Monday, April 16, 2007

ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.

எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது "லவ் ஸ்டோரி"(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த டாக்டர்ஸும்(Doctors) சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த "Acts of Faith"திலும் காணக் கிடைப்பது கண்கூடு.

"Acts of Faith" மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.


டேனியல்(Daniel), அவன் தமக்கை டேபோரா(Deborah), அவளுடைய காதலன் டிமோத்தி(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.

தந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

டெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.

நமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.

யூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.

மெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.

டிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா 'புண்ணிய பூமி'யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.

இதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.

நாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.

பாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.

இருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.

நல்ல மகனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.

ஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.

மதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.
புத்தகம் : Acts of Faith
ஆசிரியர் : Erich Segal
வெளியிட்டோர் : Bantam Books
பதிப்பு : April 1992
குறிப்புகள்:
1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் :)
2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.

12 comments:

ACE !! said...

நானும் அப்புத்தகத்தை படித்திருக்கிறேன்.. நம்மூரில் மட்டும் தான் கலப்பு மத திருமணங்கள் எதிர்க்க படுகின்றன் என்ற தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வைத்த புத்தகம்..

Only Love என்ற புத்தகமும் நன்றாய் இருந்தது.. கொஞ்சம் சென்டி தான்.. ஆனால், ஒரு பாஸிடிவ் முடிவிருக்கும்..முடிந்தால், படித்து பாருங்கள்

வாழ்துக்கள்!!

Ayyanar Viswanath said...

நல்ல விமர்சனம் பொன்ஸ்
:)
யூதர்கள்னா எனக்கு ஞாபகம் வரது பியானிஸ்ட் படம்தான் (பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்..)
கதற வச்ச படம்..கொஞ்ச நேரமே வந்து போற அவங்களோட சந்தோஷமான வாழ்க்கைய நல்லா சொல்லியிருப்பாங்க
தொடர்ச்சியா புத்தகங்களா படிச்சி தள்றிங்களோ..கலக்குங்க
:)

நாமக்கல் சிபி said...

ஏதோ உங்க புண்ணியத்துல இந்த மாதிரி கதையெல்லாம் தெரிஞ்சிக்க முடியுது.

நாம எங்கே இங்கிலீஸூ புஸ்தகம் எல்லாம் படிச்சி, அப்புறம் புரிஞ்சிக்குறது.


பதிவுக்கு நன்றி!

தருமி said...

Erich Segal-ன் love story வாசிச்சிருக்கேன். பின்னால் படமும் பார்த்தேன். நீங்க சொன்னது மாதிரி நம்ம தமிழ்ப்படக் கதை மாதிரியே இருந்தாலும் வாசிக்க நல்லாவே இருந்த ஞாபகம். அதைவிடவும் மனப்பாடமே பண்ண முடியாத எனக்கும்கூட இத்தனை வருஷமாகியும் "Love means never having to say sorry"அப்டின்றது இன்னும் நினைவில இருக்கு அப்டின்னா ... எல்லா பெருமையும் ஆசிரியருக்கே.

நண்பன் said...

ACTS OF FAITH -

So you are back to form.

Great

Keep it up

Nanban

Chinna Ammini said...

Anne Rice'ன் Christ the Lord - Out of Egypt கிடைச்சா படிச்சு பாருங்க. ஜிஸஸ் 7 வயதுக்குழந்தயா இருக்கும் போது நடந்த உண்மை கலந்த அழகான கற்பனை. மற்றவர்கள் போல் அல்லாமல் தமக்கு சக்தி இருப்பது தெரியாமல் ஒரு குழந்தையை கற்பனை செய்ததும் தான் தான் The King என்பது ஜீஸஸ்‍க்கு தெரியப்படுத்துவதும் வித்யாசமான இடங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

ACE,
Only Loveவும் Erich Segal தானா?

அய்யனார்,
நான் திரைப்படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை.. சினிமாக்களை விட புத்தகங்களின் மீது ஆர்வம் அதிகம். பியானிஸ்ட் பத்தி ஆ.வி.யில் கொஞ்ச நாள் முன்னால் வந்தது. படித்திருக்கிறேன். படம் கிடைத்தால் பார்க்கணும்..

சிபி,
அது சரி.. இனிமே கதை எழுதாம சஸ்பென்ஸா விட்ர வேண்டியது தான் :))

தருமி,
படமெல்லாம் நான் பார்க்கலை.. பரவாயில்லை, தாத்தாவுக்கும் லவ் ஸ்டோரி பிடிக்குதே :))))

நண்பன்,
அடுத்தடுத்து செய்ய நமக்குத்தான் உருப்படியான வேலைகள் பலவும் இருக்கின்றனவே... :)

சின்ன அம்மிணி,
அன்னா ரைஸ் படிச்சதில்லை. கிடைத்தால் படிச்சு பார்க்கிறேன்..

வேதா :) நன்றி :))

ACE !! said...

//Only Loveவும் Erich Segal தானா?//

ஆமாம் Eric Seagal தான் எழுதியது.. காதலி கைவிட்டதின் பின் ஒரு காதலனின் கதை.. என்னை ரொம்பவே நெகிழ வைத்தது..Oliver story.. கிட்ட தட்ட இதே மாதிரி இருக்கும்.. வெட்டிபயல் கதை போல், ஸ்பாட் ஜோக்ஸ் நிறைய உண்டு :)

Ayyanar Viswanath said...

ஆ.வி யோட உலக சினிமா விமர்சனத்த தவிர்ப்பது நல்லது.:)

சொல்லப்பட வேண்டிய விடயத்த தவிர எல்லாம் சொல்றார் செழியன்...

பாரதி தம்பி said...

தங்கு தடையில்லாத 'ஆற்றொழுக்கமான' நடையில் உங்கள் புத்தக விமர்சனம் சிறப்பா இருக்கு. நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உங்கள் வாசிப்பனுவத்தோடு படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதிர் பார்க்கிறேன்.

வினையூக்கி said...

ம்ம், உங்களால் ஏற்கனவே எரிக் செகலின் லவ் ஸ்டோரி படித்தாகிவிட்டது.
அடுத்து இதையும் படிக்கிறேன்.
:):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
இவ்வளவு ஸ்மைலி போதுமா

Unknown said...

Deborah= debra

daniel=danyl (டான்யல்)

timothy=டிமதி

ராபி(Rabbi)=raBBai,ரேப்பை (ப்=like b in bundle, பை=like bi in binocular)

sabbath=செபத்,sebath