Friday, November 03, 2006

இலவசமாய் ஏதுமில்லை..

"இந்த இடம் வரை 10ன்னு வருவது எப்படி திடீர்னு இங்கே வரும்போது 12 ஆகுது?" கணினியில் தட்டிக் கொண்டிருந்த சீ ப்ரோகிராமைப் பார்த்துக் கேட்டபின் தான் அதை வாய்விட்டு கேட்டுவிட்டதை உணர்ந்தாள் ராதிகா. லேசாக நாக்கைக் கடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது பிரபாகர் பின்னால் நின்றிருந்தான்.

கணினியுடன் பேசிக் கொண்டிருந்த காமெடியைப் பார்த்திருப்பானோ என்று அவஸ்தையாய்ச் சிரித்தபடி "எப்போ வந்தே பிரபா?" என்றாள்.

"நீ சீ(C) கம்பைலரோட பேசத் தொடங்கினப்பவே வந்திட்டேன்.. என்ன சொல்லுது உன் ப்ரோக்ராம்? சொன்னபடி கேட்குமாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான் பிரபாகர்.

"எங்கே?! அது அப்படியே என் தம்பி சுரேஷ் மாதிரி இருக்கு. நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறதுன்னு ஒரே அடம்.."

"ஏதாச்சும் உதவி வேணுமா? நான் பார்க்கவா?"

"வேணாம் வேண்டாம்.. எல்லாம் சுரேஷுக்குச் செய்கிற மாதிரி கன்னத்துல ரெண்டு, முதுகில ரெண்டு கொடுத்து வழிக்குக் கொண்டு வந்துக்கிறேன். நீ எதுக்கு வந்தே, அதைச் சொல்லு.. இத்தனை தூரம் என்னைத் தேடி வரவே மாட்டியே பொதுவா.."

"ம்ம்... " என்றவன் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான்.. "அப்படியே காபி மெஷின் வரை போய்ட்டு வருவோமா? இங்கே வச்சி சொல்றது ரொம்ப கஷ்டம்.."

"சரி சரி வா.. காபி குடிக்கிற நேரம் தான்" என்றபடி ராது எழுந்து கொண்டாள்.

அவர்கள் காபி போடும் இயந்திரத்தை நெருங்குமுன் அவர்களின் சின்ன முன்கதைச் சுருக்கம்: ராதிகாவும் பிரபாகரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகாமை வீடுகளில் வளர்ந்தவர்கள். சிலகாலத்தில் இரண்டு வீட்டாருமே புறநகரில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வெளியேறியபோதும் அதிசயமாக அங்கும் ஒரே பள்ளியில் சேர்ந்து, ஒரே கல்லூரியில் கூத்தடித்து - கவனிக்கவும், எங்குமே படித்தார்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அதைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் உண்டு.. - ஒரே பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தால் "வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) வேலை கிடைக்கப் பெற்று நல்லவேளையாக இங்கேயாவது வெவ்வேறு குழுவில் இவள் சீயும்(C) அவன் கோபாலுமாக (COBOL) பொட்டி தட்டிக் கொண்டு, இப்போதெல்லாம் பொட்டியுடனும் நிரலியுடனும் பேசிக் கொண்டுமிருக்கிறார்கள்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இந்த ப்ளோரில் காபிக்குச் சக்கரையே பத்தமாட்டேங்குது.. ஏன்னு புரியவே இல்லை.." என்றபடி வெளியில் வந்து பால்கனியருகில் நிற்கலானாள் ராதிகா.

"எல்லாம் உன்னை மாதிரி சக்கரை வியாதி கேஸ் இருக்குன்னு அவங்களுக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கும்.. "

"என்னது? சக்கரை வியாதியா? எனக்கா?"

"அதாம்மா, சக்கரையைப் பார்த்தாலே அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் வியாதி. "

"சொல்ல மாட்டே.. சரி, என்ன திடீர்னு ஐயாவுக்கு வேலை நேரத்தில் என் நினைவு? "

"ம்ம்.. அது வந்து.. இன்னிக்கு ஈவினிங் சீக்கிரம் கிளம்ப முடியுமா உன்னால?"

"கிளம்பலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனா, என்ன மேட்டர்?"

"இல்லை.. அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க... கோடம்பாக்கம் வரை போறோம்.."

"என்ன விஷயம்? எனக்குத் தெரிஞ்சு கோடம்பாக்கத்தில் எல்லாம் உனக்குச் சொந்தக்காரங்க கூட கிடையாதே! "

"அது வந்து.. அங்க.. அங்க எனக்கு... பொ... பொண்ணு பார்க்கப் போறோம்.. நீயும் கூட வந்தால் எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்.." மென்று விழுங்கிச் சொல்லும் தன் நண்பனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது ராதுவுக்கு..

"அப்படிப் போடு! கலக்கல்.. கங்கிராட்ஸ்.. யார் வாழ்க்கையைக் கெடுக்கப் போறே?! இந்தப் பாவத்துக்கு நானும் உடந்தையா இருக்கணுமா?!"

