Sunday, October 26, 2008

ஒரு வருட பாக்கி..

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.
The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற ஒரு அழகான படம் தான் டைரி ஆப் ஆன் ப்ராங்க். இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஒளிந்து வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் கதை.
ஆச்சரியம் என்னவென்றால் ஆன(Anne - கடைசி e ஐ, அவுக்கும் ஆவுக்கும் இடையில் படிக்க வேண்டும்) ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய தன் சொந்த டைரி, உண்மைக் கதை. இரண்டு முழு வருடங்கள் மூன்று சின்ன அறைகள் கொண்ட வீட்டில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒளிந்து வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணப் போக்கு, தினசரி நடவடிக்கை, அந்தச் சூழ்நிலையில் கூட மலரும் மெல்லிய ஈர்ப்பு, காதல், அம்மாக்களுக்கும் பதினாறுகளில் இருக்கும் பெண்களுக்குமிடையில் இருக்கும் வழக்கமான புரிதலின்மை. இரண்டு முழு வருடங்கள் இரண்டு குடும்பங்கள் முழுமையாக ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தமையால் ஏற்படும் சங்கடங்கள், நெருக்கம், சண்டை என்று அன்றாட நிகழ்வுகளை அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆன..
படம் யாரோ சொன்னார்கள் என்று எடுத்துப் பார்த்தேன், அதன் பின் அந்தப் புத்தகத்தை அதைவிட ஆர்வமாக எடுத்துப் படித்தேன். அதுவும் ஒரு இனிமையான அனுபவம்…
Swing Kids
போர் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் பைத்தியக்காரத்தனம். ஹிட்லரின் ஜெர்மனியில் குஞ்சு குளுவான்கள் எல்லாம் யூதர்களை எதிர்த்து, எதிர்ப்படும் யூதர்களை எல்லாம் கொசு அடிப்பது போல் நசுக்கி விட்டுப் போனது பற்றி பியானிஸ்ட் பேசியதென்றால், அந்த ஒட்டு மொத்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தனித்து நின்ற மனிதர்களும் ஜெர்மனியில் இருந்திருக்கிறார்கள் என்கிறது swing kids.
ஹிட்லர் தீயது என்று ஒதுக்கிய அமெரிக்க பாப் இசையைக் கேட்டு, யூதர்களின் பாடல்களைப் பாராட்டி, இசைத்து வாழ்ந்த இந்தச் சில இளைஞர்கள், கலை மூலமாகவே நாசிக்களுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினார்களாம். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த பூமியில் உருண்டை என்று சொன்ன சாக்ரடீஸ் போல யூதர்களை மனிதர்கள் என்று நினைத்த இந்தச் சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு work campகளுக்கு அனுப்பப்பட்டனராம்.
‘ஹிட்லர் செய்வது தவறு என்றால் அவன் மட்டுமே அதற்குப் பொறுப்பல்ல. அவனைத் தவறு செய்ய விட்டுவிட்டு எதிர்ப்பு காட்டாமல் சும்மா இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பெரும்பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும். எதிர்ப்பைப் பதிவு செய்யுமிடம் வீடு மட்டுமல்ல.. வெளியில் செய்ய வேண்டும், உரத்துச் செய்யவேண்டும்’ - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எதிர்ப்பை அமெரிக்க யூத இசை மூலம் பதிவு செய்கிறான் பீட்டர்.
ஒரு காலத்தில் ஹிட்லரை எதிர்த்து, அவனின் செயல்களை வெறுத்து swing இரவுக் கிளப்களை கதி என்று கிடந்த இரண்டு இளைஞர்கள், நாசிப் படையில் சேர்ந்த பின்னால் எப்படி உருவேற்றப்பட்டுகிறார்கள், எப்படி சொந்த குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு வெறியேற்றப்படுகிறார்கள், அந்த மடத்தனத்திலிருந்து, நாஜிப் படைகளின் யூத வெறுப்பு மந்திரக்கட்டிலிருந்து எப்படி ஒருவன் மட்டும் வெளிவருகிறான், அதன் பின்னான அந்த நண்பர்களின் நட்பும் விரிசலும்.. கதை இரண்டு நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல. swing இயக்கம், நாஜிப் படைகளின் யூதவெறுப்பைப் பிஞ்சு மனங்களில் பதியவைக்கும் திறமை, நல்ல மனிதனாக வளரும் குழந்தைகள் எப்படி மதம்பிடித்த வெறியர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம்.. அழகான படம்..
The Prize winner of Defiance, Ohio
நம்மூர்ப் பெண்களைப் போல வேளா வேளைக்கு குடும்பத்தைக் கவனித்து, பொறுப்பில்லாத கணவனை மன்னித்து, அவனுக்கும் சேர்த்து தானே பணம் சம்பாதித்து - கடமை தவறாத அழகான அமெரிக்க மனைவி எவலின். கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகள் கொண்ட தனது வீட்டைக் கூட தன் சின்னச்சின்ன ஜிங்கிள் எழுதும் திறமையால் மட்டும் காப்பாற்றும் எவலின் அமெரிக்க வாழ்வியலில் கூட அமைவது எனக்குப் புதிது.
தன் எழுதும் திறமையைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற எழுத்தாளராகி இருந்திருந்தால் உலகம் பார்த்திருக்க முடியும். உலகம் எங்கும் சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தும் அந்தச் சின்ன கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் கட்டுண்டு கிடந்த எவலின் என்ன சாதித்தாள்? அவள் கதையை எழுதி உலகுக்குச் சொல்ல, அவளின் மகள் இல்லாமல் போயிருந்தால் சுவடு தெரியாமல் போயிருப்பாள். ஆனால் எவலின் போன்ற பெண்கள் தான் அடுத்த தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறார்கள்; அந்தக் குடும்பத்துக்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள்.
சிரித்த முகத்துடன், எத்தனை கஷ்டம் வந்தபோதும் புன்னகையோடு எதிர்கொள்ளும் எவலின் ஒரு கவிதையான பாத்திரம். பழைய காலத்துத் தமிழ்ப்படங்கள் காட்டும் பாசமான தாயாராவும், அடிபணியும் மனைவியாகவும் இருக்கும்போதும் சோகத்தைப் பிழியாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அம்மா வாத்தாக எவலின் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
A Family Thing
எல்லா ஊர்க் கதைகளிலும் பெண்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்களாக, ஆனால் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போபவர்களாக…
எல்லா ஊர்களிலும் பெண்கள் தான் அதிகமாக, சுலபமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். மிக இயல்பாக.. அவர்களின் எண்ணம் பற்றிய கவலை இல்லாதவர்களால் சுலபமாக.. (படம் பார்த்த அன்று எழுதி வைத்தது இது.. மேலும் தெரிந்து கொள்ள படம் பாருங்கள் அல்லது அது பற்றிப் படியுங்கள்..)
woh lamhe அந்தக் கணங்கள்.
அழகான சில கணங்களைப் பற்றிய ஒரு படம்.. அழகான காதல்.. அந்த அளவுக்கு உயிரினும் இனிய காதல்கள் பொய் என்ற எண்ணம் ஏனோ ஏற்படவே இல்லை. அது போன்ற ஒரு காதலுக்காக ஏங்குகிறது மனசு. வாழ்க்கை, எதிர்காலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணுக்காக மட்டுமே வாழும் ஒருவன் - வோ லம்ஹே ஒரு உண்மைக் கதையாம்! அது போன்ற ஒரு காதல் கிடைக்க பர்வீன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஷீஷ்ரோப்ரீனியா போன்ற வியாதி அவளைப் பிரித்தது தான் பாவம்..
The Dreamer - Sonador
ஒவ்வொரு மகளின் - மகனின் - கனவும் தன் தந்தை போல வரவேண்டும் என்பதே.. தந்தை தனக்கு அவ்வளவாக பிடிக்காத, அதனால் பழக்காத அவரின் தொழிலான பந்தயக் குதிரை வளர்ப்பை அவரே ஆர்வத்துடன் மகளுக்குக் கற்றுக் கொடுக்க வைக்கும் அழகிய பெண்ணின் கதை.. அந்தப் பெண் போன்றே அப்பாவின் தொழிலில் புகுவதற்கு எனக்கும் ஆசை என்பதாலோ என்னவோ இந்தப் படம் அத்தனை ஈர்த்துவிட்டது…
கோதாவரி (தெலுங்கு - இன்னும் தமிழுக்கு வராத தெலுங்கு :) )
அற்புதமான படம்.. செ.லூயிஸில் இருந்தபோது வெளிவந்த படம். அப்போதே பொழுதுபோகாமல் போக எண்ணி இருந்ததுண்டு.. திரைப்படங்கள் குறித்த அப்போதைய ஆர்வமின்மையால் விட்டுப் போய்விட்டது..
‘கண்ட நாள் முதல்’ போல, சின்னவயதில் படித்த பி.வி.ஆரின் மேனேஜர் சேது கதை போல (நாவல் பெயர் மறந்துவிட்டது) ஏழு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட முறை பார்த்தாச்சு.. ஒரு சீன் கூட தள்ளிப் பார்க்கத் தோன்றவில்லை..
கோதாவரியில் படகில் ஏறி பத்ராச்சலம் போகும் வாய்ப்பும் ஒருதரம் ஹைதராபாத்தில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் இதன் அருமை தெரியாமல் விட்டுப் போய்விட்டது..
