Tuesday, January 09, 2007

The Fountain Head - Ayn Rand

அயன் ராண்ட் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, The Fountain Head புத்தகத்தின் மீதான ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் சமீபத்தைய பதிவர் சந்திப்பின் போது மா.சிவகுமார் மூலம் புத்தகமும் கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாவலின் வாசிப்பனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

கடைசிவரை அதீத ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவே பயணிக்கும் கதைபேசும் சில தத்துவங்களுடன் முழுமையாக ஒப்ப முடியாவிட்டாலும் பொதுவில் நல்ல வாசிப்பனுபவம்தான்.

ஹோவார்ட் ரோர்க்(Howard Roark) என்ற ஒட்டுமொத்த மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த விரும்பும் மனிதனைப் பற்றியது கதை இது. உலகில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது மனிதன் தான்; கடவுளின் மிக அற்புத படைப்பு மனிதன் மட்டுமே என்று முழுமனதோடு நம்பும் கதாநாயகன் ரோர்க். எல்ஸ்வோர்த் மோங்க்டன் டூஹி(Ellsworth Monkton Toohey) நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பத்தி எழுத்தாளர். தன் எழுத்துக்களால் நரியைப் பரியாகவும் பரியை நரியாகவும் ஆக்கக் கூடிய ஒரு விமர்சகர். அதே சமயம் தனக்குப் பிடிக்காதவர்களை மொத்தமாக அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய மக்கள் சக்தி தன் பின்னால் இருப்பதாக நம்புபவர்.

உண்மையான, நேர்மையான, பழுதில்லா திறமைக்கும்(ரோர்க்) வெற்று மக்கள் சக்திக்கும் (டூஹி) இடையிலான கண்ணாம்பூச்சி விளையாட்டே ஃபவுண்டன் ஹெட்.



ரோர்க் ஒரு கட்டிடக் கலைஞன். ஸ்டேன்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், போதிக்கப் பட்ட "பழைய முறைகளைப் பின்பற்றவே மாட்டேன்" என்று வணங்காமுடியாக நின்று பட்டம் பெறாமல் வெளியேறுகிறான் ரோர்க். அதே சமயம், அவன் வாழ்ந்த அதே வீட்டில் இருந்த பீட்டர் கீட்டிங்(Peter Keating), ஸ்டேன்டனின் நிகரற்ற முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆர்க்கிடெக்டாக வெளியேறுகிறான்.

ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன். ஆகவே, அவனை போன்றே மார்டனிஸ்டான ஹென்றி காமரூனிடம்(Henry Camaron) உதவியாளனாகச் சேருகிறான்.

காமரூன் தன் ஆரம்ப காலத்தில், அற்புதமான புதுமையான வீடுகளுக்காகவும் வானை எட்டும் கட்டிடங்களுக்காகவும் பெருமை பெற்றவர். ஆனால், யாருக்காகவும் தன் கட்டிடங்களில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக நிற்பவர், ரோர்கைப் போலவே. மற்றவர்களுக்கான மாற்றத்தையும் வெறுத்து, அவ்வப்போது வாடிக்கையாளர்கள் மீதும் கோபப்பட்டு, தன் பணிக்காலத்தின் கடைசியில், உலகம் முழுவதையும் பகையாக்கிக் கொண்ட ஒரு தோல்வியாளர் - மக்களின் பார்வையில். பீட்டர் கீட்டிங், காமரூனிடமே ஆரம்பத்தில் வேலை கற்று அதன் பின் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும், தலைசிறந்த கட்டிடக் கலைஞரான கை ப்ராங்கனிடம்(Guy Francon) சேருகிறான்.

இருவருடைய முதல் கட்டிடம் முதற்கொண்டு இவர்களிடையே உள்ள வளர்ச்சி வித்தியாசங்களை முன்வைத்து நகர்கிறது கதை. ஒவ்வொரு மனிதருக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொண்டே வேலை செய்யும் கீட்டிங், உயரங்களுக்குப் போகிறான். மிகக் குறைந்த காலத்தில், ப்ராங்கனின் நிறுவனத்தில் பார்ட்னராகி, அவனுடைய நிறுவனத்தின் முழு நிர்வாகியாகவும் உயர்ந்து, அப்போதைய அமெரிக்காவின் தலைசிறந்த கட்டுமானத்துறை வல்லுனராகவும் பரிணமிக்கிறான்.

