Wednesday, October 08, 2008

ரயிலோடு உறவாடி..

ரயில் என்றாலே ஒரு மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கும் ரயிலைப் பார்த்தால் சின்னக் குழந்தை மாதிரி கடைசி பெட்டிவரை பார்த்துக் களிப்பது ஒரு பழக்கம். நான் பிறந்த புதிதில் எங்கள் வீடு மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தது. முதல் மாடி பால்கனியிலிருந்து ரயில் பார்ப்பது என்னுடைய சிறு வயது பொழுதுபோக்குகளில் முதன்மையானது.
பாட்டி இடுப்பிலேறி ரயில் பார்த்துக் கொண்டே உணவுண்ட நாட்கள் தொடங்கி மாமா மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது அவரின் காலைச் சுற்றிக் கொண்டிருந்த நாள்வரை அந்த பால்கனி நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன. காலை நேர சென்னையின் மின்சார ரயில்கள் நிரம்பி வழிந்து கொண்டு செல்வதிலிருந்து மாலை நேரம் அது திரும்பவும் மனிதர்களை நிரப்பிக் கொண்டு வந்து சேர்க்கும் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அந்த பால்கனிக்கு ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததுண்டு.
அம்மா ரயில் (அம்மா அலுவலகம் சென்று வரும் ரயில்) என்று தான் எட்டு முதல் எட்டரை வரும் ரயில்களை நாங்கள் குறிப்பிடுவோம். போகும் வரும் எல்லா ரயில்களுக்கும் கைகாட்டி விட்டு, அதில் யாராவது ஒரு பிரயாணி திரும்பி கையாட்டிவிட்டால் ஏற்படும் பூரிப்பு சொல்லி முடியாது. கொஞ்சம் வளர்ந்த பின், மாலை நான்கரைக்கு வரும் முத்துநகர் விரைவு வண்டியிலிருந்து எத்தனை மனிதர்கள் இறங்கினார்கள், எத்தனை பேர் ஏறினார்கள் என்று கணக்கிட்ட நாட்களும் உண்டு.
பன்னிரண்டு வயதில் அந்த வீட்டை விட்டு வேறு சொந்த வீடு கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியில் போக நேர்ந்த சமயம், ரயில் சத்தமில்லாமல் எப்படித் தூக்கம் வரும் என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்புறம் ரயில்புற வாழ்க்கை மெல்ல மறைந்து அமைதியான புறநகர் வாழ்க்கைக்குப் பழகியபின்னரும், ரயில் என்பது ஒரு ஆச்சரியமான விசயமாகவே இருந்திருக்கிறது.

அடுத்து ரயிலுடனான உறவு வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களோடு நின்றுவிட்டது. இன்றைய விமானப் பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணங்கள் அருமையானவை. விமானம் அல்லது பேருந்து போல ரயில் பயணங்கள் உடல் சோர்வைத் தருவதில்லை. பகல் வேளைகளில் ஜன்னல் அருகே அமர்ந்து இந்திய கிராமங்களின் வயலையும் வாய்க்காலையும் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், இரவின் தனிமையில் ரயிலிருந்து விழும் மெல்லிய வெளிச்சம் தரையில் விழுந்து உருண்டோடுவதைப் பார்ப்பது மற்றுமொரு சந்தோசம். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே விழுந்து ஓடும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது என்னுடைய கற்பனை பொங்கி நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் உதயமாவதுண்டு. ஊட்டியின் தள்ளு ரயில்களும், மலைப்பாதையில் திரும்பும்போது ரயிலின் உள்ளே இருந்துகொண்டே அதன் மற்ற பகுதிகளைப் பார்க்கக்கூடிய சில தருணங்களும் எப்போதும் ஆச்சரியம் தருபவை.
ஹைதராபாத்தில் வேலை பார்த்த காலங்களில் கிட்டத் தட்ட மாதமொருமுறை ரயில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். வேலைக்கு என்று முதன்முதல் செல்லும்போது தான் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துப் போனோம். என் அலுவலகத்தில் பயணச்செலவைத் திருப்புவதாக சொல்லி இருந்த காரணத்தால், நானே அப்பாவை இரண்டாம் வகுப்பில் அழைத்துச் செல்வது பற்றிய ஒரு பெருமை இருந்தது எனக்கு. அதற்கு முன் எத்தனையோ தரம் அப்பா இரண்டாம், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணித்திருப்பார் என்றாலும், மகளாக நான் அவரை அழைத்துச் சென்ற முதல் பயணமல்லவா!
திரும்பவும் அதற்கு அடுத்த மாதம் ஒரு வார இறுதி சென்னை வந்து போனதும் மறக்கமுடியாத பயணம் தான். முதன்முதலாக நான் மட்டும் தனியாக ரயிலில் வரப் போவதைப் பற்றிய ஒரு தயக்கமும், பயமும் இருந்துகொண்டே இருந்தது. வெளிக் காட்டவில்லை என்று நினைத்துக் கொண்டே தான் வந்தேன். ஆனால் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் அவள் தாயாரும் இரவு உணவின் போது, ‘தனியாளா வரியாம்மா?’ என்று கேட்ட போது பொறுக்காமல், நான் வேலைக்கு சேர்ந்தது தொடங்கி முழுக்கதையும் சொல்லித் தான் மூச்சுவிட்டேன். துணைக்கு நல்ல ஆள் கிடைத்ததாக மகிழ்ச்சி வேறு.

