Wednesday, November 29, 2006

பதிவுலகில் பெண்கள்?!

"தமிழ்ப் பதிவுலகுல பார்த்தீங்கன்னா பொன்ஸ், பெண் பதிவாளர்கள் ரொம்ப குறைவு"


- எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், 'மூட்டை கட்டலாம்' என்று நான் முடிவு செய்திருந்த போது மதி சொன்னது எனக்கு.

உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.



ஆபாச வார்த்தைகளில் திட்டுபவர்கள் ஒருபக்கம் என்றால், வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம். இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.

வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்; சொன்னால், ஒரு பெண் எதைப் படிக்கவேண்டும் என்பதையே கணவர்கள் தீர்மானிக்கும் இந்தக் காலத்தில், எதை எழுதுவது என்பதிலும் தலையீடு வருவதை விரும்பாமலோ, எழுதுவதிலே தலையீடு வருமோ என்று பயந்தோ! கோலம், யானைகள், சமையற்குறிப்பு போன்ற தலைப்புகளில் இன்னும் அதிகம் கூட எழுதுங்கள். ஆனால், கற்பு, கத்திரிக்காய், சந்தித்த பாலியல் வக்கிரங்கள், வேலைக்குப் போகும் பெண்களின் உண்மையான பிரச்சனைகள் என்று தொட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உங்கள் எழுத்தைத் தீர்மானிப்பது யார் என்று!

எழுதுபவர்களை ஊக்குவிக்கிறேன் பேர்வழியென்று, வக்கிரமாக "நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!" என்று சொல்லி, எழுத்தைக் கீழ்மைப்படுத்தும் 'நண்பர்கள்' இருக்கிறார்கள். எனக்குக் கூட அப்படியான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

பெண்ணியம் என்றாலே "ஆணுக்குப் பெண் நிகர்னு சொல்ல வந்திருக்கீங்க, எதுக்கு பெண்ணுன்னு தனித்துச் சொல்றீங்க?" என்ற கேள்வி எழுகிறது. அதே, "நாம் பயன்படுத்தும் செல்போன், ஸ்கூட்டி எல்லாம், பெண்களுக்கும் வாங்கிக் கொடுத்துட்டோம்" என்று பிரித்துச் சொல்பவர்களிடம், பிரிந்து நின்று தானே கேட்க வேண்டியிருக்கிறது?

"எங்களால எழுத வரலைங்கிறீங்க, நாங்க உதவி செஞ்சாலும் அதைச் சொல்லிக்கக் கூடாதுங்கிறீங்க, அப்போ பிரச்சனைன்னு வந்தா எங்களைக் கேட்கக் கூடாது". ஆகா, பிரச்சனைகளில் உதவிக்கு வராமல், தாமாக சரி செய்து கொள்பவர்களுக்கும் தான் முத்திரைகள் தயாராக இருக்கின்றனவே. "உங்க பிரச்சனையை எப்படிச் சமாளிச்சி தீர்வு பெற்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!" என்ற எகத்தாளங்கள் குதித்து வந்து விடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேல், வெளிச்சமூகத்தில் படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால், படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது.

எங்களை நாங்களாக இருக்க விடுங்கள், "நீ இப்படி இருப்பதற்கு நான் தான் காரணம்" என்று ஆதிக்க உணர்வில் பேசுவதையும் நிறுத்திவிட்டு.

இறுதியாக, பெண் பதிவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் எந்த நண்பரையும் இந்தப் பதிவு சாடவில்லை. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.

தொடர்புள்ள பதிவுகள் :

1. அயனுலகம்

2. நிலா

3. இட்லிவடை

4. சக்தி

60 comments:

Anonymous said...

//எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், 'மூட்டை கட்டலாம்' என்று நான் முடிவு செய்திருந்த //

அப்போவே கட்டியிருக்கலாம்.. ம்ஹூம்..

நாமக்கல் சிபி said...

//உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.
//

100 விழுக்காடு உண்மை!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பதிவுகளில் இது போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு வருகிறது என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சில பிரச்சனைகள் இது வரை நான் அறியாதது. உங்களால் அறியும் சமயம் மிக அதிர்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் சந்தித்திருக்கும் பிரச்சனைகளை பார்க்கும் சமயம் இந்தப் பதிவில் உங்கள் கோபம் தன்மையாகவே வெளிப்பட்டிருக்கிறது.

ILA (a) இளா said...

நீங்கள் சொல்வது சில உண்மைகளே
//வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்; சொன்னால், ஒரு பெண் எதைப் படிக்கவேண்டும் என்பதையே கணவர்கள் தீர்மானிக்கும் இந்தக் காலத்தில்//
இது நம்பும்படியாக இல்லை.

ரவி said...

///இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள். ///

well said...

// அப்போவே கட்டியிருக்கலாம்.. //

Please Do not Publish this kind of Anony Comments !!!!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ila(a)இளா இங்கே பாருங்கள்.

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post.html

பினாத்தல் சுரேஷ் said...

மிக நல்ல பதிவு பொன்ஸ். நல்ல Observations-உம்!

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில புள்ளிகளைப்பற்றி விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்கையில்!

தாமதமானாலும் நட்சத்திர வாழ்த்துகள்;-))

பினாத்தல் சுரேஷ் said...

ஐயா முதல் கமெண்ட் அனானிமஸ், பொன்ஸ் பதிவெழுதுவதால் உமக்கு எந்த இடத்தில் வலிக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாமா?

பிடிக்காவிட்டால் படிக்காமல் போங்கள், அல்லது கருத்தைத் திட்டி ஒரு பின்னூட்டம் போடுங்கள் - யார் எப்போ மூட்டை கட்டியிருந்திருக்கலாம் என்பதை முடிவு செய்கிறீர்களே, இதற்கு எப்படி உங்களுக்கு உரிமை வந்தது?

Anonymous said...

சகோதரி!
எனக்கு தே... மவனே! எனப் பின்னூட்டிய;(டொண்டு ராகவணண்ணாவுக்கு பின்னூட்டிய குற்றமாம்) பண்பர்கள் உள்ள இந்தப் பதிவுலகில்; உங்களுக்கேற்படும் மனக் கசப்புகள் ஆச்சரியந்தரவில்லை.
அதிகம் பின்னூட்டுபவனெனும் வகையில்; நான் இதுவரையில் ஆண் பதிவர்களைக் கூட கண்ணியமின்றி எழுதவில்லையென்பதை; நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தங்கள் வருத்தத்தில் நாயமுண்டு.
யோகன் பாரிஸ்

Anonymous said...

//அப்போவே கட்டியிருக்கலாம்.. ம்ஹூம்.. //

கொஞ்சம் எரிச்சல் அல்லது வயத்தெரிச்சல் இருக்குமோ இந்த நபருக்கு?

பங்காளி... said...

பின்னூட்டம் போடறதுக்கு கூட பெண்களை காணோமே...ம்ம்ம்ம்

சுயஇரக்கம்...கழிவிரக்கம்...இந்த வார்த்தைகளுக்கு பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன்

thiru said...

//இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.//

நல்ல அலசல்! மேற்கண்ட வரிகள் வழி சிந்திக்க வைக்கிறது பொன்ஸ்! அப்போ மத்த வரிகள் எல்லாம் என்னன்னு கேக்க வேண்டாம்! தடைகளை தாண்டுவது தான் விடுதலை!

