Thursday, November 16, 2006

தேவி எங்கே? (நிறைவுப் பகுதி)

"தேவி எங்கே?" அம்மா கேட்டார்.

"கெட்டது குடி! பால்காரரே கஸ்டமர் கிட்ட மாடு எங்கேன்னு கேட்கிற மாதிரி, நீங்களே இப்படிக் கேட்டா, நாங்க என்ன செய்யுறது?" என்றபடி மிச்சமிருந்த நீரை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டான் சந்தர்.

"சந்தர், உன் திருவாயை மூடிக் கிட்டு சும்மா இருக்கியா?" என்ற வாணி, மெதுவாக, "ஆண்ட்டி, என்ன நடந்தது? தேவி எங்கே?" என்று கேட்டாள்.

"தேவி இன்னிக்கு அவங்க சித்தப்பா பொண்ணு பிறந்தநாளுக்காக அவங்க வீட்டுக்குப் போவதா இருந்தது. அதனால பாதி நாள்ல ஸ்கூல்லேர்ந்து வந்துட்டா. நாங்க கிளம்பிகிட்டே இருந்தப்போ, நாலு பேர் திமு திமுன்னு உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டுட்டு தேவியைத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க." திக்கித் திணறி சொல்லி முடித்தார் அந்தத் தாயார்.

"எதுக்குக் கடத்துறாங்கன்னு ஒண்ணும் சொல்லலியா?" என்றான் சுரேஷ்

"தேவியோட அப்பா, போன மாதம் சேதுபதின்னு ஒரு திருடனை பிடிச்சாராம். அவனை விட்டுட்டால் தேவியைத் திருப்பி அனுப்பவதாகச் சொன்னாங்க.. எல்லாத்தையும் சொல்லிட்டு என்னையும் அடிச்சிட்டுப் போய்ட்டாங்க." விசும்பலுடன் தேவியின் தாயார் சொல்லி முடித்தார்.

"எந்தப் பக்கமாப் போனாங்க?" என்றாள் பிரியா

"வாசற்பக்கமாத் தான்.." என்ற தேவியின் அம்மா குரல் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்ததினாலேயே "வாசல் வழியாப் போகாம, பின்ன ஜன்னல் வழியாவாப் போக முடியும்" என்று தொண்டை வரை வந்த நக்கலை அப்படியே விழுங்கினான் சந்தர்.

"பிரியா, ஆண்ட்டிய பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் விட்டுட்டு அப்படியே போலீஸ் ஸ்டேசன் போய் தேவியின் அப்பாவுக்கும் தகவல் சொல்லிட்டு வந்துடு. நாங்க அவங்க போன வழியை விசாரிச்சிகிட்டுப் போறோம்." சுரேஷ் சொன்னதும் பிரியா தவிர்த்து மற்ற மூவரும் கிளம்பினர். வாசல்பக்கம் மீண்டும் வந்து நின்ற போது சந்தர் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டே கத்தினான்

"ஆ, ஒரு கடி ராணியைத் தேடப் போறோம்னு எறும்புக்குக் கூட தெரிஞ்சிருக்கு!" என்றபடி குனிந்து பார்த்தச் சந்தர் "ஐ அரிசி மிட்டாய்!" என்று குதித்தபடி நிமிர்ந்தான். "இதென்னாப்பா, கவர்மெண்டுல புதுசா மிட்டாய் ரோடு போடுறாங்களா? வரிசையா இரைச்சிருக்காங்க!"

மூவரும் குனிந்து பார்த்தனர். வரிசையாய் ஒரே நேர்க்கோட்டில் அரிசிமிட்டாய் இரைந்து கிடந்தது.

"வெயிட். வெயிட். சுரேஷ், தேவியோட பெட் வச்சி நீ தோத்ததுக்கு இன்னிக்குத் தானே பெட் படி இந்த அரிசி மிட்டாய் வாங்கித் தந்தே?" வாணியின் குரலில் புதிய உற்சாகம் வீசியது

"அட ஆமாம்! அதே மாதிரி தான் இருக்கு!"

"அப்படின்னா மிட்டாய் ரோடு போட்டது நம்ம தேவி தானா?" சந்தர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தான். "தேவி வர வர இந்தச் சந்தர் மாதிரி புத்திசாலியாகிகிட்டே வரா!"

"ஆமாம். அதனால தான் மிட்டாய் ரோடு போட்டிருக்கா. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா எறும்பு எடுத்திட்டுப் போயிருக்கும். ஆனது தான் ஆனா, வாணி மாதிரி புத்திசாலியாகக் கூடாது!"

