இது தொடரெல்லாம் இல்லை.. ஆனால் புதிதாக வந்து வாழத் தொடங்குவதால், இந்த ஊரைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஒரு ஆசையில்…
ஏற்கனவே போன வருடம் அமெரிக்கா வந்த போதும் சரி, இந்த வருடமும் சரி,
தினசரி ஏதாவது ஒரு அதிசயம் எனக்குத் தெரிவதுண்டு. எல்லாமே எழுதவும்
பகிரவும் ஆசைதான் என்ற போதும், இது நாள் வரையிலான தயக்கத்துக்கு முக்கிய
காரணம், இன்றைக்கு இந்தியர்களுக்கு அமெரிக்கா பக்கத்து ஊர் மாதிரி
ஆகிவிட்டது. ஒரு விதத்தில், பூனாவிலோ ஹைதராபாத்திலோ கூட நான் கேட்காத அளவு,
தமிழும் இந்தியும் கேட்கிறது இந்த ஊரில்..நம்ம சிவாஜி அங்கிள் வேற
இங்கிருந்து 250கோடி சம்பாதித்துக் கொண்டு போகும் அளவுக்கு
நம்மவர்களுக்குப் பரிச்சயமான நாடாக இருக்கிறது. இதைப் பற்றிப் புதிதாக
நான் எழுத என்ன இருக்கிறப் போகிறது என்ற எண்ணம் தான். . ஆனால் என்னைப்
போலவே இன்னும் மிட்டாய்க் கடைகள் அதிகம் பார்க்காத ஆட்கள் கண்டிப்பாக
கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்… எழுத ஆரம்பிக்கிறேன்..
சரி.. பில்டப் போதும்.. இனி விசயத்துக்கு வருவோம். ஒரு மாதம் முன்னால்,
சென்னையை விட்டு கிளம்பியது நேற்று நடந்தது போல் தான் இருக்கிறது. சென்னை-
சிங்கை - ஹாங்காங் - சான் பிரான்ஸிஸ்கோ - என்று இந்த முறை கிழக்காசிய வழிப்
பயணம். சிங்கை விமான நிலையத்தில், சிங்கையில் காலையில், தூங்கோ தூங்கென்று
தூங்கி வழிந்தேன்.. நடக்க வேண்டிய அவசியமேயின்றி தானாகவே நகரும் பாதை
போட்டு வைத்திருக்கிறார்கள். பொருட்களைச் சேகரித்துக் கொண்டு அதில் ஏறி
நின்று விட்டால், அதுவே அழைத்துப் போய் தேவையான புறப்பாடு வாசலில் இறங்கச்
சொல்லிவிடுகிறது. நல்லவேளையாக தூங்கிக் கொண்டே இதில் ஏறி தூங்கிக் கொண்டே
என் விமான புறப்பாட்டு வழிக்குப் போய் அப்புறமும் தூங்கிக் கொண்டே
இருந்தவளை, பக்கத்தில் இருந்த பெண்மணி தட்டி எழுப்பி விமானத்துக்கு
அழைத்துப் போனார்.
ஹாங்காங்கில் தூக்கம் வரவில்லை. ஆனால் நல்லகாலமாக வண்டி சீக்கிரமே
கிளம்பிவிட்டது. “சும்மா ஹாங்காங் விமான நிலையத்துக்கு அந்நியச் செலாவணி
கொண்டுவரத் தான் அங்க நிறுத்தி எல்லாத்தையும் மாத்தறாங்க.. இல்லைன்னா, அங்க
தரையிறங்கவே வேண்டாம்.. ” என்று அடிக்கடி பயணிக்கும் - இந்தமுறை
பிலிப்பைன்ஸ் செல்லும் சகபயணி, சென்னை விமான நிலையத்திலேயே சொல்லி
அலுத்துக் கொண்டிருந்ததால், ஹாங்காங் வெறும் பணம் பிடுங்கி நிலையமாகவே
எனக்குத் தெரிந்தது.. ஆனாலும் பத்து டாலரை ஹாங்காங் பணத்துக்கு மாற்றி,
கேவலமான ஒரு காப்பியை வாங்கிக் குடிக்காமலிருக்க மனம் வரவில்லை.