வலைப்பதிவுகளில் பெண்கள் சந்திக்கிற பிரச்சனை பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் குறைவாகவே இருக்கிறது. நமது கலாச்சாரம் கட்டுப்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கத்தில் மூழ்கி கிடக்கிறது. அதன் எதிரொலி வலைப்பதிவிலும் பரவுகிறது. படிப்பிற்கும் பெண்களை சமமாக கருதுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது கேள்வியே!

Anonymous said...

முற்றிலும் உண்மை. நாம் இன்னமும் பெண்களை சரிசமமாக கருதுவதில்லை. பதிவிற்கு நான் புதிது. இது என் முதல் பின்னூட்டம்.

Sridhar V said...

மிக முக்கியமான பதிவு இது.

எழுத்து மட்டுமல்ல. பல corporate-களிலும் இதே நிலைமைதான். இதில் இரண்டு நிலைகளை நான் உணர்ந்திருக்கிறேன்.

1) பெண் என்பதால் தனி அங்கீகாரம் தருவது. கீழான நோக்கத்தோடு அல்ல. அவர்கள் முன்னேறி வருவதற்கு வகை செய்யும் வழியாக. (33% விழுக்காடு ஒதுக்கீடு போல).

2) என்னதான் சுயமாக முன்னேறினாலும், 'என்னதான் இருந்தாலும் பெண்தானே' என்ற ஒரு இகழ்ச்சி பார்வை.

இந்த இரண்டு பார்வைகளும் ஒன்றை ஒன்று சமன் செய்கின்றன். (எப்படி என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இயற்கையில் ஏதாவது ஒரு வகையில் ஒரு சமன்பாடு வந்துவிடுகின்றது)

சக மனிதர்களாக பார்க்கும் பார்வை மன முதிர்ச்சியின் வளர்ச்சி என்றுதான் தோன்றுகிறது.

சில முதிர்ச்சி அடையாத முதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இறுதியாக ஒரு அதிகப் பிரசங்கம்:

உங்கள் நட்சத்திர வாரம் மிகச் சிறப்பாக இருக்கிறது (இனிமேல் மேலும் சிறப்புக் கூடலாம்). எழுத்துலகில் நீங்கள் இன்னுமொரு உயரமான இடத்தை நோக்கி நகர்கிறீர்கள் என்பது உங்களின் பக்குவப்பட்ட எழுத்திலும், அதன் உள்ளடக்கத்திலும் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

Anonymous said...

// பின்னூட்டம் போடறதுக்கு கூட பெண்களை காணோமே...ம்ம்ம்ம்

சுயஇரக்கம்...கழிவிரக்கம்...இந்த வார்த்தைகளுக்கு பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன் //

இதோ நான் பின்னூட்டம் போடறேன்...

this is my first visit to this site.

எழுதும்போது ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க PONS. அதை எல்லாம் பார்த்தா நம்மால எதையும் செய்ய முடியாது.

அதை எல்லாம் ஒரு தூசு மாதிரி ஊதி தள்ளிட்டு போய்ட்டெ இருங்க :-)

we gals have to give up many things for doing these things.

பொன்ஸ்~~Poorna said...

//அப்போவே கட்டியிருக்கலாம்//
அனானி, இப்போ மட்டும் என்ன, கட்டிடுவோம்.. (நாளைக்கே பிரிச்சிட மாட்டோம்..)

சிபி, உண்மை தான்.

//நீங்கள் சந்தித்திருக்கும் பிரச்சனைகளை பார்க்கும் சமயம் //
செந்தில் குமரன், இவை எல்லாமே நான் சந்தித்த பிரச்சனைகள் கிடையாது. நான் பார்த்த பெண்களின் பிரச்சனைகள் பொதுவில்

இளா,
உங்களுக்கான சுட்டியை செந்தில் கொடுத்துவிட்டார்.

//Please Do not Publish this kind of Anony Comments !!!! //
இருக்கட்டும் ரவி :)

//நீங்கள் குறிப்பிட்டுள்ள சில புள்ளிகளைப்பற்றி விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்கையில்//
நிச்சயம் எழுதுங்கள் சுரேஷ். காத்திருக்கிறேன்.

//தங்கள் வருத்தத்தில் நாயமுண்டு.//
நன்றி யோகன்

//சுயஇரக்கம்...கழிவிரக்கம்...இந்த வார்த்தைகளுக்கு பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன் //
புரியவில்லை பங்காளி. பெண்கள் மட்டுமே படிக்க வேண்டிய இடுகை என்று நான் குறிக்கவே இல்லையே...

// தடைகளை தாண்டுவது தான் விடுதலை! //
உண்மை தான் திரு. வருகைக்கு நன்றி

//நாம் இன்னமும் பெண்களை சரிசமமாக கருதுவதில்லை//
நன்றி ஞான வடிவேல்

நன்றி ஸ்ரீதர்.. உங்கள் பின்னூட்டம் மொத்தமும் அருமை.. அதிகப் பிரசங்கத்தைப் பற்றி நான் ஏதாவது சொன்னால், அது அதிகப் பிரசங்கமாகிவிடலாம் :)))

மங்கை said...

பொன்ஸ்...

வித்தியாசமான நல்ல பதிவு...

நன்றி

நாடோடி said...

உங்கள் பிரச்சனை என்ன?..
உங்கள் தேவை என்ன?..

யக்கோவ் உங்களுக்கு பிரச்சனை இல்லாத ஒரு இடம் வேண்டும் எனில் அதற்கு பதிவுலகம் ஏற்ற இடம் அல்ல. அப்படி ஒன்றும் எங்கும் இருக்கவும் போவதில்லை.

விமர்சனங்கள் எங்கிருந்தும், எப்படியும், எல்லா வகையிலும் வரும்.
ஒன்று எதிர்கொள்ளவேண்டும் அல்லது விலகி நின்று அதை உண்மையாக்கவேண்டும்.

உங்கள் தேவையை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

"நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!"
இது பொதுவானது பெண்கள் ஆண்களை பார்த்து ஆணாதிக்கம் என்று கூறுவீர்கள்.
பெண்களுக்கு எப்பவும் ஒரு எண்ணம் உண்டு.
தன்மீது எல்லோரும் பரிதாபப்பட வேண்டும்,அன்பு காட்ட வேண்டும், தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று.
மேலே சொன்னதை சுயபரிசோதனை செய்துபாருங்கள்.

