Tuesday, November 28, 2006

பெண் ஏன் அடிமையானாள்?

போனவாரம் படித்து முடித்த புத்தகம் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?". பெரியார் எழுத்துக்கள் படித்ததில்லை. இந்தக்கால எழுத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் கடினமான உரைநடையாக இருக்கிறது. "பார்த்தோமேயானால்" போன்ற சொற்களால் நீள நீளமாகும் வாக்கியங்கள்."நான்" என்பதை ஒழித்து "நாம்" என்று அவர் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில் மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!) இருந்தது.




இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.

கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத் திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில் சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த ராமசாமிப் பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடிக் காட்டும் பெரியார், அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார். வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப் பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி இருப்பார் என்பது திண்ணம்.



வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

- பெரியார்




கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாக்கிவிடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் 'கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல் வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?' என்று பெரியார் கேட்பது பதிலில்லாத கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார். இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை "வாழாவெட்டி", போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்த பட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.

விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை 'அவள் விகடன்' முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில் தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட அந்தப் பெண் நிச்சயமாக "இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு. என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்" என்ற சொற்களைச் சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள். கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?

சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள் அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம் செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத் திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!

விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும் மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும் காணலாம்.

இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின் மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்தக் கர்ப்பத்தடை பற்றியும் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். "நான் உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்", "இந்தப் புள்ளைங்க இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்" என்பன போன்ற சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, "அவமானத்தை உண்டு பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?" என்று ஒரே போடாகப் போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும் சண்டை போட சாக்குதேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன் மனைவிக்கு நல்ல இடி தான்.

இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழ்ழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே. இன்றைக்குக் 'கண்ணியத்துக்கும்' 'மரியாதைக்கும்' கட்டுப்பட்டு மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன? குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, "ஏண்டீ தே..." என்று திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச் சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது! இன்று தொழிற்நுட்ப வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு வாங்குபவனின் தாயாரைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக 'விபச்சாரன்' என்று திட்டவேண்டியது தானே!

'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம் விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல் செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும்!

56 comments:

ROSAVASANTH said...

பெரியாரின் மிக முக்கியமான எழுத்துகுறித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! பெண்கள் விஷயத்தில் அந்த காலகட்டத்தில் யாருமே (மேற்கில் கூட) சிந்தித்திராத விஷயங்களை, ஸிக்ஸர் அடிக்கும் லாவகத்துடன் சொல்லியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலர், கண்ணகி பற்றியும், குஷ்பு விஷயத்திலும் சிவசேனாக்காரர்கள் போல சிந்திக்க நேர்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதனால்தானோ எத்தனை பெரியார் வந்தாலும் விடிவு வராமல் இருக்கிறதோ?!

மங்கை said...

பொன்ஸ்

ரொம்ப நல்ல பதிவு...

இந்த 'விபச்சாரி' என்ற வார்த்தை கூட எனக்கு பிடிக்காத ஒன்று...ஏனா அது உபயோகப்படுத்திற விதம் தான் காரணம்...பாலியல் தொழிலில் ஈடுபடறவங்க கஷ்டத்த மனசில வச்சுட்டு யாரும் பேசறது இல்லை...

///விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட//

நல்லா சொல்லி இருகீங்க...

ஹ்ம்ம் இது 'STAR POST'...:-)))

rajavanaj said...

//பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம்//

வாழ்த்துக்கள் பொன்ஸ்!

Rajavanaj

ramachandranusha(உஷா) said...

அப்படி போங்க, அதுல விசேஷம் என்னவென்றால் பெண்களின் முட்டாள்தனங்களையும், கணவனை இரிட்டேட் செய்யும் பெண்களை சாடியிருப்பார். இன்றுவரை பெண்ணுரிமை என்னவென்பதற்க்கு சரியான எடுத்துக்காட்டு பெரியார் மொழிகள்தான்.
என்னுடைய பதினைந்து வயதில் படித்ததன் பலன், ஒரு மன மாறுதலை தந்தது என்றால் மிகையில்லை.
இப்படி எல்லாம் ஐம்பதுகளில் சிந்தித்தார் என்றால் அவருடைய எதற்கும் அஞ்சாத டோட் கேர் மனோபாவம் என்று தோன்றும்.
இன்றும் அவருடைய இரண்டாவது திருமணத்தை கையில் எடுப்பவர்களுக்கு ஒரு விஷயம்- மணியம்மை, பெரியாரை
மணக்கும்பொழுது அவருக்கு வயது முப்பதுக்கு மேல். அந்த வயதில் தன் செயலை குறித்த முழு அறிவு அவருக்கும் இருந்திருக்கும்.
ஆக, முப்பது வயது நிரம்பிய பெண்ணை, அவளின் முழு விருப்பத்தின் பேரில் மணந்தது எந்த தவறும் இல்லை.

அருள் குமார் said...