சிங்கையின் நகரும் நடை மேடை மாதிரி இங்கே ஒரு வண்டியே வைத்திருக்கிறார்கள். ஏறி உட்கார்ந்தால் வேண்டிய இடத்தில் கொண்டுவிட பணம்.
சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையம் பரவாயில்லை. போன முறை நியூயார்க்கில்
இறங்கியபோது மூன்று டாலர் கொடுத்தால் தான் சாமான் தள்ளும் வண்டி கிடைக்கும்
என்று கறாராக சொல்லிவிட, முதல்முறைப் பயணமாதலால், அலுவலகத்தில் கொடுத்த
சில்லறையில், பத்துக்குக் குறைவாக இல்லாமல் போக, நானே எல்லாவற்றையும்
தோளில் தூக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு கஸ்டம்ஸைப் பார்க்க
வேண்டியதாகிவிட்டது. இந்த முறை இலவசமாகவே சாமான் தள்ளும் வண்டி
கிடைக்கவும், நிம்மதியாக வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.
வழி நெடுக கண்ட முக்கிய ஆச்சரியம், எப்படித் தான் ஆங்கிலம் கூட தெரியாத
தாய்-தந்தையரைத் தைரியமாக இத்தனை தூரம் அனுப்பி வைக்கிறார்களோ/ அழைத்துக்
கொள்கிறார்களோ! முதல் பயணத்துக்காவது உடன் இருந்து கூட்டி வரலாம் இல்லையா!
கிட்டத்தட்ட மூன்று பேருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் immigration formஐ
மொழிபெயர்த்து எழுதிக் கொடுக்கும் வேலைக்குத் தனியாக ஏதாவது காசு வாங்கி
இருக்கலாம்.. இந்த ஊர்க்காரர்கள் வாங்கி இருப்பார்களாக இருக்கும்! பழைய
காலத்தில் கிராமத்தில் தபால் எழுதிக் கொடுப்பவள் போல் நான் உட்கார்ந்து
எழுதுவதைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சர்தார்ஜி
குடும்பம் வருவதற்குள் நான் ஜூட்.. (பஞ்சாபி அவ்வளவாக தெரியாதே.. )
கலிபோர்னியா முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்குக் கூட்டம் தான்.
வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தியேட்டரில் இன்னமும் சக் தே இந்தியா ஓடிக்
கொண்டிருக்கிறது. தெருவில் முக்குக்கு முக்கு ஒரு இந்திய கடை, இந்திய
உணவகம். அட நம்மூரூ மாதிரி, இந்த ஊரின் ஆளுநரும் ஒரு முன்னாள் சினிமா
நடிகர் தானே!
மற்ற அமெரிக்க நகரங்கள் போல் இல்லாமல் இங்கே பொது போக்குவரத்து வசதி
அதிகம். VTA, BART, Caltrain பல பெயர்களில் ஊர் பூராவும் ரயில், பஸ்ஸில்
போய் வரலாம். இணையத்தில் வழிபார்த்து வண்டி ஓட்டலாம். - கூகிளாரே தெய்வம்
:)அப்படியே, இணையத்தில் வழிபார்த்து பேருந்து கூட பிடிக்கலாம். அரை மைல்
நடக்கத் தயாரா, அதற்கேற்ற மாதிரி வழிசொல்ல ஒரு பக்கம். அட, நீங்க கால் மைல்
தான் நடப்பீங்களா, அதுக்கும் பேருந்து இருக்கு, ஆனா காத்திருக்கும் நேரம்
அதிகரிக்கும் எப்படி வசதி? என்று விரும்பிய வகையில் பயணிக்கலாம்.
எல்லாமே நம்மூரைவிடப் பெரிது பெரிதாக கிடைப்பதால், ரயிலும் நம்ம ஊரைவிட
பெரிய ரயிலாக இருக்கும் என்று ஆசைப்பட்டு பார்த்தால் தண்ணீர்ப்பாம்பு
மாதிரி சின்னதாக, ரெண்டே ரெண்டு பெட்டியோடு, நடுத்தெருவில் ஓடுகிறது ரயில்!
