Friday, March 16, 2007

அப்படி எல்லாம் விட்ருவோமா?!

இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/

வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.

எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, 'துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!' என்று நான் கேட்க, அவை 'இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்' என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]

ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் poons என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். "இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்" என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த் என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;))

ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே - இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)

பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் பாலபாரதியைத் தான் சொல்ல வேண்டும். "இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு" என்று நினைத்தோ என்னவோ, "அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க", "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, 'அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச' இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு 'ஹலோ' தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :)). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]

அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் சிபி. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். "நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு" என்று.. நான் எதார்த்தமாக, "நீங்க தான் பார்த்திபனா?" என்றேன். "அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று அவர் கேட்க, "அட, நெசமாவே நீங்கதானா?!", "நானாத் தான் உளறிட்டனா?" என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)

அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, தருமி என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, "நான் உங்க பதிவு படிச்சதே இல்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, "நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?" என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)

அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு கந்தசாமியிடமிருந்து. "எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. " என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், "எங்கூருக்கு வந்திருக்கீங்களா?" என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, 'மதியக்கா' என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, "அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!" என்று :-". மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)

யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.

ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.

அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..




என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்..
தொல்லை தொடர்கிறது <:-P

55 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒரு வருஷம் ஆச்சா? வாழ்த்துக்கள். இந்த வருஷம் என்னென்ன எழுதணுமுன்னு ப்ளான் போட்டாச்சா?

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் பொன்ஸ். ஒரு வருடம்தான் ஆகிறதா? நிறையவே எழுதிய மாதிரி அல்லது எப்போதும் உங்கள் பெயரை எங்கேயாவது பார்க்கிற தோற்றம் எனக்கு மட்டும்தானா? வாழ்த்துக்கள்.

வைசா said...

வாழ்த்துகள் பொன்ஸ். இன்னும் நிறைய எழுதுங்கள்.

வைசா

மலைநாடான் said...

எங்கும் நிறைந்த பொன்ஸ்! எதிலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Premalatha said...

வாழ்த்துக்கள் பொன்ஸ். ஒருவருடம்தான் ஆகுதா? நான் தமிழ் ப்ளாக்கு வந்தப்பவே நீங்க இருந்தமாதிரி தோணுது எனக்கு. அங்க சுத்தி இங்க சுத்தி எல்லாரையும் படிக்கறதுக்குள்ல நீங்க வந்திருப்பீங்க. அதான், புதுசுன்னு நினைச்சிருந்திருக்கமாட்டேன்.

வாழ்த்துக்கள்.

Premalatha said...

இப்போத்தான் போய் செக் பண்ணினேன் என்னோட ப்ளாக்க, எனக்கு இன்னும் ஒரு வருசம் ஆகல (தமிழ்ல). அட!
உங்களுக்கப்புறம்தான் நிசமாவே வந்திருக்கேன் (மார்ச் 29 - என் முதல் தமிழ் பதிவு!!).

ramachandranusha(உஷா) said...

ஆரம்பத்தில் இருந்துப்படித்துவருவதால் எழுத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது. செந்தமிழும் நா பழக்கம் என்பதுப் போல எழுத்து செம்மையுற இத்தகைய முயற்சிகள் தேவை. வாழ்த்துக்கள் பொன்ஸ்.

siva gnanamji(#18100882083107547329) said...

இன்று மதியம் வரையில் உங்கள்
பதிவைக் காணோம். எனவே ராம் பதிவில் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்!

சிவஞானம்ஜி

Jayaprakash Sampath said...

அட.... ஒரு வருசம் தான் ஆச்சா நீங்க வலைப்பதியத் துவங்கி? நீங்க என்னமோ, ரொம்ப நாளா நீங்க எழுதீட்டு இருக்காப்பல ஒரு ஃபீலிங் :-). இல்லியா? அப்ப சரி... புடிங்க என் வாழ்த்துக்களை....

இராம்/Raam said...

கடைசி பாப்பா படம் ஸோ கியூட் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் ///

உண்மையில் நெஞ்சைப் பிளக்க வைக்கும் சம்பவம்தான் அது...

முதல் வருட அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிதக்கும்வெளி said...