காமரூனின் ஓய்வுக்குப் பின் ரோர்க், கீட்டிங்கிடமே வெறும் வரைபடம் எழுதுபவனாகச் சேர்ந்து, அங்கு கிடைக்கும் வாய்ப்பில் தன் முதல் கட்டிடத்தைக் கட்டத் துவங்குகிறான். முதல் இரண்டு கட்டிடங்களுக்குப் பின் தனக்கான இடம் என்று ஒன்று இல்லாமல் போக, சமரசங்களை விரும்பாமல் எங்கெங்கோ வேலை செய்து, ஒரு கட்டத்தில் கல்லுடைக்கும் சுரங்கங்களில் கூட வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

ரோர்கின் சில கட்டிடங்களைப் பார்த்த ஓரிருவர் அவனைத் தேடி வந்து வேலை கொடுத்த பின்னர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வாழ்க்கை முறை மாற, இறுதியாக ஸ்டோர்டார்ட்(Stoddard) என்பவர் எல்லா மதங்களுக்கும் பொதுவான கோயிலொன்றைக் கட்ட வேண்டி ரோர்க்கிடம் வந்து சேருகிறார். உலகின் எந்த மதத்தின் கோயிலையும் படியெடுக்காத, அதே சமயம் மனிதனின் ஆழ்மன நம்பிக்கையை, அல்லது, மனசாட்சியைப் பிரதிபலிக்கும் கோயிலொன்றை ரோர்க் கட்டித் தருகிறான்.

கட்டிடக்கலை விமர்சகரான டூஹி, கீட்டிங்கை முன்னிலைப்படுத்தி, ரோர்க்கைப் புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறான். பல்வேறு வகையான கலைஞர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு மிக்க டூஹி, ரோர்க்கை வேண்டுமென்றே புறக்கணிப்பதிலும், அவனுடைய இடத்தில் கீட்டிங்கை முன்னிறுத்தவதிலும் மிகத் தீவிரமாக உள்ளான். ஸ்டோடார்டின் கோயிலை, அது கோயில் என்ற கட்டிடத்தின் மாதிரியில் சேராது என்று சாட்சி சொல்லி ரோர்க்கின் மிகப் பெரிய வாழ்க்கைச் சரிவை உருவாக்குவதில் டூஹி, கீட்டிங் முதலானோர் முன்னணியில் நிற்கின்றனர்.

ரோர்க்கைப் போலவே வணங்காமுடியாகவும், சமரசங்களை விரும்பாத பத்திரிக்கையாளராகவும் வரும் ரோர்கின் காதலி டோமினிக் ப்ராங்கன்(Dominique Francon), இந்தக் கட்டத்தில் உலகின் மீது கோபம்கொண்டு, பழி வாங்குதலாக பீட்டர் கீட்டிங்கை மணந்து ரோர்கின் வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறாள்.

ரோர்க் தன் சக்தியை உலகுக்கு எப்படி நிரூபிக்கிறான், டோமினிக்கின் பழிவாங்குதல் என்ன ஆகிறது என்று போகிறது கதை.

ரோர்க், தனிமனித ஒழுக்கம் நிரம்பியவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். வஞ்சகத்தாலும் வீண் புகழ்ச்சியாலும் முன்னேறத் துடிக்கும் பீட்டர் கீட்டிங் போலல்லாமல், தன் வேலைக்கேற்ற உயர்வையே விரும்புபவன்; டூஹி போல் பிடிக்காதவரைக் கெடுக்க நினைப்பதிலிருந்து காலி டப்பாக்களைக் கூட பிடித்திருந்தால், 'அற்புதக் கலைஞர்' என்று உயர்த்தி விடுவது வரை செய்வதை வெறுப்பவன் ரோர்க்.

