Wednesday, September 06, 2006

பொன்ஸ் என்னும் வாசகி

என் வாழ்க்கையின் மிக அழகான விபத்துகளில் ஒன்று வலைப்பதிவுகளில் தழிழைக் கண்டுபிடித்தது. அதை விடப் பெரிய விபத்து சந்திரா அத்தைக்குக் கிடைத்த பரிசு என்று சொல்லலாம்.

பெரிய இலக்குகள் ஏதும் இல்லாத என் இலக்கியப் பயணம் தொடங்கியது என் அத்தைப் பாட்டியின் கதைகளில் தான். பெயர் தெரியாத 'ஈ' ஒன்றைப் பற்றிய செவிவழிக் கதையை, சொல்லிக் கொடுத்தவருக்கே சொந்த சரக்கு சேர்த்து, மழலை மாறாத வயதிலேயே சொல்லிக் காட்டியதில் தொடங்கி, கல்கி, சாண்டில்யனில் மூழ்கி முத்தெடுக்கும் சக எண்பதினர் போலவே தொடர்ந்து, இன்று தமிழோவியத்தின் சிறப்பு ஆசிரியர் என்பது நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி.

என் கதை கவிதைகளுக்கு என் தங்கையும், பாட்டியும், பொறுக்கி எடுத்த சில நண்பர்களுமே வாசகர்களாக இருந்த போதும், என்னை எழுத்தாளராக நான் ஒருபோதும் அடையாளப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை. எழுதுவதை விட வாசிப்பது சுகமானது.

கோகுலம், சிறுவர் மலர் என்று ஆரம்பித்த என் வாசிப்பு, மெல்ல மெல்ல வீட்டுக்கு வரும் எல்லா விதமான வெகுஜன பத்திரிக்கைகளில் தொடங்கி, காபிப் பொடி அரைக்கும் கடைகள், அப்பாவுடன் காத்திருக்கும் முடி திருத்தகங்கள், சுண்டல் மடித்தக் காகிதங்கள் என்று ஆறு வயதில் கிட்டப் பார்வைக் குறையைக் கண்டு பிடிக்கும் வரை என்னைச் சுற்றிலும் உலகம் புத்தகங்களால் நிறைந்திருந்தது.. ஆங்கில வழிக் கல்வி பாட புத்தகங்களில் இருந்தாலும், புற உலகம் தமிழால் தான் நிரம்பி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது என் ஆர்வம் மட்டுமே.. தங்கை படித்த ஆங்கில கோகுலத்தைக் கூட நான் திருப்பிப் பார்த்ததில்லை.

பள்ளியிறுதிக்குள் என் பாட்டியின் புத்தக சாலையில் நான் இரண்டாம் முறையாகப் படிக்காத ஒரு புத்தகம் கூட இல்லாமல் போக, அதிக இலக்கியச் செறிவில்லாத என் மற்ற உறவினர் வீட்டு பாக்கெட் நாவல்களையும் விடாமல், பரண் ஏறிப் படித்துவிட்டிருந்தேன். கல்லூரிக் காலங்களில் கவனம் கொஞ்சம் மாறி, திரைப்படம் பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. கல்லூரி முடிந்து மீண்டும் வேலைக்கு என்று தமிழ்நாடு தாண்டிச் சென்றபோது நண்பர்கள் உதவியால் ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுகமாயின.

மென்பொருள் வேலையில் பெஞ்சைத் தேய்த்த சில கணங்களில் திண்ணை, தமிழோவியம், மரத்தடி முதலான இணைய பத்திரிக்கைகளையும் வாசித்திருக்கிறேன். மென்பொருள் துறையில் இருக்கும் இன்னுமொரு புத்தக வாசகியாக இருந்திருக்க வேண்டியவள், எதேச்சையாகக் கண்டு பிடித்த பதிவுலகில் தடுக்கி விழுந்து இன்று சிறப்பாசிரியராக பதவி உயர்வு.

சிறப்பாசிரியரோ, சிரிப்பாசிரியரோ.. வேறு வழியில்லை; இந்த வாரம், நம்ம ராஜ்ஜியம்! இலக்கியவாதிகளும், பத்திரிக்கை ஆசிரியர்களும் அலங்கரித்த இந்த நாற்காலியில் நானும் அமர்ந்துவிட்டேன்... உங்கள் ஆதரவுடன்..

கோப்புக்காக

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

மௌல்ஸ், தமிழோவியம் சிறப்பாசிரியர். லிங்கில் இருக்கு பாருங்க :)