Sunday, September 14, 2008

குவியம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு.
‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லிய கடைக்காரர் கொடுத்த பெருமை.
கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.
‘விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..
அன்று தொடங்கி சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை நான் புதுக்கண்ணாடி போட்டிருக்கிறேன். ப்ளாஸ்டிக் frame, உலோக frame, ஆமை ஓட்டு frame, என்று விதம் விதமாகவும், கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள தலைக்கயிறு, என்று உடன்பொருட்களாகவும் என் அப்பாவும் வெவ்வேறு முறைகளைக் கையாண்டு பார்த்து அலுத்துத் தான் போய்விட்டார்.

இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.
நினைவு தெரிந்து கல்லூரிக் காலத்தில் தான் போட்டுவிட்ட கண்ணாடியை நான்கு வருடம் போல மாற்றாமல், உடைக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அதன் பின் நான் உடைக்காவிட்டாலும், கண்ணின் குறைபாடு அதிகமாக ஆக, வருடா வருடம் கண்ணாடி மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டே பிறந்தவள் போல நான் செய்யும் அழும்பு தாங்காமல், அம்மா லென்ஸுக்கு மாறச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார். கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள் இந்திய தூசியில் படும் கஷ்டத்தைப் பார்த்த பின்னால் அந்த முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இங்கே வந்து அதையும் முயன்று பார்ப்போமே என்று தோன்ற, இதோ, இத்தோடு இரண்டு மாதமாக வெற்றிகரமாக கண்ணாடி இல்லாத பூர்ணாவாகிவிட்டேன்.
இந்த ஊர் மருத்துவர்கள், குவியத்தை முயன்று பார்க்கவென்றே ஒரு வாரம் தருகிறார்கள். முயன்று ‘பொருந்துகிறது, உறுத்தவில்லை’ என்று நாம் சொன்னால் தான் அடுத்து மருந்துச் சீட்டே எழுதித் தருகிறார்கள். ஆரம்பத்தில் கண்ணுக்குள் போட்டு எடுப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரம் கண்ணாடி முன்னால் செலவு செய்யவேண்டிய அவசியம் இருந்தது. இப்போதெல்லாம் அப்படியே ஒரே நொடியில், பாட்டு பாடிக் கொண்டே, கார் கண்ணாடியைப் பார்த்தபடியே என்று சுலபமாக எடுக்கவும் போடவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
முதல் நாள் லென்ஸ் போட்டு விட்டுவிட்டு,அந்த டாக்டரம்மா தன்னுடைய உதவியாளரை அழைத்து எனக்கு போட்டுக் கழற்றச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கம்பவுண்டர் பெண்ணும் வந்து, வலது கண் லென்ஸை கழற்றி மாட்டுவது எப்படி என்று விளக்கினாள், என்னையும் செய்ய வைத்தாள். அடுத்து இடது கண்ணுக்கும் சொல்லித் தருவாள் என்று பார்த்தால், ‘நாங்க ஒரு கண்ணுக்குத் தான் சொல்லித் தருவோம், வேணும்னா நீயே கழற்றிப் போட்டுக்கோ’ என்றுவிட்டுப் போய்விட்டாள்.
நான் இடது கண் லென்ஸை வெகு சுலபமாக ஒரே முயற்சியில் கழற்றிவிட்டு ‘குட் ஜாப் பூர்ணா’ என்று என் தோளை நானே தட்டிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போட முயன்றேன். இடது கை நடுவிரலால் கண்ணின் மேல்பக்கத்தைத் தூக்கி, வலது கை நடுவிரலால் கீழ்ப்பக்கத்தை இழுத்து, ஆட்காட்டி விரலில் இருந்த லென்ஸைப் போட முயன்றால், கண் தானாக மூடிக் கொள்கிறது! ஒரு முழு லென்ஸ் போடும் அளவுக்கு அங்கே இடம் இருந்தால் தானே!

நான்கு முறை முயன்றுவிட்டு அந்தப் பெண்ணைப் பரிதாபமாக பார்த்தேன். அவளே கொஞ்சம் நேரம் கிடைத்த போது வந்து ‘என்ன?’ என்றாள். பிரச்சனையைச் சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தேன். ‘ஓகே, நீ என்ன தப்பு பண்றேன்னு எனக்குப் புரியுது… நீ இடது கண் கிட்ட லென்ஸைக் கொண்டு போகிறப்போ, வலது கண்ணை மொத்தமா மூடிடறே. அதனால உனக்கு கண்ணே தெரியாம போயிடுது(!).. அதான் லென்ஸைப் போட முடியலை.. முதல்ல ரெண்டு கண்ணையும் திறந்து வச்சிகிட்டு முயற்சி பண்ணு’ என்றாள். என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே மறுபடி முயன்று ஒருவழியாக போட்டு முடித்தேன்.
‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்பிவைத்தவளை அடுத்த இரண்டே நாளில் அழைக்க வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. புதன்கிழமை காலை எட்டு மணி கூட்டத்துக்காக அவசர அவசரமாக குளித்து, வேக வேகமாக தயாராகி கண்ணில் மீண்டும் லென்ஸ் போட்டால், இடது கண் ரொம்பவும் கரித்தது, ஒரே உறுத்தலும் கூட. கொஞ்ச நேரத்தில் அந்தக் கண் சரியாக தெரியாமல் வேறு போய்விட்டது. வேறு வழியின்றி வீட்டிலிருந்தே கூட்டத்தை முடித்து அடுத்த வேலையாக கண்ணாடி முன்னால் நின்று கண்ணிலிருந்து லென்ஸை எடுக்க முயன்று கொண்டே இருந்தேன்.
நானும் மேல் இமையைத் தூக்கி, கீழ் இமையை இழுத்து பாப்பாவுக்கு அருகில் கிள்ளினால், அந்த லென்ஸ் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. தொடர்ந்து செய்யச் செய்ய கண் சிவப்பாகி எரிவது தான் மிச்சம். ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த முறை எப்படியும் இந்த லென்ஸ் போடும் வித்தையை வென்றே தீருவது என்றே முடிவெடுத்து தொடர்ந்து போட்டு ஒரு வார சோதனைக் காலமும் கடந்தபின் என் அப்பாவிடம் போன் செய்து சொன்னேன்.
  • - லென்ஸ் போட்டு
  • * குளிக்கக் கூடாது
    * தூங்க கூடாது
    * முகம் கழுவக் கூடாது
    * அழக் கூடாது
    * நீஞ்சக் கூடாது
  • கையை கூடியவரை சுத்தமா வச்சிக்கணும்
  • நகத்தைச் சின்னதா வச்சிக்கணும்.
  • என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’

    3 comments:

    பொன்ஸ்~~Poorna said...

    16 Responses to “குவியம்”

    September 14th, 2008 at 4:29 pm
    Balakumar

    ur experience is very funny.. i hope whoever having lense..they would have these kind of experience.. i am also having the kannadi from childhood.. 10 yrs back i tried the lense.. lot of bad experience.. one time i lost one eye lense when i was going to movie..so i watched the whole movie with one eye closing with my hand.. really kadi expereince.. so i am back to my great kannadi..
    September 14th, 2008 at 5:08 pm
    தமிழ் பிரியன்

    நல்லா இருக்கு… :) இனியாவது கண்ணாடி இல்லாத புது பூர்ணாவாக இருங்கள்!
    September 14th, 2008 at 5:39 pm
    Sanjai

    ஹாஹா..:)) சிரிக்கிறதா அனுதாபப்படறதா தெரியலை… உங்கள் சோதனை வெற்றி பெற்றதர்கு வாழ்த்துக்கள்.. :)
    September 14th, 2008 at 6:03 pm
    உண்மைத்தமிழன்

    அருமை பூர்ணா.. படிக்கப் படிக்க ஆர்வமாக இருந்தது.

    இதைப் போடுவதற்காகவே அரை மணி நேரத்தை ஒதுக்க வேண்டுமெனில் விட்டுவிடலாம். அல்லது ஒரு நிமிடத்தில் போட்டுக் கொள்ளும் பக்குவம் கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்குமெனில் முயற்சியைத் தொடரலாம்.

    என்ன ஆனாலும், பிரேம் வைத்த கண்ணாடியின் அழகே தனி.. அது முகத்துக்கும் கொஞ்சம் அழகைக் கூட்டும்..
    September 14th, 2008 at 6:14 pm
    msathia

    :-)

    ஒரு முக்கியமான சேதியை சொல்லலையா அவங்க. பதினஞ்சு பதினாறு மணி நேரத்துக்கு அப்புறமா கண்ல லென்ஸ் டிராப்ஸ் விடலைன்னா ரொம்பவே படுத்தும். நம்மூர்ல இருக்கற dustக்கு இன்னும் தொல்லை. வாழ்க்கை பூரா சின்ன வயசுலேந்து கண்ணாடி போட்டு அதை ஒரு குறையாவே கருதினேன். சும்மா இல்லாம ஒரு டாக்டர் ஏத்திவிட்டு கொஞ்ச நாள் முயன்று பார்த்துட்டு இதெல்லாம் பெண்களுக்கு தான் வேலைக்காகும், வேற வேலைப்பொழப்பில்லைன்னு விட்டுட்டேன்.

    பொன்ஸ்~~Poorna said...


