ஆயிற்று, மூன்று மாதங்களாக திறக்கவே படாத பூக்கிரி.காம்.. அவ்வப்போது
பதிவுகள் படித்தாலும், பெரிதாக இந்தப் பக்கம் வருவதில்லை என்பது தான்
இன்றைய நிலை.. இந்த மூன்று மாதங்களுக்குள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு
மைல்கல் வந்து போய்விட்டது.
‘இந்தியப் பயணம்’ என்ற சொல்லை நான் வாழ்நாளில் பயன்படுத்த மாட்டேன்
என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.. இன்றைக்குக் கூட அந்தச்
சொல் எனக்கு அந்நியமாகத் தான் இருக்கிறது. அமெரிக்கா வந்த புதிதில்
நண்பர்கள் பலர் பல நாள் யோசித்து இந்தியப் பயணங்களைத் திட்டமிடுவதைப்
பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் வாழ்விடம் இந்த ஊர், சொந்த ஊருக்குப்
போய் வருவது என்ற பொருளில் சொந்த நாட்டுக்குப் போய் வருவதைக்
குறிப்பிடுகிறார்கள் என்று உணரும்போது ஆச்சரியமாக இருக்கும்.
கடந்த வருடம் வரையிலும் எனக்கு இந்த வாழ்விடம் எது என்ற கேள்விக்கான
பதில் இல்லாமலேயே இருந்தது. முதன்முதலில் வீட்டிலிருந்து ஹைதராபாத்
பயணித்துப் போன நாளில், ‘எங்கிருந்து வரீங்க?’ என்ற கேள்விக்கு, ‘சென்னை’
என்று சொன்ன பதிலைப் பலநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தேன். சான் ஹோஸே வந்த
புதிதில் அரிசோனாவில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டுக்குப் போன போது, ‘இந்த
ஆன்ட்டி கலிபோர்னியாவில் வசிக்கிறாங்க’ என்று அறிமுகப்படுத்தப்பட்டது
ஆச்சரியமாக இருந்தது. ‘சென்னைன்னே சொல்லிருக்கலாமே!’ என்று தான் யோசித்துக்
கொண்டிருந்தேன்.
இந்தியாவில் பல்வேறு ஊரிலும் இருந்திருந்தேன் என்றாலும், எனக்கென்று
எந்த ஊரையும் சொந்தம் கொண்டாட மனமிருக்கவில்லை. சென்னையிலிருந்து வந்தேன்
என்று சொல்லிக் கொள்ளும போது, ஏனோ சென்னைக்குத் திரும்பிப் போகும் எண்ணம்
கூட எனக்கு வரவில்லை. ‘இந்தியப் பயணங்கள்’ பற்றி யோசிக்காத போதும்
சென்னைக்கு எப்போதாவது திரும்பிப் போகத் தான் வேண்டி இருக்கும் என்று
ஆழ்மனம் நம்பிக் கொண்டிருந்தது போலும்.
இன்றைக்கு யாராவது கேட்டால், என்னுடைய ஊர் சான் ஹோசே என்று தான் சொல்லத்
தோன்றுகிறது. ‘எங்கள் வீடு மில்பிதாஸில் இருக்கிறது’ என்கிறேன் யார்
கேட்டாலும் - அந்த வீட்டில் நான் இன்னும் ஒருபோதும் வாழவில்லை என்றபோதும்.
அவசர அவசரமாக ஒரு இந்தியப் பயணம். வந்து, நான்கே நாளில் தயாராகி,
திருமணம் முடித்து, அவசர அவசரமாக அதன்பின் கொஞ்சம் கோயில்குளமெல்லாம்
சுற்றிவிட்டு, மீண்டும் நியூயார்க், வேலை, டீம் மீட்டிங், டெட்லைன்! காலை
மற்றும் இரவுகளில், கிரஹாம் பெல் வாழ்க! ( மதியம்: ‘இந்த கான்பெரன்ஸ் காலை
எவன்டா கண்டுபிடிச்சான்!’ )
கல்யாணத்துக்கு மூன்று மாதம் முன்னாலேயே திட்டமிட்டு டிக்கெட் எல்லாம்
மாற்றிப் பதிவு செய்து கொண்டு முத்துலட்சுமி வந்திருந்தார். மண்டபத்தில்
எங்கே தங்கினார், என்ன செய்தார் எதுவும் தெரியாது. பாலா, அயன், போன்ற
நண்பர்கள் பார்த்துக் கொண்டார்கள் போலும்.. அண்ணாச்சி காலை வந்துவிட்டு,
‘பிரியாணி இல்லைன்னா சாப்பிட முடியாது’ என்று சத்தியாகிரகம் செய்ததாக
கேள்வி! துளசி அக்கா நேரே கல்யாணத்தில் வந்திறங்கி யானைகளின் மீதான உரிமையை
எனக்கு கல்யாணப் பரிசாக எழுதிக் கொடுத்தார். லக்ஷ்மி, லக்கி, சிபி,
மதுமிதா, சிவா, அருள், தங்கவேல், நந்தா என்று பதிவர் பட்டறை பட்டாளமாக மாலை
கலக்கிவிட்டார்கள். கரூரில், மாப்பிள்ளை வீட்டு வரவேற்புக்கு, வெறும்
அட்ரஸ் சொன்னதுக்கு, இரண்டு மணி நேரம் பயணித்து வந்து அசத்திவிட்டார்
வெயிலான்! நேரில் வந்து, போன் செய்து, பதிவிட்டு வாழ்த்திய நண்பர்களுக்கு
நன்றி சொல்லலாம் என்றால், ரொம்ப தாமதமாகிவிட்டது.. ஹி ஹி…
குமுதம் புகழ் கார்ட்டுன் பாலாவின் கார்ட்டூனைத் தான் அதன் பரப்பளவு
காரணமாக எடுத்து வர முடியவில்லை. அடுத்த ‘இந்தியப் பயணத்தில்’ எடுத்து வர
வேண்டும்.