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ், என்னுடைய இரண்டு சென்ட்ஸ் :-)
நான் கடைப்பிடிக்கும் கொள்கைகள்- இணைய நட்பு யாருடனும் சாட் செய்வதில்லை. அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுதான் மூலக்காரணம். பிறகு ஈமெயில் தொடர்ப்பு, பெண்கள் என்று தெரிந்து சொந்த கதை மட்டுமே. ஆண்கள் என்றால் மிக சில மட்டுமே!
அதுவும் நம்ம நாமக்கல்லாரிடம் நாமக்கல்லில் வீடு வாடகை எவ்வளவு இருக்கும் போன்று :-)
ஆனால் ஒன்று சொல்லாவிட்டால் நன்றி கொன்றவள் ஆவேன். பல முறை பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கும்பொழுது நீங்கள் குற்றம் சாட்டும் அதே ஆண்வர்க்கம், அவர்கள் யார் என்ன என்றும் அதிக பரிட்சியம் இருக்காது. தானே முன் வந்து
தனி மெயில் அனுப்பி, பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அதற்க்காக அவர்கள் எனக்கு பின்னுட்டம் போடவும் மாட்டார்கள், நன்றி காட்டும் விதமாய் நானும் அவர்கள் எழுதுவதற்கெல்லாம் பின்னுட்டம் இடுவதும் இல்லை :-)))))
போலியாரின் தாக்குதல் ஆண் பெண் என்று இல்லாமல் சகட்டு மேனிக்கு எல்லாரும் பாதிக்கப்பட்டார்கள். மற்றப்படி வேண்டிய நக்கல், கிண்டல் கேட்டாகிவிட்டது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னத்த எழுதுகிறா, நுனிப்புல் என்ற
எதிர்வினையே என்னை மேல் மேலும் எழுத தூண்டுகிறது. கொஞ்சம் மேல் தோல் கெட்டி. யார் என்ன சொன்னாலும் நான் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நானே, ஆக அறிவுரைகள், கட்டளைகள் இவைகள் ஒரு முறை படித்துவிட்டு, நான் என்ன நினைக்கிறேனோ அதையே செய்கிறேன்.
பொன்ஸ், நீங்கள் உட்பட அனானிமஸ் கமெண்ட், அதர் ஆப்ஷன் இவைகளை அனுமதித்து வேண்டாத பிரச்சனைகளை
உருவாக்கிக் கொள்கிறீர்கள். பின்னுட்டம் கூட வேண்டும் என்றா?
கமெண்ட் மாடரேஷன் வந்தது மிக பெரிய நிம்மதி.

ஜெயஸ்ரீ said...

முதலில் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் பொன்ஸ்.

நல்ல பதிவு

//படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது //

இது பதிவுலகம் மட்டுமல்ல, மெத்தப் படித்தவர்கள் இருக்கும் பல துறைகளிலும் நடக்கிறது. ஒரு பெண்ணை எந்தக் காரணத்துக்காகவாவது சாடவேண்டுமென்றால், இது ஒரு மிக எளிமையான ஆயுதம் . வேறெதுவும் பயனளிக்கவில்லையென்றாலும் இது நிச்சயம் அவர்களைக் காயப்படுத்தும் என்ற ஒரு மனக்கணக்கு. இவை அனைத்தையும் தாண்டித்தான் வரவேண்டியுள்ளது.

அதே சமயம் பெண்களைச் சக மனிதர்களாகப் பார்க்கும் மன முதிர்ச்சியும் அதிகரித்துவருகிறது.

தருமி said...

சதவிகிதம் மாற / கூட வேண்டும். அதுவே நீங்கள் சொல்லும் பலவும் மாற உதவும்.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ஜெயந்தி, மங்கை,

//தன்மீது எல்லோரும் பரிதாபப்பட வேண்டும்,அன்பு காட்ட வேண்டும், தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று/
அது சரி.. இதை மொத்தமாக ஒதுக்க முடியவில்லை நாடோடி. எல்லா பெண்களும் எப்படி என்று என்னால் பேச முடியாது. நான் இப்படி இல்லை என்பதை மட்டுமே பதிவு செய்யலாம். இந்தப் பதிவைப் பொறுத்தவரை, தமிழ்ப்பதிவுலகில் கொஞ்ச காலமாக நடந்து வருபவற்றை மட்டுமே இங்கே பேசி இருக்கிறேன். பிரச்சனைகள் இருக்கின்றன என்று மட்டும் தான் சொல்கிறேன். புதிய பெண்பதிவர்களைப் பயமுறுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. தீர்வையும் என்னால் முன்வைக்க முடியவில்லை. தீர்வு என்பது அவரவர் மனதளவில் இருக்கிறது.

//பல முறை பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கும்பொழுது நீங்கள் குற்றம் சாட்டும் அதே ஆண்வர்க்கம், அவர்கள் யார் என்ன என்றும் அதிக பரிட்சியம் இருக்காது. தானே முன் வந்து தனி மெயில் அனுப்பி, பிரச்சனைகளை தீர்ப்பார்கள். //
உண்மை தான் உஷா. இப்படிப் பட்ட நண்பர்களைப் பற்றி இந்தப் பதிவு பேசவில்லை. குற்றம் சாட்டுவதாக நீங்களும் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. நடைமுறையில் இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறேன்.

//நீங்கள் உட்பட அனானிமஸ் கமெண்ட், அதர் ஆப்ஷன் இவைகளை அனுமதித்து வேண்டாத பிரச்சனைகளை
உருவாக்கிக் கொள்கிறீர்கள். பின்னுட்டம் கூட வேண்டும் என்றா?//
பின்னூட்டத்துக்காக அனானி ஆப்ஷனா?! நீங்க வேற, அதெல்லாம் இல்லாமையே கூட துளசி அக்கா பின்னூட்ட நாயகி தானே :)) இங்கயும் தோல் கெட்டி உஷா. :)அனானி ஆப்ஷன் இல்லை என்றால் பதிவுக் கணக்குத் துவங்க எத்தனை நேரம் ஆகிவிடப் போகிறது?!

//அதே சமயம் பெண்களைச் சக மனிதர்களாகப் பார்க்கும் மன முதிர்ச்சியும் அதிகரித்துவருகிறது.//
உண்மை தான் ஜெயஸ்ரீ.. அதே போல் எல்லாத் துறைகளிலும் இது ஒரு நல்ல ஆயுதம் என்பதும் உண்மை தான்..

ஓகை said...

என்னுள் இருக்கும் பெண்ணையும்
நான் அடிப்பதுண்டு.
இப்போது ரொம்பவும் குறைத்துவிட்டேன்.
அடிக்கும் போதெல்லாம்
எனக்கும் வலிக்கிறது.
ஒருநாள் கை கோர்த்து போவோம்.

Anonymous said...

//பொன்ஸ், நீங்கள் உட்பட அனானிமஸ் கமெண்ட், அதர் ஆப்ஷன் இவைகளை அனுமதித்து வேண்டாத பிரச்சனைகளை
உருவாக்கிக் கொள்கிறீர்கள். பின்னுட்டம் கூட வேண்டும் என்றா?
கமெண்ட் மாடரேஷன் வந்தது மிக பெரிய நிம்மதி.// என்னடா ராமசந்திரன் உஷாவை வழிமொழிகிறானே என நினைத்தால், ஆமாம், அவர் சொன்னது சரியே! எல்லாரையும் உள்ளே அனுமதித்து கஷ்டப்படுவதைவிட, மாடரேஷன் மூலம் கழற்றி விடுவதே மேல்! அனானியாயும் போலியாயும் வருபவர்க்காக நாம் எழுதுவதில்லை. உங்கள் மனதுக்கு எது சரி எனப் படுகிறதோ, அதை தெளிவாக எழுத வலைத்தளம் ஒரு நல்ல இடம். நல்ல பதிவு வாழ்த்துக்கள்!!

குமரன் (Kumaran) said...