    September 14th, 2008 at 7:54 pm
    கலை

    //’விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..’//

    //’ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’//

    நம்பின மாதிரி இருந்திருப்பாரோன்னு தோணுது, :).
    September 14th, 2008 at 9:33 pm
    sudarmani

    Vanakkam. Ungalin Ezhuthu nadai mikavum arumai. appuram intha thalaipu

    arumaio arumai…
    September 15th, 2008 at 12:53 am
    இலவசக்கொத்தனார்

    அக்கா, இன்னும் எழுத எல்லாம் செய்யறீங்களா!! :))

    இந்தத் தொந்தரவுக்குப் பயந்துதான் கண்ணாடியோடவே காலத்தை ஓட்டறது!
    September 16th, 2008 at 1:21 pm
    Nivedita

    அறுமை! ‘குவியம்’ என்று அழகாக lens ஐ மொழி பெயர்த்தது போல, frame இர்க்கும் மொழி பெர்யர்ப்பு தந்திருக்கலாமே!

    // பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க

    அச்சோ பாவமே!
    September 16th, 2008 at 8:35 pm
    இராம்

    //அக்கா, இன்னும் எழுத எல்லாம் செய்யறீங்களா!! :))//

    ரீப்பிட்டேய்…. :)
    September 17th, 2008 at 8:41 am
    யெஸ்.பாலபாரதி

    //கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.//

    //இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.//

    // கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள்//

    // என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே//

    //ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.//

    //-என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’//

    பதிவு முழுக்க நகைச்சுவை நெடி.. கிரேசி மோகன் தங்கை(!) மாதிரி பின்னி எழுத்து இருக்கீங்க.. சிரிப்பு தாங்கலை.. ம்.. பார்ம்க்கு வந்துவிட்டீங்க போலத் தெரியுதே! வாழ்த்துக்கள்!!

    பொன்ஸ்~~Poorna said...

    Nandakumar G.

    Hi,

    Unga articlekku comments ellorum nalla eludharaanga. adhuvum sudarmaniyum, balabharathyum kalakkaraanga…
    September 19th, 2008 at 7:32 am
    Sridhar Narayanan

    //நானும் மேல் இமையைத் தூக்கி, கீழ் இமையை இழுத்து பாப்பாவுக்கு அருகில் கிள்ளினால், அந்த லென்ஸ் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. தொடர்ந்து செய்யச் செய்ய கண் சிவப்பாகி எரிவது தான் மிச்சம். ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. //

    பயம்மா இருக்கே :-)

    //’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? //

    அதானே! இன்னமும் போட்டுகிட்டுத்தான் இருக்கீங்களா? :-)
    September 19th, 2008 at 11:16 am
    கயல்விழி முத்துலெட்சுமி

    :) நல்ல காமெடி…
    நானும் கல்யாணத்தப்ப லென்ஸ் போட்டிருந்தேன்..கல்யாணமேக்கப்பில் கண்ணாடி நல்லாருக்காதுன்னு ஒரு கருத்து எனக்கு.. லென்சிருக்கே அது பெரிய கொடுமையப்பா.. கழட்டி மாட்டி ..அழுது .. (கண்ணீர் கொட்டறதை சொன்னேன்)

    கல்யாணத்துக்கு முன்ன லேசர் ஆப்பரேசன் பத்தி கேள்விப்பட்டு சொன்னப்ப.. அப்பா கண்ணாடியோடவாச்சும் யாராச்சும் கட்டிப்பாங்க.. கண்ணே தெரியலயன்னு வை ஒருத்தங்களும் கட்டமாட்டாங்க.. இப்பத்தான் வந்திருக்கு பின் விளைவு தெரியாது பேசாம இருன்னு சொல்லிட்டாங்க..

    கல்யாணம் ஆனப்பறம்.. நம்மளை நம்பி இப்ப மூணு பேராகிட்டாங்க.. எல்லாரு பெர்மிசனும் வாங்கவேண்டி இருக்கே..

    கர்ணனின் கவசகுண்டலம் போல கண்ணாடியோடவே வாழ்ந்துடவேண்டியது தான்..
    September 29th, 2008 at 10:35 am
    GT

    VERY INTERESTING AND FUN TO READ.
    October 9th, 2008 at 8:10 pm
    ar-da-mu-

    லேசிக் பண்ணிக்கோங்க சென்னை வரும்போது. பத்தே பத்து நிமிஷம் - மூணு நாள் பாதுகாப்பு அவ்வளவுதான்! அமெரிக்காவில கண்ணாடி வாங்கிறதை விட இந்த சர்ஜரி கம்மி விலை! :) எட்டு வருஷம் ஆச்சு ஜம்முன்னு இருக்கு என் கண்ணு!