<< சுரேஷ், சுஜா பற்றி அறிய இங்கே.. >>
ராம் ஆறு மாதங்களுக்கு முன் எங்களுடன் வேலை செய்தான்; ஆறு மாதங்கள் மட்டுமே செய்தான். ரொம்ப நல்லவன். கொஞ்சம் எங்கள் அனைவரையும் விட வயதில் பெரியவன். ஆனால் அந்த மாதிரி வித்தியாசம் எதுவும் பார்க்க மாட்டான். நன்றாக பேசுவான். பயந்த சுபாவம். இந்தப் பசங்களுடன் ஒன்றாகப் பழகுவான். நாலு வருடம் சீனியர் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் இருக்கும் அவனது செயல்பாடுகள்.
அத்தனை கலந்து பழகியவன் மனதில் பெரிய ரணம் ஏதோ இருந்திருக்கிறது, எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.
ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை; சிவாவும் கமலாவும் ஊருக்குப் போயிருந்த அன்று, சுரேஷுக்கும் இரவு வேலை இருந்த அன்று எந்த காரணமும் எழுதி வைக்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனான் ராம். அன்று இரவும், பன்னிரண்டு மணிக்கு சுரேஷ் இதே போல் தொலைபேசியில் அழைத்தது, இருவருமாகச் சென்று நாயுடு உதவியுடன் கதவை உடைத்துத் திறந்தது, கண்ணெதிரில் காணும் முதல் இறப்பாதலால் பயந்து போய், கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்து அவன் அம்மாவுக்குத் தெரிவித்தது... அது ஒரு கறுப்பு வெள்ளி!!!
யார் யாரோ வந்து எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தார்கள். 'ராமுக்குத் தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன காரணம் இருந்தது?' என்று. எங்கள் நால்வருக்குமே தெரியவில்லை. கொஞ்ச நாளாக அவன் பேசியது, அவனுக்கு கடைசியாக வந்த மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, அவன் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு சோர்ந்து விட்டு விட்டோம்.
"அதான் போய்ச் சேர்ந்துட்டானே.. என்ன காரணம் இருந்தால் என்ன?" என்ற எண்ணம் வருவதற்குள் மூன்று மாதம் ஓடிவிட்டது!!
சிவாவும் சுரேஷும் வீடு மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லி இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு மாறிப் போனார்கள். அதன்பின் இன்று தான் சுரேஷ் தன்னந்தனியாக இருந்திருக்கிறான். அதனால் தான் பயந்து விட்டான் போலும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாக இருக்க நேரிடும் போதெல்லாம் சுரேஷுக்கு மட்டும் இந்த தோற்றம் ஏற்படுவது தொடர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் "ராம் வந்தான், சிகரெட் கேட்டான்" என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.
சரியாக பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் ராம் வருவான் -கனவோ நினைவோ, ஏதோ ஒன்று. அப்புறம் சுரேஷுக்குப் பயம் இருக்காது.
"அதென்னடா பன்னிரண்டிலிருந்து ரெண்டு? என்ன ஷிப்ட் அது?" என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்போம்.
ஒரு நாள் யாரும் இல்லாத ஒரு பன்னிரண்டு மணிக்கு என்னை மறுபடி எழுப்பி விட்டு தூக்கத்தைக் கலைத்த போது சுரேஷ் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னான். ஏன் அவனுக்கு மட்டும் ராமிடம் இத்தனை பயம்?
"உனக்குத் தெரியாது சுஜா, ராம் இறந்ததுக்கு நீயும் நானும் தான் காரணம்.."
"டேய் என்னடா உளர்ற?"
"ராம் உன்னை விரும்பினான்.. அவன் எழுதி இருந்த கவிதை எல்லாம் உன்னைப் பத்தித் தான்.."
"போதும்.. உளறாத.. அப்படி ஏதாச்சும் இருந்தா என்கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டானா?"
"இல்லை.. நீயும் நானும் பழகறதை அவன் வேற மாதிரி எடுத்துகிட்டான்.. அன்னிக்குக் கூட, அந்த வெள்ளிக்கிழமை, அவன் இறப்பதற்கு முன்னாடி வாரம், நீயும் நானும் சாப்பிடப் போகும் போது அவன் ஒரு மாதிரி பார்த்தான் நினைவிருக்கா?"
"என்னடா பார்த்தான்? ஒண்ணும் சொல்லலியே!! நீ அவனோட சாப்பிட வர்றேன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்ததும் அவனை விட்டுட்டு வந்திட்ட!! அதான்"
"இல்லை.. வியாழக் கிழமை என்கிட்ட கிட்டத் தட்ட சொல்லிட்டான்."
"என்ன சொன்னான்? "
"ஏதோ பிரச்சனைன்னு சொன்னான்.. தனக்குன்னு யாருமே இல்லைங்கிறது அவனோட எண்ணம்.. அவனுக்கு யாரைப் பிடிச்சாலும் அவங்களுக்கு அவனைப் பிடிக்காம போய்டுதாம்"
"சரி தான்.. இதெல்லாம் விடு, என்னைப் பத்தி என்ன சொன்னான்?"
"சுஜான்னு பேர் சொல்லி ஒண்ணும் சொல்லலை.. "
"உன்னை ஏதாவது சொன்னானா?"
"இல்லை.."
"அப்புறம் என்னடா?"
"பாதி சொல்லிகிட்டு வந்தான்.. நாளைக்குப் பேசலாம்னு சொன்னான்.. அவனைச் சாப்பிட கூட்டிகிட்டு போயிருந்தா, அன்னிக்கு அவனோட இன்னும் கொஞ்சம் நேரம் செலவு செஞ்சிருந்தா, அவனுக்கு தற்கொலை மாதிரியான எண்ணம் தோன்றியே இருக்காது.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!!" சுரேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.