நல்ல வேளை. எனக்கு இந்தப் பதிவைப் படித்து கோபம் வரவில்லை. :-))

பொன்ஸ். ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டு வருகிறேன். இந்த வாரத்தில் ஒவ்வொரு பதிவும் கொஞ்சம் அதிகம் சிந்தித்து இடுவதாகத் தோன்றுகிறது. (அப்ப முந்தி போட்டதெல்லாம்ன்னு கேக்காதீங்க. வழக்கத்தை விட அதிகம் சிந்தித்து இடுவதாகத் தோன்றுகிறதுன்னு சொல்றேன்.)

செல்வநாயகி said...

பதிவெழுதுவது ஒரு நல்ல அனுபவம் பொன்ஸ் (பெண்களுக்கும்). சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் ஒருசேரச் சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்த அனுபவம் நாம் மேலும் கற்க உதவுகிறது. தொடர்ந்து படிக்கிறேன் உங்கள் நட்சத்திரப் பதிவுகளை.

Premalatha said...

good going pons.

அவய்ங்க எளுதுறாய்ங்கன்னா நாமளும் எழுதிதான் நிருப்பிக்கணுமா? யாருக்கு நிரூபிக்கணும்? எதுக்கு?

வேலவெட்டி இல்லாம எழுதுறவங்க நிறய பேர். அப்படிப்பார்த்தா பொண்ணுங்கள்லாம் சூப்பர்.

but I agree that there are many women who do not find blog/internet interesting, could get lot of info from internet/blog.

வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

//இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால்,//

எனக்குக் கோபம் வரலைங்க. அப்ப நான் நல்லவனா? கெட்டவனா? ;-)


//"நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!" //

இருக்கட்டும். இப்போ நீங்க பெண்களுக்காகன்னு சொன்ன பிரச்சனைகள் இன்னுமொருவருக்கு அவரின் குலத்தைச் சொல்லியோ,ஜாதியைச் சொல்லியோ வருகிறது.

இதையெல்லாம் ஒரு பிரச்சனையா பார்க்காம, நமக்கு வேணுங்கற மாதிரி நடந்துக்கிறதுலதான் மெச்சூரிட்டி இருக்கு.

எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு வகைப் பிரச்சனை. அதைப் பார்த்துட்டு ஓடிப் போகலாம், ஐயோ எனக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கேன்னு அழுதுகிட்டு இருக்கலாம், போற வரவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கலாம், அல்லது பிரச்சனைகளுக்கு நடுவில் நாம் நாமாக வாழ பழகிக் கொள்ளலாம்.

இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும்.
(ரொம்ப பிரசங்கமா போச்சோ?)

சேதுக்கரசி said...

நல்ல பதிவு பொன்ஸ்!

//பின்னூட்டத்துக்காக அனானி ஆப்ஷனா?! நீங்க வேற, அதெல்லாம் இல்லாமையே கூட துளசி அக்கா பின்னூட்ட நாயகி தானே :))//

என்னை விட்டுட்டீங்களே :(

துளசி கோபால் said...

பொன்ஸ்,

நேத்து ஒரு நாள் கொஞ்சம் மத்தவேலையிலே வெளியே போயிட்டு இப்ப
வந்து பார்த்தா.............

பெண்பதிவர்களே வரலைன்னு நினைச்சுட்டாங்க நம்ம மக்கள்ஸ்!

எழுதவந்த ஆரம்பத்துலே அப்படி ஒண்ணும் வித்தியாசமா இல்லாம நம்ம
பதிவர்கள் எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாத்தான் இருந்தாங்க.
ஏன்? இப்பவும்தான் பலர் நல்ல சுமுகமான உறவுதான்.

ஆனா....... இதுலேயும் ஒருசிலர்தான் நீங்க சொன்னதுபோல நம்மளைக் கொஞ்சம்
பேஜார் பண்ணவங்க. இவுங்கமட்டும் படிக்காதவங்களா என்ன?

'சொல்லடி' கிடைச்சவுடன், எதுக்கு இதெல்லாம்? பேசாம எழுதறதை விட்டுறலாமுன்னு
நானும் நினைச்சேந்தான். அப்பவும் நம்ம பதிவுலக நண்பர்கள்தான்
ஆறுதல் சொல்லி, ஒரு தைரியமும் கொடுத்தாங்க. அப்புறம் இந்த 'இனிஷியல்
ஷாக்' அடங்குனபிறகு இப்ப இப்படிப் போயிக்கிட்டு இருக்கு நம்ம எழுத்துலக வாழ்க்கை.

உலகத்துலே எல்லாருக்கும் ஒரே எண்ணம் இருக்குமா? பலவித குணங்கள் நிறைஞ்ச
மனிதர்கள்தானேங்க நம்மளைச் சுத்தி? அவுங்க கருத்து அவுங்களுக்கு, நம்மது நம்மளுக்கு
இருந்துறவேண்டியதுதான்.

ஆமாம், இந்த கோலம், சமையல், குழந்தை வளர்ப்பு இதெல்லாம் எழுதுனா தப்பாங்க?
அதுவும் 64 கலைகளிலே அடங்குனதுதானே?
எத்தனை பேருக்கு 'நளினமா' கோலம் போட வருது?

எதுக்கு இது பொம்பளைங்களுக்கு, இது ஆம்புளைங்களுக்குன்னு பிரிச்சு வச்சுக்கணும்?

அப்புறம் இந்த 'கற்பு' பத்தி எழுதுனாதான் 'தைரியசாலி'ன்னு ஒரு எண்ணம் எப்படி வந்துச்சு?
'அப்படின்னு ஒண்ணு' இருக்கறதை இந்தக் காலத்துலே யாரும் நம்பறது இல்லைன்றப்ப எதுக்கு
இல்லாத ஒண்ணைப் பத்தி வரிஞ்சு வரிஞ்சு எழுதணும்?

என்னமோ போங்க, ஒண்ணும் புரியலை(-:

Anonymous said...

unmai.avan yenai remba nerama muraichu parkiran yena nan varutha pata pothu nee avana parkalaina avan parpathu unaku yepati theriyum ye yen methu varthai neruppu potappatathu yen arumai kanavaral.

பொன்ஸ்~~Poorna said...

//எனக்கும் வலிக்கிறது.
ஒருநாள் கை கோர்த்து போவோம்.//
ஓகை, ஓரேயடியாக கவிதைகளில் இறங்கிவிட்டீர்கள்?! :) இதுவும் நன்றாக இருக்கிறது

//உங்கள் மனதுக்கு எது சரி எனப் படுகிறதோ, அதை தெளிவாக எழுத வலைத்தளம் ஒரு நல்ல இடம்.//
ஆம் சந்திரா, ஆனால் பிளாக்கர் கணக்குத் துவங்காமல் இருக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள் அல்லவா? துபாய்ராஜா, லொடுக்கு பாண்டி, லியோ சுரேஷ் என்று அவ்வப்போது பல பதிவர்கள் இது போல் அதர் ஆப்ஷனில் வந்து தான் பதிவர்களாகி இருக்கிறார்கள் - நான் உட்பட.

//கொஞ்சம் அதிகம் சிந்தித்து இடுவதாகத் தோன்றுகிறது//
குமரன் :))))) அறிமுகப் பதிவில் "'ஒரு இடுகை' என்று எழுத எனக்குக் காரணம் என்று தனியே ஏதும் தேவைப் பட்டிருக்கவில்லை." :)))

//பதிவெழுதுவது ஒரு நல்ல அனுபவம் பொன்ஸ் //
ஆம் செல்வநாயகி.

