Sunday, August 26, 2007

‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)

ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு என்றவுடன் ‘ஓ! வச்சிக்கலாமே!’ என்று பெரிதாக தலையாட்டியது நான் தான். ஆனால், அன்றைய மிக முக்கியமான சில அப்பாயிண்டமெண்ட்கள், அந்த நாள் முழுவதையுமே அடித்துக் கொண்டு போகக் கூடியவை என்பது அப்போது தெரியவில்லை…
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று கிட்டத்தட்ட பத்து வருடம் ஒன்றாக பழகிய ஒரு தோழனின் திருமணம், அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன், ஒரு சமயம் அறைத்தோழியாகவும் இருந்த நெருங்கிய தோழியின் அண்ணன் திருமணம் என்று இரண்டு முக்கிய நிகழ்வுகளும், இந்த இரண்டிலும் கலந்துகொள்ள இவர்கள் போலவே இன்னும் நெருங்கிய தோழி சென்னை வந்திருந்ததுமாகச் சேர்ந்து ‘வலைப்பதிவர் சந்திப்புக்குத் தலைகாட்டவும் முடியுமா?’ என்றே சந்தேகமாகிவிட்டது..
எப்படியோ தோழியிடம் அனுமதி பெற்று, ஐந்தேகாலுக்கு சந்திப்புக்குப் போய்ச்சேர்ந்து, ஆறேகாலுக்கு கிளம்பவேண்டியதாகிவிட்டது.
யார் என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.
* நான் போனபோது மா.சிவகுமார் பதிவர் பட்டறை குறித்து எல்லாரையும் பேச வைத்துக் கொண்டிருந்தார். இராம.கி ஐயா, சொர்ணம் சங்கரபாண்டி, சுந்தரவடிவேல் என்று வரிசையாக எல்லாரும் பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்துப் பேசினர். கருத்து சொல்லும் அளவுக்கு அவர்களின் பேச்சைப் பின்பற்றவில்லையாதலால், அறிமுகம் கொடுக்க நேர்ந்த போது பேசிவிட்டு வெளியே வந்து காபிக்கு ஆர்டர் கொடுத்தேன்.
* சங்கரபாண்டி பதிவர் இல்லையாம்! பின்னூட்டம் மட்டுமே இடுவாராம்! அவரின் கூர்மையான பின்னூட்டங்களைப் பலவிடங்களிலும் படித்திருந்ததால், என்னால் நம்பவே முடியவில்லை.
* சுந்தரவடிவேலிடம் கடைசியாகச் சொல்லிக் கொண்டு கிளம்பவே நேரமிருந்தது. போன ஒரு மணி நேரத்திற்கு தமிழ்மணம் டீசர்ட் லாபம்! ;)
* தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க வேண்டிய அவசியமின்மையையும் இந்திய நேரத்தில் தமிழ்மண தொழிற்நுட்ப உதவி கிடைக்காமல் போவது பற்றியும் சொல்லிவிட்டு ஓடவேண்டியதாகவிட்டது..
* அங்கும் இங்கும் சித்தார்த் துபாயிலிருந்து வந்திருந்தார். சில வார்த்தைகள் பகிர்ந்து கொண்டதுடன் தொலைபேசுவதாக சொன்னேன்.. பேச வேண்டும்
* நந்தாவின் புத்தகங்களைத் திருப்பிவிட்டு வேறு ஒரு புத்தகம் பெற்றுக் கொண்டேன்.
* அண்ணன் உண்மைத்தமிழன் அமைதியாக அமர்ந்திருந்தார். எங்கள் எல்லாரையும் விட அவரின் விவரக் குறிப்பு தெளிவாகவே வரும் என்று நம்புகிறேன்.
* அதியமான் வழக்கம் போல சலம்பிக் கொண்டிருந்தார் ;). நதியக்காவின் புத்தகம் என் கைக்கு வரும்முன்னரே வாங்கிப் பார்க்க முயன்றார். “கவிதைப் புத்தகம், உங்களுக்கு உதவாது” என்று நான் சொல்லவும், ” ஏன், இப்ப கூட மாசி வச்சிருக்கார் பாருங்க அந்தக் கவிதைப் புத்தகம் நான் படிச்சிட்டு கொடுத்தது தான்” என்றார். அப்படி என்ன புத்தகம் என்று பார்த்த போது அது சுஜாதாவின் புறநானூறு… !
* நதியக்காவின் சூரியன் தனித்தலையும் பகல் எப்படியும் நண்பர்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். அக்காவுக்காவது ஒரு காப்பி மிச்சமாகும் என்று நினைத்து சொன்னேன்.. ஆனால் “இல்லை இல்லை உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கணும். நீங்க முக்கியமானவர்” என்று சொல்லி கையில் கொடுத்துவிட்டார்..
* இரண்டு மூன்று புதிய பதிவர்கள், சில பின்னூட்டக்காரர்கள், பதிவர் பட்டறையில் பதிவு தொடங்கிய நண்பர்கள் சிலர் என்று புதியவர்களும் வந்திருந்தார்கள்.
* சொந்த சோகம் இருந்தாலும், பதிவர் சந்திப்பை விட்டுக் கொடுக்காமல் வந்திருந்தார் லக்கிலுக். சீக்கிரமே கிளம்பிவிட்டதாக சொன்னார்கள்.. ஆனால் அவரை விட சீக்கிரமாக நான் கிளம்பிவிட்டேன்..
* வினையூக்கியின் அதிர்ச்சி பரவாயில்லை என்னுமளவுக்கு எனக்கு அதிர்ச்சி - பதிவர் பட்டறை அன்று வினையூக்கி சொன்னாரே என்று, நான் தமிழ்99 சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது சுரதாவுக்கும் அவரின் தம்பிக்கும் தான் என்று அறிந்த போது…
“எனக்குத் தமிழ்த்தட்டச்சு தெரியும், தமிழ்99 எண்டால் நாங்கள் மீண்டும் சொல்லிக் கொள்ள வேணுமோ?” என்று அவர்களில் ஒருவர் கேட்ட போது, “தட்டச்சு தெரிந்தால் நீங்கள் பாமினி முறைப்படி தட்டலாம்.. ஆனால் அது எனக்குப் பழக்கமில்லையே!” என்றேன். “எனக்கு பாமினி தெரியும். நான் அப்புறம் சொல்லிக் தாரேன்” என்று அப்போதைக்கு காப்பாற்றியவரும் சுரதா தான்.
அகிலனைப் பற்றி அவர்கள் விசாரித்ததால், இவர்கள் அகிலனின் நண்பர்கள் என்றும் அது காரணமாகத் தான் பதிவர் பட்டறைக்கு வந்திருக்கிறார்கள் என்றும் நினைத்திருந்தேன். காசியைப் பார்க்க வேண்டும் என்று பட்டறையன்று சுரதா கேட்டதற்காக அவருடன் கொஞ்சம் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிய போதும், இவர் சுரதாவாக இருக்கக் கூடும் என்று நினைத்திருக்கவில்லை..
இப்படி ஒரேயடியாக, சுரதாவுக்கே தமிழ் தட்டச்சக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்தது கூட இல்லை! சந்திப்பன்று ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ என்று கேட்டால், “என்ன அக்கா, உங்கள் மாணவன் எண்டால் பெருமை தானே! ” என்று சேம் சைட் கோல் வேறு!
சுரதாவுக்கு எங்களின் முக்கியமான வேண்டுகோள்: மாறுவேடத்தில் வந்து நல்லா பீதியைக் கிளப்பிட்டீங்க.. ஊருக்குப் போன பின்னாடி, பட்டறையைப் பற்றிய உங்க அபிப்பிராயத்தை எழுதினால், செப்பனிட எங்களுக்கு உதவியாக இருக்கும்..
பிகு: பதிவர் சந்திப்புகள் திகட்டும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறதாக எனக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.. இந்தமுறை அதிகம் கலந்துரையாடல் இல்லாத சந்திப்பாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம். பதிவர் பட்டறை போன்ற பெரிய அளவிலான நிகழ்வுகள் நடந்தபின் சந்திப்புகள் மிகவும் தேக்கமடைந்ததாக தோன்றுகிறதோ என்னவோ..
எனவே பொன்ஸின் கருத்து கந்தசாமி சொல்வது என்னவென்றால்,
* கூடியவரை அதிக இடைவெளி விட்டு அடுத்தடுத்த சந்திப்புகள் நடத்தலாம்.
* பதிவர் பட்டறையை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ஏற்கனவே பதிந்து கொண்டிருப்பவர்களுக்கான கணினிப் பயிற்சியையும் பதிவர் சந்திப்பையும் சேர்த்து ஏற்பாடு செய்தால் ஒருவேளை இன்னும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையலாம்..

