சோழிங்க நல்லூர்
மே 15, 2006
சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரில் பிரத்யங்கரா தேவி கோயில் மிகப் பிரசித்தம். பிரத்யங்கரா மற்றுமன்றி சித்திவினாயகர், முச்சந்தி வினாயகர், ஆக்சென்சர் அம்மன் (அதாங்க அந்தக் கம்பனி வாசல்ல பந்தல் போட்டு வச்சிருக்காங்களே) முதலான சிலபல சக்திவாய்ந்த தெய்வங்களும் உள்ளன.
இப்படிப் பட்ட ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த தலத்தில் தான், ('தமிழ்மண'க்கும் நேரத்தில் மட்டும்) செய்யும் தொழிலே தெய்வம் என்னும் 'கொள்கை'ப் பிடிப்புடைய பொன்ஸின் அலுவலகமும் உள்ளது. இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலத்திற்கு, தமிழ்ப் பதிவுலகின் பிஞ்சில் பழுத்த ஆன்மீகச் செம்மலும், தமது மர்மமான மயிலாருடன் பல்வேறு புண்ணியஸ்தல யாத்திரைகளை அடிக்கடி மேற்கொள்ளும் ஜி.ரா எனப்படும் கோ.ராகவன் சமீபத்தில் விஜயம் செய்தது, பதிவுலகில் பலரும் அறிந்ததே..
'கல்கி' வார இதழில் கைப்புள்ள கட்சி பற்றி வெளிவந்த பொன்னான நாளில், வ.வா.சவின் மின்னல் வேக வளர்ச்சியையும் தலைவர் கைப்புள்ளையையும் பாராட்டவேண்டும் என்று ஜி.ராவின் மயிலார் ஒற்றைச் சிறகை மட்டும் விரித்து அடம்பிடித்த காரணத்தால் வேறு வழியின்றி ப.ம.கவின் பெங்களூர் கிளை கொபசெ ஜி.ராவும், வ.வா.ச.வின் அனைத்திந்திய கொபசெ பொன்ஸை அவரது அலுவலகத்திலேயே (அட, அலுவலக கேன்டீனிலேயே) சென்று சந்தித்தார்.
பழைய ஆறிப்போன செய்தியாக இருந்தாலும், வலையுலக அன்பர்களின் வேண்டுகோளுக்காகவும்(?!), (கனவு) கண்டதை எல்லாம் சந்திப்பு என்று எழுதும் சிலரின்(சிபியின் அல்ல) கொட்டத்தை அடக்கவும், மீண்டும் பழைய நினைவுகளைத் தூசி தட்டி, உங்கள் பார்வைக்கு:* ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
- ராகவன் வழக்கம் போல, இதுவரை வலைபதிவுகளில் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்துடனும் ஒத்துப் போகாத முற்றிலும் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.. அடையாளம் தெரியாமல் "திரு திருவென" முழித்து நின்ற பொன்ஸை எப்படியோ (திரு திரு ?!) அவரே தெரிந்துகொண்டார்
- மதிய உணவு வேளையாதலால் கிட்டத் தட்ட 500 பேர் பங்கு கொண்ட இந்தக் கூட்டத்தில், ஜி.ரா, பொன்ஸைத் தவிர மற்றவர்களை வலை பதிவர்களுக்கு மட்டுமல்லாது, பொன்ஸுக்கே (அதென்ன 'கே'? அட, எங்க கம்பனியாச்சே!) வேறு யாரையும் தெரியாது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது
- ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார். ப்ளாஸ்டிக்கால் ஆன (ப்ளாஸ்டிக் தானே ஜி.ரா?) அந்த மூன்றடுக்கு சிற்றுண்டி டப்பாவைத் திறக்கும் விதமே புதுமை.. ஒவ்வொரு அடுக்கும் திருகுக் குழல்களோடு அடுத்த அடுக்கின் மேல் பொருந்துவதால், உள்ளே எடுத்து வரப்படும் திரவ உணவு எதுவும் வெளியே சிந்துவதில்லை. புதுமையான அந்த சிற்றுண்டி (பேருண்டி) டப்பாவைச் சற்று உற்று பார்த்துவிட்டு அதன் பின் தான் சொந்த டப்பாவைத் திறக்கவே முடிந்தது.
- அத்தனை முன்னேற்பாடு இல்லாத காரணத்தால் மெனு பெரிய விதத்தில் சிறப்பாக இல்லை. கூட்டணி பற்றியும் பேச விழைந்ததால் ஜி.ரா மட்டும் ஏதோ ஒரு கூட்டை எடுத்து வந்ததாக நினைவு.. இங்கிருந்து அந்த உணவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், பொன்ஸ் விடும் பெருமூச்சுகள் கணினித் திரையைப் பாழாக்கிவிட வாய்ப்பிருப்பதால், ஓவர் டூ ஜி.ரா. நியாபகம் இருந்தா எடுத்து விடுங்க..
- அதிக பட்சம் ஒரு மணி நேரமே நீடித்த இந்தச் சந்திப்பின்போது,
- மால்கேட்டிலிருந்து மெயிலே வராத போது, கைப்புள்ள கல்கியில் வந்தது எப்படி?
- இளவஞ்சி வாத்தியாரின் எந்தெந்த வகுப்புகளுக்கு யார் யார் போவது, எந்தெந்த வகுப்புகளை யார் யார் கட்டடிப்பது?
- ராகவன் அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள் காய்ந்து விட்டனவா?
- அதே நேரத்தில் சென்னையில் இருந்த தருமியைச் சந்திக்க முடியுமா? (கடைசி வரை முடியவில்லை, ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல் 'தருமி ரொம்ப பிஸி..')
- வ.வா.ச., ப.ம.க நல்லிணக்கக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
என்பது போன்ற நாட்டுக்குத் 'தேவையான' முக்கியமான சங்கதிகள் விவாதிக்கப்பட்டன. மேலும் பல பேசப் பட்டிருந்தாலும், மேலான விஷயமான மெனுவே மறந்து போனதால், மற்ற சங்கதிகள் சுத்தமாக ப்ளாங்க்!! ராகவனுக்கோ மயிலாருக்கோ நினைவிருந்தால் சொல்லட்டும்.
சாப்பாடு முடிந்ததும், அலுவலக வளாகத்தை அதிகம் சுற்றாமலேயே பார்த்துவிட்டு ஜி.ராவும் மயிலும் விடைபெற்றுச் சென்றனர். (அப்பாடா.. ஒருவழியா எழுதிட்டேன் ஜி.ரா. இனியும் நீங்க என்னை மிரட்ட முடியாது!!)