சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. "இன்றில்லை என்னும் பெருமை" உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்...
மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் கையில் கொடுத்து விட்டார்கள்.. ம்ம்ம்.. நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் :)
1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass ceiling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.
Glass Ceiling என்ற சொல் எனக்குப் புதிது. அகராதி பார்த்து தெரிந்து கொண்ட பொருள்: "பெண்கள் அல்லது சிறுபான்மையரைப் பெரிய பதிவிகளுக்கு வரவிடாமல் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரை" என்கிறது ஆன்ஸர்ஸ்
கண்ணுக்குத் தெரியாத இது போன்ற திரைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. முன்பே ஒரு பதிவில் சொன்னது போல், கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. 'எப்படியும் கல்யாணம் செய்தால் விட வேண்டிய வேலை தானே!' , 'மேலாளர் சொல்வதை அப்படியே செய்வோம். நம்ம எதுக்கு அனாவசியமா யோசிக்கணும், கேள்வி கேட்கணும்?' என்பது போன்ற மெத்தனங்களையும் அடிமை மனநிலைகளையும் தாண்டியும் கூட பல பெண்கள் இங்கே வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர் நிறுவனங்கள், வெளிநாடுகள் செல்ல இயலாமை, கணவனின் பணியிட நெருக்கடிகளை முன்னிட்டு வேலையை துறக்க நிர்ப்பந்தம், குழந்தைகளைக் கவனிக்க சீக்கிரம் வீடு திரும்ப வேண்டிய நெருக்கடி என்பன போன்ற காரணங்களால், திருமணத்திற்குப் பின் பெண்கள் அடுத்த பிரமோஷன் மீது அதிகம் கருத்து செலுத்துவதில்லை. பணியில் மந்தமாக இருக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், பெண்கள் என்று வரும் போது வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.
இவற்றிலிருந்து வெளிவர பெண்கள் என்ன செய்யலாம்? "உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்" என்று கணவனிடமும், "உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!" என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. இதை உருவாக்கி, வெற்றி பெறும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவானாலும், இருக்கிறார்கள் என்பதை மறுக்கலாகாது. என் அனுபவத்திலேயே அது போன்ற பெண்களைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய மேலாளர்களாக...
2) மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
அறிவுரை என்று சொல்ல முடியாது; கூடியவரை வேலை நேரத்திற்குப் பின்னும் அலுவலகத்தில் பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்..
அப்படியா?!! :)
அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?
அப்படி பெரிய அளவில் யோசிச்சதில்லை மங்கை. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு. பல நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பது இது, இன்னும் நேரம் வரவில்லை; யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்
புத்தகங்கள்.. பிடித்த புத்தகங்களுக்குள் மூழ்கிப் போவது ஒரு பிடித்த பொழுதுபோக்கு.
5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...
தமிழ்வலைப்பதிவுகளைப் பொருத்தவரை புதிதாகத் தொடங்கியது போல் தான் உள்ளது. நிறைய மாற்றங்கள் மிச்சமிருக்கு; புதுமைகளும் தான்.
நுட்பத்தைப் பொறுத்தவரை, பிளாக்கரையும் வோர்ட்பிரஸ்ஸையும் தவிர வேற பதிவுக் கருவிகளே பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இதில் தமிழ் வலைகருவிகள் வந்தால் நல்லா இருக்கும். இன்னும் திரட்டிகள், துறைசார்ந்த திரட்டிகள், அல்லது தன்வயப்படுத்தக் கூடிய திரட்டிகள்(பர்சனலைஸ்) தமிழுக்குத் தேவை. 'பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை' என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் - இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். இதைத் தாண்டி, நல்ல இடுகைகள் பல சமயம் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. பூங்கா போல இன்னும் பல இதழ்கள் வரலாம்; வரவேண்டும்.
பத்திரிக்கைகள் போல ஸ்டேடிக்கான ஊடகமாக இல்லாமல், ஒலி, ஒளி, படங்கள், படத் துண்டுகள்னு அசையக் கூடிய விதங்களில் கொடுக்க முடிந்த பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மலைநாடனின் வானொலி போல, பினாத்தலாரின் ப்ளாஷ் விளையாட்டுகள் போல, அவ்வப்போது இணைக்கப்படும் படத்துண்டுகள் போல, இன்னும் பல நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். இருக்கும் நுட்பங்களைப் பரவலாக்கல் ஒருபுறம் இருந்தாலும், குழலியின் கருவிப்பட்டி சேர்ப்பான் போல புதுநுட்ப கருவிகளும் ஒருபக்கம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..
