Monday, July 02, 2007

என்று தணியும்?! - ஒழுங்கற்ற சில சிந்தனைகள்..

எங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் போன வாரம் வீடு காலி செய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாவது படிக்கும் அவர்களின் மகனை மந்தைவெளியில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் சேர்த்திருக்கிறார்களாம். அந்தப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் பள்ளிக்கு ஐந்து கி.மீ சுற்றளவிலிருந்து வருபவர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். இந்த ஒரே காரணத்துக்காக, இவர்கள் விசாலமான சொந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அதிக வாடகையில், பள்ளிக்கருகில், சின்னதொரு வீட்டுக்கு குடி போகிறார்களாம். வருத்தத்துடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் விடைபெறவும், எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ‘தனியார் கல்வி நிறுவனங்கள் கூட இது போல் நல்ல விசயங்களை வற்புறுத்துகிறதே!’ என்ற வியப்பு தான். கொஞ்சம் தூரத்திலிருந்து பிள்ளைகள் வந்தால், பேருந்து, காலை உணவு, மதிய உணவு என்று பள்ளியிலேயே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து யானை விலை, குதிரை விலையில் கொடுத்து லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள் இப்படி மனம் மாறி நல்ல விசயங்களை வற்புறுத்துகின்றன எனில், புது தில்லி உயர்நீதி மன்றம் சில மாதங்களுக்கு முன்னால் வெளியிட்ட ஒரு தீர்ப்பு தான் காரணமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் மாணவர் சேர்க்கையில், தன் வளாகத்தை ஒட்டிய அருகாமை வீடுகளைச் சார்ந்த பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் தலைநகர் தில்லியைச் சார்ந்த பள்ளிகளுக்கு மட்டுமே விதித்திருந்தது. நாட்டின் மற்ற பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றும் கருத்தாக தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த சட்டம் நாடு முழுவதும் அமலில் வந்து விட்டால் என்ன செய்வது என்று இப்போதே இது போன்றவற்றைத் தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கி விட்டன போலும்.
நாங்கள் மாணவிகளாக இருந்த காலகட்டத்தில், எங்கள் அப்பா அருகில் இருந்த பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டுவிட்டார். கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரியும் வயதில் அடுத்த கிராமத்தில் இன்னும் நல்ல பள்ளி இருப்பதும், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கூட அந்தப் பள்ளிக்குப் போய்ப் படித்து வருவதும் தெரிந்த போது, எங்களை ஏன் அந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பா சொன்ன பதில் இன்னுமும் நினைவிருக்கிறது. ‘பள்ளி என்பது மாணவர்களுக்கு நடக்கும் தூரத்தில் இருக்க வேண்டும். நாளைக்கு பள்ளியிலோ, ஊரிலோ ஏதும் பிரச்சனை என்றால், உடனுக்குடன் வீட்டுக்கு நீங்களே தானாக திரும்பி வரும் அளவுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளே சிறந்தவை. அப்படி ஒன்றும் பெரிய தர வித்தியாசம் வந்துவிடப் போவதில்லை. கல்வித்தரத்தை விட பள்ளியின் அருகாமை மிகவும் முக்கியம்’ என்றார். அப்போது அது ஏதோ சாக்கு போக்கு போலத் தான் தோன்றியது. ஆனால், மிதிவண்டியில் ஐந்து நிமிடத்தில் சென்றடையக் கூடிய பள்ளியில் படித்ததால், படிப்பைத் தவிர்த்த பொழுதுபோக்குகளுக்கு எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. தங்கைக்கு ஒருமுறை பள்ளியில் உடல்நிலை சரியில்லாமல் போன போது, அவர்களே ஆட்டோ வைத்து வீட்டில் கொண்டுவிட ஏதுவாக இருந்தது. சில சமயம் மறந்து விட்ட புத்தகங்களை மதியம் வீட்டுக்கு வந்து எடுத்துப் போக முடிந்தது. அப்பா சொன்னது போல், பெற்றோரை எதிர்பார்க்காது, நாங்களே சுயமாக எங்கும் போய் வரும் பழக்கம் உண்டானது இந்தப் பள்ளிக் காலங்களில்தான். இன்றைய பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு ஏனோ இது போன்ற யோசனைகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
