Monday, April 09, 2007

பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.

தோழி ஒருவர் அழைத்து, "பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?" என்று கேட்டபொழுது, "அப்படியா!" என்று வியக்கத்தான் முடிந்தது.

பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..

சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: போலி மட்டுமா போலி பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]

இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.

எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், இங்கு பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு:
1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)
2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..