பிடியுங்கள் பூச்செண்டை. (பாமெல்லாம் இல்லை). தொடர்ந்து வலையுலகிற்குப் பல சேவைகள் புரிந்து தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் பல தங்கக்காசுகளைப் பதித்து, படிப்பவர்களையெல்லாம் மெண்டலாக்க வாழ்த்துக்கள் தோழி.


/என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. /

அது மட்டும்தானா?

/ "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர்./

உங்கள்கிட்டயும் அந்தாள் அப்படிச் சொன்னாரா?

பொன்ஸ்~~Poorna said...

நன்றி கொத்ஸ், பத்மா, வைசா, மலைநாடன், பிரேமலதா, உஷா, சிஜி, பிரகாஷ், ரசிகவ், சுகுணா..

கொத்ஸ், திட்டமெல்லாம் ஒண்ணுமில்லை.. ஏதாவது எழுத வேண்டியது தான்.

பத்மா,
//எப்போதும் உங்கள் பெயரை எங்கேயாவது பார்க்கிற தோற்றம் //
நல்ல வேளை.. எங்க மேனேஜர் வலைபதிவெல்லாம் படிக்காதவரை சந்தோசம் :)

பிரேமலதா,
அப்போ நீங்க எனக்கு ஜூனியரா :)) நீங்க ரொம்ப நாளா இருக்கீங்கன்னு நான் நினைச்சிட்டிருந்தேன் :)

உஷா,
உண்மை தான். :) நிறைய மாறியிருக்கு பொன்ஸ் பக்கங்களும் தான் :)

சிஜி,
ஒரு மாற்றம் தான், ராம் பதிவு அப்புறமா நம்ம பதிவு :)

பிரகாஷ், எனக்குக் கூட ரொம்ம்ம்ம்ப நாளா இங்கிருக்கிற மாதிரி தோணுது :)

இராம் :)))

ரசிகவ், :) ஆமாம் :)) ரொம்ப பிளந்து போச்சுன்னா, நல்ல டாக்டரா பாருங்க :) இதுக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் வேணும்ங்கிறது :)

சுகுணா, //தொடர்ந்து வலையுலகிற்குப் பல சேவைகள் புரிந்து தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் பல தங்கக்காசுகளைப் பதித்து, படிப்பவர்களையெல்லாம் மெண்டலாக்க //
இதை நான் செஞ்சிட்டா, அப்பால நீங்க என்ன செய்வீங்க? :)

//உங்கள்கிட்டயும் அந்தாள் அப்படிச் சொன்னாரா? // ஆமாமாம், எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர்ட்ட சொல்லிருக்கார்.. உங்கள்ட்டயுமா? ;)

சுந்தர் / Sundar said...

வாழ்த்துக்கள் பொன்ஸ் . ஒரு வருடத்தில், வலையுலகில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தை உருவாக்கி விட்டீர்கள் ! பெரிய ஆனைதான் போங்க !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு ஆண்டுக்குள் பொன்ஸ் உங்களோட
பெயரை வலையுலக வரலாற்றில் பொன்னெழுத்துல பதிச்சிட்டீங்க.
மேன்மேலும் புகழடைந்து
வாழ்க வளமுடன்.

செல்லி said...

வாழ்த்துக்கள்,பொன்ஸ்.
இப்ப எழுதியிருக்கிறவை இன்னும் நல்லாயிருக்கு.

பொன்ஸ் மேலும் மேலும் எழுத மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!.
அன்புடன்
செல்லி

மணியன் said...

ஒருவருடம் தான் முடிந்ததா என எல்லோரும் உணர்வதுபோலவே நானும் :)
உங்கள் இடைவிடாத பின்னூட்டங்களும் பதிவர்களுடனான தோழமை கலந்த இடைமுகமும் பதிவுகளின் பன்முகத் தன்மையும் இந்த குறுகிய காலத்திலேயே இரண்டாவது Top 5 பெண்பதிவராக இடம் பிடிக்க காரணமாயின. மேலும் சீரும் சிறப்பும் எய்த 'சக்தி' கொடுக்க வாழ்த்துகிறேன்!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் சொல்ல வந்ததை நிறையப்பேர் சொல்லிட்டாங்க. ஆனா, நானும் சொல்லுவேன். ;)

ஒரு வருஷம் மட்டுமே ஆகியிருக்குன்னு நம்ப முடியலை பொன்ஸ். அப்டீன்னா, நீங்க எங்களை எந்தளவு துன்பத்துக்குள்ளாக்கியிருக்கணும். ஹ்ம்ம்?

