Tuesday, May 30, 2006
இரவு மணி பன்னிரண்டு - II
ராம் ஆறு மாதங்களுக்கு முன் எங்களுடன் வேலை செய்தான்; ஆறு மாதங்கள் மட்டுமே செய்தான். ரொம்ப நல்லவன். கொஞ்சம் எங்கள் அனைவரையும் விட வயதில் பெரியவன். ஆனால் அந்த மாதிரி வித்தியாசம் எதுவும் பார்க்க மாட்டான். நன்றாக பேசுவான். பயந்த சுபாவம். இந்தப் பசங்களுடன் ஒன்றாகப் பழகுவான். நாலு வருடம் சீனியர் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் இருக்கும் அவனது செயல்பாடுகள்.
அத்தனை கலந்து பழகியவன் மனதில் பெரிய ரணம் ஏதோ இருந்திருக்கிறது, எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.
ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை; சிவாவும் கமலாவும் ஊருக்குப் போயிருந்த அன்று, சுரேஷுக்கும் இரவு வேலை இருந்த அன்று எந்த காரணமும் எழுதி வைக்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனான் ராம். அன்று இரவும், பன்னிரண்டு மணிக்கு சுரேஷ் இதே போல் தொலைபேசியில் அழைத்தது, இருவருமாகச் சென்று நாயுடு உதவியுடன் கதவை உடைத்துத் திறந்தது, கண்ணெதிரில் காணும் முதல் இறப்பாதலால் பயந்து போய், கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்து அவன் அம்மாவுக்குத் தெரிவித்தது... அது ஒரு கறுப்பு வெள்ளி!!!
யார் யாரோ வந்து எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தார்கள். 'ராமுக்குத் தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன காரணம் இருந்தது?' என்று. எங்கள் நால்வருக்குமே தெரியவில்லை. கொஞ்ச நாளாக அவன் பேசியது, அவனுக்கு கடைசியாக வந்த மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, அவன் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு சோர்ந்து விட்டு விட்டோம்.
"அதான் போய்ச் சேர்ந்துட்டானே.. என்ன காரணம் இருந்தால் என்ன?" என்ற எண்ணம் வருவதற்குள் மூன்று மாதம் ஓடிவிட்டது!!
சிவாவும் சுரேஷும் வீடு மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லி இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு மாறிப் போனார்கள். அதன்பின் இன்று தான் சுரேஷ் தன்னந்தனியாக இருந்திருக்கிறான். அதனால் தான் பயந்து விட்டான் போலும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாக இருக்க நேரிடும் போதெல்லாம் சுரேஷுக்கு மட்டும் இந்த தோற்றம் ஏற்படுவது தொடர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் "ராம் வந்தான், சிகரெட் கேட்டான்" என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.
சரியாக பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் ராம் வருவான் -கனவோ நினைவோ, ஏதோ ஒன்று. அப்புறம் சுரேஷுக்குப் பயம் இருக்காது.
"அதென்னடா பன்னிரண்டிலிருந்து ரெண்டு? என்ன ஷிப்ட் அது?" என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்போம்.
ஒரு நாள் யாரும் இல்லாத ஒரு பன்னிரண்டு மணிக்கு என்னை மறுபடி எழுப்பி விட்டு தூக்கத்தைக் கலைத்த போது சுரேஷ் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னான். ஏன் அவனுக்கு மட்டும் ராமிடம் இத்தனை பயம்?
"உனக்குத் தெரியாது சுஜா, ராம் இறந்ததுக்கு நீயும் நானும் தான் காரணம்.."
"டேய் என்னடா உளர்ற?"
"ராம் உன்னை விரும்பினான்.. அவன் எழுதி இருந்த கவிதை எல்லாம் உன்னைப் பத்தித் தான்.."
"போதும்.. உளறாத.. அப்படி ஏதாச்சும் இருந்தா என்கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டானா?"
"இல்லை.. நீயும் நானும் பழகறதை அவன் வேற மாதிரி எடுத்துகிட்டான்.. அன்னிக்குக் கூட, அந்த வெள்ளிக்கிழமை, அவன் இறப்பதற்கு முன்னாடி வாரம், நீயும் நானும் சாப்பிடப் போகும் போது அவன் ஒரு மாதிரி பார்த்தான் நினைவிருக்கா?"
"என்னடா பார்த்தான்? ஒண்ணும் சொல்லலியே!! நீ அவனோட சாப்பிட வர்றேன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்ததும் அவனை விட்டுட்டு வந்திட்ட!! அதான்"
"இல்லை.. வியாழக் கிழமை என்கிட்ட கிட்டத் தட்ட சொல்லிட்டான்."
"என்ன சொன்னான்? "
"ஏதோ பிரச்சனைன்னு சொன்னான்.. தனக்குன்னு யாருமே இல்லைங்கிறது அவனோட எண்ணம்.. அவனுக்கு யாரைப் பிடிச்சாலும் அவங்களுக்கு அவனைப் பிடிக்காம போய்டுதாம்"
"சரி தான்.. இதெல்லாம் விடு, என்னைப் பத்தி என்ன சொன்னான்?"
"சுஜான்னு பேர் சொல்லி ஒண்ணும் சொல்லலை.. "
"உன்னை ஏதாவது சொன்னானா?"
"இல்லை.."
"அப்புறம் என்னடா?"
"பாதி சொல்லிகிட்டு வந்தான்.. நாளைக்குப் பேசலாம்னு சொன்னான்.. அவனைச் சாப்பிட கூட்டிகிட்டு போயிருந்தா, அன்னிக்கு அவனோட இன்னும் கொஞ்சம் நேரம் செலவு செஞ்சிருந்தா, அவனுக்கு தற்கொலை மாதிரியான எண்ணம் தோன்றியே இருக்காது.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!!" சுரேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.
"சுரேஷ், அழாதடா.. என்னத்துக்கு இப்படி அழற?"
"இல்ல சுஜா.. நானும் நீயும் சேர்ந்து ஒரு உயிர் போகக் காரணமாய்ட்டோம்!!"
"டேய், நீன்னு வேணா சொல்லிக்க. என்னை ஏண்டா இழுக்கிற?"
ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருக்கவேண்டும். இந்த மாதிரி நான் சொன்னவுடன், சுரேஷ் தலை நிமிர்த்திப் பார்த்தான்.