"சுரேஷ், அழாதடா.. என்னத்துக்கு இப்படி அழற?"
"இல்ல சுஜா.. நானும் நீயும் சேர்ந்து ஒரு உயிர் போகக் காரணமாய்ட்டோம்!!"
"டேய், நீன்னு வேணா சொல்லிக்க. என்னை ஏண்டா இழுக்கிற?"
ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருக்கவேண்டும். இந்த மாதிரி நான் சொன்னவுடன், சுரேஷ் தலை நிமிர்த்திப் பார்த்தான்.
"ஏய், நான் என்ன விளையாட்டுக்குச் சொல்றேன்னு நினைக்கிறியா?"
"இங்க பாரு சுரேஷ், உனக்கும் எனக்கும் இடையில் எந்த உறவும் இல்லைன்னு ராமுக்குத் தெரியும்.. இல்லைன்னா நம்ம கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. என்னைத் தானே விரும்பினான், என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்லை? சரி, அதை விடு.. இப்போ உனக்கு இதுல என்ன பங்கு இருக்குன்னு நினைக்கிற? யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம இறந்து போகும் அளவுக்கு முடிவை எடுக்கிறவங்களை என்ன செய்ய முடியும்? "
"இல்ல சுஜா.. அன்னிக்கு நான் அவன்கிட்ட பேசி இருந்தா எல்லாம் சரியாப் போயிருக்கும்.. அவன் அதைத் தான் எதிர்பார்த்தான்."
"சரி சுரேஷ்.. உன் புலம்பலை உன்னோட வச்சிக்கோ.. இதுல என் பெயரை இழுத்து விடாத.. நீயாச்சு ராமாச்சு.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை"
"காட் ப்ராமிஸ் சுஜா, நான் என்ன உன்னை ஏமாத்தவா சொல்லிகிட்டு இருக்கேன்?!!"
அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அப்புறமும் அவன் குற்ற உணர்ச்சியைப் போக்க நிறைய முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. பன்னிரண்டு மணிக்குத் தனியாக இருந்தால் மட்டும் தான் ராம் இவனைப் பார்க்க வருகிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை.
மன நல மருத்துவர், லோக்கல் கோயில் பூசாரி எல்லாரையும் பார்த்துவிட்டாகி விட்டது. "தனியா விடாதீங்க!" என்று சுலபமாக முடித்துக் கொண்டார் மருத்துவர்.
என்னிடம் உண்மையைச் சொன்ன ஒருமாதத்தில் ஊர் மாற்றிக் கொண்டு அம்மா அப்பாவுடன் போய்விட்டான்.
* * * * *
ஆறு வருடங்கள் இருக்கும் இது நடந்து. திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது திடீரென்று அம்மாவிடமிருந்து சுரேஷின் தொலைபேசி எண் கிடைத்தது. "இங்கு தான் இருக்கிறான்.. ஒருவார்த்தை பேசு" என்னும் அன்புக் கட்டளையுடன்.
"ஏய் சுஜா!! என்ன பண்ற? எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்க?"
"சூப்பரா இருக்கேன்.. நீ இந்த ஊர்ல தான் இருக்கன்னு அம்மா சொன்னாங்க.. நேர்ல பார்ப்போமா? எங்க இருக்கன்னு சொல்லு.. நானே வர்றேன்"
சொன்னேன்; இரவு உணவுக்கு வந்தான். என் கணவரிடம் ஒரு அரை மணி நேரம் தொழில் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பேசிவிட்டு, என்னிடமும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாக எல்லாம் முடிந்து சாப்பிட்டு, பேசி முடித்து கிளம்பும் போது மணி பதினொன்று நாற்பது. இன்னும் பல மைல் தொலைவு போகவேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்னும்போது தான் எனக்கு ராம் பற்றிய இவனின் பயம் நினைவு வந்தது. இப்போது கேட்டு மறந்து போனவனை நினைவுப் படுத்துவானேன் என்று விட்டு விட்டேன்.
மறு நாள் போன் செய்தேன். "சுரேஷ், பத்திரமா போய்ச் சேர்ந்தியா?"
"இதைக் கேட்கவா போன் பண்ணின?!! நல்லா வந்து சேர்ந்தேன்.. இங்க எல்லாம் பொதுவா வண்டி ஓட்டறது தானே!!"
"இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தான்னா, பயந்திருக்கப் போறியேன்னு..."
"அட.. சுஜா.. நீ இன்னும் அதை மறக்கலியா..!! அதெல்லாம் எப்பவோ போயாச்சு அந்தப் பயம்.. "
"எப்படி சுரேஷ்?"
"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்?"
"அப்போ இந்திய நேரம் இரவு பன்னிரண்டு மணிக்கு?"
"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே!!"
நான் ஒன்றும் சொல்லவில்லை..
"என்ன சுஜா? ஆச்சரியமா இருக்கா? வந்த புதுசுல இப்படித் தான் நினைச்சேன்.. அத்தோட கொஞ்ச நாளில் ராமின் நிலைக்கு நம்ம காரணம் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.. அவனுக்கு அறிவில்லை.. அதான் இப்படி ஒரு முடிவெடுத்துட்டான்.. நம்ம என்ன செய்ய முடியும்?!!"
அது சரி.. இதத் தானேடா நானும் மொதல்லேர்ந்து சொல்லிகிட்டு இருக்கேன்!!!