போன வாரம், மழைக்கால இரவில், பிய்ந்த செருப்பைத் தைத்துக் கொள்ள ஒதுங்கியபோது, செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குடிசைக்குள்ளிருந்து அறிவியல் பாடங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தலையை உள்ளே விட்டு படிப்பது யாரென்று பார்த்தேன். சின்ன பையன் ஒருவன், அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக் குழல்விளக்கின் வெளிச்சத்தைப் பகிர்ந்து கொண்டு படித்துக் கொண்டிருந்தான். தெருவில் ஓடிக் கொண்டிருக்கும் வண்டிகள், அப்பாவைப் பார்க்க வந்து பேசிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், பக்கத்து தேநீர்க்கடையின் வானொலிச் சத்தம், எதுவுமே தன்னைப் பாதிக்காது அறிவியலில் மூழ்கி இருந்தான். ‘தம்பி என்ன படிக்குது?’ என்று பேச்சு கொடுத்தேன்.. ‘எட்டாவது’ என்றார் அவன் அப்பா. ‘எந்த ஸ்கூல்?’ என்றதற்கு, ‘பல்லாவரம் அரசுப் பள்ளி’ என்றார். அடக் கொடுமையே! இந்த வயதில் அரும்பாக்கத்திலிருந்து பல்லாவரம் போய்ப் படிக்க வேண்டுமா! பக்கத்திலேயே ஏன் சேர்க்கவில்லை என்று கேட்க நினைத்து, அதற்குள் அவருக்கு வேறு ஒரு வாடிக்கையாளர் வந்துவிடவே வேலையைக் கெடுக்க வேண்டாம் என்று நகர்ந்துவிட்டேன். தமிழ்வழி அரசுப் பள்ளிகள் அருகில் இல்லை என்று திருவான்மியூரிலிருந்து ஆலந்தூருக்குப் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்த தோழி ஒருவர் நினைவில் வந்து போனார்.
சாக்கு மூட்டைகளாக மாணவர்களை நிரப்பிக் கொண்டு செல்லும் ஆட்டோக்கள், நாளைய தலைமுறையினரை அழைத்துச் செல்வதை மறந்து வேகம் மட்டுமே குறியாய் ஓடும் பள்ளி வேன்கள், பெரிய மூட்டைகளைச் சுமந்து கொண்டு பேருந்துகளின் இடிபாடுகளிடையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்.. தில்லியின் அண்டைவாழ் மாணவர்கள் திட்டம் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்து சேருமோ? என்று அங்கலாய்க்கலாம் என்றால், அடுத்த பிரச்சனை பள்ளிகள்.
நம் நாட்டில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? அதில் எத்தனை குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள்? காலனிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும்போதே பள்ளிகளுக்கான இடங்களும் அதில் குறிக்கப்படுகின்றனவா? நூறு வீடுகள், அதிகபட்சம் ஐநூறு குடும்பங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளிக்கும் இடம் விட்டு நகரத்திட்டம் போட்டால் தான் ஓரளவுக்காவது இதை நடைமுறைப்படுத்த முடியும்.
சரி, பள்ளியை விட்டு அடுத்த கேள்வி, இத்தனை பிள்ளைகள் படிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
சமீபத்தில் கோவை அருகே மருதமலைக்குப் போயிருந்தோம். கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் கல்வீரன்பாளையம் அரசினர் பள்ளியில் பகல் பன்னிரண்டு மணிக்கு எட்டிப் பார்த்த போது பிள்ளைகள் ஆசிரியர் இல்லாமலே படித்துக் கொண்டிருந்தனர். ஒரு மாணவி புத்தகத்தைப் பார்த்து ஏதோ ஒரு பகுதியை உரத்துச் சொல்ல, மற்ற பிள்ளைகள் அதையே திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்ததைக் கண்டுகொண்ட பள்ளியின் சத்துணவுப் பிரிவு சமையற்காரர் தாமே வந்து என்ன ஏது என்று விசாரித்தார். சும்மா பிள்ளைகளைப் பார்க்க வந்தோம் என்று வழிந்து விட்டு, ஆசிரியர்களைப் பற்றி விசாரித்தால், ஒன்பது மணிக்குத் தொடங்கும் பள்ளிக்கு, அவர்கள் இன்னும் வந்து சேரவில்லையாம். ‘பஸ் கெடச்சிருக்காது.. கீழேருந்து வரணுமில்ல!’ என்று வெள்ளந்தியாக சொன்னார். சுமார் இருபது பிள்ளைகள் படிக்கும் அந்தப் பள்ளியில் வேலை செய்ய இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஊருக்குள் யாரும் தங்கவில்லை, கீழே நகரத்திலிருந்து வந்து போகிறார்களாம்.
போகட்டும்; இன்றைக்கு இந்த மட்டும் வந்து போகவாவது ஆசிரியர்கள் இருக்கிறார்களே! நாளை நிலை இன்னும் கஷ்டமாகிவிடும் அபாயம் அதிகம் இருக்கிறது. என் தாத்தா காலத்தில் புனிதமானதாக கருதப்பட்ட ஆசிரியர்கள் தொழில் இன்றைக்கு வேறு வேலை கிடைக்காமல், ‘சரி, இதைத்தான் செய்வோமே!’, என்று அரைகுறை மனதோடு செய்யப்படும் தொழிலாக மாறிவிட்டது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் கூட மென்மேலும் படித்துவிட்டு வேறு பொருளாதார நிறைவளிக்கும் வேலை கிடைக்குமா என பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் தாம். அவர்களையும் குறை சொல்ல முடியாதபடி நமது கல்வி நிறுவனங்கள் உண்மையாகவே ஆசிரியர்களை மதிக்காமல் தான் செயல்படுகின்றன.
Business Process Outsourcing ஐ அடுத்து வந்து கொண்டே இருக்கும் Education Process Outsourcing ஆசிரியர்களுக்கு ஒரு வரம்; நம் மாணவர்களுக்குத் தான் எமனாக வரும் போலிருக்கிறது.. உட்கார்ந்த இடத்திலிருந்தே கணினியில், முன்னேறிய நாட்டு மாணவன் ஒருவனுக்கு பாடம் எடுத்து சந்தேகங்களை மட்டும் நிவர்த்திக்கவே ஐந்திலக்கச் சம்பளம் என்றால் ஆசிரியர்களுக்கு கசக்கப் போகிறதா என்ன? இந்த கல்வி ஏற்றுமதி இன்னும் கொஞ்சம் நாட்களில் அதிக பிரபலமாகி எல்லா ஆசிரியர்களையும் ஈர்த்துக் கொள்ளும் போது, இரண்டு விதமான நிலைகள் வரலாம், கல்வி நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ள அதிகம் சம்பளம் கொடுக்க நேரிடலாம். இன்றைக்கு லட்சங்களில் விலை பேசப்படும் இருக்கும் கல்வியின் விலை கோடிகளுக்கு உயரலாம். அல்லது, இளைய வகுப்பினருக்கு பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லாமல், மருதமலை அரசினர் பள்ளி போல பெரிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இளையவர்களுக்கு ஆசிரியராகிப் போகலாம்….
சுதந்திரமடைந்து ஐம்பது வருடங்கள் கழித்து, அனைவருக்கும் கல்வி என்பதை திட்டமாக பேசிக் கொண்டே இருக்கிறோம். போகிற போக்கில் அந்த கல்வியும் காணாமல் போய் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டியதாகிவிடும்..
பேசாமல், அரசாங்கமே Education Process Outsourcingஐ பள்ளிகளுக்கு வாடகைக்கு விட்டு, ஒரு பகுதி அயல்நாட்டு வருமானமாகவும், சரிபாதி நம்நாட்டுப் பிள்ளைகளுக்கான கல்வியாகவும் பராமரிக்கலாம்..
பிகு: கும்பகோணம் தீ விபத்து குறித்த பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் ‘என்று தணியும்’ ஐப் பார்த்தது, மற்றும் சொந்த அனுபவங்கள் என்று சில தொடர்பற்ற சிந்தனைகளின் விளைவு இந்த இடுகை.. அத்தனை தூரம் கிராமங்களிலிருந்து வந்த பிள்ளைகளாக இல்லாமல், பள்ளிக்கு அருகாமையிலேயே பெற்றோரும் அவர்தம் வீடுகளும் இருந்திருந்தால், தினசரி கவனித்திருப்பார்களோ என்னவோ.. அத்தோடு, ஏதும் பிரச்சனை என்றால் உடனுக்குடன் அணுகி உதவும் முடிந்திருக்கும்..

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

14 Responses to “என்று தணியும்?! - ஒழுங்கற்ற சில சிந்தனைகள்..”

# யோசிப்பவர்on 02 Jul 2007 at 1:14 pm

//இவர்கள் விசாலமான சொந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அதிக வாடகையில், பள்ளிக்கருகில், சின்னதொரு வீட்டுக்கு குடி போகிறார்களாம்//

இது அசல் கிறுக்குத்தனம்.

//ஒவ்வொரு பள்ளியும் மாணவர் சேர்க்கையில், தன் வளாகத்தை ஒட்டிய அருகாமை வீடுகளைச் சார்ந்த பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் //

முன்னுரிமைதான் கொடுக்க சொல்லியிருக்கிறது. அதற்காக ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவனின் குடியிருப்பை மாற்ற சொல்லி வற்புறுத்துவது (அல்லது அப்படி ஒரு நிலைக்கு நெருக்குவது) பள்ளிகள் செய்யும் அராஜகம்

பொன்ஸ்~~Poorna said...


# மணியன்on 02 Jul 2007 at 1:38 pm

கல்வீரன்பாளையமது….நான் அங்கு வீடுகட்ட நிலம் வாங்கியிருக்கிறேன் :)

பள்ளிக்கல்வி பற்றிய உங்களது சிந்தனைகள் மிக விரைவில் பரிசீலிகப்பட வேண்டியவை.இல்லாவிட்டால் நம் பிள்ளைகளூக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்காமல் போய்விடும். நீங்கள் சொல்வதுபோல் அரசே இந்த செயலை எடுத்துக் கொண்டு வரும் வருமானத்தை எல்லா ஆசிரியர்களின் ஊதியமும் ஏறவும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் வசதிகளும் வழங்க உதவுதலும் இயலும்.
# poornaon 02 Jul 2007 at 2:09 pm

யோசி.
அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதப் போவதால் நல்ல பள்ளியாக வேண்டும் என்று இப்போது தான் மாற்றி இருக்கிறார்கள்.. இவன் அந்தப் பள்ளிக்கு புது மாணவன்.

நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்து எனக்கு ஒரு திடீர் யோசனை… அருகில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கச் சொன்னால், நம்ம பள்ளிகள், சேரும் மாணவர்களை அருகில் வந்து இருக்கச் சொல்கிறது போலும்.. ரியல் எஸ்டேட்டையும் சேர்த்துச் செய்தால், இது இன்னமும் லாபகரமான தொழிலாகிவிடும் போலிருக்கே!

மணியன், கல்வீரன்பாளையம் தான்.. கோவையைச் சுற்றி எல்லாம் பாளையங்கள் ்தானே.. மறந்து போச்சு :)
# யெஸ்.பாலபாரதிon 02 Jul 2007 at 2:30 pm

உங்கள் ஆதங்கம் எல்லாம் சரிதான் பொன்ஸ்..,

அதே சமயம், அரசு மற்றும் அரசு ஆரிரியர்களை மட்டும் பேசும் நீங்கள் குழந்தைகளின் பெற்றோரைப்பற்றி பேசாதது.. கவனக்குறைவா? அல்லது திட்டமிட்டதா? அறியேன்.

இன்றைக்கு நாடு தழுவிய அளவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணங்களில் பெற்றோர்களின் மன நிலையும் கூட ஒன்று என்பதனை மறுக்கவியலாது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலாளர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரும் தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என.. அரசு (ஆணை) கட்டளைகளை கொண்டு வராத வரை மாற்றங்கள் நிகழப்போவதில்லை.
# poornaon 02 Jul 2007 at 2:42 pm

பாலா,
அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, செல்வாக்கு, நல்ல பெயர் குறைபாடு பற்றி நீங்க பேசுறீங்க.. நான் பொதுவா எல்லா பள்ளிகளைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தனியார் பள்ளிகள் கொடுக்கும் மதிப்பைக் கூட அரசு பள்ளிகள் கொடுப்பதாக தெரியவில்லையே!

