Monday, May 19, 2008

ஏன் இந்தக் கோடை…

ஜெய்சிங்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பான். ஆனால் பாடத்தில் படு சுட்டி. ஒரு தரம் சொன்னால் உடனுக்குடன் பிடித்துக் கொள்ளும் பஞ்சு மூளை அவனது. ரஜினி ஸ்டைல் போல, ‘ஒரு தரம் கேட்டால் ஓராயிரம் கேட்டது மாதிரி’ அவனுக்கு. அடுத்த முறை அதே பாடத்தை, அதே சொல்லைக் கேட்க போரடிக்கும் போலும், மீண்டும் மீண்டும் சொல்லித் தரப்படும் எதையும் அமர்ந்து காது கொடுத்து கேட்க மாட்டான். ஆனாலும் கூரிய மூளை; இந்த உலகத்தில் அதீத அறிவாளிகள் படும் எல்லா பிரச்சனைகளையும் இந்த வயதிலேயே படத் தொடங்கிவிட்டான் என்று நினைக்கையில் வருத்தம் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. மெல்ல எல்லாரையும் போல் சராசரி குழந்தையாக மாறிவிடுவான். :(
சாந்திக்கு தமிழ் வகுப்புக்கு வந்தால், தமிழைத் தவிர எல்லாம் பேசப் பிடிக்கும். தியா அல்லது நேகா பக்கத்தில் அவளை அமர்த்தவே கூடாது. ‘என் டோரா ஷூக்களை அப்பா வாங்கிக் கொடுத்தார். உன்னுடைய டிரஸ் புதிதா என்ன? எங்கே வாங்கினாய்?’, ‘இந்த தலையலங்காரம் உனக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. அம்மா செய்து விட்டார்களா?’ என்று விசாரிக்கவென்றே அவளுக்கு நிறைய விசயம் இருக்கும். டீச்சர் என்று பார்க்காமல் என்னிடம் கூட, ‘இந்த வெள்ளைக் காதணி ரொம்ப அழகாக இருக்கிறது. உங்க அம்மா வாங்கி கொடுத்தாங்களா?’ என்று கேட்டிருக்கிறாள். தப்பித் தவறி கூட ‘இ’க்கு அப்புறம் என்ன வரும் என்று கேட்டோ, இலையின் நிறம் பச்சை என்று சொல்லியோ நான் கேட்டதில்லை. அவள் புது ஷூவின் நிறத்தைத் தமிழில் சொல்லச் செய்து தான் நிறங்கள் பற்றி விளக்க முடியும் அவளுக்கு.
நேகா எனக்கு ரொம்பவும் பிடித்தமான மாணவி. இன்னுமொரு குறும்புக்காரி. கண்களால் நடிக்கவும், அழுதோ, அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டோ வேண்டியதை சாதிப்பது அவளின் கைவந்த கலை. படிப்பு என்பதை விட தமிழ்வகுப்பு அவளுக்கு பெரிய விளையாட்டுக் கூடம் தான். அந்த அழகான கண்களை உருட்டி அவள் கேட்கும்போதில் மறுக்க மனமின்றி பலநாள் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறையில் நின்றிருக்கிறேன். கடைசியாக பள்ளி இறுதி நாளில், தன் ரப்பர் பாண்டை எடுத்து வந்து தலையில் போட்டு விடச் சொன்ன அன்று, அந்தக் குட்டித் தலைக்குப் போட்டுவிடத் தெரியாமல் நான் முழிக்கவும், சிரித்துக் கொண்டே தன் அப்பாவிடம் ஓடிப் போனதை மறக்கவே முடியாது.
நிரஞ்சன் ரொம்பவும் கவனம் கேட்கும் குழந்தை. ஐந்து நிமிடங்களுக்கு ஒருதரம் அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்லும் பாவனையிலும், அழும் விதமாகவும் அது சட்டென மாறிவிடும். நல்ல பதில் சொன்னதற்காக சாஷ்வத் ஒரு ஹைபை(hi5) வாங்கினான் என்றால் அடுத்த கேள்விக்கு நிரஞ்சன் டாண் என்று யாரும் சொல்லுமுன் பதில் சொல்லிவிடுவான். எழுந்து குதித்ததற்காக வர்ஷா டைம் அவுட் வாங்கினாள் என்றால், அந்தக் கவனம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தானும் குதித்து டைம் அவுட் வாங்கினால் தான் அவனுக்கு மனசு ஆறும். ரொம்பவும் அதிக கவனம் கேட்கும் குழந்தை என்றாலும் புத்திசாலிப்பையன்.