நிறைய பேர் வருவது மலர்ச்சியின், வளர்ச்சியின் அடையாளம். அதே ஐம்பது பேர், அதே பத்து பதினோரு விசயங்களைப் பற்றி ஒரே கோணத்தில் எழுதுவதை விட, தினம் புதுப் புது ஆட்கள் வரும் போது கோணங்களும் மாறுபடும். துறைசார்ந்த பதிவுகளின் தேவை இன்னும் தமிழில் இருந்து கொண்டே இருக்கிறது. மிருகவியல், தாவரவியலுக்கு ஒரு இயற்கை நேசி, மருத்துவத்திற்கு ஒரு எஸ்கே, அறிவியலுக்கு ஒரு வைசா, கூகிளுக்கு ஒரு பகீ, வேலைவாய்ப்புக்கு ஒரு ரவி என்று எல்லாமே "ஒரு"வாக இல்லாமல் இன்னும் அதே துறையைச் சேர்ந்த பலர் வரும்போது வெவ்வேறு பார்வைக்கோணங்களும் தமிழில் கிடைக்கும்.
ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் தாண்டி, யோசிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணங்களால் கூட புதியவர்கள் திசைமாறிப் போய்விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கூடியவரை பதிவுகளைப் படிக்கும் புதியவர்களை எழுத ஊக்குவிப்பதைத் தவிர, நம்மாலும் இதற்கு ஏதும் செய்துவிட முடியாதென்பதே என்னுடைய எண்ணம். மாற்றம் என்பது அவரவர் உள்ளிருந்து வரவேண்டியது தான்.
*******************************************************
சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். அதிலும் எதிராளி மனம் நோகாமல், பொதுவில் வைக்கப்படும் கேள்விகள் என்னும் போது, கொஞ்சம் கவனம் அதிகமாகவே தேவையாக இருக்கிறது. யாரை மாட்டிவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தபொழுது, நடுநாயமாக அமர்ந்து இருப்பவர் தான் நம் கண்ணில் சட்டென மாட்டியவர். அக்கா, அண்ணா என்று விளித்து பழகிக் கொண்டிருந்தாலும் நிஜமாகவே எனக்கு, ஒரு தமக்கையைப் போன்ற பாசம் காட்டும், தற்போது நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் என் நதியக்காவுக்கு நகர்கிறது சுடர்.
1. நீங்கள் வந்த புதிதில், சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
2. தமிழகத் தொலைக்காட்சியில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?
3. பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?
4. எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்ல முடியுமா? :)
5. வலைபதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
நதி, சுலபமான கேள்விகள் தான் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்சத்திரத்துடன் சுடராகவும் ஜொலிக்க சீக்கிரமே வந்து விடுங்களேன்..
29 comments:
பதில்கள் அருமை...நதியக்காவுக்கு தந்த கேள்விகள் அருமை, அதே நேரம் இந்த சுடர் அவங்க ஸ்டாராக மின்னும் நேரம் தந்தது அருமை...
உங்களிடமிருந்து இன்னும் அதிக கருத்துக்களை எதிர்பார்த்திருந்தேன்.
//'பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை' என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் - இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். //
:((
உங்களிடமிருந்து இந்த பதிலை என்னால் நம்ப முடியவில்லை :((
சுடரை சீக்கிரம் கைமாற்ற வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டீர்களா?
ஆனாலும் முதல் கேள்விக்கான பதில் நன்றாக இருந்தது..
சென்ஷி
யோசனையாகவே இருக்கும் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.
\\சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். /
உண்மை உண்மை.
// மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன//
இது என்ன மிகையா அல்லது இது போல *மூடநம்பிக்கைகள்* நிஜமாகவே உலவுகிறதா? ஐடி வேலைச் சூழல் பத்தி அவ்வளவாத் தெரியாது... அதான் கேக்கறேன்..
சுடரில் கேக்கப்படும் கேள்விகள் எல்லாம் ஒரே தொனியில் அமைகின்றன... நீங்களாச்சும் tone - ஐ மாத்துவீங்கன்னு பார்த்தேன் (:
பரவாயில்லை. நல்லா பதில் சொல்லி இருக்கீங்க!