"போடி ராது, ரொம்ப கிண்டல் செய்யறதாக இருந்தா நீ வர வேணாம்.. நானே தனியாப் போய்க்கிறேன்.. ஏதோ எங்க அம்மா உன்னைக் கேட்கச் சொன்னாங்களேன்னு கேட்டேன்.." முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரபாகர்.

"சரி சரி.. மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பத்திரமா வச்சிக்கோ. போற இடத்துல காட்டிக்கிடலாம். இப்போ உனக்குத் தோழியா இருந்த பாவத்துக்கு வந்து தொலையறேன்.. அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு முடிஞ்சா கொஞ்சம் எச்சரிக்கையும் செய்யலாம் இல்ல.."

கிண்டலும் கேலியுமாக காப்பி முடிந்து பிரபாகர் முகமெல்லாம் வெட்கமும் சந்தோசமுமாக அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி அவனுடைய பணியிடத்துக்கு விரைந்தான்.

ராதிகா தொடர்ந்து சில நிமிடங்கள் காலி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள் - லேசான சோகமும் எட்டிப் பார்க்க.. கூடவே வளர்ந்தவனுக்குக் கல்யாணமே வந்துவிட்டது. அவளுக்கு இன்னும் லைன் கிளியராகும் வழியைக் காணோம். அவளின் அக்கா ரஞ்சனிக்கு அப்பா வரன் பார்த்துப் பார்த்து ஓய்ந்தே விட்டார். இந்தச் சந்தையில் அவளுக்கான விலையைக் கொடுக்கும் வசதியோ சக்தியோ அப்பாவுக்கு இல்லை. முதல் மகளான ரஞ்சனிக்கே இப்படி என்றால், ராதுவுக்கு என்று வரும் போது இன்னும் எத்தனை நாள் போகுமோ.. பெருமூச்சுடன் காலி கோப்பையைக் குப்பையில் போட்டுவிட்டு பத்து பன்னிரண்டான மாயத்தைப் பார்க்க இருக்கைக்கு விரைந்தாள் ராதிகா.



~~~~~~~~~~~~~~~~~~~~~~



"ராது, என்ன சொல்றே? மஞ்சு எப்படி?" மதிய உணவுக்கு வெளியில் போகலாம் என்று பிரபாகர் சொன்ன போதே தெரியும் இதைப் பற்றித் தான் பேசப் போகிறான் என்று.

"நல்லாத் தான் இருக்கா.. நீதான் முடிவெடுக்கணும்.. உனக்கு எப்படித் தோணுது?" பந்தை அவன் பக்கம் அனுப்பினாள் ராதிகா.

"ரொம்ப அழகா இருக்கா ராது.."

"ம்ம்.."

"எத்தனை இனிமையான குரல் அவளுது.! "

"ம்ம்.."

"அவ டிரெஸ் சென்ஸ் கூட பயங்கர ரசனையா இருக்கு.. டிப்ளோமெட்டிக்கா பேசுறா.."

"அப்புறம்?"

"ரொம்ப நல்ல பொண்ணு.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அவளை ரொம்ப பிடிச்சிபோச்சு." பேசும்போதே துள்ளி குதித்துக் கொண்டு பேசினான் பிரபாகர்.

"ம்ம்.. "

"என்ன ராது, ரொம்ப ஆர்வமே இல்லாம கேட்குறே.. நேத்தே பார்த்தேன், உன் முகம் அத்தனை தெளிவா இல்லை. கோடம்பாக்கம் வரை வரும்போதும் சரி, அங்கே மஞ்சுவைப் பார்த்துப் பேசும் போதும் சரி.. நீ ஏதோ யோசனையிலேயே இருந்தா மாதிரி இருந்தது.. தப்பா நினைக்கக் கூடாது.. ராம் சொல்றான், நான் வேற இடத்தில் பெண்பார்க்கப் போனது, அதுக்கு உன்னையே செலக்ஷன் கமிட்டிக்குக் கூப்பிட்டது அது தான் உனக்குப் பிடிக்கலைன்னு.. அதான்.. அதான்.. அதனால உனக்கு ஏதும் ?" கேள்வியை முடிக்க முடியாமலேயே பிரபாகரன் திக்கியபோது வெகு நேரத்துக்குப் பின் ராதிகாவுக்குச் சிரிப்பு வந்தது.

"ராமை விடு, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"ம்ம்.. கேளு.. உனக்கில்லாத உரிமையா.." ஏதும் சங்கடமான கேள்வியாக இருக்கக் கூடாதென்று பிரபாகரன் இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வது அவன் முகத்தில் தெள்ளெனத் தெரிந்தது.

"உனக்கு எவ்வளவு சம்பளம்?"

"உன் சம்பளமே தான்.. மாசம் முப்பதாயிரம் தான்.. நான் கொஞ்சம் டாக்ஸ் ஸேவிங்க்ஸ் எல்லாம் செய்திருக்கிறதுனால கூட ஒரு மூவாயிரம் வரும்.."

"உங்க கொட்டிவாக்கம் வீடு சொந்த வீடு தானே? ஒரே பையன்ங்கிற முறையில் அதுவும் உனக்குத் தானே?"

