The Bookseller of Kabul (by Asne Seirstad) & Thousand Spendid Sons (by Khaled Hosseni)
கலீத் ஹோசினியின் மற்றொரு புத்தகமான The Kite Runner படித்துக்
கொண்டிருந்தபோது, பக்கத்து சீட்டுப் பயணி ஒருவர் The Thousand Splendid
Sons படிக்கச் சொன்னார். ‘கைட் ரன்னர் அப்கான் ஆண்களைப் பற்றியது என்றால்,
ஸ்பெளிண்டிட் சன்ஸ், பெண்களைப் பற்றிய கதை, உனக்குப் பிடிக்கும்’ என்றார்
அவர். உண்மை தான். கைட் ரன்னர் படித்த போது, அப்கானின் அரசியல் வாழ்முறை
பற்றி இதில் ஒன்றுமே இல்லையே என்று நான் வியந்ததற்குப் பொருத்தமாக இந்தப்
புத்தகம் ஒரு அரசியல் விருந்து.
ஒவ்வொரு பத்து வருடமும் ஆட்சியும் - அத்துடன் கூட ஆட்சி புரியும்
விதமுமே - மாறும் அப்கான் நாட்டின் இரண்டு பெண்களைப் பற்றிய கதை இது.
70களில் தொடங்கி அப்கானிய கிராமங்கள், காபூல் என்று வலம் வருகிறது. பெண்கள்
இரண்டு பேரும் வயது, வளர்ந்த விதம், பெற்றோர் என்று எல்லாவற்றிலுமே
வித்தியாசம் இருந்தாலும், எப்படி ஒரே வீட்டில், ஒரே நரகத்தில் கஷ்டப்பட்டு
காலம் கழிக்கிறார்கள் என்று விளக்குகிறது கதை. கொஞ்சம் முற்போக்கான
பெற்றோருக்கு மகள் லைலா, முறைகேடான உறவில் பிறந்து குடும்பத்தால் ஒதுக்கி
வைக்கப் பட்டவள் மரியம் - சோவியத் ஆண்ட நாளில் கிடைத்த கொஞ்சம்
சுதந்திரத்தையும் வாய்ப்பையும் இருவரும் எப்படிப் பயன்படுத்தினர் என்று
காட்டி இரு வேறு அப்கான் மக்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் கதை,
அதன்பின் தாலிபன் காலத்தில் இருவரும் ஒன்றாக புர்க்காவுக்குள் மறைந்து,
வெளியே போகவும் முடியாமல் பாடுபடுவதை அழகாக படம்பிடிக்கிறது.
தாலிபான் அப்கான் விட்டுச் சென்ற பின், அத்தனை கொடுமை அனுபவித்த அந்த
நாட்டுக்குத் திரும்பிச் சென்று போரால் அனாதையான குழந்தைகளுக்குக் கல்வி
கொடுக்க வேண்டும் என்று தாய்நாடு திரும்பும் லைலா, நம்ப முடியாத
முன்னுதாரணம்!
அரசியல் வாழ்க்கை பற்றிய கதை அது என்றால், The bookseller of Kabul, ஒரு
சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை. 2001க்குப் பிறகு, தாலிபான்
ஆட்சிக்குப் பிறகான அப்கானின் ஒரு சின்ன குடும்பத்தைப் பற்றிய கதை.
எழுத்தாளர் அஸ்னி, தானே சென்று, சுல்தான் கான் என்னும் நடுத்தர அப்கான்
குடும்பத்தில், அந்தக் குடும்பத்துப் பெண்ணாக சில காலம் வாழ்ந்த கதை!
சுல்தான் என்னதான் புத்தகங்கள் படித்தாலும், பொதுவாக அவனின் மற்ற சகோதர
சகோதரியருக்குக் கிடைக்காத படிப்பு என்னும் பொக்கிஷம் அவனுக்கு கிடைத்த
போதும், அதன் அருமை புரியாதவனாகவே இருக்கிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம்
பணம், பணம் மேலும் பணம் தான்.
என்ன தான் சுதந்திர நாடு என்றாலும், எப்படி இன்னமும் அப்கான்
பெண்களுக்கு, தத்தம் வாழ்க்கையை முடிவெடுக்க தெரியவில்லை என்று
காட்டுகிறார் அஸ்னி. பெண்கேட்டு வந்தால், சரி என்றோ இல்லை என்றோ சொல்ல
பெண்களுக்கு உரிமை இல்லை. திருமண நாள் வரை கணவன் முகத்தைப் பார்க்கும்
உரிமை அவர்களுக்கு இல்லை. இன்னும், எத்தனையோ இல்லைகள்.., ஆனால், அதிசயமான
விசயம் என்னவென்றால், பெண்கேட்டு வரும் ஆண் வீட்டார் தான் வரதட்சணை
கொடுத்து, திருமணத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும்
வரதட்சணைக்குத் தக்க பெண்ணின் பெற்றோர் ஒப்புதல் சொல்லலாம். இதனால் பெண்
பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் கொண்டாடப் படுகிறார்களா, என்றால்,
‘இல்லை’! அப்கானிலும், பெண்ணைப் பெறுவது பெருமைக்குரியதில்லை!
தாலிபான் போன பின், பெண்கள் வேலைக்குப் போகலாம். ஆனால் யார் வேலை
செய்யலாம், யார் செய்யக் கூடாது என்று முடிவெடுப்பவர்கள், அந்தப் பெண்ணின்
கணவன், அவளின் முதல் மகன், ஏன், தன் அத்தை வேலைக்குப் போவதைக் கூட
குடும்பத்தின் முதல் மருமகனால் தடை செய்ய முடியும்! என்னதான் பணம்
இருந்தாலும், சுல்தான் கானின் குடும்பம் 90களின் இந்தியா போல, செலவு
செய்யாத ‘நடுத்தர குடும்பம்’
ஆங்காங்கே கதை, கட்டுரை மாதிரி, சம்பவத் தொகுப்பு மாதிரி இருந்தாலும்,
அதிகம் கற்பனைக் கலப்பில்லாமல், அஸ்னி 2003களின் அப்கானிய வாழ்க்கையை
எடுத்துக் காட்ட முயன்றிருக்கிறார். இது ஒரு நடுத்தர வர்க்க, அதிசயமாக
ஆங்கிலம் பேசத் தெரிந்த சிலரைக் கொண்ட குடும்பம்.
என் தாய்நாட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும், கிட்டத் தட்ட பாதி
இந்தியர்கள் சாப்பிடுவது போன்ற உணவைச் சாப்பிடும், பாதி இந்தியர்கள்
வணங்கும் கடவுளை வணங்கும், இந்தச் சிறிய நாடு, இன்னுமும் இவ்வளவு பழங்காலக்
கொள்கைகளில் இருப்பதை என்னால் முதலில் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்கான்
பற்றிய கதைகள் எப்போதுமே மதவெறுப்போது முன்வைக்கப் பட்டு படித்ததால், இது
போன்ற நடுநிலையான கட்டுரையைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை.
கதையின் பின்இணைப்பாக அஸ்னி சொல்கிறார், ‘அப்கானில் இருந்த போது, நானும்
சுல்தான் வீட்டுப் பெண்களைப் போன்றே இருக்க முயற்சித்தேன். அவர்களைப்
போலவே புர்க்கா உடுத்தி வெளியே சென்று வந்தேன். அவர்கள் போன்ற வாழ்க்கையை
வாழ்ந்தேன். அதனால், இன்று என்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த பின்
என்னுடைய இந்தச் சுதந்திரத்தை இன்னும் அதிகமாக அனுபவிக்கவும், போற்றவும்
முடிகிறது ‘ எத்தனை சத்தியமான வார்த்தை!
என்னுடன் ஓட வரும் சில தோழிகள், சவுதியில் வளர்ந்தவர்கள். ஹைஸ்கூல்
படிக்கும்போது அவர்கள் இந்தியாவில் சில வருடங்கள் இருக்க நேர்ந்தது. முதல்
வருடம் அவர்களின் பிரச்சனைகளை நினைவு கூறும்போது, ‘முதன்முதலில் புர்க்கா
இல்லாமல் வெறும் சுடிதாரில் வெளியே சென்று வருவது கொடுமையாக இருந்தது.
ஒன்றுமே அணியாமல் வெளியே செல்வது போன்ற கூச்சம்! உடன் படிக்கும் ஆண்கள்
திரும்பிப் பார்த்தால் கூட என்ன இந்தியர்கள் இவ்வளவு அநாகரிகமாக கூடப்
படிக்கும் பெண்ணைப் பார்க்கிறார்கள் என்று தோன்றும். அப்பா இல்லாமல்
பள்ளிக்குச் சொந்தமாக பஸ் பிடித்துப் போக நேர்ந்தது ரொம்பவே கொடுமை!
அதிலும் உங்க ஊரில் பஸ் இரண்டு தெரு தள்ளி நிற்கிறது. சவுதியில் எல்லாம்,
வீட்டு வாசலுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள். இந்த இரண்டு தெரு தனியா
நடக்கவேண்டிய அவசியமே இல்லை! உடன் வர ஆண்கள் இல்லாமல், சொந்தமாகப் போய்
வரும் பயமெல்லாம் போகவே ஒரு வருடம் ஆனது’ என்றார்கள். (இன்று அவர்கள்
எந்தப் பயமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்கள், திரும்ப சவுதிக்குப்
போகும் எண்ணமே இல்லை)
ஒன்பதாவது படிக்கும் பெண், துணைக்கு ஆண் இல்லாமல் போய் வர கஷ்டப்பட்டுப்
பழகியதைக் கேட்ட போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்துத்
தெருவுக்கு நடந்து போய் படிக்கப் பழக்கிய என் தந்தையும் தாயும், அதற்கு வழி
வகுக்கும்படியான இருபதாம் நூற்றாண்டு இந்தியாவும், பற்றி ஒரு பெருமை
தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.. இது போன்ற கதைகளைப் படிக்கும்போதும்,
கேட்கும்போதும், என்னுடைய சுதந்திரத்தை இன்னும் அதிகமாக பாராட்ட முடிகிறது!
அப்கான் பெண்களின் நிலையும் சீக்கிரமே நல்ல விதமாக உயர அல்லா காப்பாற்றுவராக!