ரித்விக்கும் வர்ஷாவும் ரொம்ப புத்திசாலி. ரித்விக்குக்கு கொஞ்சம் பூஞ்சை உடம்பு, வர்ஷா, வகுப்பின் மற்ற பிள்ளைகளை விட அதிகம் நல்ல தமிழ் பேசுபவள். ஆனால் இருவரும் சுலபமாக சமத்திலிருந்து குறும்புக்காரப் பிள்ளைகளாக மாறுவதில் வல்லவர்கள். யாராவது ஒரு சின்ன பொறியைக் கிளப்பிவிட்டால் போதும், டக்கென எழுந்து விழுந்து புரண்டு, அடுத்தவர்கள் மேல் குதித்து கலவரத்தை உண்டாக்குவது அவர்களுக்குக் கைவந்த கலை. ‘நல்ல பையன் யாரு??’ ‘நல்ல பொண்ணு தானே நீ?’ என்ற ஒற்றைக் கேள்வியில் சட்டென உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சாஷ்வத், ப்ரீத்தி, தியா, சூர்யா இவர்கள் நால்வரும் பிள்ளைகள் தானா என்று சந்தேகம் ஏற்படுத்தும் விதமான அமைதியான குழந்தைகள். சாஷ்வத் எல்லா நாளும் வகுப்புக்கு வந்துவிடுவான். ரொம்பவும் நல்ல பையன். சொன்னதைக் கேட்டு, ரொம்பவும் குறும்பு செய்யாமல், எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லி, அந்தந்த வாரப் பாடங்களைச் சரியாக கவனித்து, வகுப்பில் முதல் மாணவன் என்றால் மிகையில்லை.
ப்ரீத்தியும் ரொம்ப அமைதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வகுப்பு கவனிக்கக் கூடியவள் அவள் மட்டும்தான். மேலே வந்து விழுந்து விளையாடும் பிள்ளைகளையும் தள்ளாமல், தான் நகர்ந்து உட்கார்ந்து படிக்கக் கூடியவள்.
தியா பொதுவாக தனி உலகத்தில் இருப்பாள். சாந்தி, வர்ஷா என்று வேறு பெண்கள் அருகில் அமர்ந்தால் மட்டும் கொஞ்சம் கதை பேசுவதுண்டு. மற்றபடி அமைதிக் கடல் தான் அவளும். எண்கள் சொல்ல வைக்க வேண்டும் என்றால் கூட அவளின் உடையில் உள்ள பூக்களையோ, செருப்பில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளையோ தான் எண்ண வைக்க வேண்டும். ஆனாலும் அதுவும் ஒரு பஞ்சு மூளை தான்; என்ன, தன்னுடைய சின்ன உலகத்தை விட்டு வெளியே வந்து நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தான் நேரமெடுக்கும்.
சூர்யா அடுத்த வித்தியாசமான பிள்ளை. சொல்வதைக் கேட்டு அப்படியே கிரகித்து, நினைவில் இருத்தி பதில் சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால் யாராவது தொடங்கி வைத்தால் குதிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜே பாடினால் கூட சேர்ந்து பாடுவான், வர்ஷா குதித்தால் கூட சேர்ந்து குதிப்பான். வருண் அறையின் விளக்கை அணைத்தால், தானும் செய்வான். கலவரத்தில் யாராவது கீழே தள்ளினால் கூட அழத்தெரியாத பிள்ளை அவன்.
வாரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இது போன்ற ஒரு சூழ்நிலையில், இந்த அழகான பூக்களின் நடுவில் இருந்து குதிக்கும்போது குதித்து, பாடும்போது பாடி, ஒருங்கிணைத்து வேலைசெய்து என்று அது ஒரு நல்ல ஓய்வு நேரமாக இருந்தது இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் இங்கே கோடை விடுமுறை. இன்னும் மூன்று மாதங்களுக்குப் பள்ளி இல்லை. இந்தப் பிள்ளைகளை இனி் பார்க்க செப்டம்பர் வரை பொறுக்க வேண்டும். அப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு நான் இனி ‘ப்ரீஸ்கூல் ஒன் டீச்சர்’. அடுத்த வருடம் வேறு வகுப்பு, வேறு ஆசிரியர், புதிய பாடங்கள், வேறு புதுப் பாடல்கள்.
ஆனால் செப்டம்பரில் வேறு புதிய மனிதர்கள் எனக்கும் கூடத் தான் அறிமுகமாவார்கள், என்றபோதிலும், இந்த வகுப்பு இப்போது கொஞ்ச நாட்களுக்கு இருக்காது என்பது பெரிய வருத்தம் தான். ‘மூஊஊஊன்று மாதங்களா கோடை விடுமுறை தருவார்கள்? அதிகமாக இல்லை?!’ என்று குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதுவரை இந்த உயிரற்ற, ஓடாத கணினிப் பெட்டிகளைத் தட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்!
பின்குறிப்பு: கலிபோர்னியா தமிழ் அகதமி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்மொழி சொல்லிக் கொடுக்கும் மகிழ்ச்சியான வேலையைப் பற்றித் தான் இந்த இடுகை. தென்றலில் அகதமி.
Hi5 - இங்கே வளரும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாராட்டு போல. நம் கைகளை நீட்டினால் அவர்கள் தம் பிஞ்சு கைகளால் அதை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்
TimeOut: தண்டனை தான். நம்ம ஊரில் ‘கிளாஸுக்கு வெளியே நிறுத்திவிடுவேன்’ என்று சொல்வதை இங்கே வகுப்புக்கு உள்ளேயே தனியே சேர் போட்டு ஐந்து பத்து நிமிடம் உட்கார வைத்து தண்டிப்பது.

No comments: