Thursday, January 18, 2007

தமிழ் பேசு தங்கக் காசு

மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி "தமிழ் பேசு தங்கக் காசு". பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.

மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே அவற்றில் :( ] இன்னும் அதிகமாகவே தங்கம் கொட்டும் நிலையில், தமிழ் பேசித் தங்கம் வெல்ல எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,
-> ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்
-> ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்
-> தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல்
-> ஆங்கிலம் கலக்காமல்.

கடைசி விஷயம் மட்டும் தான் சுலபமாக இருக்கிறது, முன்பே பழகிக் கொண்டு வருவதால். பழைய வார்த்தை விளையாட்டு போல் போட்டியாளரை ஒரே சொல்லில் சிக்க வைக்கும் முயற்சியில் ஜேம்ஸ் வசந்தன் ஈடுபடுவதில்லை. மிக மிக இயல்பாக பேசிச் செல்கிறார். 'சொந்த ஊர் திருச்சி', 'படித்த ஊர் திருச்சி' என்று இரண்டு முறை சொல்பவரிடம், அடுத்ததாக திருச்சியைப் பற்றியோ, ஊரைப் பற்றியோ கேட்டு மூன்றாவது, நான்காவதில் சிக்க வைக்கும் முயற்சிகள் செய்வதில்லை. அதனால், பேச்சில் ஈடுபட்டு சொற்களின் எண்ணிக்கையை மறந்து ஏமாறுவது போட்டியாளருக்குச் சுலபமாக இருக்கிறது. வசந்தன் கூட இந்தக் கணக்கு வைத்துக் கொள்ளாமலே பேசுகிறார். வசந்தனைத் தவிர இன்னுமொரு பேராசிரியரை இந்த உரையாடலைக் கவனித்து நடுவராகும் முறையில் நியமித்திருக்கிறார்கள். நான் பார்த்த அன்று மூத்த கவிஞர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டேன் :() கூர்ந்து கவனித்து அவ்வப்போது ஒலிப்பானை அமுக்கி போட்டியாளர்களின் சாபத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார். :)

இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.

"வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதிரில் விழுந்தாள் கிழவி மகள்" போன்ற பழகிய சொற்றொடர்களுடன்

"தாதி தூதோ தீது. தத்தை தூது ஓதாது" போன்ற சங்கப் பாடல் தொடர்களும் கொடுக்கப்படுகின்றன.

இது போன்ற சொற்றொடர்களின் பொருளை விளக்கிவிட்டு திரும்பிச் சொல்லச் சொல்லலாம். அல்லது போட்டிகளில் பங்குபெறுபவர்களாவது வாய்விட்டுப் பொருள் கேட்கலாம். இரண்டும் இல்லாவிட்டால் இந்தச் சுற்று தமிழ் பேசித் தங்கம் வெல்வதை விட "மனப்பாடம் செய்தால் தங்கம் கிடைக்கும் " என்று மாறிவிடும் ஆபத்திருக்கிறது.

"புக்கு தெக்கு புக்கு
செக்கு தெக்கு செக்கு"

என்ற சொற்பயிற்சி எனக்குப் புரியவே இல்லை. யாருக்காவது புரிகிறதா?

இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இது கொஞ்சம் சுலபமான சுற்றாகத் தான் தெரிகிறது - சுலபம் என்ற சொல்லுக்கே தமிழ்ச் சொல் என்ன என்று கேட்கும் வரை! சுலபம், ஜாக்கிரதை போல் தினசரி பயன்படுத்தும் சொற்களையே தமிழில் சொல்லுங்கள் என்றால் அந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொஞ்சம் கடினமான வேலையாகத் தான் தோன்றுகிறது.

