Thursday, March 22, 2007

போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா?

அல்லது

நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?

போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

எனவே, தலைப்பில் லேசான குழப்பம் இருப்பதை உணர்ந்து, அதில் தெளிவைக் கேட்டுப் பெற்ற இனியன் மற்றும் முத்துலட்சுமியின் பின்னூட்டங்களுக்குப் பின்னான பேச்சுக்களையே கருத்தில் கொண்டு தான் இந்த விவாதத்தின் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும்.

ஒரு இடுகைக்கு நிறைய பின்னூட்டம் வருகிறது என்றால், அந்த இடுகையின் கருத்து நிறைய பேருக்குப் போய்ச் சேருகிறது. ஆக, நிறைய பேர் பின்னூட்டம் இடும் வண்ணமான, நிறைய பேர் ஒப்புக் கொள்ளும் விதமான வார்ப்பிலேயே நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார் முத்துலட்சுமி. முத்துலட்சுமி கருத்துக்கு ஓரளவுக்கு ஒட்டி வருகிற, அதாவது நிறைய பின்னூட்டம் வேண்டும் என்று ஒரு பதிவர் நினைத்தால் அவர் நகைச்சுவைகளை மட்டுமே எழுதலாம் என்று பேசியிருக்கும் நிலா, நடுவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் தலைப்புத் திருத்தங்களையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

எதிரணியில் பேசியிருப்பவர்கள், ராமச்சந்திரன் உஷாவும் இனியனும். "குழந்தைகள் வளரும் கால கட்டங்களில் ஆரம்பகால பாராட்டுகளாக பின்னூட்டங்கள் அவசியம், ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர், நம் கருத்துக்களுக்காக நமது வலைப்பதிவு என்று மாறுவது மிக முக்கியம்" என்ற உஷாவின் வாதம் ரொம்பவும் ஏற்புடையாதாக தோன்றுகிறது. முக்கியமாக, இனியன் சொல்லும்,

"மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா? என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?"


போன்ற பகுதிகள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டுபவை. அதிலும்
"நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம். நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்."
என்பது மிக நல்ல புரிதல். இதை எழுதுபவர் இன்னமும் வலைப்பதிவு வாசகர் தான் என்பதை எண்ணிப் பார்க்கையில், ஆச்சரியம் கூடுவதும் உண்மை; வாழ்த்துக்கள் இனியன்.

இதன் பின்னரும்,
"நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள்"

என்னும் முத்துலட்சுமியின் சமரசம், எடுபடவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

தாமதமாக உட்புகுந்து அடித்து ஆடி முதல் வருகையிலேயே வெற்றி பெற்ற இனியனுக்கு என் வாழ்த்துக்கள்; சீக்கிரமே, உங்க பதிவிலும், உங்களின் ஆக்கங்களைக் காண ஆசை என்ற கோரிக்கையுடன்..

[பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை ஒட்டி இந்தப் பட்டிமன்றத்தை நடத்துவதற்கு யோசனையும் இடமும் கொடுத்த சிந்தாநதிக்கு நன்றி :)) முதலிலேயே சொன்னால் எல்லாரும் ஓடிப் போயிடப் போறாங்களோன்னு போட்டி முடிந்த பிறகு... :)) ]

8 comments:

சென்ஷி said...

வெற்றி பெற்ற இனியனுக்கு வாழ்த்துக்கள்..

சென்ஷி

✪சிந்தாநதி said...

நன்றி பொன்ஸ்

பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை ஒட்டி இந்த தலைப்பை தேர்வு செய்து தந்து நடுவராக பங்கேற்றமைக்கு நன்றி...

Anonymous said...

அய்யோ.. நானா..!
நல்லா சொல்லி இருக்கேனா?
தலைகால் புரியவில்லை.வலை உலகில் நான் பெறும் முதல் வெற்றி இது.

நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

சிந்தாநதி, நல்ல வேளை சொன்னீங்க, மறந்திட்டேன், சேர்த்திடறேன் :))

✪சிந்தாநதி said...

நடுவர் யாரென்பதை சஸ்பென்சாக வைத்து வருவதால் ஆரம்பத்திலேயே பதிவில் அதை நான் சொல்லவில்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனியன் வாழ்த்துக்கள்..

தோக்கறகட்சிக்கு பேச
ஆள் யாரும் வரலேன்னா பட்டி
மண்டபம் சிறக்காதேன்னு
நான் கொஞ்சம் பேசிக்கிட்டு
இருந்தேன். இனியன் ஆரம்பதிலிருந்தே
பாயிண்ட் சரியா வச்சுட்டு இருந்தார்
இருந்தாலும் தொடர்ந்து
மறுக்கனுங்கற புலிவால் புடிச்ச
கதையா தான் வாதம் பண்ணிட்டு
இருந்தேன். :)

அபி அப்பா said...

எனக்கு ஏதும் உண்டா? பாத்து போட்டு குடுங்க:-)

இனியன் வாழ்த்துக்கள்.
ரன்னர் சகோதரி முத்துலெட்சுமிக்கும் வாழ்த்துக்கள்,

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ் சரியான தேர்வு. வாழ்த்துக்கள் இனியன்