Sunday, May 18, 2008

Beyond the Gates - அந்தக் கதவுகளுக்கு அப்பால்

எதேச்சசையாகத் தான் கையிலெடுத்த படம், ஆனால், தூக்கத்தை முழுமையாக மறக்கடித்துவிட்ட படம்- Beyond the Gates
1994இல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 1994இல் ருவாண்டாவில் ஈகோல் என்ற ஐரோப்பிய நாடுகளால் நடத்தப்பட்டப் பள்ளி ஒன்றைச் சுற்றிய படம்.

கிறிஸ்டோபர் என்ற பாதிரியார் நடத்தும் இந்தப் பள்ளியின் வேலை செய்யும் ஜோ என்ற ஆசிரியர் தான் நாயகன்; ஒரு விதத்தில் ஜோவின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர அவனிடம் எந்த கதைநாயக குணத்தையும் திணிக்காமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ருவாண்டாவின் டூட்ஸி மற்றும் ஹூடு இனத்தின் இரு பிரிவாரும் படிக்கும் இந்தப் பள்ளியில் எல்லா விதமான பாடமும் எடுக்கும் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியர் ஜோ. ஆசிரியருக்குப் பிடித்தமான மாணவி மரியா, ஒரு டூட்ஸி; ஓட்டப் பந்தைய வீராங்கனையும் கூட. நாடு அமைதியாக இருந்த போது எல்லாம் நன்றாக இருக்கிறது. கள்ளங்கபடமில்லாத ஆப்பிரிக்க மக்களுடன் ஜோ கலந்து பழகி மகிழ்ச்சியாக வாழ்கிறான். பாதிரியார் கிறிஸ்டோபர் அந்தப் பக்கத்து மக்களுக்கு மட்டுமின்றி ஜோவுக்கும் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
மெல்ல நிலமை மாறுகிறது. ஹூட்டு இனத்தவரான ருவாண்ட ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்படுகிறார். உலக நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை ஈகோல் பள்ளியில் தனது மையத்தை அமைத்துக் கொள்கிறது. அமைதிப் படை தளபதி, ‘தன்னுடைய வேலை அமைதி காப்பது மட்டுமே அன்றி (இந்த விவகாரத்தில் தலையிட்டு) அமைதி உருவாக்குவது இல்லை’ என்பதில் தெளிவாக இருக்கிறான். இந்த நிலையில் ஹூட்டூ இனத்தவர்கள் டூட்ஸி இனத்தவர்களைத் தேடித் தேடிக் கொல்லும் இனப்படுகொலை மெல்ல தொடங்குகிறது. டூட்ஸி மக்கள் பாதுகாப்பு வேண்டி ஈகோல் பள்ளிக்கு வந்து சேருகிறார்கள். முதலில் ஜோவுடன் கூடவே இருக்கும் ஹூட்டூ இனத்தவனான பிரான்ஸுவா மக்கள் அதிகம் வர வர விடுவித்துக் கொண்டு வெளியேறிவிடுகிறான். ஹூட்டூக்களுக்கும் டூட்ஸிக்களுக்குமிடையில் இருக்கும் பகைமையும் பரஸ்பர நம்பிக்கையின்மையும், வெறுப்பும் ஜோவுக்கு அதிசயமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் அறையும் நிஜமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் பள்ளியில் சிக்கியிருக்கும் வெள்ளைக் காரர்களை மட்டும் அழைத்துப் போக பிரஞ்சு அரசாங்கத்தின் இராணுவ வண்டிகள் வருகின்றன. பிரான்ஸுவா, உயிர்காக்கும் மருந்து விற்கும் மருத்துவக் கடைக்காரன் என்று ‘நல்லவர்களாக’ அறியப்பட்ட ஹூட்டூக்கள் கூட கூட்டத்துடன் சேர்ந்து இனப் படுகொலை நிகழ்த்துவதைப் பார்த்து ஜோ திகைத்துப் போகிறான். இத்தனையும் பார்த்துக் கொண்டு ‘தற்காப்புக்காக மட்டுமே எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அமைதிப்படைத் தளபதியோடு அவ்வப்போது பேசினாலும் தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது.
