"உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் 7.3 அளவிலான பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்"
"தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"
திடீரென்று ஒரு நாள் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகள் உங்கள் செல்பேசியில் வந்தால் உங்கள் குறும்புக்கார நண்பனின் வழக்கமான விளையாட்டு என்று அலட்சியப்படுத்திவிட வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையிலிருந்து இப்படிப் பட்ட எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வருவதற்கு வெகு நாட்களாகப் போவதில்லை - அதுவும் உங்கள் மாநில மொழியிலேயே!
பெங்களூரைச் சேர்ந்த "ஜெனிவா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ்" நிறுவனமும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் சேர்ந்து ஆபத்துகால தகவல் துறையுடன் இணைந்து இப்படிப்பட்டக் குறுஞ்செய்திகளை நாடு முழுவதும் அனுப்ப உள்ளன. ஜெனிவா நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் வரும் குறுஞ்செய்திகளை மொழிபெயர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய நிலவரப்படி (14 இந்திய மொழிகள் உட்பட) 57 உலகமொழிகளில் இம்மாதிரியான செய்திகளை மொழிபெயர்க்கும் வேலை முடிந்துவிட்டது.
இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட செல்பேசிகளைப் பார்க்க முடிகிறது. விரிந்திருக்கும் தனியார் மற்றும் அரசு சார் தொலைபேசிச் சேவைகளின் மூலம், இந்தியா முழுவதும் செல்பேசிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும். அதிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்ற மொழிகளில் அனுப்பப்படும் போது அவற்றின் பலன்களும் சரியான நேரத்துக்குள் போய்ச் சேர ஏதுவாகும்.
ஜெனிவாவின் இந்த மென்பொருள் மூலம், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால், அதை உள்வாங்கும் செல்பேசியும் யூனிக்கோடு முறையில் இயங்குவதாக இருக்க வேண்டியதில்லை. மொழி பெயர்ப்பதோடல்லாது, இந்த மென்பொருள், குறுஞ்செய்தியை படமாகவும் மாற்றுவதால், மறுமுனை சின்ன படங்களை உள்வாங்குவதாக இருந்தாலே போதுமானது (picture messages not MMS)
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் பெறப்படும் இது போன்ற ஆபத்துகால செய்திகள் தனியார் மற்றும் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்பேசிகளுக்கு மட்டும் அவரவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியில் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். சுனாமி மாதிரியான இயற்கைப் பேரழிவின் போது ஆபத்து காலத்திற்குப் பல மணி நேரத்துக்கு முன்னரே இது போன்ற குறுஞ்செய்தித் தகவல்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் பெரிய அளவில் தடுக்கலாம். சமீபத்தைய மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கூட பத்து நிமிட இடைவெளியில் வெடித்த இந்தக் குண்டுகளைப் பற்றி சில நொடிகளுக்குள் தகவலனுப்பி இருக்கலாம். இன்னும், மும்பை மழைகள், சென்னை, ஆந்திர வெள்ளம் என்று பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

"இப்படிப்பட்ட ஆபத்து கால பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் முறையை உலகிலேயே முதன் முறையாக செயல்படுத்தப் போகும் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரியது. இந்தச் சேவையின் மூலம் பேரழிவு எச்சரிக்கைகள் முப்பது வினாடிகளுக்குள் பொதுமக்களுக்குப் போய்ச்சேர முடியும்" என்கிறார் அறிவியல், தொழிற்நுட்பத் துறை அமைச்சரான கபில் சிபல். குண்டுவெடிப்புகளின் போது செல்பேசித் தொடர்புகளில் குளறுபடியானாலும், குறுஞ்செய்திமுறையில் எல்லாருக்கும் செய்தி அனுப்புவது சாத்தியம் என்றும் அறிவியல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் நம்புகிறது.
குறுஞ்செய்திகள் தவிர தரைவழித் தொடர்புள்ள தொலைபேசிகளிலும், குரற்பதிவாக செய்தி அனுப்பவும், ஆங்காங்கு இதற்காகவே அமைக்கப்படும் கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகளின் மூலமும் தொலை தொடர்பைப் பரவலாக்கும் திட்டமும் இருக்கிறது. சுமார் 5.19 கோடி செலவில் செப்டம்பர் 2004 முதலே உருவாக்கப்பட்டு வரும் ஆபத்துகால பன்மொழிக் குறுஞ்செய்தித் திட்டம் பற்றி மீன்வளத்துறை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைச்சகங்களுக்கு ஏற்கனவே செயல்முறை விளக்கம் கொடுத்தாகிவிட்டது. உள்நாட்டு அமைச்சகத்தின் இறுதி தலையசைப்புக்காக மட்டுமே தற்போது காத்திருக்கிறது இந்தத் திட்டம்.
சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கும் பணிகள் சீரான வேகத்தில் சென்றாலுமே செப்டெம்பர் 2007இல் தான் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்னும் போது, இந்த மாதிரியான குறுஞ்செய்திச் சேவைகள் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உடனடித் தேவையாகும். சீக்கிரமே இந்தச் சேவை செயல்பாட்டிற்கு வந்தால் ஆபத்துகளின் போது பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தைத் தவிர்த்துவிடமுடியும்.
மேலும் செய்திகளுக்கு
நிறைய தமிழ்ப் படுத்தி இருப்பதால் ஏதும் தவறாகி இருக்குமோவென்று:
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை - Indian Meterological Department
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் - Ministry of Science and Technology
பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் - Multilingual Messaging Service
குரற்பதிவு - Voice Mail
கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகள் - Wireless Public Addressing System
ஆபத்துதவி மையம் - Disaster Management Cell