Friday, March 31, 2006
மெட்ராஸ் டு பெங்களூர்
அந்த வாரம் திங்கள் விடுமுறை. அந்தத் திங்கள் தான் சென்னையின் சரி பாதி ஜனத்தொகை பெங்களூர் போகிறது போலும், எனக்கு ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்கவில்லை. பேருந்தோ, தொடர்வண்டியோ எதிலேயாவது வந்து விடலாம் என்று முடிவு செய்து, தைரியமாக சென்னை போய் விட்டேன். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சென்ட்ரல் சென்று மதியம் புறப்படும் வண்டிகள் எதிலாவது இடம் கிடைக்குமா என்று நானும் அப்பாவும் கேட்டோம்.குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உட்பட ஒன்றிலும் இடம் இல்லை என்று பதில் வந்தது.
சரி என்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் தனியார் பேருந்து இயக்ககங்களுக்கு (ரொம்ப கஷ்டமா இருக்கு.. ட்ராவல்ஸ்னே சொல்லி இருக்கலாம்) அழைத்துச் சென்றார். தொடர்ந்த தேடல்களுக்குப் பின், ஒரு சாதா பேருந்தில், ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பொதுவாக தொலைதூரப் பேருந்துகளில், சுமார் நான்கு இருக்கைகளைப் பெண்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். அவை அனைத்தும் நிரம்பிவிட, ஒரே ஒரு பொது இருக்கை மட்டும் இருந்தது.
"வேறு யாராவது பெண்கள் வந்தால் மாற்றி அமரவைக்க முயற்சிக்கிறோம், இல்லையெனில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்" என்ற விதிமுறைகளுடன், நூறு ரூபாய் அதிகம் வேறு கொடுத்து அந்த டிக்கெட்டை வாங்கினேன்.
திங்கள்கிழமை இரவு பஸ் ஏறும் போது வேறு பெண்கள் இருக்கை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது. அதற்காக நான் கவலைப்படவே இல்லை. அப்படி யார் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று நேரே சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பா வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்தார். ஒருவரும் இல்லாததால் ஓரமாக நின்று விட்டார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் போனபின், ஒரு தாயும் மகனும் வந்தார்கள். அந்தப் பையனுக்கும் என் வயது தான் இருக்கும். வீட்டிலேயே இருந்து படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாகத் தான் வேலைக்காக வேற்றூருக்குப் போகிறான் போலும். அதிலும் இந்த முறை தான் அவன் நண்பர்கள் இல்லாமல், தனியாகப் பயணிக்கிறான் போலும், அவன் அம்மா ஒரே அட்வைஸ் மழை.
"பர்ஸை பத்திரமா வச்சிக்கோ. ராத்திரி அசந்து தூங்கிடாதே.. பஸ் நிற்கும் போதெல்லாம் எழுந்து உன் பேக் இருக்கான்னு பாத்துக்கோ. தண்ணி பாட்டிலைக் காலி பண்ணிடாத.. கடைசி வரைக்கும் கொஞ்சமாவது வச்சிக்கோ. பக்கத்துல யாராவது உக்காந்து பிஸ்கெட் கொடுத்தா வாங்கிடாத.." அப்பப்பா.. என் அப்பா கூட நான் முதல் முறை தனியாகப் பயணம் செய்த போது இத்தனை நேரம் பேசியதில்லை. (இதெல்லாம், கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா சொன்னது)
இப்படி லோட் லோட்டாக அறிவுரை சொல்லி முடித்தபின் பையனும் ரொம்ப பயந்து பயந்து தான் வண்டியில் ஏறினான். மெதுவாக நடந்து வந்தவன், கடைசி இருக்கைக்கு முன் இருக்கை வரை வந்தான். என்னைப் பார்த்து, "27த் சீட் என்னுது" என்றான். பக்கத்து இருக்கையில் வைத்திருந்த என் பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு உட்காரு என்பது போல் பார்த்தேன்.
அவனும் தன் பையை மேலே வைத்து விட்டு இது தான் தன் இருக்கை என்று அம்மாவிற்கு சைகை செய்தான். கீழே இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா கொஞ்சம் பயந்து விட்டார். டிக்கெட்டுகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்த ட்ராவல்ஸ்காரரை அணுகி, "லேடீஸ்சுக்கு தனி சீட் கிடையாதா?" என்றார்.
"யாருக்குங்க?" என்றார் அவர். அந்த அம்மா என்னைச் சுட்டிக் காட்டினாள்.
"ஏம்மா, டிக்கெட் எடுக்கும் போதே லேடீஸ் சீட்டுன்னு கேட்டு வாங்கக் கூடாதா? " என்றார் அவர் அந்த அம்மாவிடமே.
"தெரியலயே... என் மகன் தான் அவங்க பக்கத்துல உக்காந்து போறான். அதான் கேட்டேன்" என்றார் அவர்.
"ஓ, அந்தப் பொண்ணு ஒண்ணும் அப்ஜெக்ட் பண்ணலை இல்ல? அப்போ சரி" என்று சொல்லி விட்டுத் தன் வேலையில் மூழ்கிவிட்டார்.
அந்த அம்மாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "வேற ஏதாவது பொண்ணுங்க சீட் இருந்தா மாத்தி குடுத்துர்றீங்களா?"
"பாக்கறேம்மா" என்றுவிட்டு அவர் போய் விட்டார். பையனைக் கீழே இறங்கி வரச் சொன்னார்.
"வேற சீட்டு பாத்து தரேன்னு சொல்றாங்க" என்றார்.
சொன்னபடியே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பெண்கள் இருக்கையில் வராமல் போன ஒரு பெண்ணின் இடத்தை எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டார். வண்டியும் கிளம்பியது. அந்த அம்மாவுக்கும் மகிழ்ச்சி. அவர் மகன் என் சீட்டில் அமர்ந்து பை பை சொன்னான். எனக்குத் தான் கடுப்பு.. என் ஜன்னல் சீட்டைப் பறித்து விட்டார்களே என்று..
ஆனால், அந்த மகிழ்ச்சியும் கடுப்பும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. கிளம்பிய வண்டி மீண்டும் நின்று விட்டது. நான் அமர்ந்திருந்த இடத்திற்குரிய பெண் வந்து விட்டாள். என்னை மீண்டும் பின் சீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ஆக வண்டி கிளம்புமுன் மீண்டும் என்னைத் தன் மகன் அருகில் பார்த்த அந்தத் தாயார் முகம் சிறுத்துப் போயிற்று.
அந்த ஐந்து நிமிடத்தில் அவனைக் கீழே இறக்கி, மீண்டும் ஒரு ரவுண்டு உபதேசம் நடந்தது. "பேச்சு குடுக்காத.. முக்கியமா உன் பேர் எல்லாம் சொல்லாத.. முடிஞ்சா தூங்கற மாதிரி நடி அப்போ தான் அவளும் பேச மாட்டா" என்னவோ நான் அவர்களின் மகனைக் கடத்திக் கொண்டு போவதற்காகவே வந்தது போல்.
மெதுவாக வண்டி கிளம்பியது. நான் தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தேன். "பெங்களூரில் வேலை செய்யறீங்களா?" என்றான் என் பக்கத்தில் இருந்த பையன்.
"ஆமாம்" என்றேன் அவன் அம்மா சொன்ன எச்சரிக்கைகளை நினைவுறுத்திக் கொண்டு..
"நானும் பெங்களூரில் வேலை செய்யறேன். அம்மா, அப்பா இங்க இருக்காங்க.."
அதான் தெரியுதே என்று சொல்ல நினைத்து, மெல்ல சிரித்து வைத்தேன்.
"அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ் .. எப்போவும் இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க.." என்றான்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன் பின், பன்னிரண்டு மணிவரை அவன் தூங்கவே இல்லை, என்னிடம் பேசிக் கொண்டே வந்தான், என்னையும் தூங்க விடாமல். இந்த அழகிற்கு, யாராவது பெண்களே உட்கார்ந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அவன் அம்மா ஏன் அவ்வளவு பயந்தார்கள் என்று இப்போது தான் புரிந்தது.
அத்தனை அறிவுரை சொல்லி அழுத்தி வைத்ததினால் தான் இப்படி அம்மா கண் மறைந்த பின் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா என்று கூட எனக்குத் தோன்றியது. எது எப்படியோ, நல்ல அம்மா நல்ல மகன்..
Thursday, March 30, 2006
இந்தமுறை எப்படியும்...
யோசித்துக் கொண்டே வந்த என்னைப் பார்த்து "சலாம் மேம்சாப்" வாசலில் இருந்த செக்குரிட்டி வியப்புடன் சொன்னான்.
பதில் வணக்கம் சொன்னதும், "என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்" என்று கேட்டான் ஆங்கிலத்தில்.
"தலைவலி" என்றேன் பதிலுக்கு.
அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்தால், இது ஒரு தொல்லை. நான் எப்போது அலுவலகத்திலிருந்து வந்தால் இவனுக்கு என்ன!!!!
"என்னம்மா, திடீர்னு தலைவலி? "
அந்தக் குடியிருப்பில் இருக்கும் ஒரு தமிழ்க்காரப் பாட்டி. இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றா சொல்ல முடியும்?!! செயற்கையாக புன்னகைத்தபடி கடந்து சென்றேன்.
எல்லாவற்றிற்கும் காரணம் சாராதான். சாராவை என்ன செய்வது என்று யோசித்தே ஒரு வாரமாகவே நான் தூங்கவில்லை. எப்போதும் என்ன யோசிக்கிறீர்கள் என்று என் அலுவலகத்திலேயே கேட்க ஆரம்பித்த பின் தான் நான் இப்படி மதியமே வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன்.
சாரா மேல் எனக்கென்ன அப்படிக் கோபம் என்று பார்க்கிறீர்களா?
நீங்களே சொல்லுங்கள். பொதுவாக எனக்கு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இருந்ததில்லை. அதிலும், என் அம்மா இறந்த பின் தனியாளாய் இருந்த எனக்கு ராம் நல்ல துணையாக இருப்பான் என்று நினைத்தேன். அவனையும் என்னிடமிருந்து பிடுங்க நினைத்தால்?!!!
ராம்? ராம் எனக்கு நண்பன்.. நான் இந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில், எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஏன், சுந்தரின் கல்யாணத்திற்குப் பிறகே எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. அவனுடன் சேர்ந்து சுற்றிய ஊரில் இருக்க முடியாமல் தான் இந்த ஊருக்கு வந்தேன்.
சரி, சுந்தரைப் பற்றி என்ன இப்போது??.. யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.. ஆங், ராம்; ராம் இந்த அலுவலகத்தில், எனக்கு வேலை சொல்லிக் கொடுத்தவன். வேலை என்று பேரே தவிர, மற்ற எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பான். இந்த ஊருக்கு வந்த புதிதில் நான் எங்கே தங்கினால் நன்றாக இருக்கும் என்று அவனே எனக்குப் பதிலாக வீடு பார்த்தான். அவன் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே வீடு பார்த்துக் கொடுத்தான்.
அவன் விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது எனக்குச் சொல்லாமலேயே என் அம்மாவை அழைத்து வந்து என்னை அழ வைத்தான். என் பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொண்டு விடிகாலையில் பூங்கொத்துடன் வாழ்த்துச் சொல்லி சிரிக்க வைத்தான். அம்மா இறந்த போது அவனே எல்லாம் பார்த்துச் செய்தான்.
அதன்பின் ஒரு நாள் கூட என்னைத் தனியாக இருக்க விடாமல், ஒரு மாதம் என் வீட்டில் தங்க அவன் அம்மாவை வரவழைத்தான்.
அவன் அம்மாவும் 'சரி' சொல்லியபின் ஒரு சுபயோக சுப தினத்தில் என்னிடம் வந்து "சுபா, உன்னை நான் விரும்பறேன்.. " என்றான்.
அப்போது தான் நான் என் வாழ்வின் முதல் முட்டாள்தனத்தைச் செய்தேன். "சாரி ராம். நான் சுந்தர்னு ஒருத்தனை விரும்பறேன். அவன் என்னை விட்டுட்டு போய்ட்டான். ஆனால், நான் இன்னும் அவனை விரும்பறேன்... " என்றேன்.
ஏனோ அவன் என்னை வற்புறுத்தவில்லை. அவன் அம்மா தான் கொஞ்ச நாள் என் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள். என் மனம் மாறாது என்று முடிவு செய்து அவள் தன் அடுத்த மகனைப் பார்க்க ஊர் திரும்பிய பின் தான் சாரா எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தாள்.
சாரா, கல்லூரியில் ராமுடன் சேர்ந்து படித்தவள். அந்த வகையில், அவளை இங்கே சேர்த்து விட்டதும் ராம் தான். இப்படி ஒரு பின்புலத்துடன் வந்தாலும் ராம் எனக்கு மட்டும் தான் நண்பனாக இருப்பான் என்று நான் நினைத்தேன்.
சேர்ந்த முதல் நாளே ராம் அவளை மதிய உணவுக்கு அழைத்து வரத் தொடங்கினான். என் வீட்டிலேயே அவளுக்கு தற்காலிகமாக இடம் கிடைக்குமா என்று கேட்டான்.
அதெல்லாம் கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சாரா, கொஞ்சம் கொஞ்சமாக அவள் ராமைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது.
காலை எழுந்ததும் அவனுக்கு போன் பண்ணி எழுப்பி விடுவதும், காலை உணவு தயார் செய்து விட்டு அவனுக்குக் கொடுக்கிறேன் என்று எடுத்துப் போவதும், மாலை, அவன் இருக்கும் வரை அலுவலகத்தில் இருந்து அவன் வண்டியிலேயே வீட்டுக்கு வருவதும் என்று சாரா செய்யும் சேட்டைகள் பார்க்க சகிக்கவில்லை.
அதற்குத் தகுந்தாற்போல் இவனும் அவளுக்கு ஏற்றாற்போல் ஆடுகிறான் என்று தோன்ற ஆரம்பித்த பின் தான் எனக்குத் தூக்கம் வரவில்லை.
இன்றைக்கு எப்படியாவது இவளைக் கொன்றுவிட வேண்டும்...
இதற்கெல்லாம் யாராவது கொலை செய்வார்களா என்கிறீர்களா?.. என்ன செய்ய..எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவளைக் கொல்வது தான் நல்ல முடிவு..
ஒரு வாரமாக, இரவும் பகலுமாக யோசித்துக் கண்டுபிடித்த வழி தான் அது.. இந்த வார இறுதியில் ராம் ஊருக்குப் போகிறான். அந்த நேரம் பார்த்து எங்கள் பத்து மாடிக் கட்டிடத்தின் மாடியில் இருந்து அவளைத் தள்ளி விட்டால்??
இன்றைக்கு வெள்ளி. ராம் இன்று என் கோபத்தை மேலும் கிளறி விட்டான். என்னிடம் சொல்லாமல், அவளிடம் சிரித்து சிரித்துச் சொல்லிவிட்டு ஊருக்குப் போகிறான்.
சிரி சாரா, சிரி. நன்றாகச் சிரி..இன்றுடன் இந்தச் சிரிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.
இரவு. சாராவின் அறையைப் பார்த்துக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். இதோ சாரா வந்து விட்டாள்.
வா சாரா வா.. முடிவை நோக்கி..
"சுபா, இன்னிக்கு ராம் இல்ல, அவனோட ஒரே தமாஷ்.. நீ ஏன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட?"
"எனக்கு நல்ல தலைவலி. அதான் வந்துட்டேன்."
"தலைவலியா?.. கமான் சுபா.. நீ ரொம்ப வீக்.. டாக்டர் கிட்ட போலாமா?"
"அதெல்லாம் வேண்டாம்.. மாத்திரை சாப்பிட்டா சரியாப் போய்டும்"
"சரி. உன் இஷ்டம்" அவள் சென்று கதவை சார்த்திக் கொண்டாள்.
சே.. நல்ல சந்தர்ப்பம்.. விட்டு விட்டேனோ.. சரி சொல்லி, அவளை பால்கனிவரை அழைத்துச் சென்று..
மூடிய கதவு லேசாகத் திறந்தது. நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். சாரா நைட்டிக்கு மாறி விட்டாள். கதவு ஓசை கேட்டு என்னைப் பார்த்தாள்.
"வா வா சுபா.. என்ன அதிசயம்? மனசை மாத்திகிட்டயா?"
"இல்லை.. வலி ரொம்ப அதிகமாய் இருந்தது.. அதான் உன்கூட கொஞ்சம் பேசலாமேன்னு வந்தேன். "
"வா, வா, வந்து உக்காரு"
"பெப்ஸி சாப்பிடலாமா?" அவள் தான் கேட்டாள்
"ஓ யெஸ்..டின்னர் சாப்ட்டுட்டியா?"
"ம்ம்.. நல்லா சாப்ட்டுட்டு வந்தேன். ஒரே தூக்கமா வருது"..
கொட்டாவி விட்டுக் கொண்டே ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு பெப்ஸி பாட்டிலை எடுத்தாள். நான் வாங்கிக் கொண்டே அவளுடன் பேச்சு கொடுத்தேன்.
அன்று சாப்பிட்ட டின்னர் பற்றியும், அவளுக்கு தொல்லை கொடுப்பதே வேலை என்று கருதும் மேலதிகாரி பற்றியும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் சரி சொல்லியபடி அமர்ந்திருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பேச்சின் மும்முரத்தில் எங்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்தது... அவள் ரொம்பவும் விரும்பிய ஒருவனை அவள் தோழியும் விரும்பி கல்யாணம் பண்ணிக் கொண்டு போனதை உருக்கமாக சொன்னாள். இப்போ மட்டும் இவள் என்ன செய்கிறாளாம் என்று நினைத்தபடி அதைக் கேட்காமல் 'உம்' கொட்டினேன். அதன்பின் சில நிமிடங்கள் அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
தூங்கி விட்டாளா, அப்படியே எழுப்பி பால்கனிக்கு அழைத்துப் போகலாமா?.. யோசித்தபடி, அவளைப் பார்த்தேன்.
"சாரா, வெளியே போய் நிக்கலாமா? " மெதுவாக தலை ஆட்டினாள்.
அவளுக்கு பெரிதாய் ஆர்வம் ஒன்றும் இல்லை என்று தோன்றியது. இன்னுமொரு முறை தன் க்ளாஸை நிரப்பிக் கொண்டாள். என் கோப்பையையும் நிரப்பினாள். பெப்ஸி பாட்டில் முழுவதும் காலி ஆகிவிட்டது.
பால்கனியில் வந்து நின்றோம்.
"சுபா, நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?" கதை விபரீதமாகப் போகிறதே என்று நினைத்தேன்.
"ம்ம்.. ரெண்டு வருஷம் முன்னால.. அவன் பேரு சுந்தர். "
"என்னாச்சு?"
"அவனுக்கு என்னைப் பிடிக்கலை.. வேற ஒருத்தியோட கல்யாணம் ஆயிடுச்சு... ".
"ராம் உன்னை விரும்பறான். உனக்குத் தெரியுமா?"
ஒரு நிமிடம் என் காதை என்னாலேயே நம்ப முடியவில்லை. லேசாக தலை சுத்துவது போல் இருந்தது எனக்கு. என்ன சொல்லப் போகிறாள் இவள்?!!
"எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா? அவன் தான் சொன்னான். என்கிட்டயே.. வந்து சொன்னான். அது மட்டும் இல்ல.. உதவி வேற கேட்டான். அவனை நான் விரும்பறதா நடிக்கணுமாம். ஒவரா அவன் மேல அக்கரை காட்டுறா மாதிரி ஆக்ட் பண்ணணுமாம்."
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியானால், ராம் இன்னும் என்னை விரும்புகிறானா? நான் தான் தப்பாக இவளைக் கொல்ல நினைத்தேனா?!!
"அதைப் பாத்துட்டு உனக்கு அவன் மேல காதல் வருமாம். ஏதோ தமிழ்ப் பட கதை மாதிரி இருக்கு இல்ல?!! ஆனா, நான் அப்படி எல்லாம் செய்ய முடியாது. நான் ராமை விரும்பறேன். காலேஜ் படிச்ச காலத்திலேர்ந்து அவனை நான் விரும்பறேன். அதெப்படி உனக்கு விட்டுக் கொடுக்க முடியும்? நல்ல வேளையாய் நீ அவனை வேண்டாம்னு சொல்லிட்ட.."
இப்போது எனக்கு சாராவைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஆனால் ஏன் எனக்கு சாராவின் முகம் தெளிவாய்த் தெரியவில்லை. சாரா ஏன் மேலும் மேலும் என் அருகில் வருகிறாள்?
"ஆனா, இப்போ ஒரு வாரமா, உன்கிட்ட மாற்றம் தெரியுது. நீயும் ராமை விரும்ப ஆரம்பிச்சிருக்க. அவன் சொன்ன தமிழ் சினிமா சென்டிமென்ட் உன்கிட்ட பலிச்சிட்டது. ஆனா, என்கிட்ட இந்த சென்டிமென்ட் எல்லாம் பலிக்காது. நீ அவனை உடனே மறந்தாகணும்."
எனக்கு ரொம்ப சிரிப்பு வந்தது. ஆனால், சிரிக்க முடியவில்லை. இப்போது சாரா என் அருகில் வந்து என்னைப் பிடித்துக் கொண்டாள். மெல்ல என்னைத் தொடுகிறாள்.
"ராம் திரும்பி வரும் போது நீ இருக்க மாட்ட.. உன்னால ராமை இனிமே நினைக்க முடியாது. "
இப்போது இவள் என்ன செய்கிறாள்? என்னை ஏன் பால்கனியின் கைப்பிடி அருகில் நிற்க வைக்கிறாள்?!! என்னால் ஏன் தடுமாறாமல் நிற்க முடியவில்லை, நான் ஏன் குனிந்து பார்க்கிறேன்?.. கீழிருந்து வாட்ச்மேன் என்னவோ சொல்கிறான். உள்ளே போ என்று காட்டுகிறானா..
"உன் கடைசி பெப்ஸில நான் அந்த மாத்திரையைப் போட்டுட்டேன். இப்போ நீ கீழ விழப் போறே.. காப்பாத்துங்கன்னு நான் கத்தப் போறேன். யாரலயும் உன்னைக் காப்பாத்த முடியாது. சுந்தர் உனக்கு கிடைக்காததினால, ராம் உன்னைத் தொந்தரவு செய்யறதுனால, உங்க அம்மா இறந்ததைத் தாங்கிக்க முடியாம, நீ ட்ரக் அடிக்ட் ஆய்ட்ட.. இன்னிக்கி கொஞ்சம் ஓவரா போயிடிச்சி.. பாலன்ஸ் இல்லாம தவறி விழப் போற. ராம் ரெண்டு மாசம் புலம்பிட்டு என்னைக் "...
சாராவின் கடைசி வார்த்தைகள் என் காதில் விழவில்லை. நான் கீழே, கீழே, கீழே போய்க் கொண்டிருந்தேன். வாட்ச்மேனைக் காணவில்லை. மேலே எட்டிப் பார்த்து "பசாவ்" என்று கத்திய சாராவின் முகம் கொஞ்ச கொஞ்சமாகச் சின்னதாகிக் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
Friday, March 24, 2006
இன்னொருவன்
உறவின் நடுவில்
இன்னொருவன்...
எப்படி அனுமதித்தாய் நீ??
மஞ்சள் மாலையில்,
மெல்லிய குளிரில்,
கைப்பிடித்து நேசம்
சொன்னபோது இல்லை அவன் நம்மிடையே!!.
இப்போது
"அவனுக்குப் பிடிக்கவில்லை.
கையை விடு!!!" என்கிறாய்....
நிலவின் ஒளிகூட இல்லாத
ஓர் இரவில்
அலையொலிகளுக்கிடையில்
வருடந்தோறும்
நீ பிறந்த நாளில்,
அலையைப் பார்க்க வருவோம்"
என்று சொன்னவள் நீதான்.
இன்று சொல்கிறாய்,
"அவனுக்குத் தெரியாமல் போனால் கோபிப்பான்;
சொல்லிவிட்டுப் போனால் சண்டைக்கு வருவான்" என்று!!!!
எனக்கும்
உனக்குமான
உறவின் நடுவில்
இன்னொருவன்...
எப்படி அனுமதித்தாய் நீ??
நடுநிசியில்,
பெருங்கோபமும்,
உன்மேல்
கோபம்காட்டி அறியாத இயலாமையும்
சேர
நான் சுவர் பார்த்து
படுத்திருக்கையில்,
அவன் அறியாமல்,
என்னருகே வந்து,
"பொறாமையா? ..
உன் மகன் அல்லவா?" ...
என்று சொல்லும்போது
ஒற்றைப் புன்னகையில்,
உயிர் கரைந்து சொல்கிறேன்,
"நானும் உன் மகன் தானே??!!!"
கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்குங்க.. :)
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருத்தருக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஞாயிற்றுக்கிழமைங்கறதுனால யாரும் அலுவலகத்தில் இல்லை. தன் கீழ் வேலை செய்யும் ஒருவருக்கு போன் செய்தார்:
"ஹல்லோ" ஒரு சின்னக் குழந்தையோட குரல்.
"அப்பா வீட்டில் இருக்காங்களா?" என்றார் அதிகாரி.
"இருக்காங்க" சின்னக் குரல்ல சொன்னான் அந்தக் குட்டிப் பையன்
"அவர்கிட்ட நான் பேசலாமா?"
"முடியாது" அப்டீங்கறான் அவன். அந்த அதிகாரி வியந்து போனாரு.
இவனை மீறி எப்படிப் பேசறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சார்.
"அம்மா இருக்காங்களா?"
"இருக்காங்க"
"அவங்ககிட்ட போன் குடுப்பா?"
"குடுக்க மாட்டேன்"
"வேற யாராவது வீட்ல இருக்காங்களா?"
"இருக்காங்க"
"யாரு?"
"போலீஸ் மாமா"
"போலீசா?" சின்ன அதிர்ச்சியுடன் கேட்டாரு அதிகாரி. "அவர்கிட்ட பேசலாமா?"
"இல்ல.. அவரு ரொம்ப பிஸியா இருக்காரு"
"பிஸியா? பிஸியா என்ன பண்றாரு?"
"அம்மா கிட்டயும், அப்பா கிட்டயும், ஃபையர் சர்வீஸ் அண்ணங்கிட்டயும் பேசிகிட்டிருக்காரு."
இப்போ நம்ம அதிகாரிக்கு ரொம்ப கவலையாப் போய்டிச்சி.. இதுக்கு நடுவுல ஒரு ஹெலிகாப்டர் சத்தம் வேற கேட்டுச்சு.