"ஆமாம்.. அப்பா பேரில் இருக்கு ஆனா, என் வீடு தான்.. என்ன சந்தேகம் திடீர்னு?"

"மஞ்சுவுக்கும் கிட்டத் தட்ட இதே சம்பளம் தானே?"

"ஆமாம். அவளுக்கு ஒரு ஐயாயிரம் குறைவுன்னு நினைவு.."

"நல்லா படிச்சிருக்க, சொந்தமா வண்டி வேற வாங்கிட்டே.. வீடு இருக்கு. மாசா மாசம் கைநிறைய சம்பளம். மஞ்சுவின் சம்பாத்தியமும் இனிமே உனக்குத் தான் வரப் போகுது. அப்புறம் ஏன் உங்கம்மா நேத்து அந்த மஞ்சு வீட்டில் அத்தனை கண்டீஷன் போடறாங்க?!"

"என்ன கண்டீஷன்?"

"ஆகாகா.. என்னவோ தெரியாத மாதிரி கேட்கிறே! நீ மஞ்சுவோட தனியாப் பேசணும்னு வெளியில் போனப்போதான் பேசிகிட்டிருந்தாங்க.. ஒரு லட்சம் ரொக்கம், ஐம்பது சவரன் நகை.. அப்புறம் ஐயாவுக்கு ஒரு கார் வேற வேணுமாமே, பேரம் பேசுறது மாதிரி ஒரு பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்த காரை வேணாம்னு சொல்லிகிட்டாங்க.. உனக்கெதுக்கு இதெல்லாம் இப்போ?!!"

"இதெல்லாமே கேட்டாங்களா அம்மா?! " பிரபாகரனின் முகம் கொஞ்சம் மாறியது போலிருந்தது.

"ஓ உனக்குத் தெரியாதா?! சொல்லவே இல்லையா?! " தன் நண்பனுக்கு இந்த அநியாயத்தில் பங்கில்லை என்று தெரிந்தபோது ராதுவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"சொல்லவே இல்லை.. ம்ம்.. இருக்கட்டும், அம்மா கேட்டால் கேட்கட்டுமே...என்ன வந்தது இப்போ. " ஒன்றுமே நடக்காதது மாதிரி இனிப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் பிரபாகர்..

"டேய் என்னடா சொல்ற நீ? வரதட்சணை வாங்குறது பாவமில்லையா! இந்தப் பணம் வந்து தான் உனக்கு அடுத்த வேளை சாப்பாடுன்னு இல்லையே! "

"இருக்கட்டுமே ராது, ஃப்ரீயா விடு, இலவசமா வர்றது தானே.. என்ன மாதிரி வந்தா என்ன, மஞ்சுவுக்கு தானே அவுங்க வீட்ல செய்யப் போறாங்க.. நானா கேட்டேன்? தானா வரப் போகுது, நான் கேட்கலை, வேணாம்னும் சொல்றதாக இல்லை. நீ சாப்பிடு.."

ராதிகா அருகிலிருந்த சர்வரை அழைத்து சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.."நான் கிளம்புறேன் பிரபா, என்னோட தோசை வரும், அதையும் நீயே சாப்பிட்டுடு.".

"ஹே ராது, எங்க போறே? "

"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."

விளக்கங்களுக்கோ விவாதங்களுக்கோ நேரம் கொடுக்காமல் நடந்து கொண்டிருந்த ராதிகாவை வியப்புடன் பார்க்கத் தொடங்கினான் பிரபாகர்.

43 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்குங்க. நடுவில வந்த அந்த் சுஜாவைத் தவிர!

வெட்டிப்பயல் said...

நல்ல கதை பொன்ஸ்! வாழ்த்துக்கள்

VSK said...

இத்தனை நாள் கூடப் பழகியவனைப் புரிந்து கொள்ள ராது கொடுத்த்தும் ஒரு விலைதானே, பொன்ஸ்?

அதான் எதுவும் இலவசமா வர்றதில்லைன்னு சொன்னீங்களோ?

அதிலும் அந்த பொருள் பொதிந்த முதல் வரி மிகவும் அருமை!

பிரபாவின் பதிலும் இன்னும் கொஞ்சம் கதைக்கு சரியாக வந்திருக்கலாம்!

நல்லா இருந்தது!

வாழ்த்துகள்!

நெல்லை சிவா said...

நல்லா விறுவிறுப்பா கொண்டு போனீங்க. ஆனா, முடிவுதான் ரொம்ப யதார்த்தமா இல்லாதது மாதிரி படுது.

ரொம்ப நாளா போட்டியில கலந்துக்கலை. உங்க வரவால, இந்தமுறை போட்டி களை கட்ட ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

அதிகம் டீவி பக்கம் போறீங்கன்னு நெனைக்கிறேன்.
நாடக நடை!

மனதின் ஓசை said...

நல்லா எழுதி இருகீங்க..
ஆரம்பத்தில் வரும் உரையாடல்கள் நன்றாக உள்ளன.
ஆனா முடிவு கொஞ்சம் ஓவரா இருக்க மாதிரி இருக்கு..