நான் பார்த்த உழவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி பங்கு பெற்றார். நிர்மலாவின் குரலை மட்டுமே கேட்டு, சலித்தே போயிருந்த எனக்கு, அவர் நொடிக்கொரு தரம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது மனதைக் கவர்ந்து விட்டது. பதில் தெரியாத கேள்விகளுக்கு அழகாகச் சிரிக்கிறார். அவருடைய மகன் மூன்றாம் வருடம் கல்லூரியில் படிக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் சந்தூர் விளம்பரம் போல் இருந்தது. அடுத்த முறை போட்டி வைக்கும் போது நிர்மலா சிரிக்கவும் தனியான நேரம் ஒதுக்கப் போவதாகச் சொல்லி கலாட்டா செய்தார் ஜேம்ஸ் வசந்தன்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பங்கெடுத்தனர். "ஸ்கூலுக்கு தமிழில் என்ன?" என்றால், "ஸ்கூல், தமிழ் தானே?" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! "ஃபேன் ஆங்கிலமா தமிழா?" என்று வசந்தன் கேட்டதற்கு, "ஆங்கிலம்னா?" என்று அற்புதமாகக் கேட்டு திகைக்க வைத்துவிட்டனர். வாழ்க பெற்றோர்.

இத்தனை குளறுபடிகள் இருந்தாலும், இரண்டாவது சுற்றில் மனப்பாடப் பகுதியை உச்சரிப்பு பிழையில்லாமல் சொல்லிக் காட்டினர். அதிலும் ஒரு சிறுவனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. வசந்தன் சொன்னதைக் கேட்டே அவனும் அழகாக மனப்பாடம் செய்து ஒப்பித்தான். நமது பள்ளிகள் மொழி கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ மனனம் செய்வது எப்படி என்று நன்றாகவே சொல்லிக் கொடுக்கிறது, மூன்றாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளாகவே!

நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாற்றினால், "திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!" என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது :)

28 comments:

✪சிந்தாநதி said...

மக்கள் தொலைக்காட்சி எங்களுக்கு இல்லை:(((

✪சிந்தாநதி said...

http://valai.blogspirit.com/archive/2007/01/18/indra.html

இராம்/Raam said...

யக்கோவ்,

இதேமாதிரி நிகழ்ச்சி கொடைக்கானல் FM ரேடியோவிலே ஞாயிற்றுக்கிழமையிலே நேரடி நிகழ்ச்சியா நடக்கும்.

Anonymous said...

மக்கள் தொ.கா. வின் இம்முயற்சி பாராட்டத் தக்கது! இதைப் பார்த்து மற்ற தொ.கா. க்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் நல்லது, இப்போதைக்கு அப்படி நடக்கும் என்று கனவுதான் காண முடியும். :(

ஸ்கூல் தமிழானது கவலையளிக்கிறது. :(

பங்காளி... said...

யு சீ பொன்ஸ்...இவங்க எப்டி தமிள் நாட்ல சர்வைவ் ஆக போறாஙன்னு கவலையாருக்கு.....இதுல கலந்துக்க காம்பெட்டிடர்ஸ் எப்படி செலக்ட் பண்ராங்களோ தெரியல....ரொம்ப கஷ்டமான டாஸ்க் இல்லையா.....:-))))

Unknown said...

நல்ல பதிவு பொன்ஸ்... தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டாம் தமிழின் மிஞ்சியிருக்கும் உயிரை எடுக்காமல் இருந்தாலே நலம்.

தொலைக்காட்சிகள் கூட பரவாயில்லை... பண்பலை வரிசைகளைக் கேளுங்கள்.. உங்களுக்கு தமிழகத்தில் தான் இருக்கிறோமான்னு பெரிய சந்தேகமே வரும்...


ஆமாங்க.. கோச்சுக்காமப் பதில் சொல்லுங்க பொன்ஸ் அப்படின்னா தமிழ் சொல்லா? மெய்யாலுமே சந்தேகம் தான் வேற எந்த உள்குத்தும் இதில் கிடையாது.

சீனு said...

பங்காளி,

"தமிள் நாட்ல" - "டமில் நாட்ல"
"கவலையாருக்கு" - "கவ்லியாருக்கு"
"கஷ்டமான டாஸ்க்" - "கஸ்டமான டாக்ஸ்"

தமிழ்நதி said...

