‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு
ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed
(Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து,
‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று
தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி..
வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம்
படித்திருக்கிறேன். ஊர்சுற்றிப் பார்க்க புத்தகம் படிப்பது இது தான் முதன்
முறை.. ஆனாலும் அந்த டௌகார்தி மிக அழகாகவே கதை எழுதி இருக்கிறார்.
ஹவாய்த்தீவுகள் - மொத்தம் நான்கைந்து குட்டிக் குட்டித் தீவுகள், பசிபிக்
பெருங்கடலில் அமெரிக்கக் கண்டத்திலிருந்து கிட்டத் தட்ட 3000 மைல் தொலைவில்
இருக்கின்றன. எங்க ஊரிலிருந்து பறக்க ஐந்து மணி நேரம், இது தான்
இருக்கிறதிலேயே மிகக் குறைவான நேரம் என்று நினைக்கிறேன். 1800களில்
அமெரிக்காவின் ஒரு மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்ட காரணத்தால், போய் வர
புதிதாக விசா ஒன்றும் வேண்டியிருக்கவில்லை.
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து நிறைய பேர் வந்து
போகிறார்கள். நாங்கள் போன இடம் ஒஆஹூ என்ற ஒரே தீவு மட்டும் தான். சின்ன
தீவு, காரில் இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்துவிடக் கூடிய அளவுக்குச்
சின்னது. போய் இறங்கியவுடனே அமெரிக்காவுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம்
தெரிகிறது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பசிபிக் பெருங்கடலில்
வெடித்துச் சிதறிய ஒரு எரிமலையிலிருந்து விழுந்த பூமித் துளிகளான இவை
சின்னச் சின்னத் தீவுகளாக உருவெடுத்து, மெல்ல நிறமும் வடிவமும் மாறி,
செழிப்பான tropical பூமியாக இருக்கின்றன. விமானத்திலிருந்து இறங்கியவுடனே
வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே தென்னை மரங்களும், பச்சை மலைகளும்,
நீலமும் பச்சையுமாக மயில் கழுத்து நிறத்தில் கடலும் என்று கேரளாவை நினைவுப்
படுத்துகிறது. கேரளா போலவே இதையும் பூலோக சொர்க்கமாகத் தான்
விளம்பரப்படுத்துகிறார்கள் - Paradise Islands..
கடலோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே போனால், மணல் கண்ட இடமெல்லாம் கடற்கரை
தான். ஓரங்களை விட்டுவிட்டால், நடுப்பகுதியில் எல்லாமே மலை.. கொஆலு(Koalu),
காஆலா(Ka’ala), என்று விதம் விதமாக மலைகள். மலைமேல் ஏறி கடலைப் பார்ப்பது
ஒரு முக்கியமான சுற்றுலாச் செயல்(activity). ஒஹாஹூ தீவை நான்கு பகுதியாக
பிரித்துச் சுற்றிப்பார்க்கச் சொல்லியது நான் படித்த புத்தகம் - வைக்கீகீ
மற்றும் தலை நகரமான ஹொனுலூலூ இருக்குமிடம், கிழக்குக் கரை, வடக்குக்கரை,
மத்தியத் தீவு.
வைகீகீ மற்றும் ஹொனுலூலூ இருக்குமிடங்கள், முக்கிய சுற்றுலாப்
பிரதேசங்கள். இங்கே கடல் அத்தனை கொந்தளிக்காமல் அமைதியாக இருக்கிறது.
குழந்தைகள் கூட கடலில் நீச்சலடிக்கிறார்கள். நாங்கள் அதிகமாக இந்த இடத்தில்
இருக்கவே இல்லை.. கூட்டம், வண்டி நிறுத்துமிடமின்மை, போன்றவை முக்கிய
காரணங்கள்..
கிழக்குக் கடலோரத்தில் மிக அழகான, காவியமான கடற்கரைகள் பல இருக்கின்றன.
முக்கியமாக ஒஆஹூவின் மண்ணின் மைந்தர்களும், சிலபல கோடீஸ்வரர்களும்
இருக்கும் இந்தப் பகுதி, நம்ம ஊர் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியை
நினைவுப்படுத்துகிறது. லானிகாய்(Lanikai) என்று ஒரு பீச்.. இரண்டு குட்டி
தீவுக்குழந்தைகள், வெள்ளை மணல், சுத்தமான தண்ணீர், என்று லானிக்காய் ஏதோ
திரைப்படங்களில் வரும் அமைதியான மணல் பிரதேசம்..
கிழக்குக் கடலோரத்தின் முக்கிய சுற்றுலாத்தலம் - ஹனௌமா வளைகுடா(Hanouma
Bay). கடல் நிலத்துக்கு நடுவில் புகுந்து பாதுகாப்பான வளைகுடாவை உருவாக்கி
இருக்கும் இந்தப் பகுதியில், தண்ணீர் ஓரளவுக்கு அமைதியாக இருக்கிறது. நிறைய
கடற்பாசி (coral reefs) இருப்பதால், மீன்கள் இதைத் தன் வாழ்விடமாகக்
கொண்டிருக்கின்றன. நீருக்கும் பார்க்கும் கண்ணாடியுடன் கூடிய ஒரு
மாஸ்க்கும், வாய்வழியாக மூச்சுவிட தனியாக ஒரு குழாயுமாக தண்ணீரில் இறங்கி
நீச்சலடித்துக் கொண்டே இந்த மீன்களைப் பார்க்க இது நல்ல இடம். வார
இறுதிகளில் குழந்தை குட்டியோடு இந்த snorkling செய்ய இந்த ஊர் மக்கள் வந்து
விடுகிறார்கள். எப்போதுமே சுற்றுலாவாசிகளின் கூட்டமும் இருக்கிறது.
நீச்சலே தெரியாமல், இந்தக் கடலில் இறங்கி மிதக்கக் கற்றுக் கொண்டு நான் கூட
நிறைய மீன் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. கொஞ்சம்
நீந்தத் தெரிந்தால் கடல்ஆமைகளைப் பார்த்திருக்கலாம்.. ம்.. என்ன செய்ய..
‘அடுத்தமுறை பார்க்கலாம் ஆமைகளே!’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்..
(ஆமாம், இராமேஸ்வரத்தில் கூட நிறைய கடல்பாசி இருப்பதாக சொல்றாங்களே, அங்க
snorkeling பண்ண முடியாதுங்களா?)
கிழக்குக் கரையோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே வந்தால், அப்புறம் அமெரிக்க
ராணுவத்தின் கடற்ப்டைப் பிரிவு ஒன்று இங்கே இருக்கிறது. அதெல்லாம்
அவர்களின் குடிமக்களுக்கே அனுமதி மறுப்பாதலால், தூரத்திலிருந்து பார்த்துக்
கொண்டே அப்படியே பயணித்து வடக்குக் கரை வந்தால், ‘அப்பா! இத்தனை நேரம்
பார்த்த கடலா இது?!’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப் பக்கத்து கடல்
அலைகள் மிகப் பெரியவை. குளிர்காலத்தில் தான் பெரிய பெரிய அலைகள் வந்த
வண்ணம் இருக்குமாம் இங்கே. ஒஆஹூவின் வடக்குக் கரைதான் உலகத்திலேயே பெரிய
அலைகளின் இடமாம்! Surfing எனப்படும் நீர் விளையாட்டில் வல்லவர்கள் இந்தப்
பெரிய அலைகளுக்காகவே குளிர்காலத்தில் வடக்குக் கரையில்
முகாமிட்டுவிடுவார்களாம். நாங்கள் சென்றிருந்த ஐந்து நாட்களில், மூன்று
நாட்கள் - கிறிஸ்துமஸை ஒட்டி - முப்பதடி உயர அலைகள் வந்தவண்ணமிருந்தன.
இந்தத் தீவுவாசிகள் மகிழ்ச்சியோடு வந்து அலைகளை வேடிக்கை பார்த்துக்
கொண்டு, surf செய்தவண்ணமிருந்தனர்.