"ஏய், நான் என்ன விளையாட்டுக்குச் சொல்றேன்னு நினைக்கிறியா?"
"இங்க பாரு சுரேஷ், உனக்கும் எனக்கும் இடையில் எந்த உறவும் இல்லைன்னு ராமுக்குத் தெரியும்.. இல்லைன்னா நம்ம கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. என்னைத் தானே விரும்பினான், என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்லை? சரி, அதை விடு.. இப்போ உனக்கு இதுல என்ன பங்கு இருக்குன்னு நினைக்கிற? யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம இறந்து போகும் அளவுக்கு முடிவை எடுக்கிறவங்களை என்ன செய்ய முடியும்? "
"இல்ல சுஜா.. அன்னிக்கு நான் அவன்கிட்ட பேசி இருந்தா எல்லாம் சரியாப் போயிருக்கும்.. அவன் அதைத் தான் எதிர்பார்த்தான்."
"சரி சுரேஷ்.. உன் புலம்பலை உன்னோட வச்சிக்கோ.. இதுல என் பெயரை இழுத்து விடாத.. நீயாச்சு ராமாச்சு.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை"
"காட் ப்ராமிஸ் சுஜா, நான் என்ன உன்னை ஏமாத்தவா சொல்லிகிட்டு இருக்கேன்?!!"
அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அப்புறமும் அவன் குற்ற உணர்ச்சியைப் போக்க நிறைய முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. பன்னிரண்டு மணிக்குத் தனியாக இருந்தால் மட்டும் தான் ராம் இவனைப் பார்க்க வருகிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை.
மன நல மருத்துவர், லோக்கல் கோயில் பூசாரி எல்லாரையும் பார்த்துவிட்டாகி விட்டது. "தனியா விடாதீங்க!" என்று சுலபமாக முடித்துக் கொண்டார் மருத்துவர்.
என்னிடம் உண்மையைச் சொன்ன ஒருமாதத்தில் ஊர் மாற்றிக் கொண்டு அம்மா அப்பாவுடன் போய்விட்டான்.
* * * * *
ஆறு வருடங்கள் இருக்கும் இது நடந்து. திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது திடீரென்று அம்மாவிடமிருந்து சுரேஷின் தொலைபேசி எண் கிடைத்தது. "இங்கு தான் இருக்கிறான்.. ஒருவார்த்தை பேசு" என்னும் அன்புக் கட்டளையுடன்.
"ஏய் சுஜா!! என்ன பண்ற? எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்க?"
"சூப்பரா இருக்கேன்.. நீ இந்த ஊர்ல தான் இருக்கன்னு அம்மா சொன்னாங்க.. நேர்ல பார்ப்போமா? எங்க இருக்கன்னு சொல்லு.. நானே வர்றேன்"
சொன்னேன்; இரவு உணவுக்கு வந்தான். என் கணவரிடம் ஒரு அரை மணி நேரம் தொழில் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பேசிவிட்டு, என்னிடமும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாக எல்லாம் முடிந்து சாப்பிட்டு, பேசி முடித்து கிளம்பும் போது மணி பதினொன்று நாற்பது. இன்னும் பல மைல் தொலைவு போகவேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்னும்போது தான் எனக்கு ராம் பற்றிய இவனின் பயம் நினைவு வந்தது. இப்போது கேட்டு மறந்து போனவனை நினைவுப் படுத்துவானேன் என்று விட்டு விட்டேன்.
மறு நாள் போன் செய்தேன். "சுரேஷ், பத்திரமா போய்ச் சேர்ந்தியா?"
"இதைக் கேட்கவா போன் பண்ணின?!! நல்லா வந்து சேர்ந்தேன்.. இங்க எல்லாம் பொதுவா வண்டி ஓட்டறது தானே!!"
"இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தான்னா, பயந்திருக்கப் போறியேன்னு..."
"அட.. சுஜா.. நீ இன்னும் அதை மறக்கலியா..!! அதெல்லாம் எப்பவோ போயாச்சு அந்தப் பயம்.. "
"எப்படி சுரேஷ்?"
"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்?"
"அப்போ இந்திய நேரம் இரவு பன்னிரண்டு மணிக்கு?"
"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே!!"
நான் ஒன்றும் சொல்லவில்லை..
"என்ன சுஜா? ஆச்சரியமா இருக்கா? வந்த புதுசுல இப்படித் தான் நினைச்சேன்.. அத்தோட கொஞ்ச நாளில் ராமின் நிலைக்கு நம்ம காரணம் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.. அவனுக்கு அறிவில்லை.. அதான் இப்படி ஒரு முடிவெடுத்துட்டான்.. நம்ம என்ன செய்ய முடியும்?!!"
அது சரி.. இதத் தானேடா நானும் மொதல்லேர்ந்து சொல்லிகிட்டு இருக்கேன்!!!
இரவு மணி பன்னிரண்டு
"சுஜா!!! சுஜா!! நான் சுரேஷ் பேசறேன்.. கொஞ்சம் கதவைத் திற.." பதற்றத்தோடு பேசிய சுரேஷின் குரல் என் தூக்கத்தை முற்றிலுமாகத் தெளிவித்தது.
"என்னாச்சு சுரேஷ்? எங்க இருக்க? மணி என்ன தெரியுமா?"
"இங்க தான் உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன்.. மணி பன்னண்டு.. அதானே.. தெரியும் சுஜா.. சீக்கிரம் கதவத் திறவேன்!! "
இதற்கு மேல் என்ன கேட்பது?.. மிக்க அவசரம் போலிருக்கு என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறக்கப் போனேன்..அருகில் படுத்திருந்த கமலா அரைத் தூக்கத்தில் கேட்டாள்,
"யாரு?"
"சுரேஷ்!!!.. நீ தூங்கு, நான் பார்க்கிறேன்!!.. என்னன்னு தெரியலை.. இந்த நேரத்தில் வந்திருக்கான்"
கண்களைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க முயன்று பின் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தாள் கமலா.. பாவம். போன வாரம் முழுவதும் அவளுக்கு இரவு பகல் வேலை..