அதன்பின் எத்தனையோ தரம் அந்த ரயிலில் போய் வந்திருக்கிறேன் - நல்லகுண்டாவிலும் குண்டூரிலும் கிடைக்கும் ‘வெடிகா’ சமூசாக்களையும், கூடூரில் நடு இரவில் கிடைக்கும் சூடான தோசை, சில்லென்று ஒரு ஆப்பிள் ரசம் என்று ரவுண்டு கட்டி அடித்திருக்கிறேன்; அடுத்த மாத டிக்கெட்டுடன் வண்டியேறி, ‘என் பேரை எப்படி சார்ட்டில் விட்டுப் போச்சு’ என்று சண்டைபோட்டிருக்கிறேன்; நண்பர்களுடன் கொட்டமடித்து, பாட்டுப் பாடிக் கொண்டு, யாரும் இல்லாமல் தன்னந்தனியாக புத்தகம் படித்துக் கொண்டு என்று பலவிதமாக அந்த ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ருசிதான்.
இப்போது இந்த ஊருக்கு வந்த புதிதில், இந்த ஊரின் விதம்விதமான ரயில்கள் மீண்டும் என்னை குழந்தைக் காலத்துக்கு அழைத்துப் போய்விட்டது. உள்ளூரில் ஓடும் மரவட்டை போன்ற விடிஏ, கொஞ்சம் வெளியூராக பக்கத்து பெருநகரம் வரை ஓடும் இரட்டை அடுக்கு கால்டிரெயின், கடல் தாண்டி அடுத்த விரிகுடாவுக்கும் போகும் விரைவு வண்டியாக பார்ட், என்று பார்த்த எல்லா வண்டிகளிலும் ஏறி பயணம் செய்தாகிவிட்டது. இன்னும் கூட மிச்சம் இருக்கும் இருவகை ரயில்களில் ஏற நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருந்த போது, என் க்ளையண்ட் மேலாளர் வார இறுதிக்கு பிள்ளைகளை ரயிலில் வெளியூர் அழைத்துப் போவதாக மிக மகிழ்ச்சியோடு சொன்னார். அதென்ன பெரிய விசயமா என்று நினைத்த எனக்கு அவரின் அடுத்த சொற்கள் ஆச்சரியமாக இருந்தன : ‘என் பிள்ளைகள் இதுவரை ரயிலையே பார்த்ததில்லையா அதனால ரொம்ப உற்சாகமா இருக்காங்க’ என்றார். உலகத்தில் இப்படிப் பட்ட குழந்தைகள் கூட இருக்காங்களா! என்று வியந்து போனேன்..
நேற்று வண்டி எடுக்கையில், காரைக் கிளப்பிய பின்னால் பக்கத்தில் இருந்த இருப்புப்பாதையில் திடீரென்று ரயில் போவதைப் பார்த்து விட்டு டக்கென அப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கிய போது தான் எத்தனை நாளானாலும் இந்த ரயில் பார்த்துக் குழந்தையாகும் மனம் மாறவே மாறாது என்று புரிந்து போனது…

No comments: