எங்க அக்கா (பெரியம்மா மகள்) கல்யாணம் நடந்து முடிந்த அன்று இருந்தது
போன்ற, நிறைவு, மகிழ்ச்சி, சலசலப்பு, களைப்பு, நிம்மதி, கூட இன்னும் கூட
நல்லா செய்திருக்கலாமே என்ற ஏக்கமும் நிறைந்திருக்கிறது… சனி மதியம் ஒன்றரை
மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான்
ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்..
வாங்க வேண்டிய டேப், பிசின், கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், சார்ட் பேப்பர்
என்று லக்கி மற்றும் இவானுக்குப் பட்டியல் போட்டுக் கொடுத்து அவர்களை
அனுப்பி விட்டு, feedback formகளுக்கான கேள்விகளையும், ஒழுங்கையும் டிசைன்
செய்து நிமிருகையில் குறுவட்டுக்கள் வந்திறங்கின. இரண்டாம் வகுப்புக்குப்
பிறகு ஒன்றிலிருந்து இருநூற்றைம்பது எண்ணியது இப்போதான் முதல் முறை
வாங்கி வைத்துவிட்டு பார்த்தால் பேனர்கள் வந்திறங்கின. பிரித்துச்
சரிபார்த்துவிட்டு அவற்றை ஆட்டோவில் போட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி
வைத்துவிட்டு ஒழுங்கு செய்திருந்த பின்னூட்ட பாரத்தை அச்செடுக்க பதிப்பகம்
போனேன்.
‘கிளம்பும் நேரம் வரீங்களே’, என்று அலுத்துக் கொண்டே அச்சிட்டுக்
கொடுத்தார்கள் மாணவர் மறுபதிப்பு அச்சகத்தில்.. பிரதிகளை எடுத்துக் கொண்டு
பல்கலைக்கழகம் வந்த போது,
1. கணினிக்கள் தயாராக இருந்தன. ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார்கள் ஜேகேவும் வினையூக்கியும்
2. செல்லா, நந்தா, அருள்குமார், ஜெய், சிவகுமார், சுந்தர் எல்லாம் சேர்ந்து
மறுநாள் கொடுக்க வேண்டிய பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்
3. பாலாவும் லக்கியும் குறுவட்டுகளையும் இன்னும் விடுபட்ட பேனர் முதலானவற்றையும் எடுத்து வந்துகொண்டிருந்தனர்.
4. விக்கி அடுத்த நாளுக்கான கலந்துரையாடல் திட்டத்தை மாற்றி,
மறுசீரமைத்துக் கொண்டிருந்தார். புதிய பேச்சாளர்களிடமும் பேசி
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்
என் பங்குக்கு நானும் சில கணினிக்களைச் சோதித்து பார்த்து, இகலப்பை,
பையர்பாக்ஸ் என்று மென்பொருள் நிறுவிவிட்டு கிளம்பி வீடு சேர்ந்த போதே
பதினொன்றாகிவிட்டது.. செல்லா முதலானோர் கிளம்ப இன்னும் தாமதமாகிவிட்டதாக
கேள்வி…
காலை எழும்போதே ஜெயா போன் செய்து என் பொறுப்பில் நான் எடுத்து வர
வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டார். ஜேகே தன் பங்குக்கு, ‘நீங்க
வராட்டாலும் பரவாயில்ல, அந்த எக்ஸ்டெசன் கேபிளை அனுப்பி வச்சிடுங்க’ என்று
பீதியைக் கிளப்பினார்..
ஏழரைக்கே கணினிகள் இணைப்புகளுடன் தயாராக இருந்தன. வினையூக்கி இன்னமும்
சோதனை செய்து கொண்டிருந்தார். பரிமேலழகர் அறையில் செய்முறைப் பயிற்சியும்,
திருவள்ளுவர் அறையில் செய்முறை விளக்கமும் என்று எழுதி ஒட்டிவிட்டு,
நிகழ்ச்சி நிரலையும் எழுதி வைத்தோம். கிழக்குப் பதிப்பகத்தின் ப்ரோஜக்டரை
நிறுவி சோதித்தோம். இதற்குப் பிறகு கீழே அரங்கத்துக்கும் எனக்கும் தொடர்பே
இல்லாமல் போய்விட்டது எனலாம்..
முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள்,
விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம்
கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள்
மாணவர்கள்.
அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம்
அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும்
சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா
எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!
HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி,
HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும்
விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள்,
கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின்
நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக்
கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம்
இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!
காலை சென்னை வந்திறங்கி வூட்டம்மாவைக் கூட பார்க்கப் போகாமல் நேரே பதிவர் பட்டறைக்கு வந்த பெனாத்தல் சுரேஷ், பிளாஷ் அறிமுகம் கொடுத்தார்.
செய்முறை விளக்க வகுப்புகளில் இறுதி வகுப்பாக அமைந்த இந்த நிகழ்வையும்
மக்கள் அதி ஆர்வத்துடன் கவனித்து கேட்டார்கள். மற்ற வகுப்புகளைவிட இந்த
வகுப்புக்கு கூட்டம் அதிகம். மேசைகள் ரொம்பிப் போக, தரையில் அமர்ந்தெல்லாம்
பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
சுழற்சி முறையில், வினையூக்கி, நான், ஜேகே, சுந்தர், ஜெயா, கோபி,
ஸ்ரினிவாசன் என்ற கடலூர்க்காரர் எல்லாரும் பரிமேலழகர் அறையில் பதிவு
தொடங்கிக் கொடுப்பது, ஜிமெயில் கணக்கு, தமிழ்99 தட்டச்சு என்று ஆரம்ப பாடம்
எடுத்தோம். கற்றுக் கொண்ட சில மாணவர்கள், தாமே நண்பர்களுக்குச் சொல்லிக்
கொடுத்த போது நிறைவாக இருந்தது. டோண்டு சார் கூட யாருக்கோ பதிவு தொடங்கச்
சொல்லிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தேசிகனும் சிலருக்கு
பதிவுகள் தொடங்கிக் கொடுத்தார்.
