Thursday, November 16, 2006

என்னைப் போல் ஒருத்தி

மாக்ஸைனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, தன் முன்னால் நின்று கொண்டிருந்தவள் தன்னைப் போலவே இருந்தது தான் அவளின் ஆச்சரியத்துக்குக் காரணம். "இது என்ன டபுள் ரோலா?" என்று மாக்ஸைன் யோசித்துக் கொண்டே முன்னால் இருந்தவளைத் தடவிப் பார்த்தாள். கைக்கெட்டிய பொருள் ஏதோ வழவழப்பான சுவர் போல் இருந்தது. மாக்ஸைனின் ஆச்சரியம் ரொம்ப அதிகமாகிவிட்டது.

பக்கத்தில் இருந்த பேட்டி(patty)க்கும் அதே ஆச்சரியம் தான். அதெப்படி தன்னைப் போலவே ஒருத்தி இருக்க முடியும்? அதிலும் தானும் மாக்ஸைனும் மட்டுமே வசித்துவரும் இந்த அறைக்கு அதே போல் இரண்டு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ வித்தியாசமாக இருந்தது.

மாக்ஸைன் பேட்டியைத் திரும்பிப் பார்த்தாள். இருவரும் அர்த்தத்துடன் தலையசைத்துக் கொண்டனர். அமைதியாக, முன்னால் இருப்பவர்களைக் கலவரப் படுத்தாமல், நடந்து அந்தச் சுவரின் பின்பக்கம் பார்த்தனர். முன்னால் பார்த்த இரட்டையரின் பின்பக்க உடல் எதுவும் தெரியவில்லை. சுவரின் பின்பக்கம் வேறு ஏதோ நிறத்தில் இருந்தாலும், அதுவும் தொட்டுப் பார்த்த போது நன்கு மென்மையாக இருந்தது.

அப்படியானால்? மாக்ஸைன் மீண்டும் அந்தச் சுவரின் முன்பக்கம் வந்து பார்த்தாள். இந்த முறை பேட்டியின் இரட்டை மாதிரி இருந்தவளைக் காணவில்லை. மாக்ஸைனின் இரட்டை உருவம் மட்டுமே இருந்தது. மாக்ஸைனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"ஓ, ஒரு வேளை அந்தச் சுவரில் தெரிவது நான் தானோ? சின்ன வயதில் அம்மாவுடன் குளிக்கப் போகும் போது தண்ணீருக்குள் ஒரு மாக்ஸைன் இருப்பது போல் தெரியுமே, அதே போல் இந்தச் சுவரிலும் தண்ணீர் இருக்கிறதோ?"

கையைக் காலை ஆட்டியதில் சுவரில் இருந்த உருவமும் அதே போல் செய்ததைப் பார்த்த மாக்ஸைனுக்குத் தெளிவாகப் புரிந்து போயிற்று. எதிரில் இருப்பது தன்னுடைய நிழலே தான். மாக்ஸைனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 'தான் இத்தனை பெரிதாக வளர்ந்துவிட்டோமா?' என்று ஒரே மகிழ்ச்சி. கால், கை, முகம் என்று தன் அழகின் ஒவ்வொரு பகுதியாக ரசித்து மகிழ்ந்து கொண்டே வந்தாள்.


கண்ணாடியில் தெரிந்த உருவத்தின் மற்றொரு புதுமை தெரிந்தது மாக்ஸைனுக்கு. மாக்ஸைன் நிறம் ஒரே நிறம் தான். நல்ல கறுப்பு நிறம். அம்மா கூட "என் கருப்புத் தங்கமே" என்று தான் கொஞ்சுவாள். இப்போது பார்த்தால் அந்தக் கருப்பு நிற முகத்தின் புருவத்துக்குப் பக்கத்தில் ஏதோ அசிங்கமாக வேறு நிறத்தில் இருப்பது போல் இருந்தது. "என்ன இது, இப்படி இருக்கே!" என்றபடி தலையில் அந்தப் புருவத்தின் மீதிருந்த பெருக்கல் குறியைத் தன் ஒரே கையால் தொட்டுப் பார்த்தாள் மாக்ஸைன்.

எத்தனை அழித்தும் அந்த அழுக்கான வெள்ளை நிறம் மட்டும் போவது மாதிரியே இல்லை. அதை அழித்துக் கொண்டே இருக்கும் போது டயானா உள்ளே நுழைந்தாள்.

ஓடி வந்து மாக்ஸைனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "மாக்ஸைன், என் சமர்த்து! உனக்கு கண்ணாடி பார்க்கவும் தெரியுதே!" என்றாள் டயானா.

"அந்தச் சுவர் பேரு கண்ணாடியா?" என்று யோசித்த மாக்ஸைன் மீண்டும் தன் (துதிக்)கையால் தலை மீதிருந்த பெருக்கல் குறியைக் காட்டினாள்.

"இரும்மா, அழிச்சிடறேன். வெள்ளைக் கலர் க்ராஸ் போட்ட இந்தப் புருவம் மட்டும் தான் உனக்குப் புரியுதா? அந்தப் புருவத்துல கலரில்லாத பெயின்ட் கூட அடிச்சிருக்கேனே.. " என்ற டயானாவின் குரலில் பயங்கர சந்தோஷம்.

இத்தனை சந்தோஷப்படும் டயானாவை மாக்ஸைனும் பேட்டியும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? இந்த மாதிரி கண்ணாடியில் இதுவரை தன்னைத் தானே பார்த்து சந்தோஷப்படுவது 2 வயதுக்கு மேற்பட்ட மனிதன், டால்பின், சில குரங்குகள் மட்டும் தான். நீங்களும் அந்த மாதிரி புத்திசாலிங்க லிஸ்டுல சேர்ந்துட்டீங்க இப்போ!"

டயானா மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்கும்போதே ஜோஷுவா ஓடி வந்தாள்.

"டயானா, ஹாப்பி கண்ணாடியில் தன்னைப் பார்த்து பயங்கர குஷியில இருக்கான்.. "

"ஆமாம் ஜோ, இதோ பேட்டி, மாக்ஸைன் கூட பயங்கர மகிழ்ச்சியில் தான் இருக்காங்க.. நீ சொன்னது போல இவங்களால சுலபமா உடைக்க முடியாத பிளாஸ்டிக் வச்சி கண்ணாடி செய்தது ரொம்ப வசதியாப் போச்சு. "

"ஆமாம் டயானா, இனிமேலாவது இந்தப் பெரிய அறிவாளிங்களை நம்ம முட்டாள் மனுஷங்க காப்பாத்தி பாதுகாக்கிறாங்களான்னு பார்க்கணும்.."

(செய்தி: ப்ரூக்ளின் விலங்குகள் சரணாலயத்தில், விலங்குகள் அறிவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டயானா ரீஸும்(Diana Reiss), ஆராய்ச்சி மாணவியான ஜோஷுவா ப்ளோட்நிக்கும்(Joshua Plotnik) செய்த ஆராய்ச்சியின்படி, விலங்குகளில், டால்பின், மனிதன், சில குரங்குகளுக்குப் பின் யானைகளுக்குத் தான் கண்ணாடியில் தன்னைத் தானே மகிழும் வித்தை தெரிந்திருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். நம்மூர் யானைங்க கிரிக்கெட்டே விளையாடிச்சே, அதெல்லாம் அம்மணிகளுக்குத் தெரியாது போலிருக்கு ;) )

மாக்ஸைன்


ஹாப்பி


ஹாப்பித் தொட்டுப் பார்க்கிறான் பாருங்க!


[மறுபடியும் யானையான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு: இன்றைக்கு உலக சகிப்புத் தன்மை தினமாம். கொஞ்சம் இதையும் சேர்த்து சகிச்சிக்கிடறது... ;)]

7 comments:

இராம்/Raam said...

//இன்றைக்கு உலக சகிப்புத் தன்மை தினமாம். கொஞ்சம் இதையும் சேர்த்து சகிச்சிக்கிடறது... ;) //




இந்த கொடுமையே எங்கே போயி சொல்லுறது...... :((((

இம்சை அரசன் said...

நம்ப யானை பதிவையும் பாருங்க!

- யெஸ்.பாலபாரதி said...

அக்கா அப்படியே நம்ம வூட்டுப்பக்கமும் வாங்க!

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

மனித பெண் குட்டிகளுக்கு மட்டும் தான் தன் அழகை தானே மெச்சிக்கொள்ளும் ஆசை இருக்கும்னு நினைத்தேன் பெண்பால் உயிரினம் எல்லாத்துக்குமே கண்ணாடி பார்க்கும் மோகம் இருக்கும் போல அது பெண் யானை குட்டியா இருந்தாலும் அந்த ஆசை இருக்கும் போல!

இலவசக்கொத்தனார் said...

யானைகளுக்கு மேக்கப் செய்யுற கம்பெனி ஒண்ணு ஆரம்பிக்கலாமா? நீங்கதான் டெஸ்டிங் இன் சார்ஜ்!!

நாமக்கல் சிபி said...

இதுவும் நல்லா இருக்கு!

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு தகவலை சுவைப்பட எழுதியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.