தொடர்ந்து துன்பத்துக்குட்படுத்த வாழ்த்துகள்! ;)

உங்களைக் கவிதை எழுத வேண்டாமென்று சொன்ன பாலாவிற்குச் சிலை எடுக்க யோசனை. :D

-மதி

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பொன்ஸ்.
ஒரு வருடந்தானா ஆகிறது.?
யானை இல்லையா:-)
சீக்கிரமே வளர்ந்து விட்டது.
இன்னும் நிறைய எழுதி வளர வேண்டும். எல்லோருக்கும் உதவி செய்யும் அழகைச் சொல்லவில்லையே.பதிவுலக சீனியர் அம்மாவுக்கு இந்த ஜூனியரின் வாழ்த்துகள்.

பெருசு said...

ஐயகோ

இப்பூவுலகையும் தமிழ்மணத்தையும்
ஒரு வருடமாக படைப்புகளால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்
பொன்ஸூக்கு வாழ்த்துக்கள்.
(எத்தனை யுகத்துக்கு தாங்கணுமோ).

யானை யானைதான்.

VSK said...

அட! அந்த துயர சம்பவம் நிகழ்ந்து அதற்குள் ஓராண்டு ஓடிவிட்டதா?

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!

உங்கள் துயரத்தில்[!!] நானும் பங்கு கொண்டு வாழ்த்துகிறேன்!
:))

பங்காளி... said...

நாம ஒரு ஆறுமாசம் சீனியர் அம்புட்டுத்தான்.....

இங்கே நிரம்பியிருக்கும் இத்தனை கூச்சல்களுக்கிடையே...தனித்துவமான சில குரல்களில் நீங்களும் ஒருவர் என்பது நிஜம்.

இன்னமும் உயரங்கள் போக வேண்டியவர் நீங்கள்...நிச்சயம் போவீர்கள்.....அதற்கு என்னுடைய அட்வ்வான்ஸ் வாழ்த்துக்கள்.....

ஆதிபகவன் said...

பொன்ஸ்.

உங்களுடைய எல்லா முயற்சிகளும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் பொன்ஸ். ஒரு வருஷம் தான் ஆச்சா ? .....

இன்னும் நிறைய எழுதுங்கள்

Anonymous said...

ம்.. என்ன சொல்லுறது?

வருத்தங்கள்!!!

Premalatha said...

//அப்போ நீங்க எனக்கு ஜூனியரா :)) //

யெஸ். :))

Anonymous said...

ஒரு வருஷத்துக்குள்ள இவ்வளவு கலக்கலா ... நானும் நீங்க ரொம்ப நாள இருக்கீங்கன்னு நினைச்சிக்கிட்டுருக்கேன் பொன்ஸ் ...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jazeela said...

ஒரு வருஷந்தான் ஆகுதா!? பழந்திண்ணுக் கொட்டப்போட்ட ஆளுன்னுல நெனச்சேன்! வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பொன்ஸ். உங்க முதல் பதிவைப் படிச்சு அழுதுட்டேன் போங்க.. இதுக்குப் போய் ஏன் இவ்ளோ பயந்தீங்கன்னு புரியாம தான் :-)

ilavanji said...

poons பொன்ஸ் ஆன கதை இதுதானா?! நால்லாருமா தாயீ!!

உங்களை கவிதை எழுதவேணாம்னு நிப்பாட்டுன அந்த அண்ணாச்சி பேச்ச கேக்காதீக.. ஆனா டெம்ப்ளேட்டை அடிக்கடி மாத்தாதீங்கனு சொன்னதுல விசயம் இருக்கு! எல்லாம் ட்ரேட்மார்க் ரகசியம்தான் :)

முதலாண்டு முடிவுக்கு வாழ்த்துக்கள்! வரும் ஆண்டுகளிலும் எழுத்தாளினியாக ஆகிவிடாமல் பதிவாளினியாகவே இருக்க வாழ்த்துக்கள்! :)

வெற்றி said...

அடடா, ஒரு ஒன்றரை மாதங்கள் தமிழ்மணப் பக்கம் வரவில்லை. அதுக்குள்ள எத்தனை பேர் ஆண்டு விழாவெல்லாம் கொண்டாட துவங்கியாச்சு.:))

பொன்ஸ், தமிழ்மணத்தில் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களின் பல பதிவுகளைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். உங்களின் பதிவுகள் மூலம் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்களின் பல பதிவுகள் மூலம் பல அரிய விடயங்களை அறிந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றிகள்.

தமிழ்மணத்தில் உங்களுக்கு என்று ஒரு தனியான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது.

ஒரு சின்ன feedback. தப்பாக எடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் ஆரம்ப காலப் பதிவுகளில் இருந்த தமிழ்மொழி ஆளுமை, வேகம், மொழியின் அழகு போன்றவை சமீப காலமாக வரும் பதிவுகளில் குறைந்து வருகின்றது போன்ற ஒரு தோற்றம் என் மனதில் எழுகிறது. சிலவேளைகளில் என் பார்வையில் கோளாறு இருக்கலாம். அல்லது உங்களின் பணிச்சுமை, அல்லது தமிழ்மணத்தில் உங்க்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்கூட காரணமாக இருக்கலாம்.

எதுவாக இருப்பினும், நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எழுதி என் போன்றோரின் வாசிப்புப் பசிக்குத் தீனி போட தமிழன்னை துணைபுரிவாளாக!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் பொன்ஸ் :)

கண்மணி/kanmani said...

ஒரு வருஷம்தானா பூங்கோதை[பூங்குழலி?]நிச்சயம் பூ வில் ஆரம்பிக்கும் பேருதனே.ஆமம் படத்தில் யரு கு.பூ வா?

கௌசி said...

திரும்பியப் பக்கமெல்லாம் 'பொன்னாக மின்னி' என்னைப் பயப்பட[பொறாமைப்பட] வைத்த சகோதரியே தொடரட்டும் உம் பணி

கோபிநாத் said...

பொன்ஸ் அக்கா...

வாழ்த்துக்கள் !!!! வாழ்த்துக்கள் !!!!வாழ்த்துக்கள் !!!!

நிறைய எழுதுங்கள்..

யாத்ரீகன் said...

maasathuku oru thaba site template maathuveengala ? ovoruthadavaiyum romba naazh kalichu varumbodhu.. idhu inoru site-ah-nu thona vaikuthu :-))

avlo regular-ah endha blog-aiyum naan track panna mudinjathila.. samayam kedaikumbothelaam padichavaigal nerayavey karuthai kavarnthu irukuthu..

good luck..

(sorry tanglish-la type panrathuku.. valakam pola adikadi environment maaritey iruku.. ovoru muraiyum tamil set pani mudichathum pudhu environment vandhurum.. )

மங்கை said...

பொன்ஸ்..பார்த்தீங்களா...நீங்க தான் சீனியர்..:-))...என்னோட ஆண்டு விழாக்கு இன்னும் 2 மாசம் இருக்கு...

வாழ்த்துக்கள் பொன்ஸ்...

பொன்ஸ்~~Poorna said...

சுந்தர், முத்துலட்சுமி..
// உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தை//
//வலையுலக வரலாற்றில் பொன்னெழுத்துல //
இருங்க இருங்க.. இதென்ன அரசியல் மேடையா! இந்தச் ஜோடாவக் குடிச்சிட்டு உட்காருங்க பார்க்கலாம் :))

நன்றி செல்லி, வல்லியம்மா, பங்காளி, ஆதிபகவன், மதுரா, ஜெஸிலா, செல்வநாயகி, கப்பி பய, கௌசி, கோபிநாத், மங்கை

மணியன், அந்த இட்லிவடை டாப் 5இல் நான் வந்தது எனக்கே ஆச்சரியம் தான் :)

//உங்களைக் கவிதை எழுத வேண்டாமென்று சொன்ன பாலாவிற்குச் சிலை எடுக்க யோசனை.// மதி, இது ஒரு சதி!! இருங்க ரெண்டு காக்காய பிரெண்ட் பிடிக்கிறேன் சீக்கிரமே ;)

//எத்தனை யுகத்துக்கு தாங்கணுமோ// பெருசு, இருங்க, பெருவுக்கே யானைய அனுப்புறேன் :)

//உங்கள் துயரத்தில்[!!] நானும் பங்கு கொண்டு வாழ்த்துகிறேன்!//
எஸ்கே :)