கதவைத் திறந்தேன்; சுரேஷ் வேர்வை வழிய நின்றிருந்தான். வெளியில் பால்கனியிலிருந்து தெரியும் கும்மிருட்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். இத்தனை பரபரப்பிலும் கையிலிருந்த துண்டு சிகரெட் கீழே விழாமல் இரண்டு மாடியேறி எப்படி வந்தான் என்று ஒரு நிமிடம் வியந்தேன்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். என் கண் போகும் திக்கைப் பார்த்துவிட்டு சிகரெட்டை அணைத்து கீழே போட்டு மிதித்தான்.
"அப்படித்தான்.. நல்லா கோலத்துல போட்டு மிதி!!! உருப்படும்!!!" என்றேன்.
கீழே குனிந்து பொறுக்கி பால்கனி வழியே வெளியே எறிந்தான்."தெருவுல யார் மேலயாவது படப் போகுது" என்று நான் சொல்லுமுன் அவசர அவசரமாக "உள்ள போய் பேசலாமா" என்று கேட்டான்.
இந்த நிலைமையில் உள்ள ஒருவனை இன்னும் கொடுமைப்படுத்தக் கூடாது என்று நினைத்து கதவை இன்னும் அகலமாகத் திறந்தேன். நேரே வந்தவன் கீழே தரையில் டீவிக்கு முன்பாக வழக்கமாக அமரும் இடத்தில் வந்து உட்கார்ந்தான்.
"என்னாச்சு? ஏன் இத்தனை பதற்றம்? இந்த நேரத்துக்கு எதுக்கு வந்த?" என்றேன்
"ஒண்ணும் இல்லை.. சிவா ஊரில் இல்லை.."
"அது தான் எனக்குத் தெரியுமே.. அதுக்கும் நீ இப்போ இங்க வந்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"நீ... நீ சிரிக்கக் கூடாது.. " தயங்கித் தயங்கிச் சொன்னான்.
"சரி சிரிக்கலை.. சொல்லு.. என்ன விஷயம்?"
"ராமைப் பார்த்தேன்.. என் ரூமில்.. "
"என்னது? ராமா? என்ன உளர்ற?"
"ஆமாம்.. ராம் தான்.. ராமே தான்.. இன்னிக்கி டிசம்பர் 12. ராமோட பிறந்த நாள்."
"தெரியும்.. போன வருடம் நம்ம எல்லாம் சேர்ந்து தானே வெளில போய் சாப்பிட்டோம்"
"ஆமாம்.. அதுக்கப்புறம்.. ரூம்ல நான், ராம், சிவா மூணு பேரும் விடிய விடிய பேசிகிட்டு இருந்தோம்"
"எது? நீங்க, மூணு பேரு? சும்மா, பேசிகிட்டு இருந்தீங்க?!! அதான் வைன் சாப்ல ஏதோ வாங்கிகிட்டு வந்தீங்களே.. நாயுடு சொன்னாரு.."
"சரி.. ஏதோ ஒண்ணு.. உனக்குத் தெரியாம ஒண்ணும் பண்ணமுடியாதா இந்த ப்ளாட்ல?!!"
"சரி, மேல சொல்லு.. அதுக்கும் இன்னிக்கி நீ இப்படி ஓடி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இன்னிக்கு ஒருவருசம் ஆச்சு.. ராம் இன்னிக்கு இல்லை.. "
"ஆமாம்.." அந்த கறுப்பு வெள்ளியை எதற்கு நினைவுப் படுத்துகிறான் இப்போது?!!!"ஆனா, ராம் ரூமுக்கு வந்திருக்கான்.."
"டேய் சுரேஷ், என்ன உளர்ற? ஏதாவது பார்ட்டிக்குப் போய் நல்லா 'சாப்டுட்டு' வந்திருக்கியா? ராமை எப்படிப் பார்க்க முடியும்?"
"நான் ராமைப் பார்த்தேன்.. வழக்கமா நாங்க நின்னு தம்மடிக்கிற பால்கனியில் என் பக்கத்திலயே வந்து 'என்னடா.. என்னை மறந்துட்டு இங்க வந்துட்ட'ன்னு கேட்டுகிட்டு..."
இதற்குள் கமலா எழுந்து வந்து விட்டாள்.. "என்னாச்சு?" என்றாள் வெளிச்சத்திற்குப் பழகாமல் கூசும் கண்ணைக் கசக்கிக் கொண்டே.
"ஒண்ணும் இல்லை.. இவன் சொல்றான், ராமைப் பார்த்தானாம்!!"
"ராமையா? என்னது?" கமலாவின் தூக்கம் மொத்தமாகக் கலைந்தது, அந்த ஒரு வார்த்தையில். "நிஜமாவே பார்த்தியா சுரேஷ்?" என்றாள், பயந்த குரலில்.
ஏதேது, இதைக் கேட்டதற்கே இவள் ஜுரத்தில் விழுந்துவிடப் போகிறாளே என்று தோன்றியது..
"சுரேஷ், நீ ஏதோ விளையாடறயோன்னு தோணுது.. என்ன பிரச்சனை உனக்கு?"
"சுஜா, இந்த ராத்திரியில் உன்கிட்ட விளையாடி எனக்கு என்ன ஆகப் போகுது?!! நான் நிஜமாவே ராமைப் பார்த்தேன்.. என்கிட்ட பேசினான்.. திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துட்டேன்.. "
"சரி.. நீ ராமைப் பார்த்தேன்னே நம்பறேன்.. ஏதோ இன்னிக்கு ராமோட பிறந்த நாள், போன வருசம் பேசினது எல்லாத்தையும் நினைச்சிகிட்டு பால்கனியில் நின்னுகிட்டு இருந்திருக்கே.. அப்படி ஒரு பீலிங்.. இதுக்கெல்லாம் பயப்படலாமா? இவ்வளவு பெரிய பையனா இருக்கே.. என்னை விட நீ பெரியவன்.. நீ எல்லாம் கூட இருக்கன்ற தைரியத்துல தானே எங்க வீட்ல என்னை இவ்ளோ தூரத்தில் வேலை பார்க்க விட்டிருக்காங்க.. நீயே பயந்தா நியாயமா? "
"இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற? என் நிலைமைல நீ இருந்தா தெரியும்.. இப்படி எல்லாம் உபதேசம் பண்ணிகிட்டு இருக்க மாட்ட!!! டேய் ராம்.. இங்க கொஞ்சம் வந்து இந்த சுஜா முன்னாடி தரிசனம் குடுடா"
கீழே இருந்த அவனது அறையைப் பார்த்து அவன் சொல்லவும், கமலா பாய்ந்து வந்து சொன்னாள்:"ஏய். அதெல்லாம் வேண்டாம்.. அதான் சரின்னு வந்துடப் போறான்!!!"