ஒரு விதத்தின் எல்லா நாவல் கதாநாயகர்கள் போலவும், "வாழு வாழவிடு" கொள்கையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் ரோர்க். ஆனால், வாடிக்கையாளரின் வசதிக்காக, திருப்திக்காக கூட தன் கட்டிட அமைப்பில் ஒரு சின்ன மாறுதல் கூட செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போதும், வரைந்து கொடுத்துவிட்ட தன் கட்டிட அமைப்பைக் கொஞ்சமே சிதைத்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக, கட்டிடத்தையே தகர்க்க விரும்பும் போதும் ஏனோ, கொஞ்சம் அதீதமான ஒரு கதாபாத்திரமாகத் தோன்றுகிறது.

ரோர்க்கின் கண்களில் அடுத்தவருக்கான பரிவோ, பாசமோ, ஏன், அடுத்த மனிதர் ஒருவர் எதிரில் இருக்கிறார் என்ற அங்கீகாரமோ கூட இருப்பதில்லை என்கிறான் பீட்டர் கீட்டிங். சக மனிதரை அங்கீகரிக்காத, "நான்" தான் ரோர்க்கின் குணம் என்றால், அதுவும் கொஞ்சம் இடறுகிறது.

"என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டேன்," என்ற ரோர்க்கை விட, அந்த மனிதர்களின் பிரச்சனைகளை அவர்களுக்கே புரியவைக்க உலகத்திற்கெதிராக தனியொருத்தியாக போர் தொடுக்கும் டோமினிக் ஏனோ எனக்குப் பிடித்த பாத்திரமாகிப் போய்விட்டாள். கீட்டிங்கின் தனித்தன்மையற்ற நினைவுகள், சுயநலம், போன்றவற்றை அவனே உணரச் செய்வதிலாகட்டும், தான் வேலை செய்த பத்திரிக்கையின் முதலாளி வையனாண்ட்டுக்கு(Wynand) தனக்கே நம்பிக்கையே இல்லாத விசயங்களைப் பதிப்பித்து பணம் செய்யும் அவருடைய போலித் தன்மையைப் புரியவைப்பதிலாகட்டும், டோமினிக் சரியான போராளியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாள்.

"ஒவ்வொரு மனிதனும் இந்த உலகின் கதாநாயகன். தன்னுடைய மகிழ்ச்சியே அவன் வாழ்க்கையின் காரணம். அவன் படைப்புத் திறனே அவனுடைய மிக உயர்ந்த வேலை;" என்பதே ஆப்ஜக்டிவிசம்(Objectivism) என்ற அயன் ராண்டின் புதிய சித்தாந்தத்தின் கூறு. இந்த சித்தாந்தத்தை முன்னிறுத்துவதாகவே பவுண்டன்ஹெட்டும், அவருடைய மற்ற படைப்புகளும் அமைந்திருக்கின்றன.

தியாகமும் சமூக மகிழ்ச்சியுமே மனிதனின் முக்கிய வாழ்க்கைப் பயன் என்று போதித்து வளர்க்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக் காரணம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது. அடுத்தவருக்கு எந்தப் பிரச்சனையும் உருவாக்காத தனி மனித மகிழ்ச்சியே வாழ்க்கையின் காரணம் என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும், சமூகம் என்பது மனிதர்களின் கூட்டணி என்பதையே மறுக்கும் ஆப்ஜக்டிவிசம் முழுமையாக ஒப்புக் கொள்ளும்படி இல்லை.

படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ரோர்க் போலவோ, டோமினிக் போலவோ ஆகும் ஆசை ஏற்படுவது உண்மை தான். ஏனெனில், கதையில் அடுத்தவரைத் தொல்லை செய்யாத பாத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பவை இவை போன்ற ஆப்ஜக்டிவிச பாத்திரங்கள் மட்டும் தான்.

டூஹி, கீட்டிங் போன்ற அடுத்தவரின் இடத்தைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடிய மனிதர்கள் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்பவன் என்ற முறையிலும் ரோர்க்கின் கதாபாத்திரம் மனம் கவர்வதாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படித்த நாவல் என்றாலும் ஏதோ ஒரு விதத்தில், ஆப்ஜக்டிவிசக் கூறுகளை ஒப்புக் கொள்ள முடியாமல் போனதால், நிறைவுபெறாத வாசிப்பனுபவமாகவே போய்விட்டது.

25 comments:

Anonymous said...

Nice review !

