Tuesday, May 08, 2007

சற்றே பெரிய சிறுகதை

"கற்பகம், வர்ற பதினஞ்சாந்தேதி, எம் மூணாவது மருமவ சாந்திக்கு வளைகாப்பு சீமந்தம் வச்சிருக்கேன். நீ வீட்டுக்கு மூத்தவளா ஒரு வாரம் முந்தியே வந்திருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும். பஸ்ஸு கெடைக்கல, ரயில்ல சீட்டெடுக்க மறந்திட்டோம்னு ஏதாச்சும் சொன்னே பாரு, கெட்ட கோவம் வரும் எனக்கு"

சமையலறையில், இரவு சாப்பாட்டுக்காக காய் அரிந்து கொண்டிருந்த சந்தனாவுக்கு, சின்ன மாமியார் இதைச் சொன்ன உடனே புரிந்து போனது, இவர்களது பேச்சுவார்த்தை அடுத்து எந்தப் பக்கம் போகும் என. பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கேட்டுக் கேட்டு மரத்துப் போன விசயம் தான். ஆனாலும், அவளுடைய அத்தை, புதிய விசயம் மாதிரி பேசும் போது கோபம் வந்து விடுவது வழக்கம்.

"ம்ம். என்னாத்தச் சொல்லுறது?! வீட்ல ஒரு மலட வச்சிகிட்டு இப்படி வளைகாப்பு, புள்ள பொறப்புக்கெல்லாம் போக முடியுமா? வர்றவ போறவ எல்லாம் இதையே கேட்டு உசிர வாங்குவாளுக. உங்கிட்ட சொல்றதுக்கென்ன, போன மாசம் நம்ம ரேவதி இல்ல, அவளோட, நாலாவது பேத்திக்குக் காதுகுத்து. இந்தப் பொண்ணையும் கூட்டித்தான் போயிருந்தேன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குது பாரு! நேர போய் சின்னக் கொழந்தைய தூக்கிடுச்சு. ரேவதி என்னடான்னா, என்ன தனியா கூப்பிட்டு சொல்லுது.. 'யக்கா, தப்பா நெனக்காதே, புள்ளைக்கு எதனா ஆகிடப் போவுது. கொஞ்சம் எறக்கி வுடச் சொல்லுன்னு'.. " மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள் கற்பகம்மாள்..

வெங்காயம் அரியத் தொடங்கும் முன்பே, சந்தனாவுக்கு கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அன்றைக்கு அவள் செய்த பிழை என்ன என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை. ரேவதியின் மகள் சசிகலாவே தான் அந்தக் குழந்தையை அவள் கையில் கொடுத்து, "கொஞ்சம் பார்த்துக்க சந்தனா!" என்று சொல்லியிருந்தாள். அவளுடைய அம்மா அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்த போது கூட, சந்தனாவுக்கு ஆதரவாகப் பேசியது சசி தான். இங்கே இந்தப் பேச்சு பேசும் அவளுடைய அத்தை தான், அன்றும் ரேவதி மதனியையும் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது.

"ஆமாங்க்கா, கண்ணாலமாகி ஆறு வருசம் இருக்குமில்ல? செந்தில் கல்யாணத்துக்கு முன்னாலயே வந்திடிச்சில்ல சந்தனா? இன்னுமா ஒரு புழுபூச்சி உண்டாகலை?" அக்காவுக்குச் சளைக்காத தங்கை தான்.

"அதையேங் கேக்குற? போகாத கோயில் இல்ல.. பார்க்காத வைத்தியமில்ல. எல்லா வைத்தியரும், சொல்லி வச்ச மாதிரி இதுகிட்ட எந்தக் கொறையும் இல்லங்குறானுங்க.. இவுக அப்பன் நெசமாவே சொல்லி வச்சிருப்பான் போலன்னு திடுதிப்னு கெளம்பி நமக்கு வேண்டிய டாக்டரிட்ட கூட போய்ப் பார்த்திட்டோம். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. என் பரம்பரை குமரனோட முடிஞ்சிடும் போலக் கிடக்கு!"

"ஏங்கா, ஒருவேளை, குமரனுக்கு ஏதாச்சும் கொறை..." சந்தேகத்தை முடிக்கும் வரை கூடப் பொறுக்கவில்லை கற்பகத்துக்கு..

"பல்லப் பேத்துப்புடுவேன். ஆரப் பார்த்து என்ன கேட்ட? அவன் சிங்கம்டீ. அவுக அப்பா மாதிரியே அவனும் நல்ல ரோசக்காரன். இதே மாதிரி இந்தக் கிறுக்கச்சியோட அப்பன் கேட்டான்னு ஒருநா போய் நல்ல டாக்டர்கிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கியாந்து காட்டிட்டானில்ல.. அதெல்லாம் அவனுக்கு ஒரு கொறையும் இல்ல."

சிரித்துக் கொண்டாள் சந்தனா. இவள் அப்பா 'சொல்லி' இருக்கக் கூடாதென்று இவர்கள் டாக்டரை முடிவெடுப்பார்கள். அவன் டாக்டர் தோழனிடம் 'சொல்லியே' வாங்கிவரும் சர்டிபிகேட்டை இவளுடைய அப்பா சட்டம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல கதை!

"சரி, அது போவட்டும், சந்தனா காலு எப்படி இருக்கு?"

"ஆமாமாம். அப்படியே துள்ளி குதிச்சு ஓடுவாளாட்டம் தான். ஏமாத்தி கட்டிவச்சிட்டானுவ.. எல்லாம் என் தலையெழுத்து" முந்தியை எடுத்து, இல்லாத கண்ணீரைத் துடைக்கலானாள் கற்பகம்.

இதற்கு மேல் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று சந்தனாவுக்கு நன்றாக தெரியும். ஊரெல்லாம் தேடி கட்டிவைத்த தன் மகனுக்கு எப்படி ஊனமுற்ற ஒருத்தி வந்து சேர்ந்தாள் என்பதை உருக்கமாக விவரிப்பாள். அதெல்லாம் கைதேர்ந்தவள். கடந்த ஆறு வருடங்களாக இந்தக் 'கொடுமையை' அவளும் வந்து போகிறவர் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள். பாவம், சந்தனா எந்த ஒரு கணத்திலும் பொறுமை இழந்து கத்துவதில்லை. அவள் மாமியாருக்குத் தான் பொறுமை இல்லாமல் போய்விடுகிறது.

************************
எல்லா திருமணங்களும் போல, சந்தனா-குமரன் கல்யாணமும் சொர்க்கத்தில் பெரியோர் ஆசிகளுடன் தான் நிச்சயிக்கப்பட்டது. கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணாதலால், பத்து சவரன் நகையும் குமரனுக்கு ஒரு பைக்கும் என்று குறைவான பேரத்துடனேயே முடிந்தும்விட்டது. எல்லாப் பெண்களையும் போல, நிறைய கற்பனைகளுடன் தான் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தாள் சந்தனா. ஒரேயடியாக அவை அனைத்தும் பொய்யாகவுமில்லை.

குமரன் சராசரி கணவனாக இருந்தான். காதலை அளவுக்கதிகமாக, பொழியவும் இல்லை; இப்போது போல் முகம் பாராமல் போனதும் இல்லை. ஒரே மகனானதால், தன் தாய்க்குரிய பணிவிடைகளைச் செய்யும் மனைவியைத் தான் விரும்புவான் என்பதையும் முதலிரவிலேயே தெளிவாக்கி இருந்தான். கற்பகம் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுமையாக போக வேண்டும் என்பதில் கறாராக இருந்தான் குமரன். 'ஓஹோ!' என்றில்லாவிட்டாலும், சசியின் வாழ்வு போல், சராசரியாகவாவது அமைந்திருக்கும், அந்த விபத்து மட்டும் நேராமல் இருந்திருந்தால்...

தினசரி ஒரு மணி நேர மின்தொடர்வண்டி பயணத்தில் இருந்தது சந்தனாவின் அலுவலகம். திருமணமான நான்காம் மாதம், அதிகாலை எழுந்து பரபரப்பாக சமைத்துவைத்து, கற்பகத்துக்கு மதிய காப்பியும் போட்டு பிளாஸ்கில் வைத்துவிட்டு, (இப்படி காலை போடும் காப்பி மதியம் பழசாகிவிடுகிறதென நொள்ளை வேறு!), அவள் திடீரென கேட்ட தோசைக்கு மாவரைத்ததில் சில நொடிகள் தாமதமாகிப் போய்விட்டது அன்று. அவசர அவசரமாக ரயில்வே ட்ராக்கைக் கடந்த ஒரு இக்கட்டான தருணத்தில் சந்தனாவின் வலது கால் மீது ரயில் ஏறி இறங்கி போய்விட்டது. நல்லவேளையாக நிறைய ரத்த சேதம் ஆவதற்குள், சந்தனாவின் தோழி பார்த்து, ஆம்புலன்ஸ் அழைத்து ஆஸ்பத்திரிக்கே கொண்டு போய்விட்டாள்.

அந்த ஒற்றை விபத்து, சந்தனாவின் மனதையும் குமரனுடன் எப்படியும் சேர்ந்து கட்டிவிடலாம் என்று அவள் நினைத்திருந்த அழகான கூட்டையும் சுழற்காற்றாக, கலைத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது.

அவசர அவசரமாக காலில் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அணுகுகையில், யாரை அழைப்பது என்று குழம்பி, அவள் தோழி சந்தனாவின் கணவனுக்குப் போன் செய்தாள். "அய்யய்யோ அப்படியா! பெரிய விபத்தா? நான் இப்போ ஒரு மீட்டிங்கில் இருக்கேன். அவங்க அப்பாவுக்குச் சொல்லிடறீங்களா?" என்று குரலில் மட்டுமே பதற்றத்தைக் காட்டிச் சொன்னானாம் குமரன்.

சந்தனா கண் முழித்துப் பார்த்தபோது அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆதுரமாக முடியைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள். அப்பா தான் பணம் செலுத்தி ஆபரேசனுக்கு முடிவு செய்யும் பேப்பரில் கையெழுத்து போட்டார் என்பதையும் குமரனோ கற்பகமோ இன்னும் ஒருமுறை வந்து அவளைப் பார்க்கக் கூட இல்லை என்பதையும் அறிந்த போது சந்தனாவுக்குச் 'சீ' என்றாகிவிட்டது.

அம்மாவோ அப்பாவோ கவலைப்படக் கூடாது என்பதால், இரவுகளில் மட்டுமே ஆஸ்பத்திரி தலையணைகளை நனைத்தாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்ற நிலையில் அப்பா போய் கற்பகத்திடம் நேரடியாக பேசிவிட்டு வந்தார். "நோயாளியப் பார்த்துக்கிடற அளவுக்கு எனக்கு ஒடம்பு முடியாதுங்க.. நானே சந்தனா இல்லாததுனால, தொணைக்குச் சொந்தக்காரப் பொண்ண ஊர்லேர்ந்து கூட்டியாரலாம்னு இருக்கேன். நீங்களே அழைச்சிட்டுப் போய் நல்லா ஒடம்பத் தேத்தி அனுப்பிவிடுங்க.." என்று பரிதாபமாகச் சொன்னாளாம் அத்தைக்காரி. குமரன் ஒருவார்த்தை பேசினால் தானே! ம்ஹும்..

அம்மா வீட்டில் இருக்கும் நாளெல்லாம் இது பற்றிய யோசனை அவளை ரொம்பவும் வருத்தமாக்கிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்குப் பாரமில்லாமல், சந்தனா வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்திருந்ததால், ஆஸ்பத்திரி, ஆபரேசன், மற்ற செலவுகள் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். தோழி சசி தான் அத்தனையும் அவளுக்காக ஓடியாடி வாங்கிக் கொடுத்ததும்.

அம்மாவுக்குத்தான் பாரம். படுக்கையிலிருந்த அவளைக் குளிப்பாட்டுவது தொடங்கி, மீண்டும் குழந்தையாக பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். நடுவில் சந்தனாவின் அக்கா மஞ்சுளா வேறு பிரசவத்திற்கு வந்துவிட, இரண்டு பெண்களுக்கும் வேண்டியதைச் செய்து, அப்புறம் மீண்டும் ஆஸ்பத்திரி, சிசேரின் என்று அல்லாடிப் போனாள் அம்மா.

மஞ்சுவின் கணவன் செந்தில், ரொம்பவும் பாசக்காரனாக இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் ஓடோடி வந்துவிடுவான் அவளைப் பார்க்க. இரவு வரை இருந்து, வாங்கிவந்த பழங்கள், குங்குமப்பூ, ஹார்லிக்ஸ் என்று மாலைகளில் அவளுக்குக் கரைத்துக் கொடுத்து, தானும் கரைந்து போய் அமர்ந்திருப்பான். இதற்காகவே மஞ்சுளா, சந்தனா இருவருக்குமான அறையிலிருந்து சந்தனாவை அவள் தங்கை இந்திராவின் அறைக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்திரா பாடம் படிக்கையில் சந்தனா கண்ணீருடன் படுத்திருப்பாள். சில சமயம் அவள் அம்மா வந்து தேற்றுவாள். சில சமயம் அப்பா வந்து பார்த்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். இந்திரா இவற்றைப் பார்த்து தானும் அழத் தொடங்கிவிடுவாள். படிக்கிற பெண்ணை இப்படி தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வும் சந்தனாவுக்கு வரும்.

ஒருவழியாக உடல் தேறி, நடக்குமளவுக்கு வந்தபோது, அந்தப் பெரிய இடி விழுந்தது. சந்தனாவால் இனிமேல் முன்னால் மாதிரி நடக்க முடியாது. அவளின் வலது கால் இடது காலை விடக் கொஞ்சம் குட்டையாகிவிட்டது. இனிமேல், சந்தனா அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடக்க முடியும். அல்லது, ஆயிரத்தி சொச்சத்துக்குக் கிடைக்கும் ஒரு செருப்பை வாங்கிப் போட்டால் அவளால் ஒருவேளை சரியாக நடக்க முடியலாம்!

இடிந்து போக இருந்தவளை, பழையபடி அம்மாவும் அப்பாவும் தேற்றினார்கள். ஊனமுற்ற பின்னரும் ஜெயித்து வந்த பெண்களைச் சுட்டிக் காட்டினார்கள். என்னென்னவோ சொன்னார்கள்.. இவளும் மனம் தேறினாள். வேலைக்குப் போகத் தொடங்கினாள். கொஞ்ச நாள் வரை வாழ்க்கை இனிமையாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்திராவும் சந்தனாவுமாக திரைப்படங்களுக்குப் போவதென்ன, மஞ்சுளா கணவன் டாக்ஸி வைத்து சகோதரியர் மூவரையும் கடற்கரைக்கு அழைத்துப் போவதென்ன, என்று சந்தோசங்கள் அனைத்தும் மீண்டுவந்துவிட்டது போல் இருந்தது, அப்பா அவள் புகுந்த வீட்டுப் பேச்சை எடுக்கும் வரை.

"என்னம்மா, உங்க வீட்டுக்கு எப்போ போகலாம்?" என்று அவர் கேட்டபோது, சந்தனா கண்கள் நீர்த்திரையிட்டது.

"ஏம்பா? இது என் வீடு இல்லையா?!" என்று மகள் தழுதழுத்ததும் அவர் கூட கொஞ்சம் அதிர்ந்து போனார்.

"இல்லம்மா.. ஒலக வழக்கம்னு ஒண்ணு இருக்கில்லையா?" என்று தொடங்கி, அம்மா, அக்கா வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவளும் கற்பகம், குமரனுடன் தான் இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தினார் அப்பா. அம்மாவும் தன் பங்குக்கு சந்தனா தன் கணவன் வீட்டுக்குப் போனால் தான், இந்திராவுக்கு நல்ல வரன் அமையும் என்று கோடிக் காட்டினாள்.

அடிபட்டு ஒன்றரை மாதம் அம்மா வீட்டில் இருந்த காலத்தில் ஒரு பேச்சுக்குக் கூட போன் செய்து எப்படி இருக்கிறாள் என்று அறிய விரும்பாதவர்களின் வீட்டுக்குப் போய் அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? சந்தனாவுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய கேள்விக் குறியாக தோன்றியது.

அப்பா கணவன் வீட்டுக்கு, அழைத்து போய் விட்டார். தன்னை எப்படி கடந்த ஒரு வாரத்தில் ஜுரமும் தலைவலியும் வாட்டி எடுத்தன என்பதையும், மருமகள் சீக்கிரமே வந்திருந்தால், தனக்கு வசதியாக இருக்கும் என்றும் கற்பகப் ரொம்ப வருத்ததுடன் சொன்னாள். அப்போதும் சந்தனா சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. சசி மூலம், இரண்டு வாரம் முன்பே சந்தனா அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டது தெரிந்திருந்த காரணத்தால், வீட்டுக்கு வர அந்த இரண்டு வாரம் தாமதமானது கற்பகத்துக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனாள்.

வந்தவுடன் சமையலறைப் பொறுப்பை சந்தனா ஏற்றுக் கொண்டதில், கொஞ்சம் மனம் ஆறுதலடைந்தாலும், புலம்பிக் கொண்டே டீவியில் ஆழ்ந்தாள். பெற்றோரின் தொடர்ந்த போதனைகளால், 'குமரன் ஒருவேளை தன்னைப் பார்க்க வரவேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, அவன் அம்மா தான் அதை அனுமதிக்கவில்லையோ என்னவோ' என்று நல்லவிதமாக நினைத்துக் கொண்டு, அவனுக்காக எதிர்பார்க்கத் தொடங்கினாள் சந்தனா.

சமையலறைக்குள் வந்து அவன் அம்மாவுக்குத் தெரியாமல் கட்டி அணைத்து குசலம் விசாரித்துவிட்டு, அம்மா தன்னை எப்படி வீட்டோடு கட்டிப் போட்டுவிட்டாள் என்பதையும், அலுவலக வேலைகள் எப்படி அவன் காலைக் கட்டி இழுத்தன என்பதையும் அவன் சொல்லப் போவதைக் கற்பனை செய்தபடி அவனுக்குப் பிடித்த உணவு வகைகளாக செய்தாள். துவைக்கிற இயந்திரத்தின் முன்னால் ஒரு மாதத் துணிகள் குவிந்து கிடந்தன. துணி உலர்த்தக் கூட நேரம் செலவழிக்க விருப்பமில்லாத மாமியாரை மனதுக்குள் திட்டிக் கொண்டே அதை இயக்கினாள்.

ஒருவழியாக இரவு வெகுநேரம் கழித்து குமரன் வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். 'நல்லா இருக்கியா?' போன்ற விசாரிப்புகளாவது அவளை ஆசுவாசப்படுத்தியிருக்கக் கூடும். ஒன்றுமில்லாமல், அவளைப் பார்த்து அதிகபட்சமாக புன்னகைத்தான். 'ரொம்பவும் கீழ்ப்படிதல் உள்ள மகன்!' என்று நினைத்துக் கொண்டாள்.

கற்பகமும் வழக்கம் போல் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தாள். சந்தனா மெல்ல ஒவ்வொரு பதார்த்தமாக மேஜைக்குக் கொண்டுவந்தாள். அப்பளத்தை எடுத்துவரும் போது கற்பகத்திடமிருந்து வந்தது அந்தக் கத்தல்.

"ஏய்.. நில்லு!" என்றாள் அதட்டலாக. அதிர்ச்சியில் ஒரு அப்பளம் கீழே விழுந்து உடைந்து சிதறியது.

"என்னம்மா?" என்றான் மகன்.

"நட!" என்றாள் அம்மா.

நடந்தாள் சந்தனா. அடுத்து வருவது என்ன என்பது சொல்லாமலே புரிந்து போனது.

"ஏன் விந்தி விந்தி நடக்குற?" என்றான் குமரன், அம்மாவின் பார்வை போன இடம் புரிந்ததில்.

"இந்தக் கால்ல தானே ஆபரேசன் பண்ணாங்க.. அதுல கொஞ்சம் கூடக் கொறைய ஆகிடுச்சு. " என்று விளக்கினாள் சந்தனா.

"என்னது?! கூடக் கொறைய ஆகிடுச்சா! என்னவோ பூ வியாபாரம் மாதிரி சொல்லுற!? உண்மையாச் சொல்லு, இது கல்யாணத்துக்கு முன்னாலயே இருந்தது தானே? விபத்து அது இதுன்னு சொன்னதெல்லாமே பொய்தானே!?" மாமியார் கத்த தொடங்கியதும், சந்தனாவின் பொறுமை கரை கடந்து விட்டது. பதில் சொல்லாமல் குமரனைப் பார்த்தாள். அவன் இதெல்லாம் தனக்குத் தொடர்பில்லாதது போல் அவள் கொண்டு வந்து வைத்த அப்பளத்தில் இருந்து ஒன்றெடுத்து நொறுக்கினான்.

"சொல்லுடி அழுத்தக்காரி!, வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இதையேன் உங்கப்பன் இன்னிக்கு கொண்டு விடும்போது சொல்லல?"

"அப்பவே சொல்லி இருந்தா, என்ன பண்ணிருப்பீங்க?"

"உள்ள வராதேன்னிருப்பேன். எம்புள்ளைக்கு இன்னோரு நல்ல பொண்ணா, நொண்டி முடமில்லாம பார்த்து கட்டி வச்சிருப்பேன்!"

"நான் உயிரோட இருக்கும் போது அதை நீங்க செய்ய முடியாது." அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சந்தனா.

"அதுக்காக எம்புள்ள ஒரு நொண்டியோட எத்தினி நாள் குடும்பம் நடத்த முடியும்?"

"ஏன், நீங்க இல்ல, உங்களுக்கு ஒடம்புல இல்லாத வியாதியே இல்ல. அப்படியும் உங்களை வச்சி நாங்க குடும்பம் நடத்தல?! எத்தனை நாளா இருந்தாலும் செய்யத் தானே போறம்?"

"ஏய்.., அம்மாவை எதிர்ப்பேச்சு பேசாதேன்னு உனக்கு முதல் நாளே சொல்லி இருக்கேன். அவங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இல்லைன்னா, வாய மூடு. புரியுதா?" - ஒருவழியாக மௌனம் கலைத்தான் குமரன்!

அதன்பின் சந்தனா பேசவே இல்லை. அந்த இரவு தனிமையில் கூட குமரன் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லவில்லை. பல நாட்களாக அவள் இல்லாமல் தனியாக உறங்க நேர்ந்த ஆத்திரத்தை அவள் உடல் மேல் காட்டினான். ஆபரேசன் ஆன உடம்பு என்பது ஏனோ அவனுடைய மரமண்டைக்கு உறைக்கவே இல்லை. அவன் நிம்மதியாக உறங்கத் தொடங்கிய போது அவள் கசங்கிய பூ போல் வாடிப் போய் படுத்திருந்தாள். அழுகை, கழிவிரக்கம், யோசனை, வலிகளை மீறி தூக்கம் தழுவக் கூடிய நேரம் வந்த போது, அவள் எழுந்து சமைத்தால் தான் வேலைக்குப் போக முடியும் என்றானது.

இந்திராவைப் பற்றிய நினைப்பு மட்டும் தான் அவளை இன்னும் இந்த வீட்டில் பிடித்து வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல. தினசரி குத்தல், குறை சொல்லுதல். கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கற்பகத்துக்குப் பதில் சொல்லுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாள் சந்தனா. கற்பகம் எங்கே அழைத்தாலும் போனாள். குமரன் எப்போது அழைத்தாலும் இணங்கினாள். உணர்ச்சிகள் இல்லாமலே போய்விட்டது அவளுக்கு.

மஞ்சுளா குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுப் போனபோது ரொம்ப வருத்தப்பட்டாள். அம்மாவிடம் போய்ச் சொல்லி இருப்பாள் போலும், ஒரு நாள் அம்மா இந்திராவுடன் அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். அம்மாவைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. தானாக ஏதும் வீட்டுக்குச் சொல்லாத போதும், மஞ்சுளா கணவன் ரொம்ப வருத்தப்பட்டு குமரனுக்குத் தொலைபேசினான். அன்றும் ஒரு பஞ்சாயத்து வைத்தாள் கற்பகம்.

"ஏண்டீ, உன்னை என்ன நாங்க அப்படிக் கொடுமைப்படுத்திட்டம்னு அவன் இந்தக் குதி குதிக்கிறான்? எம்புள்ள என்னிக்காவது எந்தக் கெட்டப் பழக்கத்துக்காவது போயிருப்பானா? கை நீட்டி உன்ன அடிச்சிருப்பானா? இல்ல நாந்தான் உன்னைத் தொட்டிருக்கேனா? என்ன ....க்கு அவன் போன் போட்டு சமாதானம் பேசுறான்?" என்று தொடங்கி மஞ்சுளா கணவன் செந்திலையும் வைத்து வாங்கினாள். சந்தனா ஒரு வார்த்தை பேச வேண்டுமே. ம்ஹும். கை நீட்டி அடிப்பது மட்டுமே வன்முறை என்ற அவளது வாதம் சந்தனாவுக்குச் சிரிப்பைத்தான் கொடுத்தது. சசி ஒருத்தி தான் சந்தனாவுக்கு ஆதரவு. அலுவலகத்தில் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட்டால் கொஞ்சம் மனசு லேசாகும். அவளும் பிள்ளைப் பேறுக்காக லீவில் போன பின்னர் சந்தனா தனிமரமாகி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

*******************************

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

இப்படி எல்லாம் பேசினால், சந்தனா கொதித்துவிடப் போகிறாளா என்ன? கற்பகத்தை எதிர்த்துப் பேசாத வரை தான் அவள் குமரனின் மனைவி. குமரனின் மனைவியாக அவள் இருந்தால் தான் இந்திராவுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அவள் பெற்றோருக்கு உறவினர் மத்தியில் மரியாதை இருக்கும். அத்தனை பேரின் மானம் மரியாதையைக் காக்க வேண்டுமென்றால், கற்பகத்தின் முன்னால் அவள் மரியாதை எதிர்பார்க்கக் கூடாது.

சந்தனா எப்போதோ இயந்திரமாகிவிட்டாள். இயந்திரங்கள் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை; அன்பான வார்த்தையையோ, பாசத்தையோ எதிர்பார்த்து ஏங்குவதில்லை. கற்பகத்திற்குக் கைகால் பிடித்துவிட, சமைத்துப் போட, துணிதுவைக்க, என்று அவள் ஒரு ரோபோ. குமரனுக்கு அவள் வேறு விதமான பொம்மை - மனைவி பொம்மை. நல்ல விலைக்குக் கிடைக்கிறதே சந்தையில்! பொன்னும் பொருளும் கொடுத்து பொம்மையையும் கொடுக்கிறார்களே! சந்தனா இப்படி இருப்பதைத் தான் கற்பகமும் விரும்பினாள். ஆனால், ஏனோ, இயந்திரங்களுக்குப் பிள்ளை பிறக்காது என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நிஜத்தில் இங்கே தான் இன்னும் இருக்கிறது என் சந்தனாவின் வாழ்க்கை... கற்பனைக் கதையிலாவது, இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே அவள் என்று நினைத்ததன் விளைவு, மீதிக் கதை:

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

சந்தனாவைக் குத்துவதற்கே சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் திடீரென குறைந்தது. "ஓ, வாங்க!" அசுவாரசியமான அழைப்பு, வந்திருப்பது சந்தனா வீட்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

யார் என்று பார்க்க வெளியே வந்தாள் சந்தனா.

மஞ்சுளா, அவள் கணவன், அம்மா, அப்பா,.. எல்லாரும் எதற்கு வந்திருக்கிறார்கள்? சமையலறை வாசலில் இருந்து அவள் எட்டிப் பார்த்த போது, மஞ்சுவின் குழந்தை '..த்தி' என்று காலைக் கட்டிக் கொண்டது. அழைக்காமல் எட்டிப் பார்த்த மருமகளை அடுத்த வாய்ப்பில் வார்த்தையால் காயப்படுத்த தயாராகிக் கொண்டே கற்பகம், "என்ன, எல்லாரும் ஒட்டுக்க வந்திருக்கீங்க?" என்றாள்.

"சம்பந்தியம்மா, எங்க கடைசி பொண்ணு இந்துவுக்குக் கல்யாணம் வச்சிருக்கம். அதான் பத்திரிக்கையக் கொடுத்திட்டு, சந்தனாவையும் கூட்டிப் போகலாம்னு வந்தோம்!" அப்பா தான் பேசினார்.

"அப்படியா..எங்க குமரனிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பத்திரிக்கை வரை அடிச்சிட்டீங்களா?!" என்று தங்கைமுன் தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கேட்டாள் கற்பகம்.

"அதுக்கு நேரமிருக்கலைம்மா.. திடீர்னு முடிவாகிடுச்சு.." என்றபடி, அம்மா பத்திரிக்கையை எடுத்துக் கொடுக்கவும், ஆவலை அடக்க மாட்டாமல் சந்தனாவின் சின்ன மாமியாரும் எட்டிப் பார்த்தாள்.

"இதென்னதிது? பையன் என்ன குலம் கோத்திரம்னு போடவே இல்லையே!" கற்பகத்திடமிருந்து இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புதல் கிடைக்காதென்று சந்தனாவுக்கு உறுதியாகத் தெரியும். தொலைபேசிய பொழுது, அவள் தான் இது போன்றதொரு கல்யாணத்தை ஊக்கப்படுத்தி இருந்தாள்.

"குலங்கோத்திரம் பார்த்து பண்ணல்லைங்கம்மா.. பொண்ணுக்குப் பையன பிடிச்சி போச்சு. மாப்பிள்ளை வீட்லயும் பச்ச கொடி காட்டிடாங்க.. சின்னஞ் சிறுசுகன்னாலும் வாழப் போகிறது அதுங்க தானே. அதான் நாங்களும் ஒண்ணும் சொல்லலை." அப்பா மீண்டும் கெஞ்சத் தொடங்கினார்.

"அது சரி.. நீங்க என்ன வேணாலும் செய்யலாம். நொண்டிய நல்ல பொண்ணுங்கிற மாதிரி ஏமாத்தி கட்டிவச்சவுக தானே. அதான் இன்னொரு இளிச்சவாயனை வேற சாதியில பிடிச்சிட்டீங்க போலிருக்கு. இந்தக் கண்றாவிக்கு நாங்க வந்தா, சொந்தக்காரவுக மத்தியில் எங்க பேரு என்னாவுறது? இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையில வாங்கிப் பார்த்தேன்னு தெரிஞ்சாலே குமரனுக்குக் கெட்ட கோபம் வந்திடும் தெரியுமில்ல?" முழுதாக பேசவிடாமல் பத்திரிக்கையை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் மஞ்சுளா.

"எங்களுக்குத் தெரியும். அதனால தான் இந்தப் பத்திரிக்கையை சும்மா காட்டிட்டு போகலாம்னு வந்தோம். சந்து, உன் ரூம் எதும்மா?" என்றாள் மஞ்சு

சந்தனா கையைத் துடைத்துக் கொண்டு அக்காவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டே வந்து தன் அறையைக் காட்டினாள். மஞ்சுளாவும் அவள் கணவனும் உள்ளே நுழைந்து சந்தனாவின் துணிகளை ஒன்று விடாமல் அடுக்கத் தொடங்கினர். அந்த அறையிலிருந்த கட்டில், வீட்டிலிருந்த டீவி, மேஜை, பயன்படுத்தாமல் பரணில் வைத்திருந்த சந்தனா கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள் என்று வரிசையாக கட்டத் தொடங்கினர். பின்னாலேயே நான்கு ஆட்கள் வேறு வந்து எல்லாவற்றையும் தூக்க ஆரம்பித்த போது கற்பகம் குழப்பமாக பார்த்தாள். சந்தனாவின் அம்மாவைப் பார்த்து, "என்ன நடக்குது இங்கே?" என்று அவள் கேட்டதற்கு யாரும் பதில் கூடச் சொல்லவில்லை.

வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது லாரியில் அத்தனை பொருட்களும் ஏறிக் கொண்டிருந்தது. "நிறுத்து, நிறுத்து!" என்ற கற்பகத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.

"தே கெய்வி.. வளி வுடு.. இட்ச்சேன்னு வையி, ஸ்ட்ரெயிட்டா கைலாசம் தான்!" கட்டில் காலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் சொல்லவும், கற்பகம் பயத்துடன் நகர்ந்து போனாள்.

"இந்திரா கல்யாணத்துக்கு மட்டுமில்ல, இனிமே எங்க வீட்ல நடக்கப் போகிற சந்தனா கல்யாணத்துக்கும் நீங்க வர வேண்டாம். உங்க குமரனுக்கும் சொல்லிடுங்க. இந்த மாதிரி ஒரு காட்டுல எங்க பொண்ணை விட்டுவைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இனிமேலும் இல்லை. முறையா வக்கீல் நோட்டீஸ் வரும். முடிஞ்சா எங்க பொண்ணு இன்னிவரைக்கும் சம்பாதிச்சு கொடுத்த பணம், லாக்கரில் வச்சிருக்கிற பத்துபவுன் நகை, நீங்களும் ஒங்க பையனும் சாப்பிடுற வெள்ளித்தட்டு, இது மூணுத்தையும் எடுத்து வந்து கொடுத்துட்டீங்கன்னா, உங்களுக்கு மரியாதை. இல்லைன்னா கோர்ட் மூலமா அதையும் பார்த்துக்கிடறோம்.. என்ன? வாம்மா சந்தனா!" என்றார் மஞ்சுவின் கணவர்.

சந்தனா, கட்டிய புடவையுடன் தூக்கிய குழந்தையுடன், "போய்ட்டு வரேன்" என்று சொல்லும் முகமாக அத்தையைப் பார்த்தாள். "கத்திரிக்காய் அரிஞ்சிட்டிருந்தேன். அடுப்புல சாம்பார் கொதிக்குது. முடிஞ்சா எல்லாத்தையும் அரிஞ்சு சீக்கிரம் போட்டுருங்க..!" என்று சொல்லிவிட்டு வெளியே போகலானாள்.

"ஏய், தடிச்சி, எங்கடீ போகுறே! இப்படி ஒரு நொண்டி வாழாவெட்டியா வந்திட்டாள்னு தெரிஞ்சா, ஒந் தங்கையை எவன் கட்டுவான்?"

கூடியவரை காயப்படுத்த வேண்டும் என்று கிளம்பிய கற்பகத்தின் குரலை எதிர்த்துவந்தது இன்னுமொரு குரல். "அதெல்லாம் தேவையே இல்லைங்கம்மா! இந்த ஜென்மத்துல கல்யாணம்னு கட்டிகிட்டா இந்திரா தான்னு முடிவெடுத்தாச்சு. மனைவியைப் பொறுத்தவரை மனசளவுல ஊமையா, நீங்க செய்யும் கொடுமையெல்லாம் கண்டும் காணாம போயிட்டிருக்கிற உங்க மகனோட, இங்க இருக்கிறதை விட, சந்தனாக்கா எங்க கூடவே சந்தோசமா இருப்பாங்க!" என்றபடி உள்ளே வந்த இளைஞன், சந்தனா கையிலிருந்து குழந்தையையும் வாங்கிக் கொண்டான். மஞ்சு அவள் கையைப் பிடித்து ஆறுதலாக அமுக்க, வெளியேறி காரை நோக்கிப் போன போது, பல இரவுகளாக தொலைத்த அவளுடைய சந்தோசமும் நிம்மதியும் மீண்டு வந்திருந்தது..

31 comments:

லதா said...

தாங்கள் கலைமகள் மாத இதழுக்கு இந்தக் கதையை அனுப்பியிருந்தால் கட்டாயம் அவர்கள் தங்கள் இதழில் பதிப்பித்திருப்பார்கள்.

நாமக்கல் சிபி said...

கதை நல்லா வந்திருக்கு.

ரெண்டாவது கிளைமாக்ஸ் சூப்பர்!

சிறில் அலெக்ஸ் said...

'சற்றே'பெரியவா?
இப்ப நேரமில்லீங்கோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்ஸ்...அப்பாடா படிச்சி முடிச்சிட்டேன்..எத்தாம் பெரிசு...நல்லா எழுதி இருக்கீங்க.

ரெண்டு முடிவும் நல்லாருக்கு..
வருவாங்க யாராச்சும்..என்ன இது பிரிஞ்சாத்தான் சந்தோஷமான்னு கேட்க..நீங்க வேற எத்தனை முடிவெழுதினாலும் எல்லாம், கதையில் தானே நடக்கும்.

பாரதி தம்பி said...

ரமணிச்சந்திரன் அல்லது தேவிபாலா நாவல் போல இருந்தது. கதையின் பிரதான நாயகி என் சகோதரியின் வாழ்வை அச்சு அசலாக நினைவூட்டி மனதைக் கணமாக்கிவிட்டாள். அந்த இரண்டாவது க்ளைமாக்ஸ் உண்மையில் கற்பனையில் மட்டுமே சாத்தியம் போல. முதல் முடிவுதான் நிதர்சனம்.

Anonymous said...

அப்பா,
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல கதை படிச்ச திருப்தி. ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்... ஏங்க சந்தனா மாதிரி பெண்கள் அப்பா அம்மா அல்லது கணவன் ஆதரவில் மட்டும் தான் வாழ வேண்டுமா? கல்யாணம் என்கிற அமைப்பு அன்பின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்பதை காதல் திருமணம் மூலமும், சந்தோஷமான தம்பதிகள் மூலமும் விளக்கி உள்ளீர்கள். ஆனால் ஊனமுற்றும் சாதித்த பல பெண்களை உதாரணமாகக் கொண்டு வாழும் ஒரு பெண் ஏன் ஒரு குடையை எதிர்பார்த்து வாழ வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஆனால் கதை அமைப்பு நடை அருமை வாழ்த்துகள்.

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

பெரிய சிறுகதை இல்லீங்க! பெரிய நாவலை உள்ளடக்கிய கதை.

சில பக்கங்களில் கதை மாந்தர்களின் வாழ்க்கையைக் குறுக்கி (condense செய்து) கெட்டியாக கொடுத்து விடுகிறீர்கள். பல முறை படிக்கப் படிக்க கதையின் புது முகங்கள் வெளிப்படும் என்று தோன்றுகிறது.

உங்கள் கதைகளின் தொகுப்பு (லேபல் மூலம் கிடைத்தாலும்,) கூகுள் பக்கங்களிலாவது எங்காவது கூடுதல் குறிப்புகளுடன் கொடுத்தால் அவ்வப்போது போய்ப் படிக்க வசதியாக இருக்கும்.

வலைப் பதிவு வடிவில் பழைய கதைகள் இடுகைகளின் மத்தியில் மூழ்கிப் போய் விடுகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

கலை said...

நன்றாக எழுதியிருக்கிறீங்க பொன்ஸ். நிஜத்தின் முடிவும், கதையின் முடிவைப் போல் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

ஏன் ஒரு குடையின் கீழ் வாழ வேண்டும் னு அயன் கேட்டிருக்கிறார், சந்தனா வேலைக்கு போகின்றாள். தன் சொந்த காலில் நிற்கும் திறமை இருந்தாலும், ஒரு குடும்பத்து உறவுகளுடன் இணைந்து வாழ்வது அவளுக்கு நல்லதுதானெ?

வினையூக்கி said...

நேற்றிரவே படித்துவிட்டேன். இருந்தும் இன்று காலை ஒரு முறை படித்தேன். அருமையான கதை. இரண்டாவது முடிவு நல்லா இருந்தது.
:):):):)

நந்தா said...

கதை ஏதோ நமது வீட்டில் நடப்பது போன்ற ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்துகிறது.

ரெண்டாவது கிளைமாக்ஸ் தான் கரெக்ட். ஆனா எனக்கு இது கூட பத்தாதுன்னு தோணுது.

பெரிய கதையா? ம்ஹும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். அப்படி ஒண்ணும் எனக்கு தெரியலை.

லக்ஷ்மி said...

அருமையான கதை பொன்ஸ். கதை படிக்கும் யாரும் ஒட்டுமொத்த ஆணினத்தையும் குற்றம் சாட்டுவதாய் தவறாய் புரிந்துகொள்ள முடியா வண்ணம், மஞ்சுளாவின் கணவன் மற்றும் இந்திராவின் வருங்கால கணவன் பாத்திரங்கள் அமைந்துவிட்டன. பெண்ணியம் பற்றி பேசப்படுமிடத்திலெல்லாம் இந்த திசைதிருப்பலும் கட்டாயம் நடக்கும். அதுவுமிங்கே தவிர்க்கப்பட்டுவிட்டது சந்தோஷம். அடுத்தது, எனக்கும் நந்தா சொல்வது போல கற்பனையிலாவது இன்னும் கொஞ்சம் நன்றாய் கற்பகம் & குமார் கும்பலை அழவிட்டிருக்கலாமோ என்று ஒரு நப்பாசை. :-)

கதிரவன் said...

நம் நாட்டில் இன்றும் நடக்கும் கதை - ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கீங்க பொன்ஸ்.

எனக்கென்னவோ 2வது முடிவு உண்மையில் நடக்க இன்னும் ரொம்ப வருஷமாகும்னு தோணுது :(

பூனைக்குட்டி said...

பொன்ஸ் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாவது கதைக்கு ஒரு பேர் தேர்ந்தெடுத்திருங்க! ஏன்னா இப்ப சரியாயிருக்கிற மாதிரியான பேர் "சற்றே பெரிய சிறுகதை" பின்னாடி எதைப் பத்தி இந்தக் கதை எழுதினோம்னு உங்களுக்கே குழப்பம் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் இதே தலைப்பில் கதையெழுதிய எனக்கு அந்த அனுபவம் உண்டு. இப்ப தேடிப்பாக்காதீங்க என் பக்கத்தில் தலைப்பை மாத்திட்டேன்.

அதுவுமில்லாமல் கதையின் தலைப்பை, கதையின் கருவை விட அதிகம் யோசித்து வைக்க வேண்டும் என்று இப்பொழுதெல்லாம் நினைக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

முத்துகுமரன் said...

இந்த கதைக்கு நான் வைத்துகொண்ட தலைப்பு ''மரம்''. கதை நீளமாக இருந்தாலும் வாசிப்பில் எந்த வித சோர்வையும் தரவில்லை. கதையை வாசிக்கும் பொழுதே குமரனினின் மீதும், கற்பகத்தின் மீதும் எழும் ஆத்திரம் உங்கள் எழுத்தின் வெற்றியைக் குறிக்கிறது. ஆனால் இன்று பல இடங்களில் இருந்து கொண்டிருக்கும் எதார்த்தங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது கதையின் ஓட்டம். உறவுகளின் அர்த்தங்கள் புரியாமலே வாழப் பழகிப்போன மனிதர்களை, பாத்திரங்களில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதே சமயம் சந்தனாவின் பெற்றோர் பாத்திரங்கள் சற்று குழப்பம் நிறைந்ததாகவே இருக்கிறது. மகள் மலடில்லை என்று நிரூபிக்கும் தந்தை அவளின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தாய்மையே பெண்களுக்கு உயர்ந்த நிலை என்றாலும் அதுவே அவர்களுக்குத் தடையாகவும் நிற்கிறது. ஊனமான பின்னும் சொந்தக் காலால் நிற்க முடிகின்ற ஒரு பெண்ணை காவு கொடுத்தது போலத்தான் இருக்கிறது. காதலில்லாத காமம் என்பது குப்பைக்குச் சமமே. கணவன் வீட்டில் இருந்தால்தான் பெண்ணுக்கு கவுரவம் என்ற மூட நம்பிக்கைக்கு பாத்திரங்கள் இலக்கணமாக நிற்பதில் ஏனோ ஒரு வருத்தம் ஏற்படுகிறது. ஒருமுறை படித்தாலும் மனதை உறுத்தும் பல கேள்விகளைக் கண்முன்னே நிறுத்துகிறது. திருமண பந்தந்தின் அர்த்தம் புரியாது இருக்கும் குமரனோடு வாழ்வதற்கு தனியாக இருப்பதை சந்தனாவிற்கு நிம்மதியைத் தந்திருக்கும். சமூகத்தின் மனப்பாங்கு மாறும் போது இவை நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுத்தில் படர்ந்திருந்த வலியை உணர முடிந்தது. கோர்வையாக இல்லாமல் இருக்கலாம். மனதில் தோன்றியதை அப்படியே தட்டச்சு செய்துவிட்டேன்.

Anonymous said...

டெம்ப்ளேட்டு மாத்திட்டீங்களா? சட்டுன்னு முன்ன பின்ன தெரியாதவங்க ஊட்டுலே நுழைஞ்சமாதிரி இருக்கு :-)

பொன்ஸ்~~Poorna said...

பிரகாஷ்,
யானைகளைப் பார்த்த பின்புமா குழப்பம் ;) :)))

யோசிப்பவர் said...

ஒரு யானையே அட்டகாசம் பண்ணும்! இப்ப பல யானைகள்!!! என்ன ஆகப் போகுதோ?!?!;-)

Anonymous said...

பொன்ஸ், கதை, பின்னூட்டங்கள் எல்லாம் படிச்சேன். கதை எழுதுவதில் கை தேர்ந்தவர் நீங்க. மொழியும் நடையும், நடையில் யதார்த்தமும் முழுமையா இருக்கு. இது சும்மா பேச்சுக்காக சொல்லல. நிஜமா இருக்கு.

ஆனா மனசுக்குள்ள ஒரு குழப்பம் - இன்னொரு கருத்தும் இங்க குடுக்கலாமா வேண்டாமான்னு.

இந்த கதையில சந்தனா இவ்வளவு பெரிய வில்லியா இருக்கிறது எதனாலன்னு யோசிக்க வச்சிட்டீங்க! எத்தனை தடவை திருப்பி திருப்பி யோசிச்சாலும், சந்தனா தான் அத்தனை சோகத்துக்கும் காரணம்னு தோணுது. படிக்கிறாங்க வேலைக்கு போறாங்க - சமூகம் இவ்வளவு கொடுத்தப்புறமும் ஒரு பெண் சுய மரியாதை கொள்ளலைன்னா ... யார் தப்பு? இந்திராவோட அன்பன் வந்து தரணுமா இவங்களுக்கு மரியாதை? ஏன் சுயமா வரலை?

நீங்களே யோசிச்சு பாருங்க யாருக்காக மாமியாருக்கு மத்தியான காபி? சித்திரகுப்தனுக்காகவா? உண்மையில அன்போட காப்பி செய்ய சாத்தியக்கூறுகளே இல்ல. ஏன் இந்த கண்ணா மூச்சி விளையாட்டு தன் மனசாட்சிக்குள்?

எனக்கு என்ன புரியலன்னா இந்திராவோட அன்பன் வராமலையே ஏன் சந்தனாவுக்கு மரியாதை இல்ல அங்க?

ஹீ ஹீ ... ரொம்ப லொள்ளு பேச்சா இருக்கோ? என்னவோ தெரியல பொன்ஸ், யாருக்கோ "நடைமுறையில் இருக்கும்" உண்மையாய் இருந்தால் இதெல்லாம் சொல்லணும்னு தோணிச்சு!

சந்தனா இந்திராவிற்கு மோசமான திருமண எடுத்துக்காட்டால்லா இருக்காங்க? இவங்க துணிஞ்சா இந்திரா உலகம் முன்னேறல்லா செய்யும்?

கதையாய் மட்டும் இருக்குமாயின் இது யதார்த்தமாய் இருப்பது நிஜமே! சோகமாயிருந்தாலும், சில பெண்களின் உலகியல் உண்மைய தான் சொல்லிருக்கீங்க.

பொன்ஸ்~~Poorna said...

லதா, கலைமகளா? நல்லா இருக்குங்கிறீங்களா? இல்லிங்கிறீங்களா? :)))

சிபி, ஆமாம். ரெண்டாவது க்ளைமாக்ஸ் சூப்பர் தான் :)

சிறில், நேரமிருக்கும் போது வாங்க :)

முத்துலட்சுமி, யாரும் இன்னும் வரலை.. பார்ப்போம்..

ஆழியூரான், வம்பு தானே? ரமணிச்சந்திரன், தேவிபாலாவா!!! அடப்பாவி..

அயன், நன்றிங்க.. சந்தனா தன்னை நன்கு புரிந்த, அன்பான தன் அம்மா, அப்பாவுடன் ஏன் வாழக் கூடாது? அதை ஏன் குடை என்று பார்க்கிறீர்கள்?

சிவகுமார், நல்ல வார்த்தைகளுக்கு நன்றி :) நீங்க சொல்வது போல் பழைய கதைகளைத் தனியாக வெளிச்சம் கொடுத்துப் போட முயல்கிறேன்..

கலை, குடும்ப உறவு என்பதை விட, தன்னைப் புரிந்து கொண்ட, தன் மீது பாசம் வைத்திருக்கும் உயிர்கள் இருக்கையில், அவள் ஏன் தனித்து வாழ வேண்டும் என்பதே என் பார்வை..

வினையூக்கி, நன்றி :)

ரொம்ப நன்றி நந்தா, கதை அத்தனை பெரிசா இல்லைன்னு சொன்னதுக்கு :))

லக்ஷ்மி, இதில் பெண்ணியம் என்று சொல்ல முடியாது.. இது ஒரு பெண்ணின் கதை, அவ்வளவு தான்.. பெண்ணியம் போன்ற வார்த்தைகளை உள்ளே கொண்டுவந்தாலே, சிலர் கொதித்து எழும் போது, அந்த சொற்கள் இல்லாமல் பேச முயல்வதே சரி என்று தோன்றுகிறது..., எதிர் முகாமிலும் ஊடுறுவ வசதியாக ;)

கதிரவன், நன்றி.. 2ஆவது முடிவும் பல இடங்களில் இப்ப நடக்கத் தொடங்கிடுச்சுங்க..

தாஸ், பேர் வைக்கலாம்.. என்ன வைக்கிறதுன்னு தெரியலை.. 'விடியல்'னு வைக்கலாமா, 'விட்டு விடுதலையாகி' ன்னு வைக்கலாமான்னு யோசனை..

முத்துகுமரன், மரம் அத்தனை பொருந்தலைங்க.. பார்க்கிறேன்.. மத்தபடி உங்க நேர்மையான பின்னூட்டம் ரொம்ப அழகா இருக்கு...

யோசி, அது சரி :)) இன்னும் ரெண்டு சேர்க்கலாம்னு இருந்தேனே..

மதுரா, நீங்க ஆசைப்படும் சந்தனாவைப் பார்க்க இன்னும் ரெண்டு தலைமுறை காத்திருக்கணும்னு நம்பறேன்.. என் சந்தனாவுக்கு, இந்தக் கதையை அனுப்பி வச்சிருக்கேன்.. பார்க்கலாம்.. சரி, உங்க பதிவுகள் எங்கே? ஏன் எதையும் காணோம்?

G.Ragavan said...

பொன்ஸ், உண்மையச் சொன்னா மீதிக்கதைதான் கதை. முதல் பாதி கத்தரித்திருக்கலாம். கற்பனை முடிவானாலும் நல்ல முடிவு. அதுதான் சிறப்பு.

பெருசு said...

பெருசு !!!!!!!!!

ilavanji said...

பொன்ஸ்,

ரெண்டாவது தடவையும் முழுசா படிச்சுட்டேன்.

ஆனாலும் கற்பகமும் குமரனும் ஏன் அப்படி இருக்காங்க? அவங்க மனநிலை ஏன் அப்படி இருக்குன்னு யோசிக்கறதுலதான் புத்தி போகுதே தவிர கதாநாயகி சந்தனா பத்தி யோசிக்கவே தோண மாட்டேங்குது. சரி விடுங்க! நான் டூயட்டு பாடல்களிலேயே சுத்தி ஆடறவங்களை மட்டுமே கவனிக்கறவ வியர்டு! :)

சில இடங்களில் சந்தனா மேல் அனுதாபம் வர வேண்டுமென்பதற்காகவென்றே சில நிகழ்வுகளை சொல்லியிருப்பதாக தோன்றினாலும் தடங்கலில்லாத தொய்வில்லாத நடை.

கலக்குங்க... நாளப்பின்ன பெரியாளானதும் கண்டுக்கங்க! :)

Anonymous said...

தொடர்பில்லாத பிளிறல் ;) இது:
சும்மா மூடி தான் போட்டு வச்சிருக்கேன் என் அஞ்சறைப் பெட்டிய! :) உள்ள இருக்கு கடுகு உளுந்தெல்லாம். இன்னும் அங்க அங்க ஆப்புச்சட்டியில என் கறிவேப்பிலைய தாளிக்கிற சத்தம் கேக்குது. :)
சில இடத்தில காயம் ஏன் தூக்கலா இருக்குன்னு கண்டே பிடிக்க முடியல! சும்மா ஒரு வாசனைக்குத்தான் பண்றாங்க போல. இல்ல எதையோ செரிக்க முடியாததால காயம் போடுறது நல்லதுன்னு நினைக்காங்களோ? என்னவோப்பா சமையல் கலை கஷ்டமாத்தான் இருக்கு. ;)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இணையத்தில் 7 ஆண்டில் நான் படிக்கும் இரண்டாவது சிறுகதை !
-
நல்லா இருந்துச்சு, நல்லா இல்லைன்னு, அவளுக்கு இப்படி பண்ணி இருக்கலாம்னு - வழக்கமான பின்னூட்டம் இட விருப்பம் இல்லை. விகடன், குமுதம், கதிர், mega serial formatல் எழுதப்பட்ட சிறுகதை. இதைத் தாண்டி இன்னும் சிறப்பாக எழுத முடியும். அதற்காகப் புரியாத நவீனத்துவ கதைகளும் வேண்டாம்.
-
ஒரு பத்தியில் ஒரு வரியில் மின்தொடர்வண்டி என்றும் அதற்கடுத்த வரியில் ரெயில்வே ட்ராக் என்றும் எழுதி இருக்கிறீர்கள். கதை முழுக்க ஒரே மாதிரியான மொழி நடை இருந்தால் சிறப்பு.

கதிர் said...

++ = பெரிய +

முத்துகுமரன் said...

//முத்துகுமரன், மரம் அத்தனை பொருந்தலைங்க.. //
எல்லோராலும் தொடர்ந்து வெட்டப்பட்டுக்கொண்டிருக்கிறாளே. அதான்நான் மரம் என்று சொன்னேன்.

none said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க! கதை நம்பிக்கையூட்டும் விதமா அமஞ்சிருக்கு! வாழ்த்துக்கள்!

பத்மா அர்விந்த் said...

எனக்கு கதை எழுத வராது. ஆனாலும் விமரிசிக்க வரும்:) சில பாத்திரங்கள் நிகழ்வுகள் வலிய திணிக்கப்பட்டதை போல இருக்கின்றன. மற்றபடி எனக்கும் சந்தனாவின் victim மனப்பான்மை புரிந்தாலும், படித்த பெண்ணின் சுயமரியாதை எங்கே போனது என்பதே கேள்வி? தலையை நிமிர்த்தி இருந்தால் குட்ட முடியாது. ஆனால் நிறைய பெண்களை இதுபோல victim நிலையிலேயே பார்த்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பி சொன்னதோ இல்லையோ, கதையில் பெண்ணின் வாழ்வை மா(ற்)ற இன்னொரு ஆனால்தான் முடியும் என்பது போல படுகிறது.வாழ்த்துக்கள் பொன்ஸ்.

வி. ஜெ. சந்திரன் said...

உங்க கதையை 2 நாளைக்கு முன்னமே அலுவலகத்தில் வச்சு வசிச்சேன். ஆனா அங்க தமிழ் எழுத முடியததால பிளிறலை.
கதை நல்லா இருக்கு. ஆனா வழமையா வாற காதைகளின் பாணி போலவே தோணுறதையும் தவிர்க்க முடியலை.
நிறைய எழுதுங்க.

Deepa said...

பொன்ஸ் .. எழுத்துகூட்டி படிச்சேன்..
உருக்கமா இருக்கு..பார்த்து-பார்த்து எவ்வளவு தான் செஞ்சாலும்..தாளிக்கிறப்போ கரிவேப்பிலை அதிகமா கரிஞ்சுப்போச்சு ன்னு ஆர்பாட்டம் பண்ணுகிரவங்க இன்னமும் இருக்க தானே செய்யறாங்க

Jazeela said...

எதுவும் புதுசா இல்லாத ஒரு சராசரி கதை. கதை நல்லாயிருக்கு. ஆனா எனக்கு சந்தனா கதாபாத்திரம் சுத்தமா பிடிக்கலை. வாயுள்ள புள்ளத்தான் பொழைக்கும்.