இந்த நாட்களில் வடக்குக் கரையோர கடற்கரைப் பகுதிகள் எல்லாமே
மூடப்பட்டுவிடுகின்றன. நீச்சல் தெரிந்தால் மட்டும் தான் இதில் உள்ளே போக
அனுமதி கிடைக்கும். சாண்டாவின் பரிசு என்று சொல்லி மகிழ்ச்சியோடு அலையை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். இந்த high surf பற்றி
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது surfing செய்வதற்காகவே ஒஆஹூ வந்த
கணவரின் நண்பர், ‘உங்க நாட்ல கூட இது மாதிரி சில தீவு இருக்காமே, அதுவும்
உலகின் முதல் 100 surfsiteகளில் ஒன்று தெரியுமா?’ என்றார். அந்தமான்
தீவுகளைப் பற்றிய இந்த இரகசியம், நம்ம சுற்றுலாத் துறைக்குத் தெரியுமா?
மத்திய ஒஆஹூவின் சிறப்பு அவற்றின் மலைகளின் அழகு தான். இதில் அமெரிக்க
ராணுவம் மற்ற இரண்டு படைகளான வான்படை, தரைப்படைக்கான தளங்களை அமைத்துக்
கொண்டுள்ளது போலும்.. இங்கே அதிகமாக மலைகள் மட்டும்தான்.
டைமண்ட் க்ரேட்டர்(Diamond Crater) என்னும் எரிமலையின் வாய்ப் பகுதிக்கு
ஏறுவது இன்னுமொரு முக்கிய சுற்றுலாச் செயல். மிக உயரமான இந்தச் சிகரத்தில்
ஏறிப் பார்த்தால் ஒஹாஊவின் கடலும், தலைநகரமும் மிக அழகான காட்சியாக
விரிகின்றன. இன்னும் இதே போல் கோகோ க்ரேட்டர்(Koko Crator), கோகோ ஹெட்(Koko
Head), பாலி மலைகள், என்று காடும் மலையுமான இடங்கள் நிறைய இருக்கின்றன.
நாங்கள் பார்க்காமல் விட்ட இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பேர்ள்
துறைமுகம்(Pearl harbour). இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய விமானங்களால்
அடிவாங்கிய இந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள்
(அமெரிக்க சுற்றுலாத்துறைக்குச் சொல்லியா தரவேணும்?!).. இது தவிர, இன்னும்
ஒழுங்காக நீச்சல் தெரிந்தால், கிழக்கிலும் வடக்கிலுமாக பல இடங்களில் அழகாக
snorkeling, படகு விடுவது என்று பலவும் செய்ய முடியுமாம். அடுத்த முறை
இங்கே வந்தால் ஒழுங்காக நீச்சல் கற்றுக் கொண்டு வரவேண்டும் என்று
முடிவெடுத்துக் கொண்டிருக்கிறேன்..
ரொம்ப ஆசைப்பட்டு பார்க்க முடியாமல் போனது ஆமைகளைத் தான்.
‘கடலோரத்திலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கும்’ என்று அந்தப் புத்தகத்தில்
இருந்தது. எல்லா கடல் ஓரங்களிலும் தேடிப் பார்த்து நொந்துபோய்
புத்தகத்தைப் பார்த்தால், ‘வெயில் காலத்தில்’ என்று முதலிலேயே
போட்டிருக்கிறார்கள்.. ம்ம்.. திரும்ப வெயிலில் வர வேண்டியது தான்.
இத்தோடு ஹவாய் நாட்டு மக்களின் நாகரிடம், அவர்களின் வாழ்க்கை முறை
பற்றியெல்லாம் நிறைய இடங்கள் இருக்கின்றன. Polynesian - என்னும் இனத்தைச்
சார்ந்த மக்கள் இந்த ஊரின் பூர்வகுடிகள். பசிபிக் பெருங்கடலில், ஹவாய்
தாண்டி, ஆஸ்திரேலியா வரையிலான சில தீவுகள் எல்லாம் இந்த Polynesia
நாகரிகத்துக்குள் வருகிறது. நியூஸிலாந்து, தஹிதி, சமோஆ, மார்குஸாஸ் தீவுகள்
என்று பல தீவுகளைச் சொல்கிறார்கள். இதைப் பற்றிய showக்கள் நடத்தும் ஒரு
சுற்றுலாத்தலமும் இருந்தது - polynesian cultural center. நாடகங்கள்,
பாட்டும் நடனமும் மட்டும் தான் என்பதால் இங்கும் நாங்கள் நிற்கவில்லை.
