

மக்கள்ஸ் எவ்வளவோ வாங்குறாங்க.. என்னென்னமோ வாசிக்கிறாங்க .. பொறாமை மட்டும்தான் இங்கன இருக்கு .. என்ன பண்றது.

வாசிங்க'ம்மா ...

Anonymous said...

'எனக்கு தூக்கம் தூக்கமா வருது' னு ஒரு யானை படம் போட்ட புத்தகம் வாங்கினதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு எப்போ விமர்சனம் எழுதப் போறிங்க?. ரொம்ப ஆவலா இருக்கு :)

Anonymous said...

| இப்படித் தொடங்கிய மனித இனம், அடுத்த சில பத்திகளிலேயே "முன்னேறி", ஆண்கள் வேட்டைக்குப் போகவும், பெண்கள் குடியிருப்புகளில் இருப்பதுமாக மாறிப் போவது எப்படி என்பதை விளக்காமலே விட்டுவிட்டார் மதன். |

இதைப்பற்றி டாக்டர் ஷாலினி தோழி.காம்-இல் மிக விரிவாக, சுவையாக தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

வெற்றி said...

பொன்ஸ்,
அடி பாவி,:))[சும்மா] நீங்கள் புத்தகக் கண்காட்ட்சிக்கெல்லாம் போய் வாறீங்களா?!
நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு போறது எனக்குத் தெரியாமல் போச்சே...
புத்தகக் கண்காட்சியில் நான் கேட்ட புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கி அனுப்பிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி!!!:)))

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற வாக்கை மறந்து விட்டீர்கள் போலும், huh?

சரி...சரீரீரீ... நல்லா இருங்கோ...:))
வாழ்க! வளர்க! :))[சும்மா, OK. சிரிப்பான் எல்லாம் போட்டாச்சு. இனிச் சண்டைக்கு வரக்குடாது, சரியா?]

MSV Muthu said...

பொன்ஸ்,

ஆமாம் ரிப்போர்ட்டர் முதலில் குமுதத்துடன் இலவச இணைப்பாக வந்த பொழுது இந்த தொடர் அதில் வெளிவந்தது. பிறகு சில மாதங்களில் அது தனி பத்திரிக்கையாக வந்த பொழுதும் தொடர் தொடர்ந்தது. ரிப்போர்டர் famous ஆனதற்கு இந்த தொடரும் ஒரு காரணம் என நினைக்கிறேன். என்னுடைய சமீபத்திய சிறுகதைக்கு(!?) inspiration (!?), அன்று இந்த தொடரில் படித்த வேலைக்காரி ஆவி பற்றிய செய்தி தான். :))(யாராவது உன்கிட்ட கேட்டாங்களான்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது!)

பொன்ஸ்~~Poorna said...

மதுரா,
எது எப்போ வந்தது என்று எனக்குத் தெரியாதுப்பா... யாழிசை தாத்தா சொல்லிருக்காரு பாருங்க..

பாலா,
உஷ்.. கொஞ்ச கொஞ்சமா எழுதுவோம், சரியா?

தருமி,
நீங்க என்ன வாங்கினீங்க? உங்க லிஸ்ட்?

பொன்வண்டு,
தூக்கம் தூக்கமா வருது புத்தகத்தை விமர்சனம் செய்தால், கதை மொத்தமா எழுத வேண்டியதாகிடும். அது நாட் அலவுட் இல்லையா :))

அனானி,
தகவலுக்கு நன்றி. முடிந்தால் படிக்கிறேன்.

வெற்றி,
புத்தகக் கண்காட்சி போனதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டேனே. நீங்க இன்னும் புத்தகப் பட்டியல் அனுப்பவே இல்லையே! அத்தோட, நீங்க குறிப்பிடும் விதமான புத்தகங்களுடன் எனக்கு அவ்வளவா பரிச்சயமில்லைங்கிறது அடுத்த காரணம். சங்க காலப் படைப்பு படிச்சதெல்லாம் பள்ளிக்கூடத்தோட போச்சு :(

முத்து,
ஆகா, அது ஆவி கதையா, நல்ல வேளை சொன்னீங்களே! மதன் படிச்சதுக்கே வீட்ல நல்ல திட்டு, உங்க ஆவி தொடரையும் படிக்கிறதா இருந்தேன், படிச்சிருந்தா நல்லா வாங்கிக் கட்டி இருப்பேன் :)). எல்லாம் முடிஞ்சு வலைப்பக்கத்தை, நல்லா மந்திரிச்சதுக்கப்புறம் சொல்லுங்க வந்து பார்க்கிறேன் ;)

சாணக்கியன் said...

// உடனே தொலைக்காட்சி சீரியல் மாதிரி ஆண்தான் வில்லனானு கேட்கக்கூடாது.//

ஏங்க எந்த சீரியல்ல வில்லன் இருக்கன். பத்துக்கு ஒன்பது பேர் வில்லிங்கதானே இருக்காங்க...