கடைசியாக உலக நாடுகள் சபை, தனது அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கும் போது, ஜோ மற்றும் கிறிஸ்டோபரால் எதுவும் செய்ய இயலாமல் போகிறது. உயிர்ப் பயம் மேலோங்க ஜோ மட்டும் அவர்களுடன் கிளம்புகிறான். கிறிஸ்டோபர் மிச்சம் இருக்கும் ஒரே ஒரு வண்டியில் குழந்தைகளை மட்டும் ஏற்றிக் கொண்டு அவர்களையும் மறைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறுகிறார். பள்ளியின் எல்லைக் கதவுகளுக்கு அப்பால் இதற்காகவே காத்திருந்த ஹூட்டூக் கொலைகாரக் கும்பல் கூச்சலோடு உள்ளிருப்பவர்களை ஒரேயடியாக வெட்டிச் சாய்க்க முன்னேறுகிறது.
குழந்தைகளுடன் வண்டி ஓட்டிச் சென்ற கிறிஸ்டோபரை அவருடைய நண்பனான மருந்துக் கடைக்காரனே ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து பேச்சு வார்த்தை முற்றுகையில் கொன்று விடுகிறான். இந்தப் பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் மெல்ல தப்பித்து வெளியேறும் மரியா மட்டும் தப்புகிறாள்; உயிருக்காக ஓடுகிறாள். தடகள வீராங்கனையாக பயிற்சி பெற்றது இப்போது உயிர்காக்க, ஐந்து வருடங்கள் கழித்து ஆசிரியர் ஜோவை எங்கெல்லாமோ தேடி கண்டுபிடிக்கிறாள்.
‘அன்னிக்கு எங்களை ஏன் விட்டுட்டு வந்தாய் ஜோ?’ என்று அவள் கேட்கவும்,
‘உயிர்ப்பயம் தான் காரணம்’ என்கிறான் ஜோ.
‘கடவுள் நமக்கு வாழக் கொடுத்திருக்கும் வாய்ப்பே ரொம்ப சின்னது. அதில் முடிந்தவரை அதிகம் அடுத்தவங்களுக்காக உதவி செய்யப் பார்க்கணும்’ என்று மரியா சொல்வதோடு படம் முடிகிறது.
1994 இனப் படுகொலைகளில் எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்தும் உயிர்தப்பிய ஒரு சிலரின் உதவி கொண்டே இந்தப் படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. குடும்பம் முழுவதையும் இழந்தவர்கள், தாயை, தந்தையை, கணவனை, பெற்ற பிள்ளையை இழந்தவர்கள், வன்புணரப்பட்டவர்கள் என்று இழப்புகளை மீறிச் சாதித்துக் காட்டிய திரைப்படக் குழுவினரையும் இறுதியில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
இனம், மதம் போன்ற பிரிவினைகள் படுகொலை அளவுக்குப் போகும்போது அவற்றின் உள்ளார்ந்த வெறி, மனிதனின் நல்ல பக்கத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு விடுகிறது. நேற்று பிறந்த குழந்தை வரை கையிலிருந்து பிடுங்கிக் கொல்லத் தோன்றுகிறது. கொலை நடந்த நாட்களில் உதவாத மற்ற தேசங்கள், அந்த நேரம் தனது அமைதிப் படைகளை திரும்ப அழைத்துக் கொண்ட உலகநாடுகள் சபை என்று எல்லாம் முடிந்த பின்னர் வந்து துக்கம் கேட்கும் வழக்கம் தனி மனிதருக்கு மட்டுமில்லை, அமைப்புகளுக்கும் அதே தான். முக்கியமாக உலக நாடுகள் சபை, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை என்று உணர்ந்தும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்ததையும், ‘ருவாண்டாவில் நடந்ததை