"போதும் உங்க சண்டை, மிச்சத்தை எறும்பு எடுக்கிறதுக்குள்ள நம்ம வேட்டையாடுவோம்!"

அந்த மிட்டாய்களைப் பின்பற்றி மூவரும் நடந்தனர். அந்தக் கோடு கடைசியாய் ஒரு கூரை வேய்ந்த வீட்டினுள் சென்று மறைந்தது. கதவு பூட்டப் பட்டிருந்த அந்த வீட்டை மூவரும் சுற்றிச் சுற்றி வந்தனர். அந்தக் குடிசைக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தர் மெல்ல கதவின் மீது கைவைத்தான். ஓசையின்றி திறந்து கொண்டது கதவு. மூவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுந்தரும் வாணியும் மட்டும் உள்ளே நுழைவது என்று முடிவானது. சுரேஷ் வெளியே காவலாக நின்றிருந்தான். கண்கள் இருளுக்குப் பழகியவுடன் குடிசையின் நடுவில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது. வாணி ஓசையின்றி அந்த உருவத்தை நெருங்கினாள். ஆம். அது தேவி தான். !

வாணியைப் பார்த்தவுடன் தேவியின் முகமும் மலர்ந்தது. அதுவரை ஒரே மாதிரி மயங்கி இருப்பது போல் அமர்ந்திருந்த அவள் இப்போது எழுந்து வாணியின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். ஏதோ பேசத் தொடங்கிய தேவியின் குரல் உடைந்து மெல்லிய விக்கல் வந்திருக்கும், அவள் வாயை அந்தக் கை பொத்தாமல் இருந்தால். வாணி பயந்து போய் நிமிர்ந்து பார்த்த போது அந்தக் கரத்துக்குரியவன் சந்தர் தான் என்று புரிந்தது.

சந்தர் இப்போது கை நீட்டி ஒரு திசையைச் சுட்டிக் காட்டினான். அங்க நான்கைந்து பேர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். மூவரும் ஓசை செய்யாமல் வாசல்பக்கம் நகர்ந்தனர். கதவை மெல்லச் சாத்தித் தாழிட்டதும், சத்தம் கேட்டு, "தேவி! நல்லா இருக்கியா?" என்றபடி வந்தான் சுரேஷ்.

"அவங்க உன்னை ரொம்ப அடிச்சாங்களா?" வாணி கேட்டாள்

"என்னைத் தூக்கிட்டு வந்து கட்டிப் போட்டுடாங்க. நான் அவங்க பேச்சைக் கேட்டு பயந்து போய் மயக்கமாகிட்டமாதிரி நடிச்சேன்.. அதான் அந்தப் பக்கம் போய்ட்டாங்க.." சொல்லி முடிப்பதற்குள் தேவிக்குக் குரல் கம்மியது.

"ஆமாம், தேவி அப்பாவை யார் போய் மிரட்டணும், எத்தனை மணிக்குப் போய் போன் பண்ணனும்னு பேசிகிட்டிருந்தாங்க! சரி, கவலையை விடுங்க. அதான் வெளியே வந்துட்டமே.!" - சந்தர்

வாணிக்கு ஆனால் பயம் இன்னும் மறையவில்லை "என்ன கவலையில்லை? இந்தக் கதவை அந்த ரௌடிங்க ஒடைக்க எத்தனை நேரமாகும்? அவங்களோ நாலு பேர். நம்மைப் பார்த்திட்டாலும் கஷ்டம் தானே? வாங்க மொதல்ல இந்த இடத்தை விட்டு ஓடலாம்.." என்றாள்.

"அங்க தான் நீ ஐயாவோட மூளையைப் பார்க்கணும். இந்த வீட்டுக்கு வேற வழியே இல்லை. பிரியா சீக்கிரமே வந்துடுவா. அதுவரை இங்கேயே இருந்து இவங்களைக் கண்காணிக்க வேண்டாமா? அப்படியும் எந்தச் சந்தேகமும் வராது, அதான் இவ மயங்கிக் கிடக்கிறான்னு அவங்க ரொம்பவே நம்பறாங்களே!" சந்தர் லாஜிக்கில்லாமல் பேசிக் கொண்டிருப்பதாகச் சந்தேகம் வந்தாலும் வாணியால் மறுத்துப் பேச முடியவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் நிஜமாகவே தேவியின் அப்பாவுடன் பிரியா வந்துவிட்டாள். இந்தத் திருடர்களின் மறைவிடம் அவருக்கு முன்னமே தெரியும் என்றாலும் பெரியதொரு கைதுக்கு உதவி செய்த காரணத்துக்காக ஐந்து சுட்டிகளும் டீவி, பேப்பர் என்று பரபரக்கப் பட்டது பற்றி இன்னுமொரு நாள்..