1 comment:

பொன்ஸ்~~Poorna said...



//தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க வேண்டிய அவசியமின்மையையும் இந்திய நேரத்தில் தமிழ்மண தொழிற்நுட்ப உதவி கிடைக்காமல் போவது பற்றியும் சொல்லிவிட்டு ஓடவேண்டியதாகவிட்டது..//

வழிமொழிகிறேன். புதிய பதிவுகள் சேர்க்கப்படுவதற்கும் நாள்கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்திய நேரத்தில் இருந்து இயங்கக்கூடிய இன்னும் சிலரை தமிழ்மணம் நுட்பக் குழுவில் இணைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்
Comment by ravishankar — August 29, 2007 @ 8:20 pm

//* பதிவர் பட்டறையை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ஏற்கனவே பதிந்து கொண்டிருப்பவர்களுக்கான கணினிப் பயிற்சியையும் பதிவர் சந்திப்பையும் சேர்த்து ஏற்பாடு செய்தால் ஒருவேளை இன்னும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையலாம்.//

நல்ல திட்டம் பொன்ஸ்..
Comment by யெஸ்.பாலபரதி — August 29, 2007 @ 9:43 pm

என்ன, இன்னும் உங்களின் தளத்தை தமிழ்மணத்தில் சேர்க்கவில்லையா?! :-))
Comment by வெற்றி — August 30, 2007 @ 9:56 am

நல்லாசிரியர் விருது குடுக்கலாம் போலயே அக்காக்கிட்ட படிக்கறது அத்தனை பெரிய விசயமாட்டம் இருக்கு.
Comment by முத்துலெட்சுமி — August 30, 2007 @ 1:03 pm

பதிவுக்கும் சந்திப்புக்கு வருகை தந்தமைக்கும் நன்றி.

பின்னர் இதுபற்றி விரிவாக எழுதுகிறேன்.

இந்தப் பக்கம் தமிழ்மண இடுகையில் இல்லையா?

எங்கெல்லாம் சுற்றித்தான் இந்த இடுகையை கண்டுபிடிக்கமுடிந்தது.
Comment by suratha — September 2, 2007 @ 6:51 pm

முழுமை பெறவில்லை