“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ சுத்தமா மறந்துட்ட.. ஒரு போன் கால் இல்ல, இமெயில் அனுப்பினா பதில் அனுப்ப மாட்டேங்கிறே.. என்னை மொத்தமா அவாய்ட் பண்றா மாதிரி இருக்கு!”என்னடா நம்ம நினைச்சதை எல்லாம் ஒருத்தன் சொல்லி இருக்கானேன்னு யோசிக்கிறீங்களா? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை… என்னோட அருமைக் கணவனார் தான்.
திருமணம் முடிந்து நான் திரும்பிப் போனது நியூயார்க் நகரத்துக்கு. நண்பர்களில் பலர், திருமணமாகி நான் கணவனுடன் வாழ நியூயார்க் மாறி வந்துட்டதாக நினைத்தார்கள். உண்மையில், இங்கே அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் தனியாக நியூயார்க் சென்று குடியேற வேண்டிய கட்டாயம். அந்த ப்ராஜக்ட் ஒரு பயங்கரமான ப்ராஜக்ட், சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைமை…
காலை ஒன்பது மணிக்கு மீட்டிங்குகள் தொடங்குமுன் அலுவலகம் சென்று அமர்ந்தால், மாலை ஆறு மணி வரை பல்வேறு நாடுகளில், பல்வேறு நேர காலத்தில் வேலை செய்யும் பலருடன் பேசி முடித்து, ஒரு வழியாக சொந்த வேலை - அதாவது, நான் பொறுப்பேற்றிருக்கும் வேலை செய்யத் தொடங்கவே இரவாகி விடும். சராசரியாக இரவு ஒன்பது பத்து மணிக்குத் தான் அலுவலகம் விட்டு வெளியேறுவதே.. அதற்குப் பிறகு எங்காவது போய்ச் சாப்பிட்டுவிட்டு, அக்கடா என்று வீடு வந்தால், மீண்டும் இந்தியா டீம் இரவு பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் வந்து கூப்பிடத் தொடங்கி விடுவார்கள்.. இதற்கு நடுவில், எனக்கு மூன்று மணி நேரம் பின்னால் இருக்கும் கணவருடன் எங்கிருந்து பேசுவது?!
அறைத் தோழிகள் என்னை எதிர்பார்ப்பதை மொத்தமாக நிறுத்தியே விட்டார்கள். அலுவலகம் செல்லாத / கணவர் ஊருக்குப் பறக்காத ஏதேனும் ஒரு சனி, ஞாயிறுகளில் என்னைப் பார்க்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். பெரும்பாலும், மாதத்தின் மூன்றாம் தேதி வாடகைப் பணம் தர வீடு வருவேன். மற்ற நாட்கள் எல்லாம் நான் ஏதோ பக்காத் திருடன் மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
அலுவலகம், கான்பரன்ஸ் கால், சாதா கால், இமெயில், வேலையைப் புரிந்து கொள்வது, சொல்யூசன்(தமிழில்?) டிசைன் செய்து இந்தியக் குழு புரிந்து கொள்ள உதவுவது, அவர்கள் புரிந்து வேலை செய்ய நேரம் கொடுத்துப் பார்த்து, அது நடக்கவில்லை என்றால் மீண்டும் நானே கையில் எடுத்து வேலை செய்வது… பயங்கர குழப்பமான நாட்கள் அவை.. யாருடனும் பேச/ படிக்க, எழுத வாய்ப்பில்லாமலே போய்விட்டது..
ஒருவழியாக அந்த ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்த பின்னர் இதோ இப்போது மீண்டும் கலிபோர்னியாவில், ஒருவழியாக கணவருடன் குடியேறி இங்கும் ஒரு ப்ராஜக்ட் கிடைத்து.. கடைசியாக பழையபடி அலுவலக நேரத்தில் ப்ளாக் எழுதிக் கொண்டு..
ஆமாங்க, இப்பத்தைய ப்ராஜக்ட் போன ப்ராஜக்டுக்கு நேர் எதிர்மறை.. வேலை நேரம் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை மட்டுமே.. வேலை, வேறு யாரோ செய்பவற்றை மேற்பார்வை பார்க்கும் வேலை.. சொல்லப் போனால், மேற்பார்வை பார்ப்பவருக்கு உதவும் வேலை.. ‘வெட்டி வேலை!’ என்று சத்தம் போடுவது இதற்கு முன்னால் இந்த வேலையைப் பார்த்த தோழி! ..
நிம்மதியாக அலுவலகம் சென்று நிம்மதியாக வீடு வந்து, நிறைய நேரம் இருப்பது போல் இருக்கிறது.. இப்போதைக்கு இந்த அதிக நேரத்தை நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று..!
மற்றபடி வேறு முன்னேற்றம் ஏதுமில்லை.. கிடைத்திருக்கும் அதிக நேரத்தில் எப்படி வாழ்க்கையை முன்னேற்றுவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.. நிறைய திட்டங்கள் இருந்தாலும், எதுவும் செய்படுத்தப்படவில்லை.. வாழ்க்கையில் முதன்முறையாக, தினம் ஒரு மணி நேரத்துக்கு மேல் சமையலறையில் செலவழிக்கிறேன்(பாவம் Mr. husband).. இன்னும் எத்தனை நாட்கள் இது என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்..