Tuesday, April 25, 2006

உலகம் உன் வசம்



கண்ணீர் விடவும் கவலைப் படவும்
மண்ணில் ஆயிரம் மனிதர் உண்டு
உன்னில் என்ன இல்லை என்று
எண்ணி இங்கு அழுகிறாய் இன்று

அன்றைய இளைஞன் அறிவியல் கண்டான்
அடுத்தவன் வந்து நிலவினை வென்றான்
நேற்றைய இளைஞன் இணையம் படைத்தான்
இன்றைய இளைஞன்நீ இன்முகம் பெறுவாய்!!

எழுந்துநில் உனது தோல்விகள் அனைத்தும்
அழுந்திட மண்ணில் மிதித்துத் தள்ளிடு
சிறந்துநில் வாழ்வின் சிக்கல்கள் அறுத்திடு
அறிந்திடு நேற்றின் வெற்றிப் படிகள்

கோபுரம் கட்ட உனக்கது உதவும்
மாபெரும் வெற்றிகள் தோள்களில் குவிந்திடும்
நாளைய வெற்றிகள் நலம்தரும் என்று
காளைநீ இன்றே களிப்ப டைந்திடு

அறிவினை எடுத்து துருக்களை அகற்றி
துணிவினைப் பூசித் துயரங்கள் விடுத்து
கன்னத்தில் உள்ளக் கரங்களைப் பிரித்து
முன்னேற்றப் பாதையில் உந்தேரைச் செலுத்து

மாலையில் உலகம் உன்வசம் ஆகும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்மே

Sunday, April 23, 2006

வ.வா.ச. அறிக்கை??!!




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

வேண்டின் உண்டாகத் துறக்கத் துறந்தபின்
ஈண்டு இயற்பால பல

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

Friday, April 21, 2006

கட்டுங்க கட்டுங்க..

ப.ம.கவைப் பாத்து "கதை கட்டுங்க கட்டுங்க"ன்னு சொல்றா மாதிரி இருந்தாலும், இந்தப் பதிவோட நோக்கம் அது இல்ல..

கௌசிகன் திடீர்னு காணாம போய்ட்டதுனால, நானே ஒரு கட்டம் போட்டு நிரப்பிப் பார்த்தேன்.. சரி, நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு பதிவிலயும் போட்டுட்டேன்.




குறிப்புகள்:

எல்லாத்துக்கும் பொதுவான குறிப்பு, இதுல வர்ற எல்லாம் பதிவாளர்களின் பெயர்களே, அவங்களே வச்சுகிட்ட பேராகவும் இருக்கலாம், அன்பா வைக்கப்பட்ட பேராகவும் இருக்கலாம்.. :

குறுக்கு

1. 125:360 :: 150:84 - இப்போதைய நிலவரம்(6)
3. ஆங்கிலத்தில் பாதி இல்லை; தமிழில் திருப்பினாலும் நிறையவில்லை (2)
5. கமண்டல நீரில் ஆறு தந்தான் ஒரு முனிவன்; ஆற்றில் பாலம் கட்டுகிறான் இந்த முனிவன் (4)
7. உலகம் சுற்றுபவர் இப்போ கட்டத்தில் (8)
11. ரோஜா, பூக்கட்டினார்; பாக் கட்டுவார்; பாதிதான் கிட்டினார் (5)
12. நல்ல மனசுய்யா உமக்கு (3)
13. விட மாட்டாரா இவரு (4)
15. திருப்பித் திருப்பிப் பேசுவார் 'அவன்' (6)

நெடுக்கு

2. ஒரு பேர்; ரெண்டு பேர்; மூணு பேரா - சீ சீ, போலிகளைக் கண்டு ஏமாறாதீர்(4)
4. பொய்யில்லை (3)
6. காப்பி இல்லாமலா காலை உணவு? (5)
8. இவர் காவியம் செய்தால் வாசிப்பது மனிதர்கள் மட்டும் தானா? (7)
9. கட்டம் போட்டியா, ஒட்டு போட்டேனே!
பக்கம் இல்லையே என்னைக் கட்டிபோட (3)
10. இடிதாங்கும் இளைஞர்; பாசக்கார தலைவர் (5)
14. வெள்ளை ஒளியில் பிள்ளை விளையாட்டு (2)

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் எழுதி இருக்கேன்.. ஏதாச்சும் தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க... ஈஸியா இருக்கும்னு தான் நினைக்கிறேன்...


Wednesday, April 19, 2006

பொங்கியது போதும்; வாளை எடு


சங்கப் போர்வாள், வெற்றி வீரர், சென்னை தந்த செம்மல் தேவ், உன் மடல் கண்டு நான் மனம் நொந்திட்டேன்.. பெயர் விளக்கம் தெரியாத ஒரு புதுக் கட்சியினர் விடும் அறிக்கைக்காக, மனம் நொந்து நீயும் இப்படி பால் மாறுவதா!!!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடவேண்டிய வயதில் குதிரை ஏறி மால்காண்டு சென்று அங்கும் அயராமல் கட்சிப் பணி பற்றியே சிந்திக்கும் நமது தங்கத் தலைவர் எங்கே?..

எங்கே எங்கே என்று கேட்டுத் துடிக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்குக் கூட இன்னும் முகமூடி போட்டு இருக்கும் அந்த பெயர் தெரியா கட்சி எங்கே..?

எதுகை மோனையில் அறிக்கை விட்டார்கள் என்று பணிவதா?

சிங்கம் சிறு நரியைக் கண்டு மனம் வாடுவதா??!!

வ.வா.ச ப.ம.கவுக்கு பணிந்து வழிவிட்டார்கள் என்று வரலாறு பேசுவதா??!!

எத்தனை அடி வாங்கிய போதும் அழாமல் சிரித்தே எதிரிகளைச் சிதறடிக்கும் தலைவர் கைப்புவின் வழித்தோன்றல்கள் நாம்!!

இந்த சலசலப்புகளுக்கும் பினாத்தல்களுக்கும் அஞ்சி பணிவதா!!!!

இழுக்கு தம்பி இழுக்கு!!!

இன்னும் தேர்தல் அறிக்கையே வெளியிடாத அந்தக் கட்சிக்கு நாம் சீட்டு ஒதுக்கியது நமது பெருந்தன்மை. அதைப் புரிந்து கொள்ளாமல், அறிக்கை விடும் வீணர்களுக்கு பதில் சொல்ல நமக்கு அவசியமில்லை.


எடு வாளை.. இவர்களை தேர்தல் களத்தில் சந்திப்போம்..

கழகப் போர்வாள் தேவ், சங்கச் செயல் வீரன் பாண்டி, காற்றென கடுகி பிரசாரம் செய்யும் கண்மணி கீதா, பொன்மனச் செம்மல் சிபி, புயலாம் பேராசிரியர் கார்த்திக் இவர்கள் நம் பக்கம் இருக்கையில், வெற்றி நமதே..

வெற்றிவேல்!! வீரவேல்!!!! சக்திவேல்!!!!

(இதுக்கும் விஜய் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா? சும்மா ஒரு இதுக்குத் தான்.. நயன்தாரா படம் போட்டு அறிக்கை விடும்போது, நாங்களும் விஜய் படம் போட வேண்டியது தானே..

"வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா!!!")

பயணங்கள் முடிவதில்லை

பதினாறு மணி நேர
பேருந்து பயணம்

நீட்டாத காலுக்கும்
மடக்காத கைக்கும்
சாய்ந்த முதுகுக்குமான இடம்
என்னுடையது...
பயணம் முழுமைக்கும்!!!

மங்கிய மாலை
மொழிபுரியா திரைப்படம்
தென்னிந்தியா போக நேர்ந்த
துரதிர்ஷ்டம் பேசியே
அயரச் செய்யும்
அடுத்த இருக்கை மராத்திப் பெண்

இருள் வெளிகளில்
செல்பேசி வெளிச்சம் மட்டும்
துணையாக
முன்னிரவு

பெயர் புரியா தாபாக்களில்
பின்னிரவில் சப்பாத்தி;
உயிர்குத்தும் குளிருக்கு
தொண்டையில் இறங்கும்
கொதி (தே)நீர்

தொட்டிலென ஆடியும்
தூக்கியும் போடும்
பேருந்தில்
கால் மடக்கிக்
கோழித் தூக்கம்

லேசான பனி நீருடன்
விடியும் விடியாத
இளங்காலை;

தென்னிந்திய டீக்கடையில்
காலை நிறுத்தம்.
எத்தனை முறை கேட்டாலும்
புரிய மறுக்கும் கன்னடம்.
சகிக்க முடிந்த காபி
சகிக்காத கழிப்பறை

நகரில் நுழைந்தபின்
நின்று நின்று தொடரும்
முன்மதியப் பயணம்

பயணத்தின் முடிவில்
பெரிய மகிழ்ச்சி,
காத்திருக்கும் உன் கண்கள்..

கைப்பற்றி நடக்கையில்
களைப்பு பறந்திட
கதைகள் முடியுமுன்
மறுநாள் விடியல்

பேருந்து நிலையத்தில்
கண்களில் நீர்த்திரையுடன்
நாம்

திரும்பும் பயணங்களில் மட்டும்
வரம்பின்றி நீள்கின்றன
பதினா......... று மணி நேரம்

என் ஜன்னலில்
அடுத்த சனியை எதிர்பார்க்கும்
இரண்டு ஏக்கக் கண்கள்..
பயணம் பூராவும்
அதன்பின்னும்...

Wednesday, April 12, 2006

யானை யாத்திரை

துளசி அக்கா மாதிரி பயணக் கட்டுரை எழுதுவது இதன் நோக்கம் அல்ல.. எழுதாம விட்டுட்டால், மறந்துடப் போறேன்னு பதியறேன்.

மதுரை பக்கத்துல பொட்டப்பாளயத்துல ஒரு காலேஜுல எழுத்து, நேர்முக, பின்முகத் தேர்வெல்லாம் நடத்தி பட்டம் பெறப் போகும் பட்டதாரிகளை எங்க கம்பனிக்கு தேர்வு செய்வது தான் முக்கிய பணி.. ரெண்டு நாள் பத்தாது, வேற வேலை எதுவும் வச்சிக்காதீங்கன்னு சொல்லி அனுப்பி இருந்ததுனால, எப்படியும் மீனாக்ஷி கோயிலுக்காவது போய்ட்டு வந்துடலாம்னு தருமி சார்கிட்ட எப்படிப் போறதுன்னெல்லாம் கேட்டு வச்சிகிட்டேன்..

ஆனா பாருங்க, எங்க கம்பனி பேரு கேட்டதும் எல்லாரும் ஓடிப் போய்ட்டாங்க போலிருக்கு.. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.. திங்கள் இரவு தான் வண்டின்னு சொன்னதுனால, சுறுசுறுப்பா இருந்த மூணு பேர் மட்டும் ஊர்சுத்தப் போனோம். புத்திசாலித்தனமா தருமி சாரோட போன் நம்பர் எல்லாம் வீட்லயே விட்டுட்டுப் போய்ட்டேன்.. இருந்தாலும் அங்கங்க விசாரிச்சிகிட்டே கோயிலுக்கெல்லாம் போய்ட்டோம்..

முதல்ல மீனாக்ஷி கோயிலுக்குத் தான் போனோம்.. அம்மனைப் பாத்தோம், பார்வதி கூட ஒரு போட்டோ எடுத்து கிட்டோம்.. பார்வதியோட குட்டி வேற இருந்துச்சு.. நல்லா பழக்கி வச்சிருக்காங்க. பத்து ரூபா குடுத்தா, பார்வதி அழகா போட்டோவுக்கு போஸ் வேற குடுக்குது.. வெளில வந்து வாழைப்பழம் வாங்கிட்டு போய் குடுத்தேன். நல்லா சாப்டுச்சு..

அப்புறம் பெரியார் பஸ் ஸ்டாண்டு போய் பஸ் பிடிச்சு திருப்பரங்குன்றம் போனோம், அங்க ஔவையாரை ஒரு போட்டோ. திருப்பரங்குன்றம் யானையைப் பத்தி இங்க சொல்லணும். நாங்க ஏதோ ஆர்வமா பூஜை பண்ண தேங்காயை ஒரு பாதி குடுத்தோம்.. அந்தப் பாகன், "யானை தேங்கா எல்லாம் சாப்பிடாது" ன்னு சொல்லிட்டான். ஓட்டை உடைச்சு குடுத்தப்போ சாப்பிடுது.. தேங்காயை உடைச்சு சாப்பிடக் கூட தெரியலை அந்த யானைக்கு..

சின்ன வயசிலேயே பிடிச்சிகிட்டு வந்து சாப்பாடு போட்டு வளர்த்துவிட்டுர்றாங்க.. அதுக்கு தேங்காய் உடைப்பது மாதிரியான அதன் இயல்பான வேலைகளே தெரிவதில்லை :(..

திரும்பி மதுரை வந்து அழகர் கோயில், நூபுரகங்கை வரை போனோம்; ஆனா, துளசி அக்கா சொன்ன ஒத்த கை குரங்கைத் தான் பார்க்க முடியலை.

அழகர்கோயில் ஆண்டாளோட வாலிலேர்ந்து முடி எடுத்து ஒரு முடி இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கறாங்க.. பாவம், அந்த நேரம் யாரையும் கிட்ட விடுறது இல்லை.. ஆனா யானை தான் பாவம்.. :(.

நாங்க போனப்போ ஆண்டாளுக்கு உணவு நேரமாம்... உள்ள அழகருக்கு நைவேத்தியம் முடிஞ்சு சாப்பாடு வரணுமாம். பாவம், அதுக்கு ஏதாச்சும் வாங்கிக் குடுக்கலாம்னா கடை தான் இல்ல.. அதுக்கு அரை மணிநேரம் முன்ன தான் நாங்க நல்லா கொய்யாப் பழம் சாப்பிட்டோம். ரொம்ப வருத்தமா போச்சு..

அப்புறம், மறுபடி மதுரை, வண்டியூர் மாரியம்மனோட எங்க தல (யானை??? !!!) யாத்திரையை முடிச்சிகிட்டு ரெயிலேறிட்டோம்... யானைகள் போட்டோ இங்கே.

Tuesday, April 11, 2006

லோக் பரித்ராண்

இது பற்றி யாராவது ஏற்கனவே தமிழ்மணத்தில் எழுதி இருப்பார்கள். எனக்கு சரியாகத் தெரியாததால், நானும் எழுதுகிறேன்

ஐ ஐ டியில் படித்த ஐந்து மாணவர்கள், லோக் பரித்ராண் என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலிலேயே போட்டியிடப் போகிறார்கள். அவர்கள் போட்டியிடப் போகும் தொகுதிகள்:

  • தி நகர்
  • மையிலாபூர்
  • பார்க் டவுன்
  • ஆயிரம் விளக்கு
  • சைதை
  • அண்ணா நகர்


மற்ற விவரம் ஒன்றும் தெரியவில்லை. இது எனக்கு வந்த forward மட்டுமே.. உறுதியான தகவல் கிடைத்தால் சொல்லவும்.

யார் வேட்பாளர், என்ன சின்னம் என்று தெரிந்தால் சொல்லுங்க. மேலும் கட்சி பற்றி விவரம் அறிய இங்கு பார்க்கலாம்.

Friday, April 07, 2006

கனவு மெய்ப்பட வேண்டாம் :)

சாலையில் ஏதோ சுவையான நினைவில்
நடுவினில் வந்தேன்; ஐயகோ உணர்ந்தேன்!
எதிரிலே எமனார் இயந்திர மாகி
எதிர்ப்பது கண்டு எனைநிறுத் திட்டேன்

"வீட்டினில் சொல்லிநீ வருவாய்" என்று
ஓட்டுனன் திட்ட ஓரமாய் வழிந்தேன்.

இக்கணம் அந்தச் சாலைசெய் வண்டி
என்னுடை மோட்டார் வாகனம் தன்னில்
தன்குணம் காட்டிச் சென்றிருந் தாலோ
என்நிலை என்ன? எழுந்தது கேள்வி!!

உடலெலாம் சிதைந்து உள்ளம் மட்டும்
உயர்ந்தோர் கூற்றினை ஒத்து வெளியில்
அலைந்திருப் பேனோ ஆவி என்று?

இலையென சொல்லியும், உளதென ஒத்தும்
உளைந்த-அக் கடவுள் குலம்காண் பேனோ?

கொள்கைக் காக உயிரினை விட்ட
பல்வகைத் தலைவரோ டுறைந்திடு வேனோ?

பலமுறை கேட்டும் புரிப டாத
நியூட்டனின் நல்ல சித்தாந்தம் தன்னை
அவரையே கேட்டு ஐயநீங் குணர்ந்து
அதனின்நன் மைகளை அறிந்திடு வேனோ?

இதுவரை செய்யாக் கணக்கென எந்தன்
பாவபுண் ணியங்கள் கணக்கிடு வேனோ?

நெஞ்சமும் நினைவுஞ் சிந்தனைக் குதிரையில
்வஞ்சனை யின்றி சவாரி புரிய
கொஞ்சம்நான் எந்தன் பழைய உலகில்
கால்களைப் பதித்தேன் கதறித் துடித்தேன்

முன்னால் முழுமை வேகத் துடனே
வந்தது பெரிய சரக்குப் பேருந்து
எந்தன்சிறு வண்டி கண்ணில் படாமல்
முந்திவந் தென்மேல் மோதிய தாமே!!!