எல்லோருமே படிக்க வேண்டிய ஒருமுக்கியமான புத்தகம். இந்த புத்தகம் படிக்கும் முன்னரே இதில் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் எனக்கு வர ஆரம்பித்துவிட்டன. திருக்குறள் உலகப் பொதுமறையாகவெல்லாம் இருக்க இயலாது என்று தெரிந்துகொள்ள நிறைய அனுபவம் தேவைப்பட்டது. இந்த புத்தகத்தில் அதே கருத்துக்களைப் பார்த்தபோது முன்பே படிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கமும், இத்தகைய கருத்துக்களை அவரின் காலத்திலேயே திட்டவட்டமாக அவரால் யோசிக்கவும் சொல்லவும் எப்படி முடிந்ததென்ற ஆச்சரியம் மிகுந்தது.

இந்த கருத்துக்களை ஏற்கிறார்களோ இல்லையோ... எல்லோரும் ஒரு முறை நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும்! இத்தனைக்கும் இந்த புத்தகம் மொத்தமே 100 பக்கங்களுக்குள் தான்!!

முத்துகுமரன் said...

சிக்ஸரோடு ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இயல்பான நேர்மையான வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.

தமிழ்மொழியையும் விமர்சனப்பூர்வமாக அணுகியவர் பெரியார். அறியார்தான் காட்டுமிராண்டி என சொன்னார் என தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய இந்த பதிவு இன்னும் சிலரை நிச்சயம் வாசிக்கத்தூண்டும். அதற்காக மீண்டுமொருமுறை நன்றி

Anonymous said...

//எத்தனை பெரியார் வந்தாலும் விடிவு வராமல் இருக்கிறதோ?!//
?!?!?!?!
:-)

Anonymous said...

நவயுகப் பெரியார் யாராவது "ஆண் ஏன் அடிமையாகிக் கொண்டிடுக்கிறான்" என்று ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இராம்/Raam said...

பொன்ஸ்,

அருமையான பதிவு... நட்சத்திரம் ஜொலிக்குது!!!!!

Anonymous said...

கற்பு என்பது சிறிய தசைப் பகுதியை வைத்துக்கொண்டு எழுப்பப்படும் மிகப்பெரிய பிரச்சினை, கற்பு என்பது மனதில் தானே தவிற சதையில் இல்லை. கிரிக்கெட்டில் டோணி அடிக்கும் சிக்ஸர்கள் போன்றவைதான் பெரியாரின் கருத்துக்களும். சும்மா காட்டுத்தனமா சுத்துரான் என்பார்கள். உட்கார்ந்து யோசித்தால் உண்மை தெரியும். மிக நல்ல பதிவு பொன்ஸ்.

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா.. யக்கா.. இப்பத்தான் ஸ்டார் போஸ்ட்க்கு மதிப்பு வந்த மாதிரி இருக்கிறது.

பூங்குழலி said...

பதிவுக்கு நன்றி பொன்ஸ் அவர்களே...

உண்மைதான்..
பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த மானம் மரியாதை மற்றும் இன்னபிற குல சொத்துக்களெல்லாம் பெண்ணின் தொடையிடுக்கில் பொத்தி பொத்தி காப்பாற்றி வருவதாக இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு வெங்காய அடிபொடிகளும், தமிழ் குடிதாங்கிகளும் விலக்கல்ல...

சரி, பிறந்தக பளு மணம்புரியும் வரைதான் என்று பார்த்தால் கழுத்தனாங்கயிறு ஏறிய உடனே புகுந்தக பளுவும் வந்து ஒளிந்துகொள்கிறது..

என்ன செய்வதோ...

சரிதான் தமிழ் ஒரு ஆணாதிக்க மொழியென்றால் மிகையல்ல...

C'mmon man! gim'me a break.. என்று பலவிடங்களில் எழுந்த தில் , இங்கே தமிழில் சொல்ல முடியுமா...

உண்மையிலே உங்களுக்கு நெஞ்சிலே "மாஞ்சா சோறு" இருக்கிறது...
:))

(பி.கு.. சொற்கள் சற்று காட்டமாக இருப்பதாக நினைத்தால், திருத்திக்கொள்ளவும்..)

நன்றி..

பூங்குழலி said...

ம்.. சொல்ல மறந்துவிட்டேனே..

நட்சத்திர வாழ்த்துக்கள்..

மற்ற பதிவுகளையும் படிக்க முயல்கிறேன்..

பத்மா அர்விந்த் said...

பொன்ஸ்
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

அசுரன் said...

சீரியல்கள் அதிகம் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. சும்மா நகைச்சுவைக்காக... :-))

அருமையான ஒரு தலைப்பை எடுத்து, பெரியாரின் பல்வேறு அளுமைகளில் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்....

ஆம், கர்ப்பத்தடைக்கும் பிள்ளை பெறாமல் இருப்பதற்க்கும் பெண்களுக்கு உரிமை கோரி குரல் கொடுத்தவர்களில் முதல்வர் பெரியார் அவர்கள்.

தமிழ் மட்டுமல்ல, தனியுடைமை சமூகத்தில் எல்லா விழுமியங்களுமே ஆதிக்க வர்க்கத்தினரின் சிந்தனையையே தாங்கி நிற்கின்றன.

அசுர குணம், சண்டாளன் போன்ற வார்த்தைகள் உருவாக காரணமான அதே சமூக பொருளாதார சூழ்நிலைதான். நீங்கள் குறிப்பிட்டது போல பெண்கள் குறித்த ஆணாதிக்க சொற்கள் உருவாக காரணமானது.