தேவையான பதிவு பொன்ஸ். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தமிழில் பேசும்போது புரிவதில்லை. அதையே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசினால் உடனே புரிந்துகொள்கிறார்கள். இப்படி புரிந்துகொள்ளத் 'தமிழ்'பேசி மறந்துபோய் விடுவோமோ என்றிருக்கிறது. இதை நான் யாரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையிலேயே தமிழ்நாட்டில் தமிழின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கிலமொழி வழி கல்வியூட்டுவதனால் வந்த வினையென்று நினைக்கிறேன். அண்மையில் என்னோடு பேசிய ஒருவர் கூறினார் "தமிழ் ஆசைக்கு... ஆங்கிலம் வேலைக்கு"என்று. தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலையை 'தமிழ்... தமிழ்'என்று பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ஏன் ஞாபகமாக மறந்துபோகிறார்கள் என்பது புரியவேயில்லை. வெளியில் இறங்கி தமிழ் படும் பாட்டைப் பார்க்க உண்மையில் மிகுந்த வேதனையாக இருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

//முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச.//

தமிழ் எல்லாம் இருக்கட்டும். முதலில் கணக்கு கத்துக் கொடுக்கணும் போல இருக்கே.

1+2+4 = 7 இல்லையோ?!

நற்கீரன் said...

இந்த மாதிரி தமிழ் போட்டி நிகழ்ச்சிகள், நீங்கள் சுட்டிய அதே விதிகளுடன், அடிக்கடி வானொலிகளில் கனடாவில் நடக்கும். இங்கு இருவர் பங்குகொள்கையில் போட்டியாளர் போட்டி நடத்துனர் என்ற வேறுபாடு கிடையாது. மாறி மாறி ஆட்டம் நடக்கும்.

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி பொன்ஸ். இதுபோன்ற நிகழ்ச்சிகளை மற்ற தொலைக்காட்சிகளும் குறிப்பா சூரியத் தொலைக்காட்சியும் வழங்கணும் (பின்ன.. எங்களுக்கு மக்கள் தொலைக்காட்சி தெரியாதே!)

மிதக்கும்வெளி said...

பெரிய அபத்தமாக இருக்கிறது. ஒரு மொழியைப் பேசுவதற்கு லஞ்சம் கொடுப்பதில் என்ன முற்போக்கு வாழ்கிறது? இதற்கும் கருணாநிதி சினிமாத் தலைப்புகளுக்கு வரிவிலக்கு கொடுத்த அயோக்கியத்தனத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? தனித்தமிழ் என்பதெல்லாம் கேலிக்கூத்து. அது ஒரு பாசிச ஆணாதிக்க நடவடிக்கை. purity is always directionally proportional to facism. இந்த மாதிரியான நான்சென்ஸ்களையெல்லாம் நீங்கள் ஆதரிப்பதும், விளம்பரப்படுத்துவதும் அதிர்ச்சியாகவும் கவலையாகவுமிருக்கிறது.

கலை said...

சென்னையில் இருந்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவம்.

ஒரு கடையில் போய் உப்பு கேட்டபோது இல்லை என்ற பதில் வந்தது. ஆச்சரியத்துடன், தேடிப்பார்த்து, இங்கே இருக்கே என்று சுட்டிக் காட்டியபோது கிடைத்த பதில் இதுதான். "சால்ட் ன்னு தமிழில கேளுங்க. உப்புன்னா யாருக்குத் தெரியும்". :)

தமிழ்நதி said...

"பெரிய அபத்தமாக இருக்கிறது. ஒரு மொழியைப் பேசுவதற்கு லஞ்சம் கொடுப்பதில் என்ன முற்போக்கு வாழ்கிறது?"
நண்பரே!ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி. வேற்று மொழிக்கலப்பு என்பது சிறுகச் சிறுக அந்த மொழியை இல்லாதொழிப்பது. அதைக் குறித்து கவலை கொள்ள வேண்டிய நிலையில்தான் இப்போது தமிழகம் இருக்கிறது. அதைப் பற்றிப் பதிவு போடுவதில் என்ன அபத்தமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. மொழியைப் பற்றிக்கொண்டிருப்பது பாசிசத்தின் வெளிப்பாடு என்றால் நாமெல்லோரும் ஆங்கிலத்தில் பேசலாமே... மொழி வெறி என்பதற்கும் மொழிப்பற்று என்பதற்கும் இடையில் வேறுபாடு உண்டு. தன் தாய் பேசிய மொழியை, தனது மக்கள் பேசும் மொழியை நேசிப்பதைக்கூட விமர்சிப்பது... ம்....யோசிக்க வேண்டியிருக்கிறது.

மஞ்சூர் ராசா said...

சுலபம் என்பதை எளிது என கூறலாம்.

