என்ற குழப்பமான முன்னுரையோடு தொடங்கியது புதுப்புனல் பதிப்பகத்தின் "அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" புத்தகத்தினுடனான என் பயணம்.
தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானாவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமநிலை குலைந்து போனவன். இயல்பிலேயே இரட்டைத்தன்மை கொண்டவன். இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று பிரிந்து போக நேர்கிறது. அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது.
இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது (Fuses), சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது (Confuses), கால வித்தியாசத்தைக் கடந்து எல்லாக் காலங்களுக்குமாக வியாபிக்கிறது (Diffuses). எனவே இவனைப் பற்றி பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது (Autofiction) தவிர்க்க முடியாததாகிவிடுகிறது
"வரலாற்று நாவல், சமூக நாவல் என்று பிரித்தே படித்திருக்கிறோம், இரண்டும் கலந்த ஒரு நாவல் தமிழில் இல்லையா?" என்று நண்பரிடம் கேட்ட காரணத்தால் என் கைக்கு வந்து சேர்ந்தது இந்தப் புதினம்.
சரித்திரத்தின் இணையற்ற வீரன் மகா அலெக்ஸாண்டரின் மரணப்படுக்கையிலிருந்து தொடங்கும் இந்த நாவல், சமகாலத்தில் அலெக்ஸ் என்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் வாழ்க்கையையும் ஏககாலத்தில் விவரிக்கிறது. சரித்திரகால அலெக்ஸ் பாரசீகத்தில், தன் மரணப்படுக்கையில் பழைய நினைவுகளில் தோய்ந்து எழும்பொழுது, சமகால அலெக்ஸ் எகிப்தில் ஒரு மோசடி வேலையில் இறங்கி இருக்கிறான்.
சரித்திர நாவலாக அலெக்ஸின் பிறந்தநாள் தொட்டு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்வழியே சொல்லப்படுகிறது. தன்னுடைய தவறுகள், வெற்றிகள், வித்தியாசமான சந்திப்புகள், கேளிக்கைகள், குற்றங்கள் என்று அலெக்ஸின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் போர்வெறியை அழகாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.
இன்னொரு பக்கம், இளவயதிலிருந்து போரின் கொடுமைகளால் அலைக்கழிக்கப்பட்டு, போரே பிடிக்காமல் போன சமகால அலெக்ஸ், அவனை உளவு பார்க்க வந்திருக்கும் இலங்கை அரசாங்க ஒற்றன் ரனில் என்று வெவ்வேறு கால நிலையை ஆரம்பத்திலிருந்தே அழகாக சொல்லிச் செல்கிறார்.
ஏனோ, தமிழ்சினிமா பார்த்துக் கெட்டுபோன எனக்கு, கதையில் ஒரு நாயகி வந்த பின்னால் தான் சுறுசுறுப்பாக படிக்க முடிகிறது. அதுவரையிலான எழுபது பக்கங்களை இரண்டு மாதமாக தடவிக் கொண்டிருந்தவள், நாயகி ருக்ஸானா வந்த பின்னால் ஒரே இரவில் கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.
இந்த இரண்டு அலெக்ஸாண்டர்களைத் தவிர, அமெரிக்க உளவாளிகள், சர்வதேச பயங்கரவாதிகள், சமகாலத்தின் மற்றொரு போர்ப்பிரதேசமான குர்திஸ்தானின் இனப் போராட்டம் என்று கதை பல்வேறு திசைகளில் பயணிக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் தவிர்த்து, எதிர்காலத்துக்குள்ளும் பிரவேசிக்கிறார் ஆசிரியர்.
காலயந்திரம் போன்றதொரு கற்பனையில் கதைநாயகன் சமகால அலெக்ஸும் அவன் தோழி ருக்சானாவும் வெவ்வேறு எதிர்காலங்களுக்குப் போய்வருகிறார்கள். IF-ELSE-ENDIF வைத்து எழுதிய C நிரலி மாதிரி, எல்லாமே சாத்தியமாகக் கூடிய வருங்காலங்களாகத் தான் தோன்றுகின்றன..
- அணுஆயுதப் போரில் பெரும்பாலும் அழிந்து பதுங்கு குழிகளுள் மனிதர்கள் வாழும் ஒரு உலகம்,
- செயற்கையான பரிணாம வளர்ச்சியால், அதீத மனிதன், மனிதன், உப மனிதன் என்று வர்ணாசிரம தர்மத்தின் நூதன வடிவத்தில் பிரிந்து இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உலகம்,
- உண்மையான கம்யூனிச ஆட்சி மலர்ந்து அரசாங்கங்கள் அழிந்த மக்களாட்சி மிக்க மற்றொரு உலகம்,
- சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பூமியை விட்டுவிட்டு வெவ்வேறு கிரகங்களுக்கு மாறிப் போய்விட்ட ஒரு உலகம்
என்று வெவ்வேறு எதிர்காலங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
இந்தப் பல்வேறு வருங்காலங்களின் பிரச்சனைகள், சிறப்புகள், வசதிகள், புரட்சிகள், monotony என்று எல்லாவற்றையும் பேசுகிறார் ஆசிரியர்.
