கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:
முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)
1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.
2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).
3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.
4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.
5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.
இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).