அடடே என்னுடல் கீழே இருக்க
அந்தரத் தில்நான் பறப்ப தெங்கே?!!

ஆங்கோர் சாலையில் ஆலாய்ப் பறந்தவள
்கிங்கர மாரிடை கிளம்புவ தெங்கே?

இத்தரை மீது உன்னுடை வாழ்வு
இத்துடன் முடிந்தது வருவாய் வானிற்கு
என்றவன் கூறலும் என்னுயிர் கலங்கி
மயங்கியே நிற்றலு மெய்யா? பொய்யா??


இது சின்ன வயதில், வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் கற்றுக் கொண்ட காலத்தில், ஆசிரியப்பா என்று எண்ணி எழுதியது..

தளைக்குற்றம், சொற்குற்றம் ஏதாவது இருந்தா please சொல்லுங்க

Wednesday, April 05, 2006

இண்டர்வியூ

இன்றுதான் என் முதல் இண்டர்வியூ. என் கல்லூரியிலேயே நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூ. இதுவரை ஒரு சில எழுத்துத் தேர்வுகளைத்தாண்டி அடுத்த நிலை தேர்வுகளுக்கு நான் சென்றதில்லை. இன்று தான் முதல் முறையாக என்னையும் மதித்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளார்கள்.

காலை எழுந்தது முதலே எனக்குள் ஒரே பரபரப்பு தான். எந்தச் சட்டை போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டேன்.

"என்னடி சட்டையும் பாண்டும்?!!!! பொம்பிள பிள்ளையா லட்சணமா சேலை கட்டிட்டு போ" என்றார்.

சண்டை போட மனமில்லாததால் இருவருக்கும் பொதுவாக வெளிர் நீல நிற சுடிதார் போட்டுக் கொண்டேன்.

"இன்னிக்காவது கோயிலுக்குப் போயிட்டு போ " என்றாள் அம்மா.

"அதுக்கெல்லாம் நேரமில்லை" என்றேன், கடைசி தடவையாக சகுந்தலா தேவியின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டே.

"ரெண்டு நாள் லீவு விட்டாலும் இப்படி காலைல தான் படிக்கணுமா? !! இப்பவும் ஸ்கூல் பொண்ணு மாதிரியே பண்ணா எப்படி?" என்றார் அப்பா

ஒருவழியாகக் கிளம்பினேன். "ரொம்ப டென்ஷனா இருக்க.. வண்டில போகாத. பஸ்ல போ.!!!" என்றான் அண்ணன்.

அவனை அலட்சியப் படுத்தி விட்டு வண்டியை எடுத்தேன்.


*** *** ** *



இருபது நிமிடத்திற்கு முன்னமேயே வந்து விட்டேன். கல்லூரி முதல்வர் வாசலிலேயே நின்றிருந்தார்.

"என்னம்மா பூங்கோதை! இண்டர்வியூவா??" என்றார்

ஆம் என்று தலையசைத்தேன்.

"பார்த்து பண்ணும்மா! நம்ம காலேஜ் மானமே உன் கையில தான் இருக்கு" என்று என் டென்ஷனை அதிகமாக்கினார்.

"சி. எம். எஸ் கம்ப்யூட்டர்ஸ் - பர்சனல் இண்டர்வியூ " என்று போர்டு வைத்திருந்த அந்த அறையைத் தட்டினேன்.

"ப்ளீஸ் கம் இன்" என்றார் அங்கே அமர்ந்திருந்தவர். அவர்தான் இன்றைய நேர்முகத் தேர்வுக்குழுவின் முக்கிய உறுப்பினர் போலும்.

"குட் மார்னிங் சார்" என்றேன்.

"குட் மார்னிங். என் பெயர் சுரேந்திரன். இன்றைய பேனலின் லீட் இண்டர்வியூவர். நீங்க தான் பூங்கோதையா? " என்றபடி என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

"ஆமாம் சார். மத்தவங்க எல்லாம் வரலியா? " என்றேன் காலியாய் இருந்த இருக்கைகளைக் காட்டி

"நம்ம பேனல்ல இன்னும் ராஜ்மோகன் மட்டும் தான். அவர் வரும் வரை நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்களேன். நீங்க இந்த காலேஜ்ல தான் படிச்சீங்கன்னு சொன்னாங்க.. உங்க காலேஜ் எப்போ தொடங்கினாங்க? ஸ்டூடன்ட்ஸ் எப்படி இருப்பாங்க? " என்றார்.

