Tuesday, September 19, 2006

யானையால் யானை காத்தற்று

பொதுவாக எங்கே யானை(ப்படம்) இருந்தாலும் என்னை அழைத்துக் காட்டுவது என் வீட்டினர் வழக்கம், நமக்கு இந்த யானை பூனை எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குமே அதான்..

அது போலவே, இந்த ஞாயிற்றுக் கிழமை அம்மா என்னை அழைத்து "ஹிந்துவில் பிங்க் யானை போட்டிருக்கான் பாரு" என்று காட்டினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு கண்காட்சிக்காக, யானையை இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். கண்காட்சி நடக்கும் வரவேற்பறையின் அதே நிறத்திலான இந்த வண்ணங்களுக்கிடையில் யானை மறைந்துவிடுகிறது. "இந்த அறையில் உள்ள யானையை எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையோ அது போல் தான் உலகின் பல்வேறு பெரிய பிரச்சனைகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்கள் வரவேற்பறையே உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்னும் பெரிய உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தத்துவத்தை உணர்த்தத் தான் தாய் என்ற பெயரிலான அந்த இந்திய யானை இப்படி பெயின்டைப் பூசிக் கொண்டு நிற்கிறதாம்!



இதைப் படித்த போது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இருக்கவில்லை. "சுற்றுச் சூழல் பாதுகாப்பை உணர்த்த இவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லையாமா?" என்று அப்போதே அம்மாவைக் கேட்டேன்.



இந்தியாவிலிருந்து ஏற்கனவே புலம் பெயர்ந்து, தனக்கு வசதியான தட்பவெப்ப நிலைகளையும் மலை, காடு முதலிய இயற்கை நண்பர்களையும் விட்டுவிட்டு வேறு கண்டத்துக்குப் போய் அங்கே கட்டுப்பட்டுக் கிடப்பதிலேயே யானைகள் தம் இயல்பையும் சுதந்திரத்தையும் இழந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை என்று சொல்லப்பட்ட செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் இருந்த யானைகளே மிகவும் வருத்தமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. கோயில் யானைகளைப் பார்க்கும்போதே அந்த வருத்தம் ஏற்படுவதுண்டு..

இந்த அழகில், 38 வயதான அந்த யானையை நிற்கவைத்து, மக்களுக்கே வெயில் அதிகம் சூடாகத் தெரியும் தட்பவெப்ப நிலையில், என்னதான் ஆபத்தில்லாத வண்ணம் என்று இவர்கள் சொன்னாலும், அந்த வண்ணத்தை அடித்து, அதன் இயல்பில் இல்லாமல் ஒரு இடத்தில் அதிகம் ஆடாமல் நிற்கவைத்து, - கொடுமைப்படுத்துவதை யாரும் கேட்கக் கூட மாட்டார்களா என்று தோன்றியது.

இன்றைய செய்தி படித்த போது ஒரு மகிழ்ச்சி. லாஸ் ஏஞ்சிலீஸின் விலங்கு சேவை நிறுவனத்தின் தலைவரான எட் போக்கின் தலையீட்டால், இன்றோடு, அந்த யானையின் மீது தடவிய பெயின்டை மொத்தமாகக் கழுவி விட்டு, குழந்தைகள் பயன்படுத்து நீர் அடிப்படையிலான வண்ணங்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.


கலர் இல்லாத யானையின் போட்டோவும் காணக் கிடைத்தது.

(ஹோலி விளையாடி விட்டு வந்தவன் மாதிரி காதில் இன்னமும் வண்ணம் இருப்பதைப் பாருங்கள்! )

யானை இருப்பதைக் கண்டுபிடித்த ஒரு பார்வையாளர் சொல்வது போல், "யானைக்கு வண்ணம் கொடுத்ததைப் பற்றித் தவறேதும் இல்லை. ஆனால், அவனிடம்(அந்த யானையிடம்) அதற்குமுன் அவர்கள் வண்ணம் பூச அனுமதி வாங்கவில்லை. அது தான் மிகப் பெரிய தவறு"


மூன்று மாதத்திற்கு முன்னால், அதே ஊரின் மிருகக் காட்சி சாலையில் இருந்த கீதா(பக்கத்தில் உள்ள படம்) இறந்து போனது தான் மக்களையும் "தாய்" மீது கொஞ்சம் அனுதாபப் பார்வை வீசவைத்திருக்கிறது. போகட்டும், ஒரு இழப்புக்குப் பின்னாவது மற்றொரு யானையைக் காப்பாற்றினார்களே!


செய்திகள், படம்: Reuters , People pretty pissed about Banksy's painted pachyderm ,
http://blogging.la/archives/2006/09/nuditai.phtml#comments

26 comments:

துளசி கோபால் said...

ரொம்ப நாளைக்கப்புறம் 'யானை' பதிவு பார்த்தேன்.

பாவம் குழந்தை. இந்த மனுஷப்பிசாசுகள் செய்யற அட்டகாசம் தாங்கலைம்மா(-:

ஆவி அம்மணி said...

//இந்த மனுஷப்பிசாசுகள் செய்யற அட்டகாசம் தாங்கலைம்மா//

என்ன மனுஷப் பிசாசுகளா...!.....?

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பதிவு பொன்ஸ்...

எனது மகளுடய யானை பொம்மை பார்த்ததும் உங்கள் நினைவு வந்தது என்னமோ உண்மை... தவறாக எடுத்து கொள்ளாதிர்கள். அது என்ன அத்துணை காதல் தங்களுக்கு மிருகங்களிடம்?.

G.Ragavan said...

அடப்பாவிங்களா! இதெல்லாம் கொடுமை....இந்தத் தப்புக்குத் தண்டனையா யானைக்குப் பல் விளக்கிக் குளப்பாட்டி காலைக்கடன்களை முடிக்க வைக்கிற வேலை தரனும்.

பொன்ஸ்~~Poorna said...

துளசிக்கா,
//இந்த மனுஷப்பிசாசுகள் செய்யற அட்டகாசம் தாங்கலைம்மா(-: // ஆமாங்கா.. இதெல்லாம் ரொம்ப அதிகம்!

//என்ன மனுஷப் பிசாசுகளா...!.....? //
அட, ஆவிம்மணி, அது நீங்க தான் ஆவிப் பிசாசாச்சே.. நீங்க இல்லை..ஏதும் யானை ஆவி பத்தி எழுதுங்களேன்..

பொன்ஸ்~~Poorna said...

மௌல்ஸ்,
//அது என்ன அத்துணை காதல் தங்களுக்கு மிருகங்களிடம்?. //
அதாவது, சக பிராணியிடம் இருக்கும் ஒரு மிருகாபிமானம் தான் :)
தெரியலை, யானையும் பூனையும் என் favourites. பழைய பதிவு ஒன்றில் இன்னும் விளக்கமா சொல்லி இருப்பேன் :)

//இந்தத் தப்புக்குத் தண்டனையா யானைக்குப் பல் விளக்கிக் குளப்பாட்டி காலைக்கடன்களை முடிக்க வைக்கிற வேலை தரனும். //
ஐடியா நல்லாருக்கு ஜிரா, ஆனா யானைக்கு பல்லா? வெளிய இல்ல இருக்கு!

G.Ragavan said...

// //இந்தத் தப்புக்குத் தண்டனையா யானைக்குப் பல் விளக்கிக் குளப்பாட்டி காலைக்கடன்களை முடிக்க வைக்கிற வேலை தரனும். //
ஐடியா நல்லாருக்கு ஜிரா, ஆனா யானைக்கு பல்லா? வெளிய இல்ல இருக்கு! //

ஐயோ பொன்ஸ்....ஒங்களுக்கு ஆனையப் பத்தித் தெரியவே இல்லையே! ஆனைக்கு வெளிய நீட்டிக்கிட்டிருக்குறது மட்டும் பல் கிடையாது. உள்ள பற்கள் உண்டு. மேலையும் கீழையும்...வாயில எதையும் போட்டா கரகரன்னு அரைக்கிறது எப்படி? அப்படியே எதை உள்ள போட்டாலும் மாவுமில்லு மாதிரி அரைக்க பற்கள் இருக்கு.

தருமி said...

//யானைக்கு பல்லா? வெளிய இல்ல இருக்கு!//
கேட்டா பெருசா நாங்க ஆனை அபிமானி ன்னு சொல்லிக்கிறது. செம பல்லுங்க அதுக்கு.

பொன்ஸ்~~Poorna said...

ஜி.ரா, தருமி,
சாரி.. யானையின் பல்லைப் பற்றித் தெரிஞ்சிக்காமயே இத்தனை நாள் ஓட்டிட்டேன்..

யானைக்கு நால் பல் இருக்காமே வாய்க்குள்ளேயும்! மோலார் மட்டும் தான் வளருமாம் 30 செமீலிருந்து 1 அடி வரை நீளமா இருக்குமாம்!!

அது தவிர இந்த தந்தங்களும் நான் சொன்னது போல் பல் தானாம்(குப்புற விழுந்தாலும்.. ஹி ஹி..)

ப்ரோபஸர் தருமி, எப்படி, ஹோம்வொர்க் சரியா பண்ணி இருக்கேனா? :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்க டிஸ்கசன்ல நானும் தெரிஞ்சுக்கலான்னு இங்கே போய் பார்த்து சில விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன்.

http://en.wikipedia.org/wiki/Elephant#Tusks

Unknown said...

அப்படியே எல்லோரும் கிழே இருக்குறத திருப்பிச் சொல்லுங்க...


1. கோவில்களில் யனையை வைத்து (சிறைப்பிடித்து) அதன் மூஞ்சிக்கு தினமும் பட்டை (அ) நாமம் போட்டு ,கடவுளின் பெயரில் நடக்கும் கொடுமைகள் ஒழிக.

2.சிறை பிடித்த யானைகளை காட்டுக்கு அனுப்பு.குறைந்த பட்சம் சரணாலயத்துக்காவது அனுப்பு.

3.குருவாயூர் கோவில் யானை காணிக்கை முறையை தடை செய்.



:-))

நம்ம யானையை பக்திக்காக கலர் அடிக்கிறோம் அவன் பக்காவா FULL கலர் கொடுத்திட்டான்.
நம்மாளுக இங்க தினமும் யானையின் மூஞ்சிக்கு கலர் அடிக்கிற கொடுமையெல்லாம் யாரும் கண்டிச்சது கிடையாது.

ஒவ்வொருவருக்கும் 6 ஆவது அறிவு ஒவ்வொருமாதிரி வேலை செய்யும்.அதனால் 5 அறிவுக்கு எப்போதுமே சிக்கல்தான். :-((((((

பொன்ஸ்,
நீங்க பாரின் யானைக்கு மட்டும் வருத்தப்படுவீங்களா? :-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொன்ஸ்!
இந்த மனிதனுக்கு மதம் பிடித்தால்; இப்படிக் கோமாளி வேலையெல்லாம் செய்வான்.வர வர இயற்கையையும்;அழகையும் நேசிக்கத்தெரியாத "துன்பியல் ரசிகனாகிறான் " மனிதன்;
யோகன் பாரிஸ்

Unknown said...

//கோயில் யானைகளைப் பார்க்கும்போதே அந்த வருத்தம் ஏற்படுவதுண்டு..
//

_/\_ மன்னிக்கனும் :-))

நீங்க கோவில் யானைக்கும் வருத்தப்பட்டு இருக்கீங்க :-))

thiru said...

நல்ல பதிவு!

ஜெயலலிதா நடத்திய யானை முகாம் பற்றி உங்கள் கருத்து என்ன பொன்ஸ்? :) ஆட்டோ வரும் கவனமா கருத்து சொல்லுங்க :)

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன், சுட்டிக்கு நன்றி. அதையும் படிச்சாச்சு.. இன்னும் நிறைய யானை படங்கள்! யானை சாப்பிடுவது கொள்ளை அழகு.

//அழகையும் நேசிக்கத்தெரியாத "துன்பியல் ரசிகனாகிறான் " மனிதன்;//
உண்மைதான் யோகன்..

VSK said...

" மரத்தில் மறைந்தது மாமத யானை

மதத்தில் மறைந்தது மாமர யானை"

என்ற பண்டைய வரிகள் நினைவுக்கு வந்தது பதிவைப் படித்ததும்!

பொன்ஸ்~~Poorna said...

கல்வெட்டு சார்,

// 1. கோவில்களில் யனையை வைத்து (சிறைப்பிடித்து) அதன் மூஞ்சிக்கு தினமும் பட்டை (அ) நாமம் போட்டு ,கடவுளின் பெயரில் நடக்கும் கொடுமைகள் ஒழிக.

2.சிறை பிடித்த யானைகளை காட்டுக்கு அனுப்பு.குறைந்த பட்சம் சரணாலயத்துக்காவது அனுப்பு.

3.குருவாயூர் கோவில் யானை காணிக்கை முறையை தடை செய். //
எல்லாம் உண்மை.. எல்லாம் செய்யவேண்டியது அவசியம்.

// நம்ம யானையை பக்திக்காக கலர் அடிக்கிறோம் அவன் பக்காவா FULL கலர் கொடுத்திட்டான். //
அது சரி.. இதைக் கூட எங்கயோ விமர்சனமா போட்டிருந்தாங்க இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளில்.. எட் போக் "இது என்ன இந்திய வழிபாட்டு நிகழ்ச்சியா, தடை செய்யாமல் இருக்க?" என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார் நிகழ்ச்சி அமைப்பாளரிடம் :).

// ஒவ்வொருவருக்கும் 6 ஆவது அறிவு ஒவ்வொருமாதிரி வேலை செய்யும்.அதனால் 5 அறிவுக்கு எப்போதுமே சிக்கல்தான். :-(((((( //
இது மிகப் பெரிய உண்மை..

// பொன்ஸ்,
நீங்க பாரின் யானைக்கு மட்டும் வருத்தப்படுவீங்களா? :-))) //
அப்படிச் சொல்ல முடியாது, நம்ம ஊர் யானையை இப்படி ஏற்றுமதி செஞ்சு கொடுமைப்படுத்தறாங்களேன்னு ஒரு பரிதாபம்னு வச்சிக்கலாம் :) அது வேற கூடுதலான கொடுமையாச்சே!

//நீங்க கோவில் யானைக்கும் வருத்தப்பட்டு இருக்கீங்க :-)) //
:))

உண்மையில் எங்கே யானை, ஒட்டகம், குதிரை எல்லாம் பார்த்தாலும் நம்ம வசதிக்காக அவற்றின் இயல்பான இடத்திலிருந்து இழுத்துவந்து விட்டோமே என்ற எண்ணம் தோன்றுவதுண்டு.. என்னதான் வசதி செய்து கொடுத்தாலும், மிருகக்காட்சி சாலைகள் கூட மிருகங்களுக்கான வீடு அல்லவே!

பொன்ஸ்~~Poorna said...

//ஜெயலலிதா நடத்திய யானை முகாம் பற்றி உங்கள் கருத்து என்ன பொன்ஸ்? :) //
அதான் சொல்லிட்டமே திரு.. யானை, குதிரை எதுவா இருந்தாலும் அது அது அதன் இடத்தில் இருக்கணும்.. அதைப் போய் பிடிச்சு வந்து விலங்கியல் பூங்காக்களில்/கோயில்களில் வைத்து.. அப்புறம் அது மதம் பிடித்து அலைகிறது என்று சொல்லி!! நம்ம செய்யறதெல்லாம் எப்போவுமே டூமச் தானே!

// ஆட்டோ வரும் கவனமா கருத்து சொல்லுங்க :) //
ஆட்டோ அனுப்பப் போகும் புண்யாத்மாக்களே, நல்ல லாரியா அனுப்புங்க. நாலு யானையை அதில் ஏத்தி காட்டில் கொண்டு விட்டுடலாம் ;)

// மரத்தில் மறைந்தது மாமத யானை
மதத்தில் மறைந்தது மாமர யானை"
//
எஸ்கே, ரெண்டாவது வரி புரியலியே!

வெற்றி said...

பொன்ஸ்,
நானும் உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன். மிருகங்களைச் சுதந்திரமாக அவைகளுக்குரிய இடங்களிலேயே வைத்திருக்கவேண்டும். இதனால்தான் நான் மிருகக்காட்சி சாலைகளுக்கே போவதில்லை.

அதுசரி பொன்ஸ், நீங்கள் புலால்[மாமிசம்] உண்பவரா? ஆமெனில் கொல்லப்படும் மிருகங்கள் மீது உங்களுக்கு வருத்தமில்லையா?

VSK said...

மரத்தால் ஒரு யானை செய்தான் ஒருவன்

மரத்தைப் பார்த்தவர்களுக்கு மாமத யானை தெரியவில்லை. யானையைப் பார்த்தவர்களுக்கு மரம் தெரியவில்லையாம்
அது போல. மதம் என்னும் போர்வையில் மறைந்திருக்கும் மா மர யானையாம் பரம்பொருளையும் அறியாமல் மதத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறர்களே எனக் கேலி செய்து பாடிய பாடல் இது.

லிங்கத்தைப் பார்ப்பவர்கள், அது எப்படி வருகிறது என்பதில் ஆராய்ச்சி செய்து, கேலி பேசி, அவர் சொல்லும் உண்மைத் தத்துவங்களை விட்டு அலைகிறார்களே, அது போல!!

வெற்றி said...

பொன்ஸ்,
SK ஐயா குறிப்பிட்ட பாடல் இதுதான்.

இப்பாடலுக்கு வாரியார் எழுதிய விளக்கத்தை இங்கே தருகிறேன்.
-----------------------
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" என்பது நம் நாட்டுப் பழமொழி. நாயை அடிக்கக் கல் தேடுவது என்ற பொருளில் இப்பழமொழி எழவில்லை.