இவர்கள் இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்த்த நான் கொஞ்சம் யோசித்தேன். "இங்க பாரு நீ ராமைப் பார்த்த.. சரி.. இப்போ நான் என்ன செய்யணும்? இங்க எதுக்கு வந்த?" என்று கேட்டேன் சுரேஷிடம்.
"என்னால என் ரூமுக்குத் தனியாப் போகமுடியாது.. தனியா இருக்கவும் முடியாது.. முடிஞ்சா நீயும் என்கூட வா.. இல்லைன்னா, என்னை இங்கயே விடு.. இப்படியே ஒரு ஓரமா படுத்துக்கிடறேன்.. என்ன சொல்ற?"
"நீ சொல்ல மாட்ட?!! இங்க ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான் தனியா இருக்கோம்.. இதுவும் பாச்சிலர்ஸ் வீடு மாதிரி தான்.. உன்னையெல்லாம் உள்ள விட்டா நல்லாத் தான் இருக்குமா? இல்லை அது நியாயமா? யோசிச்சி பாரு.."
"ஆனா சுஜா, ராம் வந்திருக்கான்னா, இவன் எப்படி அங்க போக முடியும்?"
ராம் என்னவோ ஒரு ரோந்துப் போலீஸ் மாதிரியும் இப்படி இரவு உலா வருவது அவனுக்கு முழு நேர வேலை மாதிரியும் கமலா சொன்ன போது எனக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
"சரி.. அப்போ உன் ரூம்ல உன் கூட இருக்க ஒரு ஆள் இருந்தா நீ ரூமுக்குப் போய்டுவியா?" என்றேன் சுரேஷைப் பார்த்து.
"சரி" என்று தயங்கித் தயங்கித் தலையாட்டினான் யோசனையோடு. திரும்பி கமலாவை நான் பார்த்த ஒரு பார்வைக்கே அவள் லேசாக நடுங்கியபடி, "நான் போக மாட்டேன்பா.. ராம் கடைசியா ட்ரீட் கேட்ட போது கொடுக்காம ஏமாத்திட்டேன்" என்றாள்.
தலையில் அடித்துக் கொண்டு சொன்னேன் "அடச் சீ.. உன்னை யாரு இப்போ போகச் சொன்னாங்க.. நான் போய் நாயுடுவை அழைச்சிகிட்டு வர்றேன்.. அவரு நிச்சயம் உதவுவாரு.. அதான் நீயும் வர்றியான்னு"
இருவருமே என்னோடு கீழிறங்கிச் சென்று நாயுடுவைப் பார்த்துப் பேச தயாராக இல்லை.
"நீ போய்ட்டுவா.. நாங்க ரெண்டு பேரும் இங்க உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கோம்.." என்றான் சுரேஷ்.
"சரி.. ஆனா, ராம் பத்தி இனி பேசக் கூடாது.. டீவி வேணா போட்டு பாருங்க" என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொண்டேன்.
(ராம், அந்த கறுப்பு வெள்ளி பற்றித் தெரிந்துகொள்ள....)
Monday, May 29, 2006
துளசி அக்காவுக்கு தாங்க்ஸ்!!!!
நுண்ணலை அடுப்பில் துளசி அக்கா தந்த செய்முறைப்படி சாதம் தயார்.. !!!
அக்கா சொன்ன சமையற்குறிப்பு இதோ:
மைக்ரோவேவ் ரைஸ் குக்கர் வாங்கிரணும். 1 கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணி. நான் அவ்வளோதான் ஊத்தறேன். ஆனா இது ஜாஸ்மின் அரிசிக்கு. பாசுமதின்னா 3 கப்.
100% பவர்லே 4 நிமிஷம், 70% பவர்லே 4 நிமிஷம், 9 நிமிஷம் 59% பவர்,அப்படிப் போட்டாத்தான் தண்ணி வழியாது.
இதில் ரைஸ் குக்கர் மட்டும் நான் வாங்கவில்லை..
மற்றபடி அக்கா சொன்ன பவர்/நிமிடக் கணக்கு அப்படியே பின்பற்ற, மல்லிப்பூ போல உதிரி உதிரியான சாதம் தயார்.
அக்கா, உங்களுக்கு என் ஸ்பெசல் தாங்க்ஸ்!!!:)
என் நன்றிகளைத் தெரிவிக்க, பலூனுடன் யானையாரை நியூசிக்கு அனுப்பியுள்ளேன்.. :) .. ஏர்போர்ட்டிலிருந்து ரிசீவ் செய்துகொள்ளவும். கடப்பாறையை எடுத்துப் போய்டாதீங்க, பயந்து ஓடிடப் போறாரு :)
கொத்தனார், ஜிரா கவனிக்க: நானும் ஒரு சமையற்குறிப்பு பதிவு போட்டுவிட்டேன் :)
Friday, May 26, 2006
ஓர் இரவில்...
Thursday, May 25, 2006
மது, என்னையும் வெள்ளாட்டுக்கு சேர்த்துக்குங்க.. :))
இதுவரை மதுமிதாவின் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்த்திரா விட்டாலும், ஒருத்தர் ஆசையா கேட்டும் சொந்தக் கதை சொல்லாம விட்டா எப்படி? அதனால் தான் இந்தப் பதிவு:
வலைபதிவர் பெயர்: பொன்ஸ்.. உங்க புத்தகத்துல போடும் அளவுக்கு சொந்தப் பேரு அவ்வளவு சூப்பரெல்லாம் இல்லை.. இங்க நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், சொல்ல விருப்பமில்லை :)
வலைப்பூ பெயர்: பொன்ஸ் பக்கங்கள்
சுட்டி(உர்ல்): http://poonspakkangkal.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாரும் தனியா அறிமுகம் செய்யலை.. ஏதோ ஒரு நாள் பொழுது போகாம நெட்ல சுத்திகிட்டு இருந்தப்போ அண்ணன் கைப்புவோட பதிவுல கால்(கை?) தவறி விழுந்துட்டேன்.. அத்தோட என் கணினிக்கும் rediff, the-hindu, thatstamil மாதிரியான தளங்களுக்குமான நட்பு சுத்தமா முறிஞ்சி, தமிழ்மணம், தேன்கூடு இவற்றிற்கு மொத்த குத்தகைக்கு விட்டாகிவிட்டது..
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 16 - மார்ச் - 2006 - அட நான் இன்னும் இங்கே apprentice தாங்க!!
இது எத்தனையாவது பதிவு: 25 (சங்கப் பணிகள் நீங்கலாக)
இப்பதிவின் சுட்டி(உர்ல்): எழுதி முடித்ததும் தானே தெரியும்?? முன்னாடியே அறிய வழியிருந்தால் சொல்லித்தாங்கப்பா :) http://poonspakkangkal.blogspot.com/2006/05/blog-post_25.html (எழுதி பிரசுரித்துப் பின் சேர்த்தது)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ் படிக்கப் பிடிக்கும்.. தவறில்லாமல் தமிழ் எழுதவும் பிடிக்கும்.. இங்கே எழுதப்பட்ட தமிழைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்து எழுதத் தொடங்கினேன்..
சந்தித்த அனுபவங்கள்: நிறைய.. பலவிதமான மனிதர்கள்.. நான் பார்த்திராத உலகங்கள்.. இதுவரை அதிகம் சிந்திக்காத பல கோணங்கள்.
பெற்ற நண்பர்கள்: நிறைய.. இணைய நண்பர்கள்(chat friends etc) என்னும் போது ஒரு வட்டத்துக்கும் வந்துவிடும் நட்பு, இது போன்ற பதிவுலக நண்பர்கள் என்னும்போது இன்னும் விரிந்ததாக இருக்கிறது.. அவர்கள் எழுத்தும், சிந்தனைகளுடனும் ஏற்படும் நட்பாதலின், இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.
கற்றவை: இதுவரை கற்றதும் இனியும் கற்கப் போகிறதும் அளவில் அடங்காதவை.. ஆர்வம் கொண்டவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் இங்கே சரியான தீனி இருக்கிறது...
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் ஒன்று தான் இங்கே இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.. கருத்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கருத்து சொல்பவரை எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை தமிழ்மணத்தின் ஆரோக்கியம் பெரிய கேள்விக் குறியே...
இனி செய்ய நினைப்பவை: பெரிதாக ஒன்றுமில்லை.. இன்னும் நிறைய கற்க ஆசை.. அவ்வளவுதான்..
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: உலகம் தெரியாத சின்னப் பெண் :)... இங்கே நடக்கும் வெட்டி அரசியலையும் வீணான வாதங்களையும் பார்த்து வருத்தப்படும் மற்றுமொரு வலைபதிவர்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: உங்கள் ஆராய்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. (என்னத்த சொல்லி என்னத்த பண்ண!! மது - இது உங்களுக்கு இல்லீங்க!! :) )
Wednesday, May 24, 2006
புதிய பூமி; பழைய வானம் தான்
முன்னுரை : இங்கே
இதெல்லாம் எழுத என்ன இருக்கு என்று தான் இத்தனை நாள் சும்மா இருந்தேன்.. அப்புறம் பார்த்தால், "எங்க இருக்கீங்க?" "என்ன பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு" எல்லா பக்கத்திலிருந்தும் கேள்விகளாக வந்து விழுவதால்... போதும் பில்டப்பு.. இனி மேட்டர்:
என்ன காரணமோ கடல் கடந்து வந்தது ஒன்றும் பெரிய மாற்றமாகத் தோன்றவில்லை. 24 மணி நேர விமானப் பயணம், 16 மணி நேர பேருந்து பயணங்களைவிட வசதியாகவே இருந்தது. பாரிஸில் இறங்கி ஏறிய போது, பக்கத்தில் ஆஜர்பெகிஸ்தானிலிருந்து (அதாங்க, நம்ம நன்மனம் ஊரு) வந்திருந்த ஒரு வக்கீல் தாத்தா வேறு கடலை போட்டுக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
நியூ யோர்க்கில் இம்மிக்ரேஷன் (தமிழில் என்ன?) கடந்து உள்ளே வரும்போது ஒரு நிம்மதி.. அங்கிருந்து, நான் தங்கப் போகும் ஊருக்கு ஒரு இணைப்பு விமானம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் முன்பே வந்து பெயர் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சட்ட திட்டங்கள் ஏதும் இல்லாமல், விமானம் புறப்படுவதற்கு ஐந்து நிமிடம் முன்பு ஓடி வந்து டிக்கெட் கொடுத்த (அங்க மட்டும் நேரத்துக்குப் போய்டுவோமா என்ன?!! :) ) என்னையும் உள்ளே விட்ட பின்னும் வேறு யாராவது வருகிறார்களா என்று காத்துக் கொண்டு இருந்ததைப் பார்க்கும் போது, நம்மூர் ஊர்பஸ்களின் நியாபகம் தான் வந்தது..
அடுத்து அவர்கள் காட்டிய வழியில் இறங்கிப் போனால், முதலில் பயணம் செய்து வந்த கடல் தாண்டி விமானத்தை[அதாங்க trans-oceanic] (200 இருக்கைகள்?!!) எண்ணிப் பார்க்கையில், 50 பேர் அமரக் கூடிய இந்த விமானம் ஒரு விளையாட்டுப் பொம்மை தான்.. சும்மா விளையாட்டு பொம்மை கணக்காக ஒரு நாலு விமானங்கள் ஒரே ஏறுவழியில் [boarding gate] இருந்தன.. ஒவ்வொன்றும் சில நிமிட இடைவெளியில் வெவ்வேறு இடங்களுக்குப் புறப்பட்டு போகும் விமானங்கள்.. இறங்கி வந்து ஊர் பெயர் சொன்னதும், ஊர்பஸ் கண்டக்டர் போலவே ஒருவர் "இதோ, இதுல ஏறிக்கம்மா" என்று கைகாட்டுகிறார். ஏறிய ஐந்து நிமிடங்களில், "இந்த வண்டி ..... ஊருக்குப் போகிறது, வேறு எங்காவது போக வேண்டியவர்கள் இறங்கலாம்" என்று அறிவிப்பு வேறே!!!