"அது என்னப்பா சத்தம்?" ன்னு கேட்டாரு அந்தப் பையன் கிட்டயே
"எலிகாப்டர்"ன்னு சொன்னான்
"அது எதுக்கு வந்திருக்கு?" அதிகாரி சந்தேகமா கேட்டாரு
"தேட வந்திருக்காங்க"
" என்ன தேடறாங்க??"
மெதுவா வாய்க்குள்ளயே சிரிச்சிகிட்டு, நம்ம பையன் சொல்றான்:
"யார்கிட்டயும் சொல்லாதீங்க... என்னைத் தான்"
Thursday, March 23, 2006
ஆபீஸ் கிளம்பலியோ ஆபீஸ்...
"ஏழு மணிக்கெல்லாம் பஸ் வந்துரும்... சரியான சோம்பேறிடி நீ"
நானே கஷ்டப்பட்டு எழுந்துகிட்டிருக்கேன். இப்பிடி பயமுறுத்தினா என்ன பண்ணுவேன் சொல்லுங்க... மனுஷனை(ஷியை) நிம்மதியாத் தூங்கக் கூட விடாம.. ம்ஹ்ம்.. முனகிகிட்டே எழுந்து வர்றேன்.
"பல்லு தேச்சாதான் காபி"
அம்மா வேற.. எனக்கு எதுக்கம்மா காபி, அப்டியே விட்டா போய்த் திருப்பித் தூங்கிடுவேன்.
"இன்னிக்கு ஆபீஸ் இல்லையா??" இது அப்பா..
ஒருவழியா பல் தேச்சிட்டு காபி குடிச்சிட்டு ("சூடா இருக்கும்மா"ன்னு சொல்லி உக்காந்துகிட்டே கொஞ்சம் தூக்கமும் போட்டுட்டு) குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிகிட்டு... இன்னும் எத்தனை கிட்டு.. ச்ச...
"இந்தா! இதுல டிபன் கீரை தோசையும் சாம்பாரும் இருக்கு" - இது தங்கை - அப்டியே சமைச்சா மாதிரி.. எல்லாம் எடுத்து வைக்கிற வேலை தான்.
"இதுல மதியானத்துக்கு சாப்பாடு வச்சிருக்கேன். எடுத்து வச்சிக்கிறியா?" இது அம்மா.
"தண்ணி பாட்டில் எங்க??" ஒருவழியா நான் முழிச்சிகிட்டேன்.
"இந்தா கழுத்து மட்டுக்கும் வச்சிருக்கேன். வீணடிச்சிடாத..."- அப்பா. பாட்டிலுக்கெல்லாம் கழுத்தா!!! ம்ம்ம்...
"ம்ச்.. எல்லாம் எனக்குத் தெரியும். பாரு மொதல்லயே தண்ணி ரொப்பி வச்சிருக்கலாம் இல்ல?!! லேட் ஆய்டுச்சு. பஸ்ஸு போயிருக்கும்"
"இரு இரு.. நான் வந்து ஏத்தி விடறேன். இந்த ஸ்டாப் விட்டா, அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிடலாம்" அப்பா சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.
"அய்யோ... போற போக்கப் பாத்தா நான் அடுத்த ஸ்டாப்ல கூட பிடிக்க முடியாது போலிருக்கே.."
"ஏய்!!! என்னடி பண்ற.. இப்போவே பஸ்ஸு அது இதுங்கற!!!" எழுப்பி விட்டாள் என் "அறை"த்தோழி. " இப்போ தான் எட்டு மணி ஆகுது; எட்டரைக்கு தான் ஆபீஸ், இதோ இங்க இருக்கு.. பொறுமையா போகலாம்.. "
சரிதான்.. எல்லாம் கனவு தான்... ம்ம்ம்...
வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்போ ஆபீஸ்ல போய் அந்த வேகாத இட்டிலியையும் காரமான சட்னியையும் தின்னறதுக்கு..
ஃப்ரெஞ்சு மாரி
சொல்லிக் குடுக்குறவங்களுக்கு தமிழ் தெரியாது- பாவம் டெல்லிக்காரம்மா..
அதுல பாருங்க, நேத்திக்கி, "உறவுகள்" பத்தி சொல்ல ஆரம்பிச்சாங்க. "Marie" அப்டீன்னா கணவன்னு அர்த்தமாம்.
அதையும் "மாரி"ன்னு தான் உச்சரிப்பாங்களாம். இதுக்கே எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டோம்.
அவங்களும், "என்ன? இங்கயும் ஒரு மாரிமுத்து , மாரியம்மா யாராவது இருக்கீங்களா"ன்னு கேட்டாங்க. அவங்க முன்னாடி சொல்லிக் குடுத்த இடத்தில் இப்படி யாரோ இருந்தாங்களாம்.
அப்புறம் தாங்க வந்துச்சு முக்கியமான காமெடி. Elle sont - அப்டீன்னா, அவளோடன்னு அர்த்தமாம். அதை 'எல் சோ' அப்டீஇன்னு தான் படிக்கணும்.
இப்போ, இதை வச்சி ஒரு வாக்கியம் அமைக்கணும்,
"Elle sont Marie Ram"
இதை எழுதிட்டு அவங்க படிச்சாங்க பாருங்க:
"எல் சோ மாரி ராம்"
உடனே நம்மாளுங்க, சோமாறியான்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. இதுல ஒருத்தர் கேப்மாறி வேற இருக்கான்னு கேக்கறாரு.. இதுல பெஸ்ட் என்னன்னா, அந்தம்மாவுக்கு ஒண்ணும் புரியல.. பொறுமையா விளக்க வேண்டியதா போச்சு..
ஒரே தமாஷு தாங்க..
[பி.கு] கைப்புள்ளெ விரும்பிக் கேட்டதுக்காக, இன்னிக்கு எப்படியும் மூணு பதிவாவது போட்டுர்றதுன்னு முடிவு பண்ணினதன் விளைவு தான் இது. இதைப் படிச்சுட்டு எல்லாரும் சிரிச்சிருங்க, இல்லைன்னா இதே மாதிரி இன்னும் நிறைய ஜோக் கைவசம் வச்சிருக்கேன், ஒண்ணொண்ணா எடுத்து விட்டா அப்புறம் தாங்க மாட்டீங்க..
Wednesday, March 22, 2006
சும்மா இருந்தா
இப்படி ஒரு பாட்டை எங்க அப்பா நேரம் அடிக்கடி பாடுவாரு. (சினிமா பாட்டுங்கறாரு..தெரியலை).
ஒரு நாள் கூட நாங்க சும்மா சோம்பல்பட்டுகிட்டு உக்காந்திருந்தா அவருக்குப் பொறுக்காது. ஏதாவது வெளிவேலை கொடுத்துடுவாரு இல்ல வீட்டைக் க்ளீன் பண்ணலாம்னு ஆரம்பிச்சிடுவாரு..
அப்படி இருந்த நான் இந்தக் கம்பனில சேர்ந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டேங்க.. [எந்தக் கம்பனின்னு கேக்காதீங்க.. நான் இன்னும் ரொம்ப நாள் இங்க இருக்கணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்.]
முதல் ஒரு வாரம் தலை நிமிர முடியாமல் வேலை.. நான் போகவேண்டிய கட்டாய பயிற்சிகளைக் கூட அடுத்த மாதம் பார்த்துக் கொள் என்றார் என் மானேஜர்.
எல்லாம் வெட்டி வேலை தான். இருந்தாலும் ரொம்ப அவசரம் என்பதால் முக்கியமாகி விட்டது. ஒரு வாரம் முழுவதும் என் மானேஜரே நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து "என்னாச்சு?" என்று நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தார்
அந்த ஒரு வாரம் முடிந்ததும் அதுவும் இல்லாமல் போனபோது தான் அந்த வேலையின் அருமை புரிந்தது. ரெண்டு வாரம் சும்மானாச்சுக்கும் ஆபீஸ் வந்தேன். அப்படியும் வராமல் இருக்க விடுகிறார்களா.. அது எப்படி முடியும்? ஒவ்வொரு நாளும் வந்துட்டு வேலை இருக்கான்னு கேக்கணும், இல்லைன்னா நம்பளை மறந்துட்டாங்கன்னா?!!! தவிரவும், இப்படி ஒழுங்கா ஆபீஸ் வந்தா, வெட்டியாக இருப்பது நான் மட்டும் இல்லை என்று கொஞ்சம் சின்ன ஆறுதல்.
காலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு
கனிவு கொடுக்கும் நாலு forwards
மாலை முழுதும் மீண்டும் காபி - இடையில்
மூன்று மணிவரை மதிய உணவு
என்று நாளொரு தலைப்பும் பொழுதொரு அரட்டையுமாக இருந்த என் நாட்கள் ஒரு மாதம் போல எல்லா கட்டாயப் பயிற்சிகளுக்கும் செல்வதிலேயே கழிந்தது.
அடுத்த மாதம் நான் ஒரு முடிவுக்கு வந்து, என் மானேஜரைப் போய்ப் பார்த்தேன்.
"ரஞ்சித், அந்த ப்ராஜக்ட் முடிஞ்சிடுத்தே.. க்ளயண்ட் கன்ஃபர்ம் பண்ணிட்டாரா?"
"பண்ணிட்டாங்களே, உங்களுக்கு அந்த மெயில் வரல்லயா?"
நான்: (மனதுக்குள்)அனுப்பினாத்தானேய்யா வரும்; (வெளியில்) இல்லயே எனக்கு cc இருக்கா?
ரஞ்சித்: ஓ, உங்க பேர் இல்ல.. சரி இப்போ அனுப்பிடறேன். (அப்புறம் இன்னும் என்ன என்பது போல் ஒரு பார்வை)
நான்: அடுத்து ஏதாவது ப்ராஜக்ட் வருதா?
ரஞ்சித்: இந்த க்ளயண்ட் கிட்டேர்ந்து தான் அடுத்த ப்ராஜக்ட் எதிர்பார்க்கறோம். இன்னும் ஒரு மாசத்துல தெரியும்.
நான்: அப்டீன்னா, இப்போ இன்னும் நாலு வாரத்துக்கு ஏதேனும் ட்ரெயினிங் இருக்கா?
ரஞ்சித்: நீங்க அந்த மேண்டேடரி ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா??
நான்: அதெல்லாம் ரெண்டு வாரம் முன்னாடியே முடிச்சாச்சு
ரஞ்: (பேனாவை உருட்டியபடி தீவிரமாக சிந்தித்தவாறே) உங்களுக்கு ஜாவா தெரியுமா?
நான்: தெரியும் ரஞ்சித்
ரஞ்: ஆரக்கிள்?
நான்: (சரிதான் ஜாவா ஆரக்கிள் என்ற புது ப்ராஜக்ட்டில் போடப் போகிறார் போலும் என்று எண்ணிக்கொண்டே) நல்லா தெரியும், ரெண்டு ப்ராஜக்ட் பண்ணி இருக்கேன்
ரஞ்: A S P?
நான்: அது தெரியாதே...
ரஞ்:(ரஞ்சித் முகத்தில் இப்போ ஒரு தெளிவு. இத இதத்தான் எதிர்பார்த்தேன் என்று மனதிற்குள் சொல்லிக்கிறார் போல) J2EE?
நான்: இல்லை, ஆனா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்
ரஞ்: பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை. நீங்க இன்னும் மூணு மாசத்துல ASP, J2EE எல்லாம் படிச்சிடுங்க... மூணு மாசத்துல இந்த க்ளயண்ட்டே இன்னோரு ப்ராஜக்ட் குடுக்கறதா சொல்லிருக்கான்.
(கவனிக்க, இப்போ மூணு மாசம் ஆய்டுச்சு...)
நான்: இப்போ பண்ண ப்ராஜக்ட் C++ தானே?!?!
ரஞ்: புதுப் ப்ராஜக்ட்டும் C++ தானிருக்கும். நீங்க எதுக்கும் தெரிஞ்சு வச்சிகிட்டா நல்லது தானே? அதோட, உங்களுக்கு லீவ் ஏதாவது வேணும்னாலும் இந்த மூணு மாசத்துல எடுத்துக்குங்க. அப்புறம் கஷ்டம் தான்.
இத்துடன் அவர் போன் பேச ஆரம்பித்துவிட்டார்.
நான் திரும்பி வந்தேன். நானும் இந்த வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஜாவா படித்துக் கொண்டே தான் இருக்கிறேன், இதுவரை உபயோகிக்கும் யோகம் வரவில்லை, இனிமேல் J3EE வேறு படிச்சு அதை வேற மறந்து போகணுமா.. ம்ஹ்ம்..
இனி ஒருமுறை அவர்கிட்ட போய் வேலை கேக்கறத விட பழையபடி ஒரு நாளைக்கு நாலு காபி, ரெண்டு சிற்றுண்டி, ஒரு பேருண்டின்னு நாளை ஓட்டிடலாம்னு பாக்கறேன்..
எல்லாம் ஒரு நாலு மாசம் கழிச்சு பாக்கலாம். இப்ப தான் இந்த தமிழ் மணத்தைக் கண்டுபிடிச்சிட்டோமே.
Monday, March 20, 2006
ஏன்???
இரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.
"அப்பா! அந்த பூனை குட்டி போட்டிருக்கே"
"நிஜமாவா? உனக்கு எப்படித் தெரியும்?" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.
"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா?"
"நம்ம வீட்டு கார் ஷெட்லயா?" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...
"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.
"அதுலயா படுத்துகிட்டிருக்கு?"
" ஆமாம்... ஏங்க?"
"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்".
"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே.." இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.
"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும்? கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா? மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க" விட்டால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.
"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா? நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்??!!!" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...
"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே.."
*** ***** ***
சாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி... பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.
தாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.
'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.
பெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.
நான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.
"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா" என்றேன் சுதாவைப் பார்த்து.
"அது ரொம்ப இன்டெல்லிஜன்ட் பூனைப்பா.. என்னை மாதிரி".. என்றான் வினு.
"அது சரி".
"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.
"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, "அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது.."
"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... " கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.
"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே" என்றேன் நான்..
"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா? "
"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ.." - சசிகலா...
"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்"
"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்."
ராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.
*** ***** ***
மறுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.
சசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். "வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.
புதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.
ஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.
இரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவில் கூட பங்கு கேட்கிறது.
ஒரு மாதமாக, வார இறுதியில் "வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.
*** ***** ***
அன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.
"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே?" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.
"அப்பா, மனு ... மனு... " அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.
வாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.
கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.
"என்னாச்சு சுதா? மனு எங்கே?"
நான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:
கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளம் கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.
இயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.
சுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.
கடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.
கேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்?!!...
சசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து அப்புறம் எல்லாருக்கும் பால் கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..
"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே"...
"வெளீல ஏம்பா போச்சு?!!! நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா..." சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.
சமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.
"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?"
"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது?!!! மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.
தலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.
வினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.
"அப்பா!, நான் ஒண்ணு கேட்கட்டா?"
"என்னடா வினு?" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.
"நம்ம வீட்டு பூனையை அந்த நாய் கடிச்சிடுத்து. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். "
என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.
"ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க?"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.
"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா"!! என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.
Thursday, March 16, 2006
முதல் பதிவு
முதல் முயற்சி
முதல் முதல்
கல்லூரிச் சாலையில்
நேர்முகம் காணப் போகும்
புது வருட மாணவி போல்
மனமெங்கும் பூப்பூத்திருக்கிறது
பயம் !!!
பொதுவாக என் பேச்சைக் கேட்பதற்கும் ஒருவரும் இல்லைன்னு ஒரு feeling உண்டு
இந்த சைட் பார்த்த போது, நான் மிகவும் மகிழ்ந்தேன். எப்படியும், யாராவது, சும்மா பொழுது போகாத போதாவது, தப்பி தவறியாவது, படித்துவிட மாட்டாங்களா??!!!
Soooo... நானும் வந்துட்டேன்!!!!!!