மக்கள் தொலைகாட்சி நீங்கள் சொல்லும் கருத்துக்களையும் ஏற்று தொடர்ந்து தமிழிலேயே நிகழ்ச்சிகள் கொடுத்தால் ஒரு வேளை சிலருக்கு தமிழின் அருமையை புரிந்தாலும் புரியலாம்.

தருமி said...

இதற்கு ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேனே...என்னாயிற்று என்று தெரியவில்லை..

- யெஸ்.பாலபாரதி said...

//தமிழ் எல்லாம் இருக்கட்டும். முதலில் கணக்கு கத்துக் கொடுக்கணும் போல இருக்கே.

1+2+4 = 7 இல்லையோ?!
//

வாத்தியாரே.. நீங்க சொல்லுறது சரிதான். ஆனா, யக்காதான் தப்பா எழுதிட்டாங்க!
முதல் சுற்று:- ஆயிரம் நூபாயும், ஒரு தங்க காசும்.

இரண்டாம் சுற்று:- இரண்டாயிரம் ரூபாயும், ஒரு தங்க காசும்.

மூன்றாம் சுற்று:- மூவாயிரம் ரூபாயும், மூன்று தங்க காசு.

ஆக மொத்தம் ஆறு.

ஆனா... தமிழனின் நிலை இப்படி ஆகிப்போனதில் கொஞ்சம் வருத்தமே! :-(

சுந்தர் / Sundar said...

நல்லது நடக்கட்டும்

இலவசக்கொத்தனார் said...

//முதல் சுற்று:- ஆயிரம் நூபாயும், ஒரு தங்க காசும்.

இரண்டாம் சுற்று:- இரண்டாயிரம் ரூபாயும், ஒரு தங்க காசும்.

மூன்றாம் சுற்று:- மூவாயிரம் ரூபாயும், மூன்று தங்க காசு.

ஆக மொத்தம் ஆறு./

1+1+3 = 6????

யூ டூ பாலபாரதி? :(((

- யெஸ்.பாலபாரதி said...

டூ.. எல்லாம் இல்ல வாத்தியாரே!

அது என் தட்டச்சு தவறு.

இரண்டாம் சுற்றுக்கு இரு தங்ககாசு. இரண்டாயிரம் ரூபாய். :-)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணக்கட்டுதடா சாமீ!

இப்பசரியா வருத கணக்கு.

ரவி said...

அருமையான அறிமுகம்...!!!

///திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!" என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது :)///

:))))))))))))))))))

ரவி said...

பெங்களூரில் வருவதில்லையே மக்கள் தொலைக்காட்சி !!! வருத்தம்தான்..!!!

பொன்ஸ்~~Poorna said...

சிந்தாநதி, அடப் பாவமே :)

கொடைக்கானல் FM பற்றி இப்போ தான் கேள்விப் படுறேன் ராயல், தகவலுக்கு நன்றி ;)

யாழ்த்தமிழன், ஸ்கூல் மட்டுமா, நம்ம பிள்ளைகளுக்கு இன்னும் நிறைய சொற்கள் தமிழா ஆங்கிலமா என்ற சந்தேகம் உண்டு..

பங்காளி, உங்களுக்கு மக்கள் தொகாவின் ஆறு தங்கக் காசு கிடைக்குதோ இல்லையோ, சன் டீவியில் வேட்டையாட தயாராத் தான் இருக்கீங்க :))))

தேவ், ஸ்கூலே தமிழ்ங்கிறப்போ, பொன்ஸும் தமிழ் தானேபா :)))

சீனு,
பங்காளியை விட ஒளிமயமான எதிர்காலம், இருக்கு உங்களுக்கு :))))

பொன்ஸ்~~Poorna said...

நீங்கள் சொல்வதனைத்தும் உண்மைதான் நதி. தமிழ் ஆசைக்குத் தான் படித்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். கொஞ்ச நாளில் அதுவும் காலாவதியாகிவிடலாம்.. :(

கொத்ஸ், நீங்க பெரிய கணக்காளரா இருக்கீங்க.. அது பாலா சொன்னது போல், முதல் சுற்றுக்கு 1 தங்கக் காசு, இரண்டாம் சுற்றுக்கு 2, மூன்றாம் சுற்றுக்கு 3. போதுமா? இப்போ சரியா? :)

நற்கீரன்,
நல்ல செய்தி. அங்கிருந்து தான் இறக்குமதி ஆயிற்றோ என்னவோ!

சேது,
கூடிய சீக்கிரம் எம் மக்களே உங்களை வந்தடைய வேண்டிக் கொள்கிறேன்.. வேறென்ன செய்ய :))

சுகுணா,
பாசிச, ஆணாதிக்க நடவடிக்கை என்று ஏனோ ஒப்ப முடியவில்லை. கடைசி வரியில் கொடுத்திருந்த விதமாக "தமிழ்" பேசுபவர்களை நீங்கள் தென்மாவட்டங்களில் பார்த்திருக்கிறீர்களா? அப்படி அவர்கள் யாரும் பேசாத ஒரு மொழியை "வளர்க்கும்" முயற்சி நடக்கும் போது, அதற்கு எதிராக, தனித் தமிழும் பேச முயலவேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு. அதற்காக, சுத்தமாக நம்மவருக்குப் புரியாத சங்கத்தமிழில் எல்லாம் இவர்கள் பேசவில்லை. அதிக ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசிச் செல்கிறார்கள். அவ்வளவு தான். சுலபத்திற்குத் தமிழ்ச் சொல் எளிது என்று தெரிந்து வைத்துக் கொள்வதில் என்ன குற்றம் இருக்க முடியும்? ஸ்கூல் தமிழ் தான் என்று நம்பும் தலைமுறையை உருவாக்கினால், நாளைக்குப் பள்ளிக்கூடம் என்ற சொல்லே அழிந்து போகலாமே?

பொன்ஸ்~~Poorna said...

கலை,
எந்தக் காலத்துல இருக்கீங்க, சால்ட், சுகர், பெப்பர் தான் சென்னையில் கிடைக்கும் :))

மஞ்சூர் ராசா,
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் எத்தனை காலம் இவர்கள் ஒளிபரப்புகள் ஓடும் என்றும் பார்க்க வேண்டும். ஏற்கனவே தென்மாவட்டங்களில் மக்கள் தொலைக்காட்சி தெரிவதில்லை என்று சொல்கிறார்கள்.

தருமி,
வேறே பின்னூட்டம் ஏதும் வரவில்லையே!

பாலா,
பா.க.சவில் நேற்றுவரை கொத்தனார் இருக்கவில்லை.. நல்லாவே ஆள் பிடிக்கிறீங்க :))))

சுந்தர்,
ம்ம்ம்.. பார்ப்போம் :)

ரவி,
நன்றி :) தமிழ்நாட்டுலயே பல இடங்களில் வருவதில்லையாம் :(

Anonymous said...

போட்டி பற்றி ஒருகருத்தும் இல்லை.இங்கே வந்திருக்கும் ஒரு பின்னூட்டுக்கான
மறுமொழி மட்டும்.

தனித்தமிழ்ங்கறது ஒரு அடையாளம், தாக்கிடம்(target), போய்ச்சேர வேண்டிய இடம்,
அதை அடையணும்,அவ்வளவுதான்.முழுசா அடையணுங்கறது அவசியம் இல்ல.
முயற்சிக்கறோம்.சொற்கள் எவ்வளவு தூரம் பரவலமாகுதோ அந்த அளவுக்கு.
அன்றாடம் நம்ம குமுகாயத்துக்குள்ள வரும் நுட்பியல் சொற்களை, புதுச்சொற்களை
வச்சுத் தான் இன்னும் பத்து,இருவது ஆண்டுகள்ல குமுகாயமே இயங்கப்போவுது.
மொழில இந்த வகை சொற்கள் 30 % பெறும்.இதுக்கெல்லாம் புதுச்சொல் காணாது விட்டா,
மொழியே இருக்காது.
தனித் தமிழ் செயற்கையொண்ணும் இல்ல, எல்லாம் நம்ம வட்டார வழக்குகள்ள
ஒளிஞ்சிட்டு இருக்கு.புதுசா ஒண்ணும் கண்டுபிடிக்க வேணாம்.வட்டார வழக்குச்
சொற்களப் பரவலப் படுத்தினாலே போதும்.