அடுத்தது யாரு? நதியக்காவா? நல்ல தேர்வுதான்.
சுவாரசியமாத்தான் போகும்! :)
காத்திருப்போம்!
பொன்ஸ்
உங்க சுடரில் எனக்குப் பிடித்த ஒளிக் கதிர் இதுதான்.=பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்க சுடர் ஒளி எண் திக்கெலாம் பரவட்டும்!
ரவி, சிபி, முத்துலட்சுமி நன்றி.
சென்ஷி,
இன்னும் என்ன வரக் கூடும் என்று எண்ணிருந்தீர்கள்? எல்லாம் சொல்லிவிட்டதாகப் படுகிறதே.. அந்தப் பதிலை எப்படிப் புரிந்து கொண்டீர்கள்? அதிக பின்னூட்டம் வரும் பதிவைப் படிக்கிறோம் என்பதாகவா? எல்லாருமே அதைச் செய்வதில்லை என்று நம்புகிறீர்களா?
பிரகாஷ், இதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை. இன்றைய சூழலில், வேலைப் பளு, மன அழுத்தம் போன்றவை ஐடி மக்களுக்கிடையில் இருப்பது உண்மைதான். அதற்கான தீர்வுகளாக அந்தந்த நிறுவனங்கள் ஏதும் செய்வதில்லை என்பதும் உண்மை தான். வேலை இருக்கும் நாட்களில் பிழியப் பிழிய வேலை வாங்கும் நிறுவனங்கள், அடுத்த ஒரே மாதத்தில் அந்த மக்களை ப்ரீயாக்கி, பெஞ்சில் உட்கார வைத்தால் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது பல இடங்களில் நடக்கிறது. Project pressure நிறைந்த முந்தைய மாதத்தின் பிரச்சனைகளை மறந்து relax ஆக வேண்டிய அடுத்த மாதமும் அவன்/அவள் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்து, அனாவசிய கதைகள் பேசி, தேவையில்லாமல் அடுத்தவர் வேலைக்கு உதவுகிறேன் பேர்வழி என்று மீண்டும் டென்சனுக்கு வழிவகுத்துக் கொள்கிறான்/ள். இன்னும் நிறைய சொல்லலாம். மெல்ல எழுதுவோம்..
ஒரே தொனி என்றால்? என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே...
நன்றி செல்லி.. ஆனால், இதெல்லாம் யாரும் இங்கே செய்வதில்லை என்பது தான் உண்மை :(
பொன்ஸ் : நீங்க சொல்றது இருபாலாருக்கும் பொதுவானதுதானே? "ஆண்களுக்கே சவாலாக இருக்கிற விஷயங்களை, பெண்கள் படிப்பை மட்டும் வைத்து சமாளிக்க முடியாது " என்று கேள்வி இருந்தது. பால் பாகுபாடு குறைவாக இருக்கிற துறைகளில் ஐடியும் ஒன்று ( பிற துறைகளை ஒப்பு நோக்கும் போது) அதனாலே தான் கேட்டேன்.
தொனி.. எனக்கும் தெரியலை :-)... ஓரே மாதிரி கேள்விகளைக் கேட்டு, பதில்களைச் சொல்லிக்கறமோன்னு தோணுச்சு. [டிஸ்கி : இது எ.தா.க]
பிரகாஷ்,
ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் ஐடியில் மிகக் குறைவு என்பது உண்மைதான். ஆனால், அந்த வித்தியாசம் எங்கே இருக்கிறதென்பதை இந்தப் பதிவில் சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.
//கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. //
என்பது தொடங்கி, மூன்றே மாத தாய்மை விடுப்பும் ஐடி போன்ற அதிக நேரம் வேலைவாங்கும், கொஞ்ச நாள் பழகாவிட்டாலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகும் துறைக்கு கஷ்டமான விஷயம் தான்....
என்ன இது இப்டி ம்ம்ம்மாட்டி வுட்டுட்டீங்க... அதுவும் நட்சத்திர வாரத்தில... சமாளிச்சுத்தானே ஆகணும். இல்லைன்னா என்னோட 'கா'சொல்லிடுவீங்களே...
பொன்ஸ்
அழகாக பதிலளித்துள்ளீர்கள்.. அருமை!!
பொன்ஸ் இவ்வளவு சுறுசுறுப்பா..ஹ்ம்ம்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பெண்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த கேள்வியை கேட்டேன்..அது மாதிரியே பதில் சொல்லிட்டீங்க..
ஐடி ல வித்தியாசம் குறைவுதான்.. எனக்கு தெரிஞ்சு இதுல பணி புரியற 4 பெண்கள், திறமை இருந்தும் தாக்குப் பிடிக்க முடியாமல் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன்.. எங்க வீட்லேயே இருக்காங்க.. இங்க தில்லியிலும் பக்கத்து வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்தே இதை கேட்டேன்... ஐடி ல தான் வேலை பார்கனும்னு கனவு மட்டும் இருந்தா போதாது இல்ல...
ஆனா சமாளிச்சு வெற்றி பெற்ற பெண்களும் இருக்கத்தான் செய்யறாங்க.
///கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு.//
மகிழ்ச்சி..செய்வீர்கள் என நம்புகிறேன்
///ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் ..அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம்//
ஹ்ம்ம்..உண்மை..நானும் நினைத்துண்டு..பின்னூட்டம் தான் அங்கீகாரம்னு நினச்ச காலங்கள் உண்டு.. படிச்சா பின்னூட்டம் போடுவாங்க இல்ல..
அப்ப நாம எழுதறத யாரும் படிக்கிறதில்லையானு ஒரு ஏக்கம் இருந்திருக்கு....ஆனா இப்ப அப்படி எல்லாம் நினைக்கிறது இல்ல..
இந்த ஊடகம் அறிமுகம் ஆனப்போ வந்த ஆர்வக் கோளாறு அது...
ஆனா கொஞ்ச நாள் போனா பின்னூட்டத்தைப் பற்றி கவலைப்படவேண்டியது இல்லைனு புரிஞ்சிப்பாங்க..என்னை மாதிரி..
நன்றி பொன்ஸ்..நல்லா இருக்கு
அடுத்து தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள்..
பொன்ஸ் முதல் கேள்வியின் பதில் அருமை.
//கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. // அப்படியா! ஆண்களுக்குதான் அப்படி செய்ய வேண்டிய நிலை இருக்கும். முழு நேரமும் ஒன்னுமே செய்யாமல் / செய்ய தெரியாமல் ஓபி அடித்துவிட்டு வேலை நேரம் முடிந்த பிறகு வேலை செய்வதுபோல் பாவ்லா காட்டுவதில் நம்பர்1 ஆட்கள். நம்ம அப்படியில்லையே பொன்ஸ், வேலையை சுறுசுறுப்பாக சீக்கிரமே முடித்துவிட்டு நடிக்க தெரியாத அப்பாவிகள் நாம்தான்.
//ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. // என்னத்த பல்வேறு காரணங்கள்? வீட்டு வேலையா? குழந்தை பராமரிப்பா? மாமனார்- மாமியார் கிட்ட சொல்லிடனும், வேலைக்கு போவேன் வர நேரமாகிவிடும். வீட்டு வேலைகளை எல்லோரும் பகிர்ந்து செய்துவிடலாம், அனாவசியமாக புகாரெல்லாம் வரக் கூடாது என்று திருமணத்திற்கு முன்பே தெளிவா சொல்லிடனும். அப்படி செய்தால் பிரச்சனை வராது.
ஆனை மாலை போட்டுச்சுன்னு முத்துலெட்சுமி சொனபோதே நினைத்தேன், உங்ககிட்ட சுடர் வந்திரும்னு!
வழக்கம் போலவே சிறப்பாகச் சுடர் ஏற்றியிருக்கிறீர்கள்!
ஒரே ஒரு இடம் சற்று நெருடியது.
//"உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்" என்று கணவனிடமும், "உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!" என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. //
இது ஒன்றும் போட்டி இல்லையே!
இதில் நீங்களும் இப்படிச் செய்தால் அக்குழந்தையின் எதிர்காலம் என்னாவது?
யாரிடம் திறமை அதிகமிருக்கிறதோ, [அ] யாருக்கு வாய்ப்பும், நேரமும் இருக்கிறதோ, அவர் முன்னேற அடுத்தவர் உதவியாய் இருந்து குடும்பத்தையும், குழந்தையையும் கவனிக்க முற்படுவதே வழி..... இது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.
யு.எஸ். வந்த புதிதில், நான் மருத்துவ லைசென்ஸுக்காகப் படிக்கையில், வீட்டில் இருந்து குழந்தைகளை நான் தான் கவனித்துக் கொண்டேன்.
என் மனைவி வேலைக்குச் சென்று வந்தார்.
இப்போதும் என் சமையல்தான் வீட்டில்... அப்போது பழகியது!
இது போல சின்ன சின்ன விஷயங்களில் புரிதலுடன் விட்டுக் கொடுத்து அடுத்தவருக்கு உறுதுணையாய் இருப்பதே நல்வழி என நினைக்கிறேன்.
நீங்கள் சொல்லியிருப்பது வேறுபாட்டை வளர்க்குமோ என அஞ்சுகிறேன்.
சிறப்பான சுடருக்கு வாழ்த்துகள்!
சொல்ல மறந்தேன்!
அந்த யானைக்குட்டி[!] சுடர் ஏந்தி அமர்ந்திருக்கும் படம் அற்புதம்!
பாராட்டுகள்!
:))
நதி, வாங்க வாங்க :)
சிவபாலன், நன்றி.
மங்கை, பின்னூட்டங்கள் மட்டுமே பதிவின் அளவுகோல் என்று நானும் நினைத்த காலங்கள் உண்டு. அந்த மயக்கத்திலிருந்து சீக்கிரமே வெளிவந்து விட்டாலும் இன்றும் ஒரு பின்னூட்டமாவது வரும்போது மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை. ஆனால், அந்த எண்ணத்திலிருந்து வெளிவராமலே இருப்பவர்கள் புதியவர்களில் நிறைய இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தம்..
ஜெஸிலா, நன்றி :) ஒன்றுமே செய்யாமல் ஓபி அடித்து நற்பெயர் வாங்குபவர்களில் பெண்கள் இல்லவே இல்லை என்று ஒப்ப முடியவில்லை ஜெஸிலா.. என்னுடைய முந்தைய பதிவைப் பார்த்திருந்தால், அச்சு அசல் இதையே, ஒன்றுமே செய்யாமல் ஓப்பி அடித்து அதிக நேரம் தங்குவதால் மட்டுமே நற்பெயர் வாங்கிய பெண் ஒருவரைப் பற்றி எழுதி இருப்பேன். இந்த வேலை செய்பவர்கள் இருபாலிலும் இருக்கிறார்கள்.
//என்னத்த பல்வேறு காரணங்கள்? வீட்டு வேலையா? குழந்தை பராமரிப்பா? மாமனார்- மாமியார் கிட்ட சொல்லிடனும், வேலைக்கு போவேன் வர நேரமாகிவிடும்.//
இதை அடுத்தடுத்த பதிலில் சொல்லி இருக்கிறேனே! எஸ்கேவும் எடுத்துக்காட்டி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பென்ன, பின்னும் சொல்லலாம். பிரச்சனை எங்கே என்று கண்டறிந்தால் சொல்லி விட வேண்டியது தான் :)
SK, ஆனை ஆனை என்று நீங்க அப்பப்போ சொல்லும் போதே, இது என்கிட்ட வரும்னு நினைச்சிட்டேன் :))) நீங்கள் சொல்லும் போட்டி விசயம் உண்மை. உங்களைப் போல் "என்வீட்டு வேலை என்னுடைய வேலையும் கூட!" என்று நினைக்கிற ஆண்களிடம் இது போன்ற விசயங்களைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உரிமை கொடுக்க மறுப்பவரிடம் தான் இதைக் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கேட்டு வாங்குகையில் இது போட்டியாக அறியப்படாது என்றே நம்புகிறேன். போட்டி என்கிறதை விட, putting them in your shoes என்றும் சொல்லலாமே? "என்னை, நானாய் இருந்து யோசித்துப் பார்" என்று புரியவைக்க முயலுங்கள் என்றே சொல்ல முயன்றேன்..
சுடருடனான ஆனை படத்துக்கு ரொம்பவே தேடினேன் :) உங்க பின்னூட்டம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் :))
பொன்ஸ் ஏன் என்னன்னு கேட்காதீங்க. ஆனா ரொம்ப மேலோட்டமான பதில்களா என் மனதுக்குப் பட்டுச்சு. அலுவலகத்தில் பல வேலைகளுக்கு நடுவே படித்தது கூட காரணமாயிருக்கலாம். மற்றபடி, சுடரை வெற்றிகரமாக சுறுசுறுப்பாக வலம் வரச் செய்ததற்கு வாழ்த்துக்கள்.
பொன்ஸ்,
// வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. //
அருமையான கருத்து. சிறப்பா சொல்லியிருக்கீங்க.
// இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.//
இங்கத்தான் கொஞ்சம் இடிக்குது. நமக்குப்பிடிச்சதை நாம செய்யாம இருக்கறதுக்கு சோம்பேறித்தனம் காரணமா இருக்கலாம். ஆனா நம் மனசை பாதிக்கற ஒன்னை செயலா மாத்தாம இருக்கறதுக்கு சோம்பேறித்தனம் காரணமா இருக்க முடியாது. வேற என்னவா இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க.
அருமையான பதில்கள் பொன்ஸ்.
நானும் இந்த 'கிளாஸ் சீலிங்' பத்தித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதைப்பத்திக்
கொஞ்சம் எழுதணும்.
சுடரில் பொறுப்பாகப் பதில் எழுதிவிட்டீர்கள்.
நதியிடமும் கேள்விச்சுடர் பிரகாசிக்கட்டும்.
இவ்வளவு சிந்தனைகளைத் தேன்கூட்டில் ஆரம்பித்துவைத்த சாகரனுக்கு நான் இப்போது நன்றி சொல்கிறேன்.
இன்றைய இளைய சமுதாயம் விழிப்பாக இருக்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டு பெண்களின் இந்தச் சுடர் பதிவுகள்.
நன்றாக ஏற்றி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பொன்ஸ்.
\யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.\\
மிக பயனுள்ள யோசனை. விரைவில் அந்த யோசனை செயலாக மாற வேண்டுகிறேன்.
எல்லா கேள்விகளுக்கும் அருமையான பதில்கள். வாழ்த்துக்கள்..
நீங்க மட்டும் தான் பிளிறலாம்.. காமெண்ட் எழுதற எல்லாரும் எப்படி பிளிற முடியும்?
சுடர் கேள்விகள் சுடரை ஆற வைத்து விட்டது..உங்களை எல்லாம் நாங்க கேள்வி கேட்டிருக்கணும்..தப்பிச்சுட்டிங்க..:)))
கொத்ஸ், ஏன் என்னன்னு எனக்கே புரியுது :)
வாத்தியார்,
சரியா பிடிக்கிறீங்க :) வேற சில காரணங்களும் இருக்குதான்.. பார்க்கலாம்; சீக்கிரமே அவற்றைத் தாண்டிவரணும்..
எழுதுங்க துளசிக்கா.. நீங்க இன்னும் அழகா எழுதுவீங்க :)
வல்லி, என்ன அதுக்குள்ள வாழ்த்து சொல்லிட்டீங்க? இன்னும் நீங்க, துளசிக்கா, உஷான்னு சீனியர் பெண்கள் ரவுண்டு ஒண்ணு இருக்கே.. :)
நன்றி சதீஷ், கோபிநாத்
முத்து, பொன்ஸ் பக்கங்களுக்கு வந்தாலே பிளிற வேண்டியது தான் :)
நீங்க என்னைக் கேட்கப் போறீங்களா?!.. நான் அப்பீட் :))
பொன்ஸ்
அருமையான பதில்கள். பொதுவாகவே எல்லா துறையிலும் அது நேரம் பார்க்காமல் செய்யும் (ஆராய்ச்சி, மருத்துவம், பொதுநலம், இன்னும் பத்திரிக்கையாளர், சமூக பணி) எல்லாவற்றிலும் ஒருவித புரிதல் வேண்டும். எஸ்கே சொல்வதுபோல வீட்டு வேலைகளை யாருக்கு முடியுமே அவர்கள் செய்வது முக்கியம்.
கண்ணாடிக்கூறைக்கான விதிகள் இருந்தாலும் அதை மீள முடியும் என்பதும் மீற எப்படி முயல வேண்டும் என்பதையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். உங்கள் பதில்கல் பலவற்றில் இன்னும் ஆழமாக யோசித்து பார்த்தல் இது வேறு பல காரணிகளாலும் மாற்றப்படும் என்பதும் புலனாகும்.
கண்ணாடிக்கூறை பற்றியும் இன்னபிற அரசியல்களையும் இங்கே திட்டிருக்கிறேன்.http://reallogic.org/thenthuli/?p=116 முதலாக 117 and 118 வரை.