எனிவே.. அவள் அக்கா கல்யாணம் வரதட்சனையால் தடைபடுவதையும் கூடவே சொல்லி இருப்பதால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்..


//உன் சம்பளமே தான்.. மாசம் முப்பதாயிரம் தான்.. நான் கொஞ்சம் டாக்ஸ் ஸேவிங்க்ஸ் எல்லாம் செய்திருக்கிறதுனால கூட ஒரு மூவாயிரம் வரும்.."//

ஹலோ.. பொன்னுங்களுக்கு tax slabsலயே சலுகை உண்டு இல்லயா? டாக்ஸ் ஸேவிங்க்ஸ் செய்யாமலேயே 3000 கூட வருமே :-)

வினையூக்கி said...

//"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."

//

Nalla irukku.

நாடோடி said...

//"வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) //

"கம்பேனி சொந்த செலவில் சூனியம் வைக்கும் திட்டமுனும்" சொல்லலாம்.

கவிதா | Kavitha said...

பொன்' ஸ் திருப்பியும் யானை ' மாத்தியாச்சா?.. ம்ம்...

Anonymous said...

Nalla irukku, vaashthukkal :)

ராம்குமார் அமுதன் said...

நல்ல கதை.... ஆனா ஒரு நண்பனோட தவற திருத்துறத விட்டுட்டு கைகழுவிட்டு போறது கொஞ்சம் நெருடலா இருந்தது..... அது அவங்களுக்கும் அவங்க அக்காவுக்கும் இதே வரதட்சணை பிரச்சனை இருக்கிறதுனாலோன்னு கூட ஒரு எண்ணம் வருது....

போட்டிக்கான வாழ்த்துக்கள்.......

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ்,
// நடுவில வந்த அந்த் சுஜாவைத் தவிர! //
குற்றம் கண்டுபிடித்தே.. ;) மாத்திட்டேன்..

நன்றி பித்தானந்தா,

எஸ்கே, எத்தனை நாள் பழகினாலும், நம் சமூகத்தில் இந்த மாதிரி வரதட்சணை போன்ற விஷயங்களில் உடைத்து பேச முடியவில்லை.. அதனால் தான் அவள் அத்தனை பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது..

//பிரபாவின் பதிலும் இன்னும் கொஞ்சம் கதைக்கு சரியாக வந்திருக்கலாம்!
//
பிரபாவின் பதில், உண்மையாகவே அதே தான்.. அதே தான் கிடைத்தது பிரபாகரிடமிருந்து. வேறு என்ன எழுதிவிட முடியும்?.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியுடன் தான் எழுதினேன்..

Anonymous said...

உண்மையாக வாழ்க்கையில் இதுபோல நடந்தால் பொறாமை என்றுதான் முத்திரை குத்தப்படும்.

விமர்சனம்';

http://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html

பொன்ஸ்~~Poorna said...

நெல்லை சிவா, நான் இதுவும் போட்டிக்கு எழுதலைங்க.. சும்மா தலைப்புக்கு எழுதினேன்.. அவ்வளவு தான்.. :)

//முடிவுதான் ரொம்ப யதார்த்தமா இல்லாதது மாதிரி படுது//
//அதிகம் டீவி பக்கம் போறீங்கன்னு நெனைக்கிறேன்.
நாடக நடை! //
ம்ம்.. தெரியுது.. வேற என்ன பண்றதுன்னு தெரியலை.. மாத்தலாமான்னு யோசிச்சேன்.. கொஞ்ச நாள் கழித்து மாற்றிப் போடுறேன்..

பொன்ஸ்~~Poorna said...

மனதின் ஓசை,
// ஆனா முடிவு கொஞ்சம் ஓவரா இருக்க மாதிரி இருக்கு..
// ம்ம்ம்.. உண்மைதான்..

//ஹலோ.. பொன்னுங்களுக்கு tax slabsலயே சலுகை உண்டு இல்லயா?// ஹி ஹி.. :)))

நன்றி வினையூக்கி

//கம்பேனி சொந்த செலவில் சூனியம் வைக்கும் திட்டமுனும்//
நாடோடி, கம்பனி செலவு இல்லையாமே! காம்பஸுக்கு வருவதற்கு கம்பனி தான் பணம் கொடுக்குதுங்கிறீங்களா? காலேஜ்காரங்க தர மாட்டாங்க? ;)

பொன்ஸ்~~Poorna said...

//பொன்' ஸ் திருப்பியும் யானை ' மாத்தியாச்சா?.. ம்ம்... //
ஹி ஹி.. கவிதா, மாற்றம் என்பது மானிடத் தத்துவம் :))

நன்றி ஹனீப்

அமுதன், கரெக்ட்தான்.. ஆனால், இந்த விஷயத்தில் இப்படிப் பேசினால் தான் பிரபாகர் வழிக்கு வருவான் என்று கூட அவள் அப்படிச் சொல்லி இருக்கலாம்..

சிந்தாநதி
//உண்மையாக வாழ்க்கையில் இதுபோல நடந்தால் பொறாமை என்றுதான் முத்திரை குத்தப்படும்.
//
அது சரி :)))