சுத்தமாக இருக்கிறது என்றபோதிலும், நிறைய பேர் பயன்படுத்துவதாக
தெரியவில்லை.. எங்கள் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கிறார்கள் என்பதால்
வருபவர்கள் நிறைய. மற்றபடி மதியமும், மாலை, இரவுகளிலும், இந்தப்
பேருந்துகள் ரயில்களை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் இல்லை தான். இரண்டு
பெட்டி என்பது வார இறுதிகளில் ஒற்றைப் பெட்டியாக குறைந்தும் விடுகிறது.
ஆங்காங்கே தெரு நடுவில் ரயில்பாதைகள் மட்டுமல்ல, ரயில் நிலையங்களும்
கட்டி வைத்திருக்கிறார்கள்! ரயில் நிலையத்துக்குப் போக ஒருபக்கத்து வாகனப்
போக்குவரத்தைக் கடந்து வர வேண்டும்.
இது ஊர்விட்டு ஊர் ஓடும் பெரிய வண்டி..
வீடு வாடகைக்கு எடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி போன இடுகையில் எழுதி
இருந்தேன். சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு தோழி ‘வீட்டு
சொந்தக்காரர் எங்கே இருக்கார்?’ என்று கேட்டபோது தான் வாடகை என்ற பதமே
தப்பு என்று தோன்றியது. வீடுகள் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் காரர்கள் அல்லது
கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்க,
அவற்றிலிருந்து ஒரு வீட்டை ஆறு அல்லது பத்து மாத லீஸுக்கு (இதுக்குத்
தமிழில் என்ன?) விடுகிறார்கள். ஆக சொந்தக் காரர் கட்டுமான நிறுவனம் தான்.
வாடகை வீட்டுக்கு ஒரு காப்பீடு வேற எடுக்கச் சொல்லி, அது வேறு செலவு.
எங்கள் வீட்டுப் புழக்கடை இந்த ஊரில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் இது தான்..
மின்சாரம், வீட்டு தொலைபேசி எல்லாம் ஏற்கனவே கனெக்ஷ்ன் இருக்கிறது. ஒரே
ஒரு தொலைபேசி அழைப்பில் ‘இன்ன தேதியிலிருந்து இவை வேலை செய்யும்’ என்கிற
அளவுக்கு சொல்லிவிடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் வாங்க ஆளுநர் படம் போட்ட
புத்தகத்தை நெட்டுரு போடச் சொல்லி விட்டார்கள். இந்தியாவிலும் நாம்
பின்பற்றும் பல உருப்படியான போக்குவரத்து விதிமுறைகள் ஏன் செய்கிறோம் என்று
தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கும் அந்தப் புத்தகத்தை ஏதோ தேர்வுக்குப்
படிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஆர்வமாக படிக்க முடிந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த மத்திய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் காலனி
நாடாக இருந்த மேற்கு அமெரிக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது.
பெருநகரங்கள் தவிர்த்த இடங்கள் பச்சை பசேலென்று ‘புதர’கமாகவே இருந்த மத்திய
அமெரிக்க வாசம் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே ஆங்காங்கு நம் மொழியும்,
உணவும் கிடைத்துக் கொண்டே இருந்தாலும், நெருக்கமாக மனிதர்கள் வாழும்
நகரங்களைத் தாண்டி மற்ற இடங்கள் மொட்டை மலைகளாகவும், பாலைவனமாகவும் என்று
கண்ணுக்கு குளிர்ச்சியாக இல்லை தான். சென்னையை ஒப்பிடுகையில் ஊர் கொஞ்சமே
கொஞ்சம் குளிருகிறது எனக்கு.. ‘இந்த ஊரே குளிரினால் நீ அமெரிக்காவுக்கு
லாயக்கே இல்லை’ என்ற வாக்கியத்தை இப்போதெல்லாம் எல்லா மொழியிலும்
கேட்டுவிடுகிறேன் :).
ஊர்ப் பெயர், தெருப்பெயர் என்று எல்லாமே ஸ்பானிஷ் மொழிப் பெயர்களாக
இருக்க, பேருந்து, விமான நிலையங்களில் வியட்னாம் மொழியில் வேறு எழுதி
வைத்திருக்கிறார்கள். போர்க் கைதிகளாகவோ அகதிகளாகவோ வந்திருப்பார்களோ
என்னவோ, நிறைய வியட்னாமியர்களும் தென்படுகிறார்கள். சீனர்கள், ஜப்பானியர்,
தாய் மக்கள், பாக் என்று ஆசியர்களும் நிறைய..
அப்புறம் முக்கியமான விசயம் மறந்து போச்சே! இங்கே சாண்டா க்ளாரா மாநில
அரசு நூல் நிலையங்கள் தமிழைத் தன் சிறப்பு பிற மொழியாக கருதுகின்றன.. நிறைய
தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கிறது, அரசு நூலகத்தில்… என்ன கொஞ்சம் அரதப்
பழையதாக, சாண்டில்யன், கல்கி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன்,
சுஜாதா என்று நான் படித்ததாகவே இருந்தாலும், இந்த ஊரில் தமிழ் என்ற ஒரே
காரணத்துக்காக வாராவாரம் போய் அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறேன். ஒரு
உறுப்பினர் அட்டைக்கு எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எடுத்து மூன்று
வாரங்களுக்குள் திருப்பலாம். அதே போல தமிழ்ப் பட குறுந்தகடுகளும்
கிடைக்கின்றன. அவற்றையும் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து ஒரு வாரத்தில்
திருப்பலாம்.. சரி சரி, நூலகம் மூடுவதற்குள் கிளம்பவேண்டும்.. அப்புறம்
வந்து மிச்சம்..
2 comments:
லீஸ் - குத்தகை! :-)
//பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த மத்திய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த மேற்கு அமெரிக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது.//
இது அந்த இடத்தின் இயற்கை சூழ்நிலையால் என நினைக்கிறேன். ஆங்கிலேயர்களாலும் ஸ்பெயினாலும் இல்லை. ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னார். ஆங்கிலேயர்கள் ஆண்ட நாட்டிலெல்லாம் நல்ல கல்லூரிகள் நிறுவி ஜனநாயகம் ஓரளவுக்கு வளருமாறு செய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்பெயின், ஃப்ரெஞ்சு நாட்டினர் ஆண்ட நாட்டிலெல்லாம் அப்படி ஒன்றும் வளர்ச்சியில்லை என்று…
//இங்கே சாண்டா க்ளாரா மாநில அரசு நூல் நிலையங்கள் தமிழைத் தன் சிறப்பு பிற மொழியாக கருதுகின்றன..//
கொடுத்து வைத்தவர் நீங்கள்!
Comment by நாகு — October 20, 2007 @ 7:47 am
//இன்னும் மிட்டாய்க் கடைகள் அதிகம் பார்க்காத ஆட்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்…//
நிறைய இருக்கோம்ங்க. தைரியாமா தொடருங்க :-)
மேற்கு அமெரிக்காவில் கிழக்கு ஆசிய தாக்கம் பல நூறாண்டுகளாகவே இருந்ததாகப் படித்திருக்கிறேன். ஜப்பானிலிருந்து, சீனாவிலிருந்து கப்பலில் புறப்பட்டு போய்க் கொண்டே இருந்தால் அமெர்க்கக் கண்டத்துக்கு வந்து சேரத்தானே வேண்டும். 1800களின் கலிபோர்னியா தங்க வேட்டையில் சீனர்களும் பெருமளவு கலந்து கொண்டதாகக் கேள்வி.
இப்போதும் ஆங்காங்கிலிருந்து செய்யப்படும் சீன மொழிப் படங்களில் சான்பிரான்சிஸ்கோவின் சீனா டவுன்களைப் பார்த்தால், படம் சீனாவில் எடுக்கப்படுவதாகவே தோன்றும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Comment by மா சிவகுமார் — October 20, 2007 @ 9:54 am
அமெரிக்காவில் குடிதண்ணீர் வசதி அரசால் செய்யப்படுகிறதா..? பொதுக்குழாய்கள் உண்டா..? இல்லை அதற்கும் ‘வாட்டர் கார்டு’கள் உள்ளனவா..?
இப்படிக்கு,
மிட்டாய்கடையை எட்டிக்கூடப் பார்க்காதோர் சங்கம்.
Comment by ஆழியூரான் — October 23, 2007 @ 10:35 am
வீட்டை leaseக்கு விடுவதை ஒத்திக்கு விடுவது என்பார்கள். நிலத்துக்கு குத்தகை என்பார்கள்.
நகரும் நடை மேடை பல நாட்டு விமான நிலையத்துல இருக்குன்னுல நினைச்சேன். amsterdamல இருக்கு. bangkokல பார்த்த நினைவு.
தன் சிறப்பு பிற மொழியா - என்ன சொல்ல வரீங்க?
Comment by ravishankar — October 23, 2007 @ 7:51 pm
:-)
Comment by Sathia — October 24, 2007 @ 3:50 am
சிவாஜி அங்கிள்???
வண்ண்ண்ண்ண்ண்மையாகக் கண்ண்ண்ண்டிகிறேன். :-)
தொடர்ந்து எழுதுங்கோ… படிக்க ஜாலியா இருக்கு.
Comment by prakash — October 24, 2007 @ 6:45 pm
[…] ) தொடர்பாக அமெரீக்கா போனவர், ஊர் சுத்திக் காட்டுகிறார்..படங்களுடன் சரி.. பில்டப் போதும்.. இனி […]
Pingback by கில்லி - Gilli » Blog Archive » அமெரிக்கா போகலாம் வாங்க - பொன்ஸ் — October 26, 2007 @ 12:28 am
Welcome to SF Bay Area!!!
Comment by Lakshman — October 26, 2007 @ 7:39 am
மகிழ்ச்சி. இணைய மேச்சலில் அதிஸ்டத்தால் உங்கள் கரும்புத் தோட்டம் வந்து சேர்ந்தேன். தமிழ் இனிக்கிறது
Comment by வ.ஐ.ச.ஜெயபாலன் — October 27, 2007 @ 12:11 pm
அட! இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டேனே!
ஒத்தி=நிலம் அல்லது வீட்டை ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலம்
அனுபவிப்பது. கெடு முடிந்த பின்னர் கொடுத்த
தொகை முழுவதையும் பெற்றுக்கொண்டு நிலதை/
விட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
இன்கே வாடகை என்பதே பொடுந்தும்
Comment by சிவஞானம்.ஜி — October 28, 2007 @ 9:37 pm
**நிலத்தை/வீட்டைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.
இங்கே வாடகை என்பதே பொருந்தும்
குத்தகை=நிலவுடைமையாளரிடம் விவசாயத்திற்காக
ஒப்பந்தப்படி ஒருவர் எடுத்துக் கொள்வது
நிலத்தை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கு
ஈடாக விளைச்சலில் முன்னதாகவே
நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதி தாணீயமாகவோ/
பணமாகவோ நிலச்சொந்தக்காரருக்கு லொடுக்க
வேண்டும். ஆங்கிலத்தில் tenancy எனப்படும்
Comment by சிவஞானம்.ஜி — October 29, 2007 @ 6:36 pm
சற்றுமுன்னுக்கு நேரடி செய்தியாளர்கள் தேவை ;)
IndiaGlitz - Varanam Aayiram team in US! - Tamil Movie News
Comment by Bala Subra — October 30, 2007 @ 12:36 am
வார்ப்புரு மாத்தியாச்சா! நல்லாருக்கு (உங்க பழைய பதிவு - ஞாயிறு/அப்பா/பீரோ எல்லாம் ‘ஞாபகம் வருதே…’)
Comment by Bala Subra — October 30, 2007 @ 12:37 am
அந்தப் பதிவு… pookri.com » சிவகுமார்! இது நியாயமா?
Comment by Bala Subra — October 30, 2007 @ 12:39 am
படங்களை பெரிதாகப் பார்க்க முடியவில்லை.ஏதாவது விருது கிடைத்துவிடும் என்ற பயமா?:)
இயல்பான சரளமான நடை.
பி.கு :-பத்ரியின் பக்கம் தேடப்போய் கில்லியில் விழுந்து இதற்குள் வந்துள்ளேன்.இனித்தான் பத்ரியிடம் போகவேண்டும்.அப்புறம் வந்து மிச்சம்..
Comment by தீவு — October 30, 2007 @ 7:36 pm
Post a Comment