இடுகையில் விட்டுப் போன ஒரு விசயம், சிக்கோ(sicko) மாதிரி, பல்வேறு நாடுகளின் கல்வி குறித்த கொள்கைகளையும் யாரேனும் படமாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்…

பொன்ஸ்~~Poorna said...


# யோசிப்பவர்on 02 Jul 2007 at 4:40 pm

//நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்து எனக்கு ஒரு திடீர் யோசனை… அருகில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கச் சொன்னால், நம்ம பள்ளிகள், சேரும் மாணவர்களை அருகில் வந்து இருக்கச் சொல்கிறது போலும்.. ரியல் எஸ்டேட்டையும் சேர்த்துச் செய்தால், இது இன்னமும் லாபகரமான தொழிலாகிவிடும் போலிருக்கே!

//

அப்படித்தான் செய்வார்கள். இனிமேல் குழந்தைகளை ள்KGயில் சேர்ப்பதற்கு நாம் அவர்களிடம் கட்டாயம் வீடு(ம்) வாங்க வேண்டும் என்ற நிலை விரைவில் வந்தால் ஆச்சர்யமில்லை!!!


# msathiaon 03 Jul 2007 at 12:13 am

ஒழுங்கற்ற சிந்தனையா? ஒழுங்கான சிந்தனை தான்.

அருகிலேயை கல்வி இருப்பதால் ஊர்சுற்றல், காலதாமதமாதல் என பெற்றோருக்கும் சிறுவயதிலேயே பேருந்தையும், ஆட்டோவையும் பிடிக்கும் மன அழுத்தம் வராமல் விளையாட்டு , நட்பு என மாணவர்களுக்கும் ஒரு சேர லாபம் தான்.

பாலா,
அரசுப்பள்ளிகள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறீர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்கு. கிராமப்புறங்களில் ட்யூஷன் என்று அரசு ஆசிரியர்கள் அடிக்கும் கொட்டம் தாங்கமுடியாத்து. இன்றும் அதே நிலைதானா என்று தெரியவில்லை.

-சத்தியா
# அயன்on 03 Jul 2007 at 2:30 pm

நீங்கள் எழுதியதைப் பார்க்கும்போது என் சொந்த அனுபவத்தைப் பகிர எண்ணினேன். நான் +2 படிக்கும்போது வீட்டின் சூழல் காரணமாக அம்மாவின் கிராமத்தில்(குருவிகுளம் - கோயில்பட்டி அருகே) தங்கி சொந்தமாகவே 3 மாதங்கள் எல்லா பாடத்தையும் படிக்க நேர்ந்தது. அப்போது எனக்குப் புரியாத abstract algebra பற்றி கேட்க அந்த ஊர் வாத்தியாரை அணுகினேன். அவர் இதெல்லாம் எங்களுக்கே தெரியாது, நாங்கள் நடத்த வில்லை யென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று கூறினார்.

அரசாங்க சம்பளம் வாங்கும் ஒரு ஆசிரியனே இப்படி என்றால் அவன் மாணவர்களுக்கு என்னத்தைக் க்ற்றுக் கொடுப்பான்.

இதற்கு அரசாங்கத்தை மட்டும் ஈடுபடுத்தி தீர்வு காண் முடியாது. முக்கியமாக பாலா சொன்னது போல் பெற்றோரின் சிந்தனைகளையும் மாற்ற வேண்டும். ஒரு பள்ளி என்பது ஒரு சமூகத்தின் அளப்பெரிய சொத்தாகக் கருதி அந்தச் சமூகமே கல்வியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் என் கருத்து.

“அனைவருக்கும் கல்வி திட்டம்” தொடங்கியதில் இருந்து அதில் மிக அருமையாக செயல் பட்டு வரும் மாநிலம் தமிழகம் மட்டுமே என்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். அப்படி என்றால் மற்ற மாநிலங்களைப் பற்றி நாம் பேசவே கூடாது.
# அயன்on 03 Jul 2007 at 2:33 pm

ஒரு சின்ன திருத்தம்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் EPO education process outsourcingஅ என்று தெரிய வில்லை ஆனால் அந்தத் தொடர் Education and Public outreach என்ற அர்த்ததில் பயன்படுத்தப்ப் படுவதாக googleல் பார்த்தேன். அதைக்கொஞ்சம் கவனிக்கவும்.

பொன்ஸ்~~Poorna said...


# K.R.Athiyamanon 03 Jul 2007 at 8:54 pm

Socialistic polices has made job-security of govt staff and teachers
unbreakable. while those teachers are paid well above the
market rates, they lack work ethcis and commitment as they
can never be sacked for any matter. hence the present sorry
status in govt schools (esp of rural areas). if hire and fire policy
is adopted while the power over schools is decentralised to
panchayaths or some equivalents, then situation may improve.
govt pours billions into schooling with poor returns…
but all this is politically impossible with trade unions and
‘leftists’ opposing any reforms to labour acts…
# காட்டாறுon 04 Jul 2007 at 8:06 am

//அந்தப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் பள்ளிக்கு ஐந்து கி.மீ சுற்றளவிலிருந்து வருபவர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம்//

பொன்ஸ், அமெரிக்காவில் இந்த புழக்கம் இன்றும் உண்டு. அதாவது, ஒவ்வொரு county-யும் பல்வேறு school district கொண்டது. ஒரே county-யை சேர்ந்தவர்களாயினும், வேறு வேறு school district சேர்ந்தவர்களாயிருப்பர். ஒரு school district ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட town கொண்டிருக்கலாம். அந்த டவுனில் உள்ளவர்கள் மட்டுமே அந்த school district-இல் படிக்க முடியும். இவ்வாறு இருப்பதால், பல்வேறு பயன்கள் உள்ளன. பள்ளியை சுற்றியே அல்லது அருகாமையில் வீடு இருப்பதால், உங்கள் பதிவில் சொன்னது போல், குழந்தைகளின் நலன், அவர்களின் வளர்ச்சி, பெற்றொர்களின் பங்கேற்பு என்பதெல்லாம் ஈஸியாகவும், வசதியாகவும் போய்விடும். குழந்தைகளும் 30 நிமிட நேரத்திற்குள் வீடு வந்து சேர்வதும், மேலும் extra curricular activities செய்வதற்கும் ஏதுவாகிறது. அது மட்டுமல்லாது, ஒவ்வொரு வகுப்பிலும் குறைவான மாணாக்கரே இருப்பதால், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணாக்கரின் குறை/நிறைகளை அறிய ஏதுவாகிறது. இது மட்டுமில்லாமல், நீங்கள் சந்தேகித்தது போல், அந்த அந்த டவுனின் நிலவகை ஆதாயம் நிர்ணயிக்கப் படுகிறது.

என் கருத்து என்னவென்றால், இது ஒரு வகையில் பயனுள்ள மாற்றமாய் இருப்பினும், இன்னொரு வகையில் பார்த்தால், குழந்தைகளுக்கு நேரம் அதிகமாய் கிடைப்பதை சரியான வகையில் கழிக்க தவறினால், தவறான வழியில் செல்லவும் வாய்ப்புக்கள் அதிகம்.

உங்கள் ஆதங்கத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள். :)
# ரவிசங்கர்on 06 Jul 2007 at 1:04 pm

முன்பு அக்கா பையன் பள்ளிக்கும் வீட்டுக்கும் பல km தொலைவு. காலை போக்குவரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் விடுவதே உளைச்சலாக இருந்தது. இப்ப வீட்டுக்கும் பள்ளிக்கும் ஓடிப் பிடித்து விளையாடும் தூரத்துக்கு வந்து விட்டார்கள். miss அடிச்சா வீட்டுக்கு ஓடி வந்திடலாம் :) நிம்மதியாக இருக்கிறார்கள். அரசு, நீதிமன்ற ஆணை இல்லாவிட்டாலும் கூட பெற்றோரே வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்க்கலாம். இல்லை, நல்ல பள்ளி வேண்டுமானால் வீட்டை மாற்றிக் கொண்டு அருகில் போவது நல்லது