Tuesday, March 08, 2011

உலக மகளிர் தினம்…

எங்கள் புது டீமில் மொத்தமே மூன்று பெண்கள் மட்டும் தான்- அதிலும் என் ஊரில் இருக்கும் டீமில், நான் மட்டும் தான். எனக்கு முன்னால் இந்த டீம்மில் இருந்த மற்ற பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு இன்று காலை ஒரு வாழ்த்து மடல் அனுப்பினேன். நான் முன்னர் இருந்த டீமிலும் ஒன்றிரண்டு பேருக்கு நானே அழைத்து மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னேன் - வந்த பதில்கள் மிக்க ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப பேருக்கு இப்படி ஒரு தினம் இருப்பது தெரியவில்லை. பல பேருக்கு மகளிர் தினம் எல்லாம் எதற்கு கொண்டாட வேண்டும் என்பது மாதிரி எண்ணம். ஒரு சிலர் ஆர்வமாக திரும்பச் சொன்னார்கள்..
உலக மகளிர் தினம் - முதன்முதலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தொழிற்சாலைகளில் வேலை செய்த போது, அவர்களுக்கும் ஆண்களுக்குமான சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருந்தது. பெண்கள் பலமில்லாதவர்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்பட்டன. இதை எல்லாம் எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்களின் நாள்.. ஆனால், இன்றைக்கும் கூட பல இடங்களில் இந்த வித்தியாசம் தெரியத்தான் செய்கிறது.
நண்பர் ஒருவர் அவரின் டீம்மை உருவாக்கும்போது, ‘நல்லவேளை என்னுடைய டீமில் பெண்களே இல்லை’ என்றார். ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றேன். ‘இல்லீங்க, நான் தான் பார்க்கிறேனே, மத்த டீம்ல உள்ள பொண்ணுங்க சரியா நாலு மணியானா கிளம்பிப் போயிடறாங்க.. எப்ப பார்த்தாலும் வீட்டுக்குப் போன் போட்டு பேசிகிட்டே இருக்காங்க.. காலைல 8:00 மணிக்கு மீட்டிங் வச்சா வரவே மாட்டேங்கறாங்க.. ‘
குற்றப்பத்திரிக்கையின் அளவு நீண்டுகொண்டே போனது. என்னுடன் வேலை பார்க்கும் 10 ஆண்களில் மூன்று பேர் 8 மணிக்கு மீட்டிங் வைத்தால் வர மறுப்பவர்கள் தான்.. ஒருவருக்கு அது ரொம்ப அதிகாலை, மற்ற இருவருக்கும் தத்தம் பிள்ளைகளைப் பள்ளியில் விடும் நேரம் அது தான். வேறு மூன்று பேர் மாலை நான்கு மணிக்குக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொறுப்பில் இருப்பதால் அந்த நேரம் மீட்டிங் வைத்தால் ஒப்புக் கொள்ள முடியாது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா, அப்புறம் அவங்க பெத்த பிள்ளைங்களை அவங்க தானே பார்க்கணும்’ என்றால், ‘அப்ப வீட்லயே இருக்கலாம் இல்ல, இல்லைன்னா ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தா அந்தப் பிள்ளைங்க கூடவே வீட்டுக்கு வந்துடலாம்’ என்று ஐடியா கொடுக்கிறார்!
எனக்கு நினைவு தெரிந்து, நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடம் முதல், என்னுடைய அம்மா தொடர்ச்சியாக இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லுவார். ஆரம்பத்தில், நான் அதைப் பெரிதாக நினைத்தது இல்லை.. ‘அம்மா, ஆண்கள் தினம், பெண்கள் தினம் வேறயா.. என்னை நான் வேலை செய்யுமிடத்தில் எந்த வித்தியாசமும் பார்க்காம நடத்துறாங்க.. இதை எல்லாம் ஏன் நான் கொண்டாடி அதை நானே மறுத்துக்கொள்ளணும்?’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். முக்கியமாக, பெண்கள் தினம் என்றால், அது குறித்து எல்லா அழகு சாதனக் கடைகள், துணிக்கடைகளில் தள்ளுபடி விற்பனை களைகட்டும்போது, இது போன்ற ஒரு fancy தினத்தைக் கொண்டாடுவது ஒரு முட்டாள்தனம் என்று நினைத்ததுண்டு..
இன்று நானே வலிய போய் உடன் பணிபுரியும் பல தோழிகளுக்கு வாழ்த்தும் போது தான், என்னை விட வயதிலும், பதவியிலும், பல படிகள் மேலே இருக்கும் அவர்கள் கூட இது போன்ற தப்பான அபிப்ராயங்களில் இருப்பது புரிந்தது… என்னாலானது, இன்றைக்கு ஒரு நாலு பெண்களுக்கு உலக மகளிர் தினத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நாள் முடியும் முன் இன்னும் சிலருக்கும் சொல்ல வேண்டும்..
இந்த வருடம், உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவாம்!
படிக்கும் தோழிகளுக்கு - உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!