- அதீத மனிதர்கள் உலகத்தின் தலைவன் சேர்மன் அலெக்ஸாண்டர்,
- எல்லா மனிதர்களிடையிலும் அதீத சமநிலை வலியுறுத்தும் கம்யூனிச உலகம் ஒரே மாதிரி இருப்பதால் வெறுத்துப்போய் தற்கொலை செய்ய விரும்பும் கலைஞன் அலெக்ஸாண்டர்,
- சமகாலத்தில் காரணமின்றி தீவிரவாதி என்று சந்தேகத்திற்கு உட்படுத்தப்படுவதால், சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து மோசடிக்கும்பலுக்கு உதவும் வரைகலைஞன் அலெக்ஸாண்டர்,
- போர்வெறி பிடித்த பண்டைய அலெக்ஸாண்டர்
- அனைவரும் ஒன்றாக சந்தித்து அவரவர் சூழல் சார்ந்த மனநிலையில் பேசும் பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள் என்று பலதுறை குறிப்புகளில் ஆசிரியரின் உழைப்பு மிக அருமையாகத் தெரிகிறது. ஆங்கில நாவலாக இருந்திருந்தால், கண்டிப்பாக இது ஒரு பெஸ்ட் செல்லராகி இருக்கும்.
தமிழில் வரலாற்றுப் புதினங்கள், சமகால புதினங்கள் என்ற பெயரில் ஓரிரு குடும்பங்களுக்குள் நிகழ்பவற்றை முன்வைக்கும் சமூகக் கதைகள், இதிகாச, புராண, வரலாற்று நையாண்டிகள் என்று ஒரே மாதிரியான நாவல்கள் படித்திருந்த எனக்கு, இந்த பல்வேறு காலங்களையும் தொட்டுப் போகும், சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஆழ்ந்த தெளிவில்லாமலேயே மேலோட்டமாக கொஞ்சமே உள் அரசியலைத் தொட்டு சொல்லிச் செல்லும் அதிரடி, துப்பறியும், சர்வதேசம் சார்ந்த ஒரு வேகமான தமிழ்நாவல் நல்லதொரு வாசிப்பனுபவமாக இருந்தது. ஒரு கதை பல கதைகளாக பெருக்கிக் கொள்ளும் ஒரு ஆட்டோபிக்சன் கதையில், ஒவ்வொரு கதையையும் என்னால் தொடர முடிகிறதென்பதையும், இன்னும் அதைப் புரிந்து ரசிக்கவும் முடிகிறதென்பதையும் இன்னமும் நம்பமுடியவில்லை.
புத்தகம் : அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்
ஆசிரியர் : எம்.ஜி. சுரேஷ்
வெளியிட்டோர் : புதுப்புனல் பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2000
விலை : ரூ 115/-
6 comments:
can you get me the Publication Address ? where / how i can buy this book ?
அனானி,
புதுப்புனல் முகவரி:
எண் 32/2, ராஜி தெரு, முதல் மாடி
அயனாவரம்
சென்னை - 600 023
மேலே புத்தகப் பெயரின் லிங்கிலேயே எனி இந்தியனின் இணைய முகவரி இருக்கிறது. அங்கிருந்து இணையத்திலிருந்தே வாங்கலாம்..
அதிரடி, துப்பறியும், சர்வதேசம் சார்ந்த ஒரு வேகமான தமிழ்நாவல்
:)
"குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள் என்று பலதுறை குறிப்புகளில் ஆசிரியரின் உழைப்பு மிக அருமையாகத் தெரிகிறது"
இவர் நிறய சரித்திர கட்டுரைகள் எழுதியிருக்கார்..அதனால அந்த பாதிப்பு நாவல் ல இருந்திருக்கலாம்.இது இவரோட முதல் நாவலா?
பொன்ஸ் இந்த நாவலுக்கும் முன்னுரைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா? :))
முதலில் சிறிது குழப்பமாக இருந்தது;போகப்போக தெளிவாக
எழுதியுள்ளீர்கள்...
ஆங்கில சொற்கள் சிலவற்றின் தமிழாக்கம் அருமை
if-else end it கணினி சம்பந்தப்பட்ட
தொழில்நுட்ப சொல்லா?
சிஜி
Sorry for the English comment.
Thanks for a good review. Your review had increased my interest on this book.
அவசியம் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்ல சேர்த்தாச்சு இதையும். நன்றி பொன்ஸ்.
Post a Comment