மணிமிடைப் பவளம் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், நல்ல தமிழ்ல எழுதுன
கம்பன் கூட ஒருவகையில தனித்தமிழ்க்கு முயன்றவன் தான்.ஒருவேள அவனும்
பொதுக்கையனோ(facist)? ஒட்டகம்,கரும்பு,உருளைக் கிழங்கு, பேரிக்காய், ஆடி(mirror),
முந்திரிக்காய், மிளகாய்ன்னுலாம் பேரு வச்ச முன்னோர் கூட பொதுக்கையரோ?


சுலபத்திற்கு சுளு,எளிதுன்னுலாம் சொல்லலாம்.ஏன் சுலபமே தமிழ் - பாகதத்திலிருந்து
வடமொழில திரிஞ்ச சொல்தானே.

//பெரிய அபத்தமாக இருக்கிறது. ஒரு மொழியைப் பேசுவதற்கு லஞ்சம் கொடுப்பதில் என்ன முற்போக்கு வாழ்கிறது? இதற்கும் கருணாநிதி சினிமாத் தலைப்புகளுக்கு வரிவிலக்கு கொடுத்த அயோக்கியத்தனத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? தனித்தமிழ் என்பதெல்லாம் கேலிக்கூத்து. அது ஒரு பாசிச ஆணாதிக்க நடவடிக்கை. purity is always directionally proportional to facism. இந்த மாதிரியான நான்சென்ஸ்களையெல்லாம் நீங்கள் ஆதரிப்பதும், விளம்பரப்படுத்துவதும் அதிர்ச்சியாகவும் கவலையாகவுமிருக்கிறது.//


பேசாம ஒண்ணு பண்ணலாம். மொத்த தமிழரெல்லாம் ஒண்ணாக் கூடி
நமக்கு எதுக்கு இந்த மொழின்னு எதாச்சும் தீர்மானம் கீர்மானம் எடுத்து
மூணு வாட்டி தலையச் சுத்தி அப்டியே எங்கனாச்சும் கடல் பக்கம்
வீசி எறிஞ்சிட்டு, தலை முழுகிட்டு,எல்லாரும் வேற மொழியப் பேசத்
தொடங்கலாம்.எதுக்கு வீணா இந்த தமிழ் நமக்கு, அதுவும்
நமக்கு வச்சு பாதுகாக்க வக்கில்லாதப்ப, செம்மொழிய வச்சுகிட்டு
என்ன பண்ண போறோம்.அப்புறம்,யாரும் பாசிசம் அது இதுன்னுலாம் பேச
வரமாட்டாக.

-பிரதாப்

Unknown said...

//தேவ், ஸ்கூலே தமிழ்ங்கிறப்போ, பொன்ஸும் தமிழ் தானேபா :)))//


அக்கா லேட்டாப் பதில் சொன்னாலும் வெயிட்டாப் பதில் சொல்லிட்டீங்க.. ரைட் ரைட்.. முயலுக்கு மூணு கால் தான்.. முயலுக்கு மூணு கால் தான்...சாரி.. இது வேற ஒரு போட்டிக்கு நான் மனப்பாடம் பண்ணிகிட்டு இருக்க டயலாக்..சும்மா பிராக்டீஸ் பண்ண உங்க பதிவுல்ல பின்னூட்டமாப் போட்டுக்கவா?

வெற்றி said...

[1]/* மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே */

[2]/* ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது */

பொன்ஸ், தாயே! உங்கள் பதிவில் ஒரு ஆங்கிலச் சொல்லை இரு முறை புழங்கியுள்ளீர்கள். :)))சும்மா, O.K. பிறகு இதுக்கெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது :))

/*நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு */

பொன்ஸ், பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி. அறிய வேண்டும் எனும் ஆர்வத்தில் கேட்கிறேன். மேலே நீங்கள் சொல்லியுள்ள வாய்க்கியத்தில் இலக்கணப் பிழை இல்லையா?
ஒன்றாம் வகுப்பு என்பது முதலாம் வகுப்பு என்றல்லவா சொல்லப்பட வேண்டும், இல்லையா? எனக்குத் தமிழ் இலக்கணம் எல்லாம் தெரியாது. ஈழத்தில், grade one ஐ முதலாம் வகுப்பு என்று சொல்லிப் பழகியதால் கேட்கிறேன். முதலாம் வகுப்பை ஒன்றாம் வகுப்பு என்றும் சொல்லலாமா?