நன்றி பிரேமலதா..

// இப்போ நீங்க பெண்களுக்காகன்னு சொன்ன பிரச்சனைகள் இன்னுமொருவருக்கு அவரின் குலத்தைச் சொல்லியோ,ஜாதியைச் சொல்லியோ வருகிறது. //
கொத்ஸ், அதைப் பத்தியும் அங்கங்கே யாராவது எழுதிகிட்டேதானே இருக்காங்க? இதைப் பத்தியும் யாராவது எழுதணும்னு தான்..

//என்னை விட்டுட்டீங்களே :(//
சேது, பதிவே நீங்க அனானிமஸாத் தான் வச்சிருக்கீங்க :))) ஒரு பதிவு போடுங்க, பின்னூட்ட நாயகியை பீட் பண்ணிடலாம் :)))))

துளசி அக்கா,
//எதுக்கு இது பொம்பளைங்களுக்கு, இது ஆம்புளைங்களுக்குன்னு பிரிச்சு வச்சுக்கணும்?//
அதானே...

// அப்புறம் இந்த 'கற்பு' பத்தி எழுதுனாதான் 'தைரியசாலி'ன்னு ஒரு எண்ணம் எப்படி வந்துச்சு? //
அப்படிச் சொல்லலை துளசி அக்கா. ஆனால் எழுதினவங்க பட்டதைப் பார்த்தீங்க தானே? இல்லாத ஒண்ணைப் பத்தி, இல்லைன்னு எழுதினா என்ன தப்பு? அதைக் கூட ஏன் பிரச்சனை ஆக்கணும்? அதுவும் அனானியா வந்து! [பிகு: இதை, இதை எழுதினாத் தான் தைரியசாலி, இல்லைன்னா இல்லைன்னு சொல்லலைக்கா.... இங்கே தொடர்ந்து எழுதினாலே தைரியசாலின்னு தான் தோணுது :)))) ]

வருத்தமா இருக்கு அனானி படிக்கும்போது :(

Anonymous said...

உங்கள் நட்சத்திர வாரம் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவர ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் இன்னும்தினமும் பெண் என்பதற்காக ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றும் குறையவில்லை.புதிய பிரச்சனைகள் தான் வருகின்றன..ஆனால் போராடும் குணம் இருக்கும்வரை பெண்ணுக்கு பயமில்லை.
பெண்ணியம் பேசுவதாலேயே அதுவா அது கொஞ்சம் அதிகம் பேசும் அப்படின்னு முத்திரை குத்தி தனியா ஒதுக்கி வைத்துவிடுவாங்க..இல்லை என்றால் பிரச்சனைகள் அதிகமாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.இந்நிலை மாற இன்னும் எத்தனை வருடம் ஆகும் எனத் தெரியவில்லை

சேதுக்கரசி said...

//'சொல்லடி' கிடைச்சவுடன், எதுக்கு இதெல்லாம்? பேசாம எழுதறதை விட்டுறலாமுன்னு
நானும் நினைச்சேந்தான். அப்பவும் நம்ம பதிவுலக நண்பர்கள்தான்
ஆறுதல் சொல்லி, ஒரு தைரியமும் கொடுத்தாங்க. அப்புறம் இந்த 'இனிஷியல்
ஷாக்' அடங்குனபிறகு இப்ப இப்படிப் போயிக்கிட்டு இருக்கு நம்ம எழுத்துலக வாழ்க்கை.//

சொல்லடி-ங்கிறீங்க.. இனிஷியல் ஷாக்குங்கிறீங்க.. என்னங்க இது பேஜாரா இருக்கு.. நான்லாம் பதிவு போடறதா வேணாமான்னு வேற இப்பத்தான் யோசிச்சிட்டிருக்கேன்..

Unknown said...

//இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள். //

:))

நட்புக்குரிய பொன்ஸ்க்கு, நட்சத்திர வாரத்துக்கு கொஞ்சம் லேட்டா என் வாழ்த்துக்கள்.

Leo Suresh said...

பொன்ஸ் அக்கா,
முக்கியத்துவம் தரப்படாத எல்லா விடயமும் மறந்து\மறைந்து விடும்.
just ignore it. அப்புறம்.... நான் இன்னும் பதிவ தொடங்கல.நன்றி
லியோ சுரேஷ்
துபாய்

நாடோடி said...

யக்கோவ் அதுக்குள்ள வீட்ல போட்டவ மாத்தியாச்சு..
நாளுக்கு ஒன்னு.ஹூம் நடக்கட்டும்.

//அது சரி.. இதை மொத்தமாக ஒதுக்க முடியவில்லை நாடோடி. எல்லா பெண்களும் எப்படி என்று என்னால் பேச முடியாது.//

நான் கூறுவது அதில் ஒன்று அல்லது ஒன்று, இரண்டு combinations.

என்னோட deskல நான் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள்.
"A Goal with out a paln is Just a Wish"

"The first step to get the things you want out of your Life is this DECIDE WHAT YOU WANT "
இதுல இரண்டாவது இருக்கே அது உங்களுக்கு பொருந்தும்.

வாழ்க்கைக்கு தேவை +ve thinking.
துன்பங்களை நினைத்துக் கொண்டிருப்பதால்,சொல்வதால் வெற்றி பெற்றுவிடமுடியாது.அதனால் அதிகபட்சமாக கிடைக்க போவது அடுத்தவர்களின் பரிதாபப்பார்வை.
வெற்றி வேண்டுமெனில் போராடவேண்டும். அதுதான் வழி.

Anonymous said...

பொன்னம்மா,

நானும் உள்ளேனம்மா....(கண்டிப்பாக முதன் அனானி அல்ல, ஆனால் நீங்களும் நானும் முன்னமே பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளோம், அப்போதும் நான் அனானியாகவே....)...

உங்கள் வாக்குப்படி பார்த்தால் கண்டிப்பாக நான் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியதில்லை...ஏனெனில் எனது இன்னுமொறு சகோதரியும் பதிவிடுகிறாள் சிங்கையிலிருந்து....ஹிஹிஹி....

பாருங்க, சில மாதம் முன்பு ஒங்கள பீன்ஸ் அப்படின்னு சொன்ன செந்தழலார் கூட இங்க வந்து வாழ்த்திட்டு போறாரு.....காலம் எல்லாவற்றையும் மாற்றும் சகோதரிகளே, சற்று பொறுமையுடன் காத்திருங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

//பெண்ணியம் பேசுவதாலேயே அதுவா அது கொஞ்சம் அதிகம் பேசும் அப்படின்னு முத்திரை குத்தி தனியா ஒதுக்கி வைத்துவிடுவாங்க//
உண்மை தான் லட்சுமி..

//சொல்லடி-ங்கிறீங்க.. இனிஷியல் ஷாக்குங்கிறீங்க//
சேது, பயப்படாம களம் இறங்குங்க.. நாங்கல்லாம் இருக்கோம்ல..