ஒரு சிற்பி ஒரு வீட்டின் முகப்பில், கருங்கல்லில் நாய் செய்து வைத்தான். புதிதாக வந்த ஒருவர், தொடக்கத்தில் நாய் என்று கண்டு, மயங்கி நின்றார். அறிவு தெளிந்தபின் அது நாயன்று, கல் என்று கண்டார். நாய் என்று கண்டபோது கல் தெரியவில்லை; கல் என்று கண்டபோது நாய் தெரியவில்லை. நாயும் அதுதான், கல்லும் அதுதான். அது போல் உலகம் என்று கண்டால், கடவுள் தெரிவதில்லை, கடவுள் என்று கண்டால் உலகம் தெரிவதில்லை.

மரத்தினால் யானை செய்து வைத்திருக்கின்றது. கோயிலுக்கு வந்த ஒருவர் அதனைப் பார்க்கின்றார். யானையென்று பார்க்கின்றார். மரம் தோன்றுவதில்லை. மரம் என்று பார்க்கின்றார். அப்போது யானை தோன்றுவதில்லை. அதுபோல் பரம் என்று பார்த்தால் பார் தெரிவதில்லை. பார் என்று பார்த்தால் பரம் தெரிவதில்லை.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

என்பது திருமந்திரம்.

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ், நீங்கள் புலால்[மாமிசம்] உண்பவரா? //
இல்லை வெற்றி, ஆனால் உண்பர்களைப் பற்றி என்னிடம் எந்த விமர்சனமும் இல்லை :) வாரியாரின் விளக்க உரைக்கும் நன்றிகள். மிக அற்புதமான விளக்கம்...

///லிங்கத்தைப் பார்ப்பவர்கள், அது எப்படி வருகிறது என்பதில் ஆராய்ச்சி செய்து, கேலி பேசி, அவர் சொல்லும் உண்மைத் தத்துவங்களை விட்டு அலைகிறார்களே, அது போல!! //
இப்போது புரிகிறது எஸ்கே, "உண்மைத் தத்துவங்களை" மட்டும் பார்த்து அதைச் சொல்லி பணம் திரட்டும் சாமர்த்தியத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போலவும் தான்.

VSK said...

பணம் சம்பாதிக்கும் சாமர்த்தியம் எனச் சொல்லுவதிலிருந்தே உங்கள் புரிதல் புரிகிறது!

இனிப் பேசுவதில் பொருளில்லை!

மிக்க நன்றி, உங்களுடன் பேசியதில், இந்தப் பதிவில்!

மரத்தில் மறைந்தது மாமத யானை!!

பொன்ஸ்~~Poorna said...

// மரத்தில் மறைந்தது மாமத யானை!! //

இதை நான் சொன்னாலும் பொருந்தும்.. அவரவர் புரிதல் அவருக்கு என்பதைத் தான் நான் நினைக்கிறேன்.

// இனிப் பேசுவதில் பொருளில்லை!//
லிங்கங்களையோ, அதை எடுக்கும் வித்தை பற்றியோ எந்தப் புரிதலுக்காகவும், தெளிவுக்காகவும் நான் இந்தப் பதிவை, பின்னூட்டங்களை இடவில்லை. எனவே பேசியதில்/பேசுவதில் பொருளில்லாமல் போனாலும் ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.

Muse (# 01429798200730556938) said...

யானையின்மீது பாஸமா? நீங்கள் ஜார்ஜ் புஷ் கட்ஷியின் அபிமானியா?

(ஆம் என்று சொல்லிவிடுவதே பெட்டர். இல்லாவிட்டால் உங்களுக்கு கழுதை பிடிக்கும் என்றாகிவிடும்.)

Muse (# 01429798200730556938) said...

அமானுஷ்ய ஆவிக்கு சில கேள்விகள்.

1. ஆவிகளில் யானை ஆவி உண்டா?

2. இருக்குமானால், பொன்ஸினுடைய வீட்டில் குடியேற அனுமதி உண்டா?

3. இல்லை, அதற்கும் ஏதேனும் லைஸென்ஸை கவர்ன்மெண்ட்டிடமிருந்து வாங்கவேண்டியிருக்குமா?

4. மனிதன் செத்துப்போய் ரத்தக் காட்டேறி ஆனால் உயிருள்ள மனிதர்களின் ரத்தத்தை குடிப்பதுபோல யானை ரத்தக்காட்டேறியானால் புல்சாறு மட்டும்தான் உறிஞ்சுமா?

5. இந்த கேள்விகளுக்கு நீங்கள் முழிப்பதை, "பேயறைந்தது போல முழிப்பது" என்பீர்களா?

6. அப்படியானால் உங்களை அறைந்த பேய் எது?