நாடோடி said...

//நாடோடி, கம்பனி செலவு இல்லையாமே! காம்பஸுக்கு வருவதற்கு கம்பனி தான் பணம் கொடுக்குதுங்கிறீங்களா? காலேஜ்காரங்க தர மாட்டாங்க? ;)//

நான் சொன்னது recruitment ஆனபிறகு வர சூனியம்.

ILA (a) இளா said...

போட்டிக்கான வாழ்த்துக்கள்

மா சிவகுமார் said...

'கொடுக்க மாட்டோம் வரதட்சணை' என்று பெண்கள் உறுதி பூண்டு இலவசமாக திருமண இணை சேர்க்கும் விளம்பரப் பகுதி தினமலரில் வெளியாகிக் கொண்டிருந்தது.

இவ்வளவு படித்து, கை நிறைய பணம் சம்பாதித்து, உலகம் எல்லாம் சுற்றிப் பார்த்து யாருக்கும் சளைக்காமல் வீட்டையும் நாட்டையும் ஆளும் பெண்கள் இந்தக் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பதுதான் அதிசயம். கதையின் நாயகி போல ஒவ்வொரு பெண்ணும் நட்பையும், உறவையும், திருமணத்தையும் உரைகல்லில் உரைக்க முன் வந்தால் எவ்வளவு நாள் இந்த அநாகரீகம் தொடரும்?

அன்புடன்,

மா சிவகுமார்

VSK said...

நான் சொன்னது அந்த அழுத்தமான முதல் வரிக்கு பிரபா சொன்ன பதிலை.

கடைசியில் பிரபா சொன்னது போல பலர் என்னையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்காங்க!!

அதைச் சொல்லலை!

கப்பி | Kappi said...

நல்லா இருக்குங்க பொன்ஸ்!

Sivabalan said...

பொன்ஸ்

கதை நல்லாயிக்குங்க..

Boston Bala said...

class-ஆ வந்திருக்கு.

---ஆனா ஒரு நண்பனோட தவற திருத்துறத விட்டுட்டு கைகழுவிட்டு போறது--- என்னும் அமுதனின் கதாபாத்திர கண்ணோட்டத்தோடு எனக்கும் ஒப்புமை உண்டு. நமக்கு அறிமுகமானவர்களிடமே நம் எண்ணங்களைப் பகிர்ந்து ஊடுருவாவிட்டால், சமூகத்தை எப்படி மாற்ற முடியும்...

என்றாலும், கதையின் கேரக்டர் அப்படி என்று யோசித்தால் நல்ல கதை : )

போட்டிக்கு லேதுவா :ஓ!

பங்காளி... said...

இந்த அம்மனிக்கு கதாயினி பட்டம் வழக்க வேண்டுமாய் முன்மொழிகிறேன்....யாருப்பா வழி மொழியறது!...வாங்க வரிசையா வந்து சொல்லுங்க........

நாமக்கல் சிபி said...

நல்ல கதைங்க பொன்ஸ்...

இந்த கதைக்கு இதுதான் சரியான முடிவு... நான் அந்த இடத்துல இருந்தாலும் இந்த அளவுக்கு உரிமையுள்ள நண்பன்கிட்ட அப்படித்தான் நடந்துக்குவேன்...

இதுக்கு மேல பிரபா திருந்தி ராதிகாவுடன் நட்பாகியிருக்கலாம் (அந்த பிரிவே காதலாகக்கூட மாறலாம்)... அது பார்ட்-2 :-)

குமரன் (Kumaran) said...

//"ரொம்ப அழகா இருக்கா ராது.."

"ம்ம்.."

"எத்தனை இனிமையான குரல் அவளுது.! "

"ம்ம்.."

"அவ டிரெஸ் சென்ஸ் கூட பயங்கர ரசனையா இருக்கு.. டிப்ளோமெட்டிக்கா பேசுறா.."
//

ஒருதடவை ஒரு பொண்ணைப் பார்த்துட்டு ஒரு ஆணால் இப்படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொத்தமா 'நல்லா இருக்கா. அழகா இருக்கா. பிடிச்சிருக்கு'ன்னு சொல்ல முடியுமே தவிர அழகு, குரலினிமை, டிரெஸ் சென்ஸ் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இந்த மூன்றில ஒன்றை மட்டும் சொல்வது முயலும். ஆனால் மூன்றையும் ஒரே நேரத்தில் கவனிப்பது ஒரு ஆணுக்கு இயலாத காரியம். :-) Moreover men are not that detail oriented. :-)

குமரன் (Kumaran) said...

//"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."//

எனக்கும் இப்படி ஒரு தோழி இருந்தார். ஒரு முறை அவரைப் பற்றிச் சொல்கிறேன் என்று அவர் நினைத்துக் கொள்ளும்படியாக ஒரு வார்த்தையை விட்டேன். எப்படி நீ அப்படி சொல்லலாம் என்று சண்டைக்கு வந்தார். சும்மா ஜாலிக்குத் தானே என்றால் உனக்கு வேண்டுமானால் அது ஜாலியா இருக்கலாம்; ஆனால் எனக்கு அது சீரியஸ் தான்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் என்னோட பேசறதே இல்லை. :-) நல்ல தோழி அவர்.