கலந்துரையாடல் அரங்கமும், செய்முறை விளக்க வகுப்பும் - இரண்டுமே
போரடிப்பதாக தோன்றம் நபர்கள் வந்து கற்றுக் கொள்ளவே செய்முறை பயிற்சி
அறையான பரிமேலழகர் அறையை வைத்திருந்தோம். மதியத்திற்கு
மேல் பரிமேலழகரில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்ததைப் பார்த்தபோது
மகிழ்ச்சியாகவே இருந்தது.. மக்கள் கலந்துரையாடலையும், செய்முறை
விளக்கத்தையும் ரசித்துக் கேட்பதற்கான அறிகுறியல்லவா அது?!
மாலை வலைப்பதிவுகள் சார்ந்த புதிய முயற்சிகள் பற்றி அரை மணியில்
தொகுத்து, அடுத்த அரை மணியில் அறிமுகம் கொடுத்து என்று அதுவும் ஒரு
த்ரில்லாகி விட்டது.. எழுத்துரு மாற்றப் பயிற்சி, ஏற்கனவே தமிழிணையத்தில்
இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் என்றுவிட்டார் கோபி. கடைசியாக அதில்
ஆர்வம் காட்டிய எனக்கும், க்ருபாசங்கருக்கும் மட்டும் தனி பயிற்சி
வகுப்பாக exclusiveஆக சொல்லிக் கொடுத்தார் கோபி..
சுவையான சில:
* லக்கியின் புகைப்படம் சீர்ப்படுத்துதல் வகுப்பை ஆர்வமாக விரும்பிய
டோண்டு சார் மதியத்திற்கு மேல் கிளம்பிவிட்ட படியால் அந்த வகுப்பு நடத்தும்
ஆர்வம் லக்கிக்கும் குறைந்துவிட்டது.
* மேலிருந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஓடிக் கொண்டிருந்தபோது,
‘என்னம்மா, நின்னு பேச மாட்டேங்கறீங்க!’ என்றார் அருணா ஸ்ரினிவாசன். ‘அவங்க
கல்யாண வீட்டுக்காரங்க.. அப்படித்தான் பரபரப்பா இருப்பாங்க’ என்று பதில்
சொல்லி கலாய்த்தார் காசி
* புதுவையிலிருந்து இரா. சுகுமாறன் வந்திருந்தார்.
* ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் - இவற்றில் செய்தியைப் பார்த்துவிட்டும்
சிலர் வந்திருந்தார்கள். அதிலும் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் மாலதி
பதிவுகளைக் கவனிப்பதாக சொன்னார்.
* நமது கல்வித்திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்
ரிடையர்டு ஆசிரியர் ஒருவர் தம் மனைவியுடன் வந்திருந்தார். பதிவுகள் தொடங்க
ரொம்பவே ஆவலாக இருந்தார்
* நாளிதழ்களில் எழுதும் மற்றுமொரு எழுத்தாளர், முதியவர், வலைப்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வந்திருந்தார்
* ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஆங்கிலத் தளம் ஒன்றில் அங்கமாக இருக்கும்
பெண் ஒருவர் தமிழில் இதை எப்படிச் செய்வது? என்று கேட்டுக் கொண்டு
வந்திருந்தார்
* மாணவ, மாணவிகள் அதீத ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள்.. காலை சிஃபி
இணைப்பு மிகவும் மோசமாக இருந்த போதும், கிட்டத்தட்ட 50 புதிய
வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் உருவாக்கி இருப்போம்..
* சி என் என், விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், உண்மை, ஜெயா டீவி
நிருபர்கள் வந்தது மட்டுமே எனக்குத் தெரியும்.. வேறு யார் யார் வந்தார்கள்
என்று கலந்து கொண்டவர்கள் சொன்னால் தான் உண்டு
இப்போதைக்கு இவ்வளவு தான்.. மற்றவை அவ்வப்போது நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்…
ஆரம்பத்துல இத்தினி அமைதியாத்தான் இருந்திச்சு அரங்கம்
அப்பாலிக்கா தான் இப்படி ஆகிடுச்சு….
அஜண்டா எல்லாம் எளுதி பக்காவாக் கீது பாரு..
ஞாயித்திக் கிழமை சென்னையில் நில நடுக்கம்னு நியூஸ் வந்திருக்குமே?!
ஓ… இட்லிவடை சுடத் தான் இத்தினி வேகமா?!
பாலபாரதியின் நண்பர் கார்ட்டூன் பாலா எங்க பக்கத்தில் உட்கார்ந்து
ரெண்டு வார்த்தை பேசினார்.. அதுக்குள்ள அவர் விரல்கள் பேசியது தான் கீழே
பார்ப்பது..
இந்தப் படம் பார்த்து எங்க அம்மாவின் கமெண்ட் : இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் கொண்டுவர கார்ட்டூன்ல தான் முடியும்..
செந்தில், சுகுணா.. இதைத் தாண்டி உள்ளே வரவே இல்லையே!
புறமுதுகு காட்டுவது அருள்
பேராசிரியர் தமிழி
No comments:
Post a Comment