✪சிந்தாநதி said...

உங்கள் பதிவு புத்தகத்தை நேரடியாக வாசித்த அனுபவத்தையே தந்து விட்டது. நன்றி

பங்காளி... said...

புத்தகத்தை ஊன்றி படிப்பதற்கும்....பின் அனுபவித்து விமரிசனம் எழுதுவதற்கும் நேரமிருக்கிற அதிர்ஷ்டசாலி நீங்கள்....

அனுபவியுங்கள்........

புத்தாண்டு வாழ்த்துக்கள் பொன்ஸ்....

பொன்ஸ்~~Poorna said...

நன்றி அனானி, சிந்தாநதி..

//அனுபவியுங்கள்..//
பங்காளி, இதுக்கேவா?!! இன்னும் ரெண்டு மூணு எழுதலாம்னு இருந்தேனே :)))

மணியன் said...

நானும் இந்த புத்தகத்தைப் படித்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்று இவ்வளவு ஆழ்ந்து படிக்கவில்லை என்பதை இன்று உணர்கிறேன்.
பங்காளி சொல்வதுபோல உங்களுக்கு பொறுமையும் நேரமும் வாய்த்திருக்கிறது :)

Anonymous said...

Now you can try reading few pages at a time and take time to digest what you read. I bet this will be a different experience than reading the whole book at once. Other science fiction novels can be read in one sitting; not Ayn Rand books.

Try her other books - We the Living, Atlas Shrugged. You may like 'We the Living'.

I personally like Roark's character as he is fighting for his believes against the world. But Dominique, her ideology is self destruction, which I don't approve of.

(Sorry for this English comment in a Tamizh post.)

-Bala

கப்பி | Kappi said...

நல்ல பதிவு பொன்ஸ்!

ஈ-வடிவில் வாசிக்க ஆரம்பித்து பாதியில் அது ஒத்துவராமல் புத்தகமாக வாங்க வேண்டுமென நீண்ண்ண்ண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்....
கூடிய சீக்கிரம்......

பொன்ஸ்~~Poorna said...

மணியன், நன்றி :)

Bala, மீண்டும் படிப்பதா!! அது சரி.. கொஞ்ச நாள் போகட்டும்.. Atlas Shrugged எப்படியும் படிக்க நினைத்திருந்தேன், We the Living உம் சேர்கிறதா.. ம்ம்...

கப்பி, ம்ம்.. சீக்கிரம் படிக்கத் தொடங்குங்க.. ஈ புத்தகத்தை விட பேப்பர் வடிவம் இன்னும் இடையூறில்லாமல் படிக்கலாம் :)

Chenthil said...

பொன்ஸ், We the Living படித்துப் பாருங்கள். Objectivism தத்துவத்தின் ஆரம்ப கட்ட நேரத்தில் எழுதப் பட்டது. தத்துவத்தை விட கதைக்கு அதிக முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். Atlas Shrugged அதற்கு நேர் எதிர். Ayn Rand புத்தகங்கள் படிப்பவரிடம் கண்டிப்பாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் - ஏதாவது ஒரு விதத்தில்.

நல்ல விமரிசனம்

அரை பிளேடு said...

ஆகா. தெளிவான கதைக் குறிப்பு...

தாங்ஸ்..

அப்ப கூடிய சீக்கிரத்துல அட்லாஸ் ஷ்ரக்டு வையும் பொன்ஸ் பக்கங்களில் பார்க்கலாம்னு சொல்லுங்க...

:))

சல்மான் said...

pons,

i think I posted a comment :)

பொன்ஸ்~~Poorna said...

chenthil,
Atlas Shrugged ஆனாலும் பெரிசா இருக்கே!! Fountain Head படிக்கவே எனக்கு பத்து நாளாச்சு.. மெதுவா வாங்கறேன்..

அரைபிளேடு,
வரும், வரலாம்.. வர வாய்ப்பிருக்கு ;)

சல்மான்,
உங்க பின்னூட்டம் வரலைங்களே.. கொஞ்சம், சிரமம் பார்க்காம திரும்பவும் எழுதிடறீங்களா?

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

ரோர்க் போல், டொமினிக் போல யாருமே உலகத்தில் இருக்க முடியாது. கீடிங்குகளும், அவன் அம்மா போன்றவர்களும் நிறைந்த உலகம் இது. அயன்ராண்டின் வெற்றி அப்படி வாழும் நமக்கு உரசிப் பார்க்க உரைகல்லாக ரோர்க்கை நிறுத்தியதுதான்.

ரோர்க் சக மனிதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது முற்றிலும் சரி கிடையாது. ஒரு மல்லோரியையும், ஆஸ்டன் கெல்லரையும் அவனுக்கு மதிக்கத் தெரியும், அவர்களும் அவனை மதிக்கிறார்கள். பீட்டர் கீட்டிங் ஏன் வெறுமையாக உணர்கிறான் என்றால் பீட்டருக்குள் ஒன்றுமே இல்லை. அவன் வாழ்வது மற்றவர்களுக்காக, மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக மட்டும். அந்த வழியில் வெறுமையும் சோகமும்தான் மிஞ்சும் என்பது இந்தக் கதையின் செய்தி.

எல்ஸ்வெரத் தூஹி, அப்படி நம்மை வெற்று வாழ்க்கைக்குத் தூண்டி விடும் கோட்பாடுகளின் வடிவம்.

பாலா சொல்வது போல, கதையாகப் படிக்காமல், நேரம் கிடைக்கும் போது இங்கொன்றும் அங்கொன்றுமாக பக்கங்களை மேய்ந்து பாருங்கள். அயன் ராண்டின் முதல் நாவல் வீ த லிவிங் அதிக கதை அம்சத்துக்காகப் படிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை ஃபவுண்டன்ஹெட்தான் அவரது உச்சப் படைப்பு. சீக்கிரத்தில் நானும் ஒரு பதிவு போடுகிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

தருமி said...

//நானும் இந்த புத்தகத்தைப் படித்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்று இவ்வளவு ஆழ்ந்து படிக்கவில்லை என்பதை இன்று உணர்கிறேன்.
:)//

கொஞ்சூண்டு இதோடு ஒரு வார்த்தை சேர்த்துக்கிறேன்."பங்காளி சொல்வதுபோல உங்களுக்கு பொறுமையும் நேரமும் மசாலாவும்வாய்த்திருக்கிறது "

உங்க பதில் மட்டும்தான் கலர்ல வரணுமா? அது எப்படி?

பொன்ஸ்~~Poorna said...

சிவகுமார்,
//அயன்ராண்டின் வெற்றி அப்படி வாழும் நமக்கு உரசிப் பார்க்க உரைகல்லாக ரோர்க்கை நிறுத்தியதுதான். //
உரசிப் பார்க்க உதவுவது உண்மை தான். ஆனால், அவர்களைப் போன்றவர்களைத் தவிர மற்றவர்களிடம் நட்பு பாராட்டமாட்டேன் என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.

//ஒரு மல்லோரியையும், ஆஸ்டன் கெல்லரையும் அவனுக்கு மதிக்கத் தெரியும், அவர்களும் அவனை மதிக்கிறார்கள்.//
அதே, அவன் எதிர்பார்க்கும் ஐடியலிஸ்ட்களை மட்டுமே அவன் விரும்புகிறான். மற்றபடி, நீங்கள் சொல்வது போல் வெறுமையான பீட்டர் கீட்டிங்கையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை தான். வையனாண்ட் போல் ஏதேனும் ஒரு கட்டத்தில் மற்றவர்களுடன் compromise தேவையாகத் தான் இருக்கிறது. ஒரு டொமினிக் இல்லை என்றால், நமது ஹீரோவுக்குத் துணைவியாகக் கூட யாரும் கிடைத்திருக்க மாட்டார்கள்.
ஏதேனும் ஒரு கட்டத்தில் மைக் போன்றவர்கள் கூட சமரசத்திற்கு வருகிறார்கள் என்றே நம்புகிறேன். மல்லோரி, ரோர்க், யாருடனும் சமரசத்திற்கே வரமாட்டேன் என்று இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. கொஞ்ச காலங்களுக்கு முன்னால் இதைப் படித்திருந்தால் இப்படி நினைத்திருக்க மாட்டேனோ என்னவோ..

கடைசியாக தன் கட்டிடத்தை சமரசம் செய்யாமல் இடித்துத் தள்ளுவதைக் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள முடியவில்லை :(

உங்கள் பார்வையையும் பதியுங்கள், அதைப் பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை படித்துப் பார்க்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//மசாலாவும்//

என்னது மசாலாவா? என்ன சொல்றீங்க தருமி? :) சரி, மதுரைக்காரய்ங்கன்னு ஒரு பதிவு போட்டிருந்தேனே, அதுக்குப் பிக ஒண்ணு செய்யலாம்ல? ;)

//உங்க பதில் மட்டும்தான் கலர்ல வரணுமா? அது எப்படி? //
பீட்டா மாயம். பொங்கலை ஒட்டி கோயிந்து வருகிறார், இதை விளக்க, புதுப் பொலிவுடன் ;)

Anonymous said...

அயன் இராண்டின் புதினங்களும் நாயகர்களும் எதைச் சொல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிருக்க, அவர் பெயரை கேட்கும்போது, ஒரு விதமான சோர்வும் பயமுமே எனக்கு ஏற்படுகிறது. நாம் நம்மைப் பற்றியும் சக மனிதர்களுடனான எமது புரிந்துணர்வுகள் பற்றியும் கொண்டிருக்கும்/ கொண்டிருக்க விரும்பும் நம்பிக்கைகளைத் தகர்ப்பதாக அவரின் கருத்துகள் இருக்கின்றதுதான் காரணமோ தெரியவில்லை. (அமெரிக்காவின் நிதி தொடர்பான முடிவுகளை நெடுங்காலம் எடுத்துவந்த அலன் கிறீன்ஸ்பான் தன் இளமைக்காலத்திலே இராண்டின் கருத்துகளிலே ஈர்க்கப்பட்டிருந்தது, அவரது நிதித்துறை தொடர்பான செயற்பாடுகளிலும் தெறித்ததெனக் கருத்தும் நிலவியது). சில ஆண்டுகளின் முன்னே அவர் பற்றிப் புகழ் பாடும் விவரணம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மொழியே தெரியாமல், அமெரிக்காவிலே வந்திறங்கி, இந்நிலைக்கு உயர்ந்தவர்கள் நான் அறிய இரண்டு பேர்தான்; அம்மா அயன் இராண்ட்; அண்ணா ஆர்னோண்டு.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்திபோலவே, தான் கூறிய தத்துவத்தினை நடைமுறையிலே -இரகசியமாகவேனும்- செயற்படுத்தத் தவறியதாக அயன் இராண்டிலே அவரது "உறவுகள்" குறித்துக் குற்றச்சாட்டுகளுண்டு. ஆனால், ஒன்று; அமெரிக்காவிலே தற்போது கொடிகட்டும் மதவாதமுதலாளித்துவத்துக்கு, அயன் இராண்டின் கடவுளற்ற பொருள்சார்பார்வையே மேல்.

Anonymous said...

Well,

You can see many ppl like ROARK in this world. Apparently, Every man who reads the book wants to be a ROARK bcos it is "the Idealistic" life. And ofcourse I had came across and worked with people who are worser(in a good way, who never compromises) than Roark.I reckon, Ayn had not exaggerated and she just made up a real life hero as hero.

I dont want to reveal the name but you can find out yourself. A most celebrated and costliest Architect of America was the story.You can dig by yourself.

But it is sure that Dominique was the prominent character in this novel bcos you wont find many women like her in this world.

- A Disgraced soul

நண்பன் said...

வாசித்துப் பார் என்று நண்பர் ஒருவர் கல்லூரி காலத்தில் கொடுத்தார். 50 /60 பக்கங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. வாசித்து விட்டேன் என்று சொல்லி கொடுத்து விட்டேன்.

பின்னர் சில வருடங்கள் கழிந்த பின் எப்படியும் வாசித்து விடுவது என்று புத்தகத்தை வாங்கி விட்டேன். மீண்டும் அதே கதை. நூறு பக்கங்களைத் தாண்டவில்லை.

அப்பொழுதெல்லாம் இலக்கியங்கள் என்பதை விட, pulp fictions எனப்படும் நச்சு இலக்கியங்களே பெரிதும் கவர்ந்தது. இன்று மாறிவிட்டது ரசனையும், வாசிப்பும்.