அழகான கோதாவரி, அழகான கமலினி, அமைதியான சுமந்த், நல்ல கதை, மிக மெல்லிய காதல் கதை… நன்றாக இருக்கிறது.. சொல்ல வந்தது ஒரு காதல் கதை மட்டுமே என்ற அளவில் அதைத் தாண்டிய கதாநாயகியின் பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பது என்னுடைய குறை.. ஆனால் நல்ல கதை.. அழகான காட்சியமைப்பு..
கமலினி அடிக்கடி சொல்லிக் கொள்வது போல், எனக்கே ஏதோ ‘குயின் விக்டோரியா’ என்ற எண்ணம் வந்து போகிறது.. ஓரிரண்டு சின்ன மைனஸ்களைத் தவிர கோதாவரி அழகு.. பத்ராச்சலத்துக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் இன்னும் தெளிவாக புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்… என்றாவது ஒருநாள் subtitleகளுடனான குறுந்தகடு வாங்கி பார்த்தால் புரிந்து போகும்.. பார்க்கலாம்.
பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீத அடிப்படையில் இருப்பதாலேயே இன்னும் அதிகம் என்னை ஈர்க்கிறது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட.. அதுவே இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.
புடவை கட்டிக் கொண்டு மயங்கி மயங்கி வந்து நிற்கும் கமலினி, ‘நான் சீதா மகாலட்சுமியாக்கும், நான் ஏன் காதலை முதலில் சொல்லணும்?’ என்று ஏறிக்கொள்ளும் கமலினி, ‘என்கிட்ட உனக்குப் பிடிச்ச விசயம் என்ன?’ என்று சுமந்தைத் துருவித் துருவிக் கேட்கும் கமலினி, ‘அம்மம்மாவை என்கிட்ட கொடுத்துடேன்!’ என்று கொஞ்சும் கமலினி.. எனக்கே இவ்வளவு பிடித்து போய்விட்டது அவளை.. அப்படியே இரண்டு கையிலும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல..
கமலினியின் இந்த எல்லா செயல்களுக்கும் பதிலுக்கு எதுவுமே செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டே ஸ்கோர் பண்ணி விடுகிறார் சுமந்த். இந்த படத்தில் ஆர்வமாகி சுமந்தின் மற்ற இரண்டு படங்கள் பார்த்தது வருத்தம் தான். அவ்வளவு நன்றாக செய்யவில்லை.. இந்தப் படம் , இந்த அமைதி மட்டும் தான் ஒழுங்காக செய்ய வருகிறது போலும்..
மனசா வாச்சா, உப்பொங்கலே கோதாவரி, மனசா கெலுபு நீதேரா, எல்லாம் மனம் நிறைக்கும் பாடல்கள்.. இருங்க திரும்ப பார்த்துட்டு வரேன்..
The Rookie
பள்ளிக் கூடத்து பேஸ்பால் பயிற்சியாளர் ஒருவரிடம் அவரின் மாணவர்கள் சவால்விடுகிறார்கள். ‘பக்கத்து ஊர்ப் பள்ளியுடனான இந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தால், பெரிய அளவில் லீக் மாட்சுகள் விளையாட நீங்கள் முயல வேண்டும்!’ என்ற சவாலை ஏற்று, சின்ன வயதில் தன் கனவான, ஏதேதோ காரணங்களால் கிட்டாமல் போன லீக் மாட்சுகளுக்கு முயல கிளம்பிப் போகிறார் கதை நாயகன். கடன்கள், தினசரி குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை வழியனுப்பி வைக்கிறார் அவர் மனைவி.
நாற்பது வயதில் ரூக்கியாக(புதுவரவாக) வந்து சேரும் அவரை முதலில் சேர்த்துக் கொள்ள விரும்பாமல் பல குழுக்கள் தள்ளி வைக்கின்றன. மெல்ல தன் திறமையால் நாயகன் ஜிம் மாரிஸ் குழுவில் முன்னேறுவதும், சொந்த ஊருக்கே லீக் மேட்ச் ஆட வருவதும், அவரின் மாணவர்களே அவர் ஆடுவதைப் பார்க்க வருவதும் மிச்ச கதை..
கனவுகளை வென்றெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஆணித்தரமாகச் சொன்ன படம் - ஜிம் மோரிஸின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் எனும்போது இன்னும் அதிகமாக மனதைத் தைக்கிறது.
Field of Dreams
இதுவும் கனவுகளைப் பற்றிய, பேஸ்பால் படம் தான். பல வருடங்களில் பயணம் செய்து வரும் இந்தப் படம் பற்றி நான் எழுதுவதை விட நீங்களே கதை படித்து விடுங்கள். ஒரு மாதிரி படத்தின் கதை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இதை இங்கே வைத்திருக்கிறேன். மனம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால், நிச்சயம் நஷ்டமிருக்காது என்று சொல்லும் படம் இது..