நாங்கள் சென்ற நேரம் ஒபாமா வேறு குடும்பத்தோடு வந்திருந்தார். நம்ம ஊர்
மந்திரிகள் மாதிரியே, அவர் தங்கி இருந்த தெருவைப் பாதுகாப்பு கருதி
மூடிவிட்டார்களாம். அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கைலுவா
கடற்கரையையும் கடல்பகுதியையும் மூடி வைத்ததை ஒஆஹூ மக்கள் ரொம்பவே
கண்டித்தார்கள் - ‘நல்ல surf நேரத்தில் இப்படி ஒரு குடும்பத்தோடு surf
செய்யும் பீச்சை மூடிவைத்தால் எப்படி?!’ என்று ரொம்ப கோபம்.. அதே சமயம்,
அமெரிக்க கிழக்குக் கரை பூராவும் பனிப்புயலில் மூழ்கி இருக்கையில்
குடியரசுத் தலைவரும் அவர் குடும்பமும் இங்கே வெயிலில், பீச்சில் காய்வதைப்
பார்த்து இன்னும் நிறைய பேர் ஹவாய்ச் சுற்றுலா வருவார்கள் என்ற
மகிழ்ச்சியும் இருக்கிறது.
திரும்ப வேண்டிய நாள் வந்த போது தான் நிஜமாகவே சொர்க்கத்திலிருந்து
திரும்புவது போல் மனமே வரவில்லை.. இன்னும் ரெண்டு மூணு நாளாவாது
இருந்துட்டு போகலாமே! என்று இருவருமே நினைத்தோம். டிக்கட் மாற்ற
வழியிருந்திருந்தால், ஒருவேளை இருந்திருப்போம்.. ம்ம்,.. அடுத்தமுறை
நீச்சல் கற்றுக் கொண்டு வெயில் காலத்தில் கடல் அமைதியாக இருக்கும்போது
வரவேண்டும்…..
இன்ன பிற:
1. தென்னை மரங்கள் நிறைய இருந்தாலும் தேங்காய்களைக் காணவில்லை. தேங்காய்கள்
இருந்து, யார் தலையிலாவது விழுந்து வைத்தால், அது ஒரு liability (அதாவது,
அந்த ஆளின் மருத்துவச் செலவு பூராவும் தென்னை மரம் வளர்ப்பவர் தர
வேண்டுமாம்!) என்று மரங்களில் காய் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.
2. கடற்கரைப் பகுதிகளை பல காலங்களுக்கு முன்பிருந்தே யார் யாரோ வளைத்துப்
போட்டுக் கொண்டாலும், அரசாங்க உத்தரவுப்படி எல்லா கடற்கரையும்
மக்களுக்கானது. Private beach என்று ஏதுமில்லை. அப்படிச் சொந்தம்
கொண்டாடுபவர்களும் தங்கள் நிலத்தில் வண்டி நிறுத்த மட்டும் தான் பணம் வாங்க
முடியும்.
3. நம்ம ஊரில் கூட விளையும் பூவான plumeria (தமிழில் என்ன? எங்க வீட்டில்
ஏதோ நாக கன்னிகை மாதிரி ஒரு பேர் சொல்லுவாங்க, தப்புன்னு நினைக்கிறேன்)
தான் இந்த ஊரின் முக்கிய பூ போலும். அதை கலர் கலராக ப்ளாஸ்டிக், இரும்பு,
தங்கம் என்று செய்து விற்கிறார்கள். பெண்கள் காதில் பூ வைப்பது தான் இந்த
ஊர்க்(ஊரிலும்) கலாச்சாரமாம்! இடது காதில் வைத்தால் திருமணம் ஆன பெண், வலது
காது என்றால் இன்னும் திருமணமாகாத பெண். கூந்தல் நடுவில் பூ வைத்துக்
கொள்வது, குழப்புவதற்கான வழியாம்!
4.ஆவா அல்லது காவா என்று ஒரு பானம் - மெல்லிய போதை கொடுக்கும், relaxing
பானமாம். ஆனால் இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
கொட்டாங்குச்சியில் ஊற்றித் தரும் இதை பொதுவாக யாராவது வீட்டுக்கு வந்தால்
கொடுப்பார்களாம். ஆவா மர வேரிலிருந்து வருகிறது இது. எல்லா polynesian
தீவுகளிலும் இது கிடைக்கும் போலிருக்கிறது.
5. அன்னாசி விளையும் செழிப்பான பூமி பக்கத்து லனாய்த் தீவில் இருக்கிறது.
அது தவிரவும் இந்த ஒஆஹூவிலும் நிறைய அன்னாசி விளைகிறது. ஜேம்ஸ் டோல் வந்து
இந்த அன்னாசிகளை அப்படியே mainlandஆன அமெரிக்காவுக்கு அனுப்பினால் கெட்டுப்
போய்விடும் என்பதால் கேனில் போட்டு அனுப்ப வழி செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் Dole Pine Apple Juice பூராவும் இங்கிருந்து தான் செல்கிறது
6. அன்னாசியை மூலப் பொருளாக வைத்துச் செய்யும் Pina Colada என்னும் பானத்தை
வைத்து நிறைய காக்டெய்ல்கள் செய்கிறார்கள். மாய்டாய் என்பது அவற்றில்
முக்கியமான, famousஆன ஒன்று. ‘இங்க மட்டும் தான் கிடைக்கும், tropical
drink’ என்று நன்றாகவே விளம்பரப்படுத்துகிறார்கள்.
7. ஹவாயின் மொழி மிகச் சுலபமான மொழி, a, e, i, o, u, மற்றும், ஏழு
மெய்யெழுத்துக்கள். எல்லா இடங்களின் பெயரும் அதை ஒட்டித் தான் இருக்கின்றன.
இந்தத் தீவுகளின் சரித்திரமும் அரசர்கள், மக்கள், சாதிப் பிரிவினைகள்
என்று நம் வாழ்க்கை முறை போலத் தான் இருக்கின்றன. இந்தச் சரித்திரம்
படித்துவிட்டு அடுத்தமுறை போக வேண்டும்…
Thursday, December 31, 2009
Wednesday, December 09, 2009
மீண்டும்..
“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ சுத்தமா மறந்துட்ட.. ஒரு போன் கால் இல்ல, இமெயில் அனுப்பினா பதில் அனுப்ப மாட்டேங்கிறே.. என்னை மொத்தமா அவாய்ட் பண்றா மாதிரி இருக்கு!”என்னடா நம்ம நினைச்சதை எல்லாம் ஒருத்தன் சொல்லி இருக்கானேன்னு யோசிக்கிறீங்களா? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை… என்னோட அருமைக் கணவனார் தான்.
திருமணம் முடிந்து நான் திரும்பிப் போனது நியூயார்க் நகரத்துக்கு. நண்பர்களில் பலர், திருமணமாகி நான் கணவனுடன் வாழ நியூயார்க் மாறி வந்துட்டதாக நினைத்தார்கள். உண்மையில், இங்கே அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் தனியாக நியூயார்க் சென்று குடியேற வேண்டிய கட்டாயம். அந்த ப்ராஜக்ட் ஒரு பயங்கரமான ப்ராஜக்ட், சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைமை…
காலை ஒன்பது மணிக்கு மீட்டிங்குகள் தொடங்குமுன் அலுவலகம் சென்று அமர்ந்தால், மாலை ஆறு மணி வரை பல்வேறு நாடுகளில், பல்வேறு நேர காலத்தில் வேலை செய்யும் பலருடன் பேசி முடித்து, ஒரு வழியாக சொந்த வேலை - அதாவது, நான் பொறுப்பேற்றிருக்கும் வேலை செய்யத் தொடங்கவே இரவாகி விடும். சராசரியாக இரவு ஒன்பது பத்து மணிக்குத் தான் அலுவலகம் விட்டு வெளியேறுவதே.. அதற்குப் பிறகு எங்காவது போய்ச் சாப்பிட்டுவிட்டு, அக்கடா என்று வீடு வந்தால், மீண்டும் இந்தியா டீம் இரவு பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் வந்து கூப்பிடத் தொடங்கி விடுவார்கள்.. இதற்கு நடுவில், எனக்கு மூன்று மணி நேரம் பின்னால் இருக்கும் கணவருடன் எங்கிருந்து பேசுவது?!
அறைத் தோழிகள் என்னை எதிர்பார்ப்பதை மொத்தமாக நிறுத்தியே விட்டார்கள். அலுவலகம் செல்லாத / கணவர் ஊருக்குப் பறக்காத ஏதேனும் ஒரு சனி, ஞாயிறுகளில் என்னைப் பார்க்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். பெரும்பாலும், மாதத்தின் மூன்றாம் தேதி வாடகைப் பணம் தர வீடு வருவேன். மற்ற நாட்கள் எல்லாம் நான் ஏதோ பக்காத் திருடன் மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
அலுவலகம், கான்பரன்ஸ் கால், சாதா கால், இமெயில், வேலையைப் புரிந்து கொள்வது, சொல்யூசன்(தமிழில்?) டிசைன் செய்து இந்தியக் குழு புரிந்து கொள்ள உதவுவது, அவர்கள் புரிந்து வேலை செய்ய நேரம் கொடுத்துப் பார்த்து, அது நடக்கவில்லை என்றால் மீண்டும் நானே கையில் எடுத்து வேலை செய்வது… பயங்கர குழப்பமான நாட்கள் அவை.. யாருடனும் பேச/ படிக்க, எழுத வாய்ப்பில்லாமலே போய்விட்டது..
ஒருவழியாக அந்த ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்த பின்னர் இதோ இப்போது மீண்டும் கலிபோர்னியாவில், ஒருவழியாக கணவருடன் குடியேறி இங்கும் ஒரு ப்ராஜக்ட் கிடைத்து.. கடைசியாக பழையபடி அலுவலக நேரத்தில் ப்ளாக் எழுதிக் கொண்டு..
ஆமாங்க, இப்பத்தைய ப்ராஜக்ட் போன ப்ராஜக்டுக்கு நேர் எதிர்மறை.. வேலை நேரம் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை மட்டுமே.. வேலை, வேறு யாரோ செய்பவற்றை மேற்பார்வை பார்க்கும் வேலை.. சொல்லப் போனால், மேற்பார்வை பார்ப்பவருக்கு உதவும் வேலை.. ‘வெட்டி வேலை!’ என்று சத்தம் போடுவது இதற்கு முன்னால் இந்த வேலையைப் பார்த்த தோழி! ..
நிம்மதியாக அலுவலகம் சென்று நிம்மதியாக வீடு வந்து, நிறைய நேரம் இருப்பது போல் இருக்கிறது.. இப்போதைக்கு இந்த அதிக நேரத்தை நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று..!
மற்றபடி வேறு முன்னேற்றம் ஏதுமில்லை.. கிடைத்திருக்கும் அதிக நேரத்தில் எப்படி வாழ்க்கையை முன்னேற்றுவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.. நிறைய திட்டங்கள் இருந்தாலும், எதுவும் செய்படுத்தப்படவில்லை.. வாழ்க்கையில் முதன்முறையாக, தினம் ஒரு மணி நேரத்துக்கு மேல் சமையலறையில் செலவழிக்கிறேன்(பாவம் Mr. husband).. இன்னும் எத்தனை நாட்கள் இது என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்..
Subscribe to:
Posts (Atom)