Chellamuthu Kuppusamy said...

வாட் இஸ் திஸ்..ஊருக்குள்ள பொண்ணு கெடைக்காம பசங்க எல்லாம் அலையறதாப் பேசறாங்க. இது போல நீங்க பொய்ப்பிரச்சாரக் கதையை எழுதி ..என்னமோ போங்க. எங்க அண்ணாத்த பாலபாரதி கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ணனும்

லதா said...

// ராதிகாவும் பிரபாகரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகாமை வீடுகளில் வளர்ந்தவர்கள். சிலகாலத்தில் இரண்டு வீட்டாருமே புறநகரில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வெளியேறியபோதும் அதிசயமாக அங்கும் ஒரே பள்ளியில் சேர்ந்து, ஒரே கல்லூரியில் கூத்தடித்து - கவனிக்கவும், எங்குமே படித்தார்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அதைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் உண்டு.. - ஒரே பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தால் "வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) வேலை கிடைக்கப் பெற்று //
//"இருக்கட்டுமே ராது, ஃப்ரீயா விடு, இலவசமா வர்றது தானே.. என்ன மாதிரி வந்தா என்ன, மஞ்சுவுக்கு தானே அவுங்க வீட்ல செய்யப் போறாங்க.. நானா கேட்டேன்? தானா வரப் போகுது, நான் கேட்கலை, வேணாம்னும் சொல்றதாக இல்லை. நீ சாப்பிடு.." //
அத்தனை வருடம் ஒன்றாகப் பழகியும்கூட, ஒருவரைப்பற்றி மற்றவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா ? அல்லது சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லையா ? ஏதோ லாஜிக் சரியில்லாததுபோல் தோன்றுகிறது.

//எல்லாம் சுரேஷுக்குச் செய்கிற மாதிரி கன்னத்துல ரெண்டு, முதுகில ரெண்டு கொடுத்து வழிக்குக் கொண்டு வந்துக்கிறேன்.//
இந்த வழியை ராது முயற்சி செய்யவில்லையா ?

மற்றபடி அமுதனின் கருத்துதான் என் கருத்தும்.

Anonymous said...

நல்ல கதையோட்டம். முடிவுதான் ஒருபக்க கதைபோல சட்டென்று முடிந்து விட்டது.
இந்த வரதட்சணைக் கொடுமை என்றுதான் தீருமோ ? பெண் மறுவீடு போகிறாள் என்கிற கருத்தில் அவள் கூட அனுப்பியதில் ஆரம்பித்த இந்த பழக்கம் இன்னும் விடவில்லை.

பிரபாவின் வாதம், சும்மா கேட்காமல் கிடைப்பதை ஏன் விடவேண்டும் என்பது அவனது தாய் பேரம் பேசினாள் என்பதோடு முரண்படுகிறதே!

(ப்ளாக்கர் பிரச்சனையால் மடலில் மட்டுமே வந்த பின்னுட்டத்தை இங்கே இடுகிறேன்.. - பொன்ஸ் )

Anonymous said...

எழுத்து நடை நல்லாயிருக்கு..

(மடலில் வந்த பின்னூட்டம்; ப்ளாக்கர் பிரச்சனை - பொன்ஸ்

G.Ragavan said...

பொன்ஸ்....இப்பத்தான் படித்தேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பொறாமை என்று அந்தப் பெண்ணின் கருத்தை ஊதித் தள்ளிவிட முடியாது. அந்தப் பெண் செய்ததே சரி என்று நான் சொல்வேன்.

இதே போல இரண்டு நண்பர்கள் இருந்து ஒரு நண்பன் சாதியை உயர்த்திச் சொல்ல....சாதியால் பல கொடுமைகள் பட்ட இன்னொரு நண்பன் காதில் விழுந்தால் அந்த இன்னொருவன் என்ன முடிவு எடுப்பான்? கண்ணாடியில் விழுந்த கீறல் கீறலே! ஒட்ட வைத்தாலும் வடு தெரியும்.

வரதட்சனை என்ற கொடுமை கண்டிப்பாக ஒழியத்தான் வேண்டும். ஆனால் இன்று அதுவே ஒரு பாஷன் போல மாறி வருவதுதான் வேதனை. குடுக்க முடியுது..குடுக்குறாங்கன்னு எளிமையாச் சொல்லீட்டுப் போயிர்ராங்க.

வலைப்பூ படிக்கும் நண்பர்களே. திருமணம் செய்யப் போகிறீர்களா? தயவுசெய்து வரதட்சணை கேட்காதீர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பலருக்காக நான் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

