சென்னையில் இருந்த காலங்களில் ஏனோ மாவட்ட பொது நூல் நிலையங்களைப் பற்றி
எல்லாம் யோசித்ததில்லை. நூலகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய எங்கள் பள்ளியிலோ,
பள்ளிப் பாடங்களைத் தவிர மற்றவற்றைத் தொட்டுப் பார்ப்பதும் பாவமாக
கருதப்பட்டது. இந்த ஊரில் ஒவ்வொரு தொகுதியிலும் நூலகங்கள் இருப்பதும் அவை
பொதுவான அந்த வட்ட நூலகத்துடன் இணைந்து பணியாற்றுவதும் என்று நல்ல நூலகப்
பின்னலாக கொஞ்சம் வியப்பேற்படுத்துவது உண்மை.
ஐஐடி நூலகத்தில், மிஞ்சி மிஞ்சிப் போனால் இருக்கும் புத்தகப் பட்டியலைச்
சேமிக்கவும் அதில் தேடவும், ஒரு உள்வலைப்பின்னலுடனான கணினியைப்
பார்த்திருக்கிறேன். எங்கள் கல்லூரி நூலகத்தில் அது கூட இருக்கவில்லை!
ஆனால் இங்கே நூலகத்துக்கென்றே தனி இணையப் பக்கமும், இருக்கும் புத்தங்களை
இணையத்திலேயே கண்டுபிடிக்கும் விதமும், தேவையான நூல்கள், பக்கத்து
வட்டத்துக்குட்பட்ட நூலகத்தில் இருந்தாலும், இணையத்தில் பதிந்தாலே
தருவித்துக் கொடுப்பதும், புத்தகம் திருப்பவும், நம் அட்டையில் எடுக்கவும்
கூட பார் கோடுகளைப் படிக்கும் கணனி இயந்திரங்களும்… என்று கணனியை முழுமையாக
பயன்படுத்துபவர்கள் இவர்கள் தான்.
சாண்டா க்ளாரா கவுண்டி லைப்ரரி புண்ணியத்தில்,
இதுவரை படிக்காத, படிக்க வாய்ப்பில்லாத நிறைய பழைய எழுத்தாளர்களின்
புத்தகங்கள் படித்துவிட்டேன். துணைப்பாடமாக ‘செவ்வாழை’ படித்த நாளிலிருந்து
‘வேலைக்காரி‘யும் படிக்க வேண்டும் என்று அதீத ஆவல்.
எடுத்துப் படித்தபோது அண்ணா ரொம்பவும் ஏமாற்றிவிட்டார்.
மேடைப்பேச்சுக்குகந்த அவரின் தமிழ் நாடகத்தில் அதிகம் சோபிக்கவில்லை.
பராசக்தி சினிமா போன்ற கொஞ்சம் அதீதமான கதைக்கரு; அப்பா செய்த தப்புக்குப்
பழிவாங்க, அவரின் மகளைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தும் கதாநாயகன்.
அறியாத வயதில் நான் எழுதிய அமெச்சூர் நாடகம் கூட இதைவிடத் தேவலை என்று
தோன்ற வைத்துவிட்டார். நல்ல வேளையாக இரண்டு நாடகம் மட்டும் தான்
எழுதியிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது.
அகிலனின் ‘கொள்ளைக்காரன்’ எனக்கு மிகவும்
பிடித்திருந்தது. எதிர்பார்க்கக் கூடிய கதைதான் என்றாலும் கதை சொன்ன விதம்
அருமை. அழகான கதை. துணைப்பாடப் பகுதியில் அகிலனின் ‘புயல்’ என்ற கதை படித்த
போது, ‘ஏன் அகிலன் கதையெல்லாம் சேர்த்துவைக்கவில்லை?’ என்று எங்கள் வீட்டு
நூலக உரிமையாளரான பாட்டியிடம் வருத்தப்பட்டதுண்டு. இப்போது புதையல்
மாதிரி, அடுத்து ‘சித்திரப்பாவை’ சிக்கி இருக்கிறது.
ஏதேச்சையாக எடுத்து அதிசயமாக கிடைத்த இன்னொரு புத்தகம் சிவசங்கரியின் ‘அப்பா’.
இரா.நடராசனின் ஆயிஷா படித்த பின்னர் சில நாட்களுக்கு, ‘சர்
சி.வி.ராமனுக்குப் பிறகு நம் ஊரில் ஏன் ஒரு ஆராய்ச்சியாளர் உதிக்கவே இல்லை’
என்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருந்ததுண்டு. அப்போது தான் என் அப்பாவிடம்
திடீரென்று நம்மூருக்கு மட்டுமே உரிய இட்லி தோசை மாவரைக்கும் இயந்திரங்களை
யார் கண்டுபிடித்தார்கள்? என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ‘பூர்ணா,
என்னாச்சு உனக்கு?! இதெல்லாம் பாடத்துல படிச்சிருப்பியே!’ என்று
குட்டிவிட்டு ‘ஜி.டி.நாயுடு’ என்றார். ‘அட, ஆமாம்ல,’ என்பதோடு மேலும் துருவ
அப்போதைக்கு நேரமில்லாமல் போய்விட்டது. திடீரென்று இங்கே வந்து
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கவும் ஒரே மூச்சில்
படித்து முடித்தேன். எழுதியவிதம் அவ்வளவாக ருசிக்கவில்லை.
முக்கியமாக நாயுடுவின் மகன் கோபாலின் பார்வையில் எழுதி இருக்கிறார்
சிவசங்கரி. அப்பாவின் குறைகளாக கோபால் பார்ப்பவற்றை நிறைகளாகவும், நிறைகளாக
அவர் குறிப்பிடுபவனவற்றை குறைகளாகவும் தான் என்னால் பார்க்க முடிகிறது
என்பதால் கூட இந்தப் புத்தகம் திருப்திகரமாக இல்லாதிருக்கலாம். எப்படியும்
நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தோண்டித் துருவ ஆரம்பமாக இருந்தது என்றால்
மிகையில்லை. அதிலும், ஃபோர்டு போல, பில் கேட்ஸ் போல ஐடியாக்களைப்
பணமாக்கும் ஆர்வம் நாயுடுவுக்கு இருந்தது. மக்களுக்குப் பயன்படும்
உபகரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும். வேறு நாட்டில் பிறந்திருந்தால்
இன்னும் நிறைய செய்திருப்பாரோ என்னவோ. அவரின், பாதியில் நிறுத்திவிட்டுப்
போன ஆராய்ச்சிகளை யாராவது தொடர்கிறார்களா என்ன?
இரண்டு மாதம் முன்னால் விமான நிலையத்தில் வாங்கி இங்கு வந்த முதல் வாரத்தில் படித்து முடித்தது வேல. ராமமூர்த்தியின் ‘கூட்டாஞ்சோறு‘.
1957இல் நடந்த முதுகுளத்தூர்க் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு,
கலவரத்துக்கு முன்பான கள்ளர் சாதி மக்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும்
நாவல். விறுவிறுப்பான கதை தான். ஆனால் கொஞ்சம் ஆங்காங்கே வேகம்
குறைந்தாற்போல் இருக்கிறது. கதையில் வரும் ஒரு சாமியார், சாமியார்
வளர்க்கும் பெண் போன்ற பாத்திரங்கள், இயல்பான வரலாறு என்று படித்துக்
கொண்டிருப்பவர்களைத் தலையில் தட்டி, ‘இது ஒரு கற்பனைக் கதை’ என்று சொல்லிப்
போகின்றன. திருடுவது தம் குலத் தொழில் அதில் எந்தத் தப்பும் இல்லை என்று
நம்பும் வெள்ளந்தியான மனிதர்களைப் பற்றிய கதை. வெள்ளைக்காரர்கள் ஆண்ட
இந்தியாவில் இந்த இனம் எப்படி ஒடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய வரலாற்றுப்
பதிவு என்னும் வகையில் நன்றாகவே எழுதி இருக்கிறார்.
இடையில் இங்கே கூட கொஞ்சம் சீரியசான தமிழ் இலக்கியம் படிக்கும் தோழியைக்
கண்டுபிடித்து அவரின் குட்டி நூலகத்திலிருந்து தாத்தா கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்களை’ லவுட்டிக்
கொண்டு வந்துவிட்டேன். முன்பு ‘செந்நெல்’ நாவல் இரவல் கொடுத்த நண்பர், ‘
உண்மையைச் சொல்லுங்க, இந்தக் கதை உங்களுக்குப் புரிஞ்சதா? இந்த அளவுக்கு
வட்டார வழக்கு சென்னைப் பொண்ணான உங்களுக்குப் பழக்கமாயிருக்க வாய்ப்பே
இல்லையே’ என்று நம்பிக்கையின்றி கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
தாத்தா எனக்குப் பரிச்சயமான தமிழ் கொஞ்சம் கூட தலைகாட்டிவிடாமல் கவனமாக
எழுதி இருக்கிறார். ஆனாலும் புதிய வார்த்தைகளை அவ்வப்போது பழக்கிக்
கொடுப்பதும், விளக்குவதுமாக அழகாக கதை சொல்கிறார்.
மற்ற புத்தகங்களையாவது அவ்வப்போது இடைவெளி கொடுத்துப் படித்தேன்.
‘கோபல்லபுரத்து மக்கள்’ கையில் எடுத்தது கீழே இறங்காமல் ஒவ்வொரு பாகமுமாக
இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். என்னுடைய இப்போதைய வேகத்துக்கு
இதுவே ரொம்ப அதிகம் தான் :). தாத்தாவின் மற்ற புத்தகங்களை அடுத்து தேட
வேண்டும்..
துணிகர முயற்சியாக அதே தோழியிடமிருந்து ‘ம்‘ வேறு வாங்கி வந்திருக்கேனாக்கும். இந்த வருட நன்றி நவிலும் தினங்களில் நான் பயங்கர பிஸி இப்பவே சொல்லிக்கிறேன்
No comments:
Post a Comment