ஏற்கனவே தமிழ்ச்செல்வனின் "அரசியல் எனக்குப் பிடிக்கும்" படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, ஓட்டு போடுவது மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்குமான தொடர்பு என்ற என் பழைய எண்ணங்களிலிருந்து, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா குடிமகனின் தினசரி வாழ்வு அரசுடன் எத்தனை பிணைத்திருக்கிறது என்று புரியவந்தது. நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறார் ஆசிரியர். கணினி மொழியில் சொல்லும் ஒன்றும் பூஜ்யமும் இல்லாத இடைப்பட்ட நிலையான fuzzy logic மாதிரியான நிலைகள் ஒரு மனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கவே முடியாது என்ற அந்தக் கருத்தும் எனக்குப் புதுமையான ஒன்று. மற்ற விமர்சனங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. கடைசி சில அத்தியாயங்கள் மட்டும் ஏதோ கம்யூனிச கட்சிப் பிரசாரம் போல் எனக்குத் தோன்றியது. மற்றபடி மிக அற்புதமான புத்தகம் அது.
அந்தப் புத்தகத்தைப் படித்த அதே உணர்வோடு வெயிலோடு போகத் தொடங்கினேன். "வெயிலோடு போய்", பெரும்பாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளினால் மட்டுமே பிழைக்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்வைப் பற்றிய கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் படித்து முடித்தபின் குறைந்தது இரண்டு நிமிடமாவது ஒதுக்கிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. வாழ்வியலின் யதார்த்தம் அடங்கிய கதைகள்.
பெற்றோரும் குழந்தைகளும் எத்தனைதான் நாளெல்லாம் உழைத்தாலும், ஒரு இனிப்பு வாங்கிச் சாப்பிடக் கூட முடியாத அவலங்களைப் பேசுகிறது 'பாவனை'. குழந்தைகள், இனிப்பு வண்டிக்காரனின் வண்டியில் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிடுவதாக பாவனை செய்து மகிழ்வதைப் படிக்கும் போது எங்கள் வீட்டருகில் வந்த குல்பி வண்டிக்காரனிடமிருந்து உடல் நிலைக்காக "தினசரி ஐஸ்கிரீம் வாங்கித் தரமாட்டேன்" என்று அப்பா சொன்னபோது கோபப்பட்டு அழுத நாட்களின் நினைவு அவமானத்துடன் எழுகிறது.
"வார்த்தை" என்ற கதையில் பள்ளிச் சுற்றுலாவுக்காக தயாராகும் சின்னப் பையனின் கண்ணினூடாக நகரும் சிறுகதையும் அடுத்த அழகான கதை. மிக மிக இயல்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சின்ன குடும்பத்தின் பாசம், அன்பு, கண்டிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் அற்புதமாக வடித்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை படிக்கத் தொடங்கும்போதே முடிவை ஒரு மாதிரி ஊகித்துவிட முடிகிறது என்றாலும் கதையின் அழகு 'இன்னும் இன்னும்' என்று திருப்ப வைப்பதுடன், கடைசியில் சிறுவன் சோலையின் சோகம் நமக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்கிறது.
'சுப்புத்தாய்'உம் 'அசோகவனங்களும்' கொஞ்சம் வளர்ந்த தீப்பெட்டித் தொழிலாளிகளின் சோகம். வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களைத் தவறான கோணத்தில் பார்ப்பதென்பது அடிமட்ட துப்புரவுத் தொழிலாளர்களில் தொடங்கி, கால் சென்டர்களில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்கள் வரை எல்லா நிலையிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. பால் கொடுக்கும் தாயின் மார்பைப் பார்த்து மகிழும் சுப்பத்தாயின் தொழிற்சாலைக் கணக்கனையும், கட்டின கணவன் மாதிரி மரியாதை இல்லாமல் அழைக்கும் மாரியம்மாவின் கணக்கப் பிள்ளையும் இருக்கும் வரை எல்லா வேலையிடங்களும் அசோகவனங்கள் தான்.
அசோகவனங்களைப் பற்றிச் சொல்லி முடிக்கும் போதே தொகுப்புக்குப் பெயர் கொடுத்த 'வெயிலோடு போய்' மாரியம்மாவின் புருஷனைப் பற்றியும் எழுதவேண்டும். தன் முறை மச்சானுக்கு என்றே வளர்ந்து வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் என்பதையும் பாராமல் அவளுடன் அன்பாக இருப்பதும் அவள் கேட்கும் பொழுதெல்லாம் தாய்வீட்டுக்குப் போக அனுமதிப்பதும், என்ன ஏதென்று தெரியாமலே ஆறுதல் சொல்வதும் என்று அன்பானவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் அந்தக் கணவர். அதே போல் என்னை ரொம்பவும் கவர்ந்த மற்றொரு பாத்திரம் 'கருப்பசாமியின் அய்யா'. சாகசங்கள் செய்வதிலும், 'பெரிய சாதனைக்காரன்' என்று பெயர் வாங்குவதிலும் மட்டுமே ஆசையுள்ள கருப்பசாமியின் தந்தையை அவள் தாய் காளியம்மா 'திருத்தி' அதாவது இன்றைய வர்த்தக உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, சாதாரண வாழ்க்கையை வாழவைக்கிறாள். 'சாதாரண மனிதர்களால் செய்ய முடிந்தவற்றைச் செய்யக் கூடாது' என்று நினைக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்வு பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே எப்படி மாறிப் போகிறது என்கிறது இந்தக் கதை.
அதிகாரத்துக்குப் பயந்து வேலை செய்வதன் கொடுமைகளைப் பேசுகிறது 'பிரக்ஞை'. 'எப்போதும் எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும்' என்று நினைக்கும் ஹெட்கிளார்க்கின் கொத்தடிமைக் கட்டுகளுக்குப் பணியாத ஒரு இளைஞனின் கதை. அப்படிப்பட்டவனைச் சமுதாயமும், அதிகார வர்க்கமும் எப்படிப் பார்க்கிறது என்பது வரை..
நெஞ்சைத் தொட்ட மற்றொரு கதை "வேறு ஊர்". தன் காலமெல்லாம் உழைத்துச் சம்பாதித்துப் பெற்ற பிள்ளையைப் படிக்க வைத்தும், அந்தக் கல்வி மகனது வாழ்க்கையிலும் பொருளாதார உயர்வைத் தர இயலாமல் போனதை நினைத்து வாடும் முதியவரின் கதை. வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இன்றைய நாட்களில் ஏழ்மை என்ற ஒரே காரணத்துக்காகவே தன் பெற்றோரைக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு அழைத்துப் போகிற மகனின் கதையும் கூட.
'அப்பாவின் பிள்ளைகள்', பிடிக்காத வேலையைச் செய்யும் மனம் எப்படி அதிசீக்கிரம் சோர்ந்து துவண்டு போவதைச் சொல்கிறதென்றால், 'குரல்கள்', தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்தில் இறக்காமல் தப்பிப் பிழைத்த சிறுவனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதுமே கொடூரமான கனவுகளால் நிரம்பி இருக்கும் அவலத்தைப் படம்பிடிக்கிறது.
கவர்ந்த மற்றொரு கதை 'மீடியம்'. ஒரு உள்ளாடையை வைத்து இத்தனை அற்புதமான கதையா?! நாகரிகக் காரணங்களுக்காக கோவணத்திலிருந்து ஜட்டிக்கு மாறி, அதுவே வருமானத்துக்கு மீறிய செலவாகக் கஷ்டப்படும் மனிதரின் கதை. 'நம் ஊரில் ஒரு ஜட்டி கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களா!' என்ற அதிர்ச்சி மட்டுமே மிச்சம்.
இவை தவிர ராணுவப் பின்னணியான 'அந்நியம்', சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கதையான '26ம் பக்கத்து மடிப்பு' என்று இந்தப் புத்தகம் முழுவதுமே பொக்கிஷம்.
தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வில் பெட்டியை ஒட்டுவதால் ஏற்படும் சிரங்கும், அழுக்கும், ஏழ்மையும் எப்போதும் கூட வருபவை என்று இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. அம்மா, அப்பா இருவருமே நாள் முழுவதும் வேலை செய்யும் குடும்பங்களில் கூட வறுமை இறுதிவரை தாண்டவமாடுவதைப் பார்க்கும் போது மனித உழைப்புக்கு இவ்வளவு தான் மதிப்பா? என்று மனம் வெறுத்துப் போகிறது.