இந்த விபச்சாரி என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து லிவிங் ஸ்மைல் எனது தளத்தில் கூட மாற்றுக் கருத்து ஒன்றை வைத்து, சிறு விவாதத்திற்க்குப் பிற்ப்பாடு அதை நான் ஏற்றுக் கொண்டேன்.



//'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே//

எந்த ஒரு தனிமனிதரும் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியாது. வரலாறு தானாக உருவாவதுடன், வரலாற்றையும் படைக்கிறது(மொழிபெயர்ப்பு சரியில்லை என்று நினைக்கிறேன்).

அதாவது ஒரு சமூகம் அதன் இயக்கப் போக்கில் மாறிக் கொண்டு விடும். அந்த் மாற்றத்தின் போக்கில் பெரியார், பகத்சிங், காந்தி போன்றவர்கள் ஒரு விளைவாக உருவாகிறார்கள்.

பெரியார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவரை போன்ற ஒருவர் உருவாவதற்க்கான சமூக சூழல் இருக்கும் பட்சத்தில் வேறு யாரேனும் உருவாவார்கள். இந்த சமூகம் தனக்கான தலைவரை தானே உருவாக்கும்.

அதனால் சமூக மாற்றம் என்பதும் தவிர்க்க முடியாது. பெண் விடுதலை என்பதும் தவிர்க்க முடியாத, சிலருக்கு கசப்பான உண்மை.

சரி, சில சின்ன கேள்வி.

* பெண்ணடிமைத்தனம் மனித சமூகத்தில் எந்த வரலாற்றுக் கட்டத்தில் உருவாகிறது?

* உலகின் ஆரம்ப கால மனித சமூகத்தின் தலைமை யாரிடம் இருந்தது(சில விதிவிலக்குகள் தவிர்த்து)?

அசுரன்

அசுரன் said...

//உண்மைதான்..
பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த மானம் மரியாதை மற்றும் இன்னபிற குல சொத்துக்களெல்லாம் பெண்ணின் தொடையிடுக்கில் பொத்தி பொத்தி காப்பாற்றி வருவதாக இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது.//

பூங்குழலியின் இந்த வரிகள் மிகத் தெளிவாக கற்பு குறித்து பொருள்முதல்வாத பார்வையை வெளிப்படுத்துகிறது.

இந்த விசயத்தை பின்பு வாய்ப்பு கிடைக்கும் பொழுது விவரிக்கிறேன்.

அசுரன்

அ.பிரபாகரன் said...

நல்ல கருத்துக்கள் பொன்ஸ்.

'பெண் ஏன் அடிமையானால்?' -- ஆங்கில மொழிபெயர்ப்பு பணி தி.க'வில் நடப்பதாக அறிந்தேன்.

உலகம் முழுவதுக்கும் பொதுவான கருத்துக்கள் அவை .

Sivabalan said...

பொன்ஸ்,

நல்ல பதிவு.

பதிவுக்கு நன்றி

Anonymous said...

மிகவும் அருமையான இடுகை பொன்ஸ்! பெரியாரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டிவிட்டது உங்களின் இந்த இடுகை.

ரவி said...

ஸ்டார் போஸ்ட்டில் ஒரு ஸ்டார் போஸ்ட் அப்படீன்னு சொல்லலாமா ? கொஞ்சம் வெயிட்டான எழுத்துக்கள்...இரும்படிக்கற எடத்துட ஈக்கு என்ன வேலைன்றமாதிரி நான் அப்பீட் ஆகிக்கறேன்...

இவ்ளோ சொல்றீங்க...டம்ளர் எப்படி இருக்கும்னு தெரியலை உங்களுக்கு...என்னத்தை சொல்ல...:)

இளங்கோ-டிசே said...

பெரியாரை நேர்மையுடன் -காழ்ப்புணர்ச்சியின்றி- வாசிக்கத் தொடங்குபவர்களை பெரியார் நிச்சயம் ஏதோவொரு வகையில் பாதிக்கவே செய்வார். பெரியார் இன்றும் காலவதியாகமல் இருபதற்கு பெரியார் தொடர்ந்து தன் வாழ்நாள முழுதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்ததும் ஒரு காரணம். திருக்குறளை கடுமையாக விமர்சித்த பெரியார், திராவிடநாடு பிரிவினையை முன்வைத்தபோது திருக்குறளை உதிக்கப்போகும் திராவிடநாட்டிற்கு ஒரு 'பொதுமதமாக' முன்வைத்தவர் என்பதும் கவனிக்கக்தக்கது (இல்லாதவொன்றை கற்பனையில் சிந்திக்காமல் இருப்பதை விமர்சனபூர்வமாக உள்வாங்கி யதார்த்தத்தில் மக்களின் வாழ்க்கையைக் கட்டியமைக்க முயன்றவர் பெரியார் என்பதற்காய் குறிப்பிடுகின்றேன்.; இடதுசாரிகள் தவற/தவறு விட்டுக்கொண்டிருக்கும் முக்கிய புள்ளியும் இதுதான்).

அதேபோன்று தமிழ்மொழியின் 'ஆண்மொழி' குறித்து மிகுந்த அவதானத்துடன் இருந்த பெரியார் ஆதிக்கச் சக்திகள் குறித்து பேசும்போது பெண் பாலில் விளிப்பதைவிடுத்து (தே......டியான்) என்று ஆண்பாலையே பயன்படுத்தியதாய் நினைவு (இன்னொரு முறை பெரியாரின் உரைகளைப் பார்த்துவிட்டு, தவறாயிருப்பின் தெரியப்படுத்துகின்றேன்).
....
நல்லதொரு பதிவு பொன்ஸ்.

ஓகை said...

வாரத்துக்கு வாழ்த்துக்கள்!

//தமிழ் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே//

பெரும்பாலும் எல்லா மொழியிலும் அப்படித்தான் என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கிலத்திலும் அப்படித்தானே!

இதற்காக தமிழைத் தனித்து திட்டுவது... வேண்டாம் பொன்ஸ் அவர்களே!

பொன்ஸ்~~Poorna said...

/இதற்காக தமிழைத் தனித்து திட்டுவது... வேண்டாம் பொன்ஸ் அவர்களே!
//
பின்னூட்டத்துக்கு நன்றி ஓகை.

நான் தமிழைத் திட்டவே இல்லையே.. ஆணாதிக்கம் என்பதே திட்டும் வார்த்தையா?

அத்துடன், இந்தப் பதிவு தமிழில் எழுதப்பட்ட பதிவு, தமிழ்மொழியைப் பற்றித் தான் பேசுகிறது. ஆங்கிலம் என்னுடைய அன்னை மொழி இல்லை. அது திருந்தினாலும் திருந்தா விட்டாலும் எனக்கென்ன போச்சு?

நம் குழந்தையின் குறைகளைத் தானே நாம் சுட்டிக் காட்ட முடியும்?

ஓகை said...

//நான் தமிழைத் திட்டவே இல்லையே.. ஆணாதிக்கம் என்பதே திட்டும் வார்த்தையா//

இல்லியா பின்னே.

இது உலகளாவிய குறை. எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. நம் மொழியின் தனித்தன்மை இல்லை.

ஆணாதிக்கம் என்பது திட்டுவதுதான். முட்டாளை முட்டாள் என்பது போல

ஆணாதிக்க உலகில் அந்தக் குறைக்காக தமிழுக்கு தனியிடம் இல்லை என்பதே நான் சொல்வது.

பொன்ஸ்~~Poorna said...

ஓகை, மாற்றி விட்டேன்.. இப்போ சரிதானே?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஆணாதிக்க உலகில் அந்தக் குறைக்காக தமிழுக்கு தனியிடம் இல்லை என்பதே நான் சொல்வது.
//

ஓகை அவர்களே,

அப்ப என்ன செய்யலாமென்று சொல்லுங்கள். ஆங்கிலத்தில், பிரெஞ்சில், ஜேர்மனில், இத்தாலியனில், ஸ்பானிஷில், ஜப்பானிய மொழியில் என்று பல்வேறு மொழிகளிலும் இருப்பதுதான் தமிழிலும் இருக்கிறது.

அதுவும் 'ஆணாதிக்கம்' என்ற வார்த்தையே திட்டும்வார்த்தை, 'முட்டாளை முட்டாள்' என்று சொல்வதுபோல என்பது பரிகசிக்கத்தக்கதாக இல்லை? உள்ளதை உள்ளபடிதானே சொல்லமுடியும்?

thiru said...

ஆழ்ந்த கருத்துக்களுடன் நெற்றிப்பொட்டில் அடிக்கிற கேள்விகள் நிறைந்த பதிவு பொன்ஸ்.

பலரும் சொல்லியபடியே பெண்ணினம் பற்றிய சிந்தனைகள் அவ்வளவாக இல்லாத காலத்தில் பெரியார் பெண்ணடிமைத்தனத்தை, ஆணாதிக்கத்தின் ஆணிவேரை வெட்டியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன். புத்தகத்தின் தலைப்பு மாற்றம் அவசியமோ? பெண் தானாக விரும்பி அடிமையாகவில்லை. அசுரனின் பதிவில் கேட்கப்பட்ட ஆழமான கேள்விகளின் விடைகளே பெண் அடிமையாக்கப்பட்டதன் துவக்கம் பற்றி சொல்லும். துவக்க கால சமுதாயம் பெண்களால் தான் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. மனிதன் கூட்டமாக வாழ்ந்த அந்த காலத்தில் பெண் தலைமையேற்று வழிநடத்தப்பட்டு தான் சமுதாயம் வளர்ந்திருக்கிறது.

கற்பு என்பது இடையில் புகுத்தப்பட்டது! பெண்ணுக்கு கற்பை போதிக்கிற நாம் ஆண்கள் பற்றி கண்டுகொள்வதில்லை. மதங்களிலும் இதே பார்வை எதிரொலிக்கிறது.
எயிட்ஸ் நோய் அதிகமாக வளர்கிற இந்தியா கற்பு என்கிற காகித வசனத்தை பிரதிபலிக்கிறதா என்பது கேள்வியே!

காதல் பற்றிய பார்வையை உடைத்தவர் பெரியார். பெரியாரை அதிகமான அளவு பேசும் நாம் அவரது பெண்ணிய கருத்துக்களை சிந்தனை, செயலில் எடுத்திருக்கிறோமா என்பது கேள்வியே!