எக்கா...தேசிபண்டில இந்த பதிவ இணைச்சிருக்கேன்.
நன்றி.
http://www.desipundit.com/2007/03/12/sudar/
திரு.பொன்ஸ் அவர்களே, காலம்காலமாக நம்முள் திணிக்கப்பட்டிருக்கும் பெண்கள் பற்றிய ஒரு அடிமைத்தனமான பார்வைதான் நீங்கள் கேட்டிருக்கும் அந்த வெளித்தெரியாத கண்ணாடி திரை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வலைத்தளம் போல் உங்களுடைய லோசனையின்பேரில் அல்லது உங்களது கண்காணிப்பில் உங்கள் வீட்டுப் பெண்களால் உருவாக்கப்பட்ட வேறு வலைத்தளங்கள் ஏதாவது உள்ளதா?தயவு செய்து நான் தங்களைக் குற்றம் சொல்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். என் வீட்டிலும் அதே நிலைமைதான்.
பல்வேறு துறைகளிலும் மேலதிகாரியாக இருக்கும் பெண் அதிகாரிகளிடம் கீழ்மட்ட அதிகாரிகள் பழகும் முறைக்கும், அதே துறையில் இருக்கும் வேறொரு ஆண் அதிகாரியிடம் அதே கீழ் மட்ட அதிகாரிகள் பழகும் முறைக்கும் ஏணிக்கும் எட்டாத தூரமாகத்தான் இருக்கும். இது உலக நடைமுறை.
நாம்தான் இதை மாற்ற வேண்டும். முதலில் அதை நமது குடும்பத்தில் இருந்துதான் மாற்ற வேண்டும். சமையல்கட்டில் ணெண்ண பெண்ணெண்ண யாருக்கு பசிக்கிறதோ அவர்கள் செய்துதான் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை எப்போது நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோமோ அப்போதுதான் இந்த மாற்றத்திற்கு நாம் பிள்ளையார் சுழி போட்டதாக அர்த்தம். (பிள்ளையார் பெயரை இங்கே பயன்படுத்தலாம் அல்லவா?)
இப்போது கிண்டர்கார்டன் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து கல்வி முறை பாடத்திலும் படம் காட்டி பாடம் சொல்லு பிரிவில் ஒரு பெண் அல்லது அம்மா சமைப்பது போலவும். குழந்தைகளை அது(சமைப்பது) அம்மாவின் வேலை என்று சொல்ல வைப்பதும்தான் நடக்கிறது. ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியிருக்கும்? நான் சொல்வது சரிதானே.. நன்றி பொன்ஸ் அவர்களே. இதுதான் எனது முதல் உள்ளீடு. பொறுமையாக படித்ததற்கு நன்றி. அன்புடன் தமிழ்சரண்.
தமிழ்சரண்/ உண்மைத் தமிழன்,
//பொறுமையாக படித்ததற்கு நன்றி//
:)) உங்க பின்னூட்டத்தைப் பொறுமையாகப் படித்துவிட்டேன். இத்தனை நீளமான பின்னூட்டம் இடுவதற்கு முன்னால், நீங்களும் கொஞ்சம் பொறுமையாக என்னுடைய ப்ரொபைலைத் தட்டிப் பார்த்திருக்கலாம்; அது மட்டுமில்லாமல் இந்த இடுகையையே நீங்கள் முழுமையாக படித்தீர்களா என்பதே எனக்குக் குழப்பமாக உள்ளது. இந்தச் சுடரை அடுத்து கொடுத்திருப்பதும் சகோதரி நதியக்காவிடம் தான். வலையுலகில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம். அத்தனை பேரின் பதிவுகளையும் என் பதிவின் பக்கப்பட்டியில் இருக்கும் "மகளிர் சக்தி"யில் நீங்கள் படிக்கலாம்.
உங்கள் வீட்டுச் சமையலறையில் நீங்கள் கொண்டுவந்து கொண்டிருக்கும் /ஆரம்பித்துவிட்ட மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் :). அத்துடன், எங்கள் மகளிர் சக்தியில் உங்கள் வீட்டுப் பெண்களின் எழுத்துக்களைச் சீக்கிரமே நான் எதிர்பார்க்கிறேன்; அதற்கு ஏதேனும் உதவி தேவையென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் :))
Post a Comment