ஜெயஸ்ரீ,
//ஒரு வருஷம் தான் ஆச்சா ? ..... // :) இந்த ஆச்சரியத்தைப் பதிவு செய்ய மட்டுமே எழுதியது இந்தப் பதிவு :)

தொடர் அனானி, என்னத்தப் பண்ண?! விதி வலியது ;)

சேது, நானே அழுதிட்டேன். இருங்க அங்க ஒரு முதல் பதிவு போடுவீங்க இல்ல? அப்ப வச்சிக்கிறேன் ;)

இளவஞ்சி வாத்தியார்,
//உங்களை கவிதை எழுதவேணாம்னு நிப்பாட்டுன அந்த அண்ணாச்சி பேச்ச கேக்காதீக..//
அச்சிச்சோ.. இப்போ கவிதைகளைச் சுத்தமா நிறுத்திட்டேனே.. முடிஞ்சா செய்வோம் :)
//எல்லாம் ட்ரேட்மார்க் ரகசியம்தான் :) //
அது சரி, ட்ரேட்மார்க்கே வேணாம் எனக்கு :) அடுத்த டெம்ப்ளேட் ரெடி பண்ணிட்டே இருக்கேன். ரொம்ப நாளா இந்தப் பச்சைக்கலர் வார்ப்புருவில் என் யானைக்கு ரொம்ப போர் அடிக்குதாம் :)
//வரும் ஆண்டுகளிலும் எழுத்தாளினியாக ஆகிவிடாமல் பதிவாளினியாகவே இருக்க வாழ்த்துக்கள்! :) //
முயற்சி செய்யுறேன் :))

வெற்றி, உங்களை ரொம்ப நாளா காணமேன்னு பார்த்தேன். பதிவு பக்கமே வரலையா? :)

அடடா, ஒரு ஒன்றரை மாதங்கள் தமிழ்மணப் பக்கம் வரவில்லை. அதுக்குள்ள எத்தனை பேர் ஆண்டு விழாவெல்லாம் கொண்டாட துவங்கியாச்சு.:))

//உங்களின் ஆரம்ப காலப் பதிவுகளில் இருந்த தமிழ்மொழி ஆளுமை, வேகம், மொழியின் அழகு போன்றவை சமீப காலமாக வரும் பதிவுகளில் குறைந்து வருகின்றது போன்ற ஒரு தோற்றம் என் மனதில் எழுகிறது. //
உண்மையோ என்ற சந்தேகம் வந்தாலும் வெற்றி, இப்போதும் கூடியவரை தமிழில் எழுத முயன்று கொண்டே தான் இருக்கிறேன். நிறைய சொற்களுக்கு நான் பயன்படுத்தும் தமிழே, ரொம்பவும் அநியாயத் தனித்தமிழா இருக்கு என்று புகார்கள் வருகின்றன சில சமயம் :) ஏதோ ஒரு பதிவில் நண்பர் ஒருவர் சொன்னது போல், "கவலையின்றி, மனதில் தோன்றுவதை எழுதுவது" என்பது குறைந்துவிட்டதாக உணர்கிறேன். கொஞ்சம் சோம்பேறித்தனமும் காரணம். நிவர்த்திக்க முயல்கிறேன் :) இது போல் என்னை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கக் கூடிய உங்களின் பின்னூட்டங்களை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்; ரொம்பவும் நன்றி :)

கண்மணி, நல்ல முயற்சி :). சிம்பிளா என் ப்ரோபைலைத் தட்டிப் பார்த்திருக்கலாம் :)))

யாத்ரீகன், ஹி ஹி.. செய்ய ஒண்ணும் இல்லாத போது, எழுத எதுவும் தோணாத போது, வார்ப்புரு போர் அடிக்கிறதா தோணும் போது, இப்படி பல காரணங்கள். அடிக்கடி மாற்றுவது உண்மைதான் :)

சேதுக்கரசி said...

//இருங்க அங்க ஒரு முதல் பதிவு போடுவீங்க இல்ல? அப்ப வச்சிக்கிறேன்//

அச்சச்சோ :-)))))

ஜி said...

அடேங்கப்பா... ஒரு வருசம்தானா??

நான் என்னமோ பல காலமா எழுதிட்டு இருக்குறவங்கன்ல நெனச்சேன்.. அந்த அளவுக்கு அசுர வளர்ச்சி :)

வாழ்த்துக்கள்.
அப்புறம் நன்றி... நான் பதிவெழுத ஆரம்பித்தபோது, பீட்டா தமிழ்மணம் பிரச்சனையில் உங்கக்கிட்டத்தான் உதவி கேட்டேன். :)

Anonymous said...

வாழ்த்துக்கள் :) இன்னும் நிறைய எழுதுங்க...

பினாத்தல் சுரேஷ் said...

பேர் வைச்சவன் பேர் சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கறதைப் பாத்தா பெருமையா இருக்கு :-)))

ஜிகினா குறைத்து, (டெம்ப்ளேட், யானைப்படம், வெட்டிச்சுடல்), சரக்கு அதிகரித்து வரும் வருடங்களில் படுத்த வாழ்த்துஸ்.

உண்மைத்தமிழன் said...

ஏம்மா ஒருத்தர்கூட புரியற மாதிரியே எழுத மாட்டீங்களா? போன்ல பேச வேண்டிய மேட்டரையெல்லாம் இணையத்துல அள்ளி விட்டுட்டிருக்கீங்க.. புதுசா உள்ள நுழைஞ்சிருக்கிற எங்களுக்கெல்லாம் தலையே சுத்துது.. எதைப் பத்திப் பேசுறீங்கன்னே புரியலை.. அம்மா பொன்ஸ் அவர்களே.. மன்னிச்சுக்குங்க.. நீங்க ஒரு பொம்பளைன்ற மேட்டரே எனக்கு, இந்த பக்கத்துக்கு வந்த பின்னாடிதான் விளங்குச்சு. அவ்வளவு அக்கிரமம் பண்ணிருக்கீங்களே..? இனிமே எந்த வூட்ல பூந்தாலும் மொதல்ல அவுங்களோட வாழ்நாள் சாதனையைப் படிச்சிட்டுத்தான் கமெண்ட்டே அடிக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன்.. வரட்டா? இனிமே இப்படி அப்பப்ப வந்து சவுண்ட் விடுவேன்.. இந்த தம்பிக்கும் ஒரு இடம் கொடுத்திருங்க..
அன்புடன்
தமிழ்சரண்

தருமி said...

அதான பார்த்தேன்...நாமெல்லாம் இப்படி இருக்கிறப்போ இந்தப் பொண்ணு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் இப்படி பாப்புலரா ஆகிட்டாங்கன்னு.. இப்போதான புரியுது.. மொத பதிவில 'மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தே தெரிஞ்சுக்குவாங்களாம்' அப்டின்றது மாதிரி எம் மொத பதிவுக்குக் கண்ணே கண்ணு; ஒண்ணே ஒண்ணுன்னு உங்களுக்குப் பேரு வச்சவர் மட்டும் வந்திருக்காரு. உங்களுக்குப் பாருங்க மொதப் பதிவுக்கு 8 பேரு.. அப்பவே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு உங்க 'அவதாரத்தை'ப் பத்தி ...

நல்லா இருங்க'
நிறைய்ய்ய்ய்ய்ய எழுதுங்க; எழுதிக்கிட்டே இருங்க..
வாழ்த்துக்கள்

//தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான்//

ஆமா, பொன்ஸ். நானும் விரட்டிப் பார்த்தேன்; மூணு ஆளுகள் ஆரம்பிச்சாங்க; மொத இல விட்டதோட சரி..தூங்கப் போயிருச்சுக. நேத்து கூட லி.ஸ். வித்யாகூட பேசும்போது இப்படி ரெண்டு மூணுபேரு மட்டுமே மதுரையில் மந்திரிச்சி விட்ட கோழியா சுத்திக்கிட்டு இருக்கோமேன்னு பேசிக்கிட்டோம் ...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பொன்ஸ்.

எனக்கும் நீங்க ரொம்ப நாளா இங்க இருக்கிற மாதிரி தான் உணர்வு. பல காரணங்கள் அதற்கு. :-)

உங்கள் தனித்தன்மையோடு இன்னும் பல பரிமாணங்களில் இடுகைகள் இட வாழ்த்துகள்.

கானா பிரபா said...