ஏற்கனவே, நம்ம ஊரில் கிளம்புமுன்பே நிறையபேர் எச்சரித்திருந்தது, "விமானத்தில் கைப் பைகளாகத் தூக்கிச் செல்லும் பைகளில் கொஞ்சம் துணியும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் கொண்டு செல்ல வேண்டும், மற்றவர்களின் பைகளுடன் சேர்க்கப்படும் செக்கின் பாக்கேஜுகள்(Checkin baggage) நிச்சயம் தொலைந்து விடும் அபாயம் இருக்கிறது.. ஒரு நாளேனும் சமாளிக்க வேண்டிய உடைகள் கைப்பையில் அவசியம் இருக்கவும்" என்பது தான். என்னடா நியூ யார்க் வரை இந்தப் பைகள் தொல்லையின்றி வந்து விட்டனவே என்று யோசித்ததால், என்கண்ணே தான் பட்டிருக்க வேண்டும்.. கொண்டுவந்த இரு பெட்டிகளில், ஊர்பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒன்றைக் காணவில்லை. போய் புகார் சொன்னால், "24 மணி நேரத்தில் உன் விலாசத்திற்கு வர ஆவன செய்கிறேன்" என்று சொல்லி, அதுவே ஒரு பெரிய உதவி போலச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.
இங்கே வந்து ஒரு நாளில் எனக்கு என் பை கிடைத்ததும், அடுத்த நாள் வந்த மூன்று பேருக்கு (மூணு பேரா வந்தா எப்டிங்க?!! அதான் நம்பர் வொர்க் அவுட் ஆகலை :) ) அவ்ர்கள் துணிமணி, சாப்பாடு எதுவும் இரண்டு நாள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்று அறிந்த போது, "அட நம்ம பரவாயில்லை" என்று தோன்றிவிட்டது..
ஊரில் இருந்து கிளம்பும் போது குக்கர் எடுத்து வைத்துக் கொண்டவள், குண்டு எடுத்து வைக்க மறந்தாச்சு, அட, எல்லாம் குக்கருக்குப் போடும் குண்டு தான்.. குண்டு இல்லை என்பதே, நல்ல பசி வேளையில், குக்கரை எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது.. நல்லவேளை இந்த ஹோட்டலில் மைக்ரோ வேவ் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.. இதுவரை சன்டீவி புண்ணியத்தில் வினோதினி மட்டுமே சமைத்து நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த உபகரணத்தை கொஞ்சம் நேரம் புரியாம பார்த்து விட்டு, ஹோட்டல்கார ஆட்களிடமே உதவி கேட்டு சமைத்து பார்த்தேன்.. சாதம் பூப்போல இல்லாவிட்டாலும் பிரியாணி அரிசி மாதிரி முழித்து முழித்துப் பார்க்கிறது. இதெல்லாம் கவைக்குதவாது என்று முடிவு செய்து இப்போது பழைய கால வழக்கப்படி சாதம் "வடித்து" சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. சீக்கிரம் குக்கருக்கு குண்டு வாங்கவோ, இல்லை ஒழுங்காக மைக்ரோவேவில் சமைப்பது எப்படி என்றோ தெரிந்து கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..
அட சொல்ல மறந்துட்டேனே, புதரகம்னு பேர் வச்சாலும் வச்சாங்க, இங்கே எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே புதர், புல்வெளி, மரம் தான்.. எப்படித் தான் இத்தனை மரத்தையும் வெட்டாம, ஒழுங்கா தண்ணி விட்டு வளர்க்கிறாங்களோ??!! பின்ன, ஹோட்டல்களில் கூட தண்ணியை இலவசமாகத் தருவதில்லை, இந்த மரம் செடி கொடிக்கெல்லாம் எப்படி விடறாங்க
மற்றபடி குறை என்றால், பெரிய குறை ஒரு தமிழ்ச் சேனல் கூட வருவதில்லை. தொ.கா ஒரு வேஸ்ட்!! வந்தா மட்டும் வேஸ்ட் இல்லையா என்று தோன்றினாலும் செல்வி, கே டிவி எல்லாம் பார்த்து கிட்டு இருந்த நமக்கு எப்படிங்க இந்த நரி நியூஸும்(Fox) வானிலை சானலும் போதும்?!!
பெரிய ஆறுதல், இலவச இணையம், 24 மணி நேரம்..
அப்புறம் இங்கே பார்த்த மற்றோரு ஆச்சரியம், விற்கப்படும் எல்லா உணவுகளிலும், அது தயிராக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் விலைப் பட்டியல் இருக்கோ இல்லையோ, கலோரி, விட்டமின் அளவு எல்லாம் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். மக்கள் சாதாரணமான சாப்பாடே சாப்பிட மாட்டாங்களா? எல்லாத்துக்கும் விட்டமின், மினரல் கணக்கு பார்த்து தான் சாப்பிடுவாங்களா என்ன? கஷ்டம்டா சாமி!!!
ஆகா, இவ்வளவு எழுதிட்டோமா?!! இங்க வந்து இதுவரை மூன்று நாள் தான் ஆச்சு என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்... பயம் வேண்டாம், ஒவ்வொரு மூன்று நாளும் இது மாதிரி கட்டுரைகள் தொடராது :)
Sunday, May 14, 2006
அம்மா என்றழைக்காத...
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், டிடியில் செவ்வாய்க் கிழமைகளில் நாடகம் போடுவார்கள். ரொம்ப அறுவையாக இருக்கும் என்று பல இடங்களில் கிண்டல் செய்யப்பட்ட செவ்வாய்க் கிழமை நாடகங்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பேன். ஒரே நாளில், ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் அது போன்ற நாடங்கள் இன்றைய மெகா சீரியல் காலங்களில் வரப் பிரசாதமாகவே தோன்றுகின்றன.
சரி விஷயத்துக்கு வருவோம். அதில் ஒரு நாடகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. பத்து வயதுப் பெண் ஒருத்தியின் பிறந்த நாள் விழா அது. பிறந்த நாளுக்கு அவளுடைய அப்பா கேக் எல்லாம் வாங்கி வைத்து விட்டார். அக்கம் பக்க வீட்டாரையும் அந்தச் சிறுமியின் நண்பர்களையும் அழைத்து விட்டார்கள். சிறுமி தன் தாயாருக்காகக் காத்திருக்கிறாள். "அம்மா ஏன்பா வரலை?" என்று நொடிக்கொரு தரம் வாசலுக்குச் சென்று பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
விருந்தினர்கள் வர ஆரம்பித்த காரணத்தால், அப்பா வந்து பெண்ணை அழைக்கிறார். "அம்மாவுக்கு திடீர்னு ஏதாவது வேலை வந்திருக்கும். நீ வந்து புதுச் சட்டை போட்டுக்குவியாம்" என்று சொல்லி சமாதானப்படுத்தி அவளின் பிறந்த நாள் உடை அணிவிக்கிறார். தலைவாரிப் பின்னிவிட்டு அலங்கரித்து, எல்லாம் முடித்த பின்னும் அம்மா வரவில்லை. சிறுமிக்கு மிகுந்த வருத்தம். மீண்டும் வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்க்கிறாள். அம்மா வரவில்லை ஆனால் எல்லா விருந்தினரும் வந்து விட்டதால் கேக்கை வெட்டுமாறு அப்பா சொல்கிறார்.