நாடோடி, எஸ்கே,
மீண்டும் வந்து விளக்கியதற்கு அனேக நன்றிகள்..

சிவகுமார்
//வீட்டையும் நாட்டையும் ஆளும் பெண்கள் இந்தக் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பதுதான் அதிசயம்.//
அதிசயமே இல்லைங்க.. அதற்கும் நிறைய காரணங்கள் இருக்கும், காலம் மாற மாற காரணங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது, பழக்கம் தேய்வதில்லை..

இளா, கப்பிப் பய, சிவபாலன்,
வாழ்த்துகளுக்கு நன்றி

பாஸ்டன் பாலா,
//class-ஆ வந்திருக்கு.//
நன்றி :)))

//போட்டிக்கு லேதுவா :ஓ!//
ஒரு முறை தமிழோவியத்தில் எழுதியதே போதும்னு.. ஹி ஹி :)

பங்காளி,
//இந்த அம்மனிக்கு கதாயினி பட்டம் வழக்க வேண்டுமாய்..//
ஹி ஹி.. ரொம்ப நன்றிங்கோ..

வெட்டிப்பயல்,
//அது பார்ட்-2 :-)//
இதுக்குக் கூட பார்ட் டூவா!!! :))

பொன்ஸ்~~Poorna said...

குமரன்,
//Moreover men are not that detail oriented. :-)//
சரிதான், ஆனா இதுக்கு முன்னாடி வந்து கருத்து சொல்லி இருக்கும் men யாரும் இதைப் பத்திச் சொல்லவே இல்லையே? இத்தனை டீடெய்ல்டா பெண் பார்த்துட்டு வந்து பேசும் ஆண்களும் இருக்கத் தான் செய்றாங்க என்பது என் அனுபவம். உண்மையான்னு மத்த வலையுலக இளைஞர்கள்(!) சொல்லணும்.. ;)

//சீரியஸ் தான்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் என்னோட பேசறதே இல்லை. :-)//
சிரிப்பான் out of place ஆக இருந்தாலும், என் கதைக்கு ஒரு supporting கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)))



குப்புசாமி,
//ஊருக்குள்ள பொண்ணு கெடைக்காம பசங்க எல்லாம் அலையறதாப் //
அடப்பாவமே.. ஊரை விட்டு வெளியில் இருந்தா இப்படித் தான்.. சரி, இதுக்கு அண்ணாத்தயை ஏன் அழைக்கிறீங்கன்னு புரியலியே.. ;)



//ஏதோ லாஜிக் சரியில்லாததுபோல் தோன்றுகிறது.//
விளக்கத் தெரியலை லதா. எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு பிரச்சனைகள் எதிர்ப்படும் போது தானே தெரியும்.

//இந்த வழியை ராது முயற்சி செய்யவில்லையா ?//
சுரேஷ் அளவுக்கு நெருங்கிய உரிமை பிரபாவின் மீது அவளுக்கு இருக்கிறது என்று கதை தெளிவாகச் சொல்கிறதா என்ன?



//பிரபாவின் வாதம், சும்மா கேட்காமல் கிடைப்பதை ஏன் விடவேண்டும் என்பது அவனது தாய் பேரம் பேசினாள் என்பதோடு முரண்படுகிறதே//
தாய் வேறு மகன் வேறு, மணியன்! தாய் இது விஷயத்தில் பேரம் பேசுவதை அவமானமாகக் கருதவில்லை, மகன் வரதட்சணை பற்றிப் பேசுவதை நாகரீகக் குறைவாக நினைத்தாலும், ஏன் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறான்..



//எழுத்து நடை நல்லாயிருக்கு.. //
நன்றி ஆழியூரான்



//இன்று அதுவே ஒரு பாஷன் போல மாறி வருவதுதான் வேதனை//
அதே தான் ராகவன்..

//வலைப்பூ படிக்கும் நண்பர்களே. திருமணம் செய்யப் போகிறீர்களா? தயவுசெய்து வரதட்சணை கேட்காதீர்கள். //
அப்படியே வழி மொழிகிறேன். அத்துடன், வீட்டில் கேட்கிறார்கள் என்றால் இலவச வருமானம் தானே என்று நினைக்காமல் அதையும் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கும் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், நல்லா எழுதி இருக்கீங்க. நகுதற் பொருட்டு...
ஞாபகம் வர்ய்து.
வருது.
எந்தக் காலத்திலேயும் யாரும் மாறுவதாகத் தெரியவில்லை.
எனக்குத் தெரிந்த ஒருவர், கொடுத்த பணத்தைத் திருப்பிவிட்டவர்,

பேர் சொல்ல முடியாது. அவர் நல்லா இருக்கணும்.
நன்றி பொன்ஸ்,. வலையின் இளஞர்கள் புரிந்து கொள்வார்கள்.

மனதின் ஓசை said...

//Moreover men are not that detail oriented. :-)//
பொன்ஸ்.. குமரன் சொல்றது சரிதான்.. men are not that detail oriented. it is true.

குமரன் (Kumaran) said...

//சிரிப்பான் out of place ஆக இருந்தாலும், என் கதைக்கு ஒரு supporting கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)))
//

Supporting-aa? அந்தத் தோழியை நான் இதுவரை பார்த்ததே இல்லை அம்மணி. வலையுலகத் தோழி தான் அவர். :-)

Anonymous said...

எளிய நடை, நல்ல கதை...கதைக்கேற்ற முடிவு..தோழியின் பிரிவு பிரபாவை யோசிக்க வைக்கும்!!

வவ்வால் said...

வணக்கம் அம்மா பொன்ஸ்!

கதை பிரமாதம் .. போங்க... ஆனால் எதார்த்தம் இல்லாமல் காகிதப்பூ போல் இருக்கு ... ஆனால் கதை என்றால் இப்படி எல்லாம் தான் எழுத வேண்டி இருக்கும் ...ஹே.. ஹே. நாட்டு நடப்ப அப்படியே எழுதினா அது செய்திதாளில் வரும் செய்திப்போல தான் இருக்கும்.

Anonymous said...

hi,
இது ஒரு நல்ல கதை ஆனால் உங்களால் இதைவிட நல்லல எழுதி இருக்க முடியும்... போன முறை நீங்க போட்டிக்கு எழுதி இருந்தது நல்லா வந்து இருந்தது. இடையில் நான் லீவில் போய்ட்டு இப்போ தான் blogging திரும்பி ஆரம்பிச்சேன். அதுதான் யாரையும் contact பண்ண முடியல...
நீங்க என்னோட அய்யனுலகத்துல இருக்கிற சிந்தனைச் சிதறல்களைப் படிப்பீங்கன்னு நம்புறேன். அவை உங்களோட கருத்துக்காகவும் காத்திருக்குங்கிறதை மறக்க வேண்டாம்.

சாணக்கியன் said...

ம்ம்ம்.. இது போன்ற ஆண்கள் எல்லாம் ஆண்களே கிடையாது. ராதுவின் கோபம் முற்றிலும் நியாயமானது. இதே போல மாப்பிள்ளை எதுவும் வேண்டாம் என்றாலும் பெற்றோர்களிடம் சண்டை போட்டு அது வ்ஏண்டும் இது வேண்டும் என்று கேட்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப் பற்றியும் ஒரு கதை எழுதி விடுங்களேன்!

Anonymous said...

பொன்ஸ்,

கத நல்லாத்தான் இருக்குது. ரொம்ப இயல்பான நடையில எழுதியிருக்கீங்க. வாசிக்க சுவையாத்தான் இருந்தது.
ஆனாலும், கருத்து ரீதியா பார்த்தா எனக்கென்னமோ ராது செஞ்சது, 'குளத்து கிட்ட கோவிச்சுக்கிட்டு எவனோ எதயோ கழுவாம போன' கதயத்தான் ஞாவத்துக்குக் கொண்டு வந்தது.

பொறவென்னங்க.. இவுக கோவிச்சுட்டு போயிட்டா அவரு வரதட்சணையை வாங்க மாட்டாரா? அழகா, புது்சா, படிச்ச, சம்பாதிக்குற பொண்டாட்டி வர்ற கனவுல இருக்குறவனுக்கு எப்படி வரதட்சணை பெரிய விசய்மா இருக்கும்?

அதனால அவனுக்கு எடுத்துச் சொல்றத விட்டுபோட்டு இவங்க 'டயலாக்' அடிச்சுட்டு ஓடிப் போயிட்டாங்களாம்.

என்னமோ போங்க, பொம்பளைங்க கதை எழுதுனா ஆம்பளைங்களுக்கு 'சுருக்' மெச்செஜ் குடுக்குறதா நெனச்சு கதைக்கு சுருக்கைப் போட்டு தொங்க விட்டுடுறீங்க :-)

நல்லா இருங்க !!

சாத்தான்குளத்தான்

சாத்வீகன் said...

பொன்ஸ்.

கதை நாயகன் அப்பாவியாய்த்தான் தெரிகிறான். சம்பாதித்து தரக் கூடிய தங்க வாத்தை தாய் சொல் கேட்டு சொற்ப வரதட்சணைக்காக அறுக்கும் அவனை வேறென்ன சொல்வது.

இப்போதெல்லாம் எல்லாருமே விவரம்தான்...

படித்திருக்கிறான், ஆனால் சுய தொழில் செய்கிறான், வரதட்சணை வேண்டாம் என சொல்லும் மணமகனை முதல் நிலையிலேயே வேண்டாம் என சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள்...

இல்லானை இல்லாளும் வேண்டாள்... அவ்வை சொல்ல வில்லையா...

உற்ற துணையை தேர்வது மட்டுமே திருமணங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த உற்ற துணையை இரு தரப்பிலும் பொருளாதார காரணிகள் நிர்ணயிக்கின்றன என்பதை மறுக்க இயலாது.