தேவ், நன்றி :))

//நான் இன்னும் பதிவ தொடங்கல//
:)))) நன்றி லியோ சுரேஷ்

//வெற்றி வேண்டுமெனில் போராடவேண்டும். அதுதான் வழி.//
ரைட்டுங்க நாடோடி :))

//பொன்னம்மா,
நானும் உள்ளேனம்மா....(கண்டிப்பாக முதன் அனானி அல்ல, ஆனால் நீங்களும் நானும் முன்னமே பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளோம், அப்போதும் நான் அனானியாகவே....)...//
வாங்க தல.. அதான் "கடந்த ஒரு வருடமா" அனானியா இருக்கிறவர் தானே? :))

// காலம் எல்லாவற்றையும் மாற்றும் சகோதரிகளே, சற்று பொறுமையுடன் காத்திருங்கள்.//
ம்ம்ம்.. பொறுமையுடன் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றாகப் பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியதால் மட்டுமே இந்தப் பதிவு.. ஓகேவா? :)

Anonymous said...

யக்கா,
நானு ஒரு வருடமா அனானி இல்லக்கா, கடந்த 8 மாதங்களாகத்தான்...நீங்க தப்பா கண்டுக்கிட்டிங்கக்கோவ்.

G.Ragavan said...

சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்கவும். பலரும் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் என் பங்குக்கு இந்தாங்க அஞ்சு ரூபா..பின்னே 2 செண்ட்ஸ்னு மட்டும் சொல்றாங்களே :-)

ஆணோ பெண்ணோ...அவர்கள் சொல்லும் கருத்துக்குப் மறுகருத்துச் சொல்ல முடியாத நிலை வந்தால்....தோற்று விட்டேன் என்று ஒப்புக்கொள்வது ஒரு வகை. நல்ல வகை. அல்ல வகையில் கருத்தை விட்டு விட்டு தனிப்பட்ட மிகவும் பலவீனமான பகுதியைத் தாக்குவது....வெற்றி நமதே! அதுவும் பெண் என்றால் இன்னமும் எளிது. ஒரு பெண் இப்படிப் பேசலாமா!!!! அவளுக்கு அதில்லை இதில்லை...எதுவுமில்லை...அது போதும்...அந்தப் பொண்ணு நாளப் பின்ன எதுவும் பேசிற முடியுமா! இந்தத் திமிர்தான் பலருக்கு உதவுது. யாரோ ஒரு பெண் கவிஞர் முலை யோனின்னு எழுதீட்டாராம்...அவரப் போட்டுத் தாளிச்சாங்க...அப்பல்லாம் தோணும்...அடேய்...ஆம்பளைங்க எழுதுன கவிதைங்களையும் படிங்கடா! இதவிடக் கேவலமாவே இருக்கு...விதையில்லாம வெள்ளரிப் பிஞ்சுன்னு எல்லாம் பேரரசுக் கவிஞர்கள் எழுதுறாங்க...அவனுகளக் கேளுங்கடான்னா....வாயத் தொறக்க மாட்டாங்க. ஆம்பளைங்கதான் தப்பு செய்றாங்க..பொம்பளைங்களாவது ஒழுங்கா இருக்கலாமேன்னு ஒரு சப்ப விளக்கம் குடுப்பாங்க. ஆம்பளைங்க திருந்தாத வரைக்கும்...பொம்பளை எப்படியிருக்கனும்னு சொல்ற தகுதியே ஆம்பளைகளுக்கு இல்லைங்குறது என்னுடைய கருத்து. திருந்துன ஆம்பளைங்கள் இருக்கோம்னு யாரும் கையத் தூக்குறீங்களா (என்னையும் சேத்து ஹி ஹி)....திருந்துன பொம்பளைங்களும் இருக்காங்கய்யா...சரியா.

நாமக்கல் சிபி said...

//The first step to get the things you want out of your Life is this DECIDE WHAT YOU WANT "
இதுல இரண்டாவது இருக்கே அது உங்களுக்கு பொருந்தும்.

வாழ்க்கைக்கு தேவை +ve thinking.
துன்பங்களை நினைத்துக் கொண்டிருப்பதால்,சொல்வதால் வெற்றி பெற்றுவிடமுடியாது.அதனால் அதிகபட்சமாக கிடைக்க போவது அடுத்தவர்களின் பரிதாபப்பார்வை.
வெற்றி வேண்டுமெனில் போராடவேண்டும். அதுதான் வழி//

நல்லதொரு கருத்து சொல்லியிருக்கீங்க நாடோடி! இதை நானும் எனக்குத் தேவையானவாறு எடுத்துக்குறேன்!

நிலா said...

பொன்ஸ்,
ஸாரி, எனக்கு இந்தப் பதிவில் உடன்பாடில்லை. எனது கருத்து இங்கே:

http://nilaraj.blogspot.com/2006/11/blog-post_30.html

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஹி..ஹி.
இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லீங்களா?
நாங்கல்லாம் என்னைக்காவது பதிவுலகில் ஆண்கள்னு பதிவு போடுறோமா - இத்தனை பேர் இருந்தும்?

யக்கோவ்..ஆளை விடுங்கப்பா.

பதிவுலகத்தில ஏச்சும் பேச்சும் ஜகஜமப்பா. ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் இதயெல்லாம் கண்டுக்காத கட்டியான தோல் இருந்தா இங்க குப்பை கொட்டலாம்.

அட! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

சாத்தான்குளத்தான்

Chandravathanaa said...

பொன்ஸ்
உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளில் ஓரிரு பிரச்சனைகள் நான் அறியாதவையே. நான் பல தளங்களிலும் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த வலைப்பதிவில் எழுதும் போதுள்ள சுதந்திரம் வேறெங்கும் எனக்குக் கிடைத்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல பெண் வலைப் பதிவாளர்கள் சந்தித்த பிரச்சனைகளைக் கூட நான் சந்தித்ததில்லை. நான் என் பாட்டுக்கு எழுதுகிறேன். யாராவது பின்னூட்டம் தந்தால் ஒரு சாதாரணமானவளாய் புகழில் மகிழ்ந்து, இகழ்வில் சிந்தித்து என்னில் தவறிருந்தால் திருத்த முனைந்து, சமயத்தில் கோபப் பட்டு..... எழுதுவதற்கான ஆர்வம் இல்லாத பொழுதுகளில் மற்றைய வேலைகளில் மூழ்கி இருக்கிறேன்.

ஆனால் பெண் வலைப்பதிவாளர் என்பதால் அதாவது நான் பெண்ணாக (வலைப்பதியும்) இருந்து எந்தப் பிரச்சனையையும் சந்திக்கவில்லை. அப்படி ஏதாவது சந்தித்திருந்தால் அது ஆண்களுக்கும் வரக்கூடிய பிரச்சனைகளே!

வலைப்பதியும் ஆண்களும் பெண்களும் அஞ்சல் தொடர்பு வைத்திருந்தால் அதைக் கூட தப்பாகக் கதைப்பது என்ற கருத்துப்பட நீங்கள் எழுதியதும் எனக்குப் புதிதே. அப்படி யாராவது கதைத்தாலும் அவை அர்த்தமற்றவையே.