நானும் மேஜையில் இருந்த ஒரு ரெஸ்யூமை எடுத்துப் பார்த்தபடி என் கல்லூரியிலேயே நான் தேர்வாளராக பங்குபெறப் போகும் முதல் இண்டர்வியூவிற்கு கேள்விகளை அசைப்போட்டபடி பேச ஆரம்பித்தேன்.

Monday, April 03, 2006

ஒரு கல்யாணம், ஒரு கச்சேரி...

நேற்று ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன். என் பாட்டியின் உறவினர் வீட்டுக் கல்யாணம். பாட்டியை அழைத்துச் செல்லும் வேலை எனக்குரியதாகி விட்டது. எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன...

ரிசப்ஷனுக்குத் தான் நாங்கள் போய் இருந்தோம். நாங்கள் ஆறு மணிக்கே சென்றபோது, வந்திருந்தவர்கள் எல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். என் பாட்டி மாதிரியே கல்யாணங்களில் மட்டுமே சந்தித்து நலம் விசாரிக்க வருபவர்கள். விட்டுப் போன சொந்தங்களைத் தேடித் தங்கள் இன்றைய தங்குமிடம், பேரன், பேத்தி என்று பேசுவதற்காவே வந்திருப்பவர்கள்.

சுமார் ஏழரை மணிக்கு மேல் தான் மற்ற நண்பர், உறவினர் கூட்டம் வர ஆரம்பித்தது. அதுவரை ஒரு மெல்லிசைக் குழுவினர் கச்சேரி செய்து கொண்டிருக்க, கேட்க ஆரம்பித்தேன். அந்தக் குழுவினர், ஒரு அனாதை ஆசிரமத்திற்கு உதவுவதற்காகவே நிகழ்ச்சிகள் நடத்துபவர்களாம். சேரும் பணத்தில் செலவுகள் போக மீதம் அறுபது பேர் கொண்ட ஆசிரமத்திற்கே செல்கிறதாம். நல்ல காரியம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பாடகர்களில் ஒரு வயதான பெண்மணியும் இருந்தார். அறுபது வயதிருக்கும். அந்த வயதிற்கு மிகவும் இனிமையான குரல். அவர் பாடிய பாடல்கள் எல்லாம் பழைய பாடல்கள். "அமுதைப் பொழியும் நிலவே" என்று அவர் குரல் கேட்ட போது ஜமுனா நினைவு வந்தது. அன்றைய ஜமுனாவுக்கு நிச்சயம் பொருந்திப் போகும் இனிய, இளமையான குரல். நேரம் போவதே தெரியாமல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரே ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த மண்டபம் கொஞ்சம் சின்ன மண்டபம். பாடியவர்களோ பெரிய மைக், ஸ்பீக்கர் எல்லாம் வைத்துக் கொண்டு அநியாயத்திற்கு ட்ரம்ஸ் அடித்துப் பாடிக் கொண்டிருந்தனர். ட்ரம்ஸ் சத்தம் எல்லா பக்கமும் எதிரொலித்துக் கொண்டு வந்து காதில் முட்டியது. எனக்கே காதுகளைப் பொத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது என்றால், கல்யாணத்தில் வந்திருந்த வயதானோருக்கு எப்படி இருந்திருக்கும்?!!!

ஒரு கட்டத்தில், "தேவுடா தேவுடா" என்று சந்திரமுகி பாட்டை அவர்கள் ஆரம்பித்தபோது, என் பாட்டிக்கு அந்த அதிர்வால், உடல் தள்ளாடவே ஆரம்பித்து விட்டது. ஓரமாக உட்காரவைத்து, அடுத்த பாட்டு வரை நகரக் கூடாது என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. பாவம், ஒருவரோடொருவர் பேச வேண்டும் என்று வந்தவர்களால், எல்லாரையும் பார்க்கத்தான் முடிந்தது. பேசுவது காதில் விழுந்தால் தானே.

இந்த மாதிரி கல்யாணத்தில் வாசிப்பவர்கள், கொஞ்சம் மண்டபத்தின் நீளம் அகலம் தெரிந்து, அதற்கேற்றாற்போல் வாசித்தால் நல்லது. கல்யாணம் நடத்துபவர்களும் வயதானோரின் நிலை தெரிந்து அதற்கேற்றாற்போல் ஏதேனும் வசதி செய்து கொடுக்கலாம்.