சரி பாதிக்கும் அதிகமாக பெண்கள் இருக்கையில் இன்னும் 33 சதவிகித இடஒதுக்கீடு பற்றி பேச தான் செய்கிறோமே என வெட்கப்படுகிறேன். ஏன் 50 சதவிகிதம் இல்லை?

பெரியாரை பெண்ணின விடுதலை பற்றி ஆழமாக சிந்திக்க வைத்த நெருப்பு எது என்பது அறிய ஆவல். பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் நமது கண்களை மறைக்கிறது.

ஓகை said...

இப்போது சரி. மிக்க நன்றி.

வெளிகண்ட நாதர் said...

நட்சத்திர கண்மணிக்கு வாழ்த்துக்கள்!

//தமிழ்ழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது.// 'ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே' இப்படி எல்லாம் கண்ணதாசனும் எழுதி வளர்த்த மொழியாச்சே! நம்பித்தான் ஆகணும்!

ஓகை said...

//உள்ளதை உள்ளபடிதானே சொல்லமுடியும்?//

மதி கந்தசாமி அவர்களே, உங்களுடைய கருத்திலிருந்து நான் முரன்படவில்லையே! மேலும் நானும் அதைத்தானே சொல்லியிருக்கிறேன்.

தமிழ் ஆணாதிக்க மொழி என்று சொல்வதில்தான் எனக்கு முரன்பாடு. 'தமிழும்' என்று சொன்னால் முரன்பாடில்லை.

இது மொழிகளின் உலகலாவிய ஒரு தன்மை. தமிழ் மட்டுமே ஆணாதிக்க மொழியாக இருக்கிறது என்கிற தொனியில் வந்த வாக்கியங்களில்தான் எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தெரிவித்திருந்தேன். நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு விமர்சனக் கட்டுரைக்கு சிறந்த எ.கா. உங்கள் பதிவு.
உணர்ச்சிகளின் பாற்படாது, நீங்களா கற்பனை எதுவும் செய்யாது, ஆதரவு எதிர்ப்பு என்ற நிலைகள் எல்லாம் இல்லாமல், அழகான சிந்தனைகளோடு கொண்டு சென்றுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!

பெரியாரின் இந்த நூலின் இன்னொரு முக்கிய விடயம் என்றால், அவரும் சார்பு நிலைகள் எடுக்காமல் சொல்லி இருப்பார்! ramachandranusha சொல்வது போல பெண்களின் முட்டாள்தனங்களையும் சாடியிருப்பார்.

அவர் பல சமயங்களில், முன்னர் தான் சொன்ன கருத்தைப் பின்னர் தானே மறுத்ததும் உண்டு! காரணம் உண்மை விழைவு; உண்மை அறியத் தயக்கமோ வெட்கமோ இன்றித் திருத்திக் கொள்ளவும் பெருந் துணிவு வேண்டும்; அதுவும் ஒரு இயக்கத்தின் தலைவருக்கு!

தமிழ் மொழியும், சமுதாயமும், பல துறைகளும் ஏதோ ஒரு விடயத்திலாவது பெரியாருக்குக் கடமைப்பட்டு உள்ளது! ஆன்மிகமும் கூட! தேங்கி விட்ட பல கசடுகளை அடித்துச் சென்ற காட்டாற்று வெள்ளம் அவர்!

மிகச் சிறிய இப்புத்தகம் யூனிக்கோடில் வருவது சாலவும் சிறப்பாக இருக்கும்; அவர் ஆர்வலர்கள் முன் வர வேண்டும்!

கால்கரி சிவா said...

என்னுடைய நட்சத்திர வாரத்தில்
நான் எழுதியது உங்கள் கவனத்திற்கு. இதே கருத்து என்பதால்.

விழிப்பு said...

நான் சொல்ல நினைத்ததை நிறைய பேர் சொல்லி விட்டார்கள்.

என்னால் முடிந்தது ஒரு '+' குத்து. :-)

Anonymous said...

//தமிழ் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே//

வாங்க ஓகை சார்,
மேற்கண்ட வாசகத்தில் என்ன தவறு இருக்கிறது? மனைவியை இழந்தவனுக்கு ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் ஆண்பாற்சொற்கள் உண்டு என்பதை அறியாதவரா தாங்கள்? தமிழில்..?
பெண்களை வைத்து பிழைப்பவனையும்/ மனைவியோடு வாழாமல் தனித்து இருப்பவனையும் பிற இந்திய மொழியில் ஆண்பாற்சொற்கள் உண்டு. தமிழில்..?

தமிழ்நதி said...

சிந்திக்கத் தூண்டிய பதிவு பொன்ஸ். அதைவிட, பெரியாரை வாசிக்க வேண்டும் என்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போகும் எங்களைப் போன்றவர்களுக்கு உந்துதலான ஒரு பதிவு என்றும் சொல்லலாம். விதவை என்பதன் எதிர்ப்பாலாக தபுதாரன் என்றொரு சொல் தமிழில் உண்டு. ஆனால், அதைப் பிரயோகிக்கும் துணிவுதான் யாருக்கும் வரவில்லை. “இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை ‘வாழாவெட்டி’போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது”. என்பதை மீள்பரிசீலனை செய்யுங்கள். மலடி, தே…, வாழாவெட்டி…. மேலும் பெண்ணின் உடல் உறுப்புக்களைத் தூசணை வார்த்தையாகப் பயன்படுத்துகிற வழக்கம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. நாம் கடக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இப்படி எழுதுவதைக் கூட ‘இவளுகளுக்கு வேற வேல இல்லை’என்று சொல்பவர்கள் வாழும் சமூகத்தில்தான் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

Anonymous said...

பெண்கள் நன்மைக்கு ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும் நன்மை ஏற்படாது என்றும் தாங்களே பாடுபடவேண்டும் என்றும் எழுதி இருக்கிறார், பெரியார்.
இனிவரும் தலைமுறை பெண்கள்..ஆண்குழந்தைக்கு சமமாக பெண்குழந்தையை வளர்ப்பதன் மூலமும் இருவருக்கும் மனரீதியாக சமத்துவத்தை புரிய வைப்பதன் மூலமும் மாற்றத்தினைக் கொண்டுவரலாம்.தாய் தான் குழந்தையின் முதல் ஆசிரியை.இப்போது தனக்கு கிடைத்து இருக்கும் உரிமைகளை கொண்டு இதனை செய்யலாம்.

Anonymous said...

இன்றைக்கு (என்றைக்கும்?) அவசியமான ஒரு விசயத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் பொன்ஸ். இப்பதிவு குறித்து நான் சொல்ல நினைத்தவற்றை என்னைவிட அதிகமாகப் பெரியாரை அறிந்தவர்கள் சொல்லிவிட்டார்கள், அதனால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை, நன்றியைத் தவிர.

கருப்பு said...

எங்கள் பெரியய்யா குறித்த அருமையான ஒரு அலசலுக்கு நன்றி பொன்ஸ்.

நான் எதிர் பார்க்கவே இல்லை. அக்குவேறு ஆணிவேறாக எல்லாப் பக்கமும் பிரித்துப் பார்த்து நடுநிலையான பதிவை எழுதி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Divya said...

\" கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்/"

அருமையா சொல்லியிருக்கிறீங்க பொன்ஸ், நட்ச்சத்திரம் ஜொலிக்கட்டும்!!

Anonymous said...

தோழிடாட்காமில் டாக்டர் ஷாலினி இதைப் பற்றிதான் நீண்ட நாளாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

Sridhar V said...

உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் நான் சொல்ல நினைத்ததை ரவிசங்கர் அருமையாக பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

//ஒரு விமர்சனக் கட்டுரைக்கு சிறந்த எ.கா. உங்கள் பதிவு.
உணர்ச்சிகளின் பாற்படாது, நீங்களா கற்பனை எதுவும் செய்யாது, ஆதரவு எதிர்ப்பு என்ற நிலைகள் எல்லாம் இல்லாமல், அழகான சிந்தனைகளோடு கொண்டு சென்றுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
//

வாழ்த்துக்கள்! தொடருங்கள் உங்கள் பணியை தொய்வில்லாமல்!

லொடுக்கு said...

//சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில் மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!) இருந்தது.
//
மிகச் சரி. இதை நானே பழைய படங்களை பார்கையில் உணர்ந்திருக்கிறேன்.
மற்றபடி, பதிவை பற்றி எல்லாரும் சொல்லி விட்டார்கள். :)

Anonymous said...

pons....Periyaarin oRu puthagam ungalukku koDutha ithE athirchiyayUm..aacharyathaiyum...avarin oVvorU puthagamUm tharum enbadhil eMmakku sirithuM sandhEgam illai....appuram..ungal ezhuthu nadai miga siraapaaga ullathu...ithu pOndra seythikalai saamaniya makkalukku eDuthu sElla..muyarchi sEyyungal..atleast try to publish in "keetru.com"/thinnai.com..etc.,
vaazhtukkal...

Premalatha said...

என்னா, ஒரே தூள் கிளப்புது போல.

வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

http://bhaarathi.net/ntmani/?p=214

இந்த இடுகை கண்டு மகிழ்ச்சி. பெண்களுக்கு வீரம், வன்மை, கோபம் எல்லாம் இருக்கும் என்பதை ஆண்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று பெரியார் கூறியிருக்கிறார். இன்றும் பெண்களேகூட அதை ஒத்துக்கொள்வதில்லையே:))


http://bhaarathi.net/ntmani/?p=214
இந்தப் பதிவில் பெரியார் குறித்தான விமர்சனங்களை முன்வைத்த தோழி ஒருவர் "பெரியார் என்ன பெண்விடுதலை பேசினார்?" என்று எள்ளி வினவியிருந்தபோது பெரியாரின் இந்தநூல் குறித்தான அலசல் ஒன்றையும், அதன் முக்கியத்துவத்தையும் எழுத நினைத்தேன். விரிவாகச் செய்யத் திட்டமிட்டதும், பின் அதற்கான நேரம் ஒதுக்க இயலாமையுமாய்ச் சேர்ந்து இன்றுவரை அதை எழுதவேயில்லை. நீங்கள் இந்நூலைப் படித்ததும், அது குறித்து எழுதியதும் நன்று. உங்களைப் போன்ற இளையோர்கள் (பின்ன... எங்களுக்கெல்லாம் வயசாகிக்கிட்டே வருதில்லையா:)) பெரியாரைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி.

/// “இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை ‘வாழாவெட்டி’போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது”. என்பதை மீள்பரிசீலனை செய்யுங்கள்///
தமிழ்நதியை வழிமொழிகிறேன் இவ்விடயத்தில். நாம் இருக்கும் இடங்களில் உள்ள மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தொலைதூரக் கிராமம் வரையான பெரும்பான்மை மனிதர்களின் வாழ்வைக் கருத்தில் எடுத்தால் உண்மை இன்னும் கசக்கும்.

ஜோ/Joe said...

பொன்ஸ்,
அருமையான பதிவு,சிந்தனைகள் ,பின்னூட்டங்கள் ..நட்சத்திர வாரத்தில் அனைத்து பதிவுகளும் அருமை..தொடருங்கள்.

வெற்றி said...

பொன்ஸ்,
சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை இப்பதிவில் தெரிவித்துள்ளீர்கள். குறிப்பாக திருக்குறள் பற்றிய பெரியாரின் நோக்கு. எதற்கும் ஆற அமர இருந்து வாசித்துவிட்டு வாறேன்.

நன்றி.

பட்டணத்து ராசா said...

good one

Unknown said...

என்னைப் பொருத்தவரையில், இது, பெண் எப்படி அடிமையானாள் என்ற பார்வையில் ஒவ்வொரு பெண்ணும், பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்ற பார்வையில் ஓவ்வொரு ஆணும் படிக்க வேண்டியப் புத்தகம்.

மேலும், பெரியாரை வெறும் வறட்டுநாத்திகவாதி என்று மட்டுமே சாடிக்கொண்டிருக்கும் அறியாதவர்கள் , அவருடையப் பெண்ணிய பார்வை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

நட்சத்திர வாரத்தில் இதனைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி பொன்ஸ்!!!

அசுரன் said...

* பெண்ணடிமைத்தனம் மனித சமூகத்தில் எந்த வரலாற்றுக் கட்டத்தில் உருவாகிறது?

* உலகின் ஆரம்ப கால மனித சமூகத்தின் தலைமை யாரிடம் இருந்தது(சில விதிவிலக்குகள் தவிர்த்து)?

மேலேயுள்ளவை நான் கேட்டிருந்த இரு சிறு கேள்விகள். இரண்டாவதிற்க்கு திரு பதில் சொல்லிவிட்டார். அதாவது ஆரம்ப கால மனித சமூகத்தின் தலைவி பெண்தான்.

சரி, அப்படியெனில் என்ன காரணத்தினால் அது ஆணாதிக்க சமுதாயமாக மாறியது?

சமூகத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கில் தனியுடைமை சமூகம் மலர்ந்ததுதான் பெண்ணடிமை சமுகமாகவும் அது மாறுவதற்க்கு அடிப்படை. இங்குதான் கற்பு என்ற கருத்தாக்கத்தின் தேவையெழுகிறது. அதனால்தான் பூங்குழலியின் அந்த வரிகளையும் மேற்கோள் காட்டியிருந்தேன்.

இரண்டாவது கேள்விக்கான பதில் - தனியுடைமை சமூகத்தின் ஒரு தவிர்க்க இயலா விளைவுதான் பெண்ணடிமைத்தனம். அப்படியான முதல் சமூகம் ஆண்டான் அடிமை சமூகம்(தமிழகத்தில் பெண்ணின் மார்புகளை இடுக்கியால் பிடித்து துன்பப்படுத்தும் முறை ஆணாடான் அடிமை சமூகத்தில் இருந்தது - 'தமிழகத்தில் அடிமை முறை' புத்தகம்).

ஆக, தனியுடைமை சமூகத்தின் மறைவில்தான்,

உலக வளங்களும்-மனித அறிவின் சாதனைகளும் மனித சமூகத்தின் பொதுச் சொத்தாக மாறும் போதுதான்,

மனித் சமூகத்தின் ஆக முக்கியமான உற்பத்தி சக்தியாக மனிதன் மாறும் பொழுதுதான்,

பெண்களின் மேன்மை மீண்டும் அதற்க்கான மரியாதையைப் பெறும்.

பெண் விடுதலை என்பது தனித்த ஒரு விசயம் அல்ல. அது உருவாகிய வரலாறும் சரி, அது பல்வேறு காலகட்டங்களில் உருமாறி இன்று உலகமயத்தில் பெண் என்பவள் ஒரு கடைச் சரக்காக வந்து நிற்கிற நிலையானலும் சரி, இந்த சமூகத்தின் விடுதலையில்தான் பெண்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதை துலக்கமாக தெரியப்படுத்துகிறது.

அசுரன்

Anonymous said...

பொன்ஸ்,

இந்த மாதிரி குப்பை தத்துவங்களை படிச்சு நீங்க கெட்டுப்போகாதீங்க. கற்பு கிடையாது, விபச்சாரம் ரொம்ப ஒசத்தி அப்படீன்னு எவனாவது எழுதிவெச்சா அத படிச்சு நீங்களும் மனச கெடுத்துக்காதீங்க. ஒங்களுக்கு இன்னும் நறய நல்லது, கல்யாணம் கரு.. நடக்கணும். பாத்து நடந்துக்கோங்க. அவ்வளவுதான் இந்த கிழவிக்கு தோணுது. நீங்க இத மாதிரி பதிவு போடறவன்னு ஒங்க வூட்டுல தெரியுமா தாயீ? இந்த பசங்கல நம்பி ஏதோ ஒரு சுரத்துல இப்படியெல்லாம் எழுதலாமா நீங்க... என்னமோ மனசு கேக்கல. எழுதிப்புட்டேன். தப்பா எடுத்துக்காத தாயீ

Anonymous said...