ஒரு இனப் படுகொலை என்ற பெயரிட்டு அழைக்க முடியாது. அது ஒரு உள் நாட்டுக் கலவரம் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும்’ என்று விளக்கம் வேறு சொல்வதையும் முதற்கருத்தாக எடுத்துக்காட்ட வந்த படம், இன்னும் மேலே போய், பிபிசி போன்ற உலக அளவில் பெயர்பெற்ற தொலைக்காட்சி நிருபர்கள் கூட ‘எங்கள் பள்ளியில் நிறைய வெள்ளையர்களும் உயிருக்காக ஒளிந்திருக்கிறார்கள்’ என்று சொன்ன பின்னர் தான் அதைப் படம் பிடிக்க வரவே தயாராக இருக்கிறார்கள் என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியும் அழகாக, உண்மையை அப்படியே எடுத்திருப்பது போல இருக்கிறது. பிபிசி நிருபரை அழைத்து வரப் போய் அரிவாள் முனையில் நிறுத்தப்பட்டு பல நாள் பழகிய நண்பனையே கொலைகாரனாக பார்த்து அதிர்ந்துபோய் ஓடிவரும் ஜோ, இந்தக் களேபரத்தில் பிறந்த குழந்தையின் உடல்நலத்துக்காக உயிரைத் திரணமாக மதித்து வெளியே போய் ” ஒரு ஹூட்டூ இனக் குழந்தைக்கு’ என்று பொய் சொல்லி மருந்து வாங்கி வரும் பாதிரியார் கிறிஸ்தோபர், கடைசியாக ஜோவும் கிளம்பும்போது, ‘நீயும் போறியா ஜோ?’ என்று கேட்டுக் கலங்கவைக்கும் மரியா, தன் மகள் பற்றிய கவலையின்றி மற்ற குழந்தைகளை முதலில் காப்பாற்ற வண்டி ஏற்றிவிட்டு பின்னர் இடமிருந்தால் மரியாவுக்கும் என்று கேட்கும் அவளின் தந்தை..இதைப் படிப்பதை விட, படம் பார்த்தால் தான் அதன் தாக்கத்தை உணர முடியும்.
விட்டுப் போன ஒரே கேள்வி என்னைப் பொறுத்தவரை, இத்தனை டூட்ஸிக்கள் பள்ளியில் மொத்தமாக கூடி நிற்கும்போது அவர்களால் சேர்ந்து சண்டை போடக் கூட முடியாதா என்ன? இப்படி அடிவாங்கிக் கொண்டே இருக்க எந்த மனித இனத்தாலும் முடியாது. ஏதாவது ஒரு சின்ன டூட்ஸி கூட்டமாவது திருப்பி அடிக்காமலா இருந்திருக்கும்? அந்தப் பகுதியை ஏன் இந்த இயக்குனர் சேர்க்கவே இல்லை?!
ரூவாண்டாவின் சரித்திரம் பற்றி மேலும் படிக்கவேண்டும் என்ற ஆவலை இந்தப் படம் கிளப்பி விட்டிருக்கிறது. முடிந்தால் டூட்ஸிக்கள் திருப்பி அடித்தார்களா? ஏன் ஹூட்டுக்களுக்கு மட்டும் உலகநாடுகள் சபை பரிய வேண்டும்? ரூவாண்டாவின் இன்றைய நிலை என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடி எடுக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், இன்னும் எத்தனை இனப்படுகொலைகள் இதே போல் உள் நாட்டுப் போர் என்று மூடி மறைத்துக் கொண்டு, எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ‘உண்மைக் கதை’ எடுத்துக் கொண்டிருக்கப் போகிறோமோ? என்ற கேள்வியை எழுப்பிய வகையின் இயக்குனர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்…
இயக்குனர்: மைக்கல் கான்டன் ஜோன்ஸ்( Michael Caton-Jones)
கதையாசிரியர்: டேவின் வோல்ஸ்டன்க்ராப்ட் (David Wolstencroft)
வருடம் : 2007

No comments: