Saturday, September 09, 2006

தேவைகள்

வெளியில் நன்கு இருட்டிவிட்டது. மாதக் கடைசி நாள் ஆதலால், கணக்கைச் சரி பார்த்து லெட்ஜரை மூடிவிட்டு எழுந்தாள் ராஜி. 8 மணி ஆக பத்து நிமிடம் இன்னும் உள்ளது என்றது சுவர்க் கடிகாரம். பாலு வந்திருப்பான். வீட்டுக்கு ஓட வேண்டும்.


நேற்று முழுவதும் மேனேஜர் ரத்னசாமி "ராஜி மேடம் மாதிரி வருமா. அவங்க சுறுசுறுப்பென்ன, வேலைல ஒழுங்கென்ன" என்று இனிக்க இனிக்க பேசியது எதற்கு என்று, இன்று இந்தக் கணக்குகளுக்கிடையில் தனியே விட்டு விட்டு, "மனைவியை ஷாப்பிங் செல்ல அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போன போது தான் புரிந்தது.

கிளம்பலாம் என்று பையை எடுக்கும் போது அருகிலிருந்த தொலைபேசி அடித்தது. எடுத்தாள், பயந்து கொண்டே.

"அம்மா, என்னம்மா, இன்னிக்கு கிரிக்கெட் பேட் வாங்கப் போகலாம்னு சொல்லி இருந்தியே.. மறந்தாச்சா?" பாலுவின் குரலில் வழக்கத்தை விட அதிக கோபம் தெரிந்தது.

"இல்லைடா கண்ணா, இன்னிக்கு புக் க்ளோஸிங் இல்லையா.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இதோ இன்னோரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். போய் பேட் வாங்கலாம். சரியா?"

"பேட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இன்னிக்கு எவன் இந்நேரத்துக்கு மேல கடை திறந்து வச்சிருப்பான்.. எல்லாம் நீயே வச்சிக்கோ.. எப்போ பார்த்தாலும் பாங்க்.. வேலை.. என்னை எல்லாம் நினைவிருந்தால் தானே?!!"

"அப்படி இல்லைமா பாலு" அதற்குள் எதிர்முனையில் பட்டென தொலை பேசி வைக்கப் பட்டது. ம்ஹும். இந்தக் கோபம் குறையாது. இன்றைக்கு பூரா தொடரும்.. நாளைக்கும்.. அடுத்த நாளைக்கும் கூட.. அப்பா இல்லாத பையன் என்று செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது. பத்து வயதில் எத்தனை கோபம்?, ஆத்திரம், எல்லாம்?!!

மெல்ல கை நீட்டி தொலை பேசி ரிசீவரை வைத்தாள். வைப்பதற்காகவே காத்திருந்தது போல் மீண்டும் அடித்தது. இந்த முறை பேசியது மோகன்.

"இன்னும் கிளம்பலியா? நேரமாகுமா?"

"கிளம்பிட்டேன் மோகன், எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"ஆமாம். உங்க வீட்டுக்கு இப்போ தான் வந்தேன்.. புக் க்ளோஸிங், லேட் ஆகிடுச்சுன்னு பாலு சொன்னான். அதான் கூப்பிட்டேன். நேரம் ஆகுமா? தனியா வந்திடுவீங்களான்னு கேட்கத் தான் உடனே திருப்பி போன் பண்ணினேன்"

"இல்லைப்பா, கிளம்பிட்டேன். நானே வந்திருவேன். "

"சரி, வாங்க. நானும் பாலுவும் வெளியே போகிறோம். சாவி இருக்கு இல்லையா?"

"ம்ம்.. இருக்கு. "

"சரி, அப்போ பார்க்கலாம்.. வைக்கிறேன். "

"ம்ம்..." போனை மீண்டும் வைக்க இருந்தவள், மீண்டும் அழைத்தாள் "மோகன்.. "

"சொல்லுங்க ராஜி,"

"ரொம்ப தாங்க்ஸ்"

"அட, இதிலென்ன இருக்கு.. "

மோகன் ஒரு அருமையான நண்பன். ராஜியின் அதிகம் பயனில்லாத குறுகிய திருமண வாழ்வில் கிடைத்த ஒரே நல்ல விஷயம் மோகனின் நட்பு.
யோசனைகள் அலைக்கழித்தாலும் ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வெளியில் வந்து வண்டியை எடுத்தாள்.

*************

வீட்டுக்கு வந்த போது மோகனும் பாலுவும் திரும்பி இருந்தனர். பாலுவின் கையில் ஒரு புதிய கிரிக்கெட் பேட். பந்து வேறே.. இருட்டில் வெளியில் விளையாட இடமில்லாமல் மோகனும் பாலுவுமே வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

"அம்மா.. இங்க பத்தியா, பேட்... அங்கிள் வாங்கிக் கொடுத்தாரு.. " என்றபடி ஓடி வந்த மகனின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்த ராஜியின் முகமும் நன்றியால் நிறைந்தது.

ராஜி நன்றி சொல்வதற்குள், மோகன் கிளம்பிவிட்டான்.

"நேரமாயிடுச்சு.. நீங்க இந்நேரத்துக்குப் பிறகு வந்து சமைக்க முடியுமான்னு தெரியலை. அதான்.. டிபன் வாங்கி வச்சிருக்கேன்.. கை கால் கழுவிட்டு சாப்பிடுங்க.." என்றபடி கிளம்பிப் போன அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் ராஜி புன்னகைத்தாள்.

************

அன்று ராஜி வீட்டுக்கு வந்த போது அவள் மாமியார் அமர்ந்திருந்தாள். மடியில் அவள் பேரன், பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருக்கும் பலகாரத்தைச் சாப்பிட்டபடி.

"ஏம்மா ராஜி, வாரத்துக்கு ஒரு முறை பிள்ளைய கூட்டி வந்து காட்டுறேன்னு சொல்லித் தானே தனியா போனே.. இப்போ ஒரு மாசமாச்சு பிள்ளையப் பார்க்காம என் கண்ணு ரெண்டு பூத்து போச்சு.. "

"இல்லத்தே.. ரொம்ப வேலை.. அதான்.. " என்றபடி உள்ளே சென்று காபி கலக்கத் தொடங்கினாள் ராஜி.

காபி, டிபன் முடிக்கும் வரை அத்தை பையனை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தாள்.. "வீட்ல அண்ணன், அண்ணி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்.. அவங்களுக்கென்ன.. அவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.."

"என்னத்தே அலுத்துக்குறீங்க.. என்னாச்சு, உங்களுக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா?"

"எனக்கு என்னம்மா.. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது.. என்னிக்கு கட்டையச் சாய்க்கப் போறேன்னு தெரியலை.. பார்ப்போம்.. "

"என்ன அத்தை அதுக்குள்ள அப்படிச் சொல்லிட்டீங்க.. உங்களுக்கு அப்படி என்ன வயசாய்டுச்சு?" என்று சொல்வதற்குள் ராஜிக்கு ஒரே திணறல் தான்.. என்ன வேண்டும் என்று நேரடியாகச் சொல்லவேண்டியது தானே. இதென்ன, பூடகமாக பேசிக் கொண்டு..

"ம்ம்.. நீ இப்படி சொல்ற.. ஆனா ஆண்டவன் வேற மாதிரி இல்ல எழுதி இருக்கான்.. "

"ஏதாச்சும் பிரச்சனையா அத்தை?"

"ரெண்டு நாள் முந்தி நம்ம தனத்தைப் பொண்ணு பார்க்க வந்தாங்க.. அதுல பாரு.. பார்க்க வந்தவங்க பெரிய இடம்.. " என்று அத்தை தொடங்கவும், ராஜிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.. இன்னும் அரை மணி நேரம் போல் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக் கதையைப் பேசிவிட்டு, மெல்ல விஷயத்துக்கு வந்தார் அத்தை..

விஷயம் சின்னது தான். அத்தைக்கு காலில் ஏதோ அடி. அதற்கு வைத்தியம் பார்த்த டாக்டர், ஒரு முழு செக்கப்பும் செய்து கொள்ளச் சொல்லி அறிவுருத்த, அதற்கு முதல் மகன் முடியாது என்று சொல்லி இருக்கிறான். "போய் உன் சின்ன மருமகளைக் கேளேன்" என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட, அத்தை இங்கே வந்துவிட்டாள்..

நேரடியாக, செக்கப்புக்குப் பணம் கொடு என்று சொல்லி இருந்தால், இந்தா என்று எடுத்துத் தந்து விடலாம். ஒரு அரை மணி பேசி, நீட்டி முழக்கி இறுதியில் கேட்டதாகவே இல்லாமல் கேட்கும் விதத்தில் ராஜிக்கு அலுப்பு தட்டிவிட்டது.

"இந்தாங்க அத்தை " என்று அவள் செக் கிழித்துத் தரும் வரை அத்தை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

*************

"ராஜி, இங்க கொஞ்சம் வாயேன்.. ஏதேதோ கேட்குறாங்கம்மா நீ கொடுத்த செக்கைப் பத்தி" என்று தொலை பேசி அழைப்பு வந்த போது ராஜி மிக முக்கியமான ஒரு கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எங்கேர்ந்து அத்தை பேசுறீங்க?"

"ம்ம்.. இங்க தான்.. ஆஸ்பத்திரிலேர்ந்து பேசுறேன் கண்ணு.. என்ன ஆசுபத்திரிடீ இது.. ?"

"இந்திரா ஹாஸ்பிடல், அடையார்னு சொல்லுங்கத்தே.. " அண்ணியின் குரல் கேட்டது

"அத்தை.. நான் இப்போ ரொம்ப முக்கியமான வேலைல இருக்கேன். ஒரு அரை மணி அங்கயே காத்திருக்கீங்களா.. வந்து பார்க்கிறேன்?"

"அரை மணியா?!! அதெல்லாம் முடியாது.. என்ன பெரிய கலெக்டர் உத்யோகமா பார்க்குற.. உடனே கிளம்பி வாம்மா.. இப்படி செல்லாத செக்கைக் கொடுத்து ஏமாத்த பார்க்குறியா!!"

"சரி வரேன்.. " சத்தம் அதிகமானால், ஆஸ்பத்திரி முழுவதும் அத்தையைப் பார்க்கத் தொடங்கிவிடும் என்பதாலும் அந்த மாதிரி சூழ்நிலையில் தான் சென்றால் இன்னும் திரும்பக் கூடிய முகங்களையும் நினைத்தபடி ராஜி மேனஜரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது, மேனஜரின் குரலில் சுத்தமாக இணக்கமில்லை.

"ராஜி மேடம் எப்பவும் இப்படித் தான்.. வேலையில் முழு கவனம் இல்லவே இல்லை" என்று அவர் அக்கவுண்டன்டிடம் சொன்னது தேய்ந்த ஒலியில் கேட்டது..

போக்குவரத்துப் பிரச்சனையால் பத்து நிமிடம் அதிகமாகிப் போய்விட, அத்தை கத்திய கத்தலில் ராஜி எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ, அது நன்றாகவே நடந்தது.

அத்தை பெயருக்குக் கொடுத்த செக்கை அப்படியே எடுத்து வந்து ஆஸ்பத்திரி கவுன்டரில் கொடுத்தால் அவன் என்ன செய்வான்.. எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறதோ என்று நொந்தபடி அன்றைய வேலை நேரம் அத்துடன் முடிந்து போனது ராஜிக்கு..

**********

"மோகன், பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு எனக்கு" கடலையும் அதன் அருகில் விளையாடும் பாலுவையும் பார்த்தபடி சொன்னாள்..

"என்னாச்சு ராஜி, என்ன பிரச்சனை உங்களுக்கு?"

"எனக்கு என்ன பிரச்சனை இல்லை?! ஒரு மனுஷிகிட்டேர்ந்து எத்தனை எதிர்பார்ப்பாங்க மோகன்? மேனேஜர், வேலையைச் சரியா முடிக்கணும்னு எதிர்பார்க்கிறார்.. பாலு, ஒரு நாள் சொன்னதை வாங்கிக் கொடுக்க தாமதமானதற்காக ஒரே கோபம்.. அத்தை, உங்க உறவே வேண்டாம்னு விட்டுட்டு வந்த பின்னும், தேடி வந்து பணம் கேட்கிறாங்க, அது கூட பரவாயில்லை. வேலை நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வரலைன்னு ஒரே கோபம்..... எத்தனை எதிர்பார்ப்பு?!! எங்கயாவது ஓடிடலாம் போலிருக்கு!! அதுவும் இவங்க யார்கிட்டேர்ந்த்தும் நான் எதுவுமே எதிர்பார்க்காத போது.. "

மோகன் சின்னதாக ஒரு புன்னகை பூத்தான்..

"என்ன மோகன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?!!"

மோகனின் புன்னகை இன்னும் பெரிதானது.. ராஜி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. லேசான கோபத்துடன்

"இப்போ செய்யறீங்களே.. இது எதிர்பார்ப்பில்லையா?"

"என்ன? எது?"

"நீங்க ஏதாவது சொன்னால், அதுக்குப் பதில் சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க.. சொல்லாம போனா, உங்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம்.. பாலுவிடம் இதை விட, கொஞ்சம் அதிகம் இருக்கு. உங்க அத்தையிடம் இன்னும் கொஞ்சம்.. மேனேஜரிடம் கொஞ்சம்.. அவ்வளவு தான்.. இதெல்லாம் ஒரு உரிமை தானே.. எதிர்பார்க்கக் கூடிய அளவு உங்களிடம் ஏதோ உரிமை இருக்கு.. இல்லைன்னா, ஏதோ அன்பு.. இந்த மாதிரி உரிமையும், ஒரு நாள் எதிர்பார்ப்பும், கோபங்களும் இல்லைன்னா, வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் இல்லையா?" சொல்லிக் கொண்டே வந்தவன், செல்பேசி அழைத்ததில் எடுத்துப் பேசத் தொடங்கினான்..

"அம்மா, போன தடவை வந்தப்போ சொன்னியே சோளம் சாப்பிடலாம்னு.. நீயே கேட்பேன்னு பார்த்தேன்.. ம்ஹும்.. இனி வேண்டாம் போ..!" என்று அலுத்துக் கொண்ட பாலுவைப் பார்த்து ராஜிக்கு இந்த முறை எந்த அலுப்பும் வரவில்லை.

(நன்றி தமிழோவியம்)

11 comments:

லதா said...

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் - ரிதம் திரைப்படம்தான் நினைவிற்கு வருகிறது.

//நேற்று முழுவதும் மேனேஜர் ரத்னசாமி "ராஜி மேடம் மாதிரி வருமா. அவங்க சுறுசுறுப்பென்ன, வேலைல ஒழுங்கென்ன" என்று இனிக்க இனிக்க பேசியது எதற்கு என்று, இன்று இந்தக் கணக்குகளுக்கிடையில் தனியே விட்டு விட்டு, "மனைவியை ஷாப்பிங் செல்ல அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போன போது தான் புரிந்தது
//

அடுத்த மாதமாவது ராஜி இதேபோல் ஏமாறாமல் இருப்பார்களா?

// "இன்னும் கிளம்பலியா? நேரமாகுமா?" "கிளம்பிட்டேன் மோகன், எங்க இருக்கீங்க? வீட்லயா?" "ஆமாம். உங்க வீட்டுக்கு இப்போ தான் வந்தேன்.. புக் க்ளோஸிங், லேட் ஆகிடுச்சுன்னு பாலு சொன்னான். அதான் கூப்பிட்டேன். நேரம் ஆகுமா? தனியா வந்திடுவீங்களான்னு கேட்கத் தான் உடனே திருப்பி போன் பண்ணினேன்" //

நல்ல வேளை(லை?) மோகன் மென்பொருள் துறையில் இல்லை(தானே?).

//"ராஜி மேடம் எப்பவும் இப்படித் தான்.. வேலையில் முழு கவனம் இல்லவே இல்லை" என்று அவர் அக்கவுண்டன்டிடம் சொன்னது தேய்ந்த ஒலியில் கேட்டது..
//
இது வழக்கமாக நடப்பதுதானே. பலரும் பலமுறை அனுபவித்திருப்பர்.

// இதெல்லாம் ஒரு உரிமை தானே.. எதிர்பார்க்கக் கூடிய அளவு உங்களிடம் ஏதோ உரிமை இருக்கு.. இல்லைன்னா, ஏதோ அன்பு.. இந்த மாதிரி உரிமையும், ஒரு நாள் எதிர்பார்ப்பும், கோபங்களும் இல்லைன்னா, வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் இல்லையா?" //

பின்னூட்டங்களை (மட்டும்) எதிர்பார்த்து இந்தப்பதிவு எழுதப்பட்டது என்று நான் எண்ணவில்லை

// ராஜிக்கு இந்த முறை எந்த அலுப்பும் வரவில்லை //
எப்போதும் நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டுமா?
"அவர்கள்" தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா ?

தேவையான இடங்களில் :-))) போட்டுக்கொள்ளவும்.

பொன்ஸ்~~Poorna said...

பின்னூட்டத்துக்கு நன்றி லதா.

// ரிதம் திரைப்படம்தான் நினைவிற்கு வருகிறது//
//நல்ல வேளை(லை?) மோகன் மென்பொருள் துறையில் இல்லை(தானே?)//
மோகனின் வாழ்க்கைக் குறிப்பு இந்தக் கதைக்கு அவசியமற்றது என்றே நான் நினைத்தேன்.. பொதுவாக சிறுகதைகளில், முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றிய சில நிகழ்வுகளை மட்டுமே கதையில் கொடுக்க எனக்குப் பிடிக்கிறது .. ஏனோ இப்படியான கதாபாத்திரங்களின் பின்புலங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது..

//அடுத்த மாதமாவது ராஜி இதேபோல் ஏமாறாமல் இருப்பார்களா?//
ராஜி ஏமாறாமல் இருப்பாள் என்று தோன்றவில்லை. அவளுக்கு ஏமாற்றும் வித்தை தெரியவில்லையே..

//பின்னூட்டங்களை (மட்டும்) எதிர்பார்த்து இந்தப்பதிவு எழுதப்பட்டது என்று நான் எண்ணவில்லை//
எண்ண முடியாது, ஏனெனில், இந்தப் பதிவு, தமிழ்மணத்திலேயே இல்லை :). இது வெறும் filing up. கோப்புப் படுத்த..

//எப்போதும் நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டுமா?
"அவர்கள்" தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா ?//
மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.. "அவர்கள்" மாற வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினால், சுழலில் சிக்கிக் கொள்கிறோம்.
முடிந்தவரை, நாம் மாற முயற்சிக்கலாம்.. ராஜியைப் பொறுத்தவரை, குழந்தையை மாற்றுவதும், மேலாளரிடம் அவளது எல்லையை நிர்ணயிப்பதும் அவள் கையில் தான் இருக்கிறது. அதை அவள் செவ்வனே செய்தாலே, அவளது பிரச்சனைகள் தீரும்.. இது வெறும் ஒரு நாள் எதிர்பார்ப்பு பொருந்தாமை தான்(expectation mismatch).. இதை அவள் உணர்ந்தால், "இதுவும் கடந்து போகும்" என்னும் இன்பமான மனநிலைக்கு வந்துவிடுவாள் :)

தமிழ்மணத்தில் இணைக்காத என் பதிவுக்குத் தேடி வந்து பின்னூட்டம் இட்டதுக்கே உங்களுக்கு, பலப் பல நன்றிகள்.. :) என் எல்லாக் கதைகளிலும் உங்கள் பின்னூட்டம் இருக்கிறது, இதிலும் இருப்பது மகிழ்ச்சி :)

இலவசக்கொத்தனார் said...

அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?

ஒரு வேளை நீங்கதான் லதாவா பொன்ஸ்? ;)

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல கதை. அழகாக, நேர்த்தியாகச் உங்களுக்க்கேயான பாணியில் சொல்லியுள்ளீர்கள்.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், முதலில் தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தேன். இப்போ சேர்த்துவிட்டேன்.. :))

வெற்றி நன்றி.. :)

நாமக்கல் சிபி said...

Onnume Puriyaliyee! Latha enbavarum ponsa?

ஜயராமன் said...

ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, படிக்கும் என்னை குழப்புகிறாள்.

ஒருவரி மோகனின் வார்த்தையில் அவள் மனசு மாறி அலுப்பும், சலிப்புமில்லாமல் உறவுகளோடு பழகுகிறாள் என்பது ரொம்பவே செயற்கை.

மகன் தாயிடம் 'எதிர்பார்க்கிறான்". அதுவும், சுயநலமாக. என்ற நினைப்பே அருவருப்பானது. என் பார்வையில், ராஜிதான் தன் பையனிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வேலைக்கேற்ற படி தன் பையன் நடக்க வேண்டும், அட்ஜஸ்ட் பண்ணிக்கவேண்டும் என்று. தாங்கள் ராஜியை புனிதபிம்பம் ஆக்குகிறோர்களோ என்று தோன்றியதால் இதை சொல்கிறேன்.

மொத்தத்தில் எல்லாத்துக்கும் (எல்லா உறவு, வேலை...) ஆசைப்பட்டு பிற எல்லோரையும் தனக்கு அனுசரித்து போக நினைக்கும் சராசரி ஒரு கையாலாகாத ராஜியைத்தான் நான் பார்க்கிறேன்.

ஒருவேளை, என் பார்வையில் கோளாறோ?

நன்றி

பொன்ஸ்~~Poorna said...

// ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, படிக்கும் என்னை குழப்புகிறாள். //
ராஜி குழம்பி இருப்பது உண்மைதான். ராஜியின் குழப்பங்களுக்குத் தான் மோகன் விடை சொல்கிறான்.

// ஒருவரி மோகனின் வார்த்தையில் அவள் மனசு மாறி அலுப்பும், சலிப்புமில்லாமல் உறவுகளோடு பழகுகிறாள் என்பது ரொம்பவே செயற்கை. //
சிறுகதைகளை இன்னும் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை..

// மகன் தாயிடம் 'எதிர்பார்க்கிறான்". அதுவும், சுயநலமாக. என்ற நினைப்பே அருவருப்பானது. என் பார்வையில், ராஜிதான் தன் பையனிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வேலைக்கேற்ற படி தன் பையன் நடக்க வேண்டும், அட்ஜஸ்ட் பண்ணிக்கவேண்டும் என்று. தாங்கள் ராஜியை புனிதபிம்பம் ஆக்குகிறோர்களோ என்று தோன்றியதால் இதை சொல்கிறேன்.//
எதிர்பார்ப்புகளுக்கு அளவில்லை ஜயராமன், எல்லாருக்கும் ஒரு நாள் சலிப்பு இருக்கத் தான் செய்யும். இல்லை, இருக்காது என்று நீங்கள் சொல்வது தான் புனித பிம்பக் கருத்தாக்கமோ என்று எனக்குத் தோன்றுகிறது..

"இவனுக்காகத் தான் வேலைக்குப் போய் உழைக்கிறோம், நம் நிலையையும் மகன் புரிந்து கொள்ள வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு இன்றைய மத்திய தர தாய்மார்கள் எல்லாருக்கும் உண்டு என்றே தோன்றுகிறது..

// மொத்தத்தில் எல்லாத்துக்கும் (எல்லா உறவு, வேலை...) ஆசைப்பட்டு பிற எல்லோரையும் தனக்கு அனுசரித்து போக நினைக்கும் சராசரி ஒரு கையாலாகாத ராஜியைத்தான் நான் பார்க்கிறேன். //
இருக்கலாம்.. பார்வைகள் மாறுபவையே.. ராஜி எல்லாவற்றையும் அனுசரித்து நடக்க முயன்று அப்படி அவள் நடப்பதை மற்றவர் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது சலிக்கிறாள் என்று எனக்கு தோன்றியது. அவளின் அந்தச் சலிப்பை நியாயமற்றது என்றே மோகன் புரியவைக்கிறான்.. அனுசரிப்பது என்று முடிவெடுத்துவிட்டால், ஏன் சலிக்க வேண்டும்? :)

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ்,
சலிப்பு வருவது எல்லோருக்கும் தானே.
பையனுக்கு அம்மாவிடம்,அம்மாவுக்கு மானேஜரிடம்,.

அவள் அலுத்துக்கொள்வதில் அர்த்தமிருக்கிறது.அவள் தோழர் சொல்லுவதும் நல்ல் அறிவுரைதான்.
change shd begin from us.
thank you for a good post.

லதா said...

// அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?

ஒரு வேளை நீங்கதான் லதாவா பொன்ஸ்? ;) //

// Onnume Puriyaliyee! Latha enbavarum ponsa? //

அன்புள்ள இலவசம் / சிபி,

பொன்ஸ் பக்கங்களிலேயே புதனன்று (Wed Sep 06, 07:40:08 PM 2006)படித்துப் பின்னூட்டமிட்டேன். ஆனால் அவர்கள் தங்கள் பதிவை பிறகுதான் தமிழ்மணத்தில் சேர்த்தார்கள் (8:30 PM on Sep 08 2006) என்று எழுதிவிட்டார்களே. நான் அவ(ர்க)ள் இல்லை.:-)))

மனதின் ஓசை said...

பொன்ஸ்...நல்ல பதிவு...

"எதிர்பார்ப்புகள் இல்லாதது எதுவுமே இல்லை...அப்படி எந்த உறவும் இல்லை. எதிர்பார்ப்பு என்பது பணமோ உதவியோ மட்டும் இல்லை..மனதால் அரவனைப்பதும் ஆசுவாசப்படுத்துவதும்கூடத்தான்"
என எனக்கும் என் நண்பனுக்கும் சில வருடங்களுக்கு முன் நடந்த உரையாடலை நினைவு படுத்திய பதிவு...