இப்பொழுது வாசிக்க இயலும் என்றாலும், புத்தகம் கையில் இல்லை.

வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக நினைவில் நிற்கின்றது.

Vetri Thirumalai said...

Hi Ponns,
I read this novel first in 2004 and was quietly overwhelmed. Till today i read this and ATLAS SHRUGGED whenever i get dejected or happy. Even i thougt of putting a blog but as i was not having enough time and other contraints couldnt to so.

In my view, this one of the best novels(ATLAS SHRUGGED ALSO) within the novels what i have read. It makes you think and it gives you a different perspective which all others has dared to give and in a sense this something similar to what J.K and Rajneesh has preached. Even though i cant admire each and every part of the novel still as a whole it clearly ahead of the times.

Central theme is, human mind is great, dont waste it and be happy always. Its against all pretensions and slavery. I loved the idea of earning the living without explioiting others. If you a you want a house or car becuase of your need its ok but if u want buy that to create envy for others that means its useless. This is what Ayn rand is preaching. Intead of living in other peoples mind live for yourself truly.

Peter keating character is such, he doesnt aspire to be a great architect and he wants people to think that he is a great architect. This quality affects him in all his activities. And in a way this is what our majority of the population is doing. Even in the organisations we could see many like this, who doesnt feel ashame to claim the credit of someone else's achievement. Roark like to really achieve something but doesnt really cares whether other appreciate or not, but still others will be eventually ending up using his achievement.

Not only here almost in every country indiviual always like to go with the majority eventhough he feels personally against that. Ayn rand feels that this is wrong as it may end up in disaster.

The highpoint of this novel is Roark's courtroom speech in the climax. If someone could get an ecopy and put that thing in net it would be great.

I agree that, its tough to live like roark but i bet many of us would long to live like him if given a chance.

ரவி said...

ரிவ்யூ அருமை !! கலக்கல்...இதுபோன்ற நாவல்களை யாராவது தமிழ்படுத்தி கொடுத்தால் அள்ளிக்குவேன் நான்...

ஹாட்லி சேஸ் நாவல்களின் தமிழாக்கம் ஒரு மூனு நாவல் பெங்களூர் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.

இவரோட நாவல் ஏதும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கா ?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பொன்ஸ்,

நல்ல அலசல். சுவாரசியமான பின்னூட்டங்களும் இடுகைக்கு வலுச்சேர்க்கின்றன.

பள்ளிக்கூடத்தில் படித்த, பிடித்த புத்தகம். மறுபடியும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கிளப்பிவிட்டீர்கள். முக்கியமாக, இந்தச் சித்தாந்தங்கள் மற்றும் விவாதங்களில் எவையெவை ஈர்க்கின்றன என்று பார்க்கவாவது படிக்கலாமென்றிருக்கிறேன். பார்ப்போம்.

இடுகைக்கு நன்றி பொன்ஸ்.

-மதி

kandasami said...

hai pons nice to see a guy writing about "Fountain head " . i am not accepting ur opinion .it all about a creator (Howard Roark) . who can give anything for his creativity why cant he destory a building due to some modification that he cannot accept bcz it affects it integrity . i dont read blogs accidently i saw ur review abt fountain head it makes me to give reply . nice work

bye
kandasami

kandaraja@gmail.com

Anonymous said...

hai pons
nice to see a guy writing review abt "Fountain head". i am not accepting ur opinion . this book is all abt a creater (Howard roark) and a world against him . he can give anything to create a new idea if a small modification affect the integrity of his building i dont think that one is wrong . i dont read blogs accidently i found ur review abt this book it makes me to reply that much i love this book . how u read this one in 10 days
bye
kandasami

kandaraja@gmail.com

பாரதி தம்பி said...

இந்த மாதிரி இங்லீஸ் புத்தகமெல்லாம் வாசிக்க தருமி அய்யா சொன்ன மாதிரி எனக்கு மண்டையில மசாலா இல்லீங்க. யாராது தமிழுக்கு மொழி பெயர்த்தாங்கன்னா, வாங்கி வாசிக்கலாம்.