ஆனாலும் இப்படியான பிரச்சனைகளும் வலையுலகில் உலா வருகின்றன என்ற போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு பேச ஒன்றும் இல்லையென்றால் இப்படியான பிரச்சனைகளையும் உருவாக்குவார்கள் போலும்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட
வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களை நான் கண்டிருக்கிறேன். எதை எழுதலாம் எதை எழுதக் கூடாது என்று தீர்மானிக்கும் பொறுப்பை எழுதும் பெண் அல்லாமல், அவளது கணவன் அல்லது சகோதரன் எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமைகள் வலை உலகில் மட்டுமல்ல, உலகெலாம் பரந்திருக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

//நானு ஒரு வருடமா அனானி இல்லக்கா, கடந்த 8 மாதங்களாகத்தான்...நீங்க தப்பா கண்டுக்கிட்டிங்கக்கோவ்//
அப்படியா தல.. அப்போ நீங்க யாருன்னு சரியாத் தெரியலை :(

நன்றி ராகவன். உங்கள் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு வலு சேர்க்கின்றன...

வாழ்த்துக்களுக்கு நன்றி நிலா. இந்தப் பதிவு எழுதும் போது உங்களையும் மனதில் வைத்துத் தான் எழுதினேன். (உங்கள் பதிவுகளில் ஒன்றில் கூட இது போன்ற அனானி பிரச்சனையைப் பார்த்ததுண்டு) உங்கள் பதிவின் சுட்டியையும் இங்கே சேர்த்தாச்சு..

//நாங்கல்லாம் என்னைக்காவது பதிவுலகில் ஆண்கள்னு பதிவு போடுறோமா - இத்தனை பேர் இருந்தும்? //
ஆசிப் அண்ணாச்சி, இத்தனை பேர் இருக்கிறதுனால தான் தேவைப்படலை.. பெண்கள் குறைவா இருக்கப் போய்த் தான் எழுதிருக்கேன் :))))

சந்திரவதனா,
//இப்படியான பிரச்சனைகளும் வலையுலகில் உலா வருகின்றன என்ற போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. //
ஆமாம்.. மிகவும் ஆச்சரியமாகத் தான் இருந்தன முதலில் எனக்கும்!

//வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களை நான் கண்டிருக்கிறேன். //
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

Anonymous said...

அன்புள்ள பொன்ஸ் அக்கா
பெண்களுக்கு வலைஉலகிலும் கூடவா இவ்வகையான் பிரச்சினை? நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் மணம்தளராமள் இப்படியான பிரச்சினை கொடுப்பவர்களை இணங்கண்டு அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதுதான்

Unknown said...

கருத்துக்கள் தான் முக்கியமேத் தவிர, அதனை சொல்லுபவர் யாரென்பதும், எந்தப் பாலினம் என்பதும் தேவையில்லாதது. அவரின் பின்புலம், பாலினம் குறித்துத் தாக்குவது கேவலமானது!

ஆனால் பதிவுலகில் இவைதாம் முதலில் குறிவைக்கப்படுகின்றன என்பதுதான் வருத்தமான செய்தி!

ஆனா, இதுக்காக எல்லாம் மூட்ட கட்டலாமா? :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அப்பின்னூட்டங்களைத் தவிர்த்து இன்னும் சில பின்னூட்டங்களும் இப்படியொரு இடுகையைப் பதிவுசெய்து வைப்பதன் அவசியத்தையும் எனக்குத் தெரியப்படுத்துகிறது. எல்லோரும் நீங்கள் 'அய்யோ நான் பெண்!' என்று ஈனமாக இறைஞ்சுகிறீர்கள் என்று எண்ணுகிறார்கள்/சித்தரிக்கிறார்கள் என்று புரியவில்லை. எனக்கென்னமோ, நீங்கள் கம்பீரமாக எழுதுவதாகவே தோன்றுகிறது. பெண் என்று சொல்வதில் கர்வப்படுகிறீர்கள் என்பது என்னுடைய கணிப்பு. சரியான்னு நீங்கதான் சொல்லணும். :) [உதைக்காதீங்க அம்மணீ! நான் சும்மா கேட்டேன். அவ்ளோதான்.] இந்த இடுகையில் எழுதியவை பதிவு செய்துவைக்கும்வகையில் எழுதியது என்ற புரிதல் சரியா தவறா என்று சொல்லுங்கள் பொன்ஸ்.


திருப்பியும் ஒண்ணு சொல்லத் தோணுது. பொன்ஸ், உங்க இடுகையைவிட இங்கேயிருக்கும் பின்னூட்டங்கள் பற்பல விதயங்களைச் சொல்லாமற் சொல்கிறன. நினைக்க நினைக்க, படிக்கப்படிக்க சுவாரசியமாகவே இருக்கின்றன. very very interesting - that's all i can say! ;)

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

pons,

looks like the first half of my comment has vanished into thin air.

I will try to write again.

Mostly i wrote about how impressed i was with this post and other posts you have been posting here. [blogger'ukkae thaangalaiyaa? - po.ka.sa. member ;) ]

Jokes apart. thanks a lot for this post. I look at this post mainly as a place where you are talking about what's going around. You have watched and seem to have compiled things happening here in thamizmanam.

What I dont understand and find strange is this scrambling around to depict this as a peevish lament.

Looking forward to rest of the post during this star-week.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ஹிந்து,

//ஆனா, இதுக்காக எல்லாம் மூட்ட கட்டலாமா? :)//
அருட்பெருங்கோ, அப்படி எல்லாம் யானைகிட்டேர்ந்து தப்பிக்க முடியாது சொல்லிட்டேன் :)))))

//திருப்பியும் ஒண்ணு சொல்லத் தோணுது. பொன்ஸ், உங்க இடுகையைவிட இங்கேயிருக்கும் பின்னூட்டங்கள் பற்பல விதயங்களைச் சொல்லாமற் சொல்கிறன. நினைக்க நினைக்க, படிக்கப்படிக்க சுவாரசியமாகவே இருக்கின்றன//
வாங்க வாங்க மதி. எனக்குத் தான் சந்தேகமே வந்திட்டது. "பதிவு செய்யப்படும் அநீதிகள்" என்ற ரீதியில் தான் இந்தப் பதிவை எழுதினேன். யாருடைய அங்கீகாரத்துக்காகவும் அல்ல. ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்ததில், பதிவு பேசும் விதம் தான் குறை சொல்லும் குழந்தை(நன்றி: அயனுலகம்) போல் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது.

உங்கள் முதல் பின்னூட்டத்தின் முதல் பகுதி திஸ்கியில் இதே விஷயம் தான் இருந்தது. அதனால் நானே நீக்கிவிட்டேன் :))ப்ளாக்கருமா பொ.க.ச.. அது சரி! :)))

aathirai said...

//ஆனால் பெண் வலைப்பதிவாளர் என்பதால் அதாவது நான் பெண்ணாக (வலைப்பதியும்)
இருந்து எந்தப் பிரச்சனையையும் சந்திக்கவில்லை. அப்படி ஏதாவது சந்தித்திருந்தால்
அது ஆண்களுக்கும் வரக்கூடிய பிரச்சனைகளே! //

Anonymous said...

//பதிவு பேசும் விதம் தான் குறை சொல்லும் குழந்தை(நன்றி: அயனுலகம்) போல் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது. //

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவேண்டும் என்று வரும் அறிவுரைகளை கவனத்துடன் கையாளுங்கள். நிஜ அக்கறை உள்ளவர்கள் சொல்வதும் இதுதான், அதது இருக்கவேண்டிய இடத்துல இருக்கணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வெளியே வேஷத்துக்குப் பல்லிளிப்பவர்கள் (ஆணோ பெண்ணோ) வீசும் ஆயுதமும் இதுதான். மிக நேர்த்தியான பதிவு, வாழ்த்துகள்.

பொன்ஸ்~~Poorna said...

தருமி,
உங்க பின்னூட்டத்தை நடுவில் தொலைத்ததற்கு முதலில் ஒரு சாரி :))
//சதவிகிதம் மாற / கூட வேண்டும். அதுவே நீங்கள் சொல்லும் பலவும் மாற உதவும். //
சதவிகிதம் மாறவும் இவை தடைகளாக இருக்கின்றன என்பது என் கருத்து. இது ஒரு மாதிரி சர்கிளாக உள்ளது. சதவிகிதம் அதிகரித்தால், பிரச்சனைகள் குறையும் <-> பிரச்சனைகள் இருந்தால் சதவிகிதம் அதிகரிப்பதென்ன, இருக்கும் சதவிகிதமே குறையலாம் :(

ஆதிரை,
சொன்னா, தப்பா நினைக்கக் கூடாது, நான் எழுதத் தொடங்கி பல நாட்களுக்குப் பிறகு தான் நீங்க பெண் பதிவர் என்பதையே நான் உணர்ந்தேன். உங்க உள்ளல் எனக்கு என்னவோ ஒரு நடுவாந்திர பதிவாகத் தான் பட்டிருக்கு.. அது நல்லாவும் இருக்கு. பாராட்டுக்கள் :))

அனானி,
//மிக நேர்த்தியான பதிவு, //
ரொம்ப நன்றி இதுக்கு, நீங்க சொல்றது ரொம்பச் சரி :)

Santhosh said...

//இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே. "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது"//
ஒருத்தரை பார்க்க அல்லது சந்திக்க விரும்பும் எல்லாருடைய ஆசையும் இப்படி வக்கிரமானதா என்ன? இது ஆண்களுக்கு மட்டுமா இல்ல பெண்களுக்கும் பொருந்துமா பொன்ஸ்?
இந்த மாதிரி வக்கிரமான/கேவலமான/ Back bitting type கமெண்டுகள் வரும் என்பதால் தான் என்னை சந்திக்க விரும்பும் பெண் பதிவர்களை பெரும்பாலும் சந்திக்க மறுத்து விடுகிறேன். எப்பா என்னமா யோசிக்கிறாங்கய்யா மக்கள்.. ஆனா ஒண்ணு இந்த ஆண்களை இந்த மாதிரி எவ்வுளவு முறை செருப்பால அடிச்சாலும் இது மாதிரி தான் நாயை குளிப்பாட்டி நடுத்தெருவுல விட்ட மாதிரி கேப்பாங்க ஹு ஹும்.. ஒடி போயி அடுத்த பதிவர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா நல்லா இருங்கய்யா... எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி செருப்பால அடியும் வாங்குங்க சாமியோவ்....
//இறுதியாக, பெண் பதிவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் எந்த நண்பரையும் இந்தப் பதிவு சாடவில்லை. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.//
எனக்கு நான் குறிப்பிட்டுள்ள வரிகளை படித்தால் சுர் என்று கோபம் வருகிறது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா இல்ல வேற யாராவது தங்களை தாங்களே பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சந்தோஷ்,

நிறைய வார்த்தைகளைக் கொட்டியிருக்கீங்க. இதைப்படியுங்க.

http://reallogic.org/thenthuli/?p=197

அப்படியே இந்தப் பதிவின் இடுகைகளையும்..

http://sakhthi.blogspot.com

pons: sorry for barging in..

porukki said...

நடைமுறையில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கின்றீர்கள். உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்களே நீங்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதவேண்டிய அவசியத்தைக் காட்டுகின்றன.

//இதையெல்லாம் ஒரு பிரச்சனையா பார்க்காம, நமக்கு வேணுங்கற மாதிரி நடந்துக்கிறதுலதான் மெச்சூரிட்டி இருக்கு// போன்ற ஆலோசனைகள் எல்லாப் பக்கதிலிருந்தும் வரும். பிரச்சினயைப் பிரச்சினையாகப் பார்க்காமல் எப்படிப் பார்ப்பதாம்.

தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கும்/எழுதுவதற்குமே பெண்கள் இன்னமும் போராடிக் கொண்டிருப்பதுதான் சமூக அவலம்.

//படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்...// ????! இது குறித்து நீங்கள் இன்னொருமுறை யோசித்துப் பாருங்கள். இந்தத் தரம் பிரித்தலே அடிமுட்டாள்தனமாக இருக்கும்போது படிப்பறிவை வைத்து என்ன செய்வதாம்!படிப்பறிவில்லை என்று இழிவுசெய்வதற்குத்தான் படிப்பறிவு உதவுகின்றதோ.

Santhosh said...

//நிறைய வார்த்தைகளைக் கொட்டியிருக்கீங்க. இதைப்படியுங்க.//
மதி,
வார்த்தைகளில் கோபம் இருக்கிறது ஒத்துக்கொள்கிறேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். மேலும் பொன்ஸ் அவர்கள் இந்த பின்னூட்டத்தை முதலில் வெளியிட தயங்கினார்கள் என்னுடைய கருத்துக்களுக்காண Justificationனை (மிகப்பெரிய மின் அஞ்சல் அது) கேட்ட பின் தான் இந்த பின்னூட்டத்தை அவர்கள் வெளியிட்டார்கள். சுருக்கமாக சொன்னால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் இடப்படுகின்றன் எப்படி நீங்கள் ஒரே ஒரு (அல்லது சில) பின்னூட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகப்படுத்தலாம்? சரி அப்படியே நடந்து இருந்தாலும் இது மாதிரியான பின்னூட்டங்கள் எவ்வுளவு வந்து இருக்கிறது (ஒரு மாதத்திற்கு ஒரு முறை, ஆபாச பின்னூட்டங்களை பார்க்கும் பொழுது இது ஒன்றுமே இல்லையே அப்படி பார்த்தால் தமிழ்மணத்தில் பின்னூட்டம் இடும் அனைவரும் ஆபாச பின்னூட்டம் இடுகிறார்கள் என்று பொதுமைபடுத்தலாமா?). Exceptions are always there. psychos are all over the globe. இந்த பதிவில் ஆண்களை இழிமைபடுத்தும் நோக்கமே மேல் ஓங்கி இருப்பதாக நான் உணர்கிறேன். சக்தி என்ற வலைபதிவை கூறியிருக்கிறீர்கள் அதில் காந்திதொண்டன் என்பவர் கூறியிருக்கும் கருத்தே என்னுடையது. பெண் விடுதலை என்பது இங்கே தவறாக காட்டப்படுகிறது.

பொன்ஸ்~~Poorna said...

//தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கும்/எழுதுவதற்குமே பெண்கள் இன்னமும் போராடிக் கொண்டிருப்பதுதான் சமூக அவலம்.//
ரொம்பச் சரி பொறுக்கி..

சந்தோஷ், வருகைக்கு நன்றி

Anonymous said...

//எல்லாவற்றிற்கும் மேல், வெளிச்சமூகத்தில் படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால், படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது.
//


100% நிஜம் தான்!!!
இப்பொழுது ஆரம்பித்த எனக்கே வரும் பதில்கள் இப்படி என்றால்..உங்கள் நிலமை...தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...