"நாளைக்கு தான் சொல்வாளாம்!" சுனிதாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.
"அவ்ளோ நேரம் பேசினியேடி!!"
"பேசினேண்டா.. அவ ஒண்ணும் சொல்லலை.. என்ன என்ன பண்ண சொல்ற?"
வீடு வந்துவிட்டது.
"சரி சரி.. சும்மா கத்தாதே. வீடு வந்தாச்சு.. அத்தைகிட்ட வாங்கிக் கட்டிக்கிற மாதிரி ஆகப் போகுது"
வீட்டு வாசலில் அத்தை நின்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே இருவரும் வருவதைப் பார்த்துவிட்டாள் என்று தோன்றியது.
"ஏண்டி, மெல்ல நட, இது மாதிரி டமால் டுமீல்னு பூமி அதிர நடக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது? நீ என்ன சின்னப் பொண்ணா? நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை. " ஆரம்பித்தாள் அத்தை..
"இன்னிக்கு கோட்டா ஆரம்பிச்சாச்சு" என்று முணுமுணுத்துக் கொண்டாள் சுனிதா. செந்தில் காதில் விழுந்தது. லேசாக சிரித்தான்.
"உள்ள வாங்க ரெண்டு பேரும். பேசிக்கிறேன். ஆழாக்கு உயரம் கூட இல்லை.. என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கிறீங்களா? இன்னிக்கு வரட்டும் உங்கப்பா. பெரியவங்க சின்னவங்க தராதரம் தெரியலை. எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம் தான் "
* * * * *
தோசை, காப்பி சாப்பிட்டு பாடம் எழுத உட்கார்ந்தார்கள். அத்தை மீண்டும் சுனிதாவைக் கூப்பிட்டாள்..
"சுனிதா, கொஞ்சம் இங்க வந்திட்டு போ"
"சொல்லுங்கத்தை.. என்ன வேணும்?" சலித்துக் கொண்டே வந்தது சுனிதா.
"வரும்போது பார்த்தேன். உன் கிட்ட எத்தனை முறை சொல்றது. ரோட்ல வரும் போது அப்படி என்ன உரசல், ஈஷல் எல்லாம்? அண்ணன் தங்கை தான் இல்லைங்கலை.. ஆனா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கில்ல? நல்லா வயசாச்சு, எட்டாவது படிச்சாறது, ஆனா கொஞ்சமாவது அறிவு வளர்ந்திருக்கான்னா ம்ஹும்.."
அதற்கப்புறம் அத்தை சொன்னது எதுவும் சுனிதா காதில் விழவில்லை. விட்டத்தைப் பார்த்து ஒரு லுக் கொடுத்துவிட்டு உள்ளே போய் செந்திலை அனுப்பி வைத்தாள் அடுத்த டோஸுக்கு. இரட்டைக் குழந்தைகள் என்றாலும் ஏனோ அண்ணன் என்றே அத்தை சொல்வது சுனிதாவுக்குப் பிடிக்காத ஒன்று
"அத்தைக்கு பொறாமை நம்ம மேல.. அப்பா இப்படி எல்லாம் அவங்க கிட்ட பேசறது இல்லைல? .. அதான்.. நீ ஒண்ணும் கவலைப் படாதே!!" செந்திலுக்கும் ஒரு சான்ஸ் அறிவுரைக்க..
* * * * *
மறுநாள் பள்ளி கிளம்பும் போது மீண்டும் சுனிதாவுக்கு நினைவுப்படுத்தினான்..
"கேட்டுட்டு வா.. இல்லைன்னா சொல்லு, நான் வேணா கேட்கிறேன்"
"டேய்.. அதெல்லாம் வேண்டாம்.. அவ சொல்ல மாட்டா.. நானே கேட்கறேன்.. நீ இரு."
* * * * *
மாலை
"சுனி என்னாச்சு? கேட்டியா?"
"ம்"
"என்ன சொல்றா?"
"ம்ச்.. போடா.. "
"என்னடீ? ரொம்ப டல் ஆய்ட்ட? என்ன சொல்றா அவ?"
சொன்னாள் " பயமா இருக்குடா கேட்கக் கேட்க.."
"என்னது? ஐய்யய்யோ.. என்னடீ சொல்ற?"
"ஆமாம்.. இன்னும் ஒரு வருசம் தான்.. சித்ரா சொல்லிட்டா!! "
செந்தில் ஒன்றும் பேசவில்லை..
"டேய், எனக்காக சாமிகிட்ட வேண்டிக்கிறியாடா? "
"ம்ம்.. அப்போ எனக்கு?"
"உனக்கு ஒண்ணும் ஆகாதாம்.. சித்ரா சொல்றா எல்லாம் கேர்ல்ஸுக்குத் தான்னு.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்"
"அப்டியா?" அதைக் கேட்டதில் அவனுக்கு ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இல்லை என்று அவன் குரலே சொன்னது.. செந்திலுக்கு சுனிதா மீது பாசம் அதிகம்.
"சுனி, ஒண்ணு சொல்லவா?"
"சொல்லுடா.."
"அத்தை கிட்ட கேட்போமா? "
"ஐயோ, அத்தைகிட்டயா? நான் மாட்டேன்.. "
"என்னடீ.. இது பெரிய விசயமா? சும்மா கேட்டுப் பார்ப்போம்.. என்ன சொல்றான்னு.. "
"ஆமாம், கேட்டாலும் சொல்லிடப் போறாங்க.. அப்பாகிட்ட சொல்றேன்னுவாங்க.. திட்டுவாங்க.. ஏண்டா நான் திட்டு வாங்கறதைப் பார்க்கணுமா உனக்கு?"
"இல்லடி.. சித்ரா ஒரு வேளை தப்பா சொல்லி இருந்தா?"
"சித்ராவுக்கு எல்லாம் தெரியும்.. அவ தப்பா சொல்லி இருக்கவே மாட்டா.."
"என்னவோ போ.. அத்தையைக் கேட்கலாம்னு எனக்குத் தோண்றது.. சித்ராவை மட்டும் நம்பறது சரியில்லை.. "
"சரி, அப்போ அப்பாவையே கேட்போம்.. இன்னும் கொஞ்சம் பொறுமையா பதில் சொல்வாரே.. "
"நல்ல ஐடியா.. அப்பாவையே கேட்போம்.. நீயே கேளு.. "
"ஆமாம், எல்லார்கிட்டயும் நானே கேட்டு சொல்றேன். ம்கும்!!"
* * * * *
இரவு உணவு நேரம்.
"அப்பா, ஒண்ணு கேட்கலாமா?" சுனிதா தீனமான குரலில் தொடங்கினாள்.
"என்னம்மா? "
"இல்லை, போன வாரம் பூரா எங்க க்ளாஸ் சித்ரா ஸ்கூலுக்கு வரலை"
"என்னாச்சு? ஏதாச்சும் உடம்பு சரியில்லையா அவளுக்கு?"
"இல்லை.. அவ பெரிய மனுஷியாய்ட்டாளாம்."
"ம்ம்" அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இந்த விவாதம் எந்தப் பக்கம் போகப் போகிறது என்று பயந்துகொண்டே பார்த்தார்.
"பெரிய மனுஷி ஆகறதுன்னா என்னப்பா? நான் எப்போ பெரியவளாவேன்?"
அப்பா திகைத்துப் போய் பார்த்தார்.. என்ன சொல்வது இதற்கு?
"ஏண்டி, என்ன கேள்வி இது? அச்சு பிச்சுன்னு கேட்டுகிட்டு.. அப்பாகிட்ட பேசற பேச்சா இது? ஒரு வெட்கம் மானம் இல்லாம வளர்த்திருக்கான்னு என்னைத் தான் குறை சொல்லப் போறா.. " அத்தை உதவிக்கு வந்தாள்.
"அத்தை அவ கேட்கறதுல என்ன தப்பிருக்கு?" - இது செந்தில்
"வந்துட்டான். பாச மலர் சகோதரன்.. எதுக்கு இப்போ உங்களுக்கு? இன்னோரு தரம் இதெல்லாம் பேசினீங்க, நாக்கை நல்லா இழுத்து வச்சி நறுக்கிடுவேன். தட்டைப் பார்த்து சாப்பிடுங்க."
அந்தப் பேச்சு அத்துடன் நின்று போனது
* * * * *
கிட்டத் தட்ட ஆறு மாதம் கழித்து, சூப்பர் மார்க்கெட்டில் சுனிதாவும் செந்திலும் நின்று கொண்டிருந்தனர்:
"டீ சுனிதா, என்ன வேணும் உனக்கு? கடைக்குப் போகணும்னு சொன்ன, சரின்னு கூட்டி வந்தேன்.. இங்க வந்து நின்னுகிட்டு எதுவும் வாங்காம முழிச்சி முழிச்சி பார்த்தா என்ன அர்த்தம்?"
"இல்லை.. நீ கொஞ்சம் அந்தப் பக்கம் போய் எண்ணை வாங்கு.. நான் வர்றேன்"
"எண்ணை எல்லாம் எனக்கு வேண்டாம்.. உனக்கு என்ன வேணும்? அதை சொல்லு.. நான் தேடித் தர்றேன். "
"டேய், போடா, உங்கிட்ட சொல்ல முடியாது.. கொஞ்சம் வெளில போ.. நான் வாங்கிட்டு வர்றேன்"
"என்னடி சுனி, நமக்குள்ள என்ன? என்னவோ போ.. " என்றபடி வெளியில் போய் நின்றான் செந்தில்.
சுனிதா மெல்லக் குனிந்து அந்த பாக்கெட்டை எடுத்து அருகில் இருந்த கறுப்புப் பையில் போட்டுக் கொண்டு பில் கவுன்ட்டருக்கு வந்தாள்.
பணம் கொடுத்து விட்டு பில்லில் உள்ள பொருளின் பெயரைப் படித்தபோது செந்திலுக்கு வருத்தமாக இருந்தது..
"என்கிட்ட கூட சொல்ல மாட்ட இல்ல?"
"போடா, என்னதான் அண்ணனா இருந்தாலும் நீ ஆம்பிளை தானே.. எப்படி சொல்றது.. வெட்கமா இருக்காது?" பெரிய மனுஷி போல் பேசிக் கொண்டே சுனிதா நடக்க ஆரம்பிக்க...
எல்லாவற்றையும் முதல் ஆளாகத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் தன் சின்னத் தங்கச்சி திடீரென்று பெரியவள் ஆனதைப் புரிந்து கொள்ள முடியாமல் செந்தில் அதிர்ந்து நின்று கொண்டிருந்தான்.
48 comments:
போட்டிக்கு அனுப்பலை.. இது வளர்சிதை மாற்றத்துல வருமா வராதான்னு புரியலை.. அதான்.. :(
நல்லா போன கதை கடைசி அத்தியாத்தில் திரைப்படம் மாதிரி முடிஞ்சிடுச்சு.
//"இல்லை.. நீ கொஞ்சம் அந்தப் பக்கம் போய் எண்ணை வாங்கு.. நான் வர்றேன்"
"எண்ணை எல்லாம் எனக்கு வேண்டாம்.. உனக்கு என்ன வேணும்? அதை சொல்லு.. நான் தேடித் தர்றேன். "
//
எதுக்கு காரணம் இல்லாம எண்ணெய் வாங்க சொல்றா? அதாவது எண்ணெய் வாங்க வராதப்போ? வேற ஏதாவது வாங்க சொல்லி இருக்கலாம் ( போடா வெளக்கெண்ணெய் என்று திட்டுவதற்கு பதிலா எண்ணெய் வாங்க சொல்லியிருப்பாளோ? :-) )
அம்மா இல்லாம வளர்ந்த சுனிதாவுக்கு இப்படி நேர்ந்ததில் ஆச்சரியமில்லை!
ரெட்டையா இருந்தாலும், அதுல ஒருத்தரை பெரியவவரகவும். அடுத்தவரை சின்னவர்[ள்]ஆகவும் பார்ப்பது 'அத்தையின்' வழக்கம்!!
'அண்ணன் என்று சொலவதே சுனிதாவிற்குப் பிடிக்காத ஒன்று'
"என்னதான் அண்ணன இருந்தாலும், நீ ஆம்பிளைதானே"
முரணாக இல்லை??
பருவமாற்றம் நிகழ்ந்த பின், பெண்களின் போக்கை நன்கு படம் பிடித்திருக்கிறீர்கள், அந்தக் கடைசி வரியில்!
பொன்ஸ்,
நல்லாதானே வந்திருக்கு. வளர்சிதைக்கு அனுப்புங்க.அட, ஒரு ஆறுதல் பரிசாவது வரச் சான்ஸ் இருக்கேப்பா.
// இது வளர்சிதை மாற்றத்துல வருமா வராதான்னு புரியலை.//
இதெல்லாம் வராம வேற எது வரும்?! அனுப்புங்கம்மா போட்டிக்கு! :)
வாத்தியார், துளசி அக்கா சொன்னதுனால அனுப்பிட்டேன்.. பார்க்கலாம்,. அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :)
அப்போ, அது கூட எனக்கில்லையா??!! :((
Good work.:-)
சில பேர் எவ்வளவு மெனக்கெட்டாலும் எழுத வருவதில்லை. உங்களுக்கு அந்த ஆற்றல் இயல்பாய் அமைந்திருப்பதாய் உணர்கிறேன். பாராட்டுக்கள்!!
அவ்வப்போது இந்த வலைப்பூ தொங்கி விடுகிறது. பிரச்சினை எனது கணிப்பொறியிலா அல்லது வலைப்பூவிலாவெனத் தெரியவில்லை. வேறு யாராவது முறையிட்டால், என்னவென்று ஆராயுங்கள்.
வித்தியாசமான கோணம். நல்லா நேச்சுரலா வார்த்தைகள் விழுந்திருக்கு. இந்தமாச தலைப்பு கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. என்ன எதிர்பார்க்கிறாங்கங்கறது முக்கியமில்லை. உங்க மேட்டர் நல்லா இருந்தா ஓட்டு விழப்போகுது. அவ்ளோதானே..
//அவ்வப்போது இந்த வலைப்பூ தொங்கி விடுகிறது. பிரச்சினை எனது கணிப்பொறியிலா அல்லது வலைப்பூவிலாவெனத் தெரியவில்லை. வேறு யாராவது முறையிட்டால், என்னவென்று ஆராயுங்கள்.
//
குப்பு, எனக்கே இந்தப் பிரச்சனை இருக்குங்க..
ரமணி, கவனிங்க.. இது தான் நான் சொன்னது..
அழகாக , யதர்த்தமாக இருக்கிறது..
அந்த கடைசி வரிகள் அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
சொந்தக் கத சோகக் கதயா பொன்ஸ்
//எதுக்கு காரணம் இல்லாம எண்ணெய் வாங்க சொல்றா? அதாவது எண்ணெய் வாங்க வராதப்போ? வேற ஏதாவது வாங்க சொல்லி இருக்கலாம் //
அதாவது குறும்பன், எங்கிட்டாச்சும் போடான்னு சொல்லணும்.. என்ன செய்யிறது.. பெண்புத்தியாச்சே.. தனக்குப் பழக்கமானதை வாங்கச் சொல்லிட்டா.. ஹி ஹி :)
//ரெட்டையா இருந்தாலும், அதுல ஒருத்தரை பெரியவவரகவும். அடுத்தவரை சின்னவர்[ள்]ஆகவும் பார்ப்பது 'அத்தையின்' வழக்கம்!!//
எஸ்கே, இயல்பா இருக்குன்னு ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸ்.. இரட்டையரில் பொதுவா இது மாதிரி ஒருவன் பெரியவன், ஒருவள் சின்னவள் என்று பிரிச்சி சொல்வது நடக்குது.. வீட்ல ஒரு அடையாளத்துக்காக சொல்றது தான்.. கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கும் பழகிடும்ல.. அதுவும் பெரியவளானதுக்கு அப்புறம்?
ஓட்டு தானே, போட்ருவோம் :))
குப்பு, ரமணி, நன்மனம், மனதின் ஓசை
எல்லாருக்கும் பாராட்டுகளுக்கு, ஊக்கங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி.
பெருசு, இது சொந்தக் கதையெல்லாம் இல்லை.. பார்த்த, கேட்ட, படிச்ச மேட்டர்ஸ் தானே கதை.. எல்லா காலத்திலும்.. :)
கதை நல்லாத்தான் இருக்கு!
பாராட்டுக்கள் பொன்ஸ்!
Pons, Sibi,
see http://nayanam.blogspot.com/2006/06/blog-post_15.html
பொன்ஸ்,
அதிக அலங்காரமின்றி யதார்த்தமாய் உள்ளது கதை. கொஞசம் அழுத்தம் சேர்த்திருந்தால் இன்னும் அருமையாக வந்துருக்கும். போட்டிக்குத் தாராளமா அனுப்புங்க வாழ்த்துக்கள்.
//போட்டிக்குத் தாராளமா அனுப்புங்க //
இன்னும் அனுப்பயலயா? அட என்னங்க நீங்க!
பொன்ஸ்
அம்மா இல்லாம வளரும் பெண்ணின் கஷ்டடத்தை நல்லா யதார்த்தமா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்
(ஐயோ... எனக்குக் கிடைக்க இருந்த ஒரே ஓட்டும் போச்சா :-)))
சரி சரி இருக்கவே இருக்கு அடுத்த மாசம்... :-)
:-)
ரைட்டேய்..
(எனக்கில்ல.. எனக்கில்ல..)
நல்லா எழுதிருக்கீங்க. போட்டிக்கு அனுப்பிதான் பாருங்களேன்.
அம்மா பொன்ஸ்!
இப்படி பட்டை ,லவங்கம் , இஞ்சி ,பூண்டுனு எல்லாம் ஒட்டு மொத்தமா கிளப்பறிங்களே(எத்தனை நாளைக்கு வெறும் பட்டைய கிளப்பறதாவே சொல்றது)
இப்படி எல்லா பெரிய திமிங்கலங்களும் போட்டில குதிச்சா எங்களை போல சென்னாங்குனிக்கெல்லாம் எங்கே இருந்து கும்மாளம் வரும்! ( வாளை மீன் பாட்டின் தாக்கம்)
உரையாடல் வடிவில் ஒரு சிறிய சம்பவத்தை ரொம்ப்ப சிக்கல் ஆக்காம நல்லா சொல்லி இருக்கிங்க! வெற்றி பெற வாழ்த்துகள்!
நடை நன்றாக உள்ளது.
நம் சமூகத்தில் இள வயதினருக்கு உள்ள நடைமுறை சிக்கலை அழகாக சொல்லி உள்ளீர்க்கள்.
இந்த நடைமுறை சிக்கல் இன்னும் நம் சமூகத்தில் இருப்பது சற்றே வருத்தப்பட வேண்டிய விசயம்.
//கதை நல்லாத்தான் இருக்கு! //
சிபி, என்னது இது.. உள்குத்தா இருக்கு..
எஸ்கே, கண்ணகி எல்லாம் நீங்களே பார்த்துக்குங்க. Not Interested:)
//கொஞசம் அழுத்தம் சேர்த்திருந்தால் இன்னும் அருமையாக வந்துருக்கும்//
தேவ், வாழ்த்துக்களுக்கு நன்றி.. அழுத்தம் இருக்குன்னு நினைச்சு தான் எழுதினேன்..இன்னும் மாற்ற முடியுமான்னு பார்க்கிறேன்.. போட்டி முடியட்டும் :)
கட்டதுரை பெருசு, அனுப்பியாச்சுய்யா..
நிலா, உதய், ராசா, Wicked Angel, வவ்வால், சிவா, வாழ்த்துக்களுக்கு நன்றி.
நிலா, ராசா, இந்த முறை எல்லாருக்கும் ஒரே ஒட்டு தான்னு நினைக்கிறேன் - அது அவங்கவங்க ஓட்டு மட்டும் தான்.. அப்படி இருக்கு படைப்புகள் எண்ணிக்கை:)
வவ்வால், பெரிய திமிங்கிலமென்ன, சின்ன மீன் என்ன, எப்படி மணமா ருசியா குழம்பு வைக்கிறோம்ங்கிறதுல தானே இருக்கு.. உங்க கவிதையெல்லாம் பார்த்து தான் சரி, நம்மளும் குதிச்சிடுவோம்னு கரண்டியைக் கைல எடுத்துட்டேன் :)(அதே வாளை மீன் பாட்டு effect தான்.. கண்டுக்காதீங்க ;))
சிவா, இதெல்லாம் சிக்கல்ல சேருமா சேராதான்னு எனக்குச் சந்தேகம் தான்.. அது பற்றி அப்புறம் பேசுவோம்..
m.. pons, kalakkungga. nalla irukku :)
//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :) //
நல்ல வேளை தேன் கூடு ல ஓட்டு போடுறதுக்கு தான் இந்த குழப்பம்.
எலக்க்ஷன் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு குழம்பியிருந்தீங்கன்னா தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சிருப்பிங போல இருக்கு!!!!!!!
தேன்கூடு போட்டி வந்தாலும் வந்தது எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல ஆக்கங்களை வெளியிடுகிறீர்களே!. இனியாவது சுஜாதா வலைப்பதிவுகளைப் பற்றிய அவர் கருத்துக்களை மாற்றிக் கொள்வாரா ?
//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :)// எங்களுக்கு குழப்பம் வந்துடுச்சு :(
பொன்ஸ்...கதை நல்லாருக்குங்க. என்னோட வாழ்த்துகள்.
//நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை.//
இதை மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.
:)
நமது சமூகத்தைல் இது ஒரு பெரிய பிரச்சனைதான் இன்னும். நன்றாக எழுதி, எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.
இப்படி பொட்டபுள்ளைங்க கூட அந்நியோன்யமா பழகற பசங்க மிருதுவா இருப்பாங்களாமே,வாஸ்தவமா?? கதை எழுதி நானும் பேருக்கு போட்டேன்னு தான் பார்த்தேன், இதை படிச்சோன நான் எழுதுனது வேஸ்ட்ன்னு தோணுது, ஆல் த பெஸ்ட்!
நன்றி அருள்.. அப்படியே ஓட்டு போடும்போது மறந்துடாதீங்க.. :)
//எலக்க்ஷன் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு குழம்பியிருந்தீங்கன்னா // மனசு, அப்படிக் குழப்பத்துல பிறந்ததுதானே எங்க லட்சிய கட்சியான வ.வா.ச?!!
மணியன், சுஜாதா என்ன சொன்னாரு? அது பத்தி ஏதாச்சும் சுட்டி இருந்தா கொடுங்களேன்.. தெரிஞ்சிக்கிறேன். //எங்களுக்கு குழப்பம் வந்துடுச்சு :( // நல்லா குழம்பி கடைசியா யாருக்காவது குத்திடுங்க:))
கைப்பு அண்ணே,
நன்றிண்ணே.. ////நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை.//இதை மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.// அதை விடுங்க.. அதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் இருக்கு பாத்தீங்களா, அதை இப்போ படிச்சதும் எனக்கு நம்ம யானை தான் கண்ணுல பட்டுச்சு.. ஒரே சிரிப்பு தான் :)
நன்றி தருமி
//இப்படி பொட்டபுள்ளைங்க கூட அந்நியோன்யமா பழகற பசங்க மிருதுவா இருப்பாங்களாமே//
இருக்கலாம் உதயகுமார். இந்தக் கதையில் செந்திலுக்கு அம்மா இல்லை. அதனால தான் அவன் சகோதரி மீது தூரம் இல்லாத பாசம், இத்தனை அன்னியோன்னியம். ஒருவேளை அன்னை இருந்திருந்தால், பொதுவாக பசங்க இந்த வயசுல தங்கை/அக்காவோட எல்லாம் இத்தனை வெளிப்படையான நெருக்கமா இருக்க மாட்டாங்க.
உங்க கதையும் நல்லா இருக்கே. பார்த்துட்டு தானே வந்தேன்.
எனக்கு ஓட்டு போடுற வயசு இன்னும் வரல.. இருந்தால் என் ஓட்டு பொன்ஸுக்கே நல்லா இருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
pons....kathai nalla irukku...
//மணியன், சுஜாதா என்ன சொன்னாரு? அது பத்தி ஏதாச்சும் சுட்டி இருந்தா கொடுங்களேன்.. தெரிஞ்சிக்கிறேன்.//
அது ஒரு வருடத்திற்கு முன் தமிழ்மணத்தை கலக்கிய விவாதம். முதலில் சிற்றிதழ் எழுத்தாளர்களே வலய வந்த வலையுலகில் வலைப்பதிவுகள் மூலம் சாதரணரும் பதிய ஆரம்பித்த நேரம். தனது கண்டதும் கேட்டதும் கட்டுரையில் வலைப்பதிவுகளில் இலக்கியம் இல்லை; 15 நிமிட விளம்பர ஆர்வமே உள்ளது என்பது போன்று சொல்லி வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளானார். வெங்கட்ரமணியின் ஆரம்பபதிவில் கூட கோடி காட்டியதாக நினைவு.
பொன்ஸு,
ஒரு நல்ல எழுத்தாளருக்குரிய அத்தனை ஆரம்ப அறிகுறிகளும் இந்த "சுய வெளிப்பாட்டுக்" சிறுகதையில் தெரிகிறது.
தொடர்ந்து முயற்சித்தால் தனி நாவலே போட்டுவிட முடியும். நன்கு தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை கவனித்து பிறகு தன்னுடைய நடையில் சொல்லிவிட வேண்டியதுதான். டிப்ஸ்!
வாழ்க! வளர்க!!
தெகா (நா... தளுதளுக்க வாழ்துக்களுடன்
;-)) .
மின்னல், வயசெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. இந்தக் கதையெல்லாம் படிச்சாலே நீ வளர்ந்துடுவியே.. அப்புறம்.. ஓட்டு போட வேண்டியது தானே?!!
நன்றி சீனு
ரமணி பதிவைப் படிக்கிறேன் மணியன்
தெகா, வரவர, எல்லாக் கதைலயும் இப்படி நா தழுதழுத்துப் போனா, நான் என்ன பண்ணுறது?!:)
கலக்கிட்டீக அம்முணி. நல்லா இயல்பா இருக்கு கதை. சொல்லவந்ததை சரியான அளவுல சொல்லிட்டு நிறுத்திட்டீங்க. நான் தலைப்பைப் படிக்காம கதையைப் படிச்சதால போகப் போகத் தான் என்ன கருப்பொருள்ல எழுதியிருக்கீங்கன்னு புரிஞ்சது. அப்புறம் தான் தலைப்பைப் பாத்தேன்.
பொன்ஸ்,
நல்ல கதை. கதையின் ஆரம்பகட்டத்தைப் படிக்கும் போது ஏதோ அண்ணன் தங்கையை காதல்தூதாக அனுப்புகிறானாக்கும் என நினைத்தேன். மிகவும் அழகாக suspense ஆக கதையை நகர்த்தியுள்ளீர்கள். இக் கதையில் எமது சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகளையும் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். குறிப்பாக பெண்பிள்ளைகள் வளர்ந்து வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பெற்றோர்கள் விளங்கப்படுத்துவதில்லை. இந் நிலை மாற வேண்டும். குறிப்பாக நம் தாய்மார்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு வளர்ந்து வரும் போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், எப்படி நடந்து கொள்வது என்பன பற்றி நேரடியாக விவாதிக்க வேண்டும்.
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஒரு நாளில் இரு அருமையான கதைகளைப் படித்தேன்[செல்வராஜ் அண்ணரின் கதையையும் சில மணித்தியாலங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன்]
நன்றி.
நன்றி குமரன்.. ஓட்டு போடும்போது, மறந்துராதீங்க :)
வெற்றி, நல்ல திறனாய்வா சொல்லி இருக்கீங்க.. ஆனா, உண்மையில், தாய்மார்கள் இன்றைக்கு தெளிவாவே இருக்காங்க.. இந்தக் கதை நாயகிக்குத் தாய் இல்லை.. அது தான் காரணம்..
அடுத்து, இங்க படிச்சவங்க யாருக்குமே காதல் தூது என்று தோன்றவில்லை.. அந்தப் பிள்ளைகள் பேசுவது எங்க ஊர் அக்மார்க் மழலை.. அது கூட காரணமா இருக்கலாம் :). வித்தியாசமா நீங்க சொன்னதும், அது மாதிரி எண்ணம் வருவது போல் ஏன் எழுதி இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது :)
இல்லை பொன்ஸ். எனக்கும் வெற்றி சொன்னது போல் தோன்றியது. தலைப்பைப் படித்துவிட்டுப் பின்னர் பதிவைப் படித்திருந்தால் அப்படித் தோன்றியிருக்காது. ஆனால் நான் தலைப்பைப் படிக்காமல் பதிவைப் படித்ததால் அப்படி தோன்றியது என்று நினைத்தேன். வெற்றிக்கும் அப்படித் தோன்றியிருக்கிறதா? :-)
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..
உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
இந்த சிறுகதையை மேலோட்டமாக படித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். பெண்களின் உடற்கூறுகளையும், சமூகத்தின் பார்வையின் மற்றும் பழக்கவழக்கங்களால் பெண்களிடம் எழும் உடல் சார்ந்த உளவியல் மாற்றங்களையும், அம்மாற்றங்களை ஆண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் விளக்கமாக எளிமையாக ஒரு நாவல் வடிவில் சுஜாதா எழுதியிருக்கிறார். பெயர், "எப்போதும் பெண்". இது 80களில் ராணி இதழில் வாரவார தொடர்கதையாக வெளிவந்ததின் தொகுப்பு என்று படித்த நினைவு. கிடைத்தால் படித்துப் பாருங்கள். வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.
really nice -- krithika
Post a Comment