(முற்றும்)

[பின் குறிப்பு: ரொம்ப சொதப்பலா இருந்தா, சாரி, குழந்தைங்க எழுதுற கதை வேற எப்படிங்க இருக்கும்?

எச்சரிக்கை: கிட்டத் தட்ட இதே ரேஞ்சுல இன்னும் நாலஞ்சு கதை இருக்கு. முடிஞ்சா ஒவ்வொண்ணா வலையேத்தி பொன்ஸ் பக்கங்களை வலையுலக கோகுலமா ஆக்கிடலாம்னு யோசனை.. பார்க்கலாம் :)]

9 comments:

- யெஸ்.பாலபாரதி said...

//ஐந்து சுட்டிகளும் டீவி, பேப்பர் என்று பரபரக்கப் பட்டது பற்றி இன்னுமொரு நாள்..//

இதுக்கும் தொடர்ச்சி இருக்கிற மாதிரி தெரியுது. ஆனா முற்றும்னு போட்டு இருக்கீங்களே..!

மேலும்,
//சொல்லி முடித்தார் அந்தத் தாயார்.//
//தேவியின் தாயார் சொல்லி முடித்தார்.//
கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்.
ஆனாலும் ரொம்பவும் பயப்படுத்துற இடம் எது தெரியுமா?
//எச்சரிக்கை: கிட்டத் தட்ட இதே ரேஞ்சுல இன்னும் நாலஞ்சு கதை இருக்கு. முடிஞ்சா ஒவ்வொண்ணா வலையேத்தி பொன்ஸ் பக்கங்களை வலையுலக கோகுலமா ஆக்கிடலாம்னு யோசனை.. பார்க்கலாம்.//

என்ன பண்றது..?
:-(((((((((((((((((

இராம்/Raam said...

பொன்ஸ்க்கா,

ஹிம் அம்புலிமாமா'விலே கதை படிச்சே எபக்ட்...


அடுத்த தொடர் கதை எப்போ?????

துளசி கோபால் said...

ஹென்சல் & க்ரேட்டல் பாதிப்பு கொஞ்சம் இருக்கு. ஆனாலும் கதை நல்லாவெ வந்துருக்கு.
பயப்படாம எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணிருங்க.
( அதுக்கப்புறம் மக்கள் பயமில்லாம நடமாடலாம்) ச்சும்மா :-)))))))))))

முத்துகுமரன் said...

வேலை அதிகமா இருக்கும் போது பதிவு போடணும்ங்கிறது என்ன அவசியாமான்னேன்:-)))))))))))

பி.கு:
பின்குறிப்பு அருமை.

G.Ragavan said...

தொடரும்னு போட்டிருந்ததே. ஒரு பத்து இருவது பதிவு ஓடும்னா நெனச்சா...ரெண்டாவது பதிவுலயே நிறைவுப் பகுதீன்னு போடுறீங்களே! நியாயமா!

சீரகமிட்டாய் துப்பறிதல்னு கோகுலம் பூந்தளிர் மாதிரி இருந்தாலும் மொத அத்தியாயம் நல்லாயிருந்தது.

லக்கிலுக் said...

பொன்ஸ் யக்கா

இந்தக் கதையை பூந்தளிர்லேயே நான் படிச்சிட்டேன் :-)

மஞ்சூர் ராசா said...

கலந்து கட்டி, ஒரே கதம்பமா இல்லே இருக்கு, மழையுடன் கூடிய சென்னை சாலைகளாட்டம்.


ம்ம்ம்ம்.... நடக்கட்டும்.

நாமக்கல் சிபி said...

கதை நல்லா இருக்கு குழந்தே!

இதைப் பத்தியும் கலாய்த்தலில் விமர்சனம் பண்ணுறேன்!

:))

நாமக்கல் சிபி said...

குழந்தை எழுதிய கதைக்கு குழந்தைதான் முதல் வாசகரா?

//என்ன பண்றது..?
:-(((((((((((((((((
//

ஏங்க குழந்தையை இப்படி பயமுறுத்துறீங்க?