பொன்ஸ்,

இந்த மாதிரி குப்பை தத்துவங்களை படிச்சு நீங்க கெட்டுப்போகாதீங்க. கற்பு கிடையாது, விபச்சாரம் ரொம்ப ஒசத்தி அப்படீன்னு எவனாவது எழுதிவெச்சா அத படிச்சு நீங்களும் மனச கெடுத்துக்காதீங்க. ஒங்களுக்கு இன்னும் நறய நல்லது, கல்யாணம் கரு.. நடக்கணும். பாத்து நடந்துக்கோங்க. அவ்வளவுதான் இந்த கிழவிக்கு தோணுது. நீங்க இத மாதிரி பதிவு போடறவன்னு ஒங்க வூட்டுல தெரியுமா தாயீ? இந்த பசங்கல நம்பி ஏதோ ஒரு சுரத்துல இப்படியெல்லாம் எழுதலாமா நீங்க... என்னமோ மனசு கேக்கல. எழுதிப்புட்டேன். தப்பா எடுத்துக்காத தாயீ

பொன்ஸ்~~Poorna said...

//நீங்க இத மாதிரி பதிவு போடறவன்னு ஒங்க வூட்டுல தெரியுமா தாயீ? இந்த பசங்கல நம்பி ஏதோ ஒரு சுரத்துல இப்படியெல்லாம் எழுதலாமா நீங்க... //
கூப்பிட்டுப் படிக்கச் சொல்லிடுறேன் பொன்னம்மா பாட்டி.. ரொம்ப கவலைப்படாதீக.. எங்கூட்ல இருக்கிறவங்களும் இதெல்லாம் படிச்சி வளந்தவக தான்..

//கற்பு கிடையாது, விபச்சாரம் ரொம்ப ஒசத்தி //
இதுல தகவல் பிழை இருக்கு.. பதிவு தெளிவா இருக்குன்னு நம்புறேன்.. நீங்க புரிஞ்சிகிட்ட விதத்துல பிரச்சனை இருக்கு.. உங்க வீட்டு வெலாசம் கொடுத்தா பொஸ்தகத்துல ஒரு காப்பி அனுப்பி வக்கிறேன்.. நீங்களும் படிச்சி தெரிஞ்சிக்கலாம் .. என்ன சொல்றீக?

வெற்றி said...

பொன்ஸ்,
மன்னிக்கவும். பதிவுக்குத் துளியும் தொடர்பில்லாத பின்னூட்டம். உங்களின் தளத்திற்கு வந்த போது மேலே சில கேள்விகள் கண்ணில் பட்டது. அதற்கான பதில்கள்.

/*வாருங்கள்! வாருங்கள்!! TORONTOஇல் மாதம் மும்மாரி பொழிகிறதா? */

மும்மாரி எனும் சொல் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அச் சொல்லின் பொருள் தெரியாது. அதனால் முதலாவது கேள்விக்கு பதிலளிக்க முடியாமைக்கு மனம் வருந்துகிறேன்.

/* CANADAஇல் நம் மக்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களா? */

எமது மக்கள் மீதான தங்களின் அக்கறைக்கு நன்றி. ஈழத்தோடு ஒப்பிடுகையில் இங்கே பயமில்லாமல் வாழ்வார்கள் என்றே நம்புகிறேன்.

/* உங்கள் YORK UNIVERSITY என்ற கணினி அடிக்கடி restart செய்யாமலே வேலை செய்கிறதா? */

தற்போது பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி மூலம்தான் உங்களின் பதிவைப் படிக்கிறேன். பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கணக்கான கணினிகள் இருக்கின்றன. எல்லாம் shut down [log off] பண்ணி பண்ணித் தான் வேலை செய்யும் என நினைக்கிறேன். இது பற்றி மேலதிக தகவல்கள் தேவையாயின் , பல்கலைக் கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும். :)

நன்றி.

Anonymous said...

Very nice article.Even today those of us who say all are equal are not able to practice equality at home and still want to think wife as a possession.Periyar said"when you think of women's right dont think of your wife,you wont think right,think of your sister or daughter then you will think o.k.".When the great scientist Dr.Chandrasekar who was instrumental in propagating family planning met Periyar and asked what exactly do you mean by women's right,what do you want Periyar said"very simple.We are not asking for anything special.Whatever rights you have for men that is all we want!".Dr.Chandrasekar broke out laughing.

Thangamani said...

பொன்ஸ் நல்ல நோக்கிலும், புரிதலிலும் எழுதப்பட்ட பதிவு.

இந்தசந்தர்ப்பத்தில் 'பெரியார்' என்ற சிறப்புப்பெயரை பெண்களே வழங்கி தங்களுக்கும், சமூகத்துக்கும் அவராற்றிய பெருந்தொண்டுக்கு நன்றி பாராட்டினர் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.