முடியாது என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் அந்தப் பெண் வெளியே ஓடிப் போய் அப்பாவின் ஸ்கூட்டரின் மேல் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுகிறாள். அப்பா விருந்தினர்களிடம் சொல்லிவிட்டு, பெண்ணைப் பார்க்க வருகிறார்.
"ஏம்மா ஓடி வந்துட்ட? " என்கிறார் அப்பா.
"அம்மா ஏன்பா இப்படி பண்றாங்க? இன்னிக்கு என் பர்த்டேன்னு அவங்களுக்குத் தெரியாதா? போனவாரம் ஆஷா பிறந்த நாள் வந்தபோது அவளோட அம்மா அவளுக்காக தானே கேக் செஞ்சி தந்தாங்க.. அம்மாவுக்கு என்மேல பாசமே இல்லைப்பா" என்று சொல்லி அழுகிறாள்.
அப்பா பொறுமையாக, பெண்ணைத் தேற்றிவிட்டு, 'உன் மேலும் தம்பி மேலும் அம்மாவுக்கு அதிக பாசம் உண்டு. அம்மா காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் வேலை செய்வது உனக்கும் உன் தம்பிக்காகவும் தான். உன் மேல் அவளுக்கு அதிக பாசம் இருந்தாலும் ஏதோ வேலை அதிகமாக இருப்பதால் அவரால் வராமல் போயிருக்க வேண்டும்.' என்று சின்னக் குழந்தைக்குப் புரியுமாறு தெளிவாகச் சொல்லுவார்.
சிறுமி இது கேட்டுத் தெளிவாகி, கண்ணைத் துடைத்துக் கொண்டு கேக் வெட்டப் போவதாகவும், கடைசி நொடியில் அம்மா வந்து விடுவதாகவும் கதை முடியும். இதில் அப்பாவாக சிவக்குமார் நடித்திருப்பார். அந்தக் குழந்தை நீனா என்று நினைக்கிறேன்..
என்னை இந்தக் கதை ரொம்பவும் பாதித்ததற்குக் காரணம், நானும் அப்போது அந்தச் சின்னப் பெண்ணின் நிலையில் இருந்ததால் தான்.. என் அம்மாவும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு அம்மாவிற்குக் காத்துக் கொண்டிருந்தது உண்டு.
வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் சின்ன வயதில் வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடுகிறது. என் தோழிகள் பலரின் தாயார் வீட்டிலேயே இல்லத்தரசிகளாகவே இருந்தது மிகவும் உறுத்தலான ஒன்று. அதிலும் கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில், வீட்டில் அம்மா இல்லாதது ஒரு பெரிய குறை.
அப்படி வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்குப் பெரிய பக்க பலம் அவரவர் கணவன்மார்கள் தான். இந்தக் கதையில் வரும் அப்பா போல் என் அப்பா எனக்கு அறிவுரைகள் கூறவில்லை என்ற போதும், என் அம்மா வேலைக்குச் செல்வதிலும், அதிலும் வங்கியில் வேலை செய்வதும் பெருமைக்குரிய விஷயமாக எண்ணச் செய்திருந்தார்கள். கதை நாயகர் போலவே என் அப்பாவும் எங்கள் இருவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து விட்டு, எங்களைப் பள்ளிக்குக் கிளப்பிவிட்டுவிட்டுத் தான் அலுவலகம் செல்வார்.
சில சமயம் என் அம்மா அலுவலகக் கோபத்துடனோ, அலைச்சலால் உடல் சோர்வுடனோ வீடு வரும்போது அதை அறியாமல் நாங்கள் இருவரும் அவரைப் பல கேள்விகள் கேட்டுக் கோபப்படுத்தியது உண்டு. இன்று நிலைமை தலைகீழ்.
இப்போதெல்லாம், என் அம்மா வேலை ஓய்வில் வீட்டில் இருக்கிறார். நான் அலுவலகம் முடிந்து எப்போது வருவேன் என்று வாசல் பார்த்து அவர் அமர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் போது என் சிறு வயது நாட்கள் நினைவு வருகின்றன. என்றேனும் வேலை முடியாமல் தாமதமாக வீட்டுக்கு வரும்போது அம்மாவுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.
வாழ்க்கையில் பல பாடங்கள் மிகத் தாமதமாகத் தான் தெரிகின்றன. சில வருடங்களுக்கு முன் அம்மாவை அவ்வளவு கேள்வி கேட்டு, அதற்கு அவர் கோபமாக பதில் சொன்ன பொழுதுகளில் "அம்மாவுக்கு என் மேல பாசமே இல்லை" என்று தங்கையிடம் புலம்பியதை எண்ணும் போது இன்று வருத்தமாக இருக்கிறது.
இன்றைக்கு அன்னையர் தினமாம்; என் அம்மா மாதிரி வெளியில் வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தைகளையும் சமுதாயப் பொறுப்புணர்வோடு வளர்க்கும் அனைத்து அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் தந்தையர்களுக்கும் இதே நாளில் வாழ்த்துக்கள்..
இதோட முடிச்சிக்கறேங்க.. இன்னிக்கி எங்க அம்மாவை வெளியில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கேன்.. :)
Tuesday, May 09, 2006
11. தேறுமோ தேர்தல் கணிப்பு (வெ.வ.வா)
சங்கத்தின் தலை கைப்புள்ள தலைமை ஏற்கும் இலக்கண மன்றம்
கைப்பு: ஏம்மா பொன்ஸு, இப்போ, எலக்கணம் கத்து இங்ஙன இருக்குற பசங்கள்லாம் என்ன பண்ணப் போறாங்க? எதுக்கு இந்தக் கூட்டம்?
