Saturday, February 24, 2007

நீலக் குழந்தை..

இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம் பிரச்சனை செய்யும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் அது போன்றதொரு குழந்தையை நேரில் காண நேரிடும் என்று நினைத்திருக்கக் கூட இல்லை..




குழந்தை ப்ரியதர்ஷினியின் அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை என்ற மடல் வந்த போது, உடனுக்குடன் நினைவுக்கு வந்தது என்றென்றும் அன்புடன் பாலா தான். பாலா ஏற்கனவே ஸ்வேதாவுக்கும், லோகப்ரியாவுக்கும் இதே போன்ற பிரச்சனைக்கு உதவி செய்திருந்த காரணத்தால் அவருக்கே எழுதிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஏனோ, அவரிடம் சேர்ந்திருக்கும் நிதியில் இந்தக் குழந்தைக்கு உதவ, மீண்டும் திரட்டாமலேயே, முழுமையாக பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

பாலாவிடம் பேசியபோது, நம்மில் யாராவது நேரடியாக நிலைமையைக் கண்டு வந்து உண்மையாகவே உதவி தேவையான ஆள் தானா என்பதைப் பார்த்து அறிந்து உதவுவதே சாலச் சிறந்தது என்று புரிந்தது. "பாத்திரம் அறிந்து" உதவி செய்ய நானும் பாலபாரதியும் முகப்பேர் செரியன் இதயநோய் மருத்தவமனையில் இருந்த குழந்தை ப்ரியதர்ஷினியைப் பார்க்கப் போனோம்.

விசிட்டர் பாஸ், ஒரே ஒருவர் தான் போகலாம், என்பது போன்ற கடல்களைக் கடந்து, குழந்தைகள் வார்டில் இருந்த பிரியதர்ஷினியையும் அவளது பெற்றோரையும் சந்தித்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. மூன்று வயது பிஞ்சுக் குழந்தை; இதயத்தில் ஓட்டை, மற்றும் நல்ல இரத்தம் கடத்தவேண்டிய ஒரு வால்வு, கெட்ட இரத்தத்தில் கலப்பது, என்று மருத்துவர்களுக்குச் சவாலான பிரச்சனை தான் என்றார்கள். எட்டு மணி நேரம் போல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், மற்ற எமர்ஜென்ஸி கேஸ்களுக்கு இடையில், நாளை நாளை என்று தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது இந்தக் குழந்தையின் சிகிச்சை.

குழந்தை துவண்டு போய் இருந்தது. அம்மாவின் இடுப்பில் இருந்தவளின் வலது கையில் ஊசி குத்திய அடையாளம்; இரத்தப் பரிசோதனைக்காக எடுத்திருப்பார்கள். விரல் நகங்கள் எல்லாம் திட்டு திட்டாக கருப்பு; முகம், உடல் கூட ஓரளவுக்கு கருத்தே இருந்தது. நிறைய antibiotic மருந்துகளால் இந்த நிலை என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் எ.அ.பாலா தான், ப்ளூ பேபி என்ற பதம் வந்ததற்கே இந்தக் கருப்பு நிறங்கள் தான் காரணம் என்றார். ஓ.. ப்ளூ பேபி என்பது இது தானா! பாவம் குழந்தை!

கோயமுத்தூரைச் சேர்ந்த இந்தக் குடும்பம், பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே பெண்! தெரிந்தவர்கள் யாருமே இல்லாத சென்னைக்கு வெறும் சிகிச்சைக்காக போய் வந்து கொண்டிருக்கிறார்கள். கோவையில் ஏதோ தொழிற்சாலையில் காவல் வேலை பார்த்து வரும் தந்தை மூர்த்தி, வீட்டை அடமானம் வைத்து, பணியிடத்தில் கடன்/உதவி பெற்று அறுவை சிகிச்சைக்கான இரண்டு லட்சத்தை ஏற்கனவே செலுத்தி இருக்கிறார். அது தவிர, சென்னையில் அவர்கள் பணம் கேட்டு மனு போட்ட சில ட்ரஸ்ட்கள் முப்பதாயிரம் வரை சேர்த்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் மருத்துவமனையில் தங்கும் செலவு, மருந்துகள், சோதனைகளுக்கான செலவு என்று தேவைகள் அதிகம் என்று தான் தோன்றுகிறது.

எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்த போது, தோன்றியது, "ஏழைக் குழந்தைக்குப் பணக்கார வியாதி!" என்பது தான்.

மறுநாள் எ.அ.பாலாவும் ஒருமுறை நேரில் சென்று குழந்தையையும் அதன் தந்தையையும் பார்த்துவிட்டு வந்து பேசினார். "Genuine case" தான் என்று எங்கள் எல்லாருக்குமே தோன்றியதால், இந்தப் பதிவையும் இட்டிருக்கிறார்.

முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமாய்க் கேட்பதற்கே இந்தப் பதிவு...

9 comments:

பத்மா அர்விந்த் said...

நீலக்குழந்தை பற்றி முன்பு விக்கிபபசங்க பதிவில் பின்னூட்டம் ஒன்றிற்கு பதில் சொன்னதாக நினைவு.
நல்ல ஒரு செயல் பொன்ஸ்.

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி பொன்ஸ்...

பொன்ஸ்~~Poorna said...

நீலக் குழந்தை பற்றிய உங்கள் பின்னூட்டம் படித்ததில்லை பத்மா.. தேடிப் பார்க்கிறேன்..

சேது, நன்றி :)

Anonymous said...

Can anyone update current status of the child's health.

மனதின் ஓசை said...

கொடுமை. என்ன பாபம் செய்தது அந்த சின்னஞ்சிறு குழந்தை?

நம்மாலானதை செய்வோம். நல்லபடியாக விரைவில் குணமடையும் என நம்புவோம்.

பொன்ஸ்~~Poorna said...

அனானி, இன்று தான் குழந்தைக்கு ஆபரேஷன் என்று சொல்லி இருந்தார்கள். இன்று மாலை நேரில் சென்று பார்க்கவிருக்கிறோம்.

பார்த்துவந்து எழுதுகிறோம்...

ச.சங்கர் said...

பொன்ஸ்

மொத்தம் எவ்வளவு பணம் சேர வேண்டும், யார் முன்னின்று( co- ordinate) செய்யப் போகிறார்கள் போன்ற விவரங்களையும் குறிப்பிட்டு விடுங்கள் வங்கிக் கணக்கு ,மெயில் ஐ.டி மற்ற விவரங்களுடன்...பணம் அனுப்ப வசதியாக இருக்கும்

அன்புடன்...ச.சங்கர்

ச.சங்கர் said...

எனது போன அவசர பின்னூட்டத்தில் நான் கேட்டிருந்த அனைத்து தகவல்களும் எ அ பாலா பதிவில் இருப்பதை பின்னர்தான் படித்தேன் :)
நண்பர்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டாம்தானே பொன்ஸ் :))

பொன்ஸ்~~Poorna said...

சங்கர்,
அவசரமாக இட்டாலும், பின்னூட்டங்களுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் :)