எனக்கு ஆரம்பத்துல பொன்ஸ் ஆணா பொண்ணா என்ற குழப்பம் இருந்தது. பதிவுலகில் ஒரு வருஷம் நீங்க சாதிச்சதே ஆனை பலம் தான்;-) தொடருங்கள்

வினையூக்கி said...

ஒரு வருட நிறைவுக்கு பாராட்டுக்கள். உங்கள் பெங்களூர் பயணம்தான் நான் உங்கள் பதிவில் படித்த முதல் இடுகை என நினைக்கிறேன்.

கார்த்திக் பிரபு said...

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்

Anonymous said...

ஆகா! பொன்ஸக்கா,

உங்க எழுத்துக்களை படித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், நீங்க 1 வருடம் முன்னாடித்தான் எழுத ஆரம்பித்தீர்கள் என்பது நம்ப கடினமாகத்தான் இருக்கு.

வாழ்த்துக்கள்....

துளசி கோபால் said...

யம்மாடி............இந்தப் பதிவு எப்படிம்மா மிஸ்ஸாகிப் போச்சு என் கண்ணுலே இருந்து?

நல்லவேளை இப்பவாச்சும் பார்த்தேனே!

என்ன நம்பவே முடியலை...... வருசம்தான் ஆச்சா?

வாழ்த்துக்கள் பொன்ஸ்.

என் யானைகளைக்கூட உங்களுக்குத்தான் உயில்லே எழுதிவச்சுருக்கேன்.

வெற்றி said...

பொன்ஸ்,
ஒரு சின்னச் சந்தேகம். கேட்கிறேனே என்று தயவு செய்து கோவிக்காதைங்கோ.:))

நீங்கள் தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்கிறீர்கள். ஆனால் உங்கள் தன்னறிமுக விபரத்தைப்[profile]பார்த்த போது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.

-------------------------------
User Stats
On Blogger Since May 2002
Profile Views 7,177
---------------------------------
அதாவது நீங்கள் 2002 ம் ஆண்டு வைகாசி[மே] மாதம் Blogger கணக்கு ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறது.

அப்ப 2002ம் ஆண்டு Blogger கணக்கை உருவாக்கிவிட்டு, கடந்த வருடம்தான் பதிவுகள் எழுதத் தொடங்கினீர்களா?

மிக்க நன்றி.

சேதுக்கரசி said...

வெற்றி.. நானும் தான் போன வருசம் பிளாக்கர் கணக்கு போட்டேன். ஆனா இன்னிக்கு வரைக்கும் பதிவு போட்ருக்கேனான்னு பார்த்தா.. ஊகூம் :-)))

பொன்ஸ்~~Poorna said...

ஜி, தூயா, தருமி, குமரன், வினையூக்கி, வேதா, அனானி, நன்றி

சுரேஷ்,
//ஜிகினா குறைத்து, (டெம்ப்ளேட், யானைப்படம், வெட்டிச்சுடல்), சரக்கு அதிகரித்து //
யூ டூ? :))

தமிழ்சரண்,
//இந்த தம்பிக்கும் //
உங்க ப்ரோபைல் பார்த்தேன்; தம்பியா?! வேணா பெரிய மனசு வச்சி அண்ணாச்சின்னு சொல்லிக்கிறேன்..

பிரபா,
//பதிவுலகில் ஒரு வருஷம் நீங்க சாதிச்சதே ஆனை பலம் தான்//
அது சரி :)

கார்த்திக் பிரபு,
டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு ஒரு டெம்ப்ளேட் நன்றி..

துளசிக்கா,
யானைக்கு நன்றி; [நல்லவேளை நீங்களே எழுதிட்டீங்க ஹி ஹி :))] என்னடா, உங்களைக் காணமேன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன் :)

வெற்றி,
தமிழ்ப்பதிவுக்கு வந்து ஒருவருடம் தான் ஆச்சு.. அதுக்கு முன்னால் நண்பர்களுடன் ஆங்கில குழு ப்ளாக் ஒன்றில் இருந்தேன். அங்க ஒண்ணும் எழுதல்லாம் இல்லை.. சும்மா, கிடைச்ச இடத்தில் எல்லாம் துண்டு போட்டு வைக்கும் வழக்கம் இருந்தது அப்போ அதான் :-D

MSV Muthu said...

congrats for anniversary! ஒரு வருஷம் தான் ஆச்சா? நம்பவேமுடியல!