சிபி: இல்ல தல, ஏதோ இப்ப கத்துகிட்டாலாவது, அடுத்த தேர்தல்ல நல்லபடியா திருத்தமா அறிக்கை விடலாம்ல..
கைப்பு: சரி சரி.. என்னாத்த சொல்லப் போற?
பொன்ஸ்: இன்னிக்கு நாம பாக்கப் போறது, சொல் இலக்கணம்.. அதுல புணர்ச்சி விதிகள்.
ஜொ. பாண்டி: அக்கா, அற்புதமான டாபிக்கா எடுக்கறீங்கக்கா.. நீங்க அறுக்கப் போறீங்கன்னு வந்தேன்.. ஆற்றலரசி பொன்ஸ் வாழ்க.
பேராசிரியர் கார்த்திக்: வாழ்க வாழ்க.!!!
பொன்ஸ்: ரொம்ப உணர்ச்சி வசப்படாத பாண்டி, இது, ரெண்டு சொல்லைச் சேர்க்கும் போது எங்கெல்லாம் ஒற்று வரணும், எங்க வரக் கூடாதுங்கற பாடம் இது.
ஜொ. பாண்டி: அவ்வளவு தானா?!! ம்ஹும்.. (சோகமாகப் பாட ஆரம்பித்து விடுகிறார்) குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்!!!
பொன்ஸ்: நண்பர்களே, பாண்டி இப்போது உருகி உருகிப் பாடிய பாட்டையே எடுத்துக் கொள்வோம்:
கூவச் சொல்லுகிற: இந்தப் பதத்தில், கூவ என்பது நிலைமொழி, சொல்லுகிற என்பது வருமொழி. நிலைமொழி கடைசி எழுத்தும், வருமொழி முதல் எழுத்தும் எப்படிச் சேருதுங்கறதுக்கான விளக்கம் தான் புணர்ச்சி விதி.
கூவச் சொல்லுகிற இதைப் பிரிச்சா, கூவ + ச்+ சொல்லுகிறன்னு வரும். இந்த 'ச்' ஒற்று. வினையெச்சத்துக்கு முன்னாடி க, ச, த, ப இந்த எழுத்துக்கள் வந்தா, ஒற்று வரும்.
பார்த்திபன்: அம்மணி பொன்ஸு, வினையெச்சத்தப் பத்திப் பேசி உனக்கு நீயே வினைய வரவழைக்கிற.. இப்போ இந்த "குயிலப் பிடிச்சு, கூண்டில் அடைச்சு கூவ" இதுல, பிடிச்சு, அடைச்சு எல்லாமும் வினையெச்சம் தானே? இதுல ஏன் உங்க ஒற்றர்கள் வரலை?
பொன்ஸ்: நல்ல கேள்வி பார்த்தி!!
கட்டத்துரை: கேள்வி புரியலைன்னா நல்ல கேள்வின்னு சொல்லிடுவீங்களே!! நல்ல தல, நல்ல தொண்டர்..
பொன்ஸ்: இந்த விதிக்கு ஒரு விலக்கு இருக்கு. 'அ','இ','ய்' இதுல முடியும் வினையெச்சங்களுக்குத் தான் ஒற்று மிகும். இங்க 'பிடிச்சு', 'அடைச்சு', இவை எல்லாம் 'உ' வில் முடியுது. அதான் இதுக்கு ஒற்று வரலை.
பெருசு ஏதோ இல்லை என்று தலையாட்டியபடி இருக்கிறார்.
பொன்ஸ்: பெருசு, என்னாச்சு? என்ன யோசனை?
பெருசு: குயிலப் பிடிச்சு.. இதுல இருக்கிற 'ப்'ஐப் பத்தி சொல்லாமயே விட்டுப் போச்சே!!!
பார்த்தி (சரளாக்காவிடம்): பெருசு, நம்மாளா, வவாசவா?
சரளாக்கா: எப்படி இருந்தா என்ன?.. மடக்கிட்டாரில்ல...
பொன்ஸ்: அது சரியான சந்தேகம்.
சரளாக்கா: ம்ஹும், வெளக்கம் சொல்லுன்னா.. !!!
பொன்ஸ்: குயிலப் பிடிச்சு, இதை குயிலை+ ப்+பிடிச்சுந்னு பிரிக்கலாம். இதுல இரண்டாம் வேற்றுமை விகுதி 'ஐ' வருதில்லையா, இரண்டாம் வேற்றுமையிலும்(ஐ), நான்காம் வேற்றுமையிலும்(கு) ஒற்று வரும். அதனால தான் அங்க ப் வருது..
கைப்பு: எலே பாண்டி, நீ பாடின ஒரு பாட்டுல இத்தனை விதியா!!
அண்ணனைப் பாராட்டி அடுத்த பாட்டு பாடு பாக்கலாம்.
பாண்டி: "சிங்கமொன்று புறப்பட்டதே " என்று பாட ஆரம்பிக்கிறார்
பார்த்தி(இதைப் பொறுக்காமல்): "அடிவாங்க, சிங்கமொன்று புறப்பட்டதே-
உதை வாங்க சிங்கமொன்று புறப்பட்டதே"
என்றபடி கைப்புவை அடிக்க ஓடுகிறார். கைப்பு பயந்து போய் அப்படியே எஸ்கேப்பாக, ஜொ.பாண்டிக்கு அவரது உடன்பிறப்பிடமிருந்து அழைப்பு வருகிறது புதுத்துணி வாங்க வேண்டும் என்று. "இதோ வந்துட்டேன் தங்கச்சி" என்று அவரும் ஓட எல்லாரும் கட்சியின் விதிப்படி மூலைக்கொருவராகச் சிதறி ஓடுகிறார்கள்.
கவிதா, நீங்க சங்கத்துல என்ன பண்றாங்கன்னு கேட்டுகிட்டே இருந்ததினால சங்கத்தின் உருப்படியான செயல்பாடுகளைப் பதிவு பண்ணிட்டேன்.
அப்படியே இது "வெண்பா வடிக்கலாம் வா"வோட தொடர்ச்சிங்கறதுனால, இந்த வார ஈற்றடி
"தேறுமோ தேர்தல் கணிப்பு"
இது நம்ம வெண்பா:
ஊருளோர் பொய்களை ஒட்டிக் கணித்தாலே
தேறுமோ தேர்தல் கணிப்பு?!!!